அனல் 2
Nibhuna Fashion Designing என்கிற படாதகை தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது…
இங்கு வந்து இருக்கும் பெண்கள் ஆண்கள் கூட உயர்தர மக்களா பார்க்கவே படு ஸ்டைலாக அழகாக இருந்தார்கள்… அவளைத் தவிர…
அவள் முத்துமாரி… திறமையால் மட்டுமே இந்த இளம் வயதில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நிபுனாவின் அசிஸ்டெண்ட்டாக இருக்கிறாள்…
அங்கு நிபுனாவை சந்திக்க வர பிரபலங்கள் ஏராளம்…
ஏன் அங்கு நிபுனாவிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களும் அதிகம்… அனைவருமே கன கச்சிதமாக தங்களை அழகு படுத்தக் கொண்டு தான் வருவார்கள்…
முத்துமாரியோ உடையில் மட்டுமே கச்சிதம்… முகத்தில் எந்தவொரு செயற்கை தனத்தையும் செய்ய மாட்டாள்…
ஒரு சின்ன கல் பொட்டு, காதுக்கு சின்ன கம்மல், கழுத்தில் மெலிசான சயின் அவ்வளவு தான்…
“ஏய் முத்துமாரி இந்த இன்டஸ்ட்ரி வந்து உன் பெயரை மாத்தாம இருக்க?”,
“கொஞ்சமாவது மேக்கப் பண்ணா தான் இங்க வேலை பார்க்கவே ஒரு மரியாதை வரும்… பெரிய ஆளுங்க வர இடம் இது” என இவளுடன் வேலைப் பார்க்கும் பலர் கேட்டும் விட்டாச்சு…
ஏன் நிபுனா கூட ஒரு முறை கறாராக சொன்னார்… கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் பெண்.. ஆனால் பின் இருபது போல தோற்றம் கொடுப்பார்… உடலை கட்டுக்கோப்பாகவும், முகத்தை அழகாக அலங்காரம் செய்து இருப்பார்… உடை வடிவமைப்பாளர் என்பதால் உடைகளில் நேர்த்தியை பற்றி சொல்லவே வேண்டாம்…
“லுக் முத்துமாரி இங்க வரது எல்லாமே பெரிய பெரிய செலிபிரேட்டீஸ்… நீ இந்த மாதிரி மேக் அப் பிரெசென்ஸ் இல்லாம வரது இனி இருக்க கூடாது” என அவர் கறாராக சொல்லிருக்க,
“அப்போ எனக்கு இந்த வேலையே வேண்டாம் மேடம்” என அப்போதே யோசிக்காது பட்டென்று சொன்னாள் முத்துமாரி…
****
பிரியா ஏற்பாடு செய்துருந்த ஆள் மகேஷிற்கு எதிரில் கண்ணில் படும் படி தான் நின்றுருந்தான்…
பிரியா சொன்னது நம்பும் படி இருந்ததால் அமைதியாக விட்ட மகேஷ், “இட்ஸ் ஓகே… லவ் டார்ச்சர் பண்றான்னா அவனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுங்க பிரியா” என்றவனிடம்,
“எங்களை போல மிடில் கிளாஸ் பொண்ணுங்க போலீஸ் ஸ்டேஷன் படி ஏறுனா எதுக்கு இத்தனை வம்புன்னு வீட்டுலயே முடக்கி போட்டுடுவாங்க சார்… சாரி” என்றவளோ முத்துமாரியை பார்க்க,
அவளும்,”சாரி சார்” என அசடு வழிய சிரித்தாள்…
அதுவரை பிரியாவை மகேஷ் கூர்ந்து பார்த்ததில்லை தான்…
ஆனால் இன்று அவள் போட்ட பிளானால் அவளை உற்று நோக்கி பார்த்தவன் அவளின் அழகில் சொக்கித் தான் போனான்…
