அத்தியாயம் 11
ஒருத்தரைப் பழிவாங்க இந்த அளவு ஒருவரால் முடியுமா அதுவும் தப்பு என்னிடம் இல்லாமலே தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது தன் நிலையை நினைத்து மௌனமாக இருந்தாள் சுபா. கார் நேராக சபேசனின் வீட்டிற்குச்சென்றது.
மண்டபத்தில் இருந்த அனைவரும் ரிசப்ஷன் இல்லையெனில் மாப்பிள்ளை பெண் வீட்டு குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டுச் சென்றனர். சபேசன் வீட்டை அடைந்த பின் அங்கு துளசி ஆரத்தி எடுத்தார்.உள்ளே அனைவரும் இருந்தனர்.
வாசுதேவன் மற்றும் சசிகலா சுபாவிடம் வந்து, “எங்களை மன்னிச்சிருமா நாங்க தான் உன்னோட மாமனார் மாமியார் அஸ்வினின் பெற்றோர்கள் நீ பயப்படாதே மா நாங்க உன்னை நல்லா பார்த்துப்போம். இதோ இவ தான் என் பொண்ணுமா அஸ்வினுக்கு தங்கச்சி மாளவிகா…”
“இவர் எங்க மாப்பிள்ளை மாளவிகாவின் கணவன் அவினாஷ் தம்பி” என்று அறிமுகப்படுத்தினார். சுபா மாளவிகாவைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். ஆனால் மாளவிகா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆனால் அவினாஷ் நன்றாக பேசினான் வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.
பின் சுபா நேரேச் சென்றது தன் தந்தை தாயைப் பார்க்க அவர்கள் அவளிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல், “சுபா நீயும் மாப்பிள்ளையும் உட்காருங்க நீங்க இன்னும் சாப்பிடலையே அதனால உள்ள ரெடி பண்ணிட்டு இருக்கோம்” என்று உள்ளே சென்று விட்டார் துளசி.
தன் அப்பாவிடம் இதைப் பற்றி கேட்க சங்கடமாக இருந்ததால் தீபிகாவிடம் சென்றாள். “தீபு என்ன ஆச்சு? எப்படி இதெல்லாம்?” என்ற போது அவள் கண்களில் அழுகை வந்தது.
அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்ற தீபிகா அங்கு அவளை தங்களுடைய கட்டிலில் அமரச் செய்தாள். பின் தன் செல்லை எடுத்து அரவிந்த்திற்கு கால் செய்து வரச் சொன்னாள். அரவிந்த் உள்ளே வந்தவுடன் இருவரும் நடந்த விஷயத்தைக் கூறினர். ‘என் மேல் அவனுக்கு எவ்வளவு பழிவெறி இருக்கிறது’ என்று நினைத்தாள்.
“ஏன் சுபா சின்ன வயசுல அவன் உன் கழுத்த நெறிச்சான் அது வரைக்கும் தான உங்களுக்குள்ள பிரச்சனை அதுக்கு அவன் இவ்வளவு கீழ்த்தரமா இறங்கி இருக்கானா?” என்று கேட்டான் அரவிந்த்.
“இல்ல அரவிந்த்… தீபி எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு கொஞ்சம் போட்டு தரியா” என்று கேட்டாள். அவளும், “சரி” என்று கிச்சன் சென்று விட்டாள்.பின் நடந்த அனைத்தையும் அரவிந்த்திடம் கூறினாள்.
“இந்த விஷயம் தீபிக்கு தெரிய வேண்டாம் அரவிந்த் அதே மாதிரி அஸ்வினுக்கும் தெரிய வேண்டாம்” என்றாள்.
“நான் சொல்ல மாட்டேன் சுபா நீ கவலைப்படாத ஆனா உன் வாழ்க்கைய பத்தி நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு” என்றான்.
”என் வாழ்க்கை இனி என்னனு தெரியல அரவிந்த் நீங்க ரொம்ப நல்லவர் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்றாள்.
”ஆனா உன்ன மாதிரி ஒரு பொண்ணு வராதே சுபா அழகு, அமைதி, நல்ல குணம் இதெல்லாம் இருக்கிற பொண்ணு நீ… உன்னை மிஸ் பண்ணிட்டேன்” என்றான்.
