அத்தியாயம் 2

“டேய்! நான் படிக்கிறது காமர்ஸ் க்ரூப் டா, டாக்டருக்கு இல்லை. அச்சோ காமெடி… டாடி இப்படி ஒரு மக்குப் பையனை நான் பார்த்ததே இல்லை” என்று விளையாட்டாக தம்பியைக் கலாய்த்தாள்.

“பே குண்டு.”

“போடா நான் குண்டென்றால் நீ குரங்கு.”

“இரண்டு பேரும் ஆரம்பிச்சிட்டீங்களா… விஜி சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மணி ஆகுது, முதல் நாள் அன்றைக்கே தாமதம் ஆக்கக் கூடாது… அனிதா உன் கல்லூரி நேரம் பதினொன்றில் இருந்து மாலை ஐந்து வரை, ஆனால் நீ காலையில் ஐந்தரை மணிக்கே எழுந்திரு. அப்போது தான் படிக்க முடியும்.”

“சரி டாடி”

சாப்பிட்டுவிட்டு தன் தந்தையுடன் கல்லூரிக்குச் சென்றவளின் மனதில் ஆயிரம் ஆசைகள் கனவுகள் ஒரு வித படபடப்பும் கூட.

“என்ன அனிதா அமைதியாய் வர?”

“ஒன்றும் இல்லை டாடி, முதல் நாள் கல்லூரி என்பதால் ஒருவித படபடப்பாக இருக்கிறது.”

“அனிதா இங்கப் பாருடா, நீ இப்போது படிக்கப் போறது ரொம்ப பெரிய கல்லூரி. சென்னையில் இருக்கும் பணக்காரர்கள், உயர்தர மிடிஸ் கிளாஸ் பெண்கள் எல்லாம் படிக்க வருவார்கள். எப்போதுமே நம்ம தகுதிக்கு ஏற்றாற் போல நட்பு வட்டாரம் இருக்கவேண்டும். உன்னை டாடி நம்புகிறேன்.”

“நீங்கள் கவலைப்படாதீர்கள் டாடி, என்னுடைய நட்பு வட்டாரம் கண்டிப்பாக ஹெல்த்தியாகத் தான் இருக்கும்” என்றபோதே, ஃபிரெஸ்ஸர்ஸ்ஸை வரவேற்க *** கல்லூரியின் வாசலில் கல்லூரி பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

‘ஓரியன்டேஷன் டே’ என்று வைலட் நிறத்தில் பெரிய போர்ட்டைப் பொறுத்தி, அங்கு வந்து கொண்டிருந்த ஃபிரெஸ்ஸர்ஸ்ஸை வரவேற்றனர் அந்த கல்லூரி மாணவிகள். அதைக் கண்ட சர்மிளாவிற்கு ஆர்வமாக இருந்தது.

“ஆல் த பெஸ்ட் அனிதாம்மா, டாடி கிளம்புகிறேன். பார்த்து பத்திரமா இரு. நான் ஐந்து மணிக்குக் கூப்பிட வருகிறேன்.”

“சரி டாடி பை.”

உள்ளே சென்ற சர்மிளாவை அழகாக வரவேற்றனர் கல்லூரி சீனியர்கள். அவள் உள்ளே வந்த உடனே எந்த வருடம், எந்தத் துறை என்று கேட்டுக்கொண்ட சீனியர்ஸ், அவளை அங்கே இருந்த இன்டோர் ஆடிடோரியத்திற்குள் செல்லுமாறு பணித்தனர்.

“ஹலோ கேர்ள்ஸ்… வெல்கம் டூ ***கல்லூரி. நான் தான் நம்ம கல்லூரியுடைய ஸ்டுடண்ஸ் யூனியன் செக்ரட்டரி. வாலன்டியர்ஸ் ஃபிரெஸ்ஸர்ஸை அவர்கள் டிபார்ட்மென்ட்டுடன் சேர்ந்து உட்கார கையிட் பண்ணுங்கள்” என்று ஒலிவாங்கியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அங்கு நின்று கொண்டிருந்த ஒரு தன்னார்வலர் பெண்ணிடம், “அக்கா, நான் பிகாம் வங்கி நிர்வாகம் ஃபர்ஸ்ட் ஹியர்” என்று தன்னை அறிமுகப்படுத்தினாள்.

