காதலா 1

அத்தியாயம் 1

 

“ஹலோ சென்னை மக்களே! வெல்கம் டூ ‘Chill with யாழி’ வித் மீ யாழினி. நீங்க கேட்டுக்கிட்டு இருக்குறது ரேடியோ **** 

இங்க பாட்டு சூப்பர் டூப்பர் மச்சி” என்று தான் பணிபுரியும் ரேடியோ ஸ்டேஷனில் தன்னுடைய காந்தக் குரலில் அன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தாள் யாழினி.

 

அவளின் நிகழ்ச்சியை கேட்க சென்னையில் தனி வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது… 

 

“இன்னிக்கு கிளைமேட் ரொம்ப ஜில்லுன்னு இருக்கு… இந்த டைம்ல என்ன சாப்பிட்டா நீங்க செமயா இருக்கும்ன்னு ஃபீல் பண்றீங்க… அத நீங்க மட்டுமே மனசுல வைச்சிக்காம என்னோட ஷேர் பண்ணுங்க….” என்று அவள் சொல்லி முடிக்க, முதல் காலர் லைனில் வந்தார்.

 

“ஹலோ RJ யாழினியா” என்று மறுமுனையில் உற்காசமாக ஒலித்தது ஒரு ஆணின் குரல். 

 

“ஆமா RJ யாழினி தான்… ஹாய் உங்க பெயர்? எங்க இருந்து பேசுறீங்க?” என்று அதே உற்சாகத்தில் அவளும் பேசினாள்… 

 

“நான் விக்கி மேடம்… அடையார்ல இருந்து பேசுறேன். எனக்கு உங்க வாய்ஸ் கேட்காம நாளே ஓடாது” என்று அவன் சந்தோஷத்துடன் சொல்ல, 

 

“தாங்க் யூ விக்கி.. நீங்க முதல் முறை நம்ம ஷோக்கு கால் பண்றீங்களா?” என்று அவளின் குரலிலும் அதே சந்தோஷம். 

 

“இல்ல யாழினி உங்க கிட்ட நிறைய முறை பேசியிருக்கேன்” என்று அவன் மென் புன்னகைக்க, யாழினியின் மனதிற்குள் லேசான பதற்றம். 

 

“சூப்பர் விக்கி… சொல்லுங்க இந்த ஜில்லுன்னு இருக்குற கிளேமேட்ல என்ன சாப்பிடணும்னு உங்களுக்கு தோணுது” என்று சமாளித்தவள், தான் அமர்ந்திருந்த கண்ணாடி அறைக்குள் இருந்து வெளியே அவளையே பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவிடம், “கட் பண்ண ரெடியா இரு” என்று பேசாமலே தன் இரண்டு கைகளையும் சேர்த்து T போல பிரேக் ஸிம்பலை அழுத்தி மூன்று முறை சைகை செய்தாள். 

 

பவித்ராவும் அங்கு வேலை பார்க்கும் RJ தான். 

 

“சப்பா! இவளுக்காக இங்க இருந்து பேக் ஆபிஸ்க்கு ஓடி போய் அவர்கிட்ட கட் பண்ண ரெடியா இருக்க சொல்லி சொல்லியே பத்து கிலோ குறைஞ்சிட்டேனே” என்று நொந்தபடி பேக் ஆபிஸை நோக்கி ஓடினாள் பவித்ரா. 

 

யாழினி மனதில் பயந்தது போல, “உங்களோட குரல் தான் இந்த கிளைமேட்டுக்கு செம மூடா இருக்கு யாழினி” என்று அவன் சொல்லி முடிக்க, பேக் ஆபிஸில் வேகமாக அதை எடிட்டிங்கில் கட் பண்ணினார்கள். யாழினியும் கால்லை துண்டித்து விட்டிருந்தாள். 