அதன் பின்னர் கல்லூரியில் அவனின் கண்கள் அவ்வப்போது பிரியாவைத் தேட, பிரியாவும் வேண்டும் என்றே அவனின் முன்னே திரிவது என இருந்தாள்…
ஆனாலும் மகேஷ் காதலில் விழவில்லை… அவனின் வீட்டில் அவனுக்கு கோடீஸ்வர வீட்டில் பெண் பார்க்கிறார்கள்…
கண்டிப்பாக பிரியாவை ஏற்கொற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்று அவனுக்கு தெரியும்…
அதனாலேயே அவள் பால் சாயும் பார்வைகளை அடக்கத் தொடங்கினான்…
அவ்வப்போது தன்னை பார்க்கும் மகேஷை உணர்ந்த பிரியாவிற்கு மனதில் அத்தனை வெற்றி… ஆனால் திடீரென்று அவனின் பார்வை தன் மீது இல்லாமல் இருக்க, பயந்தே விட்டாள் பெண்…
அவளும் முத்துமாரியும் சென்னையில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தான் அதில் வாழ்கிறார்கள்… வாரக் கடைசியில் காஞ்சிபுரம் செல்வார்கள்…
“அக்கா ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்து இருக்க” என சோகமாக அமர்ந்திருந்த பிரியாவை பார்த்து கேட்டாள் முத்துமாரி.
“இந்த மகேஷ் இப்போ எல்லாம் என்னை பார்க்கவே மாட்டிங்குறாரு முத்து” என சொன்னவளிடம்,
“இந்த வேலையை எல்லாம் விடுக்கா… உன் அழகுக்கு நம்ம வீட்லயே நல்ல மாப்பிள்ளையா பாப்பாங்க..” என சொல்ல,
“கிழிப்பாங்க… அப்பா போல காஞ்சிபுரத்துல டீ கடை, இட்லி கடை வைச்சிருக்குறவன் தலையில கட்டிடுவாங்க…” என்றாள் பிரியா கோபமாக.
“பின்னே நம்ம என்ன கோடீஸ்வர வீட்டு பொண்ணுங்களா” என முத்து நியாயமாக கேட்க,
“கோடீஸ்வர வீட்டு பொண்ணா இல்லன்னா என்ன… கோடீஸ்வர பையனை கட்டணும்” என்றாள் தீர்மானமாக.
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது க்கா..என்னம்மோ பண்ணு” என்று சமைக்க சென்றுவிட்டாள்.
பொறுத்து பொறுத்து பார்த்த பிரியாவிற்கு தொடர்ந்து கிடைத்தது எல்லாம் ஏமாற்றம் மட்டும் தான்… மகேஷ் அவளை சுத்தமாகவே கண்டுக்கொள்ளவில்லை..
அதனால் அவளாகவே ஒரு நாள் மகேஷின் கேபினிற்கு சென்றாள்…
“நான் உங்களை கூப்பிடவே இல்லையே” என புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம்,
“நான் உங்களை காதலிக்குறேன் சார்.. என் தகுதிக்கும் உங்களுக்கும் கொஞ்சம் கூட ஏணி வைச்சாலும் எட்டாது… ஆனால் என் காதலை சொல்லாம இருக்க முடியல… உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்குறேன்… ஆனா அது நடக்காதுன்னு என் மரமண்டைக்கு ஏற மாட்டிங்குது..”
“அடுத்து உங்களுக்கு கல்யாணம் ஆகும்… உங்க வைஃப் இங்க வருவாங்க.. உங்க ரெண்டு பேரையும் ஜோடியா பாக்குற அளவுக்கு என் உடம்புலயும் மனசுலயும் திராணி இல்லங்க… இது என்னோட ரெசிக்னேஷன் லெட்டர்…ஒரு மாசம் நோட்டீஸ் பீரியட் செர்வ் பண்ணிட்டு நான் கிளம்பிடுறேன்” என வேகமாக சொல்லி முடித்தாள்.
