அத்தியாயம் 15
அவினாஷின் முகம் இதைக் கேட்டவுடன் ஏமாற்றம் அடைந்தது. அவினாஷ் ஒரு சிறந்த டாக்டர் இத்தனை நாள் வரை அஸ்வினின் பண பலத்தை அவன் நேரடியாகவோ இல்லை வேறு எதற்காகவோ பயன்படுத்தியதே இல்லை.
மாளவிகாவும் பிறந்த வீட்டில் கிடைத்த வசதி வாய்ப்பு இங்கு இல்லை என்று உணர்ந்தாலும் அவினாஷோடு சந்தோஷமாகவே இருந்தாள். சோனியா பார்க்க இக்காலத்து மார்டன் பெண்ணாக தோற்றமளித்ததாலும் ஒரு தடவை அஸ்வினைப் பிடித்திருக்கிறது அண்ணி அவரை திருமணம் செய்யணும்னு நினைக்கிறேன் என்று நேரடியாகவே கேட்டதிலுமே மாளவிகாவிற்கு ஏதும் தப்பாக தோன்றவில்லை.
அவினாஷின் முகமாற்றத்தைக் கண்ட அஸ்வின், “அவினாஷ் உங்களுக்காக இதை செய்றேன். சோனியா என்ன படிச்சிருக்கா?” என்று கேட்டான்.
“அவள் எம்.காம் முடிச்சு இரண்டு வருஷம் ஆகுது அஸ்வின்” என்றான்.
“ம்ம், ஓகே. அப்போ அக்கவுண்ட்ஸ் பார்ப்பா தானே ஒரு ஒன் வீக்ல எச்ஆர்டில இருந்து கால் வரும் அப்புறம் அவங்களே சொல்லுவாங்க எப்போ ஜாயின் பண்ணனும்னு” என்றான்.
”தாங்க்யூ சோ மச் அஸ்வின்” என்றாள் சோனியா.
“தாங்க்ஸ் அஸ்வின்” என்றான் அவினாஷ்.
பின் அஸ்வின் ஹாலிற்குச் சென்றான். அப்போது வீட்டில் அனைவரும் இருந்த போது அஸ்வின்,சுபா ரிசப்ஷன் பற்றி கூறினார் வாசுதேவன். அனைவரையும் முறைப்படி அழைத்தார்.
‘இவளை சீக்கிரம் அஸ்வின் லைஃப்ல இருந்து அனுப்ப பிளான் பண்ணா இந்த பெரிசுங்க சும்மா இல்லாம ரிசப்ஷன் வைக்குதுங்க’ என்று கடுப்பானாள்.பின் அனைவரிடமும் விடைபெற்று வாசுதேவன் குடும்பம் கிளம்பிவிட்டனர்.
காலை எழுந்தவுடன் அரவிந்த் ஹாலிலேயே தூங்கி விட்டோம் என்பதை உணர்ந்தான்.
சுபாவுடன் கல்யாணம் நின்ற பின் அந்த வீட்டில் சிரிப்பு சத்தமே இல்லை. அரவிந்த் யாரிடமும் சரியாக பேசவில்லை. அப்போது தான் இரவு தீபிகா அனுப்பிய மெசேஜைக் கண்டான்.
பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் போது, “குட் மார்னிங் அத்தூ” என்று காஃபியோடு வந்து அவன் முன் அமர்ந்தாள் தீபிகா.
“நானும் சின்ன பொண்ணுனு பார்த்தா ரொம்ப ஓவரா பண்ணிட்டே இருக்க இப்போ எதுக்கு இங்க வந்த?” என்றான் அரவிந்த்.
“என்ன அத்தூ நீ ஆபிஸ் வந்தா வீட்டுக்கு வந்திருக்கலாம் னு சொன்னல்ல வீட்டுக்கு வந்தா ஏன் வந்தனு கேட்கிற” என்றாள் தீபிகா சிரித்துக் கொண்டு.
“சரி இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தான வாங்க எங்கயாவது போய்ட்டு வரலாம்” என்று தீபிகா… ஈஸ்வரி, பாபுவிடம் கூறினாள்.
“அரவிந்த் வந்தா நாங்களும் வரோம்மா” என்றார்.
