அத்தியாயம் 12
மாலை ஆறு மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள தன்னுடைய வீட்டை அடைந்தான். அங்கு சசிகலாவும் மாளவிகாவின் மாமியாரும் ஆரத்தி எடுப்பதற்காக காத்திருந்தனர். அந்த வீட்டை கண்ட சுபா திகைத்தாள்.
மாளிகை போல் இருந்த அந்த வீடு இந்த கால இன்டீரியர்ஸ் செய்யப்பட்டு பார்க்கவே மார்டனாக இருந்தது. மாளவிகாவின் மாமியாருக்கு எல்லா விஷயத்தையும் அவினாஷ் கூறினான்.
அஸ்வினின் செயல் ஏமாற்றம் அளித்தாலும் சுபாவையே மனம் புரிந்ததால் அமைதியாக விட்டுவிட்டார் வாசுதேவன். தன் சம்மந்திக்கு கால் செய்து நடந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டார்.
இவ்விஷயத்தை அறிந்த சோனியா அதிர்ச்சி அடைந்தாள்.அஸ்வினின் ஆண்மைத்தனமான அழகில் மயங்கியவள் அவனை எப்படியாவது தன் வசம் இழுக்க யோசித்தாள். ஆனால் இந்த அஸ்வினை அவ்வளவு எளிதாக அடைய முடியாது என்று தெரிந்த பின்னர் தன் வீட்டிலேயே அஸ்வினை மணக்க விரும்பியதைக் கூறினாள்.
அவினாஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருதய டாக்டராக இருக்கிறான். அஸ்வின் வீட்டின் அளவிற்கு வசதி இல்லைனாலும் சென்னையில் ஒரு பெரிய ஹாட் ஸ்பெஷலிஸ்ட் மாளவிகாவிற்கும் அவினாஷை பார்த்தவுடனே பிடித்துவிட்டது அதனால் அவர்களின் திருமணம் நடந்தது.
சோனியா மாளவிகாவிடம் அஸ்வினை மணக்கும் ஆசையைச் சொன்னாள். மாளவிகாவிற்கும் சோனியாவை ஏனோ பிடித்து விட்டது. சோனியா பார்க்க இந்த காலத்து மார்டன் பெண்களைப் போல் பளபளவென இருப்பாள். தன் அண்ணணுக்கு ஏத்த ஜோடி இவள் தான் என்று மாளவிகாவிற்கு தோன்றியது.
சுபாவை சின்ன வயதிலிருந்தே மாளவிகாவிற்கு பிடிக்காது இப்போது அவள் தனக்கு அண்ணியாய் வந்திருக்கிறாள் என்பதை அவள் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.
அஸ்வினிற்கும் சுபாவிற்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர். உள்ளேச் சென்றதும் அஸ்வின் மாடியில் ஏறி தனது அறைக்குச் சென்று விட்டான். சுபாவை சசிகலா பூஜை ரூமிற்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தார்.
பின் வீட்டைச் சுற்றிக் காட்டினார். சுபாவிற்கு சென்னை வந்ததில் இருந்தே ஏதோ பயமாகவே இருந்தது. தன் பெற்றோர்களை விட்டு எங்கோ வந்ததாய் தனி காட்டிற்குள் இருக்கிற மாதிரி உணர்ச்சி வந்தது.
மனதை திடம் ஆக்கிக் கொண்டு சசிகலாவோடு வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். பின் இரவு ஏழு மணி ஆனதால் சசிகலா நைட் டின்னர் செய்ய சமையலறைக்குள் சென்றார்.
அங்கு ஐந்து வருடமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் முத்து மற்றும் அவனுடைய மனைவி பொன்னம்மாள் சசிகலாவிற்காக காத்திருந்தனர்.
“அம்மா வாங்க பெரியய்யா நடந்த விஷயத்தைலாம் சொன்னாங்க சின்னம்மா எங்க இருக்காங்க அம்மா?” என்று கேட்டாள் பொன்னம்மாள்.
”சுபா இங்க வாம்மா” என்று சுபாவை அழைத்தார். “இவங்க முத்து மற்றும் பொன்னம்மாள் நம்ம வீட்டுல ஐந்து வருஷமா வேலைப் பாக்குறாங்க” என்று அறிமுகப்படுத்தினார். அவர்களைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் சுபா.