”என் பொண்டாட்டிய நீ ஏன் மிஸ் பண்ணனும்” என்று ஒரு கம்பீரமான குரல் ஒலித்தது. அந்த குரலுக்குச் சொந்தமான சுபாவின் கணவன் அஸ்வின் சுபாவை நெருங்கி வந்தான். அவளிடம் ஒரு அனல் வீசும் பார்வை பார்த்து விட்டு அரவிந்திடம் திரும்பி,
“சுபா அழகியா இருக்கலாம் நல்ல அமைதியா இருக்கலாம் இந்த வர்ணணை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னர் பண்ணதோடு சரி… ஆனா இப்போ சுபா என்னோட மனைவி நியாயப்படி பார்த்தா இனி உனக்கு அவள் அண்ணி…”
“அதனால இந்த மாதிரி பேச்சுலாம் வெச்சிக்காத இனிமேல் இந்த மாதிரி தனியா அவள் கிட்ட வந்து அவள் அழகை வர்ணிக்கிறத நான் பார்த்தேன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று சுபாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
அவளோடு ஹாலிற்கு சென்று அவள் கையை விட்டு விட்டு தான் சோபாவில் அமர்ந்தான். தீபிகா சுபாவிடம் காபி கொடுத்து விட்டு அரவிந்தை ஆறுதல் படுத்துவதற்காக சென்றாள். துளசி மணமக்களுக்கு சாப்பாடு வைத்து அவர்களை வாழ்த்தி விட்டு அஸ்வினிடம்,
“அஸ்வின் எனக்கு உன்ன சின்ன வயசுல இருந்து தெரியும் நீ பொண்ணுங்க கிட்ட கண்ணியமா தான் இருந்திருக்க ஆனா என் பொண்ணு சுபா கிட்ட உன்னால எப்படி இப்படி நடந்துக்க முடிஞ்சுது அவ தேவதை பா அவள இப்படி சிதைச்சிட்டியே” என்று அழுதார் துளசி.
சபேசனின் முகத்தில் கோபம் இருந்தது ஆனால் எதுவும் பேசவில்லை. ”துளசி நீ கவலைப்படாத நாங்க நல்லா பார்த்துப்போம்” என்று ஆறுதல் அளித்தார் வாசுதேவன்.
“உன்கிட்ட தானடா கேட்கிறாங்க சொல்லேன்” என்றார் வாசுதேவன்.
“நீங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல… அப்படி பார்த்தா நீங்க எனக்கு நன்றி தான் சொல்லணும்… உங்க பொண்ண நான் கெடுத்துருக்கேன்.”
“நான் நினைச்சேனா அவள் கல்யாணத்த நிறுத்தி உங்க குடும்ப மானத்தை வாங்கி நானும் அவளை கல்யாணம் பண்ணாம போயிருப்பேன். ஆனா என்னோட ரேன்ஜிற்கு என்னோட தகுதிக்கு அவளை கல்யாணம் பண்ணதுக்கே நீங்க எனக்கு நன்றி சொல்லணும்” என்றான் அஸ்வின்.
“நான் உங்க அண்ணன் பையனா இருக்கலாம் ஆனா இப்போ இந்த வீட்டு மூத்த மருமகன்… அதனால எனக்கு கொடுக்கவேண்டிய மரியாதை வரணும் அப்படி இல்லைன்னா உங்க பொண்ணு இங்க வரமாட்டா” என்றான்.
“சாரி மாப்பிள்ளை நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்” என்றார் துளசி.
”நாளைக்கு மார்னிங் சென்னைக்கு கிளம்புறோம் சுபா உன் திங்க்ஸ் லாம் பேக் பண்ணிடு“ என்று சுபாவிடம் கூறி ஒரு பார்வை பார்த்தான் அஸ்வின். பின் தன் தாய் தந்தையிடம் திரும்பி, ”நீங்க இரண்டு பேரும் அவள் திங்க்ஸ் பேக் பண்ண அப்புறம் கூட்டிட்டு வாங்க எனக்கு ஒரு வேலை இருக்கு கிளம்புறேன்” என்றான்.
”அம்மா எனக்கு பயமா இருக்கு நான் இங்கயே இருந்துக்குறேன் தீபு நீயாவது சொல்லேன் அப்பா ப்ளீஸ்” என்று அழுதாள் சுபா.
“என் பொண்ண விட்டுரு டா அவள சாகடிச்சிடாத பாவி” என்றார் சபேசன் ஆதங்கத்துடன். அவர் பேசியதைக் கேட்ட அனைவரும் திகைத்தனர். அனைவருக்கும் அஸ்வினின் மேல் பயம் இருந்தது. சபேசனின் கையை அழுத்தினார் துளசி.
