அத்தியாயம் 14
சுபாவை இந்த வீட்டு வேலைக்காரி என்று அறிமுகப்படுத்த நினைத்தவன் விக்கி சொன்ன வார்த்தைகளின் விளைவால் அவள் தன்னுடைய மனைவி என்றான்.
இதைக் கேட்டு அதிர்ந்தவன், ‘அஸ்வின் ஏன் தன்னிடம் கல்யாணம் ஆன விஷயம் சொல்லவில்லை எங்கயோ இடிக்குதே’ என்று நினைத்தான் விக்கி.
சுபாவினைப் பார்த்த அஸ்வின், “சுபா நீ உள்ளே போ” என்று அதே கோபமான குரலில் கூறினான். அவ்வளவு நேரம் அங்கு நிற்க சங்கடமாக உணர்ந்தவள் உடனே உள்ளேச் சென்றாள்.
‘என்னனு கண்டுபிடிப்போம் ஆனாலும் இவ்வளவு அழகா இருக்காளே ச்சா இவன் ரொம்ப குடுத்து வெச்சவன் தான்’ என்று நினைத்தவனை, “திஸ் ஸ் த லாஸ்ட் வார்னிங் விக்கி இந்த வார்னிங்கே உனக்கு சுபா என் மனைவினு தெரியாது அதனால இத சும்மா விடறேன். இல்லனா என்னோட கோபத்தின் ஆழம் உனக்கு தெரிஞ்சது தான் சோ பீ கேர்ஃபுல்” என்றான் அதட்டலாக.
”சாரி அஸ்வின் ஆனா ஏன் நீ கல்யாணம் பண்ணத எங்ககிட்ட சொல்லல. உன் வீட்டுல கல்யாணம் நடந்த சுவடே இல்லயே நம்ம ஒரே குடும்பம் மாதிரி தான அதான் கேட்கிறேன்” என்று பயந்து ஒருவாறு கேட்டு கேட்டான். இதைக் கேட்ட அஸ்வின் அனலாய் அவனை முறைத்தான்.
அந்தப் பார்வையின் வீரியத்தை புரிந்த விக்கி பயந்து, “சரி நான் கிளம்பறேன் அஸ்வின் ஒரு அஞ்சு நாள் டைம் கொடு இந்த புது காருக்கு எந்த மாதிரி சர்வீஸ் குடுக்கலாம்னு கொட்டேஷன் ரெடி பண்றேன் அப்பறம் முடிவு பண்ணிடலாம்” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என கிளம்பினான்.
உள்ளே சென்ற சுபா அஸ்வினின் இருக்கையின் முன் இரு இருக்கைகள் இருந்தது அதில் உட்காராமல் நின்றுக்கொண்டிருந்தாள்.
விக்கி சென்றவுடன் அவன் சுபாவை வர்ணித்த கோபத்தில் அவன் அறைக் கதவை வேகமாக கோபத்தில் திறந்து விட்டு அதே வேகத்தில் சாற்றினான்.
‘நம்ம தான் கரெக்ட் டைமுக்கு வந்துட்டோமே அப்புறம் ஏன் இவர் இப்படி கோவமா இருக்காரு’ என்று மனதில் பயந்தாள் சுபா.
தன் இருக்கையில் வந்து வேகமாக உட்கார்ந்த அஸ்வின் சுபாவைப் பார்த்து, “சாப்பாடு எடுத்து வை. உள்ளே வா” என்று சொல்லிவிட்டு ஃபிரஷ் ஆக அவனது அறையை ஒட்டி ஒரு ஏசி சொகுசு அறை இருக்கிறது அதில் ஒரு பெட்ரும் டீவி டிரெஸிங் டேபில் கப்போர்ட் குட்டி கிச்சன் போன்ற அமைப்பு மற்றும் சாப்பாடு மேஜை அமைந்தவாறு இருக்கும்.
சென்னை வந்து இரு மாத காலமாக வீட்டிலிருந்து சசிகலா சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவார். அஸ்வின் அந்த அறையில் ஃப்ரெஷ் அப் பண்ணிவிட்டு தன் கோட் சூட்டை மாற்றி நார்மல் டீ சர்ட் மற்றும் ஸ்போட்ஸ் பேண்ட் ரெடியாக அணிந்திருப்பான்.