 

‘நமக்குன்னு வந்து சேர்ரானுங்க பாரு’ என்று மனதில் கடுகடுத்தவள், 

 

“ஃபர்ஸ்ட் காலர் லைன்ல ஏதோ நெட்வொர்க் இஸ்ஸூ பாதியில கட் ஆயிடுச்சு… சரி, எனக்கு இந்த மாதிரி கிளைமேட்ல சுட சுட ரோட்டு கடை பஜ்ஜி சாப்பிடப் பிடிக்கும்… இன்னும் நிறைய இருக்கு மக்களே! அதுக்கு முன்னாடி என்னோட ஃபேவரைட் யுவன் சங்கர் ராஜா மியூச்சிக்ல இருந்து ஒரு பாட்டு உங்களுக்காக…” என்று சாங்க்கை பிளே செய்தாள்…. 

 

“சில இரவுகள் இரவுகள் தான்

தீரா தீராதே

சில கனவுகள் கனவுகள் தான்

போகா போகாதே

சில சுவடுகள் சுவடுகள் தான்

தேயா தேயாதே

சில நினைவுகள் நினைவுகள் தான்

மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே

என் நரம்புக்குள் ஓடினாய்

நீதானே நீதானே என்

இமைகளை நீவினாய்” என்று பாடல் ஒலிபரப்பியுடன் யாழினியும் பாடிக்கொண்டிருந்தாள்… 

 

வெயிலில் சுட்டெரிக்கும் சென்னை, 

ஜில்லென்று குளிர் காற்று வீசும் போதும், சாரலாய் மழை பெய்யும் போதும் தேவலோகமய் தான் காட்சியளிக்கும்… 

 

அந்த ஜில் குளிரில் தீடீரென்று மழை அடித்து வீச, தன்னுடைய விலை உயர்ந்த பென்ஸ் காரில் ரேடியோவை உயிர்ப்பில் வைத்திருத்தபடி இறுக்கமாக வந்த ஷ்யாம், தன் முன்னே வேகமாக வீசும் மழையைக் கண்டதும் அவனின் முகம் சுருங்கியது… 

 

மழையை பிடிக்காத மனிதன்! இவனோடு ஒப்பிடுகையில் மழையில் நனைய மட்டும் பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள் தெய்வம் என்றே சொல்லலாம். 

 

அவனின் இந்த முகக் கடுமைக்கு மழை மட்டும் காரணமில்லை… அவனின் இரும்பு இதயத்திற்குள் அவளைப் பற்றி எண்ணங்கள் என்பதை விட கோபம், இயலாமை ஏராளம் என்று சொல்லலாம். 

 

ஆனாலும் அவன் யாரிடமும் தோற்று பழக்கம் இல்லையே. அப்படி இருக்கும் பொழுது வாழ்க்கை விஷயத்தில் எப்படி விட்டுவிடுவான். 

 

நினைத்ததை சாதிப்பான்! 

 

“மது மதூ…” என்று அந்தப் பெயரை சிரித்தபடியே இழுத்தவன் தன் கைகளால் கார் ஸ்டீரிங்கை தாளமிட்டபடியே விசில் அடித்தான். 

 

அவனின் இந்த சிரிப்பில் கலந்த த்தொனி ரொம்ப அபாயகரமானது. 

 

அவனுடைய காஸ்ட்லி ஜ ஃபோன், “மதுவந்தி காலிங்” என்று ஒலிக்க, தனக்கு முன்னே ஒளிர்ந்த அவளின் பெயரை பார்த்து புருவத்தை சுருக்கியவன், 

 

தன்னுடைய காதில் வைத்திருந்த ப்ளூடூத்தில் கனெக்ட் செய்து “சொல்லு” என்று கடுப்பில் ஒலித்தான். 

 

***

 

யாழினி ஒரு கண்ணாடி போல… 

 

நம் உணர்வுகளை நேராக ஒளிரச் செய்யும் கண்ணாடி போல… ஒருவர் அவளிடம் காட்டும் உணர்வுகளை அப்படியே அவர்களுக்கு திருப்பி கொடுக்கும் பழக்கம்,  வழக்கம் உடையவள். 