மகேஷை அவளுக்கு பிடித்து தான் இருக்கிறது… அவன் பணக்காரன் என்பது அவளுக்கு முக்கியமான காரணம் தான் ஆனால் முதன்மையான காரணம் தான் ஆனால் அது மட்டுமே அவளுக்கு முழுக்காரணம் கிடையாது…
அவனின் தோற்றம், கம்பீரம், அழகு என அத்தனையும் அவளை ஈர்த்தது…
மகேஷை போல சிலரை வசதி படைத்தவராக கண்டிருக்கிறாள் தான்…
ஆனால் மகேஷின் மீது மட்டுமே காதல் ஆசை வந்தது…
அவனைத் திருமணம் செய்ய தீராத ஆசை கொண்டு இருக்கிறாள்…
இப்போது அவள் செய்ததில் பாதி உண்மை பாதி நடிப்பு தான்…
ஆம், அவளுக்கு மகேஷ் வேண்டும்… இத்தனை நாட்கள் அவனை நினைத்து நினைத்து அவன் மீது ஒரு பகை பித்து பிடித்துவிட்டது பெண்ணவளுக்கு…
அவன் இல்லாமல் அவளால் இங்கு வேலை பார்க்க முடியாது… அந்த திடம் அவளுக்கு இல்லை…
ஒரு வேளை இவளின் இந்த முடிவால் மகேஷ் தன்னை ஏற்றுக் கொள்ளக் கூட வாய்ப்பு இருக்கிறதாய் அவள் நினைக்க, அவளின் நினைவு எல்லாமே உண்மையாக நடந்தது..
அவள் அன்று சொல்லிவிட்டு சென்றபோது கூட மகேஷ் எதுவும் பேசாமல் தான் இருந்தான்..
தன் மீது ஒரு பெண்ணுக்கு இத்தனை பித்தா என்று தான் அவனுக்கு பிரமிப்பாக யோசிக்க தோன்றியது…
அவனின் பணபலம் தான் இதற்கு எல்லாம் அஸ்திவாரம், அடித்தளம் என்கிற ரீதியில் அவன் யோசிக்கவில்லை…
அன்று அவள் அவ்வாறு சொல்லிவிட்டு சென்ற பின்னர் வேண்டும் என்றே அவனின் கண்களில் படாமல் இருந்தாள் பிரியா…
அது இன்னுமே மகேஷை பாதித்தது…
அதனின் விளைவு… ஒரு முடிவெடுத்தவனாக பிரியாவை தன் கேபினிற்கு அழைத்தான்… தன் காதலை சொல்ல…
கரும்பு திண்ண பிரியாவிற்கு கசக்குமா என்ன???
அவ்வாறு தான் அவர்களின் காதல் வாழ்க்கை இனிதாக ஆரம்பம் ஆனது…
பிரியாவிடம் தன் காதலை சொல்ல முடிவெடுத்த போதே தன் வீட்டினரை எப்படியாவது சமாளிக்க வேண்டியது தன் பொறுப்பு என ஏற்றுக் கொண்டான்…
இப்படி அவர்கள் காதல் வாழ்க்கை சென்றுக் கொண்டு இருக்கையில் தான் தன் தோழி ஒருவளிடம் மகேஷின் புகைப்படத்தை காட்டி தன் காதலனை பற்றி பெருமை அடித்தாள் பிரியா.
“உன் ஆளு செம ஸ்மார்ட் தான் டி… ஆனா இந்த மாதிரி பணக்கார பசங்களை எல்லாம் நம்பக் கூடாது… கல்யாணம் ன்னு வரும் போது நீ எவ்வளவு பெரிய அழகியா இருந்தாலும் கழட்டி விட்டுடுவாங்க” என சொல்லிவிட, ஆடிப்போய் விட்டாள் பிரியா…
அதன் பின்னர் தான் ஆழமாக யோசிக்கத் தொடங்கினாள்.