அது வரை அவனுடைய கேபினில் சசிகலா அமர்ந்துக் கொண்டு இருப்பார். பின் தன் தாயை வருமாறு அழைத்து உணவு அருந்துவான் பின் ஒரு அரை மணி நேரம் ஓய்வு எடுப்பான் அதற்கு பின் மறுபடியும் கோர்ட் சூட் அணிந்து தன்னுடைய கேபினுக்கு வந்து வேலையைத் தொடங்குவான் இவ்வாறு தான் இதுவரை நடந்தது.
இப்போது சுபாவை அந்த அறைக்கு வர சொல்லிவிட்டு கதவைச் சாற்றிவிட்டு, “யாரும் வந்து கதவை தட்டமாட்டாங்க அப்படியே தட்டுனாலும் என்கிட்ட கேட்காம கதவ திறக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு ஃபிரஷ் அப் ஆகி தன்னுடைய பிளாக் கலர் டீ சர்ட்டு மற்றும் பிளாக் முக்கால் பாண்ட் அணிந்து வெளியே வந்தான். அதுவரை கதவின் ஓரமாகவே சுபா நின்றுக்கொண்டிருந்தாள்.
அங்கு இருந்த சாப்பாடு மேஜையில் வந்து உட்கார்ந்தவனுக்கு பரிமாற தொடங்கினாள். தனிமையில் அவனுக்கு உணவு பரிமாறுவது சுபாவிற்கு பயமாக தான் இருந்தது.
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அவனுக்கு சாப்பாடு வைத்தாள். சுபா செய்த சாப்பாடு நன்றாகவே இருந்ததால் அமைதியாக உண்டவன் விக்கி சொன்ன வார்த்தைகளை மறக்க முடியவில்லை.
அஸ்வின் சாப்பிட்டு முடித்து விட்ட பின் அந்த இடத்தை சுத்தம் செய்து பாத்திரங்களை அந்த குட்டி சிங்க்கில் கழுவி விட்டு வந்த சுபாவிடம், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு நினைவு இருக்கா இல்லயா?” என்று திடீரென்று அவளைப் பார்த்து அழுத்தமாகக் கேட்டான். அவனுடைய கேள்வியின் அர்த்தம் புரியாத சுபா மலங்க மலங்க விழித்தாள்.
“உன்னை தான் கேட்கிறேன் சொல்லு” என்று அதட்டினான்.
“நினைவு இருக்கு” என்று அமைதியாக பதிலளித்தாள்.
“அப்போ ஏன் உன் நெத்தியில் குங்குமம் இல்லை” என்று தன் இரு கைகளையும் கட்டி அவள் கண்களைப் பார்த்து திமிராக கேட்டான்.
‘ஐயோ வர அவசரத்துல குங்குமம் வைக்க மறந்துட்டேனே’ என்று மனதில் நினைத்தவள், “மறந்துட்டேன்” என்றாள்.
“இன்னிக்கு குங்குமம் வைக்க மறப்ப நாளைக்கு தாலி போட மறப்ப நாளானிக்கு கல்யாணம் ஆனதயே மறப்ப… நீ உனக்கு கல்யாணம் ஆன அடையாளத்தை மறைச்சா கண்ட நாய்கள் உன்னை பார்க்க தான் செய்யும்” என்று கர்ஜித்தான்.
இதற்கு மேல் தாங்க முடியாமல் அழுத சுபா, “எனக்கு கல்யாணம் ஆன அடையாளத்தை மறைக்கணும்னு எந்த அவசியமும் இல்லங்க என்னோட கேரக்டர தப்பா பேசாதீங்க.”
“அப்படி பார்த்தா ஒரு பொண்ண கடத்திட்டு வந்து அவளை கெடுத்து அவளை நாசமாக்கி கல்யாணம்னு என்னை பண்ணி கொடுமைப் படுத்துறீங்களே உங்க கேரக்டர் தான் என்னனு தெரியல” என்று அழுது பேசி முடிப்பதற்குள் பளாரென்று அடி விழுந்தது அவள் கன்னத்தில்.