 

ஒருவர் பாசத்தை காட்டினாள், திருப்பி பாசத்தை காட்டுவாள். 

 

ஒருவர் சந்தோஷத்தை காட்டினால் திருப்பி சந்தோஷத்துடன் மொழிவாள். 

 

ஒருவர் அன்பை காட்டினால் அவளும் அன்பை அள்ளி கொட்டுவாள். 

 

ஒருவர் உற்சாகத்தை காட்டினால் அவள் உற்காச ஊற்றாவே மாறிவிடுவாள். 

 

இதெல்லாம் தாண்டி மேலே உள்ள மூன்றையும் இயற்கையாகவே பிறருக்கு உண்மையாக வழங்கும் நல் தனது கொண்டவள். 

 

ஒருவர் கோபத்தை காட்டினால் இவளும் திருப்பி கோபத்தைக் காட்டுவாள்…

 

ஆனாலும் உணர்வுகளை மறைத்து வெளியே முகமூடி இடும் பழக்கம் அவளுக்கு சில வருடங்களாக வலுக்கட்டாயமாக பிறந்திருப்பதால், தேவையுள்ள நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்வாள்.

 

அவளின் வொர்க் பிளேஸிற்கு வந்த பவித்ராவோ, “ஏய் எரும மாடே… உன்னோட ரோதனையா இருக்கு” என்று மூச்சு வாங்கிய படி யாழினியின் தலையில் கொட்டினாள். 

 

“அக்கா வலிக்குது” என்று தன் தலையைத் தடவியவள், “பரவாயில்லைக்கா..

உங்க கட்டிங் டியூட்டியை சூப்பரா பார்க்குறீங்க” என்று பவித்ராவை பார்த்து சிரித்தபடி கண்ணடித்தாள். 

 

“நீ எல்லாம் ஏன் டி பேச மாட்ட” என்று யாழினி பக்க இருக்கையில் அமர்ந்த பவித்ரா,

 

“அந்த பைத்தியக்காரன் நீ வேலைக்கு சேர்ந்த இந்த ஆறு மாசத்துல மூனு தடவை கால் பண்ணிட்டான். அவன் குரல் கேட்டதும் என்னை அலர்ட் பண்ண வேண்டியது தானே! இப்படி பிள்ளை பெத்தவளை வேக வேகமா ஓட வைக்குறியே டி” என்று புலம்பினாள். 

 

“எனக்கு மட்டும் உங்களை இப்படி மாரத்தான் ஓட வைக்க ஆசையாக்கா! அந்த படுபாவியோட குரல் மண்டைக்குள்ள ஏற மாட்டிங்குது… நமக்கு பிடிச்சவங்களுடைய குரல்ன்னா ஒரு முறை கேட்டாளே மனசுல பசக்குனு ஒட்டிக்கும்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 

 

“உன் ஆள் சுந்தர் குரல்ன்னா மனசுக்குள்ள பச்சக்குனு ஒட்டிக்கும்னு சொல்லு”  என அவர்கள் பேசியதை கேட்டு பதில் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தான் பார்த்திபன். 

 

அதைக் கேட்ட நொடி அதிர்ந்த யாழினி, “ஹா… ன் ஆமா ஆமா” என்று வேகமாக தலையாட்டினாள். 

 

“என்னது ஆளா… லவ் பண்றியா யாழினி? என்கிட்ட ஒன்னா மன்னா பழகிட்டு சொல்லவே இல்ல” என்று முறைத்தாள் பவித்ரா.

 

ஆறு மாதங்கள் தான் பழகியிருக்கிறார்கள். ஆனால் நல்ல நெருக்கம் இருவர்களுக்குள். 