எப்படியாவது மகேஷின் கையால் தனக்கு தாலி ஏற வேண்டும் என ரொம்ப நேரமாக யோசித்தவள் மகேஷிடம்,”மகேஷ் எங்க வீட்டுல என்னை என் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க…” என இல்லாத மாமாவை இழுத்து விட்டவள்,
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மகேஷ்… பேசாம நம்ம ரெண்டு பேரூம் இப்போதைக்கு கோவில்ல சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம்” என அழ, அவளை அவ்வளவு ஆறுதல் படுத்தினான் மகேஷ்…
ஆனாலும் இவள் விடவில்லை… கெஞ்சினாள், அழுதாள், சண்டை போட்டு பேசாமல் இருக்க தொடங்கிவிட்டாள்…
இங்கு மகேஷ்ஷோ பெண்ணவள் மீது காதல் வயப்பட்டதில் இருந்து அவள் மீது பித்தாகி விட்டான்…
அவளை அவ்வப்போது அழைத்து தன் கேபினில் கொடுக்கும் காதல் முத்தங்கள் இப்போது மொத்தமாக இல்லாமல் போகி இருக்க… அவளின் மீது இருந்த காதல், ஆசை, மோகம், ஏக்கம் எல்லாம் ஆணவனை உறங்கவிடவே இல்லை…
ஆனால் தன் பிடியில் இருந்து பிரியா சற்றும் இறங்கி வரவில்லை…
ஆதலால் மகேஷ் பிரியாவை கோவிலில் திருமணம் புரிய ஒத்துக்கொண்டு அதை நடத்தியும் முடித்தான்…
இப்போது தான் பிரியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது…
ஆனால் ஆணவனுக்கு தான் நிம்மதி இல்லை…
பிரியாவின் கழுத்தில் தாலி கட்டிய நொடியில் இருந்து அவளை தன் மனைவியாக பார்க்க தொடங்கிய மகேஷ், அவளிடம் தன் முழு ஆசையை காட்ட துடிக்கிறான்…
அவ்வப்போது அவளை கேபினுக்கு அழைத்து அவளிடம் காதல் கலந்த காம சில்மிஷங்களை கொடுக்கிறான்…
ஏனோ முறைப்படி அனைவரின் முன் தன் கழுத்தில் தாலி ஏறும் வரை பிரியாவின் பெண்மை இதற்கெல்லாம் தடங்கல் போட்டது..
“இப்போ உன் வீட்டுல உன் மாமா கூட உன்னைக் கல்யாணம் பண்ற விஷயத்தை பேசலயா” என மகேஷ் எதார்த்தமாக கேட்க ஜெர்க்காகி விட்ட பிரியா எப்படியோ சமாளித்தாள்..
இதோ இன்று அவளை கேபினிக்கு அழைத்து சற்று நேரம் செல்ல அரட்டை இட்டவனுக்கு வீட்டில் இருந்து அவசரமாக கால் வர, “வீட்டுல இருந்து அம்மா உடனே வர சொல்றாங்க பிரியா.. நான் போயிட்டு வந்திடுறேன்” என கிளம்பியவன் திரும்பி வரும் போது இவளின் தலையில் பெரிய குண்டை போடுவான் என பிரியா எதிர்ப்பார்க்கவில்லை… இதை மகேஷ்ஷும் எதிர்ப்பார்த்து இருந்துருக்க மாட்டான்…
தன் வீட்டிற்கு காரில் விரைந்து வந்தான் மகேஷ்…
“மகேஷ் சீக்கிரம் வீட்டுக்கு வாப்பா” என காயத்ரியின் பதற்றமான குரல் தான் அதற்கு காரணம்..
