அத்தியாயம் 16

“ச்சி உன்னோட புத்திக்காக தான் நான் தீபிகாவ கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். அப்ப கூட உன் புத்தி மாறலனா நீ மனுஷனே இல்லை” என்றான் அரவிந்த்.

 

“ஹா ஹா எஸ் நான் மனுஷனே இல்ல நான் ஒரு மான்ஸ்டர் அன்ட் அரவிந்த் யூ நீட் டூ க்ரோ அப் எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது போன வாரம் வரைக்கும் சுபானு சுத்திட்டு இருந்த அவள நான் கெடுத்துட்டேன்னு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட…”

 

“இப்போ திடீர்னு தீபிகாவ கல்யாணம் பண்ண கேட்டவுடன் சம்மதிச்சிட்ட ரியலி யு ஆர் கிரேஸி சுபா மேல அவ்வளவு பாசம்” என்று நக்கலாக சிரித்துவிட்டு கோபமாக மாற்றினான். அப்போது காஃபி என்று அஸ்வினிடம் ஒரு கப்பை நீட்டினாள் சுபா.

 

“நீ எப்படி இங்க அம்மா கிட்ட தான காஃபி கேட்டேன்” என்று தன் புருவத்தை சுருக்கினான்.

 

”அத்தை தான் இதை கொடுத்துட்டு வர சொன்னாங்க” என்று அரவிந்திடம் இன்னொரு கப்பை நீட்டினாள். கோபத்தின் உச்சியில் இருந்த அஸ்வின் சுபாவை எரிக்கும் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“நீ என்ன இங்க வேலைக்காரியா? நீ ஒரு எம்என்சில ப்ரோகிராமரா இருந்த இப்போ ஃபுல் டைம் வேலைக்காரியா மாறிட்ட… எனக்கு காஃபி லாம் வேண்டாம் அப்புறம் இதுக்கும் உன் புருஷன் நம்மள சந்தேகப்பட்டு அசிங்கமா பேசுவான். நான் இந்த ரிசப்ஷனுக்கு வந்திருக்கவே கூடாது இப்போவே கிளம்புறேன்” என்று செல்ல துடித்தவனிடம்,

 

“அரவிந்த் ப்ளிஸ் உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன் இப்ப தான் அப்பா அம்மா முகத்துல கொஞ்சம் சந்தோஷம் இருக்கு ஏன் வீட்டுல எல்லாருமே சந்தோஷமா இருக்காங்க ப்ளிஸ் ரிசப்ஷன் முடிஞ்ச அப்பறம் கிளம்புங்க.”

 

“இப்போ நீங்க நடுவுல போனீங்கனா தேவை இல்லாம மனசுல சங்கடங்கள் வரும் ப்ளிஸ் புரிஞ்சிக்கோங்க” என்று கெஞ்சினாள்.

 

அவளை எரிப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வின் அவள் கையை முரட்டு தனமாக பிடித்து அவளை தன்னிடம் திருப்பி, “அவன் தான் கிளம்புறேன்னு சொல்றான்ல அப்போ ஏன் டி நீ அவன் கிட்ட கெஞ்சிட்டு இருக்க” என்று கர்ஜித்தான்.

 

”அஸ்வின் அவளை விடு அவ பாவம் ப்ளிஸ் அஸ்வின்” என்றான். அஸ்வினின் பிடி மேலும் சுபாவிடம் இறுகியது வலியில் துடித்துக் கொண்டிருந்தவளைக் காண முடியாமல், “உனக்காக இருக்கேன் சுபா நான் கிளம்பல” என்று ஹாலிற்குச் சென்று அமர்ந்து விட்டான்.

 

”அவனுக்காக என்ன டி அவ்வளவு உருகுற நான் ஒன்னு கேட்டா நீ பேசவே மாட்ட ஆனா அவன் கிட்ட அவ்வளவு ஃபிலோவா பேசுற அவ்வளவு பழக்கம்ல உங்களுக்கு” என்று அவளின் கையில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்தான்.

 

”ஏங்க ப்ளிஸ் எல்லாரும் இருக்காங்க இத பார்த்தா மனசு வேதனைப்படுவாங்க என்ன விடுங்க” என்று கெஞ்சினாள். 

 

அவன் விடுவானா சுபாவின் அரக்கன் ஆச்சே அவளை தன் அறைக்குள் இழுத்துச் சென்று கதவை சாத்தினான். 

