அத்தியாயம் 30

சுபாவின் வீட்டிற்கு போலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அஸ்வின் அந்த பைப்பாஸ் சாலையில் கவனத்துடன் தனது காரில் மதுரை சென்றுக் கொண்டிருந்தான்.

 

சபேசனுக்கு மனதே சரியில்லை சுபாவிற்கு வேறு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவர், 

 

“துளசி, என் நண்பன் திருநெல்வேலில இருக்கான் அவன் இவ்வளவு நாள் அவன் மகன் கூட யூ எஸ் ல இருந்தான் போன வாரம் தான் வந்தான் நான் அவனை பார்த்துட்டு அப்படியே நெல்லை அப்பர் கோவில் திருச்செந்தூர்னு ஒரு பத்து நாள் போய்ட்டு வரேன். நீயும் சுபாவும் பத்திரமா இருந்துக்கோங்க” என்று தன் பொருள்களை எடுத்து வைத்தார்.

 

“அப்பா என்ன பா நீங்க எங்க கூட நேரம் கழிக்காம உங்கள் நண்பனை பார்க்க போறீங்க” என்று பொய்யாக கோபமாக இருந்தாள் சுபா.

 

சுபாவின் தலையைக் கோதியவர்,  “என்னது என் மகள் சுபா கோபப்படுகிறாளா? ஆச்சரியமாக இருக்கே… அப்பாக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா, நீ இங்க தான இருக்க போற, அப்பா இதோ பத்தே நாள்ல வந்திடுவேன். இன்னிக்கு இரவு அரவிந்த் மாப்பிள்ளையும் தீபிகாவும் வரேனு சொன்னாங்கமா, அவங்க ஒரு வாரம் இங்க இருக்க போறாங்களாம் நல்லா எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க” என்றார்.

 

அஸ்வின் எப்போதும் சித்துவிற்கு நான்கு நாளுக்கு ஒரு முறை கால் செய்வான். ஆனால் இன்று ஐந்து நாட்கள் ஆகியும் கால் வரவில்லை என்று சோர்வாக இருந்தாள் சுபா. அஸ்வின் சித்துவிடம் பேசும்போது அவனின் கம்பீர குரலும் ஆண்மையான பேச்சு வழக்கும் சுபாவிற்கு ரொம்ப பிடிக்கும். அதை அவளால் பார்க்க முடியவில்லை என்றாலும் தூரத்தில் நின்று கேட்டே ரசிப்பாள்.

 

“அப்பா பேசுதுல” என்று கேட்ட சித்விக்கின் மழலையை அவளால் இப்போது இருக்கும் மனநிலையில் ரசிக்க முடியவில்லை.

 

அன்று இரவு அரவிந்தும்

தீபிகாவும் மதுரை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சுபாவை கவனித்த தீபிகா, “அக்கா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மாடிக்கு வா” என்று அழைத்துச் சென்றாள்.

 

“ஏன்கா இப்படி டல்லா இருக்க எதாவது பிரச்சனையா உனக்கு?” என்று அவளைப் பார்த்து நேரடியாக கேட்டாள் தீபிகா.

 

“இல்லடி நான் நல்லா தான் இருக்கேன். நீ குழப்பிக்காத” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. யார் இப்போது இங்கே? என்று இருவரும் கீழே எட்டிப் பார்த்தனர். 

 

ஏ. கே என்னும் காரின் லோகோ பார்த்தவுடனே சுபாவிற்கு படபடவென வந்தது. தன் காரில் இருந்து கம்பீரமாக இறங்கினான் அஸ்வின். ஒரு கறுப்பு நிற முழுச்சட்டை அணிந்திருந்தவன் பார்க்க கச்சிதமாக இருந்தான். அவனைக் கண்டவுடன் கீழே ஓடிச் சென்றாள் தீபிகா. சுபா மட்டும் அப்படியே சிலையாய் உரைந்தாள்.

 

சுபாவைக் காண வேண்டாம் என்று நினைத்த அஸ்வினால் அப்படி இருக்க முடியவில்லை தன்னை மீறிய அவன் கை திருநகர்க்கு செல்லாமல் அதற்கு ஐந்து கீலோமீட்டர் முன்னே இருக்கும் பழங்காநத்தத்தில் சுபாவின் வீட்டின் முன் நின்றது. 

 

“ஹேய் அரவிந்த்! அவர் வந்திட்டாரு” என்று கத்தினாள்.

 

“என்ன உளர்ற யார் வந்துட்டா?” என்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே கேட்டான் அரவிந்த்.

 

“அதான் அவர் அஸ்வின்…” என்று கூறிமுடிக்கும் போது அந்த வீட்டின் உள்ளே தன்னுடைய டிராலியை எடுத்துக்கொண்டு வந்தான் அஸ்வின். அவனை அங்கு கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி…

 

“என்ன சொன்ன தீபிகா அஸ்வின்…” என்று இடைவெளி விட்டு நிறுத்தினான்.

 

“அது வந்து அஸ்வின் அத்தான் னு சொல்ல வந்தேன் அத்தான்” என்று பம்மினாள் தீபிகா.