அரவிந்த்திற்கு தெரியும் தன் தாய், தந்தை இந்த ஒரு வாரமாகவே சோகமாக இருக்கின்றனர் என்று. இப்படியே இருந்தால் அவர்கள் மனம் வாடும் என்று நினைத்து சரி என்று பிரஸ் பண்ணி விட்டு குளித்துவிட்டு வந்தான்.
அனைவரும் காலை உணவு சாப்பிட்ட பின், “எங்க போகலாம்னு நான் சொல்றேன். இங்க தல்லாகுளத்துல ஒரு பொருட்காட்சி போட்டுருக்காங்க அங்க போகலாம் ப்ளீஸ்” என்றாள் தீபிகா.
அனைவரும் சரி என்று அரவிந்த்தின் காரில் கிளம்பினர். தீபிகா முன்னே அரவிந்த் சீட் பக்கத்தில் அமர்ந்து விட்டாள். பாபுவும், ஈஸ்வரியும் வீட்டை பூட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அரவிந்த், “தாங்க்ஸ் தீபிகா நீ நாங்க எல்லாம் நார்மல் ஆகணும்னு தான இவ்வளவு முயற்சி பண்ற அப்பா அம்மா பார்க்க நிம்மதியா தெரியறாங்க எனக்கே புத்துணர்ச்சியா இருக்கு எல்லாத்துக்கும் காரணம் நீ தான்” என்று கூறினான்.
“பரவாயில்லை அத்தூ அவங்க வராங்க வண்டி எடுங்க” என்றாள். பின் பொருட்காட்சி சென்று அங்கு வைத்திருந்த பொருள்களைப் பார்த்தப்படி அரவிந்த் நின்றிருந்தான்.
அவனிடம் ராட்டினம் போகலாம் என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்து ராட்டினத்தில் ஏறினாள். இவர்களை அப்படி பார்த்த பாபு மற்றும் ஈஸ்வரிக்கு அவ்வளவு சந்தோஷம். அப்போது வாசுதேவன் பாபுவிற்கு கால் செய்து ரிசப்ஷன் அடுத்த வாரம் இருப்பதாய் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார்.
சபேசன் மற்றும் துளசி ஏற்கனவே சென்னை சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தனர். இப்போது அடுத்த வாரம் ரிசப்ஷன் என்றதுமே வெள்ளிக்கிழமை கிளம்பலாம் என்று முடிவு எடுத்தனர்.
மாளவிகா வீட்டிலிருந்து கிளம்பி நேராக தங்கள் வீட்டிற்கு கிளம்பும் போது சசிகலா ரிசப்ஷனிற்கு உடை எடுக்க வேண்டும் அதுபோக சுபாவிற்கு கொஞ்சம் சல்வார் மற்றும் வீட்டிற்கு போட புடவை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை ப்ளீஸ்” என்று மறுத்தாள் சுபா.
“உன்கிட்ட மொத்தமே ஒரு பத்து சல்வார் தான் இருக்கு தினமும் எனக்கு லஞ்ச் எடுத்துட்டு வரும் போது போட்ட உடையே போட்டு என்னை அவமானம் படுத்தலாம்னு ஐடியா பண்றியா?” என்று கேட்டான் அஸ்வின்.
“சரிங்க நான் எடுத்துக்குறேன்” என்றாள். நேராக டி.நகர் உஸ்மான் சாலையில் இருக்கும் அந்த பிரபலமான ஜவுளிக்கடையில் வண்டியை நிறுத்தினான் அஸ்வின்.
அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு காரை பார்க் செய்ய பார்க்கிங் ஏரியா போனான். அப்போது ராகுலிடம் இருந்து கால் வந்தது. “சொல்லு ராகுல்” என்றான்.
”டேய், என்னடா போட்டோ எனக்கு அனுப்பிருக்க அதுல நீயும் அந்த பொண்ணு சுபாவும் மாலையும் கழுத்துமா நிக்குறீங்க” என்றான்.
“ஹா ஹா இப்போ அவள் மிஸஸ். சுபா வர்ஷினி அஸ்வின் குமார்” என்றான் கர்வமாக.