 

சுபாவை இழுத்து வந்து தன் அறையில் தாழிட்ட அஸ்வின் சுபாவை நெருங்கினான். எதற்கு இப்போது பக்கத்தில் வருகிறான் என்று புரியாமல் திகைத்தாள். அன்று அவள் கடையில் நடந்த விதம் அவன் மனதை கடுப்பேத்திக் கொண்டே இருந்தது.

 

அதைப் பற்றி அவளிடம் கேட்க நினைக்கும் போது தான் அவள் ஐந்து நாள் அவன் கண்ணில் படாமலே தப்பித்து விட்டாள். ஆனால் இப்போது அஸ்வின் அவள் கண்ணை நேராகப் பார்த்துக் கேட்டான்.

 

“உனக்கு நான் தொட்டா அருவருப்பா இருக்குல” என்று அழுத்தமாகக் கேட்டான். ஆமாம்னு உண்மைய சொன்னா நம்ம நிலைமை மோசமா ஆயிடுமே என்று பயந்தவள் இல்லை என்று கூறினாள். 

 

அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தவன், ”நீ கிளம்பு” என்று அவளிடம் சொல்லிவிட்டு பால்கனிக்கு சென்று விட்டான். அடுத்த நாள் சனிக்கிழமை அஸ்வின் அலுவலகம் சென்று விட்டான். அப்போது வீட்டிலிருந்த அரவிந்த் மற்றும் தீபிகா பேசாமல் இருப்பதை உணர்ந்தாள் சுபா.

 

தீபிகாவை அழைத்து, “ஏய் என்ன ஆச்சு ஏன் நீங்க இரண்டு பேரும் பேசிக்க மாட்டிக்கிறீங்க எதாவது பிரச்சனையா?” என்று வருந்தினாள். உடனே தீபிகா சுபாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

 

“அக்கா உனக்காக தான் அரவிந்த் என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாராம். நான் அவரை விரும்பறேன் அக்கா அவரும் என்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் என்ன கல்யாணம் பண்றாராம்” என்று அழுதாள்.

 

“ஏய் லூசு அப்படி எல்லாம் இல்ல. அரவிந்த்க்கு உன்னை பிடிக்கும். அதே மாதிரி எனக்காக அரவிந்த் கல்யாணம் பண்ணனும்னு நினைக்க மாட்டாரு. நீங்க இரண்டு பேரும் மனம் விட்டுப் பேசுங்க எங்கயாவது போய்ட்டு வாங்க” என்றாள். 

 

தன் மாமியாரிடம், “தீபிகாவும் அரவிந்தும் வெளிய போய்ட்டு வரட்டுமா அத்தை? அவங்களுக்குள்ள ஏதோ சின்ன சண்டை போல” என்று கேட்டாள்.

 

”இல்லம்மா அவங்க இரண்டு பேரும் தனியா போனா நல்லா இருக்காது நீயும் கூட போ” என்றாள். 

 

“ஐய்யோ நானா அத்தை அவர் என்னை திட்டுவாரு” என்றாள்.

 

”நீ வேணும்னா அவனுக்கு கால் பண்ணி கேட்டுப் பாருமா” என்று வேறு ஏதோ வேலை வந்து விட்டது என்று நகர்ந்து விட்டார்.கால் பண்றதுக்கு நம்ம கிட்ட அவர் நம்பரே இல்லயே என்று யோசித்தாள். மதியம் 12 ஆனதும் அஸ்வினிற்கு சாப்பாடு எடுத்துட்டு போக தயாரான

சுபாவுடன் தீபிகாவும், “நான் அத்தான் ஆபிஸ் பார்க்கணும் என்னை கூட்டிட்டு போ” என்றாள்.

 

சுபா ஒரு ஊதா கலர் சல்வார் அணிந்து தலைக்கு குளித்து முடியை ஒரு க்ளிப் போட்டு ஃபிரீ ஹாரில் ஹேர் ஸ்டைல் போட்டு ரெடி ஆனாள். 

 

அஸ்வின் தன்னுடைய கேபினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அஸ்வினுடைய கேபினிற்கு வந்தாள் சோனியா. “ஹாய் அஸ்வின்” என்றாள். தனது லாப்டாப்பில் முக்கியமான வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை அமருமாறு சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான். 

 

அப்போது தான் சுபாவும் தீபிகாவும் அஸ்வின் கம்பெனிக்கு வந்தனர்.