ஏனெனில் சபேசனை முறைத்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அவர் காதருகில் வந்து தீபிகா, “அவரை மரியாதையா பேசுங்க அப்பா அவர் பார்வைய ஃபேஸ் பண்ணவே பயமா இருக்கு” என்றாள்.
“மாப்பிள்ளை, சுபா பாவம் அவளை இங்கேயே விட்டுட்டு போயிருங்க அவள் கடைசி வரைக்கும் எங்க பொண்ணாவே எங்க கூட இருக்கட்டும்” என்று கெஞ்சிய குரலில் கேட்டார் சபேசன்.
“சுபா என் கூட நீ நாளைக்கு கிளம்பணும். இது தான் என் முடிவு இதை மீறி நீ வரலனா நான் மிருகமா மாறிடுவேன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இன்னிக்கு நைட் நீ பாபு சித்தப்பா வீட்டுல இருக்கணும் புரிஞ்சுதா?” என்று அதட்டிக்கேட்டான் அஸ்வின்.
“புரிஞ்சுது” என்று அழுதுக்கொண்டே கூறினாள் சுபா. தங்கள் வார்த்தை இங்கு எடுபடாது என்பதை உணர்ந்து அனைவரும் அரவிந்த் உட்பட அமைதியாக இருந்தனர். இவ்வாறு கூறிவிட்டு அஸ்வின் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
அஸ்வின் சென்றவுடன் மாளவிகா மற்றும் அவினாஷ் பாபுவின் வீட்டிற்குச் சென்றனர். தன் அறைக்குச் சென்று உள்ளே கட்டிலில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் சுபா. அவளின் பின்னே அனைவரும் அறைக்குச் சென்றனர். அவளின் அழுகையை யாராலும் சமாதானம் படுத்த முடியவில்லை.
“நான் ஏன் துளசிம்மா அப்பா அம்மா வீட்டுக்குப் போகணும்? நான் ஏன் அவர பார்க்கணும்? எங்களுக்குள்ள ஏன் இப்படி பிரச்சனை வரணும்? என்னை ஏன் இப்படி பழிவாங்கணும்? நான் எதுக்கு உயிரோட இருக்கணும்?” என்று
தீபிகாவிடம் புலம்பினாள்.
“இதுக்கெல்லாம் காரணம் நீ தான் துளசி உன்னை கல்யாணம் பண்ணினது தான் என் பொண்ணு வாழ்க்கையையே அழிச்சிடுச்சு. நீ தான அவள அங்க அனுப்பி வெச்ச பிரச்சனை நடந்தது தெரிஞ்சும் என்கிட்ட சொல்லல சுபாவின் இந்த நிலைமைக்கு நீ மட்டும் தான் காரணம்” என்று கோபமுடன் கூறினார் சபேசன். இதைக் கேட்ட துளசி சிலையாய் உரைந்தார்.
“நம்ம யாருக்காவது அவரை கட்டுப்படுத்த முடியுதா? இல்ல நம்ம பேச்சு தான் எடுபடுதா? ஏன் அவர் அப்பா அம்மாவே அவருக்கு பயப்படுறாங்க இந்த நிலைமை உன்னால தான்” என்று துளசியைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னார்.
“அப்பா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க துளசி அம்மா என் வாழ்க்கைல இல்லைன்னா 23 வருஷம் நான் சந்தோஷமா இருந்திருக்க முடியாது. அவங்க என்னை அவ்வளவு பாதுகாப்பா தான் பார்த்துக்கிட்டாங்க. என் நேரம் என் விதில அப்படி இருக்குபா அதற்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்று கூறியவள்,
பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன்னால் பெற்றோர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது தான் இங்கு இருந்தாலும் அஸ்வினால் பிரச்சனை பலமாக இருக்கும் என்று எண்ணி, “நான் கிளம்புறேன் அப்பா” என்று பொருட்களை பேக் செய்ய தொடங்கினாள். அப்போது தான் வாசுதேவன் சசிகலாவிற்கு மனதில் நிம்மதியாக இருந்தது.
எல்லா திங்க்ஸையும் பேக் செய்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்றாள். அப்போது சபேசனிடம் நடந்ததை மனதில் வைத்து துளசியிடம் கோபிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கினாள். சுபா தங்களை விட்டு பிரிகிறாள் அதுவும் ஒரு அரக்கனுடன் வாழப் போகிறாள் என்பதை உணர்ந்த அவளுடைய பெற்றோர் மற்றும் சகோதரி அழுதுக்கொண்டே இருந்தனர்.
