அத்தியாயம் 6
அரவிந்த சிங்கப்பூர் சென்றவுடன் நிச்சயம் முடிந்த கையோடு சுபா சென்னை செல்ல திங்க்ஸ் பேக் பண்ணினாள். துளசியும் தீபிகாவும், “அவள் இன்னிக்கே போகணுமா?” என்று கேட்டனர்.
“நிறைய வேலை இருக்கு மா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும். அரவிந்த் கல்யாணம் அப்பறம் அவரோட சென்னை பிரான்ஞ்ச பார்த்துக்கப் போறதா சொன்னாரு. அதனால என் வேலைக்கு பிரச்சனை இல்ல” என்றாள்.
சபேசனிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் சுபா கிளம்பும் போது துளசி, “எனக்கு என்னமோ மனசு படபடவென்று அடிக்குது சுபிக்குட்டி பேசாம கல்யாணம் வரைக்கும் எங்கயும் போகாம இரேன்” என்றார்.
“சுபா நீ கிளம்பு உன் அம்மா பயத்துக்கு அளவே இல்லாம போச்சு. நீ நிம்மதியா போ” என்றார்.
துளசியின் பரிதவிப்பை உணர்ந்த சுபா, “துளசிம்மா ஏன் கவலைப்படுறீங்க? நான் என் ஆபிஸ் அப்பறம் ஹாஸ்டல் இத விட்டு எங்கயும் போக மாட்டேன். கவலைப்படாம இருங்க” என்று தைரியம் சொன்னாள்.
ஃபிளைட்டில் தன் பயணத்தை தொடர்ந்த அஸ்வினுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. சுபாவை கண்காணிப்பதற்காக ஒரு ஸ்பையை அஸ்வின் வைத்திருந்தான். சுபா சென்னையில் வேலை பார்க்கும் இடம் வரை அஸ்வினிற்கு அந்த ஸ்பை தெரிவித்திருந்தான்.
தற்போது அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி மற்றும் ஒரு புகைப்படம் வந்திருந்தது. அந்த குறுஞ்செய்தி “சுபாவிற்கும் உங்களுடைய சித்தப்பா மகனிற்கும் இன்று திருமணம் நிச்சயமாகிவிட்டது” சுபாவும் அரவிந்தும் மாடியிலிருந்து பேசினதை அவன் ஸ்பை புகைப்படமாக எடுத்து அஸ்வினுக்கு அனுப்பி இருந்தான். அதைப் பார்த்தவன், “டேம் இட்” என்று உறுமினான்.
‘எப்படி டி நீ என்ன கெட்டவன் மாதிரி என் தாத்தா, பாட்டி கிட்ட காட்டிட்டு என்னையே வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டு என்னோட தாத்தா, பாட்டி உயிர் பிரியிற வரை என் கூட அவங்க பேசல இதுக்குலாம் காரணம் ஆன நீ சந்தோஷமா அரவிந்த் கூட நிச்சயதார்த்தம் முடிச்சுட்டு சுத்திட்டு இருக்க. விட மாட்டேன் உன்ன பலி தீர்க்காமல் விட மாட்டேன். இந்த அஸ்வின் இருக்கறதே மறந்து போச்சு போல வரேன் டி உன்ன எப்படி சித்தரவதை படுத்துறேனு பாரு’ என்று கொடூரன் போல யோசித்தான்.
அஸ்வின் சென்னை வந்தடைந்தான். அவனை வரவேற்க வாசுதேவன் மற்றும் சசிகலா ஏர்ப்போர்ட் வந்திருந்தனர். அஸ்வினை பார்த்ததும் சசிகலாவிற்கு கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்தது.
“அமெரிக்கா படிக்க போனியேடா அப்படியே அம்மா, அப்பா, தங்கச்சிய மறந்துட்டியா? எல்லாரும் நாலு வருஷமா தவிச்சுப் போயிட்டோம். உன் தாத்தா, பாட்டி இறந்ததுக்குக் கூட வரலியே டா நீ” என்று அழுகையில் முடித்தார் சசிகலா.
