அத்தியாயம் 1

“அனிதா, எழுந்திரு சிஏ கிளாஸிற்கு கிளம்ப நேரம் ஆச்சு” என்று எழுப்பினார், அனிதா என்று வீட்டில் அழைக்கப்படும் சர்மிளாவின் தந்தை கண்ணன்.

“டாடி ப்ளிஸ் டாடி, நேற்று இரவு தூங்கவே மணி ஆயிடுச்சு. ஃபவுண்டேஷன் எக்ஸ்ஸாம்க்கு படித்துக் கொண்டு இருந்தேன்” என்று தூக்கக் கலக்கத்தில் கூறினாள் சர்மிளா.

“அனிதா, இரவு நேரத்திற்குப் படுத்துவிட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து படிப்பதுதான் நல்லது. சரி எழுந்திரு கிளாஸிற்கு நேரம் ஆச்சு உன்னை அப்படியே நுங்கம்பாக்கத்தில் விட்டுவிட்டு நான் ஷெட்டிற்குச் செல்லவேண்டும்.”

அவளின் உயிருக்கு உயிரான டாடி இவ்வளவு கூறிய பின் விழிக்காமல் இருப்பாளா தந்தையின் செல்லப் பெண்? எழுந்துவிட்டு தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்துவிட்டு வரும்போதே தன் கணவனிடம் மகளுக்காக வாதாடிக் கொண்டிருந்தார் விஜி.

“ஏங்க, நம்ம அனிதா இப்போது தான் பிளஸ் டூ முடித்துக்கொண்டு லீவில் இருக்கிறாள். இப்போதே அவளுக்கு எதுக்கு சிஏ படிப்பு எல்லாம்… கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருக்கட்டுமே அதற்குப் பிறகு கல்லூரி போக ஆரம்பிச்சிடுவா. படிப்பு நிறைய இருக்குமே. இப்போது கொஞ்ச நாளாவது ஃப்ரீயா இருக்கட்டுமே” என்றார் விஜி.

“நம்ம தான் படிக்க முடியவில்லை. நம்முடைய பெண் படித்து பெரிய ஆளாக வேண்டும் அதற்குத்தான் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சின்ன பள்ளியை விட்டுவிட்டு புரசைவாக்கத்தில் இருக்கும் அந்த பெரிய பள்ளியில் சேர்த்தேன் விஜி.”

சென்னை பெரம்பூரில் வசிக்கும் கண்ணனுக்கு, சர்மிளா மற்றும் விவேக் என இரு பிள்ளைகள். பாரிமுனையில் சொந்தமாக மெக்கானிக் ஷெட் வைத்திருந்த கண்ணன், தன் உழைப்பில்தான் சொந்தமாக ஒரு சிறிய அழகிய வீட்டை வாங்கினார்.

படிப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்த சர்மி, தன் தந்தைக்காகவே நன்றாகப் படித்து ப்ளஸ் டூவில் தொண்ணுற்று ஐந்து சதவீதம் எடுத்தாள். வணிகவியலை மையமாகக் கொண்ட பிகாம் படிப்பிற்கு சென்னையிலேயே மிகப்பெரிய கலை கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்கி விண்ணப்பம் கொடுத்தாள்.

சிஏ என்பது பெரிய படிப்பு, அதில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் தன் முழு வீச்சைப் படிப்பில் செலுத்தியவள், சிஏ ஃபவுண்டேஷனில் தோல்வி அடைந்தாள்.

“ஏன் கண்ணா, சிஏ எல்லாம் படிக்க வைத்து அனிதாவை கொடுமைப்படுத்துற பாரு. அவள் தோல்வி அடைந்து விட்டாள். இப்போதே அவளுக்கு வயது பதினேழு. ஒழுங்கா ஒரு பட்டம் முடிந்த அப்புறம் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடு” என்றார் கண்ணனின் அம்மா கோமதி.

“அம்மா, நீங்கள் பேசாமல் இருங்கள். இதைச் சொல்லத்தான் இப்போது தம்பி வீட்டிலிருந்து கிளம்பி வந்தீங்களா?” என்று தன் தாயிடம் கடுப்பைக் காட்டியவர், தன் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தார்.