“இதுக்கு மேல நீ பேசுனா உன்னை கொன்னுடுவேன். ஆமா நான் பொறுக்கி தான் அதான நீ எனக்கு வெச்ச பேரு பின்ன பொறுக்கி இப்படி நடந்துக்காம வேற எப்படி நடந்துப்பான். இனிமேலும் நீ பார்க்க தான போற என்னோட பொறுக்கி தனத்த என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு உனக்கு திமிரு ஏறிடுச்சா உன்னை பார்த்துக்குறேன் டி” என்று சீறினான்.
தான் இவ்வளவு பேசிவிட்டோம் என்று ஆச்சரியப்பட்ட சுபா பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்னால முடியவில்லையே அப்பா அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்று மனதில் நினைத்து அழுதாள்.
“சும்மா இங்க அழுது சீன் கிரியேட் பண்ணாம கிளம்பு டி” என்று கர்ஜித்தான்.
கொண்டு வந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சுபா அழுது வீங்கிய முகத்தோடு கிளம்பி விட்டாள்.
“மூர்த்தி அண்ணா வீட்டுக்கு கிளம்பலாம்” என்று பார்க்கிங்ல் இருப்பவரிடம் கூறினாள்.
“சின்னம்மா உங்களுக்கு பெரியம்மா கால் பண்ணிட்டே இருந்தாங்களாம். நீங்க சரியாகவே சாப்பிடலைனு ரொம்ப வருத்தப்பட்டாங்கமா உங்க கிட்ட பேசணும்னு சொன்னாங்க” என்றார்.
“நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன் அண்ணா… நீங்க என்னை சுபானே கூப்பிடுங்க சின்னம்மா லாம் வேண்டாம்” என்றாள்.
“ஐயோ இல்லைங்கமா அது மரியாதை இல்லை” என்றார்.
”அண்ணா சுபாம்மானு கூப்பிடுங்க ஒகே வா” என்று அவரை ஒருவாறு சம்மதிக்க வைத்தாள். ஒரு நார்மல் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவளுக்கு இந்த மரியாதை எல்லாம் அத்தனையும் புதுசு அதை அவள் விரும்பவும் இல்லை.
தன்னுடைய வாழ்க்கை முடிந்தது இது இப்படித் தான் இருக்கும் இனிமேல் என்று வாழ்க்கையை வெறுத்தவளாக நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
அவள் சென்ற பின் சிறிது நேரம் அமைதியாக அங்குமிங்கும் நடந்த அஸ்வின் தன்னுடைய கேபினிற்கு சென்று தன்னுடைய இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். விக்கி சுபாவை வர்ணித்த விதம் அவனுள் ஓடிக்கொண்டே இருந்தது. பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
“ஏய் சுபா இன்னிக்கு என்னை என்ன வார்த்தை சொல்லிட்ட நீ மறுபடியும் என் கேரக்டர பத்தி பேசிருக்க உன்னை சும்மா விட மாட்டேன் டி” என்று தன் மேஜையில் அடித்துவிட்டு எழுந்தான்.
வீட்டிற்கு வந்த சுபாவினை சசிகலா சாப்பிட அழைத்தார். “நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா அத்தை?” என்று கேட்டாள். “நாங்க சாப்பிட்டோம் மா நீ சாப்பிட வா” என்று தட்டில் எடுத்து வைத்து விட்டுக் கூப்பிட்டார்.அதை வாங்கிக் கொண்ட சுபா தரையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். அவளைப் பார்த்து பரிதாபமாக உணர்ந்த சசிகலாவின் கண்களில் கண்ணீர் மூண்டது.
பொன்னம்மாள், ‘இங்க ஏதோ தப்பா இருக்கு ஆனா அந்த பொண்ண பார்த்தா பாவமா இருக்கு முத்துமாரி அம்மா இந்த பொண்ண காப்பாத்துங்கனு’ உண்மையாக சுபாவிற்காக வருத்தப்பட்டு வேண்டினாள்.
வாசுதேவன் தன்னுடைய அலுவலகத்தில் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தயாளனிடம் இருந்து கால் வந்தது. “சொல்லு தயாளா எப்படி இருக்க எங்க இருக்க நீ?” என்று கேட்டார்.
