அத்தியாயம் 1
அந்த பரபரப்பான சூழலில் அனைவரும் தங்களுடைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு பன்னிரண்டு மணி ஆன அளவிலும் கூட சாலைகள் வெறிச்சோடவில்லை. ஏனென்றால் இது ஒரு தூங்கா நகரம். ஆம் இச்சூழல் மதுரையில் மட்டுமே இருக்கும்.மதுரை என்றாலே சிறப்பு. நமது தமிழ்ச்சங்கம் பிறந்த ஊர்.
காலை ஆறு மணி அளவில் பழங்காநத்தம் திருவள்ளுவர் தெரு 3வது சந்தில் “துர்கா இல்லம்” என்று போடப்பட்டிருக்கும் வீட்டிலிருந்து சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.
“சுபா எழுந்திரு ஆறு மணியாச்சு. இன்று வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணும்” என்று கூறினார் துளசி. “அம்மா! அக்கா பாவம் நேத்து ரொம்ப நேரம் அவளோட காலேஜ் ப்ராஜெக்ட்க்கு வொர்க் பண்ணிட்டு இருந்தா. அதனால நம்ம மட்டும் போயிட்டு வரலாம்” என்றாள் அவ்வீட்டின் கடைக்குட்டி தீபிகா.
”நம்ம எல்லாரும் போயிட்டு வரலாம்னு நினைச்சேன்“ என்றார் துளசி. இந்த உரையாடலில் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவர் சபேசன்.
துளசி சபேசனின் இரண்டாம் மனைவி. சபேசன் ஒரு அரசு ஊழியர். அவர் வருமான துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவருடைய முதல் மனைவி செண்பகம்.
தன்னுடைய சொந்த மாமன் மகளை மணமுடித்தார். திருமணம் ஆன ஒரு ஆண்டு இறுதியில் பிறந்தாள் அந்த அழகிய தேவதை. அவளுக்கு சுபா வர்ஷினி என்று பெயர் வைத்தனர்.
சுபா பிறந்து இரண்டு மாதம் முடிவடையும் நிலையில் செண்பகம் ஒரு நாள் குழந்தைக்கு பால் பவுடர் வாங்க வேண்டும் என்று வெளியேச் சென்றார். அப்போது சாலையை கடக்கும் பொழுது ஒரு தண்ணீர் லாரி வந்துக்கொண்டிருந்து. அதை செண்பகம் கவனிக்கவில்லை லாரி ஓட்டுநரும் கவனிக்கவில்லை. அதனால் விபத்து நடந்து செண்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செண்பகத்தின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள சமயம் சபேசன் யாரிடமும் பேசாமல் இருந்தார். அவரால் இந்த பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுபா அவர் அன்னை பார்வதியின் அரவணைப்பில் இருந்தாள்.
நாட்கள் சென்றது. சுபாவிற்கு நான்கு மாதங்கள் முடிவடைந்தன. அப்போது ஒரு நாள் சபேசன் அவருடைய கல்லூரி நண்பன் திருமணத்திற்குச் சென்றார். செண்பகம் இறப்பிற்குப் பின் அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளவில்லை.
ஆனால் சுந்தர் சபேசனின் நெருங்கிய நண்பன் அதுமட்டுமல்ல பார்வதியின் தூரத்து சொந்தமும் கூட. எனவே அனைவரும் கல்யாணத்திற்குச் செல்ல தயாராகினர். சுபா விற்கு பட்டுப்பாவாடையை அணிவித்தனர். ஐந்து மாதம் ஆன சுபாவை பார்த்த சபேசன் குட்டி செண்பகத்தையே பார்த்தார். நிலாவைப் போல் கள்ளம் கபடம் இல்லாத அழகிய வட்ட வடிவ முகம். அவளின் எதிர் காலத்தை நினைத்து கண் கலங்கினார்.
அப்பா எப்படி வளர்த்தாலும் ஒரு குழந்தைக்கு அதுவும் பெண் குழந்தைக்கு அம்மாவின் அரவணைப்பு முக்கியம். கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நினைத்து அம்மாவையும் மகளையும் திருமணத்திற்கு அழைத்துச் சென்றார்.
