அத்தியாயம் 34

அடுத்த நாள் வீடு கோலாகலத்தோடு விடிந்தது. பாபுவையும் ஈஸ்வரியையும் கல்யாணத்திற்கு தயார் செய்திருந்தனர். அரவிந்த்தும் தீபிகாவும் தான் இதை எடுத்துச் செய்வதால் அவர்களுக்கு 

சுபாவுடன் பேச நேரமில்லை. அங்கு வந்த சுபா அஸ்வினைத் தான் தேடினாள். வேண்டும் என்றே ரகுவை வேற கூட அழைத்து வந்தார் சபேசன்.

 

அவர் வீட்டு மாப்பிள்ளை என்பதால் யாரும் அவரிடம் இதைப் பற்றி விசாரிக்கவில்லை. வாசுதேவனும் சசிகலாவும் சுபாவை கண்டும் காணாமல் திரும்பினர். சுபாவிற்கு அது வருத்தத்தை அளித்தது.சிறிது நேரம் கழித்து ரெடி ஆகிய அஸ்வினை முதலில் கண்டது சித்விக் தான்.

 

“அப்பா” என்று ஓடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டான். நீல முழு கை சட்டையும்

வேஷ்டியும் அணிந்து பார்க்க கம்பீரமாய் இருந்தான் அஸ்வின். சுபா அரக்கு நிறத்தில் பட்டு உடுத்தி அழகாக மின்னினாள். ஆனால் அவளை அஸ்வின் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதில் மனம் நொந்தவள் அமைதியாக இருந்தாள் யார் இருந்த புதியவன் என்று அரவிந்த்திடம் கேட்டான் அஸ்வின்.

 

அதற்கு தனக்கு எதோ வேலை இருக்கு என்று வேண்டுமென்றே நழுவிக் கொண்டான் அரவிந்த். ஏதோ வித்தியாசமாய் உணர்ந்த அஸ்வின் குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர்.

கல்யாணம் சிறப்பாக முடிந்தது. அனைவரும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் சுபா மட்டும் சோகமாக இருந்தாள். அப்போ அப்போ அஸ்வினைப் பார்த்தாள்.

 

ஆனால் அவனின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் நார்மலாக இருந்தான். சித்து முழுக்க அஸ்வின் மற்றும் வாசுதேவன் சசிகலாவோடு தான் இருந்தான்.

 

பட்டு சாரி கசகசவென இருந்ததால் ஒரு சல்வாரை உடுத்தலாம் என்று சுபா அந்த ஹால்லை ஒட்டி இருக்கும் அறைக்கு துணி மாற்றச் சென்றாள். அவளை ரொம்ப நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்த ரகு சுபாவோடு பின்னே சென்று படாரென்று கதவைச் சாற்றியவன் தாழ் போடாமல் சுபாவை கட்டிப்பிடிக்க முயற்சித்தான்.

 

ஆனால் அவன் தாழ் போடாமல் விட்டது காற்றிலே திறந்து ஹாலில் இருக்கும் அனைவரும் பார்க்கும்படி ஆனது.  முதலில் அஸ்வின் என்று நினைத்த சுபா அந்த கம்பீர ஸ்பரிசம் மாதிரி இது இல்லாமல் மாற்றத்தை உணர்ந்த சுபா அவன் அணைப்பு இறுகுவதற்குள் அவன் யாரென்று தெரிந்துக் கொண்டு தள்ளி விட முயற்சித்தாள்.ஆனால் அவளால் அவனிடமிருந்து விடுபட முடியவில்லை.

 

“அடச்சே நீயெல்லாம் ஒரு பெண்ணா? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வெச்சிகிட்டு என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்க இப்போ தான் புரியுது தப்பு உன்கிட்ட வெச்சிட்டு இவ்வளவு நாள் என் பையன சாக்கா சொல்லிட்டு இருந்திருக்க என் மகனுக்கு சீக்கிரமே திருமணம் நடத்துறேன் நீ யார் கூட வேணாலும் இருந்துக்கோ” என்று அசிங்கமாகப் பேசினார் சசிகலா.

 

“டேய் ரகு உன்னை நம்பி வீட்டுல விட்டதுக்கு இப்படி என் பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்குறியே வெளியே போ” என்றார் சபேசன்.

 

“உங்க பொண்ணு சுபா தான் என்னை தனியா வர சொல்லி கட்டிப்பிடிச்சா நீங்க மட்டும் இப்போ வரலைன்னா எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருக்கும் அன்ட் மோர்ஓவர் நானும் சுபாவும் கல்யாணம் பண்ணிக்க போறோம் சோ எங்களுக்கு இது தப்பா படலை” என்றான் ரகு சாதாரணமாக.