“நான் நேற்றே மதுரையில இருந்து சென்னை வந்துட்டேன் டா நாளைக்கு உங்க வீட்டுக்கு ஈவ்னிங் மேல வரேன் இப்போ எனக்கு வேற வேலை இருக்கு டா வெக்கறேன்” என்று கட் பண்ணி விட்டார்.
மாலை வீட்டிற்கு வந்த வாசுதேவன் அமைதியாக சோபாவில் உட்கார்ந்தார். “ஏங்க என்ன ஆச்சு ஏன் இப்படி அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க காபி குடுக்கறீங்களா?” என்று கேட்டார்.
”வேண்டாம் சசி மனசே சரி இல்லை நாளைக்கு தயாளன் இங்க வீட்டிற்கு வரானாம் சுபா, அஷ்வின் கல்யாணம் பத்தி என்ன சொல்றது இப்படியே ஒரு ஒருத்தர் கிட்டயும் சொல்ல முடியுமா பேசாம நம்ம இங்க ரிசப்ஷன் வெச்சிட்டா நல்லதுன்னு தோணுது” என்றார். அப்போது விளக்கேற்றி சாமி கும்பிட்ட சுபா மறக்காமல் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு அனைவருக்கும் காபி போட்டு குடுத்தாள்.
“எனக்கும் இது தோணுச்சுங்க ஆனா அஸ்வின் இதுக்கு ஒத்துப்பானானு எனக்கு தெரியலங்க அதான் அமைதியா இருக்கேன்” என்றார் சசிகலா.
“அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம்ங்க மாளவிகா பேசுனா அவள் முழுகாம இருக்காளாம். இன்னியோட ஐம்பது நாள் ஆகுதாம் நம்ம இரண்டு பேரும் போய் அவளைப் பார்த்துட்டு வரலாம் நாளைக்கே ஞாயிற்றுக்கிழமை தான அதனால அஸ்வினையும் சுபாவையும் கூட்டிட்டு போலாம்” என்றாள்.
“ஆமாம்மா அஸ்வின் வந்த அப்பறம் ரிசப்ஷன் பத்தி பேசி ஒரு முடிவு பண்ணிடலாம்” என்றார்.
மாலை ஆறரை ஆனதை தொடர்ந்து அஸ்வின் வீட்டிற்கு செல்ல புறப்பட்ட சமயம் சோனியாவிடம் இருந்து கால் வந்தது, “ஹாய் அஸ்வின்! ஒரு ஹாப்பி நியூஸ் நம்ம இரண்டு பேரும் மாமா, அத்தை ஆகப்போறோம்” என்றாள்.
”வாட் கம் அகைன்“ என்றான்.
”மாளவிகா அண்ணி அம்மா ஆக போறாங்க. அப்போ நான் சொன்னது கரெக்ட் தான” என்று வழிந்தாள்.
”ம்ம்… நான் மாளவிகா கிட்ட பேசிக்கிறேன்” என்று போனை வைக்க போனவனிடம், “அஸ்வின் ஒரு நிமிஷம் நான் பேசுன விஷயம் என்ன ஆச்சுனு நீங்க சொல்லலயே ப்ளீஸ் பாசிட்டிவா பதில் சொல்லுங்க” என்றாள்.
இவ வேற என்று மனதில் கடுப்பான அஸ்வின், “நான் யோசிச்சு சொல்றேன்” என்று எரிச்சலாக கட் பண்ணி விட்டான். வீட்டிற்கு வந்த அஸ்வினிடம் நேராக சசிகலா மற்றும் வாசுதேவன் வந்து ஸ்வீட் கொடுத்து மாளவிகா அம்மா ஆகும் விஷயத்தைக் கூறினர்.
“எனக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் சோனியா சொன்னாமா நாளைக்கு எல்லாரும் மாளவிகா வீட்டிற்கு போய்ட்டு வந்துரலாம்” என்று மாடி ஏறியவன் மறுபடியும் திரும்பி, “சுபாவையும் சேர்த்து தான் நாளைக்கு வரணும்னு சொன்னேன்” என்று சென்றுவிட்டான்.