”பார்க்க அப்படியே தேவதை மாதிரி இருக்காங்க அம்மா இப்போ புரியுது சின்னய்யா ஏன் காதலிச்சாங்கனு” என்றாள் பொன்னம்மாள். ‘என்னது காதலா?’ என்று குழம்பிய சுபாவிற்கு சசிகலா கண்ணில் சைகை காட்டினார்.
பின் சுபாவை வெளியே அழைத்து வந்து, ”இங்க மொத்தம் பத்து பேர் வேலைக்காரங்க இருக்காங்க சுபா… வாட்ச்மேனையும் சேர்த்து யாருக்குமே அஸ்வின் உனக்கு பண்ணது தெரியாது லவ் மேரேஜ்னு சொல்லி வெச்சிருக்கோம் நீயும் அந்த மாதிரியே நடந்துக்கோமா. நம்ம குடும்ப விஷயம் குடும்பத்தோடு இருக்கணும் மா” என்று சுபா தலையை கோதிவிட்டு அஸ்வினைப் பார்க்க சென்றார் சசிகலா.
தன் அறையில் இருந்த அஸ்வின் குளித்துவிட்டு தன் லாப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது சசிகலா கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார்.
”நீ பண்ணது பெரிய தப்பு அஸ்வின் ஒரு பொண்ணோட வாழ்க்கையையே நாசமாக்கிட்ட அந்த பொண்ணுக்கு எவ்வளவு ஆசை கனவுகள் இருந்திருக்கும் அதை உடைச்சிட்ட நாங்க உன்னை இப்படி ஒண்ணும் வளர்க்கலயே பொண்ணுங்கள மதிக்க தான கத்துக்குடுத்தோம் உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு” என்று சசிகலா சொல்லி முடிப்பதற்குள்,
“ஸ்டாப் இட் மாம் நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா பேசறீங்க. அவ தப்பு பண்ணா தண்டனை அனுபவிக்குறா. அவ்வளவு தான் உங்க கிட்ட ஸிம்பதி கிரியேட் பண்றாளா அவ… தொலைச்சிடுவேன் அவள…”
“அவளுக்காக வந்து என்கிட்ட நீங்க பேசுறீங்கனா யாரும் என்கிட்ட பேசவேண்டாம். இப்போ வெளிய போங்க அப்புறம் அவ கிட்ட சொல்லிடுங்க இனிமேல் அவள் இங்க தான் இருக்கணும் என் அறையில்” என்று சொல்லிவிட்டு பால்கனிக்கு சென்று விட்டான்.
சுபா தன் ரோலர் பெட்டியை வைத்துக்கொண்டு எங்கே செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த வாசுதேவன், “சுபாமா இது உன் வீடு ஏன் இப்படி தயங்கி நிக்குற இங்க மொத்தம் ஏழு தனி அறை இருக்குமா நீ எங்க இருக்கணுமோ அங்கு உன் திங்க்ஸ் வெச்சிடு” என்றார்.
“சரி மாமா நீங்களும் அத்தையும் இருக்கிற ரூம் பக்கத்துல நான் இருந்துக்குறேன்” என்றாள்.
“சரி மா மாடில ரைட் சைடுல இருக்கிற முதல் ரூம்ல நீ உன் திங்க்ஸ் வெச்சிடுமா இப்போ சாப்பிட வா” என்று சென்றுவிட்டார். சசிகலா சுபாவிடம் அஸ்வின் சொன்னதை சொல்ல வந்தார்.அப்போது பொன்னம்மாள், “சாப்பாடுல உப்பு கரெக்டா இருக்கானு பாருங்கம்மா” என்று சமையலறைக்கு அழைத்துச் சென்று விட்டாள்.
அதனால் அந்த விஷயத்தைச் சுபாவை பார்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்த சசிகலா மறந்தே விட்டார். பின் சுபா தன் அறையில் சென்று தன் பெட்டியை எடுத்து வைத்தாள்.