மதுரையில் உள்ள தில்லை சிவம் திருமண மண்டபத்தில் தான் கல்யாணம் நடந்தது. மணமக்களை வாழ்த்திய பின் அனைவரும் உணவருந்தச் சென்றனர். அப்போது, “சபேஷ்” என்று அழைத்த ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பியவர் அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டார். அதற்கு காரணம் அப்பெண் சபேசனோடு கல்லூரி வகுப்பில் படித்தவள் அதுமட்டுமல்ல இவரை ஒருதலையாக காதலித்தவள். அவள் பெயர் துளசி.
“ஹாய் சபேஷ் எப்படி இருக்கீங்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. கல்யாணம் ஆகிடுச்சுனு கேள்விப்பட்டேன். உங்க மனைவி எப்படி இருக்காங்க?” என்று மனதில் வலி இருந்தாலும் வெளியில் சிறு புன்னகையோடு விசாரித்தாள் துளசி.
துளசி பெரிய பணக்கார வீட்டுப் பெண். அவளுடைய தந்தை பெரிய தொழில் அதிபர். காலகாலமாக மதுரையில் இருக்கும் அந்த பழங்கால ஜவுளிக்கடை “சுப்பிரமணியன் ஸ்டோர்ஸ்“ இது மிகவும் தரம் வாய்ந்தது.இதனின் உரிமையாளர் சுப்பிரமணியனின் மகள் தான் துளசி. துளசிக்கு அண்ணன்கள் இரண்டு பேர்.
மூத்த அண்ணன் வாசுதேவன் இவர் துளசியை விட பத்து வயது பெரியவர் பாபு இரண்டாம் அண்ணன் இவர் துளசியை விட எட்டு வயது பெரியவர். இவர்கள் இருவரும் தந்தையுடன் தொழிலைக் கவனிக்கின்றனர்.
துளசி வீட்டின் கடைக்குட்டி. சுப்பிரமணியன், லஷ்சுமி தம்பதியருக்கு ரொம்ப வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை என்பதனால் வீட்டிற்கு செல்லம்.
வாசுதேவன் மனைவி சசிகலா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். பாபு ஈஸ்வரிக்கு ஒரு மகன். இவர்களுக்கு ஒரே நாளில் தான் திருமணம் நடந்தது. இப்போது வருடங்கள் ஐந்து ஆகிறது அதனால் அடுத்து துளசியின் கல்யாணத்தை தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் துளசியோ சபேசனை நினைத்த மனது வேறு யாருக்கும் இல்லை என்ற முடிவோடு இருந்தாள்.
இத்தகைய சூழலில் தான் சபேசனைக் கண்டாள் துளசி. பார்வதி அம்மாள் சுபாவை வைத்துக்கொண்டு இருந்தவர் சபேசன் இன்னும் சாப்பிட வரவில்லை என்று அவரை தேடிச் சென்றார். அங்கு சபேசன் ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்தவர் அவர் அருகில் சென்றார்.
தன் அம்மாவிடம் துளசியை வகுப்பில் படித்த தோழி என்று அறிமுகப்படுத்தினார். அதே போன்று துளசிக்கும் தனது அம்மா மற்றும் மகளை அறிமுகப்படுத்தினார். சுபாவை பார்த்த துளசி, “அவ்ளோ அழகா இருக்கா உங்க பொண்ணு உங்க மனைவி ஜாடையோ?” என்று கேட்டாள். அவர், “ஆமாம்” என்றார். “உங்க மனைவி எங்கே சபேஷ்?” என்றாள் துளசி.
“அவ இங்க இல்லை. அவள் ஒரு விபத்தில் இறந்து விட்டாள்” என்றார். இதைக் கேட்ட துளசி சொல்வதறியாது திகைத்து, “சாரி” என்று சொல்லிவிட்டு விலகினாள்.
