அத்தியாயம் 3

ஷர்மி மற்றும் ஐஸ்வர்யா கூட்டத்தோடு கூட்டமாக சக மாணவிகளுடன் சென்றனர்.

 

அங்கே வாசிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலில் இருவரின் பெயரும் இருந்ததால், இருவரும் நிம்மதியாக ‘பி’ பிரிவில் அமர்ந்தனர். பொதுவாகக் கல்லூரி நேரங்களில் மொபைல் ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது என்பதினால், ஒன்று செல்லை அணைத்திருக்க வேண்டும் இல்லை சைலன்ட் மோர்டில் வைத்திருக்க வேண்டும். 

ஐஸ்வர்யாவுடன் தன் நட்பைப் பலப்படுத்திய ஷர்மி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தாள். கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும், அன்று பீரியட் அக்கவுண்ட்ஸ் என்பதினால் அனைவரும் கேல்குலேட்டர் வைத்திருக்க வேண்டும்.

 

அக்கவுண்ட்ஸ் கிளாஸ் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஷர்மியின் முதுகில் யாரோ தட்டினர். பின்னே திரும்பிப் பார்த்த சர்மியிடம், “ஹாய் இங்க நாங்கள் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கோம். ஆனால் ஒருத்தர் கிட்டயும் கேல்குலேட்டர் இல்லை. உங்களுடைய ரோவில் மூன்று பேரும் கேல்குலேட்டர் வைச்சு இருக்கீங்க. இஃப் யூ டோன்ட் மைன்ட் ஒரு கேல்குலேட்டர் தரீங்களா?” என்று கேட்டாள் மதி.

 

‘என்ன இந்தப் பொண்ணு கேல்குலேட்டரும் கொண்டு வராமல் என் படிப்பையும் ஸ்பாயில் பண்ணுது? சரி கேட்ட அப்புறம் எப்படி கொடுக்காமல் இருப்பது’ என்று வேறு வழியின்றி தன் கேல்குலேட்டரை அந்தப் பெண் மதியிடம் கொடுத்துவிட்டு, ஐஸ்வர்யாவிடம் பகிர்ந்துக் கொண்டாள். அப்போது தெரியவில்லை இந்தப் பெண் மதி தான் ஷர்மியின் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறாள் என்று.

 

மதி, இளவரசி, ரித்தி மற்றும் நிவேதா, ஷர்மிளா அமர்ந்திருந்த ரோவிற்கு பின்னாடி அமர்ந்திருப்பவர்கள், அவர்கள் நால்வருமே தோழிகள் ஆயினர்.

 

அன்று மாலை வீட்டிற்கு வந்த ஷர்மி, தன் தாயிடம் காஃபி கேட்க சென்றாள். அப்போது, “ஷர்மி, நாளைக்கு நம்ம சாலா பெரியம்மா வீட்டிற்குப் போகணும். உனக்கு நாளைக்கு விடுமுறை தானே?”

 

“ஆமாம் ம்மா, ஆனால் நான் வரல…”

 

“ஏன் ஷர்மி?”

 

“அம்மா, உங்களுக்கே தெரியும். அங்கே நிஷா அக்கா, திவ்யா அப்புறம் ஆர்த்தி இருப்பாங்க. என்னைப் பயங்கரமாகக் கிண்டல் பண்ணுவாங்க, நான் வரல.”

 

“ஷர்மி, அவங்க எல்லாம் உன் அக்கா தங்கச்சிங்க, அப்புறம் நிஷா, ஆர்த்தி பார்க்க நிறமா இருக்காங்க. அதனால் உன்னை சும்மா விளையாட்டுக்கு கறுப்பென்று கிண்டல் பண்றாங்க. இதெல்லாம் பெருசா எடுத்துக்காத.”

 

“ஏன் மா, அப்படிப் பார்த்தால் திவ்யா தான் என்னை விட கறுப்பா இருக்கா. ஆனால் அவளோடு அவங்க இரண்டு பேரும் நல்லா பழகுறாங்க. ஆனால் என் கிட்ட மட்டும் ஏன் இந்த விலகல்? ஏன்னா திவ்யா பணக்காரி. நான் ஏழை. அதனால் தானே இப்படி பண்றாங்க… அப்புறம் நான் உண்மையாகவே கறுப்பாகவா இருக்கேன்? என் தோழிகள் எல்லாம் நான் மாநிறம்னு தான் சொல்றாங்க.”