இரவு குளிக்கும் பழக்கம் சுபாவிற்கும் இருப்பதனால் குளித்து விட்டு எளிமையாக அலங்காரம் செய்து விட்டு ஒரு பிங்க் வண்ண காட்டன் சுடிதாரை அணிந்து சமையலறைக்கு வந்தாள்.
“அத்தை நான் என்ன பண்ணணும்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.
“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்மா எல்லாமே பொன்னம்மாளே பண்ணிட்டா. நீ போய் டைனிங் டேபிள்ல உட்காரு எல்லாரும் சாப்பிட வருவாங்க” என்று அவளை ஹாலிற்கு அனுப்பினார்.
தன்னுடைய நைட் உடையான டீ சர்ட் மற்றும் முக்கால் பேண்ட்டை போட்டுக் கொண்டு அஸ்வின் சாப்பிட கீழே வந்தான். அப்போது சுபா டைனிங் டேபிளில் உட்கார்ந்து தன் தாய் மற்றும் தந்தையோடு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து கடுப்பானான்.
“ஏய் டைனிங் டேபிள்ல தான் சின்ன வயசிலிருந்து சாப்பிட்டு இருக்கியா என்ன! நீ இனிமேல் நாங்க எல்லாரும் சாப்பிட்ட அப்புறம் தான் சாப்பிடணும் அதுவும் கீழ உட்கார்ந்து தான் சாப்பிடணும்” என்றான். இவ்வளவு நேரம் அஸ்வின் என்று ஒருத்தன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டாள்.
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உரைந்தனர்.
”டேய் அஸ்வின்” என்று சத்தம் போட எழுந்த வாசுதேவனிடம் தன் கையை உயர்த்தி, “ நீங்க இதுல தலையிடாதீங்க டாட்… இது எனக்கும் என் வைஃப்க்கும் நடக்குற விஷயம் சோ யூ ஸ்டே அவே” என்றான்.
“அவ இந்த வீட்டு மருமகள் இங்க நம்ம கூட தான் உட்கார்ந்து சாப்பிடுவாள் இது உன் பேர்ஸ்னல் கிடையாது இது பொது விஷயம்” என்றார்.
“வாட் எவர் அவளுக்கு தாலி கட்டினது நான் என் சொல் பேச்சு தான் அவள் கேக்கணும். அதையும் மீறி நீங்க அவளுக்கு சாதகமாக இருந்தீங்கனா அதோட விளைவு அவளுக்கு அதிகமாக இருக்கும். இன்னும் என்ன டி பார்வை எந்திரி டி” என்று கர்ஜித்தான்.
சசிகலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. சுபா எழுந்து வெளியேச் செல்ல முற்பட்டாள். அப்போது அவள் கையைப் பிடித்து இழுத்த அஸ்வின்,
“எங்கடிப் போற எனக்கு நீ தான் சாப்பாடு பரிமாறணும் இப்போ இனிமேல் எப்போதும்” என்று அவளை டைனிங் டேபிளிற்கு தள்ளிவிட்டான்.
தன் கண்ணில் அழுகை வந்தபோதும் அவனிற்கு தட்டு எடுத்து வைத்து பரிமாறத் தொடங்கினாள். தங்களின் மகன் இவ்வளவு வக்கிரம் புத்தி கொண்டவனா என்ற அதிர்ச்சியில் சசிகலாவும், வாசுதேவனும் சாப்பிடாமலே தங்களின் அறைக்குச் சென்றனர். அஸ்வினிற்குச் சாப்பாடு எடுத்து வைக்கும் பொழுது சுபாவின் கைகள் நடுங்கத் தொடங்கியது.
இதற்கும் நமக்கு திட்டு கிடைக்கும் என்று கைநடுக்கத்தை முடிந்த வரை கட்டுப்படுத்தினாள். அஸ்வின் சாப்பிட்டு முடித்தவுடன், “என் அப்பா அம்மா சாப்பிடணும் அவங்க சாப்பிடாம நீ சாப்பிடக்கூடாது” என்று கூறிவிட்டு மேலேச் சென்று விட்டான்.