வீட்டிற்கு வந்த துளசிக்கு ஏனோ மனது ஒரு நிலையில் இல்லை. பாவம் அந்த குழந்தை அம்மா இல்லாமல் எப்படி தவிக்கும் என்று நினைத்து அழுது தூங்கியே விட்டாள். நீண்ட நேரம் கழித்து விழித்த துளசி ஒரு முடிவுக்கு வந்தவளாக வீட்டின் ஹாலிற்குச் சென்றாள். அது மாலை நேரம் என்பதால் அனைவரும் இருந்தனர்.
“எனக்கு கல்யாணத்திற்குச் சம்மதம் ஆனால் மாப்பிள்ளையை நானே பார்த்து விட்டேன்” என்றாள். துளசி ரொம்ப நாளாக திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருக்கும் போதே வீட்டில் அனைவருக்கும் சந்தேகம். இப்போது அவள் இப்படி சொன்னவுடன் லஷ்மி, “உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு பெரியவங்க முன்னாடியே இவ்வளவு திமிரா பேசுற” என்று சீறினார்.
“நீங்க என்ன எப்படி வேணாலும் எடுத்துக்கோங்க அம்மா ஆனால் நான் மணந்தால் அது சபேசனை மட்டும் தான்” என்றாள். இதைக் கேட்ட சுப்பிரமணியன், “துளசி மனம் போல் மாங்கல்யம் அமையட்டும்” என்றார். தன்னுடைய பெண்ணின் தேர்வு நல்லதாக இருக்கும் என நம்பினார். வாசுதேவன் மற்றும் பாபுவிற்கு இதில் பிடித்தம் இல்லை. ஆனாலும் தந்தையின் சொல்லிற்காக அமைதி காத்தனர்.
அடுத்த நாள் காலை துளசியிடம் சுப்பிரமணியன் சபேசனைப் பற்றி விசாரித்தார். ”சபேசன் என்னுடன் கல்லூரியில் படித்தவர். நான் அவரை ஒருதலையாக காதலிக்கிறேன். அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.
மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். இப்போது ஐந்து மாத கைக்குழந்தையுடன் மதுரையில் தன் தாயுடன் இருக்கிறார். திருமணம் என்று ஒன்று நடந்தால் அது சபேசனோடு தான் இல்லை என்றால் சாகும் வரை தனியாகவே இருப்பேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் பொழுது வீடே நிசப்தம் ஆனது.
“இப்படி சொல்றதுக்கு உனக்கு வெக்கமா இல்லை ஒழுங்கு மரியாதையா வீட்டில பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ” என்று கத்தினார் வாசுதேவன்.
“உனக்கு லாம் செல்லம் கொடுத்ததே பெரிய தப்பு.இப்படி இரண்டாம் தாரமாய் போறதுக்கு வீட்டிலேயே இரு” என்றார் பாபு. பின்னர் ஒரு வாரம் கழித்து சுப்பிரமணியன் வாசுதேவனை அழைத்து, “வாசு! கொஞ்சம் வெளிய போகணும்” என்று கூறினார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சபேசன் சுபாவிடம் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலின் அழைப்பு மணி ஒலித்தது.கதவைத் திறந்த சபேசனுக்கு அவர்களை யாரென்று தெரியவில்லை. ஆனால் மரியாதைக்காக அவர்களை உள்ளே அழைத்து யார் என்று விசாரித்தார்.
தாங்கள் துளசியின் தந்தை மற்றும் சகோதரன் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்கள். விசயத்தை ஓரளவு கணித்த சபேசன் அவர்களை முதலில் அமர வைத்து தன் அம்மாவிடம் அவர்களுக்கு காபி எடுத்துக் கொண்டு வருமாறு அழைத்தார். “துளசி மணந்தால் உங்களைத் தான் திருமணம் செய்வாளாம் இல்லை என்றால் கடைசி வரை தனியாகவே இருப்பாளாம்” என்றார் சுப்பிரமணியன்.
“நான் துளசியை சமாதானப் படுத்துகிறேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்க” என்றார் சபேசன். “இன்று மாலை எங்க வீட்டுக்கு வந்து பேசுங்க” என்றார் வாசு. சபேசனுக்கும் அதுவே சரியாகப்பட்டது. இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி அம்மாள்.
