அத்தியாயம் 19
இன்றோடு சுபா அஸ்வினுடைய வீட்டை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அன்று மாலை மாளவிகாவின் மகள் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் ஒரு ஹாலில்.
“அம்மா அண்ணன் வருவாரா இல்லையாம்மா குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரியும்ல” என்றாள் அன்னையிடம்.
“அவன் ஆபிஸ்ல இருந்து வரல இன்னும்… நமக்காக இல்லைனாலும் குட்டிக்காக வருவான்” என்றார் சசிகலா.
அரவிந்த் மற்றும் தீபிகாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஒரு வயது குழந்தை இருந்தது. பாபுவும் ஈஸ்வரியும் கூட கலந்திருந்தார்கள்.
சபேசன் மற்றும் துளசி, சுபா சென்றதிலிருந்து அஸ்வினுடைய குடும்பத்தில் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டனர். அரவிந்தின் குணத்திற்காக தீபிகாவை கல்யாணம் செய்து வைத்தனர். தீபிகாவும் அஸ்வினின் குடும்பத்தோடு பேச மாட்டாள்.
சுபா சென்ற இந்த நான்கு ஆண்டுகளில் அஸ்வினுடைய ஆறுதல் இரண்டே பேர் தான் ஒன்று அரவிந்த் இன்னொன்று மாளவிகாவின் மகள் அவந்திகா.
சுபா வீட்டை விட்டு வெளியில் சென்றதுக்கு அஸ்வின் தான் முழுக்காரணம் என்பதை அரவிந்த்தால் ஏத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்குள் வேறு ஏதோ நடந்து இருக்கிறது அஸ்வினின் கண்களில் சுபாவை இழந்த பரிதவிப்பை அரவிந்த் கண்டான்.
ஆனால் தீபிகா… அரவிந்த், அஸ்வினைப் பற்றி பேசினால் கூட பதில் கூற மாட்டாள். ஏனெனில் முதலில் சுபாவிடம் அஸ்வினைப் பற்றி நல்ல விதமாக கூறியது தீபிகா தான் ஒருவேளை அப்போதே சுபாவை தங்களுடன் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்று சுபாவை இழக்காமல் இருந்திருப்பார்கள் என்றே நினைத்தாள்.
“அம்மா அச்சு மாமா எங்க?” என்று அழுதாள் அவந்திகா.
“அவந்தி குட்டி இதோ மாமா வந்துட்டேன் ஹாப்பி பர்த்டே” என்று பிறந்தநாள் பரிசை கொடுத்தான் அஸ்வின்.
“என் அக்காவ துரத்தி விட்டுட்டு இவருக்கு சிரிப்பைப் பாரு ச்ச்ச என்ன மனுஷங்களோ இவங்க எல்லாம்” என்று முணுமுணுத்தாள் தீபிகா.
அனைவரும் சென்றபின் மாளவிகாவின் குடும்பம் அஸ்வினின் குடும்பம் பாபுவின் குடும்பம் மட்டுமே இருந்த சமயத்தில் சோனியா மாளவிகாவிடம், “அண்ணி இப்போ பேசுங்க” என்றாள்.
அவந்திகாவை கொஞ்சிக்கொண்டிருந்த அஸ்வினிடம், “அண்ணா நீங்க இன்னும் எவ்வளவு நாள் இப்படி இருக்க போறீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு அஸ்வின் புருவத்தை சுருக்கினான். மேலும் தொடர்ந்த மாளவிகா, “நீங்க முன்னாடி இருந்த மாதிரி இல்லை என்கிட்ட லாம் சரியாவே பேசுறது இல்லை” என்றாள்.
அவந்திகாவை கொஞ்சியபடியே, “உன்கிட்ட லாம் நான் எப்போ நல்லா பேசிருக்கேன் மாளவிகா சின்ன வயசிலிருந்து உன்கிட்ட லாம் அளவா தான பேசுவேன் இப்போ என்ன புது கரிசனம்” என்று புருவத்தை சுருக்கி கேட்டான்.
“உங்களோட வாழ்க்கைய நினைச்சு கவலையா இருக்கு அண்ணா. அந்த சுபா ஓடிப்போய் நாலு வருஷம் ஆகுது. அவளே நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொல்லிட்டு போய்ட்டா அப்போ ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்க?” என்று கேட்டாள்.
இதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
“அவ சொன்னானு எல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது. என்னோட பெர்ஸ்னல்ல யாரும் தலையிட வேண்டாம் தலையிடவும் கூடாது. அதே மாதிரி சுபாவ பத்தி யாரும் தப்பா பேசக் கூடாது எல்லாரும் ஒரு விஷயத்தை ஞாபகம் வெச்சிக்கோங்க.”
“சுபா இந்த வீட்டை விட்டு போகும் போது இந்த அஸ்வினுடைய குழந்தை அவ வயித்துல இருந்தது. அதனால இனிமேல் இந்த டாபிக் எடுத்தீங்கனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு விருட்டென்று வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டான்.