பிரியா மற்றும் முத்துமாரி பவித்ராவிடம் நியாயமாக நடந்தது இல்லை.. அதற்கு காரணம் அவளின் அம்மா மீனாட்சியும், சிவகாமி பாட்டியும் தான்…
“இவளுக்கு பாவம் பாத்தா இவ நம்ம தலையில ஏறி உட்கார்ந்திடுவா” என மீனாட்சியும்,
“நம்ம ஜனத்துல பிறந்தவ இல்லை இவ… இவ அம்மா அந்தக் காலத்துலயே திருடுனவ.. இ@துங்க எல்லாத்தையும் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்” என சிவகாமி பேத்திகளின் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்க, பாவம் பிள்ளைகளுக்கும் அது தானே மனதில் ஆழமாக பதியும்…
அதிலும் முத்துமாரி பவித்ராவை தாண்டி அனைவரிடமும் மிகவும் நியாயம், நேர்மையான பெண்…
ஆனால் பிரியா சுயநலமாக இருப்பாள்…
அப்படித் தான் அன்று,
Nibhuna Fashion Designing இல்
நிபுனா அவ்வாறு கறாராக சொல்ல தன்னால் அவ்வாறு எல்லாம் மேக்கப் அணிய முடியாது… அதற்கு தான் இந்த வேலையை விட்டுச் செல்கிறேன் என்று சொன்னவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நிபுனா…
இப்படி ஒரு வாய்ப்பை தவறவிடும் இப்பெண் முட்டாள் என்று ஒருப்பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் முத்துமாரியின் திறமை தான் அவளை இங்கே நிபுனா ஃபேஷன் டிசைனிங்கிற்கு கொண்டு வந்தது…
இரண்டு வருடங்கள் முன்னர் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு ஒரு ஸ்டார்ட் அப் பேஷன் டிசைனரான திவ்யாவிடம் பணிபுரிந்துக் கொண்டு இருந்தாள் நிபுனா..
அன்று ஒரு ஷோ நடந்தது…
திவ்யாவும் அதில் கலந்துக் கொண்டாள்… அதற்கு முத்துமாரியும் சென்றுருந்தாள் தான்… அன்று முத்துமாரிக்கு ஒரு டெஸ்ட் போல திவ்யா முத்துமாரியை தான் வடிவமைக்க சொல்லி இருந்தாள்..
அதன் படி முத்துமாரியும் செய்துருக்க, அன்று திவ்யாவின் டீம் தான் வென்றது…
அன்று ஜட்ஜாக வந்தது நிபுனா தான்…
நிபுனாவின் தகுதிக்கு அவர் அங்கு வருவதாய் இல்லை… ஆனால் இதை நடத்துவது அவளின் நாத்தனார் என்பதால் மார்க்கெட்டிங் காக நிபுனா வந்தார்..
முதல் பரிசு பெற்ற திவ்யாவின் வேலை அவரை ரொம்பவே ஈர்த்து இருந்தது… அதாவது இதுவரை அவர் கண்டிராத போல யுனிக்காக இருந்தது..
திவ்யாவை அழைத்து அவர் பேச, முத்துமாரி செய்ததை தான் செய்தேன் என்று பொய் சொல்லி பெருமை பீற்ற விரும்பாத திவ்யா,
“மேம்.. இதை பண்ணது என்னோட அசிஸ்டெண்ட் முத்துமாரி தான்” என முத்துமாரியை அறிமுகப்படுத்த திவ்யாவின் அந்த நேர்மைக்காக அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்த நிபுனா முத்துமாரியை தன்னுடன் அசிஸ்டெண்ட்டாக சேர்த்துக் கொண்டாள்…
அப்படி எடுத்தவுடன் இதற்கு சந்தோஷமாக முத்துமாரி ஒத்துக் கொள்ளவில்லை…
“மேம் இல்லங்க மேம்… நான் இப்போ தான் வேலையை கத்துக்கிட்டு இருக்கேன்… கத்துக்குட்டி தான்.. ஸ்டார்ட் அப்ல இருந்தால் நிறைய கத்துக்கலாம்… ஒரு ஷோ வைச்சு என்னை நீங்க ரொம்ப நம்புறீங்க மேம்” என மென்மையாக மறுத்தாள்…
அப்போதே முத்துமாரியை கவனித்து இருந்தாள் நிபுனா…
அணிந்திருந்தது சாதாரண உடை தான்… ஆனால் அதை அத்தனை நேர்த்தியாக அமைத்து அணிந்து இருந்தாள் முத்துமாரி..