 

இதைக் கேட்டு தனது கூலர்ஸை கழட்டிய அஸ்வின், “தட்ஸ் ரைட்” என்று சித்துவிடம் திரும்பினான்.

 

“சித்து குட்டி ஏன் அப்பா கிட்ட பேச மாட்டூறீங்க” என்று அவன் உயரத்துக்கு இவன் மிகவும் குனிந்து மண்டியிட்டு கேட்டான்.

 

“உங்க பேச்சு கா… சித்து பார்க்கல இவ்ளோ நாள்” என்று கோபமாக உள்ளே ஓடினான். அவனை ஒருவாறு சமாளித்து வெளியே கொண்டு வந்தான்.

 

“அஸ்வின் மாப்பிள்ளை வாங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டார் துளசி.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை” என்று நாலு வருடம் கழித்து இப்படி அஸ்வின் கூப்பிடும் போது துளசியின் கண் கலங்கி விட்டது. 

 

அஸ்வினை ஹாலில் அமர வைத்து அவனுக்கு காபி மற்றும் சாப்பாடு கொடுத்தார் துளசி.

 

“தீபிகா… சுபா எங்க அவளை கூட்டிட்டு வா” என்று அவளை மாடிக்கு அனுப்பினார் துளசி. தீபிகா செல்லும் போது சுபா எப்படி நின்றாளோ அதே போல் சிலையாய் நின்றாள் சுபா.

 

“உனக்கு தான் உன் புருஷன்னா பயம் ஆனால் அவரை பார்த்தா எனக்கும் ஏன் கா பயமா இருக்கு சப்பா முடில நீ தயவு செஞ்சு கீழே வா” என்று சுபாவின் கையைப் பிடித்தாள்.

 

“தீபி அன்னிக்கு வீட்ல அவ்வளவு பேசுன அவர் கூட வாழ சொல்லி நானே தப்பு பண்ணிட்டேனு இப்போ பேசேன் டி” என்றாள் சுபா.

 

“அம்மா, தாயே! நான் என் புருஷனுக்கு கூட பயப்பட மாட்டேன். ஆனா உன் புருஷன் ஒரு பார்வை பார்த்தாலே எனக்கு நடுங்குது ப்ளிஸ் கீழே வாக்கா புதுசா கல்யாணம் ஆன மாதிரி வெட்கப்பட்டு நிக்கற கல்யாணம் ஆகி ஒரு குட்டியே போட்டாச்சு சீன் போடாம வா இல்லனா உன்னை தேடி அவர் மேலயே வந்திருவாரு” என்று சுபாவை கீழே அழைத்துச் சென்றாள். 

 

அங்கு அஸ்வின் அரவிந்த்தோடு பேசிக்கொண்டு இருந்தான்.

 

“வாங்க நல்லா இருக்கீங்களா? வீட்டுல அத்தை, மாமா நல்லா இருக்காங்களா?” என்று குனிந்த தலையோடு கேட்டாள்.

 

“அங்க கீழே எதாவது தேடுறீயா சுபா?” என்று அரவிந்த் கேட்டான்.

 

“அதெல்லாம் இல்லையே” என்று அவள் நிமிரும் போது அஸ்வின் சுபாவை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“ஒரு நிமிஷம் வந்திடறேன்” என்று தன் அம்மாவை தேடிச் சென்றாள்.

 

“அம்மா, அவர் வந்தது அப்பாக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.

 

“இப்போ வரைக்கும் நான் சொல்லல சுபா அவருக்கு தெரியவும் வேண்டாம்” என்று துளசி பேச்சை மாற்றினார்.

 

தீபிகாவிடம் சபேசன் சுபாவிற்கு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியதை துளசி கூறினார்.

 

“அப்பா ஏன் மா இப்படி பண்றாரு சுபிக்கா கண்டிப்பா இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா… அன்ட் அவர் இருக்காரே அக்கா ஹஸ்பண்ட் அவர் இந்த விஷயம் கேட்டாலே நம்ம ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் ஆப்பு வெச்சிடுவாருமா” என்று பேசிக்கொண்டிருந்தாள். 

 

“சரி நீ இதை சுபா கிட்ட சொல்லாத அதே மாதிரி அஸ்வின் வந்ததும் உங்க அப்பாக்கு தெரிய வேண்டாம்!” என்று தன் மகளிடம் கேட்டுக்கொண்டார்.

 

“அவர் அக்காவோட கணவர் அவர் வந்ததை ஏன்மா மறைக்கணும்? நீ ஆனா அப்பாக்கு தேவை இல்லாம பயப்படுற” என்றாள் தீபிகா.

 

“சரி டி அதை விடு சுபா என்ன பண்றா?” என்று கேட்டார்.

 

“அவ துணி தோய்ச்சிட்டு இருக்காம்மா, அப்பறம் அடுத்த மாசம் என் மாமனார் மாமியார் அறுபதாவது கல்யாணம் இங்க மதுரைல தாத்தா வீட்டுல பண்ணனும்னு நினைக்குறாங்க. அதான் நானும் அரவிந்தும் இங்க வீட்ட பாத்துட்டு அரேன்ஜ் பண்ணலாம்னு வந்தோம்” என்றாள் தீபிகா.

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!