 

“அக்கா… அது நான் உங்களுக்கு தனியா சொல்லலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று பவித்ராவை சமாளித்த யாழினியை பவித்ரா விட்ட பாடில்லை. 

 

அவளை கீழே உள்ள கேன்டீனுக்கு அழைத்துச் சென்று அவளின் கைப்பிடித்து ஒரு டேபிளில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து, “கள்ளி” என்று யாழினியின் கன்னத்தை கிள்ளினாள் பவித்ரா. 

 

“ஆஆஆ.. அக்கா வலிக்குது” என்று தன் கன்னத்தில் பெண்ணவள் தடவ, 

 

“சரி சொல்லு உன் காதல் கதையை…” என்று கன்னத்தில் கைவைத்து கேட்டாள் பவித்ரா. 

 

“அக்கா… பார்த்திபன் என்னைய கல்யாணம் பண்றதுக்காக கேட்டாரு. வீட்டுக்கெல்லாம் வந்து பேசுறேன்னு வேற சொன்னாரு. நம்ம மனோகர் சாரே என்கிட்ட இதை பத்தி பேசினாரு. அதனால தான் இதெல்லாம் சொன்னேன்” என்று மழுப்பினாள். 

 

“அடிப்பாவி… பார்த்திபன் நம்ம சேனல் ஹெட்டோட பையன். எவ்வளவு ஸ்மார்ட்… பெரிய பணக்காரன் டி அவனை ரிஜெக்ட் பண்ணிட்டியா” என்று அவனின் புகழை பவித்ரா பாட,  

 

“அக்கா… நான் சுந்தர்ன்னு ஒருத்தனை லவ் பண்றேன்” என்று தன்னையும் மீறி உண்மையை உளறி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் யாழினி. 

 

“ஓ இந்த அழகியை கொள்ளை கொண்டவன் பெயர் சுந்தரா… யாழினி சுந்தர் பெயர் பொருத்தமே செம” என்று உற்சாகத்துடன் சொன்னாள் பவித்ரா. 

 

“ஹி… ஹிஹி… அப்புறம் வீட்டுக்கு கிளம்பலாமா கா” என்று பேச்சை மாற்றினாள் யாழினி. 

 

“என் ஹஸ்பண்ட் வர பத்து நிமிஷம் ஆகும்… அது வரைக்கும் நீ உன் காதல் கதைய சொல்லு” என்று பவித்ரா விட்ட பாடில்லை. 

 

“விட மாட்டீங்க போல…” என்று பல்லைக் காட்டி அசடு வழிந்தாள் யாழினி. 

 

“மாட்டேன்… சரி சொல்லு” 

 

“அது என் காலேஜ் சீனியர் கா… ஃபுட்பால் பிளேயர். காலேஜே அவரை பார்த்தால் பயப்படும்… ஒரு மாஸ் ஹீரோ போல… அவரைப் பார்த்தாலே நான் பயப்படுவேன்… அப்புறம் அந்த பயம், பதற்றம் ஆகி… அந்த பதற்றம் ஆர்வமாகி அப்புறம் காதலா மாறிடுச்சு” என்று பெருமூச்சுவிட்டாள் யாழினி. 

 

“இன்னும் உன்கிட்ட கொஞ்சம் டிடெயில்டா எதிர்ப்பார்த்தேன்… சரி யாரு முதல்ல பிரபோஸ் பண்ணா” என்று கேட்டாள் ஆர்வத்துடன். 

 

“வேற யாரு… அவர் தான்” என்று வேகமாக சொன்னாள். 

 

பவித்ராவின் கையில் இருந்த செல்பேசி ஒலிக்க, “அவர் தான் டி கால் பண்றாரு… வந்துட்டார் போல. சரி டாடா” என்று தன் பொருட்களை எடுத்து வேகமாக சென்று விட்டாள். 