“எப்படி டா இதெல்லாம் நீ கடைசியா என் ஆபிஸ் வந்தபோதும் கூட அந்த பொண்ணுக்கு நிறைய வேலை குடுனு சொன்ன… அப்புறம் அந்த பொண்ணு வேலைக்கே வரலை இரண்டு மாசமா ஆபிஸ்லயும் யார் கால்ஸும் எடுக்குறது இல்ல அப்போவே எனக்கு ஏதோ இடிச்சுது” என்றான்.
”சரி அதை விடு சுபா இன்னும் உன் ஆபிஸ்ல எம்ப்பிளாயி தானா?” என்று கேட்டான்.
”அந்த பொண்ணு இது வரைக்கும் லாஸ் ஆஃப் பே ல இருக்கு ஆனா ரொம்ப நல்ல வொர்க்கர் டா அதனால திருப்பி சேர்த்துப்போம்” என்றான்.
”அவள வேலைய விட்டு தூக்கிடு டா, அவள் இனிமேல் வேலைக்கு லாம் வர மாட்டா இந்த அஸ்வினோட எல்லையை தாண்டி அவள் எங்கயும் போக கூடாது” என்று கர்வமாய் சிரித்தான்.
“சரி டா ஆல் டன்” என்றான்.
”அப்புறம் எனக்கும் சுபாவிற்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ரிசப்ஷன் டா லீலா பேலஸ்ல மறக்காம வந்துரு” என்றான்.
“அந்த பொண்ணு இப்போ என்ன அங்க பார்த்தா என்னடா நினைக்கும் நீ ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்து தான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணியிருக்க ஏன்னா நிச்சயம் பண்ண மாப்பிள்ளை நீ இல்லையே இப்போ நான் உன் பிரண்ட்னு தெரிஞ்சா உன்னோட பிளான்ல நானும் இருந்தேன்னு நினைக்கும் ஐயா சாமி ஆள விடு ராசா நீ நல்லா வருவ” என்று கெஞ்சினான்.
அதற்கு சிரித்த அஸ்வின், “சுபா என்ன மீறி உன்கிட்ட எதும் கேட்க மாட்டா டா, அதனால குடும்பத்தோட வா அப்புறம் இன்னொரு விஷயம் சுபா என்னோட மனைவினு உன் ஆபிஸ்ல எல்லாருக்கும் தெரியணும்” என்றான்.
”அடேய் உன் இம்ச தாங்க முடியல சரி. ஞாயிற்றுக்கிழமை ரிசப்ஷன் வர முயற்சி பண்றேன் டா பை” என்று வைத்தான்.
உள்ளே சுபா உடைகள் எடுக்க விருப்பமில்லாமல் இருந்தாள். எனவே சசிகலாவே அவளுக்கு பத்து செட் சல்வார் பத்து செட் பட்டு புடவை மற்றும் பத்து செட் காட்டன் புடவை என அள்ளினார்.
”ஐயோ அத்தை இவ்வளவு வேண்டாம் ப்ளிஸ்” என்று சொல்லியும் சசிகலா கேட்பதாக இல்லை.
பின் அஷ்வின் வந்தவுடன் ரிசப்ஷனிற்கு தனக்கென ஒரு கோட் சூட் எடுத்தவன் சுபாவிற்கு அவனாகவே லெஹன்கா செக்சன் சென்று சுபாவினை பார்க்குமாறு அழைத்தான்.
இது எதிலுமே சுபாவிற்கு விருப்பம் இல்லை இந்தக் கல்யாணமே அவளுக்கு சாதகமானது அல்ல தான் அஸ்வினுக்குமே அவன் அந்தஸ்திற்கு ஏற்றவாறு உடை எடுக்க வேண்டும் என்பதற்காக தலையிடறான் என்று அமைதியாக இருந்தாள்.
ஒரு ரெட் லெஹன்காவை தேர்வு செய்த அஸ்வின் சுபாவிற்கு நன்றாக இருக்கும் என்று நினைத்தான். “அவங்களுக்கு லெஹன்கா டாப் அளவு எடுத்து இன்னும் அரை மணி நேரத்துல நாங்களே தெச்சி கொடுத்திடுவோம் சார்” என்று அந்த கடையில் வேலை பார்க்கிறவன் இன்ச் டேப் எடுத்துக்கொண்டு சுபாவை அளவு எடுக்க வந்தான்.