அஸ்வின் வந்ததும் அவன் குளித்து முடித்துவிட்டு வந்த பின் அவனுக்கு காபி குடுத்து விட்டுச் சென்றாள் சுபா. அவள் நெற்றியில் குங்குமம் இருக்கிறது என்பதை பார்த்தவனுக்கு மனதில் ஒரு நிம்மதி வந்தது. இரவு உணவு அமைதியாகச் சென்றது.
பின் அஸ்வின் மற்றும் அனைவரும் தங்களது அறைக்குச் செல்லும் போது சுபா கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அச்சமயம் வாசுதேவன் அஸ்வினை அழைத்து, “உனக்கும் சுபாவிற்கும் இங்க ரிசப்ஷன் பண்ணலாம்னு நானும் அம்மாவும் யோசிக்கிறோம்” என்றார். இதைக் கேட்ட சுபாவிற்கு அதிர்ச்சி.
ஆனால் அஸ்வினுக்கு அதிர்ச்சியாக இல்லை. அதுவுமில்லாமல் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஏனெனில் தன்னுடைய மனைவி தான் சுபா என்று அனைவரும் தெரிந்துக் கொண்டால் விக்கி மாதிரி அவளை யாரும் வர்ணிக்க மாட்டார்கள் அதுவே நல்லது என்று நினைத்தான்.
சிறிதும் யோசிக்காமல், “எனக்கு சம்மதம்பா ரிசப்ஷனுக்கு” என்றான்.
இது அதை விட பேரதிர்ச்சி சுபாவிற்கு ஆனாலும் இங்கு அவள் ஒரு பொம்மை தான அஸ்வினை மீறி அவளால் என்ன செய்ய முடியும் பிடிக்காத மனைவியுடன் எதற்கு இதெல்லாம் என்று யோசித்தாள்.
பின் அதுக்கும் வேறு எதாவது நம்மை கேவலப்படுத்தும் விதமாக காரணம் வைத்திருப்பார் என்னமோ நடக்கட்டும் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போ அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார் வாசுதேவன்.
“நாளைக்கே லீலா பேலஸில் ஹால் புக் செய்கிறேன் அப்படியே மாளவிகா வீட்டிலும் இதை சொல்லி விடலாம் துளசி மாப்பிள்ளை மற்றும் பாபு குடும்பத்திற்கு நாளை மாலை நம்ம கால் பண்ணி பேசிடலாம்” என்றார். பின் ஏதோ நினைவு வந்தவராக தயாளனுக்கு கால் செய்து, “சாரி தயாளா நாளைக்கு மாளவிகா வீட்டிற்கு போறோம் நீ நாளானிக்கு வரியா” என்றார்.
“அடேய் பரவாலடா அஸ்வினுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் விக்கி என்கிட்ட சொன்னான். எனக்கு ஒண்ணும் புரியல அதான் நேர்ல வந்து பார்க்கலாம்னு இருந்தேன் பரவால்ல” என்றார்.
“சாரி தயாளா… அஸ்வின்,சுபா காதலிச்சிருக்காங்க அந்த பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை முடிவு பண்ணி கல்யாணம் வரை போய் எப்படியோ அஸ்வின் சுபா கல்யாணம் நடந்துருச்சு. கல்யாணம் ஆகி மூன்று நாள் தான் ஆகுதுடா தீடிரென்று நடந்ததுனால சொல்ல முடியல அதான் அடுத்த வாரம் ரிசப்ஷன் வெக்கலாம்னு இருக்கோம் வீட்டிற்கு வரேன் டா உங்கள இன்வைட் பண்ண“ என்றார்.
”இவர் நம்மள விட நல்லா ஸ்டோரி மேக் பண்றாரே” என்று வியந்தார் சசிகலா.
“ரொம்ப சந்தோஷம் டா இரண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள். நீயே அப்போ நாளானிக்கு வீட்டிற்கு வா” என்று காலை கட் செய்து விட்டார் தயாளன்.
“டாட் வாட் இஸ் திஸ் இப்படி பொய் சொல்லிருக்கீங்க” என்றான் அஸ்வின்.
”ஆமா உண்மை வெளிய சொல்ற மாறியா இருக்கு ப்ளிஸ் அஸ்வின் இந்த ஒரு விஷயத்திலாவது எங்க பேச்ச கேளு. நம்ம குடும்பம் தவிர எல்லாருக்கும் நீங்க லவ் மேரேஜ் பண்ண மாதிரி இருக்கட்டும்” என்றார்.
