அத்தியாயம் 5
நாட்கள் சென்றது சுபா பி.எஸ்.சி முடிக்கும் தருணத்தில் அவளுக்கு கேம்பஸ் பிலேஸ்மேன்ட் வந்தது. அதில் நல்ல கம்பெனிக்கு தேர்வானாள். இந்த சந்தோஷத்தை வீட்டில் பகிர்ந்தாள்.
துளசிக்கு சுபாவை சென்னைக்கு தனியாக வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் சபேசன் சுபாவிற்கு தைரியம் வர வேண்டும் அதனாலேயே இந்த கூட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினார்.
சுபா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போனாள். மதுரைக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வந்தாள். அஸ்வினை அவள் மறந்து கூட விட்டாள். இப்படியே மூன்று வருடங்கள் கழிந்தது. 23 வயது பாவையான சுபா பார்க்க தேவதை போல் இருந்தாள்.
அவளுடைய அலுவலகத்தில் கூட நிறைய ஆண்கள் தங்கள் காதலை அவளிடம் கூறினர். ஆனால் சுபா தன் பெற்றோர்கள் பார்க்கிற மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தாள்.
சுபாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அன்று வெள்ளிக்கிழமை எப்போதும் போல ஆபிஸ் சென்ற சுபா அடுத்த வாரம் தன்னை பெண் பார்க்க வருவதால் சீக்கிரமே வேலையை முடித்து விட்டு மதுரை சென்றாள்.
தன்னை யார் பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூட சுபா தன் பெற்றோர்களிடம் கேட்கவில்லை. பச்சை வண்ண சேலை உடுத்தி தன் நீளமான கூந்தலை பின்னி மதுரையின் சிறப்பான மல்லிகையைச் சூடி தன் மீன் போன்ற கண்களில் மையிட்டு ரதிதேவியைப் போல காட்சியளித்தாள்.
தன் அக்காவின் அழகை ரசித்த தீபிகா சுத்திப் போட்டாள். துளசிக்கு தன்னுடைய மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ண வேண்டும் இந்த காலத்தில் பெண்களுக்கு கணவன் தான் பாதுகாப்பு அதுவும் சுபாவின் அழகும், அமைதியும் பார்ப்போர் அனைவரையும் ஈர்க்கும்.
தீபிகாவும் தன்னுடைய லேயர் கட் ஹேர்ஸ்டைலில் ரெட் வண்ண சல்வார் உடுத்தி அழகாக இருந்தாள். துளசியின் ஆசை தன்னுடைய இரு மகள்களுக்கும் நல்ல சம்மந்தம் அமையவேண்டும். அதற்காகவே நன்றாக மாப்பிள்ளை வீட்டாரை ஆராய்ந்தார்.
காலை பதினொன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் சபேசனின் இல்லத்திற்கு வந்தனர். அனைவருக்கும் காபி கலந்து சுபாவிடம் கொடுத்தார் துளசி.
அதை எடுத்துச் சென்றவள் மாப்பிள்ளையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். ஏனெனில் சுபாவை பொண்ணு பார்க்க வந்தது அரவிந்த் மற்றும் அவனுடைய அம்மா, அப்பா.
அரவிந்த் தான் தன்னை பெண் பார்க்க வந்தது இருப்பதை நினைத்து அதிர்ந்தாள். ஆனால் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் காபி கொடுத்து உள்ளேச் சென்றாள்.
தற்செயலாக சுபா இருக்கும் அறைக்கு வந்த துளசியிடம், “அம்மா அரவிந்த் எப்படி இங்க?” என்று கேட்டாள். அவளுடைய குழப்பங்களை புரிந்துக் கொண்ட துளசி,
“நாங்க சொந்தத்துல பார்க்க வேண்டாம்னு தான் இருந்தோம் சுபி…என்னோட அம்மா, அப்பா இறந்து இதோட இரண்டு வருஷம் ஆகுது அவங்க சாகறதுக்கு முன்னாடி சுபா இந்த வீட்டு மருமகளா ஆகணும்னு சொல்லிருக்காங்க.
அதோட அரவிந்த் மற்றும் என் அண்ணா அண்ணிக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. உன் அப்பா கிட்ட தான் பேசிருக்காங்க. அவருக்கும் அரவிந்த பிடிச்சிருக்கு சொந்தமா பிசினஸ் பண்றான் வசதியான குடும்பம் உன் நல்ல மனசுக்கு நல்ல மாப்பிள்ளை தான்” என்று சொல்லிச் சென்றார்.
சுபாவிற்கு இரண்டு விஷயங்கள் குழப்பமாக இருந்தது ஒன்று அரவிந்தை நல்ல நண்பனாக மட்டும் பார்த்திருந்தாள். இரண்டாவது விஷயம் துளசியின் குடும்பம் அரவிந்த் அவன் தாய் தந்தைக்கு பிடித்திருந்தாலும் வாசுதேவன் மாமா குடும்பத்தினர்க்கு தன்னை பிடிக்காது.