“அங்க இடது பக்க முனையில் தான் உன் துறை. ஃபிரஸ்ஸர்ஸ் இருக்கிறார்கள் அங்கே போ.”

“தேங்கஸ் அக்கா” என்று கூறிவிட்டு அந்தப் பெண் கூறிய இடத்தில் அமர்ந்தாள். பொதுவாகவே சர்மிளா கலகலவென பேசும் ரகம் இல்லை. அதனால் அமைதியாக அமர்ந்து நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய் என் பெயர் ஐஸ்வர்யா, உன் பெயர் என்ன?” என்று அவளின் வலது புறம் பார்க்க, வெள்ளையாக கண்ணாடியுடன் ஜீன்ஸ் கால்சட்டை மற்றும் டீ சர்ட் அணிந்திருந்த பெண் கூறினாள்.

“என் பெயர் சர்மிளா” என்று மென்மையாகச் சிரித்தவள் அமைதியானாள். அந்த ஐஸ்வர்யாவின் பக்கம் இருந்த இன்னொரு பெண், தன்னை சந்தியா என்று அறிமுகப்படுத்தினாள். இப்படியாகத் தொடர்ந்த அந்த நாள் இனிதே ஆட்டமும் பாட்டமுமாய் முடியும்போதே, சர்மிளா, ஐஸ்வர்யா மற்றும் சந்தியா தோழிகள் ஆனார்கள்.

“ஏய் சர்மி, உன் செல் நம்பர் கொடு” என்றாள் ஐஸ்வர்யா.

“இல்ல யா, என்கிட்ட மொபைல் இல்லை.”

“என்னது மொபைல் இல்லையா! என்னடி சொல்ற?” என்று அதிர்ச்சியடைந்தாள் சந்தியா.

“நீ என்ன பள்ளி செல்லும் பெண்ணா, கல்லூரி வந்துட்ட தனியா வெளியே வருவ போவ ஒரு அவசரக்காலத்துக்கு அலைபேசி வேண்டாமா?” என்றாள் சந்தியா.

“வேனில் தான் வரப் போகிறேன். அதனால் தேவைப்படாது… என் அம்மா நம்பர் தரேன், ஆனால் பெருசா அலைபேசி பார்க்க மாட்டேன்” என்று தன் அம்மாவின் நம்பரைக் கொடுத்தாள்.

ஓரியன்டேஷன் புரோகிராம் மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. இரண்டாம் நாளிலிருந்தே சர்மி வேனில் வர ஆரம்பித்தாள். ஐஸ்வர்யா மற்றும் சந்தியாவுடன் நன்றாகப் பேசிய சமயத்தில் தான், “கேர்ள்ஸ் நௌ எவ்ரிவொன் கேன் கோ டூ யுவர் ரெஸ்பெக்ட்டிங் கிளாஸஸ் வாலன்டியர்ஸ் கைய்ட் தெம்” என்று ஒலிவாங்கியில் கல்லூரி மாணவிகளின் செயலாளர் கூறிய பின் அனைவரும் எழுந்து நகர்ந்தனர்.

தன் தோழிகளுடன் சென்ற சர்மி அங்கு ஒரு பிரோஃபசர் அட்டென்டென்ஸ் எடுத்துக்கொள்ள ஆயத்தமானதைக் கவனித்தாள்.

“கேர்ஸ் குட் மார்னிங் ஹேவ் எ நைஸ் டே… திஸ் காலேஜ் இஸ் வெரி வெரி ரெப்பியூடட் அன்ட் ஐ ஹோப் எவ்ரிவொன் வில் நோ திஸ் வெல் டூ நௌ. அம் கோயிங் டு டேக் அட்டென்டென்ஸ் ஃபார் ‘ஏ’ பிரிவு” என்று பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்.

அதில் சந்தியா பெயர் மட்டுமே இருந்தது. சர்மி மற்றும் ஐஸ்வர்யாவின் பெயர் இல்லை.

“தோஸ் நேம்ஸ் விச் இஸ் லெஃப்ட் ஔட் கேன் கம் டூ அதர் ரூம்” என்று இன்னொரு லெக்சரர் கூறிவிட்டு நகர்ந்தார்.

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!