இந்த உரையாடல் அனைத்துமே சர்மியின் காதில் தெளிவாக விழுந்தது. தன் தந்தை அமைதியாக அமர்ந்து இருப்பதைப் பார்த்தவள், “டாடி, என்னை மன்னிச்சிருங்க. என்னால் தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்” என்று கலங்கிய மகளைப் பாசத்தோடு பார்த்தவர்,

“நீ முதலில் கல்லூரி படிப்பு முடிடா, அதற்குப் பின் இந்த சிஏ எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். நீ படிக்காமல் தோல்வி ஆகவில்லை. இரவும் பகலுமா முழித்து படித்து தோல்வி ஆயிருக்க. உன் திறமை என்னவென்று உன் அப்பாவிற்குத் தெரியும். அதனால் கவலைப்படாத இந்த அப்பா உனக்காக எப்போதும் இருப்பேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார் தந்தை.

இவர்களின் அன்பை ஆசையாகப் பார்த்த விஜியின் கண்களில் ஆனந்த கண்ணீர். சர்மிளாவிற்கும் அவளுடைய தம்பி விவேக்கிற்கும் வயது வித்தியாசம் ஏறத்தாழ பத்து இருக்கும். விஜிக்கு எப்போதுமே விவேக் தான் செல்லப் பிள்ளை. அதற்காக சர்மிளாவைப் பிடிக்காது என்று இல்லை. ஆனால் தந்தைக்கு மகள் உயிர் போல அன்னைக்கு மகன் தான் உயிர்.

இப்படியே இரண்டு வாரங்கள் சென்ற நிலையில்தான் சர்மிளாவிற்கு சென்னை மவுன்ட் ரோட்டில் இருக்கும் பிரபல மகளிர் கலைக்கல்லூரியில், மாலை கல்லூரிக்கு இடம் கிடைத்தது.

ஆனால் தான் நினைத்த பிகாம் ஜென்ரல் கிடைக்கவில்லை. பிகாம் வங்கி நிர்வாகம்தான் கிடைத்தது என்று சர்மிளா மற்றும் அவள் வீட்டில் ஏமாற்றம் அடைந்தாலும், கல்லூரி திறக்கும் நாள் வந்தது. சர்மியும் கல்லூரிக்குச் செல்ல ஆர்வமானாள்.

அன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் தன் இஷ்ட தெய்வமான பெருமாளைக் கும்பிட்டவள், “கடவுளே, என் வாழ்க்கை பாதை டாடி நினைத்த மாதிரி இருக்க வேண்டும். நான் நல்லா படித்து பெரிய ஆளாக வேண்டும்” என்று வேண்டினாள்.

“அனிதா, சீக்கிரம் சாப்பிடு, இன்றைக்கு டாடியே கல்லூரியில் விடுகிறேன். இங்க பக்கத்தில் ***டிராவல்ஸ் இருக்குமா பேசிட்டேன். உங்கள் கல்லூரிக்குத் தினமும் நிறைய பெண்கள் நம்ம பகுதியில் இருந்தே போகிறார்கள். இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கு. நீ சேஃபா போயிட்டு வருவ.”

“டாடி, நீங்க கவலைப்படாதீர்கள். நான் காலேஜிற்குப் போயிட்டு சேஃபாக வருவேன்.”

“அனிதா, டாடி உன்னை கஷ்டப்பட்டுத் தான் படிக்க வைக்கிறார். அது சென்னையிலேயே பெரிய கல்லூரி. அங்கே படித்துக்கொண்டு வரப் பெண்கள் எல்லாரும் இப்போது சமுதாயத்தில் சாதனை பெண்களாக இருக்கின்றனர். அதைப் போல் நீயும் ஆகவேண்டும்.”

“சரி மம்மி.”

“அனிதா, நீ பெரிய டாக்டர் ஆகி எனக்கு பிடித்தது எல்லாம் வாங்கித்தா” என்றான் விவேக்.

Share on
❤️ Loading reactions...
அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!