சசிகலா தங்களுடைய அறையில் தன் கணவர் தோளில் சாய்ந்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தார். “அந்த பொண்ணு ரொம்ப பாவம்ங்க இவன் எப்படி இவ்வளவு கொடூரனா மாறுனான்னு தெரியல. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையா இருந்தாலும் அந்த பொண்ண இப்படி பண்றது ரொம்ப தப்பு” என்று அழுதார்.
“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல சசி காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும்” என்று ஆறுதல் படுத்தினார்.
வாசுதேவன் சசிகலா அறையின் வாசலில் யாரோ தட்டுகிற சத்தம் கேட்டது. உள்ளே வரலாம் என்று சொன்ன பிறகு உள்ளே இரு தட்டுகளோடு வந்தாள் சுபா. “அத்தை மாமா சாப்பிடுங்க மணி ஒன்பது ஆயிடுச்சு பாருங்க” என்று தட்டை நீட்டினாள்.
“நீ சாப்பிடலையாமா” என்று கேட்டார் வாசுதேவன்.
“நீங்க சாப்பிட்ட அப்புறம் தான் நான் சாப்பிடுவேன்.” இந்தாங்கனு இருவருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கு இருந்து பின் தட்டை வாங்கிக்கொண்டு தான் கீழே செல்ல மணி பத்து ஆனது.
அஸ்வின் அப்படி கூறியதில் சுபாவிற்கு பசி என்ற எண்ணமே போய்விட்டது எனினும் கடமைக்கு இரண்டு இட்லியை விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு தன்னுடைய திங்க்ஸ் இருக்கும் அறைக்கு படுக்கச் சென்றாள்.வீட்டிற்கு கால் செய்யலாமா என்று நினைத்த சுபா நாளை கால் செய்துக் கொள்ளலாம் என்று தன் அறைக்குச் சென்றாள்.
மணி பதினொன்றை நெருங்கியும் சுபா தன் அறைக்கு வரவில்லை என்று கடுப்பான அஸ்வின் கீழே வந்துப் பார்த்தான். அங்கு யாரும் இல்லை என்பதை உணர்ந்து நேராக தன் பெற்றோரின் பெட்ரூமில் சென்று பார்த்தான்.அங்கும் அவள் இல்லை என்பதை உணர்ந்தவன் அடுத்த அறையை திறந்துப் பார்த்தான். அங்கு சுபா தூங்கி கொண்டிருந்ததைக் கண்ட அஸ்வினுக்கு ஆத்திரம் பொங்கியது.
‘நேற்றும் அம்மாவுடன் படுத்துக்கொண்டாள் இன்னிக்கு நான் அம்மா கிட்ட சொல்லியும் இங்க இப்படி படுத்துருக்கானா இவளுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்’ என்று நினைத்தவன் அவளை நெருங்கி தன் இரு கைகளால் அவளைத் தூக்கி தன் அறைக்கு எடுத்துச் சென்றான்.
அவளை தன்னுடைய பெட்டில் போட்டு விட்டு பால்கனிக்குச் சென்றான். அங்கு ஐந்து நிமிடம் இயற்கை காற்றை அனுபவித்து திரும்பியவன் சுபா துயில்வதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘பார்க்க எவ்வளவு அழகா இருக்கா அதான் அரவிந்த் இவள அவ்வளவு மிஸ் பண்றான் ராகுல் கூட இவ பின்னாடி நிறைய பேர் சுத்துனாங்கனு சொன்னானே ஆனா இவளோட அழகை வெச்சு என்ன எப்போவுமே மயக்க முடியாது’ என்று அவளை ஒரு ஏளனப் பார்வை பார்த்தான்.
பின் அவளருகில் சென்றவன் அவளைத் தூக்கி அவன் அறையில் இருக்கும் சோபாவில் போட்டுவிட்டு படுக்கச்சென்றுவிட்டான். காலையில் ஆறு மணிக்கு யாரோ தன்னை உலுக்கி எழுப்பிய பின் எழுந்த சுபா அஸ்வின் தான் அவளை அப்படி செய்வதைக் கண்டு திகைத்தாள்.