 

”வாவ் அத்தான் ஆபிஸ் செமயா இருக்குகா சான்ஸே இல்ல” என்றாள். அன்று மாதிரி ரிசப்ஷனில் சென்று, “அஸ்வினைப் பார்க்கணும்” என்றாள்.

 

“மேடம் நீங்க சார் மனைவி தானே நேரடியாக கேபினுக்கே தினமும் வர சொன்னாரு ரிசப்ஷன்ல கேட்க வேண்டாம்” என்றாள். 

 

“எனக்கென்னமோ அத்தான்க்கு உன் மேல லவ் இருக்குனு தோணுதுகா நேத்து அரவிந்த் சொன்னாங்க அத்தான் பேசினது எல்லாம் உன் மேல பொஸஸிவ்வா இருக்கார்னு தோணுது. உனக்கு இம்ப்பார்டன்ஸ் கொடுக்குறார் நீயும் அவர் கிட்ட கொஞ்சம் பேசணும் கா, எனக்கு புரியுது உனக்கு நடந்தது கொடுமை தான்…”

 

“ஆனா அவரே வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு உன்னை பலி வாங்குறதுக்குனா கூடனாலும் உன்னை மனைவியா தான பார்க்கணும்னு நினைச்சாரு” என்றாள். 

 

சுபாவிற்கு குழப்பமாக இருந்தது இப்படி பேசிக்கொண்டே அஸ்வினின் கேபினின் பக்கம் வந்தனர். உள்ளே போக தயங்கிய சுபாவிடம், “ஏன் அக்கா இப்போ நீ போறியா? இல்ல நான் போகவா?” என்று கேட்டாள்.

 

“இல்லடி அவங்க எதாவது வேலையா இருந்தாங்கனா அதான் யோசனையா இருக்கு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சுபாவின் செல் ஒலித்தது. இது என்ன புது நம்பரா இருக்கு என்று காலை அட்டெண்ட் செய்தாள் சுபா.

 

“இன்னும் எவ்வளவு நேரம் வெளியேவே நிக்கறதா ஐடியா உள்ளே வா” என்றான். அதே கம்பீரக் குரல்… ‘ஓ அவரா ஆனா அவர்க்கு எப்படி நம்ம நம்பர் தெரியும்’ என்று கதவைத் தள்ளி உள்ளேச் சென்றாள். 

 

‘நம்மள இங்க உட்கார வெச்சிட்டு இவன் பாட்டுக்கு அவன் வேலைய பார்க்குறானே’ என்று சோனியா நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் சுபாவும் தீபிகாவும் உள்ளே வந்தனர். சோனியாவை இங்கு கண்ட சுபாவிற்கு அதிர்ச்சி… “ஹாய் அத்தான்” என்றாள் தீபிகா.

 

“ஹாய் தீபிகா” என்று சொல்லிவிட்டு ஒரு எக்ஸ்டன்ஷன் நம்பர்க்கு கால் பண்ணி, “பிரிங் டூ காபி டு மை கேபின்” என்று கூறிவிட்டு தீபிகாவை அமர சொன்னான். 

 

“சோ சோனியா ஆல் தி வெரி பெஸ்ட் அன்ட் டுடே யு ஷுட் பி டன் வித் யுவர் இன்டக்ஷன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு காபி வந்தது ஒன்றை தீபிகாவிடம் கொடுக்க சொல்லிவிட்டு மற்றொன்றை சோனியாவிற்கு கொடுக்கச் சொன்னான்.

 

”அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல வினோத் இருப்பாரு ஹி  வில் கையுட் யூ” என்று கூறிவிட்டு எழுந்தவன், “தீபிகா டோன்ட் மைன்ட் நானும் சுபாவும் உள்ளே போறோம்” என்றான்.

 

“ஓ அப்போ நாங்கலாம் உள்ளே வரக் கூடாதா?” என்று கேட்டாள்.

 

“அது எனக்கும் என் மனைவிக்கும் பேர்ஸ்னல் ரூம்” என்று சிரித்துவிட்டு உள்ளே சென்றான். இங்கு காபி குடித்துக்கொண்டிருந்த சோனியாவிற்கு எரிச்சலாக இருந்தது. 

 

வழக்கம் போல உடைகளை மாற்றி விட்டு அஸ்வின் வரும்போது சுபா சாப்பாடு எடுத்து வைக்க தொடங்கினாள். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை ஒன்னுமே இல்லை. 