 

செல்லும் அவளையே புன்னகையுடன் பார்த்த யாழினியின் மனதில், ‘உங்க இடத்துல வேற யாராவது இருந்தா கண்டிப்பா சொல்லிருக்க மாட்டேன் கா… எனக்கு ஒரு அக்கா இல்லாத குறைய நீங்க தீர்த்து வைக்குறீங்களே’ என்று நெகிழ்ந்தாள். 

 

***

 

SK Technology, Besant Nagar

 

மூன்று மாடி கண்ணாடி கட்டிடம் அது… இந்த நிறுவனத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் தான் ஆகியிருந்தது. 

 

அதனின் ஆக்டிவ் பார்ட்னர் ஷ்யாம் தான்…இந்தக் கட்டிடம் மற்றும் பெரும்பாலான பணத்தை அவன் தான் முதலீடு செய்திருந்தான். 

 

அவனுடன் இரண்டு பார்ட்னர்ஸ்… ரிஷி மற்றும் மதுவந்தி… இருவருமே அவனுடன் பள்ளியில் இருந்து ஒன்றாக படித்த நண்பர்கள். 

 

நண்பர்கள் என்றால், “என்ன மச்சான்… படத்துக்கு போலாமா?” என்று இலகுவாக கேட்கும் நண்பர்கள் வட்டம் இல்லை என்பதை விட ரிஷி மற்றும் மதுவந்தி இவனுக்காக இப்படி இருக்கிறார்கள். 

 

அவர்கள் கலகல டைப் தான்… ஆனாலும் முதிர்வான எண்ணங்கள் மற்றும் பேச்சு தான் மூவரிடத்திலும் ஒற்றுமை. அது தான் அவர்களை சேர்த்தும் வைத்தது.

 

ஷ்யாமுடைய தந்தை மற்றும் தாய் இறந்து பல வருடங்கள் மேல் ஆகியிருந்தன… அவர்கள் செய்த பிசினஸ் மற்றும் சொத்துகளுக்கு ஒரே ஆண் வாரிசு ஷ்யாம் தான். 

 

தனது தங்கை சரண்யா மற்றும் பாட்டியுடன் தான் வசித்துக் கொண்டிருக்கிறான். 

 

சரண்யாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன. 

 

அவளின் கணவன் வெற்றி வருமானத்துறையில் ஆபிஸராக வேலை பார்க்கிறான்.

 

அவனின் பாட்டி சகுந்தலா தான் வீட்டின் அதிபதி. என்ன தான் ஷ்யாம் தான் நினைத்ததை மட்டுமே சாதிக்கும் குணம் என்றாலும் ஏதாவது எமோஷனல் டிராமா போட்டு சில விஷயங்களை சாதித்துக் கொள்வார் பாட்டி.

 

அதற்காக எல்லாவற்றிற்கும் எல்லாம் ஷ்யாம் மசிய மாட்டான்!

 

எதற்கு சரி சொல்ல வேண்டும் எதற்கு ஸ்திரமாக தன் பிடியில் நிற்க வேண்டும் என்று ஷ்யாமிற்கு தெரியும். 

 

தன் அப்பாவின் ஃபேக்டரி தொழிலில் பெரிதாக ஈடுபாடு இல்லாததால் அதை விற்று விட்டான். 

 

அதற்கு பின்னர் ரிஷி மற்றும் மதுவந்தி யுடன் சேர்ந்து ஆரம்பித்தது தான் SK Technology. 

 

இதில் ரிஷி மற்றும் மதுவந்தி ஸ்லீப்பிங் பார்ட்னர்கள் தான். 

 

மூளை ஷ்யாமுடையது அதை வேலையாய் மாற்றுவது தான் ரிஷி மற்றும் மதுவந்தியின் வேலை. 

 

லாபம் நஷ்டம் எதுவாகினும் அதில் ஷ்யாமிற்கு தான் அதிக பங்கு. 

 

இதுவரை அவன் சம்பாதித்தது லாபம் மட்டுமே! அதுவும் இரட்டிப்பு லாபம். 