காரில் திரும்பி வரும் பொழுது வாசு தான் பேச்சை ஆரம்பித்தார். “பார்க்க நன்றாக இருக்கிறார் மரியாதையாக பேசுகிறார் இவருக்கு திருமணம் மட்டும் ஆகாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார்.
“அதுமட்டுமல்ல வாசு இவர் வேலையில் படு கெட்டிக்காரத்தனம் நேர்மையானவரும் கூட” என்றார் தந்தை.
மாலையில் சபேசன் துளசி வீட்டை அடைந்தார் அவர் வருவது துளசியைத் தவிர அனைவருக்கும் தெரியும். சபேசனைப் பார்த்த அனைவரும் அவரின் கம்பீரத்தைப் பார்த்து வியந்தனர். அவரை நன்கு உபசரித்தனர். துளசியை அழைக்குமாறு கேட்டார்.சசிகலா மற்றும் ஈஸ்வரி துளசியை அழைத்தனர். எதற்கு என்று புரியாமல் வந்த துளசிக்கு சபேசனைப் பார்த்ததும் அதிர்ச்சி.
“துளசி நீ எனக்கொரு நல்ல தோழி. அதையும் விட நல்ல பண்புள்ள பெண். என்னோட வாழ்க்கையில் முதலிடம் சுபா விற்கு மட்டும் தான். நீ நன்றாக வாழ வேண்டும். உங்கள் வீட்டில் சொல்பவரை திருமணம் செய்துக் கொள்” என்றார் சபேசன்.
“நான் உங்களை மட்டும் தான் மணப்பேன் நான் சுபாவிற்கு நல்ல தாயாக இருப்பேன் இந்த முடிவில் மாற்றம் இல்லை நீங்கள் இப்போது கிளம்பலாம்“ என்றாள் துளசி.
இதைக் கேட்ட சுப்பிரமணியன், “துளசியைப் பற்றி எனக்கு தெரியும். அவள் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாள். நீங்களே என் மகளைத் திருமணம் செய்துக் கொள்ளுங்கள். அவளின் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் உங்கள் தாயிடம் கூட இதைப்பற்றி பேசிவிட்டேன். அவருக்கும் இதற்கு சம்மதம்.” என்று முடித்தார். சுபாவிற்கு தாயின் அரவணைப்பு வேண்டும். துளசியின் குணம் அறிந்ததால் சபேசன் துளசியை மணக்க சம்மதித்தார் ஆனால் சில நிபந்தனைகளுடன்.
“துளசி நீ என்னுடைய மனைவியாய் மட்டுமே இருக்க வேண்டும். இந்த வசதிகளை விட்டு வர வேண்டும். எக்காரணம் கொண்டும் என்னை வீட்டோட மாப்பிள்ளை ஆக சொல்ல கூடாது. எனக்கு சுபா தான் முக்கியம் அவள் மனதில் ஏதாவது காயம் உன்னால் ஏற்பட்டால் உனக்கு அந்த வீட்டில் இடம் கிடையாது” என்றார். இதைக் கேட்ட துளசி, “எனக்கு சம்மதம். சுபா இந்த நிமிடத்தில் இருந்து என் மகள்” என்றாள்.
இதைக் கேட்ட துளசியின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏனோ சுபாவை பிடிக்கவில்லை. சுபா என்னும் கயிறை வைத்து தங்கள் துளசியை கட்டிப்போட்டதாக நினைத்தார்கள்.
ஆனால் தங்கள் துளசி விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை தான் இதில் சுபா என்கிற சிறிய பிஞ்சிற்கு பங்கில்லை என்பதை நினைக்கவில்லை. சபேசன் துளசியின் கல்யாணம் கோவிலில் நடந்தது. சபேசன் ஆடம்பரமாக நடத்த சம்மதிக்கவில்லை. கல்யாணம் முடிந்து ஒரு வருட முடிவில் தீபிகா பிறந்தாள்.