மற்றபடி முகத்தில் எந்தவொரு ஒப்பனையும் இல்லை…
அவளின் வெளித்தோற்றத்திற்கே அன்று நிபுனா அவளை தேர்வு செய்யாமல் இருந்து இருக்கலாம்… ஆனால் என்னவோ ஒன்று இப்பெண் மிகவும் திறமையானவள் இவளை தவறவிடக் கூடாது என தோன்றிருக்க, அவளை பேசி பேசியே கன்வின்ஸ் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டாள் நிபுனா… இதில் திவ்யாவும் முத்துமாரியை கன்வின்ஸ் செய்ய, அப்படித் தான் முத்துமாரி நிபுனாவிடம் சேர்ந்தாள்…
இதோ இன்று முத்துமாரி இவ்வாறு சொல்லியிருக்க நிபுனாவால் எக்காரணம் கொண்டும் இவ்வளவு திறமை உள்ள முத்துமாரியை விட முடியாது…
அதனால், “உன் இஷ்டம் படியே நீ இரு முமா!.. நாளைக்கு இசை பட ஹீரோ, ஹீரோயினுக்கு காஸ்ட்யூம் ரெடி ஆயிருக்கணும்” என பேச்சை மாற்றிவிட்டார்…
நிபுனா முத்துமாரியை முமா என தான் சுருக்கி அழைப்பார்… இப்படி அழைத்தால் நான் அந்த வட்டத்தில் கொஞ்சவாவது ஒத்துப் போகும் என்று… முத்துமாரி க்கு இதெல்லாம் பிடிக்கவில்லை தான்… ஆனால் எல்லாவற்றையும் பேசி மாற்ற முடியாது என சலிப்பாகி விட்டாள்…
நிபுனாவைத் தாண்டி எல்லாருமே வெளியே அவளை முமா என்று தான் அழைப்பார்கள்.. இது நிபுனாவின் கட்டளை…
வடிவமைப்பாளர் இடத்தில் கூட முமா என்று தான் பெயர் வரும்..
என்னவோ பண்ணிட்டு போங்க என்னை வேலை செய்ய விடுங்க என்கிற மனநிலை தான் அவளுக்கு…
“எஸ் மேம்… பக்காவா ரெடி ஆயிடும்…”என்று விட்டு எழுந்துவிட்டாள்…
நிபுனா நல்லவர் தான்… ஆனால் வியாபார தந்திரம் உள்ளவர்..
முத்துமாரி நிறைய உடைகள் செய்தால் அதில் சிலது மட்டுமே முமா என்கிற பெயரில் வரும்… மற்றது எல்லாம் நிபுனா பெயர் தான் வெளியில் வரும்…
அதே போல் கிளைன்ட்டுகளை ஒரு நாளும் முத்துமாரியை நேரில் சந்திக்க வைத்தது கிடையாது…
அவளது எளிமை, மேக்கப் இல்லாத தோற்றம் தான் காரணம் என்று அவளிடம் சொல்லப்பட்டாலும் எங்கே இவர்களை நேரில் சந்திக்கும் அனுபவம் கிடைத்து இவளை தன்னை விட வளர வைத்து விடுவோமோ என்கிற எண்ணத்தில் முத்துமாரியை கிளைண்ட் பார்வையில் படாமல் நான் வைத்திருந்தாள் நிபுனா..