”அளவு எடுக்க லேடிஸ் இல்லயா?” என்று கேள்வியாய் கேட்டான் அஸ்வின்.
“இல்லை சார் நான் தான் அளவு எடுக்குறேன் இங்க” என்று சற்று பயந்து சொன்னான்.
‘ஏன் இவர் அளவு எடுத்தா என்ன?’ என்று மனதில் நினைத்தவள் கண் மூடி திறப்பதற்குள் அந்த சேல்ஸ் மேனிடம் இன்ச் டேப்பை வாங்கி சுபாவை அளவெடுக்க ஆரம்பித்தான் தான் எடுக்கும் விதம் சரியானதா என்று சேல்ஸ் மேனிடம் உறுதி படுத்திக்கொண்டான். சுபாவிற்கு தான் சங்கடம் ஆகிப் போயிற்று.
அவளுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களாகவே அளவு எடுத்தால் டீசன்டாக தொடாமல் தான் எடுப்பார்கள். இவர் ஏன் இப்படி பண்றாருனு பதற்றமான சமயத்திலே அஸ்வின் அளவு எடுக்க ஆரம்பித்துவிட்டான்.
கை சோல்டர் அளவு முடித்து கழுத்து அளவு மார்பு சுற்றளவு வரும் போது சுபாவிற்கு மூச்சே நின்று விட்டது. அவன் அவ்வளவு உரிமையாய் அவளை தொட்டு எடுத்தான். இடுப்பு சுற்றளவு எடுக்கும் போது சுபாவின் இடையில் அஸ்வினின் கை நன்றாகவே தொட்டது. இது அவளுக்கு அருவருப்பாகவே இருந்தது அதை தன் முகத்திலும் காட்டி விட்டாள்.
இதைப் பார்த்து கடுப்பான அஸ்வின் அந்த இன்ச் டேப்பை அவள் இடையோடு இறுக்கி வேண்டும் என்றே அவள் வெற்று இடையில் தன்னுடைய இரு கைகளையும் தாராளமாகவே பதித்தான்.
பின் இருக்கும் இடத்தை உணர்ந்து கையை எடுத்த அஸ்வின் அளவை கொடுத்து விட்டு தன் அன்னையை அழைத்தான். “அம்மா டைம் இப்போ ஈவ்னிங் சிக்ஸ் ஆகுது நான் வீட்டுக்கு போறேன் நீங்க எல்லாம் வாங்கிட்டு வாங்க” என்று திரும்பி சுபாவை நன்றாக முறைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டான்.
சுபாவிற்கு அஸ்வினைப் பார்க்க பயமாக இருந்தது. “எனக்கு அவர் தொட்டாலே கொமட்டுது” என்று மனதளவில் அஸ்வின் அவளை முறைத்து விட்டு சென்றதை நினைத்து பயந்தாள்.
“அத்தை நைட் டின்னர் பண்ணனுமே நான் வீட்டிற்கு போகவா?” என்று கேட்டாள்.
“பொன்னம்மாள் பண்ணுவா சுபா நீ உனக்கு இன்னர்ஸ் வேணுமானு பாரு” என்று அவளுடன் பேசிக் கொண்டு இருந்தார். சுபாவிற்கு தான் இன்று வீட்டிற்கு போனா அவர் என்ன பண்ணுவாருனு தெரியலயே என்று நினைத்து பயந்தாள்.
காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்திருந்த அஸ்வின் கடும் கோபத்தில் இருந்தான். ‘என்னை பார்த்து எவ்வளவு பொண்ணுங்க ப்ரபோஸ் பண்ணிருக்காங்க இன்ஃபாக்ட் கல்யாணம் பண்ண கேட்டாங்க. ஆனா இவளுக்கு அப்பவும் இப்பவும் நான் ஒரு பொறுக்கி தான்.
நான் அவளோட புருஷன் என் கிட்ட அருவருப்பு படுகிறாள்னா அவளுக்கு எவ்வளவு திமிர் அழுத்தம் இருக்கணும்’ என்று ஆக்ரோஷமாகவே நினைத்துக் கொண்டு காரை ஓட்டினான்.