சுபாவிற்கு மனதில் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் அழுகையோடு விடைபெற்று விட்டு பாபுவின் வீட்டிற்கு தன் மாமனார் மாமியாரோடு சென்றாள். அரவிந்த், பாபு மற்றும் ஈஸ்வரி மாளவிகா, அவினாஷோடு சென்றனர்.
அரவிந்த் வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய அறைக்குச் சென்று சாப்பிடாமலே தூங்கி விட்டான். சுபா பாபுவின் வீட்டை அடைந்த பின்னர் அங்கு சசிகலா சாப்பிட அழைத்தார். பசியில்லை என்றாலும் அவர்கள் கூப்பிட்ட மரியாதைக்காக சாப்பிட்டாள். பின் என்ன செய்வதென்று தெரியாமல் சோபாவில் அமர்ந்தாள்.
அனைவரும் உறங்கச் சென்றனர். அப்போது சசிகலா சுபாவை தன்னோடு படுத்துக் கொள்ளுமாறு அழைத்தார். வாசுதேவன் இன்னொரு ரூமில் படுத்துக் கொண்டார். தன் பட்டுச்சேலையை மாற்றி ஒரு சல்வார் அணிந்துக் கொண்டு தன் மாமியாருடன் படுத்துக் கொண்டாள்.
மதுரையில் உள்ள ஒரு பெரிய ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்றிருந்த அஸ்வின் முந்தைய நாளே மதுரை வந்திருந்து அங்கு தங்கினான். சுபா வீட்டிலிருந்து நேரே அங்கே சென்று ஃப்ரெஷ் அப் செய்துக் கொண்டு சில மீட்டிங்கை முடித்து விட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு பாபுவின் வீட்டிற்கு வர மணி பதினொன்று ஆனது.
வீட்டின் வெளியே சுபாவின் காலணிகளைக் கண்ட அஸ்வின் அவள் வந்துவிட்டாள் என்பதை உறுதி செய்துக் கொண்டு ஹாலில் நேராக தன் தாத்தா, பாட்டி புகைப்படம் மாலைப் போட்டு இருந்ததைப் பார்த்து மனம் வருந்தினான்.
பின் தன் அறைக்குச் சென்றான். அஸ்வின் எப்போதுமே தன் தாத்தா வீட்டிற்கு வரும் போது தங்கும் அறை அது… அந்த அறையில் தான் தன் தாத்தா பாட்டியிடம் பொறுக்கி என்று பெயர் வாங்கினான். அவன் மட்டுமே உபயோகப்படுத்திய அறை இப்போது பதினோரு வருடங்கள் கழித்து தன் அறையைப் பார்த்தவன் அங்கு சுபா இல்லை என்பதை உணர்ந்து கடுப்பாகினான்.
சுபா தன் அன்னை உடன் தான் படுத்திருப்பாள் என்று யூகித்தவன் அவளை நாளை பார்த்துக் கொள்கிறேன் என்று மனதில் நினைத்து தூங்கச் சென்றான்.
காலை விடிந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டே அறையை விட்டு வெளியில் வந்தாள் சுபா. அப்போது வாசுதேவனும், பாபுவும் காபி குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
தன் மாமியாரைத் தேடி கிச்சன் சென்றாள் சுபா. “அம்மா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா?” என்று உள்ளே வந்தாள்.
“அதெல்லாம் வேண்டாம்மா நீ ரெஸ்ட் எடு நான் உனக்கு காபி கொண்டு வந்து கொடுக்குறேன். அப்புறமா என்னையும் அவரையும் அத்தை, மாமா என்றே கூப்பிடு” என்று சிரித்தார். பின் காபி அருந்திவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முன்னாடி இருக்கும் தோட்டத்தின் மரப்பலகையில் உட்கார்ந்து பறவைகள வேடிக்கை பார்த்தாள்.
காலையில் உடற்பயிற்சி செய்து முடித்த அஸ்வின் ஜாகிங் சென்று விட்டு வீட்டிற்குள் வந்தான். அப்போது சுபா அங்கு தோட்டத்தில் கருப்பு நிற சல்வார் அணிந்து உட்கார்ந்திருந்தாள். அதைக் கண்ட அஸ்வின் அவளிடம் நெருங்கி வந்தான். “அரவிந்திடம் உனக்கு என்ன நேற்று அப்படி தனியாக பேச்சு” என்று தன் இருகைகளயும் கட்டிக்கொண்டு அவள் முன் வந்து நின்றான்.