“நா வந்திருந்தா அவங்க ஆத்மா நிம்மதி அடைஞ்சிருக்காதுலமா இந்த உலகத்துலேயே நான் ரொம்ப விரும்பியது என் தாத்தா பாட்டிய அவங்களுக்கே என்ன பிடிக்காம போச்சு. அவங்க பிரிவு என்னை எவ்வளவு பாதிச்சிருக்குனு எனக்கு மட்டும் தான் தெரியும் அதனால நீங்க இத பத்தி பேசாதீங்க” என்றான்.
”அப்படி என்ன தான் அஸ்வின் மதுரையில நடந்தது அன்னிக்கு மாளவிகா கிட்ட கூட சொல்லாம கிளம்பி வந்துட்ட. உன் தாத்தா, பாட்டி கிட்ட கேட்ட போது அவன் எங்கள இனிமேல் இங்க பார்க்க வர கூடாதுன்னு
சொல்லிட்டாங்க. நீ அப்பவும் எங்க கிட்ட சொல்லல இப்பவாவது சொல்லு” என்றார் அவனுடைய அம்மா.
“அம்மா இது உங்களுக்கு சம்மந்தம் இல்லாத விஷயம் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா சொல்லுங்க நான் வீட்டுக்கு வரல” என்றான்.
”ஐயோ கண்ணா நீ வந்ததே அதிசயமா இருக்கு தெரியாம கேட்டுட்டேன். அங்க பார்க்கிங்ல அப்பா வெயிட் பண்றாங்க போலாம்” என்றார்.
“ஹலோ மை டியர் சன்! தி கிரேட் அஷ்வின் குமார் 27 வயசுல நீ சாதிச்சிட்டடா ஐ அம் சோ ப்ரௌட் ஆஃப் யூ” என்று அணைத்துக் கொண்டார.
”தாங்க்யூ டாட்” என்றான். மூவரும் காரில் ஏறி திருவான்மியூரில் இருக்கும் தங்களின் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
“ஏய் அஸ்வின் அரவிந்த் என்கேஜ்ட்மென்ட் நேத்து அவசரமா நடந்தது அதனால உன் கிட்ட சொல்ல முடியல பொண்ணு யாருன்னு தெரியுமா? துளசியோட பொண்ணு சுபா.”
“உன் பாட்டி தாத்தா ரொம்ப இணை பிரியாம இருந்ததுனால உன் தாத்தா இறந்து கொஞ்ச நேரத்துலயே பாட்டியும் இறந்துட்டாங்க அவங்க நம்மளோட தெய்வம். அவங்க சாகறதுக்கு முன்னாடி சொன்ன விஷயம்,
“துளசியோட மகள் சுபா இந்த வீட்டு மருமகளா ஆகணும் அஸ்வினுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டு இறந்துட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல அந்த சுபா நல்ல பொண்ணு தான் ஆனால் என்னமோ எனக்கு அந்த பொண்ண முதல்ல இருந்தே எனக்கு பிடிக்காது.”
“ஆனா அம்மா அப்பா கடைசி ஆசையாய் சொன்னத நிறைவேற்றணுமேனு குழப்பமா இருந்தது. அப்பதான் உன் சித்தப்பா, சித்தி சுபாவை அரவிந்த்க்கு கல்யாணம் பண்ணலாம்னு என்கிட்ட கேட்டாங்க. அப்பா, அம்மா கடைசி ஆசை இந்த வீட்டு மருமகளா வரணும்னு அஸ்வின்க்கு நீங்க சுபாவை கேட்க யோசிப்பீங்க அதனால அரவிந்த் கல்யாணம் பண்ணிக்கட்டும் சொன்னாங்க.”
“எனக்கும் அதே கரெக்ட்னு தோணுச்சு இப்போ நிச்சயதார்த்தமும் நல்லபடியா முடிஞ்சிது. அரவிந்த் சிங்கப்பூர்ல இருக்கான். திரும்பி வர இரண்டு மாசம் ஆகும் அதுக்குள்ள நல்ல படியா முடிஞ்சுது அதுவே போதும்” என்றார்.