 

பின் சுபா அஸ்வினிடம் மெல்ல, “தீபிகா அரவிந்த்குள்ள ஏதோ சின்ன பிரச்சனை வீட்டுல அவங்கள தனியா விட மாட்டிக்கிறாங்க நான் அவங்க கூட வெளிய போகவா? அப்பயாவது அவங்க பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்குமானு யோசிக்கிறோம்” என்று தயங்கி சொல்லும் போதே, “போய்ட்டு வா” என்றான். 

 

‘இவரை புரிஞ்சிக்கவே முடியலயே திடீரென கத்துறாரு திடீரென நார்மலா இருக்காரு’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். 

 

பின் சுபா கிளம்பும் போது

தீபிகாவிடம், “அரவிந்த் ரொம்ப நல்லவன் மிஸ் பண்ணிடாத” என்றான்.

 

“இதென்ன அண்ணாவும் தம்பியும் பேசி வெச்சிட்டு இப்படி பண்றீங்களா? நேத்து அரவிந்த் உங்களை அவ்வளவு பெருமையா சொன்னாரு. நீங்க ரொம்ப நல்லவர் அழகானவர் திறமையானவர் அப்படி இப்படின்னு உங்களுக்கு இன்னிக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல எதாவது வொர்க் இருக்கா?” என்று அஸ்வினிடம் கேட்டாள்.

 

“ம்ம், இல்லையே”  என்றான்.

 

“ஓகே அப்போ வாங்க நம்ம எல்லாம் வெளிய போகலாம்” என்றாள்.

 

‘இவ என்ன இப்படி அவர் கிட்ட பிரண்ட் மாதிரி பேசிட்டு இருக்கா’ என்று அதிர்ந்தாள் சுபா.

 

“சரி வரேன் நீங்க மூணு பேரும் வெளிய போறதா சொன்னா சுபா… நீங்க போங்க நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றான். 

 

இருவரும் கிளம்பி சென்றுக் கொண்டு இருக்கும் போது, “அரவிந்த் நேத்து அப்படி என்ன தான் சொன்னாரு?” என்று கேட்டாள் சுபா.

 

“அரவிந்த் அஸ்வின ரொம்ப மிஸ் பண்றாரு கா அது மட்டும் தெரியுது” என்றாள்.

 

“அப்போ என்னால தான் அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சனையா?” என்றாள் சுபா கேள்வியாக.

 

“நீ ரொம்ப யோசிக்காத சுபிக்கா அத்தான் பயங்கர ஸ்மார்ட்டா இருக்காருகா. சரி கேட்கணும்னு நினைச்சேன். அங்க சோனியானு ஒருத்தி இருந்தாளே…அவ யாரு அத்தான் கிட்ட ரொம்ப உரிமையா நடந்துக்குறா” என்றாள் தீபி.

 

”அவங்க தங்கச்சியோட நாத்தனார் டி” என்றாள்.

 

“அவ எதுக்கு இங்க சுத்திட்டு இருக்கா? நீங்க இரண்டு பேரும் உள்ளே போனதுக்கு அப்பறம்  என் முன்னாடியே அத்தான்க்கு கால் பண்ணி அஸ்வின் நம்ம சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சேன். நா வேணும்னா உள்ளே வரவா அப்பறம் கண்டிப்பா ஒரு நாள் நம்ம வெளிய போய் சாப்பிடலாம்னு வழிஞ்சா” என்றாள்.

 

இதைக் கேட்ட சுபாவின் முகம் ஏனோ சுருங்கியது.சுபாவிற்கு சோனியாவை பார்த்த முதல் தடவையே பிடிக்கவில்லை அவள் அஸ்வினிடம் வழிகிறாள் என்று தோன்றியது.பின் நம்ம ஏன் இப்படி யோசிக்கிறோம் அவர் கிட்ட யார் வழிஞ்சா நமக்கென்ன என்று எந்த ஒரு வருத்தமும் இல்லாத மாதிரி தன் மனதை ஏமாற்றினாள். 

 

மாலை சுபா, தீபிகா, அரவிந்த் கிளம்பும் போது துளசி சுபாவிடம், “உன்னை நம்பி தான் அனுப்புறோம் சுபி பத்திரமா பாத்துக்க” என்றார்.

 

“என்னம்மா புதுசா இப்படிலாம் சொல்லுறீங்க” என்றாள் சுபா.

 

“இல்ல சுபிக்குட்டி இப்போ இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பேசிருக்கோம் தனியா இரண்டு பேரும் இருந்தா என்னவோலாம் தோணும் அதான்” என்றார் துளசி.