பின் அறை வித்தியாசமாக தெரிந்தவுடன் பயந்தாள் தான் எப்படி இங்கு வந்தோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, “நேற்று என் அறைக்கு நீ வரணும்னு சொல்லியும் நீ ஏன் வரல” என்று தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு தன் ஆறடி உயரத்தை மிகையாக காட்டும் கம்பீரத்தோடு அவளை கேள்வியாய் பார்த்தான் அஸ்வின்.அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் மலங்க விழித்துக் கொண்டிருந்தாள் சுபா.
“இந்த அப்பாவி மாதிரி உன் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வெச்சி என் அப்பா அம்மாவ ஏமாற்றலாம். என்ன ஏமாத்த முடியாது அப்படி என்ன ஏமாத்த நினைச்சேனா உன்னை இல்லாம ஆக்கிடுவேன். நான் கேள்வி கேட்டா எனக்கு பதில் வரணும். ஏன் நேற்று என் ரூம்க்கு வரல” என்று அதட்டி கேட்டான்.
“எனக்கு தெரியாது” என்று பயந்தே சொன்னாள் சுபா.
“என்ன தெரியாது உனக்கு?” என்று அவளை கோபமாக நெருங்கியவன் தன்னுடைய போனில் கால் வந்ததைப் பார்த்து அவளிடம்,
“நீ இனிமேல் இந்த அறையில் தான் இருக்கணும். நான் இப்போ வொர்க் அவுட்ஸ் முடிச்சிட்டு வந்து குளிச்சிட்டு வருவேன். எனக்கு காபி எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு வெளியேச் சென்று விட்டான்.
மணியைப் பார்த்த சுபா அதிர்ச்சி ஆனாள். மணி ஆறு தான் ஆகுது இவர் சீக்கிரம் எழுந்திருப்பாரோ சுபா பொதுவாக ஏழு மணிக்கு தான் எழுந்திருப்பாள். இனிமேல் ஐந்தரைக்கே அலாரம் வைக்கணும் என்று நினைத்து தன்னுடைய காலைக் கடன்களை முடித்துவிட்டு குளிக்கச் செல்ல நினைத்தாள்.
எங்கு குளிக்கச்செல்வது என்று யோசித்தவளுக்கு, “உன் திங்க்ஸ் இன்னும் ஐந்து நிமிஷத்துல இங்க என் ரூம்ல இருக்கணும்” என்று அவன் வொர்க் அவுட் செய்துக் கொண்டிருந்த அவன் ரூமை ஒட்டி உள்ள ரூமிலிருந்து சத்தம் போட்டான்.
எனவே அவன் அறையிலேயே குளித்துவிட்டு தன்னுடைய வையலட் கலர் சல்வார் அணிந்து வெளியே வந்தாள். அவன் அப்போதும் வொர்க் அவுட் முடித்து வெளியே வரவில்லை என்று அறிந்துக் கொண்டவள் ஈரத் தலையோடு பூஜை அறை சென்று சாமி கும்பிட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
பின் காபி போட்டு விட்டு அஸ்வினின் அறைக்குச் சென்றாள். அங்கு அவன் குளித்து முடித்து விட்டு வெறும் துண்டைக் கட்டிக்கொண்டு யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தான்.
அவனை அக்கோலத்தில் கண்ட சுபாவிற்கு எரிச்சல் வந்தது. அதை கவனித்த அஸ்வின் காலை கட் செய்துவிட்டு சுபாவை நெருங்கினான். சுபா காபியோடு அஸ்வினிற்காக வெயிட் செய்துக் கொண்டு இருந்தாள்.
அவன் தன்னிடம் நெருங்கி வருவதை கவனித்த சுபா காபி டிரேயோடு பின்னாடியே சென்று சுவரில் இடித்து நின்றாள். அவளை தன் இரு கைகள் வைத்து சிறை செய்தவன் அவளின் கண்களை நேராக பார்த்தான். அவனுக்கும் அவளுக்கும் மூச்சு விடும் அளவே இடைவெளி இருந்ததால் சுபாவின் பயம் ஏறியது.
அவளின் முகத்தில் ஒவ்வொரு பகுதியாக பார்த்த அஸ்வின் டக்கென்று அவள் அணிந்திருந்த ஷாலை உருவி கீழே எறிந்தான். தன் இருகைகளில் காபி டிரே இருந்ததால் கையை வைத்து தன்னை மறைக்க முடியாமல் அவனின் பார்வை போன போக்கை பார்த்து அழ ஆரம்பித்தாள்.