அன்றிரவு எட்டு மணி இருக்கும்…
பவித்ரா வீட்டை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தாள்… ஆம், மாலை வேளையில் ஒரு தையற்கடையில் துணி தைப்பாள்…
இதற்கு மீனாட்சி மற்றும் சிவகாசியிடம் அத்துனை எதிர்ப்பு வந்தது…
“பெரியம்மா நான் கண்டிப்பா வீட்டு வேலை எல்லாத்தையும் செஞ்சிடுவேன்” என கெஞ்சி கூத்தாடி சேர்ந்து இருக்கிறாள்… இதில் மாசம் ஆயிரம் ரூபாய் வரும் அவ்வளவே.. ஆனால் அதுவே பவித்ராவிற்கு பெரிய பணம் தான்..
மணியுமே சாயந்திரம் ஐந்து மணிக்கு எல்லாம் கடையை சாற்றிவிடுவார்.. ஏனெனில் விடியற்காலையில் கடையைத் திறக்கவேண்டும் அல்லவா…
மணியுடன் கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு ஓட்ட நடையுடன் தையல் செய்ய செல்வாள் பவித்ரா…
அதை முடித்து வீட்டில் வந்து பாத்திரம் தேய்க்க வேண்டும்… சமையல் மீனாட்சி செய்வார்… அதுக்கே பவித்ரா அவ்வளவு கெஞ்சினான்…
“நான் வந்து சமைக்குறேன் பெரியம்மா” என அவள் அவ்வளவு சொல்லியும்,
“நீ வர வரை நாங்க எங்க வயித்த காயப்போடணுமா.. ஏத்தம் தான் டி உனக்கு… நானே சமைச்சிப்பேன்” என முடித்து விட்டார்…
அப்போது கூட, ‘பெரியம்மா ஒருவேளை சமைச்சிக்குறாங்களா.. பரவாயில்லையே..’ என யோசித்தவள் பின் தான் உணர்ந்தாள்… தனக்கு இரவு நேர சாப்பாட்டையே அவர் தண்டனையாக நிறுத்தி விட்டார் என்று…
வயிற்று பசிக்காக தனக்கு உழைப்பால் கிடைக்கும் ஆயிரத்தையும் விட மனமில்லாதவள் அதையும் மீறி போனாள்…
இரவு நேரம் பசிக்கு பத்து ரூபாய் க்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டு வயிற்றை நனைத்தாள்.
அன்று இரவு அப்படித் தான் வேலையை முடித்துவிட்டு ஓட்ட நடை போட்டு வீட்டை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்..
அது ஒரு ஆள் அரவற்ற ரோடு… பக்கத்தில் இருப்பக்கமும் வீடுகள் கிடையாது…
அங்கு எப்போதும் வரும் பொழுதும் பவித்ராவிற்கு பயமாக தான் இருக்கும்..
அதைத் தாண்டினால் அடுத்த இருபது நிமிஷத்தில் வீட்டை அடைந்து விடலாம்…
பவித்ராவை தொடர்ந்து தொடரும் சுரேஷ் இன்று அவளை எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என வெறிக்கொண்டு இந்த ஆள் அரவற்ற பகுதியில் பதுங்கி இருக்க, அவனின் கண்களில் திக்கினாள் பவித்ரா…
***
தன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பலகையில் சோர்வாக அமர்ந்து இருந்தான் மகேஷ்…
காலையில் வீட்டிற்கு பதற்றத்துடன் வந்தவனின் செவியில் விழுந்த செய்தியில் ஆடிப்போய் விட்டான்…
பிரியா வேறு ஒருப்பக்கம் ஃபோன் செய்கிறாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என அவனுக்கு தெரியவில்லை…
அவனே உடைந்து போய் அல்லவா அமர்ந்து இருக்கிறான்..
