அத்தியாயம் 4
“உடுத்த தான் உடை வாங்கணும் நிஷா, புதுப்புது மாடல் வந்துக்கிட்டே தான் இருக்கும். நம்ம தகுதிக்கு ஏற்றாற் போல் தான் உடை வாங்க முடியும்” என்றார் விஜி மூஞ்சில் அடித்தார் போல.
ஷர்மிக்கு அழுகையே வருவது போல இருந்தது. என்ன தான் இந்த பதில் நிஷாவைத் தாக்கி இருந்தாலும், தான் இந்த இடத்திலும் ஏழை என்பதை மறைமுகமாய் உணர்கிறாள் ஷர்மி.
“வா விஜி…” என்று அப்போது வந்த பிரேமா ஆர்த்தியைப் பார்த்து, “ஏய் ஆர்த்தி, காரட் ஜூஸ் கேட்டுட்டு இங்க என்ன பண்ற? அங்கே விசாலாட்சி பெரியம்மா கிட்ட வாங்கிக்கோ.”
“சரிம்மா” என்று சமையலறைக்குள் ஓடிவிட்டாள் ஆர்த்தி.
“அப்புறம் பிரேமா, எதற்கு சாலா அக்கா வரச் சொன்னாங்க?” என்றார் விஜி.
“இரு இரு, முதலில் காஃபி குடி பொறுமையா பேசலாம்.”
ஷர்மி அங்கு போடப்பட்டிருந்த பெட்டில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்.
“ஹாய் ஷர்மி, எப்படி இருக்க?” என்று வந்தாள் திவ்யா. திவ்யாவுக்கும் ஆர்த்திக்கும் ஒரே வயது.
விஜியின் உடன் பிறந்த சகோதரிகள் மொத்தம் நான்கு பேர். முதல் அக்கா விமலா, தன் மகள் காதல் கல்யாணம் செய்த வருத்தத்தில் மாரடைப்பு வந்து உயர் பிரிந்தது. அதனாலேயே ஷர்மியின் பெற்றோர் நிஷாவைப் பார்த்தாலே இரண்டு அடி பின்னே சென்று விடுவார்கள். ஆனால், இந்த உலகத்தில் தான் பணம் பத்தும் செய்யுமே. நிஷாவின் கணவன் ஜான் சொந்தமாக ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் வைத்திருக்கிறான். அதனாலேயே விஜியின் மற்ற சகோதரிகள் அவர்களை ஏற்றனர்.
நிஷாவும் ஜான் நோயலும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்தனர். இருபது வயதில் நிஷாவிற்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று நினைக்கும்போது வீட்டில் சொல்ல பயந்தவள், எங்கே ஜானையும் தன்னையும் பிரித்துவிடுவார்களோ என்று, இருவரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மணந்தனர். திருமணம் செய்யும் பொழுது இருவருக்குமே வயது இருபது. அவர்கள் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆயிற்று.
ஜானின் குடும்பம் சென்னையிலேயே பெரிய பணக்கார குடும்பம். இந்தியா முழுவதும் இருக்கும், ‘விக்டர் மாலி’ன் உரிமையாளர். விக்டரின் பேரன் தான் இந்த ஜான்.
நிஷாவின் தந்தை ஐய்யநாதனும், மனைவி இறந்த பின் தனக்கென இருந்த தன் ஒரே மகளை ஏற்றார். ஆனால் கண்ணன் மற்றும் விஜி காதலுக்கு எதிர் ஆனவர்கள். அவர்களால் இதை மன்னிக்க முடியவில்லை. ஆனால் நேரில் பார்த்தால் அனைவரின் முன் கடமைக்காக பேசுவார்கள்.
இத்தகைய சமயத்தில் தான் விஜிக்கு கால் செய்து வரச் சொன்னார் அவரின் அக்கா விசாலாட்சி.
விசாலாட்சிக்கு, சதீஷ் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள். சதீஷ் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
ஆர்த்தியின் அம்மா பிரேமா, விஜிக்கு தங்கை. இவருக்கு ஆர்த்தி, விமல் என இரு பிள்ளைகள்.