 

இதைப் பார்த்த வாசுதேவன் பாபு அரவிந்த் தீபிகா துளசி யாருக்கும் என்ன சொல்வது செய்வது என்பது தெரியாமல் சிலையாய் இருந்தனர். சுபா சிலையாய் நின்றாள். மொத்த குடும்பமே தன்னை அசிங்கமாக பார்ப்பதை நினைத்து தான் எப்படி நல்லவள் என்று நிரூபிப்பது என்பது புரியாமல் இருந்தாள்.

 

“அம்மா! உங்க வாய மூடுங்க என்ன பேச்சு பேசுறீங்க அவளை! இனிமேல் உங்க வாயில இருந்து சுபாவ பத்தி அவதூறா வந்துதுனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” என்றான்.

 

“நம்ம முன்னாடியே கல்யாணம் பண்ண போறோம்னு சொல்றான். இதுக்கு சுபா அப்பா வேற உடந்தை நம்ம முன்னாடியே என்ன காரியம் பண்ணிட்டு இருந்தாங்க இரண்டு பேரும்” என்றார் சசிகலா அருவருப்பாக.

 

“இனஃப் மா ஸ்டாப் இட் சுபா சம்மதத்தோடு கண்டிப்பா இந்த கல்யாண வேலைலாம் நடந்திருக்காது அன்ட் எனக்கு சுபா மேல நம்பிக்கை இருக்கு அவள் அந்த மாதிரி பொண்ணு இல்லை இந்த ராஸ்கல் தான் ஏதோ பொய் சொல்றான்” என்று அவனை அடிக்க ஆரம்பித்தான் அஸ்வின்.

 

வலி தாங்காமல் உண்மையை உளறினான் ரகு. சபேசன் ரகுவை சுபாவிற்கு மணக்க பேசியது சுபாவிற்கு இதில் விருப்பம் இல்லாதது சுபாவின் பின்னே அவளுக்கு தெரியாமல் வந்து கட்டிப் பிடித்தது அவள் அவனிடம் இருந்து தன்னை காக்க முயற்சித்தது அப்போது தான் சசிகலா கத்தியது வரைக்கும் அவனை துடிதுடிக்க அடித்து உண்மையை வர வைத்தான்.

 

நேராக சபேசனிடம் வந்த அஸ்வின், “வயசுல பெரியவரா போய்ட்டீங்க இல்லை அவனுக்கு விழுந்த அடி பாதி உங்களுக்கும் விழுந்திருக்கும் இனிமேல் சுபாவோட விருப்பம் இல்லாம யாரவாது எதாவது பண்ணீங்கனா கொன்னுடுவேன். அவள் கிட்ட இன்னிக்கு நடந்த விஷயத்தைப் பற்றி யாரும் பேசக் கூடாது லெட்ஸ் ஃபர்கெட் திஸ் நான் சென்னை கிளம்பறேன்” என்று வேகமாக காரை எடுத்துச் சென்று விட்டான்.

 

“உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இது தான் நீ அவனை நம்பல அவன் உன்னை நம்புறான் அஸ்வினுக்கு நீ தகுதியானவள் இல்லை” என்று வார்த்தையால் குத்திச் சென்றுவிட்டார் சசிகலா.

 

துளசியும், தீபிகாவும், ஈஸ்வரியும் அவளை ஆறுதல் படுத்தினர். சுபா யாரிடமும் பேசாமல் அழுதுக் கொண்டே இருந்தாள். அவளின் மனது குத்தியது இன்னிக்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து அஸ்வின் தன்னை நம்புகிறான் என்றால் இவள் தான் இவ்வளவு நாட்களாக அஸ்வினை நம்பவில்லை.

 

தான் அஸ்வினுக்கு தகுதியானவள் இல்லை என்று நினைக்க தொடங்கியது மனது. விழா முடிந்த பின் மனசு கேட்காத தீபிகா சுபாவிடம் பேச வந்தாள்.

 

“இல்லை தீபிகா என்கிட்ட எதுவும் பேசாத நான் யார்கிட்டயும் பேச விரும்பல” என்று வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு சித்விக்கை அழைத்துச் சென்றுவிட்டாள்.