“அண்ணா” என்றபடி விஷாக் அவனின் பக்கத்தில் அமர,
“சொல்லு விஷாக்” என சோர்வாக திரும்பினான் மகேஷ்…
“இப்போ என்ன பண்ணப் போறீங்க…” என அக்கறையாக கேட்ட தம்பியிடம்,
“தெரியல விஷாக்… ஆனா கண்டிப்பா நான் பிரியாவுக்கு துரோகம் பண்ண மாட்டேன்” என்றான் உறுதியாக..
இதில் விஷாக் கிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை… ஏனெனில் இதில் அவனின் வாழ்க்கையும் அல்லவா அடங்கி இருக்கிறது…
“சரி ண்ணா எல்லாம் சரி ஆயிடும்… சாப்பிட வாங்க” என அண்ணனை கையோடு இழுத்துக் கொண்டு சென்றான் தமையன்…
அப்படி என்ன தான் நடந்தது…
அன்று காலை அவசரமாக வந்தவனின் முன்னே நின்ற அன்னை, “உன் பாட்டி நம்ம குடும்ப ஜோசியரை பார்த்து இருக்காங்க…” என்றபடி மகனை மாமியார் அறைக்கு அழைத்து சென்றார் காயத்ரி..
சகுந்தலா தேவி ஜோசியம், ஜாதகத்தை எல்லாம் ரொம்பவே நம்பும் வகையானவர்…
இன்று குடும்ப ஜோசியரை எதேர்ச்சையாக அவர் பார்க்க, அப்போது தான் அவர் பெரிய குண்டை தூக்கிப் போட்டார்…
“உங்க மகன் சக்கரவர்த்தி ஜாதகத்துல ஒரு பெரிய ஆபத்து அவருக்கு இனி வரப்போகுது ம்மா…” என சொல்ல, மகனின் மீது உயிரை வைத்திருக்கும் சகுந்தலா தேவி ஆடிப்போய் விட்டார்..
“என்ன சொல்றீங்க ஜோசியரே!” என அவர் பதற,
“பதறாதீங்க ம்மா… அவர் உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு… அது வராம இருக்கணும்னா உங்க பேரன் மூனு பேருக்கும் ஒரே குடும்பத்துல மூனு பொண்ணுங்களை எடுக்கணும்… அந்த மூனு பொண்ணுங்களுக்கும் ஒரே வகையான ரத்தம் ஓடனும்… உங்க பையனுக்கு அடுத்த மாசம் வயசு கூடுது.. அதுக்குள்ள உங்க மூனு மருமகள் வீட்டுக்கு வரணும்.. இல்லைன்னா உங்க பையன் உயிரேக்கே பெரிய ஆபத்து ம்மா” என தயக்கத்துடன் சொல்லிவிட சகுந்தலா தேவிக்கு விஷயம் புரியவே சில நேரம் எடுத்தது…
“ஒரே வீட்டுல அக்கா தங்கச்சி மூனு பேரும் இருக்கணும்… அவங்க மூனு பேருக்கும் ஒரே ரத்தம் ஓடணும்ன்னா என்ன ஜோசியரே இவ்வளவு சுலபமா சொல்றீங்க… அதுவும் அடுத்த மாசத்துக்குள்ள” என அவர் புரியாமல் பதற,
“பதற்றத்தை ஒதுக்கி வைச்சிட்டு பாருங்க ம்மா கண்டிப்பா நல்லதே நடக்கும்… கூடப் பிறந்த சகோதரியா இல்லைன்னாலும் அவங்க இரத்த வழியில அக்கா, தங்கை இருந்தால் சரி தான்.. ஆனா மூனு பேருக்கும் ஒரே ரத்த வகை கண்டிப்பா இருக்கணும்” என அவர் ஸ்திரமாக சொல்லி இருந்தார்…
இதை எல்லாம் இப்போது அன்னை மூலம் கேட்ட மகேஷிற்கு தலையில் பெரிய இடியே விழுந்தது…