ஒரு திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கடத்தி அவளை நாசமாக்கி திருமணம் செய்துக் கொண்டவனிடம் கணவனாகவே இருந்தாலும் அதுவும் சின்ன வயதிலிருந்தே சுபாவிற்கு அஸ்வின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை இதனை யோசிக்கும் பக்குவத்தில் இப்போது அஸ்வின் இல்லை.
தன் காரை நேராக திருவான்மியூர் பீச்சில் நிறுத்திவிட்டு இயற்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் அமைதி இல்லை நிதானமும் இல்லை.
உடைகள் வாங்கிய பின்னர் சுபா, சசிகலா மற்றும் வாசுதேவன் ஒரு டாக்சியைப் பிடித்து வீடு வந்து சேர மணி எட்டரை ஆனது. வீட்டிற்கு வந்தவர்கள் உடைகளை வைக்க தங்கள் அறைக்குச் செல்லும் போது தான் அஸ்வினை அவர்கள் அறையில் சுபாவால் காண முடியவில்லை.
ஏற்கனவே பயந்துக் கொண்டிருந்தவளுக்கு அஸ்வின் வீட்டில் இல்லை என்று உறுதி செய்துக் கொண்டவுடன் ஏதோ தப்பு என்பதை உணர்ந்தாள்.
அந்நேரம் என்று பார்த்து சுபாவிற்கு மாதவிடாய் வந்தது. இந்த மாதிரி சமயத்தில் பெண்களுக்கே இருக்கும் வயிறு வலி கால் வலி அவளுக்கு வந்தது சல்வாரை மாற்றிக் கொண்டு வந்தவளுக்கு வயிறு வலி தாங்க முடியாமல் தவித்தாள்.
அப்போது என்ன என்று கேட்டு அறிந்த சசிகலா அவளை மென்சஸ் முடியும் ஆறு நாள் வரை தனி அறையில் படுக்க சொன்னார்.ஆறு நாள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் இந்த அறையிலேயே ரெஸ்ட் எடு என்று கூறினார். “அத்தை அவங்க என்ன சொல்லுவாங்களோ” என்று சொல்லும் போதே,
“அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான் மா, அஸ்வின் மிருகம் இல்லம்மா இந்த வலி பத்தி அவனுக்கும் தெரியும் உனக்கு சாப்பாடு பொன்னம்மாள் எடுத்துட்டு வருவா” என்று சென்று விட்டார்.
இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்த அஸ்வின் சாப்பிடாமல் நேராக அவன் அறைக்குச் சென்று விட்டான். அறைக்கதவை தட்டி உள்ளே வந்த சசிகலா, “அஸ்வின் சாப்பிட வாப்பா எங்க போன இவ்வளவு நேரம்?” என்று கேட்டார்.
“பீச்ல இருந்தேன்மா எனக்கு பசிக்கலமா சாப்பாடு வேண்டாம் அவ எங்க?” என்று கேட்டான்.
“அது வந்துபா சுபா இன்னிக்கு வீட்டுல இல்ல இன்னும் ஆறு நாள் அவள் தனியா எங்க அறைப் பக்கத்துல இருப்பா நல்லா ரெஸ்ட் எடுக்கணும்பா அவ” என்றார்.
”சரி மா எனக்கு பால் மட்டும் எடுத்துட்டு வாங்க” என்று குளிக்கச் சென்று விட்டான்.
அடுத்த நாள் காலை தாமதமாகவே எழுந்த சுபா மணியைப் பார்த்தாள் காலை பத்து ஆனது. வயிறு வலில இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே அவர் நம்ம மேல ஏற்கனவே கோபத்துல இருக்காரே என்று பிரஸ் பண்ணி குளித்து விட்டு கீழே வரும் போது சசிகலா டி.வி பார்த்துக் கொண்டிருந்தார்.
“வாம்மா சுபா பொன்னம்மாள் சுபாவிற்கு உணவு எடுத்துட்டு வா” என்று கூறினார்.
“அத்தை சாரி லேட்டா எழுந்திருச்சிட்டேன். அவங்க எதாவது சொன்னாங்களா?” என்று பயந்து கேட்டாள்.