‘நம்ம ரொம்ப யோசிக்காம கடவுள் கிட்ட ஒப்படைச்சிடலாம். அப்பா அம்மா என்ன முடிவு பண்ணாலும் என் நல்லத்துக்கு தான். அதனால இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிடலாம்’ என்று நினைத்தபடி துளசியிடம் தன் சம்மதத்தைச் சொன்னாள்.
அரவிந்தின் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அடுத்த மாதம் நிச்சயத்தை வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். வாசுதேவனின் குடும்பத்தில் அந்த விஷயத்தைக் கூறினர். வாசு மற்றும் சசிகலா பெரிதாக ஏதும் சந்தோஷப் படவில்லை.
அமெரிக்காவில் காலை பத்து மணி ஆனது. தன் அலாரத்தை ஆப் செய்து விட்டு சோம்பல் முறித்தான் அஸ்வின். தன் செல்லில் இன்கமிங் கால் வருவதைப் பார்த்தவன் மேகா கால் என்றதும் அட்டென்ட் செய்தவன், “ஹலோ மேகா குட் மார்னிங்! யா ஷ்யூர் ஆஹ் மீட் பண்ணலாம்” என்று முடித்தான். ஈவ்னிங் நியூ யார்க்கில் இருக்கும் ஒரு காட்டேஜில் மீட் பண்ணினார்கள்.
“சொல்லு மேகா. ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன அதுவும் தனிமையாக இருக்கணும்னு சொன்ன அதான் என் காட்டேஜில பேசலாம்னு முடிவு பண்ணேன்.”
“அஸ்வின் நம்ம இங்க சேர்ந்து படிச்சோம் ஆறு வருஷமா நட்பா இருக்கோம் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு உன்னை விரும்புறேன்” என்றாள்.
இதற்கு மெலிதாக சிரித்தான் அஸ்வின். “சாரி மேகா எனக்கு உன் மேல லவ் வந்ததே இல்லை நீ எனக்கொரு நல்ல பிரெண்ட் உனக்கு நல்ல பையன் வருவான்”
“அட்லீஸ்ட் நம்ம கொஞ்ச நாள் லிவ்வின் டு கெதர்ல இருக்கலாம்” என்றாள் மேகா.
“மேகா ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ என்னோட மனச கவர்ந்த பொண்ணு நீ இல்ல அவள இன்னும் நான் என் வாழ்க்கைல பார்க்கல. என்னோட காதலி தான் என்னோட மனைவி என்னோட மனைவிக்கு மட்டும் தான் இந்த அஸ்வின். நீ என் பிரண்ட்ங்கிறனால சும்மா விடறேன். இதுவே வேற யாராவது இருந்தா என் கை தான் பேசும் அதனால நம்ம இதுக்கு அப்பறம் மீட் பண்ணாம இருக்கறதே நல்லது குட் பை” என்று கிளம்பினான்.
ஏ.கே. கார்ஸ் உலகிலேயே தரமான கார்களை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்வின் தன்னுடைய 22 வயதில் அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக வந்தவன் தன் படிப்பு முடிந்தவுடன் தன் தந்தையின் தொழிலைத் தொடராமல் தானாகவே கார்கள் உற்பத்தி செய்து படிப்படியாக நான்கு வருடம் கழித்து உலகிலேயே தரமான கார்களை உருவாக்கினான்.
இதன் கிளைகளை ஒவ்வொரு நாடாக விரிவு படுத்தினான். இந்தியாவில் நிறைய கிளைகளைத் திறந்து வெற்றியைக் கண்டான்.
தன்னுடைய பி.ஏ. ஃபெட்ரிக்கை அழைத்து, “ஃபெட் நான் இன்னும் டென் டேஸ் ல இந்தியா போறேன். அதுக்கு அப்பறம் இந்த கம்பெனியை நீ பார்த்துக்கோ.” என்றான். (அஸ்வின் ஆங்கிலத்தில் சொல்வது தமிழில்…)
“ஓகே அஷ் பட் ஒய்?” என்றான்.
“பிகாஸ் அங்க இருந்து தானே வந்தேன். அதான் திரும்ப அங்க போறேன்” என்றான். ஃபெட்ரிக் அஸ்வினிடம் மூன்று வருடமாக பணிபுரிகிறான் மிகவும் நேர்மையானவன் அதனாலேயே அஸ்வினுக்கு மிகவும் பிடிக்கும்.
அஸ்வின் ஃபெட்ரிக்கிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இந்தியா செல்ல புறப்பட்டான்.