 

அவனின் மூளை எப்போதும் புது விதமான டிஜிட்டல் நுட்பங்களை யோசித்துக் கொண்டே இருக்கும்… 

 

அவனின் மூளை இதில் முனைப்பாக இருப்பதாலோ என்னவோ அவனின் மனதில் விளையாட்டுத்தனம், இலகுத்தன்மை எல்லாம் கடுகளவும் இல்லை.

 

அவனின் பாட்டி மற்றும் தங்கையின் மேல் பாசம் அதிகம் அவனுக்கு. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லை. 

 

திருவான்மியூரில் மூன்று தளம் கொண்ட பெரிய பங்களா அவனுடையது… 

 

சீ வீயூ சாலையில் இருக்கும் பீச் ஹவுஸ்… 

 

அவனின் அறை பால்கனியில் இருந்து வெளியே பார்த்தால் திருவான்மியூர் கடற்கரை நன்றாகவே தெரியும். 

 

அலுவலகத்திற்குள் நுழையும் போதே மனதினுள் கடுப்பு மட்டுமே! அதற்கு காரணம் மது… 

 

மாலை ஆறு மணிக்கு ஊழியர்கள் அனைவரும் கிளம்ப எத்தனிக்க, ஷ்யாமின் வேகமான காலடி ஓசை கேட்டு அசையாது அவனுக்கு விஷ் செய்தபடி நின்றுவிட்டார்கள். 

 

ஆறடியில் மிரள வைக்கும் ஆண் மகன் தான் இருபத்தி எட்டு வயதுடைய ஷ்யாம்… மாநிறத்தில் தோற்றமளிக்கும் ஹான்ட்சம் ஆனவன். பெண்கள் இவனை பார்த்தால் கண்டிப்பாக மேன்லி என்று சொல்லுவார்கள்… இவனின் நடை, உடை, பழக்கம் எல்லாவற்றிலும் மேன்லினஸ் நிரம்பி வழியும்… 

 

படிக்கட்டு தேகம்… வீட்டில் இவன் தினமும் பயன்படுத்தும் ஜிம்மினால் வந்த உபயம். 

 

சில நேரம் அவன் பீச் ரோட்டில் அதிகாலை ஜாக்கிங் செய்வதும் உண்டு. 

 

எல்லாரும் அவனுக்கு பணிந்து தான் ஆக வேண்டும்… அழகான, வசதியான பெண்கள் அவனை வட்டமிட்டாலும் கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவான். 

 

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற விஷயம் அவன் மனதில் ஆணித்தனமாக இருந்தது… அதற்காக அந்த ஒருத்தியை தேடும் படலத்திலும் அவன் இறங்கவில்லை. தன்னை தேடி அவள் வருவாள் என்கிற மிதப்பு தான்! அப்படி தான் மதுவும் அவன் வாழ்வில் வந்தாள். 

 

அழகான பெண்களை கண்களால் ரசிப்பான், அளவிடுவான். அவனுள்ளும் மோக உணர்வுகள் ஏராளம் இருக்கிறது. ஆனால் அவன் ரசிப்பதோடு சரி. அவர்களின் மேனியை ஆராதிக்க நினைக்க மாட்டான். 

 

சிகரெட், குடி பழக்கம் எல்லாம் இருக்கிறது… ஆனால் அதற்கு அவன் அடிமையெல்லாம் இல்லை. 

 

அவன் தன் வாழ்க்கையில் யாருக்குமே அடிமையாக இருக்க கூடாது என்று ஸ்திரமாக இருப்பதால் தான் யாரையும் அவன் எதற்கும் நாடி செல்வதேயில்லை… 

 

பாட்டி மற்றும் தங்கையிடம் கூட அதனால் தான் பாசத்தை வெளிக்காட்டாமல் மறைக்கிறானோ என்னவோ! 