 

“ஏய், நீ இப்போது என்ன நிறமாகி கோட்டையா கட்ட போற? ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு ஷர்மி. இந்த திமிரு பேச்செல்லாம் இனி பேசாதே, உன் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு.”

 

“…”

 

“நாளைக்கு காலைல பத்து மணிக்கு உன் ஸ்கூட்டியில் போயிட்டு வந்திடலாம்.”

 

“…”

 

“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். அப்படி என்ன இந்த வயசிலேயே திமிரு?”

 

“சரி மா, நான் வரேன் போதுமா?” என்று விசும்பலுடன் சென்றாள் ஷர்மிளா.

 

***

 

அடுத்த நாள் காலை குளித்துவிட்டு, ஒரு பச்சை வண்ண சல்வாரை உடுத்தியவள் அமைதியாக உட்கார்ந்தாள்.

 

காலையிலேயே தந்தை ஷெட்டிற்குச் சென்றிருந்தார். விவேக் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். ஷர்மிளாவிற்குச் சாப்பாடு வைக்க வந்த விஜி, “ஷர்மி, சாப்பிட்டு கிளம்பு. விவேக் பாபு வீட்டில் விளையாடுறானாம். அவன் அம்மா கிட்ட பார்க்க சொல்லிட்டேன்.”

 

“சரிம்மா” என்றவளின் வார்த்தையில் தொய்வு தான் இருந்தது.

 

தன் தந்தை தனக்காக வாங்கிக் கொடுத்த செகென்ட் ஹேன்ட் ஸ்கூட்டி தான் ஷர்மிக்கு எல்லாமே. அதை வைத்து கோயிலுக்குச் செல்வாள் கடைக்குச் செல்வாள். தன் அன்னை உட்கார்ந்த பின் வண்டியை எடுத்தவள், மாதவரத்தில் இருக்கும் தன்னுடைய விசாலாட்சி பெரியம்மா வீட்டிற்குச் சென்றாள்.

 

வாசலிலேயே நின்றிருந்த நிஷாவின் கணவன் ஜான், “வாங்க” என்று மட்டும் கூறிவிட்டு உள்ளேச் சென்றான்.

 

உள்ளே கலகலப்பான சத்தம் கேட்டபோதே, மொத்த குடும்பமே உள்ளே தான் இருக்கிறது என்பதை அறிந்த ஷர்மி, அமைதியாகத் தாயைப் பின் தொடர்ந்தாள்.

 

“ஹாய் பெரியம்மா, ஹாய் ஷர்மி” என்றாள் முதலில் கண்டுகொண்ட ஆர்த்தி. ஷர்மியை விட ஒரு வயது சிறியவள். அவளுடன் அவளின் தம்பி விமலும் இருந்தான்.

 

“அம்மா எங்கே ஆர்த்தி?”

 

“பெரியம்மா! அம்மாவும் சாலா பெரியம்மாவும் சமையலறையில் ஏதோ கதை பேசிட்டு இருக்காங்க.”

 

“என்ன சித்தி என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டிங்குறீங்க” என்றாள் அங்கே அமர்ந்திருந்த நிஷா.

 

‘கண்டுகொள்ளும் அளவிற்கா நீ காரியம் பண்ணின, உன்னால் என் அக்காவையே இழந்துட்டு நிக்கிறேன்’ என்று மனதில் நினைத்த விஜி, “உன்னை இப்போது தான் பார்த்தேன் நிஷா, இப்போ எத்தனை மாசம்?”

 

“ம்ம் ஏழு மாதம் சித்தி… அப்புறம் ஷர்மி ஒருவழியா கல்லூரி சேர்ந்துட்ட போல?”

 

“ஆமாம் நிஷா அக்கா.”

 

“ஏய் ஷர்மி, நீ ஏன் இந்த மாதிரி பழைய மாடல் சுடிதார் போட்டுட்டு இருக்க? இப்போது எவ்வளவு வகைகள் வந்திருக்கு, இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க நீ.”

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!