“இல்லம்மா அவன் ஆபிஸ் கிளம்பி போய்ட்டான்.இந்த வாரம் ஃபுல்லா நான் அவனுக்கு லஞ்ச் எடுத்துட்டு போறேன் நீ நல்லா ரெஸ்ட் எடு” என்றாள்.
அஸ்வினின் கம்பெனியில் ஒருவாரம் ஆடிட்டிங் வேலை காரணமாக அன்று வீட்டிற்கு வரவே மணி பத்து ஆனது அப்போது சுபா தூங்கியே விட்டாள்.
அடுத்த மூன்று நாட்களும் அவள் காலையில் விழிக்கும் முன்னே கிளம்பியவன் அவள் தூங்கியபின் தான் வந்தான். இப்படியே வெள்ளிக்கிழமை இரவு வரை இரண்டு பேரும் பார்க்கும் சந்தர்ப்பம் கூட அமையவில்லை.
வெள்ளிக்கிழமை இரவு அஸ்வின் வீட்டிற்கு வரும் போது சுபாவின் குடும்பம் மற்றும் அரவிந்த்தின் குடும்பம் வந்திருந்தனர். அவர்களை பொதுப்படையாக வாங்க என்று அழைத்துவிட்டு தன் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்தான். அப்போது அவனை சாப்பிட அழைக்க சுபா வந்தாள்.
“சாரி எனக்கு ஐந்து நாளா கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் இந்த அறைக்கு வரல இப்போ சரி ஆயிடுச்சு. ஆனா இன்னிக்கு அம்மா தீபிகா கூட படுத்துக்கவா? அவங்க ரிசப்ஷன் முடிஞ்ச அன்னிக்கு நைட்டே கிளம்புறாங்களாம் தீபிக்கு அடுத்த நாள் பரிட்சை இருக்காம் அதனால இரண்டு நாளைக்கு அங்க அவங்க கூட இருக்கவா?” என்று தயங்கி கேட்டாள்.
“சரி” என்று மொட்டையாக கூறிவிட்டு தன் லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.பின் அவளிடம், ”எனக்கு வேலை இருக்கு அதனால சாப்பாடு என் அன்றைக்கே வந்து வெச்சிடு” என்றான்.
அங்கே ஹாலில் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாபு ஈஸ்வரியிடம் கண்களால் ஏதோ செய்கை செய்ய, “துளசி அரவிந்த்க்கு தீபிகாவை கல்யாணம் செய்து கொடுப்பியா?” என்று பட்டென்று கேட்டு விட்டார். இதைக் கேட்ட அனைவரும் ஒரு நிமிஷம் அதிர்ந்தனர் தீபிகா உட்பட.
“அண்ணி இப்படி திடீரென கேட்டுருக்கீங்க தீபிகா படிக்கறா அது மட்டும் இல்லாமல் இத அவங்க அப்பா தான் முடிவு பண்ணனும்” என்றார்.
”அரவிந்த் ரொம்ப நல்லவர் அவரை மாதிரி ஒரு பையனை கல்யாணம் பண்ண சுபாவிற்கு தான் கொடுத்து வைக்கவில்லை” என்று சபேசன் சொல்லிக்கொண்டிருக்கும் போது அஸ்வின் அங்கு வந்தான் இது வாசுதேவன் மற்றும் சசிகலாவிற்கு வருத்தத்தை அளித்தது.
அரவிந்த் பக்கத்தில் அமர்ந்த அஸ்வினுக்கு கொதித்தது தன்னை அவமானம் படுத்தியதாய் நினைத்தான்.
“எனக்கு தீபிகாவ அரவிந்த்திற்கு கல்யாணம் பண்ண சம்மதம்” என்றார்.
“அதெல்லாம் சரிங்க ஆனா தீபிகா படிப்பு” என்றார் துளசி.