உண்மையாக அஸ்வினிற்காக வருந்திய மாளவிகா தன் கணவனிடம் திரும்பி, “என்னால அண்ணாவ இப்படி பார்க்க முடியலைங்க” என்றாள்.
அதற்கு அவினாஷ், “நீ நினைக்கிற மாதிரி லாம் அவர் இல்லை அவர் நல்லா ஸ்டாராங்கா தான் இருக்காரு. உனக்கு நான் நிறைய தடவை சொல்லிட்டேன் மாளவிகா…”
“சோனியா கூட சேர்ந்து லூசு மாதிரி ஏதாவது பண்ணாதேனு அவளோட பைத்தியம் அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாதான் தெளியும் போல” என்று சலிப்பாகக் கூறினான்.
பின் அனைவரும் விடைபெற்று வீட்டிற்குச் சென்றனர். சசிகலாவிற்கு மனதில் சுபாவை நினைத்து வருத்தம் இருந்தாலும் அஸ்வின் தான் பெற்ற மகன் என்பதால் அஸ்வினின் நிலைமை எண்ணி வருந்தினார். ஆனால் வாசுதேவனிற்கு அஸ்வின் மேல் கோபம் இருந்தது.
அவனால் தான் துளசியின் குடும்பம் பிரிந்தது. சுபா என்னும் அப்பாவிப் பெண் வயிற்றில் குழந்தையோடு எங்கு போனாள் என்ன ஆனாள் என்று யோசித்தே அவருக்கு இரவில் தினமும் தூக்கம் வர மறுத்தது.
வீட்டிற்கு வந்த அஸ்வின் நேரே சென்றது தன்னுடைய உடற்பயிற்சி கூடத்திற்கு அங்கே பொருத்தப்பட்டிருந்த பன்ச்சிங் பேகில் தன் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தான்.
சுபா சென்ற பின் தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அஸ்வின் வாங்கியது தான் இந்த பன்ச்சிங் பேக் சுபாவின் நினைப்பு வரும்போதெல்லாம் அவளின் மேல் கோபம் வரும் தன் மேல் பாசம் இல்லாமல் தன்னுடைய குழந்தையை சுமந்தும் தன்னை இன்னொருத்தியோடு சேர்த்து பேசியது,
அது மட்டும் இல்லாமல் கடிதத்தில் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி எழுதி இருந்தது, இந்த கோபத்தை எல்லாம் பன்ச்சிங் பேகில் காட்டியவன் தீடிரென்று அதைப் பிடித்து,
“நீ யாரு டி என்னை இன்னொரு கல்யாணம் பண்ண சொல்றதுக்கு இந்த பிறவியில் என்னோட கல்யாணம் வாழ்க்கை உன் கூட மட்டும் தான் நீ எப்போவுமே சுபா வர்ஷினி அஸ்வின் குமார் தான்” என்று கோபமாக தன் அறைக்கு குளிக்கச் சென்றான்.
*******
பெங்களூரில் இருக்கும் அந்த பிரபலமான பள்ளியில் சைன்ஸ் டீச்சராக பணிபுரிந்தாள் ரேவதி. வகுப்பு நேரம் காலை பத்து மணியளவில் அந்த பள்ளியின் ஆயாம்மா ரேவதி பாடம் எடுக்கும் வகுப்பிற்கு ஒடி வந்தார்.
“ரேவதி மிஸ், உங்க பையன் ஆகாஷ் தீடிரென்று மயங்கி விழுந்துட்டான் பக்கத்துல ஹாஷ்பிடல்ல சேர்த்துருக்காங்க நீங்க உடனே வாங்க” என்று ஆயாம்மா ரேவதியை அழைத்துச் சென்றார். அழுதுக்கொண்டே பதறி அடித்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் சென்றாள்.
ஐந்து வயதான ஆகாஷ் எமெர்ஜென்சி வார்ட்டில் இருப்பதைப் பார்த்த தாய் மனது கதறியது.மயக்கத்தில் இருந்த தன்னுடைய மகன் இன்னும் விழிக்கவில்லை என்பதை நினைத்து இதயம் படபடத்தது.
“உங்களை டாக்டர் பாக்கணும்னு சொன்னாங்க உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றார் நர்ஸ். மனதில் பயத்துடன் டாக்டர் அறைக்குச் சென்றாள் ரேவதி.
“எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர்” என்று கேட்டு உள்ளேச் சென்றாள்.
“எஸ் கம் இன் சிட் டௌன் மிஸஸ் ரேவதி ரமேஷ்” என்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
“ஆகாஷ் இஸ் டையங்கனைஸ்ட் வித் ASD இருதய பிரச்சனை (ATRIAL SEPTAL DEFECT) இது அவன் பிறக்கும் போது இருந்தே இருக்கு இது உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டார்.
“இல்லை டாக்டர் எனக்கு எதுவும் தெரியாது” என்று அழுதாள்.