விஜியின் தந்தை தங்களுடைய மக்களுக்கு நன்றாகத் தான் வரன் பார்த்தார். ஆனால் விஜியின் துரதிர்ஷ்டம், கல்யாணம் ஆன கொஞ்ச நாளில் கண்ணன் நிறைய கடன்பட்டு ஏற்கனவே செய்துக் கொண்டிருந்த காகிதம் தொழிலைக் கைவிட்டுவிட்டு, தன்னுடைய மெக்கானிக் வேலையை மட்டுமே தொடர்ந்தார்.
விஜியின் சகோதரிகள் மூவரும் கல்யாணத்திற்குப் பின் பண பலத்தோடு செட்டில் ஆனார்கள். அவர்கள் கணவன்மார்களும் கண்ணனை ஒரு படி கீழே தான் தள்ளி வைத்திருப்பார்கள்.
அனைவரையும் ஒதுக்கி உறவுகளை இழந்து விடக்கூடாது என்பதால் விஜி எல்லாவற்றிற்கும் அமைதியாகச் சென்று விடுவார். கண்ணன் முக்கால்வாசி இவர்களுடைய குடும்ப விஷயத்தில் தலையிடவே மாட்டார்.
கண்ணனின் தந்தை சிறிய வயதிலேயே இறந்து விட்டதால், தாயின் அரவணைப்பில் வளர்ந்தனர் கண்ணன் மற்றும் அவரின் தம்பி கிருஷ்ணன்.
விஜி தங்களின் குடும்ப சூழ்நிலையைக் கருதி கான்ட்ராக்ட் பேசிஸில் ஐஸ்கீரிம் செய்யும் தொழிற்சாலைக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அதனாலேயே கண்ணனின் அம்மா தம்பியின் வீட்டிலேயே இருந்தார். கிருஷ்ணன், சீதா தம்பதியருக்கு மேகலா என்று பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கிறாள்.
பொதுவாகவே அமைதியான ஷர்மி, அனைவரிடமும் கடிந்து பேச மாட்டாள். யாரையும் துன்புறுத்தவும் மாட்டாள்.
“ஏய் ஷர்மி, ஜானின் தம்பி வின்சென்ட்டிற்கு அடுத்த சனிக்கிழமை பிறந்தநாள். அதனால் பார்ட்டி அரேன்ஜ் பண்றோம். நீ கண்டிப்பா வா, ஆர்த்தி, திவ்யா எல்லாம் வராங்க” என்றாள் நிஷா.
எப்போதும் போல் அமைதியாக தன் அன்னையைப் பார்த்தாள்.
“நிஷா, ஷர்மி அங்கே எல்லாம் வர மாட்டாள்.”
“ஏன் விஜி, உன் பெண்ணை யாரும் கடிச்சு தின்னுட மாட்டாங்க. ஏன் கூடத்தான் நிஷா, ஆர்த்தி, திவ்யா இருக்காங்களே, அப்போது எதுக்கு அவளைப் பொத்தி பொத்தி வைக்குற?” என்று காஃபி எடுத்துக்கொண்டு வந்தார் விசாலாட்சி.
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த விஜி, நிஷா அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்ற பின், “நிஷா மாப்பிள்ளை எங்கே?” என்று கேட்டார்.
“அவர் காரை எடுத்துட்டு வெளியே போயிருக்கார்” என்று பிரேமா கூறியவுடன் விஜி அமைதியாக, “சாலா அக்கா, ஆயிரம் இருந்தாலும் நிஷா மாப்பிள்ளை குடும்பம் வேற, நம்ம வேற. ஷர்மி அங்க போறது எனக்கு உடன்பாடு இல்லை.”
“விஜி அக்கா, லூசு மாதிரி பேசாத. ஜான் பெரிய வசதியான குடும்பம். நம்ம எல்லாம் அவர்கள் கால் தூசிக்குக் கூடப் பெறமாட்டோம். நாங்களே கால் தூசிக்கு இல்லைனா அப்போது நீயெல்லாம் எம்மாத்திரம்” என்று கேலியாகப் பேசினார் பிரேமா.