“அந்த பொண்ணு பார்க்க அவ்வளவு அழகா இருக்கா அரவிந்த் ரொம்ப குடுத்து வெச்சவன் நியாயமா நம்ம வீட்டு மருமகளா ஆகணும் நாம தான் மிஸ் பண்ணிட்டோம்” என்று நாக்கை கடித்துக்கொண்டார் சசிகலா.
“சசி வாய மூடு” என்றார் வாசுதேவன்.
தன்னுடைய செல்போனைப் பார்த்த வாறே அனைத்து உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்தான் அஸ்வின். திருவான்மியூரில் இருக்கும் தங்களுடைய வீட்டை அடைந்தார்கள்.
நியூ பீச் ரோட்டில் இருக்கும் தங்களுடைய வீட்டின் முன் கார் இருந்தது. வாசுதேவன் சென்னை வந்த கால கட்டத்திலேயே திருவான்மியூரில் வீடு வாங்கினார். அதை அஸ்வினுக்கு பிடித்த மாதிரியே வடிவமைத்தார்.
வழியெங்கும் மரங்கள் வீட்டின் முன் தோட்டம் வீடே மாளிகை மாதிரி இருக்கும். அஸ்வின் உள்ளே சென்றதும், “மாம் நான் தூங்கப் போறேன் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று தன் அறைக்குச் சென்று விட்டான்.
சிங்கப்பூரிலிருந்து அரவிந்த் சுபாவிற்கு கால் செய்தான். இரண்டு வாரம் லீவில் இருந்ததால் சுபாவிற்கு வேலை அதிகமாக இருந்தது. எனவே ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வரவே மணி ஒன்பதைத் தாண்டியது. அதனால் வந்தவுடன் முகம்,கை, கால் கழுவி அலுப்பில் உறங்கிவிட்டாள்.
சுபா தன்னுடைய காலை எடுக்காததால் அரவிந்திற்கு மனதில் குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை தன்னை சுபாவிற்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்தான். பின் சுபா எதாவது வேலையில் இருப்பாள் என்று மனதை சமாதானம் படுத்திக்கொண்டான்.
அடுத்த நாள் தூங்கி எழுந்த சுபா தனது மொபைலைப் பார்த்தாள் அரவிந்த்தின் மிஸ்ஸூடு காலைப் பார்த்து கால் செய்தாள் அச்சமயம் பார்த்து அரவிந்த் தூங்கி இருந்ததால் அவன் அவளுடைய போனை எடுக்கவில்லை.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சுபா அலுவலகத்திற்கு சேலையில் சென்றாள். அடர்பச்சை நிறத்தில் ஒரு கைத்தறி சேலையை அணிந்து மிகவும் எளிமையாக அழகாகச் சென்றாள்.
யூகேசி குளோபல் சர்வீஸஸ் முன் அஸ்வினின் ஆடி கார் நின்றது. அவன் வருவான் என்று முன்பே அந்த கம்பெனியின் எச்ஆர்டி டிபார்ட்மென்ட்க்கு தெரிவித்ததால் அவனை வரவேற்க அனைவரும் வாசலில் காத்திருந்தனர்.
அஸ்வினை கண்ட அனைவரும் அவன் ஆண்மைத் தனமான அழகைக் கண்டு அவனையே ரசித்துக் கொண்டிருந்தனர். ஆறு அடி உயரத்தில் சிக்கான உடலமைப்பில் அவனுடைய வடிவத்தை கண்ட அனைவரும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அஸ்வினுடைய பிரெண்ட் ராகுல் கம்பெனி ஆன யூகேசியில் தான் சுபா பணிபுரிகிறாள். இதனை அறிந்த அஸ்வின் சுபாவின் நடவடிக்கைகளை அவனுடைய பிரெண்ட் ராகுலிடம் எப்போதாவது விசாரிப்பான். சுபாவின் மற்ற விவரங்களை ஒரு ஸ்பையை வைத்து அறிந்துக் கொண்டான்.