“என்ன துண்டோட பார்க்க உனக்கு எரிச்சலா இருக்கா? நான் உன்னை முழுசா பார்த்தவன் டி என்கிட்ட உன் திமிர காட்டுன உன்னை அழிச்சிடுவேன்” என்று முரட்டு தனமாக, “அதை அங்க வெச்சிட்டு போ” என்று சொன்னான்.
பின் தன் ஷாலை எடுத்த சுபா அவன் அறையை விட்டு உடனே செல்ல வேண்டும் என்று செல்லும் போது, “ஏய் நில்லு” என்றான்.
“இனிமேல் நீ தான் எனக்கு காபில இருந்து நைட் பால் வரைக்கும் ரெடி பண்ணனும். இப்போ மார்னிங் எனக்கு சப்பாத்தி அப்புறம் பன்னீர் பட்டர் மசாலா வேணும். இன்னும் இருபது நிமிஷத்துல டைனிங் டேபிளில் இருக்கணும் எனக்கு மட்டும் இல்ல இனிமேல் எல்லாருக்கும் நீ தான் சமைக்கணும். ஒரு நிமிஷம் லேட் ஆனா கூட கத்திடுவேன் நீ போய் ரெடி பண்ணு” என்று அவளை செல்லச் சொன்னான்.
அஸ்வினுக்கு சுபா தன்னுடைய கோலத்தை எரிச்சலாக பார்த்ததை ஏத்துக்கொள்ள முடியவில்லை. “என்னை காதலிச்சு கல்யாணம் பண்ண அவ்வளவு பொண்ணுங்க ஆசைப்படுறாங்க நீ என்னன்னா அருவருப்பா பார்க்குறியா?” என்று ஓங்கி சுவரில் அடித்தான்.
சுபாவிற்கு சமையல் ஓரளவு தெரியும் ஆனாலும் அஸ்வின் சொன்ன அந்த இருபது நிமிடத்தில் சப்பாத்தி மாவை பிசைந்து உருட்டி தேய்த்து வெந்து எடுத்து பன்னீர் பட்டர் மசாலா செய்ய குறைந்தது ஒரு மணிநேரம் ஆகுமே என்று குழப்பத்தோடு சமையலறை சென்று மாவை பிசைய ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்த பொன்னம்மாள், “சின்னம்மா உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னா நான் செஞ்சு தருவேனே எதுக்கு நீங்க மாவு பிசையறீங்க?” என்று கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்வதா? இல்லை சமையலைப் பார்ப்பதா? என்ற குழப்பத்தில் இருந்த சுபா, பொன்னம்மாள் “ப்ளிஸ் எதுவும் இப்போ கேட்காதீங்க பன்னீர்,தக்காளி, வெங்காயம் எனக்கு நறுக்கி தாங்க பன்னீர் பட்டர் மசாலா பண்ணனும். அளவு உங்களுக்கு தெரியும்ல அதே மாதிரி எனக்கு இஞ்சி, பூண்டு பேஸ்ட்டும் வேணும்” என்று கடகடவென பிசைந்த மாவை உருட்டிப்போட்டு தேய்க்க ஆரம்பித்தாள்.
சசிகலா சமையலறை வந்து பொன்னம்மாள் என்ன செய்கிறாள் என்பதை பார்க்க வந்தவருக்கு சுபா சமைப்பது பார்த்து அதிர்ச்சி.
“சுபா என்னம்மா இது அதான் பொன்னி சமைப்பாளே” என்று சொல்லும் போதே, “அத்தை உங்க மகன் நான் தான் இனிமேல் சமைக்கணும்னு சொல்லிட்டாங்க இருபது நிமிஷம் தான் டைம் அதுல ஐந்து நிமிடம் முடிஞ்சுது” என்று வேலையில் மும்முரமாக இறங்கினாள்.