“என்னவோ பண்ணுங்க” என்று அஸ்வின் எதேச்சையாக ஹாலில் இருந்து கிச்சனில் இருக்கும் சுபாவைப் பார்த்தான். அவள் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி கிச்சனில் அடுப்பை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்தவன் முகத்தில் அத்தனை கோபம்… ‘ரூமிற்கு தான வருவ பார்த்துக்குறேன்’ என்று தன் அறைக்குச் சென்று விட்டான்.
அனைத்து வேலைகளையும் முடித்து வர இரவு பத்து ஆனது. பின் அறைக்குச் சென்று அதாவது அஸ்வினின் அறைக்குச் சென்று ஒரு நீல நிற சல்வார் வீட்டிற்கு அணியும் சாதாரண சல்வாரை எடுத்து குளித்து விட்டு வந்தாள்.
அதுவரை அமைதியாக இருந்த அஸ்வின் அவளைப் பார்த்து, “கீழே நம்ம ரிசப்ஷன் பத்தி பேசிட்டு இருந்தாங்க நீ யாருக்கோ என்னமோ மாதிரி தெனாவட்டா இருக்க” என்று அதட்டலாகக் கேட்டான்.
அஸ்வினின் பெட் ரூமிலே கீழே பாய் விரித்துக் கொண்டிருந்த சுபா, “நான் கவனிச்சேங்க உங்களுக்கு அப்படி தோணலனா சாரி இனிமேல் இந்த மாதிரி டாப்பிக்ஸ் வரும் போது நான் செய்யுற வேலைய நிறுத்திட்டு அங்க வந்து கவனிச்சிட்டு அந்த டாப்பிக் முடிஞ்ச அப்பறம் வேலை மறுபடியும் செய்யறேன்” என்று சொல்லிவிட்டு கீழே படுத்துக் கொண்டவளுக்கு கண்ணில் தண்ணீர் வந்தது.
இவர் நம்மை இப்படி தான் எதாவது சொல்லி நோகடிப்பார். அதனால் அவர், ஏன் இப்படி திமிரா பண்ற?’ என்று கேட்டால் இனிமேல் அப்படி பண்ணலை சாரி என்று அவனிடம் சரணடைவதாய் முடிவு செய்தாள்.
ஏனெனில் அவனுடன் போராட மனதளவிலும் உடலளவிலும் அவளுக்கு தெம்பு இல்லை. அப்படியே அதிக வேலை செய்த காரணத்தினால் தூங்கியே விட்டாள்.அவள் அப்படி சரணடைந்ததால் அஸ்வினால் அவளை மேலும் துன்புறுத்த வாய்ப்பு வராமல் தூங்கி விட்டான்.
அரவிந்த்திற்கு ஏனோ தூக்கம் வரவில்லை அதனால் ஹாலிற்கு சென்று டிவி ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய போனிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது.
தீபிகா தான் மெசேஜ் அனுப்பியிருந்தாள். “அத்தான் சாப்பிட்டீங்களா என்ன பண்றீங்க உங்களோட நினைப்பாவே இருக்கு” என்று அனுப்பினாள்.
‘இவளுக்கு வேற வேலையே இல்லையா?’ என்று நினைத்து ரிப்ளை அனுப்பாமல் விட்டுவிட்டான்.
“நாளைக்கு நான் வீட்டுக்கு வருகிறேன் அத்தை மாமா கிட்ட நம்மள பத்தி சொல்ல போறேன் குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று தீபிகா மெசேஜ் அனுப்பியிருந்தாள். ஆனால் அரவிந்த் அதை பார்க்காமல் அப்படியே டிவி பார்த்தே தூங்கி விட்டான்.
மறுநாள் காலை அஸ்வின் விழிக்கும் போதே சுபா பிங்க் வண்ண பட்டுசேலை உடுத்தி தன் நீளமான கூந்தலைப் பின்னி மல்லிகைப் பூ வைத்து ஸ்டோன் ஸ்டிக்கர் பொட்டு வைத்து பார்க்க அழகாக இருந்தாள். காலையில் விழித்தவுடன் இதைக் கண்ட அஸ்வின் சுபாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் தன்னுடைய அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் சுபா கதவைத் திறந்தாள். “அப்படியே பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்கமா என் கண்ணே பட்டுரும் போல” என்று மருமகளை ரசித்தார் சசிகலா.