 

“சரி மா நான் பார்த்துக்குறேன்” என்று ஒரு கறுப்பு நிற காட்டன் சாரி அணிந்தாள் சுபா. தீபிகாவும் ஒரு பச்சை வண்ண சாரி அணிந்தாள்.

 

“என்ன டி பெரிய மனுஷி அதிசயமா சாரி லாம் போடுற நம்பவே முடிலயே” என்றாள் நக்கலாக.

 

“சுபிக்கா இந்த அரவிந்த் என்ன பார்த்து அழகா இருக்கேனு சொல்லவே மாட்டிக்கிறான். ஆனா அவன் வாயில அப்படி வர வெக்க இந்த மாதிரிலாம் கெட் அப் சேஞ்ச் பண்ண வேண்டியதா போச்சு” என்று சிரித்தாள். 

 

தன் தங்கையின் அழகை ரசித்தவள், “இந்தா தீபி மல்லிப்பூ வெச்சிக்கோ” என்று வைத்துவிட்டாள்.

 

பின் அரவிந்த்திடம் சென்று “அரவிந்த் கிளம்பலாமா?”  என்றாள் சுபா.

 

“ஆ இதோ வந்திடறேன் அண்ணி” என்றான் அரவிந்த். தன் செவிகளையே நம்ப முடியாத சுபா அப்படியே சிலையாய் நின்றாள்.

 

“ஆமா நேத்து அஸ்வின் சொன்னது கரெக்ட் தான நான் நியாயப்படி உன்னை அண்ணினு தான கூப்பிடணும் சரி என் அருமை தீபி எங்க?” என்றான்.அவன் அப்படி கூப்பிட்டதில் சந்தோஷம் அடைந்த சுபா, “ உங்க லவ்வர்ஸ் பிரச்சனையில எங்க தலைய வேற உருட்டுறீங்க” என்றாள்.

 

“சரி நம்ம எங்க போலாம் அஸ்வின் வந்திருவான்ல” என்றான்.

 

“அவர் வரது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள் சுபா.

 

“தீபிகா மெசேஜ் பண்ணா” என்றான்.

 

“அடப்பாவிகளா! சண்டை பேச மாட்டோம்னு சொன்னீங்க.”

 

“ஆமா பேசமாட்டோம் தான் ஆனால் மெசேஜ் பண்ணுவோம்ல” என்றான்.

 

“ம்ம், நல்லா தெளிவா தான் இருக்கீங்க” என்று இருவரையும் கிளப்பினாள்.

 

அரவிந்தின் காரில் சுபாவும், தீபிகாவும் மெரினா பீச்சிற்குச் சென்றனர். அங்கு அரவிந்த் தீபிகாவிற்கு தனிமை கொடுத்து சுபா சற்று தூரமாய் மணலில் வந்து உட்கார்ந்தாள். 

 

அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர் அரவிந்த் மற்றும் தீபிகா. பின் அமைதியை களைக்கும் விதமாக அரவிந்த் பேச ஆரம்பித்தான். 

 

“என்ன சாரி லாம் போட்டு ரொம்ப சூப்பரா இருக்க இவ்வளவு நாள் ஆம்பள பையன் மாதிரி ஜீன்ஸ்

போட்டுட்டு வருவ இப்ப தான் பார்க்க பொண்ணா லட்சணமா இருக்க அழகா இருக்க” என்று உண்மையிலேயே ரசித்தான். 

 

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே சுபா தூரத்தில் உட்கார்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது அஸ்வினிடம் இருந்து போன் வந்தது. ”எங்க இருக்கீங்க இப்போ?” என்று கேட்டான்.

 

“மெரினா பீச்” என்றாள். ”ஓகே” என்று வைத்துவிட்டான். 

 

“நீங்க சுபாவிற்காக தான என்னை கல்யாணம் பண்றீங்க அரவிந்த்” என்று வருத்தமாய் கேட்டாள்.

 

“நான் முதல்ல அப்படினு தான் நினைச்சேன். ஆனா அது உண்மை இல்லை நான் உன்னை கல்யாணம் பண்ணனும்னு விரும்புறேன்.உன்கிட்ட ஒரு குழந்தைத்தனம் இருக்கு அதுதான் இப்போ உன்கிட்ட என்னை வந்து சேர்த்துருக்கு” என்றான். இதைக் கேட்ட தீபிகாவிற்கு அவ்வளவு சந்தோஷம். 