”ஹா ஹா எங்க வீட்டுல படிப்புல எப்பயுமே சுபா தான் ஆர்வம் உள்ளவ காலேஜ்ல கூட கோல்ட் மெடல் காம்பஸ் இன்டர்வியூல நல்ல கம்பெனில செலக்ட் ஆகி அந்த கம்பெனில கூட ஸ்டார் பெர்ஃபாமர்னு நிறைய தடவ அவார்ட்ஸ் வாங்கிருக்கா” என்று சபேசன் சொல்லும்போதே கிச்சனில் வேலை செய்துக் கொண்டிருந்த சுபாவின் கண்ணில் இருந்து சில கண்ணீர் துளிகள் விழுந்தது.
”ஆமாம்பா படிப்பே போர்” என்றாள் தீபி.
“அப்போ அடுத்து அரவிந்த் தீபி கல்யாணம் தான்” என்றார் பாபு. தீபிகா அரவிந்த் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள்.அவன் ஏனோ அமைதி காத்தான்.
”நம்ம பேசிட்டே இருக்கோம் ஆனா வாழப்போறது இவங்க தான அதனால அவங்க முடிவ சொல்லட்டும்” என்றார் வாசுதேவன். அரவிந்த் முதலில் பதில் சொல்லட்டும் என்று தீபிகா மௌனம் காத்தாள். “எனக்கு தீபிகாவ கல்யாணம் பண்ண சம்மதம்” என்றான். இதைக் கேட்ட தீபிகாவால் நம்பவே முடியவில்லை அதை விட பெரிய அதிர்ச்சி அஸ்வினிற்கு.
‘இவன் எப்படி தீபிகாவை கல்யாணம் செய்ய சம்மதித்தான்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.
“எனக்கும் அரவிந்த் அத்தானை கல்யாணம் பண்ண சம்மதம்” என்றாள்.
அனைவருக்கும் பால் கொடுக்க வந்த சுபா இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள். அப்போது ஒரு ஆர்வக் கோளாறில் தீபிகா சுபாவிடம், “சுபிக்கா உன்னோட மார்க் ஷீட்ஸ் கொடுக்கணும்னு நினைச்சேன். அங்க ரூம்க்கு வா தரேன்” என்றாள்.
‘என்னது மார்க் ஷீட்ஸா இப்போ நம்ம இருக்குற நிலைமைக்கு இதெல்லாம் எதுக்கு கொண்டு வந்திருக்காங்க’ என்று மனதில் கடுப்பானவள் அமைதியாகி விட்டாள்.
டைனிங் ஹாலில் பழங்களை அடுக்கி வைத்திருந்த சசிகலாவிடம் அரவிந்த் வந்தான்.
“நானும் இன்னிக்கு வந்ததுல இருந்து பார்த்துட்டே இருக்கேன் சுபா காலைல இருந்து வேலை பார்த்துட்டே தான் இருக்கா. இப்போ கூட நம்ம எல்லாரும் இங்க சந்தோஷமா பேசிட்டு இருக்கோம் அவள் மட்டும் கிச்சன்ல வேலை பார்த்துட்டே இருக்கா ஏன் பெரியம்மா இதுவரைக்கும் உங்க வீட்டுல எல்லா வேலையும் வேலைக்காரங்க தான பார்த்தாங்க இப்போ என்ன புதுசா எல்லாம் இவள பண்ண வைக்குறீங்க” என்று கேட்டு விட்டான் அரவிந்த்.
அவன் கேள்விக்கு என்ன சொல்வதென்று அறியாது திகைத்தவர் வார்த்தையை தேடினார். ”அது வந்துபா அரவிந்த்…“ என்று உளறிக்கொண்டிருக்கும் போதே, ”அடுத்தவன் மனைவிய பார்த்து அக்கறை படுறத நிறுத்திட்டு உனக்கு மனைவியா வர போறவள பார்த்து அக்கறை படு” என்று அதிகாரமாகச் சொன்னான் அஸ்வின்.
மேலும் தன் அம்மாவிடம், “காபி வேணும்” என்று அனுப்பிவிட்டு அரவிந்திடம், “சுபா என்னோட மனைவி நீ அவளை அண்ணினு கூப்பிடணும்னு நான் அன்னிக்கே சொல்லிட்டேன்.
ஆனாலும் நீ அவளை அண்ணியா நினைக்கல அதான் வார்த்தைலயும் அண்ணி இல்ல மனசுலயும் அண்ணினு நினைப்பு இல்ல” என்று குற்றம் சாட்டினான்.