அஸ்வின் ஏர்ப்போர்ட் சென்று தன் தந்தைக்கு கால் பண்ணி, “அப்பா உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நான் இந்தியாவிற்கு வருகிறேன் அதுவும் இனிமேல் அங்க தான் இருக்க போறேன் இப்போ ஏர்ப்போர்ட்ல தான் இருக்கேன். இன்னும் மூன்று மணி நேரத்தில் ஃபிளைட் ஸ்டார்ட் ஆகிடும் சென்னைல இன்னும் இருபது மணிநேரத்துல இருப்பேன் பை” என்று வைத்துவிட்டான்.
அரவிந்த்திற்கு திடீரென்று சிங்கப்பூர் பிரான்ச்சில் இருந்து கால் வந்தது அங்கு தொழிலாளர்கள் பிரச்சனை நடப்பதால் வேலை நிமிர்த்தம் நடக்கிறது. அரவிந்துடையது பினான்ஸ் பிஸினஸ் அவன் பொறுப்பாக தான் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு மடங்கு போனஸ் கேட்டு பிரச்சனை செய்வதால் அரவிந்தே நேராக செல்வதாய் இருந்தான். நாளையே புறப்பட வேண்டும் என்று தன் வீட்டில் சொன்னான் அவன் சென்று திரும்பி வர இருமாதங்கள் ஆகலாம் என்றான்.
அடுத்த மாதம் நிச்சயத்தை வைத்து விட்டு அரவிந்த் இப்படி சொல்வது அவன் வீட்டில் இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்கியது. துளசிக்கு போன் போட்ட பாபு, “அரவிந்த் நாளை சிங்கப்பூர் செல்வதால் நிச்சயத்தை நாளை வீட்டிலேயே சின்னதாக வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்.
சுபா அன்று சென்னையில் இருந்து வரும் போதே இரண்டு வாரம் விடுமுறை சொல்லித்தான் வந்தாள் தன் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
துளசி சபேசனிடம் பாபு சொன்னதை தெரிவித்தார். அவருக்கு ஏன் இந்த அவசரம் என்று தோன்றியது. ஆனாலும் இப்போது நாம் பொண்ணு வீட்டுக்காரங்க அதனால் அவங்க சூழ்நிலையையும் புரிஞ்சிக்க வேண்டும் என்று ஒப்புதலை சொன்னார்.
அடுத்த நாள் மாலை ஃபிளைட் என்பதால் காலையிலையே நல்ல நேரமாய் பார்த்து நிச்சயத்தை பாபுவின் மதுரை இல்லத்தில் வைத்தனர். வாசு சசிகலாவிடம் இதைப்பற்றிக் கூறினார்கள் அவர்களுக்கும் இதான் சரி என்று தோன்றியது.
நிச்சயதார்த்தம் திடீரென முன்னாடியே நடப்பதால் ஏற்கனவே தன்னிடம் இருக்கும் நல்ல பட்டுப்புடவையை அணிந்துக் கொண்டாள் சுபா. அரக்கு நிறத்தில் பட்டுப்புடவையை உடுத்தி பார்க்க மகாலட்சுமி போல் இருந்தாள். அனைவரும் அரவிந்தின் இல்லத்திற்குச் சென்றனர்.
மாளவிகா மற்றும் அவளுடைய கணவன் சொந்தக்காரர் வீட்டிற்காக தேனி வந்திருந்தனர். தீடிரென்று அரவிந்த், சுபா நிச்சயதார்த்தம் முன்னாடியே நடப்பதால் வாசுதேவனால் வரமுடியவில்லை அதனால் மகளையும் மருமகனையும் செல்லச் சொன்னார்.
பாபு, ஈஸ்வரியும் அவர்களுக்கு கால் செய்து அழைத்தனர். அதனால் அவர்களும் சென்றிருந்தார்கள்.
தீடிரென்று நடப்பதால் சொந்தக்காரர்கள் யாரும் பெரிதாக இல்லாமல் இருவர் குடும்பத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது. அரவிந்த் சுபாவிடம் தனியாக பேச கேட்டுச் சென்றான்.
”ஏன் சுபா சரியா பேச மாட்ற? நம்ம பிரெண்ட்ஸா தான இருந்தோம் அப்போ ஏன் இப்படி இருக்க?” என்றான்.
“உன் கேள்வியிலேயே பதில் இருக்கு அரவிந்த் நான் உன்ன இதுவரைக்கும் பிரெண்டா மட்டும் தான் பார்த்திருக்கேன். அதான் நமக்கு கல்யாணம்னு இன்னும் மனசு ஒத்துக்க நேரம் எடுக்குது. ஆனா நீ கவலைபடாத உனக்கு நான் கண்டிப்பா நல்ல மனைவியா இருப்பேன்” என்று சிரித்தாள்.
“பாத்து போய்ட்டு வா ஹேவ் ஏ சேஃப் டிராவல்” என்றாள்.