 

அரவிந்தும் தீபிகாவும் பேசிக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் தனது காரை பார்க் செய்து விட்டு வந்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அவன் பின்னாடி அவன் காரில் இருந்து இறங்கி சோனியா வந்துக்கொண்டிருந்தாள்.

 

“இவ எதுக்கு இங்க வர்றா? அத்தான் நாங்க இங்க இருக்கோம்” என்று கையைக் காட்டினாள் தீபிகா. தீபிகா கத்திக்கொண்டு கையை ஆட்டியதை சுபா கவனித்தாள். தன்னை மீறி அஸ்வினை ஒரு ஆர்வத்தோடு தேடினாள். 

 

பிளாக் டி சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து அவனுடைய ஆறடி உயரத்திற்கு அங்கு இருந்த முக்கால்வாசி பெண்கள் அவனை தான் பார்த்தனர். அஸ்வினைக் கண்டவள் பின்னாடியே சோனியா வருவதைப் பார்த்தவள் திகைத்தாள். 

 

அஸ்வின் சோனியாவை தீபிகாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். பின் அரவிந்த்திடம் திரும்பியவன் என்ன பேச என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அரவிந்த் அவனை அணைத்தான்.

 

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் அஸ்வின் சாரி நேற்று நீ பேசுனதுல நியாயம் இருந்தது” என்று அவனைப்பார்த்து சிரித்தான். 

 

அவர்களுக்கு தனிமை கொடுப்போம் என்று நினைத்த தீபிகா அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றாள். அங்கு மாங்காய் விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தவள் அதை வாங்கச் சென்றாள். அங்கு சுபா தனியாக நின்றதை பார்த்த சோனியா இதான் நல்ல சந்தர்ப்பம் என்று சுபா பக்கத்தில் வந்தாள்.

 

“ஏய் ஏன்டி அஸ்வின் லைஃப்ல இருந்து அவரை டார்ச்சர் பண்ற? உன்னை பழிவாங்கணும்னு உன்னை தொட்டுட்டாரு அந்த பாவத்துக்காக உன்னை கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. ச்ச… ஆனா அவர் சந்தோஷமா இல்லை ஏன்னு தெரியுமா? அஸ்வினும் நானும் தான் கல்யாணம் பண்றதா இருந்தது.

 

“இல்லை நான் இதை நம்பமாட்டேன்” என்றாள் சுபா மனதில் குழப்பத்துடன்.

 

“ஓ நம்பமாட்டியா இங்க பாரு நானும் மாளவிகா அண்ணியும் வாட்ஸ்அப்ல சாட் பண்ணது” என்று காட்டினாள். அதில் எனக்கும் அஸ்வினுக்கும் எப்போ கல்யாணம் அண்ணி என்று இவள் கேட்டிருக்கிறாள் அதற்கு மாளவிகா சீக்கிரமே நடக்கும் என்று அனுப்பியிருந்தாள். இதைக் கண்ட சுபாவிற்கு பேரதிர்ச்சி.

 

“இப்போ கூட அவருக்கு உன் கூட வாழ பிடிக்கல என்னையும் அவரால மறக்க முடியல… அதான் என்னை அவர் பக்கத்திலயே வெச்சிக்கணும்னு அவரோட ஆபிஸ்ல வேலைக்கு சேர்த்துருக்கார். நாங்க இனிமேல் தினமும் சந்திப்போம் தனிமையில் இருப்போம் நீ இன்னிக்கு வரதுக்கு முன்னாடி கூட நாங்க வெளிய போக தான் பிளான் போட்டோம்.”

 

“அப்புறம் அவர் தம்பிய பார்க்கணும்னு அந்த பிளான மாத்திட்டோம் அவரோட ரூம்ல அவருக்கு இந்த உடை நான் தான் செலக்ட் பண்ணி கொடுத்தேன். இப்போ கூட என்னை எங்க வீட்டுல டிராப் பண்ணுவாரு நாங்க இவ்வளவு க்ளோஸா இருக்கோம் இத புரிஞ்சிகிட்டாவது நீ விலகி போகலாம்ல…”

 

“அஸ்வின் மாதிரி ஒரு அழகான பணக்கார ஆம்பளனா உனக்கு அவரை பிடிக்கலைனா கூட அவர விட்டு போக மாட்டிக்கிற அவருக்கும் உன்னை சுத்தமா பிடிக்கல இது உனக்கே தெரியும்” என்றாள். 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!