“டேய் அஸ்வின் கிளம்புடா இன்னிக்கு மாளவிகா வீட்டிற்கு போகணும்ல” என்று கிளம்ப சொல்லிச் சென்று விட்டார்.
“அத்தை நானும் வரேன் சமையல் பண்ணனும்” என்று அவர் பின்னோடு சென்று விட்டாள்.
‘இவ எப்படி நான் முழிக்கறதுக்கு முன்னாடியே சாரி மாத்துனா கண்டிப்பா பாத்ரூம்ல
பண்ணியிருக்க மாட்டா’ என்று யோசித்தவனாக எழுந்து பிரஷ் பண்ணிவிட்டு முகத்தை கழுவிக்கொண்டு வரும்போது சுபா காபி கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கியவன், “நீ எங்க சாரி கட்டுன” என்று சட்டென்று கேட்டுவிட்டான். தன் காதுகளில் ஏதோ தவறாக விழுந்திருக்குமோ என்று புரியாமல் விழித்தாள்.
”ஏய் உன்னை தான் கேட்கிறேன் எந்த ரூம்ல சாரி மாத்துன” என்று அதிகாரமாகக் கேட்டான்.
“அது வந்து உங்க அம்மா ரூம் பக்கத்துல ஒரு ரூம் இருக்கு அங்க மாத்துனேன்” என்று சொல்லும் போதே சுபாவிற்கு சங்கடமாக இருந்தது என்ன இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் என்று ஆனால் விடை சொல்லாவிட்டாலும் விடமாட்டார் என்று நினைத்தவள் பதில் கூறியபின் காபி கப்பை வாங்கி விட்டு உடனே கீழே சென்று விட்டாள்.
அஸ்வின் குளித்துவிட்டு ஒரு காஸூவல்ஸ் முழு கை நீள நிற சட்டை மற்றும் பிளாக் ஜீன்ஸ் அணிந்துவிட்டு சாப்பிட வந்தான். அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் சுபா கீழே உட்கார அமரும் போது, “இனிமேல் நீ டைனிங் டேபிளில் நாங்க சாப்பிட்ட அப்பறம் சாப்பிடலாம்” என்று அவளைக் கூப்பிட்டு சொன்னான்.
“என்ன பாக்குறீங்க அம்மா, அப்பா இந்த வீட்டுல வேலைக்காரங்க இருக்காங்க அவங்களுக்கு லாம் நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கோம்னு சொல்லிருக்கீங்க. அப்போ அவ கீழ உட்கார்ந்தா சந்தேகம் வரும் அதான் நீங்க சொன்ன பொய்க்காக” என்று தன் மொபைலை எடுத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சொல்படி மேலே அமர்ந்து சாப்பிட்டாள் சுபா.
பின் அனைவரும் மாளவிகா வீட்டிற்கு கிளம்பினர். அஸ்வின் அவனுடைய காரில் அனைவரையும் அழைத்துச் சென்றான். அண்ணா நகரில் இருக்கும் மாளவிகாவின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வீட்டிற்கு சென்றவர்களுக்கு அங்கே அமோக வரவேற்பு. அவினாஷ் மற்றும் அவனின் தந்தை அவர்களை வரவேற்றனர்.
உள்ளே மாளவிகாவை காண சசிகலா சுபாவை அழைத்துச் சென்றார். அங்கே தன்
அன்னையைக் கண்ட மாளவிகா அவரை அணைத்து, “நாலு வருடக் கனவுமா நினவாயிடுச்சு” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
“கங்கிராட்ஸ் அண்ணி” என்றாள் சுபா. ‘என்னது அண்ணியா?’ என்று மாளவிகா பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த சோனியாவிற்கு எரிந்துக் கொண்டிருந்தது.
“யாருக்கு யார் அண்ணி அம்மா ஏன் இவளை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க”என்று கத்தினாள் மாளவிகா.
”வாய மூடு மாளவிகா சுபா என்னோட மனைவி உனக்கு அவள் அண்ணி அவளை இப்படி பேசுற வேலைய வெச்சிக்காத” என்று கத்தினான் அஸ்வின்.