திடீரென்று அவன் வருகையை எதிர்பார்க்காத சுபா முதலில் பேசுவதறியாது திகைத்தாள். பின், “நான் அவரை பார்க்க செல்லவில்லை அவர் எதேச்சையாக என்னிடம் வந்து பேசினார். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி தப்பாக அவர் எதுவும் பேசவில்லை” என்றாள்.
“அவன் உன்னை மாதிரி அழகான பொண்ணு இல்லைன்னு சொல்றான் இது உனக்கு தப்பான பேச்சு இல்லையா? நீ தான் அவனை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்கியே அப்போ எப்படி அந்த கேவலமானவன விட்டுக்கொடுப்ப” என்று ஏளனமாகப் பேசினான்.
‘இவர் எல்லாத் தப்பும் பண்ணுவாராம் ஆனா எனக்கு வாழ்க்கை கொடுக்க நினைச்ச அரவிந்த் கேவலமானவரா?’ என்று மனதில் நினைத்தவள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்ல முற்பட்டாள். அவளின் கையைப் பிடித்து இழுத்த அஸ்வின், “நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லணும் புரிஞ்சுதா?” என்று கையை அழுத்தினான்.
“நேற்றே அங்க வெச்சு உன்னை கேட்டுருப்பேன் தனியா உன்கிட்ட பேசிக்கலாம்னு விட்டுவிட்டேன். இந்த மாதிரி அவன் கூட தனியா பேசுறது அவன் அழகா இருக்கனு சொல்ற வரைக்கும் அவன் கிட்ட பேச்சு கொடுக்குறது இந்த வேலை லாம் வெச்சிக்காத புரிஞ்சுதா?” என்று கர்ஜித்தான்.
“புரிஞ்சுது” என்றாள் பயந்த குரலில். பின் தான் கிளம்பலாமா என்று யோசித்து சுபா அவனுக்கு பயந்து, “இப்போ கிளம்பலாமா?” என்று கேட்டாள் அவளிடம், “கிளம்பு” என்று கூறிவிட்டு உள்ளே தன் அறைக்குச் சென்றான்.
பின் சிறிது நேரம் கழித்து காலை உணவை அருந்திவிட்டு அனைவரும் சென்னை கிளம்ப ஆரம்பித்தனர்.மாளவிகா மற்றும் அவினாஷ் இவர்களிடம் விடைபெற்று முதலில் சென்னை கிளம்பினர். பின் வாசுதேவன் மற்றும் சசிகலா தங்களின் காரில் ஏறினர். சுபாவும் அவர்களோடு செல்ல ஏறினாள்.
“ஏய் நீ இங்கே வந்து ஏறு” என்று முன் சீட்டைக் கைகாட்டினான். தயக்கத்தோடு ஏறிய சுபாவை முறைத்து விட்டு, ”ஒவ்வொரு தடவையும் என் கார்ல ஏறுனு உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது நீயா வந்து ஏறணும்” என்று வண்டியை எடுத்தான்.
‘மதுரைல இருந்து சென்னை செல்ல குறைஞ்சது ஏழு மணி நேரம் ஆகுமே இதுல சாப்பிடுவதற்காக எங்கயாவது நிறுத்துவாங்க கண்டிப்பா எட்டு மணி நேரம் ஆகும் இவர் கூட தனியா அவ்வளவு நேரம் போகணுமே முருகா என்னை காப்பாற்றுங்கள்’ என்று தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டினாள் சுபா.
பின் அங்கே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. காரில் 1990 இல் வந்த ஏ.ஆர் ரகுமானின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. சுபாவிற்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான ஏ.ஆரின் பாடல்கள் கூட அஸ்வினோடு இருப்பதனால் ரசிக்க முடியவில்லை.
நமக்கு ஒரு நாளைக்கே இப்படி இருக்கிறதே எப்படி இவரோடு தினமும் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்திருவளின் கவனத்தைத் திருப்பியது அஸ்வினிற்கு வந்த போன் கால் “யா அஸ்வின் ஹியர்… ஹே சோனியா யா ஐ அம் ஃபைன்… ஓ இஸ் இட்… யா யூ கேன்” என்று போனை கட் பண்ணிவிட்டான்.