 

ஒரு வாரம் கழிந்தது. ஆனால் சுபா அந்த பிரச்சனையின் பின் சபேசனிடம் பேசுவதை நிறுத்தினாள். அவரால் தான் இப்படி ஒரு நிலைமை வந்தது என்பதை உணர்ந்தாள்

துளசியிடம் மட்டுமே பேசினாள். தான் செய்த தப்பின் வீரியத்தை உணர்ந்த சபேசன் கூனிக்குறுகினார்.

 

ரேவதியிடம் பேச வேண்டும் என்று தோன்றியதால் அவளிடம் கால் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி அழுதாள்.

 

“ஐ அம் சாரி சுபா ஆனால் நீ வாழ்க்கையில பண்ண பெரிய தப்பு எதையும் முழுசா ஆராயலை இப்போதைக்கு கொஞ்ச நாள் எல்லாத்தையும் ஆற விடு டிவி பாரு சாங்ஸ் கேளு” என்று ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. அதற்கு பின் அஸ்வின் சுபாவிற்கு கால் செய்யவில்லை சித்விக்கிடமும் பேசவில்லை.

 

இப்படியே நாட்கள் நகர்ந்தது அன்று சுபாவின் வீட்டிற்கு சுனிதா வந்தாள். அவளைக் கண்ட சுபா தாம் இருக்கிற மனநிலையில் இவள் வேறயா என்று சலிப்பாக அவளை வரவேற்றாள்.

 

“என்னடி அன்னிக்கு அப்படி மூஞ்சே கொடுத்து பேசாம ஓடிப்போய்ட்ட… உன் தங்கை நம்பர் வாங்குனா அப்பறம் பேசவே இல்லை ஒரு டவுட்ல தான் இந்த வீட்டுல இன்னும் இருக்கீங்களானு நினைச்சு வந்தேன் பரவாயில்லை இருக்க” என்று பேசிக்கொண்டிருந்தாள். 

 

இப்படியே பேசிக்கொண்டிருந்த சுனிதா சுபாவின் ஃபோனில் இருக்கும் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் வேண்டா வெறுப்பாய் பேசிக்கொண்டிருந்த சுபா என்னவோ பண்ணட்டும் என்று அமைதியாக இருந்தாள்.

 

ஒவ்வொரு படங்களையும் பார்த்த சுனிதா அடுத்த படத்தில் அஸ்வின் சித்விக்கை தூக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “அஸ்வின் அண்ணாவை உனக்கு தெரியுமா?” என்று கேட்டாள் சுனிதா.

 

“என்னது அண்ணாவா! அவரை அன்னிக்கு லவ் பண்றேனு சொன்ன?” என்று புரியாமல் கேட்டாள் சுபா.

 

“ஆமா அன்னிக்கு நான் லவ் பண்றேனு சொன்னேன். ஆனா அவர்க்கு இது தெரியாதுனு சொல்ல வந்தேன். நீ எங்க பேச விட்ட லூசு மாதிரி வாய மூடுனு சொல்லிட்டு ஓடி போய்ட்ட சரி அன்னிக்கு ஏன் அப்படி பண்ண?” என்று புரியாமல் கேட்டாள் சுனிதா.

 

“சுனிதா ப்ளிஸ் குழப்பாம சொல்லு அன்னிக்கு லவ் பண்றேனு சொன்ன  இன்னிக்கு அண்ணானு சொல்ற” என்று கேட்டாள் சுபா.

 

அஸ்வின் நேஹாவுடைய நண்பர் தன்னுடைய பாதுகாப்பைக் கருதியே அஸ்வினை நேஹா அனுப்பினாள் என்று அனைத்தையும் சொன்னவள்,

“அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்காம் நான் இது தெரியாம லூசு மாதிரி லவ்னு சொல்லிட்டேன்  அவர்கிட்டயே அப்புறம் தான் சொன்னாரு கல்யாணம் ஆனவன் அதுவும் இல்லாமல் என்ன தங்கச்சியா பார்த்ததுனால தான் ஹெல்ப் பண்ணவே வந்தாராம் நல்லா பல்பு வாங்கிட்டேன் அவருகிட்ட. அவரை கல்யாணம் பண்ண அந்த அதிர்ஷ்டசாலி யாரோ?” என்று யோசிக்கும் பாவனையில் சொன்னாள் சுனிதா.

 

“அந்த துரதிஷ்டசாலி நான் தான் அவரை மாதிரி ஒருத்தர புரிஞ்சிக்காம அவரை நம்பாம என்னோட அவசர புத்தியால அவரை இழந்துட்டு நிக்கற துரதிர்ஷ்டசாலி நான்” என்று அழுதாள்.

 

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!