வீட்டில் சமையல் காரங்க இருக்கும் பொழுது இவன் ஏன் இப்படி இந்த பொண்ண படுத்துறான் என்று
சுபாவிற்காக வருத்தப்பட்டார் சசிகலா கடகடவென்று பொன்னம்மாள் நறுக்கி கொடுத்ததை வைத்து பன்னீர் பட்டர் மசாலா செய்து முடிக்கும் பொழுது பத்து சப்பாத்தியை வெந்து எடுத்து ஹாட் பாக்ஸில் வைத்தாள்.
“அம்மாடி சுபா அஸ்வின் காலையில எட்டரை மணிக்கு சாப்பிட்டு ஆபிஸ் போய்ருவான் நாங்க எல்லாம் சாப்பிட ஒன்பது ஆகும் அவன் கிளம்புன அப்புறம் பொன்னம்மாள் வெச்சு சப்பாத்தி போட்டுக்கலாம். இப்போ போய் காபி குடிமா காலையில இருந்து வெறும் வயிற்றுல இருக்க” என்றார்.
“அய்யோ அத்தை அவங்க என்ன தான் எல்லாருக்கும் சமைக்க சொல்லிருக்காங்க. நான் அத மீற முடியாது. எனக்கு பயமா இருக்கு சரி அத்தை நான் டைனிங் டேபிளில் இதெல்லாம் போய் வைக்கிறேன்” என்று கிளம்பி விட்டாள்.
அவள் டேபிளில் எடுத்து வைக்கும் போதே அஸ்வின் சாப்பிட வந்துவிட்டான். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே மனதில், ‘சாப்பாடு டேஸ்டா பண்ணிருக்கா’ என்று நினைத்தவன் அதை காட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்து விட்டு,
”என்னோட துணி எல்லாம் லான்ட்ரி பேகுல இருக்கு அத நீ உன் கையில துவைச்சி போட்டு ஐயன் பண்ணி முடிச்சு மடிச்சு வெச்சிருக்கணும் இன்னிக்கு ஈவ்னிங் நான் வரதுக்குள்ள” என்றான்.
“அப்பறம் பொன்னம்மாள் கிட்ட டெய்லி மெனு கேட்டு வெச்சிக்கோ மத்தியானம் ஒரு மணிக்கு லஞ்ச் எனக்கு ஆபிஸ் டேபிளில் இருக்கணும். நீ சாப்பாடு எடுத்துட்டு டிரைவர் கூட தினமும் மதியம் வரணும் நான் சாப்பிட்டு முடிச்சதும் எல்லாத்தையும் வாஷ் பண்ணிட்டு தான் வீட்டுக்கு போகணும்” என்றான்.
“நீ பண்றது எல்லாமே அநியாயம்டா அந்த பொண்ணு வாயில்லா பூச்சி மாதிரி இருக்கு அத போய் இப்படி படுத்துறியே” என்றார் வாசுதேவன்.
”சுபா நான் தாலி கட்டுன மனைவி உங்க மனைவிய நான் எதாவது சொன்னா உங்களுக்கு கேட்க உரிமை இருக்கு இப்போ இல்ல” என்று திமிராக சொல்லிவிட்டு கையை கழுவி விட்டு ஆபிஸிற்குச் சென்றான்.
சுபாவிற்கு மயக்கமே வந்து விட்டது காலையில் இருந்து பச்ச தண்ணீர் கூட குடிக்காமல் வேலை செய்து இப்போது அஸ்வின் கூறிய வேலைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று மலைப்பானாள். பின் காபி குடித்துவிட்டு மீதம் தேய்த்த சப்பாத்தியை வெந்து எடுத்து தன் அத்தை மாமாவை சாப்பிட வைத்து தான் கீழே அமர்ந்து சாப்பிட மணி பத்து ஆனது.
சாப்பிட்டு முடித்த சுபா பொன்னம்மாளிடம் சென்று “இன்று மதியம் என்ன சமைக்கணும்?” என்று கேட்டாள்.
“சாம்பார், ரசம், மற்றும் பீட்ரூட் பொரியல்மா” என்று கூறினாள்.
“நான் புளியும், பருப்பும் ஊற வெச்சிட்டு துவைக்க போறேன்மா… நீங்க பீட்ரூட் நறுக்கி வைங்க” என்று துவைக்கச் சென்று விட்டாள்.