“நல்லா சொல்லுங்க அஸ்வின் அப்பவாவது இவளுக்கு புத்தி வரட்டும்” என்றான் அவினாஷ்.
“அண்ணா, அண்ணி என்ன தப்பா பேசுனாங்கனு இப்படி சொல்றீங்க அஸ்வினுக்கே சுபாவ பிடிக்காது தான” என்று சோனியா திமிராகப் பேசினாள்.
“லுக் மாளவிகா எனக்கும்
சுபாக்கும் இருக்கறது எங்களோட பெர்ஸ்னல் ஆனா அவள் என்னோட மனைவி நம்ம வீட்டு மருமகள் அவளுக்கு தர வேண்டிய மரியாதை நீ தரணும் இனிமேல் இப்படி பண்ணாத கங்கிராட்ஸ் மாளவிகா அன்ட் அவினாஷ்” என்று கூறிவிட்டு சோனியாவை முறைத்து விட்டு அங்கு இருந்த சுபாவைத் தேடினான். ஆனால் அவள் அங்கு இல்லை.
”அண்ணன் சொல்றது தான் கரெக்ட் மாளவிகா இனிமேல் இப்படி நடந்துக்காத” என்று சசிகலா அறிவுறுத்தினார்.
‘திட்டுறதுக்கு கூட என்கிட்ட மூஞ்ச கொடுத்து பேச மாட்டிக்கிறானே இவனை இப்படி கரெக்ட் பண்றது?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் சோனியா.
சுபாவைத் தேடிச் சென்ற அஸ்வின் அவள் அவினாஷ் அம்மாவோடு கிட்சனில் இருந்து உதவிக் கொண்டு இருப்பதை பார்த்தான். அவளின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
பின் அனைவருக்கும் காபி மற்றும் ஸ்நாக்ஸ் கொடுத்துவிட்டு தன் மாமியாரோடு வந்து அமர்ந்தாள் சுபா.
மாளவிகாவிற்கு வாங்கி வந்த தங்க நெக்லஸ் மற்றும் பட்டு சாரியை சசிகலா கொடுத்தார். ‘மகளுக்கே இவ்வளவு செய்யறாங்க அப்போ மருமகளுக்கு எப்படி செய்வாங்க?’ என்று மனதில் கொதித்தாள் சோனியா.
‘ச்ச இந்த சுபா நடுவுல வரலனா நம்ம தான் இந்நேரம் இந்த வீட்டு மருமகளா ஆயிருப்போம் மாளவிகா அண்ணிய வெச்சு எப்படியாவது அஸ்வின அடைஞ்சிருக்கலாம்’ என்று வக்கிரமாக நினைத்தாள். ‘இதை இப்படியே விட கூடாது எதாவது பண்ணி இந்த சுபாவ வெளிய அனுப்பி நம்ம உள்ள போகணும்’ என்று நினைத்தாள்.
“அவினாஷ் அண்ணா ப்ளிஸ் நீ எனக்காக பேசு” என்று கெஞ்சி அவினாஷோடு அஸ்வின் இருக்கும் பால்கனிக்குச் சென்றாள் சோனியா.
“அஸ்வின் ஒரு ஹெல்ப்” என்று சற்று தயக்கமாக கேட்டான்.
“சொல்லுங்க அவினாஷ் என்ன வேணும்?” என்று கேட்டான்.
“அது வந்து சோனியாக்கு வேலைக்கு போகணுமாம் கேட்டுட்டே இருக்கா. ஏதோ ஒரு இன்டர்வியூ போனாளாம் அங்க தப்பா பேசுனாங்களாம் இவகிட்ட… அதனால உங்க கம்பெனில ஒரு வேல போட்டு கொடுத்தீங்கனா அவ சேஃப்பா இருப்பானு ஃபீல் பண்றா” என்று சொல்லி முடித்தான்.
சோனியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவினாஷிடம் திரும்பியவன், ”இதைப் பற்றி ஏற்கனவே சோனியா என்கிட்டே பேசியிருக்கா நேற்றும் கூட பேசுனா… நான் யோசிக்கணும்னு கூட சொன்னேனே” என்றான்.