 

வேகமாக சென்றவனின் கால்கள் நின்றது என்னவோ மதுவந்தியின் அறைக்குள் தான்… 

 

“நீ கல்யாணம் பண்ண ஒத்துப்பியா மாட்டியா வந்தி” என்று அவன் கடுமையாக கேட்டான். 

 

“ஐ கான்ட் ஷயாம்” என்று கண்களில் கண்ணீர் மல்கினாள் மதுவந்தி. 

 

தனக்குள் எழுந்த கோபத்தை இதழ் குவித்து ஊதியபடி தணிக்க முயற்சித்தவனின் செல்போன் ஒலிர, கால் செய்வது சரண்யா என்று தெரிந்ததும் ஃபோனை எடுத்தவன், 

 

“சொல்லு சரண்யா” என்று சொல்ல, 

 

“அண்ணா… ஃபங்ஷன் ஆரம்பிக்க போகுது… எனக்கு அப்பா, அம்மா எல்லாமே நீங்க தானே! நீங்க இல்லாம எப்படி அண்ணா” என்று அவள் இழுக்க, 

 

“நான் இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுல இருப்பேன்… அதனால ஃபங்ஷனை டிலே பண்ணாம ஸ்டார்ட் பண்ணுங்க. நான் வந்து கன்டினியூ பண்ணிக்குறேன். உனக்கு சடங்கு நான் வந்து பண்றேன்…ஓகே வா” என்று அவன் கேட்க, மறுமுனையில் பேசிக் கொண்டு இருந்த தங்கைக்கு அத்தனை சந்தோஷம். 

 

நேற்றே சகுந்தலா பாட்டியும், சரண்யாவும் விஷயத்தை சொல்லி இருந்தார்கள் தான். எதையும் எளிதில் மறக்கும் ஆள் ஷ்யாம் இல்லை. ஆனால் அதை விட சில விஷயங்கள் திடீர் முக்கியமாய் வந்திருக்கவே, மதுவை காண அலுவலகம் வந்துவிட்டிருக்கிறான்.

 

மதுவை முறைத்தவனோ, ஒரு நம்பரிற்கு கால் செய்தபடியே வெளியேறினான். 

 

***

 

SS Beach Villa, திருவான்மியூர். 

 

சரண்யா மற்றும் வெற்றி பட்டு உடைகள் உடுத்தி இருந்தார்கள். 

 

வெற்றியின் வீட்டில் எல்லாருமெ சடங்குகள் வைத்து முடித்திருக்க, இங்கே சரண்யாவிற்கு சடங்கு முறைகள் ஆரம்பிக்க ஷ்யாமிற்காக காத்துக் கொண்டு இருந்தார்கள் அனைவரும். 

 

“அம்மா! பசிக்குது ம்மா” என்று தன் அம்மாவின் காதில் ரகசியமாய் சொன்னபடி அவரின் கையை சுரண்டினாள் இருபத்தி மூன்று வயது யாழினி. 

 

“சடங்கு முடியாம சாப்பிட கூடாது டி” என்று மகளிடம் சற்று கண்டிப்புடன் சொன்னார் சாந்தி. 

 

கல்யாணம் ஆன புதிதில் முதல் முறை வரும் ஆடி மாதத்திற்கு முன்னர் இப்படி சடங்கு செய்வது வெற்றி வீட்டினரின் வழக்கம். அதுவும் சரண்யாவின் பிறந்தவீட்டில் தான் அது நடக்கவேண்டும். 

 

‘இவனுங்க இந்த சடங்கை முடிக்குறதுக்குள்ள நான் பசியிலேயே செத்து போய் எனக்கு இறுதி சடங்கு பண்ணிடுவானுங்க போல’ என்று மனதில் பசியில் நொந்தவளோ, 

 

தன் ஃபோனை பார்க்க, சுந்தர் தான் மெசேஜ் செய்திருந்தான். 

 

“பேபி… கிளம்பிட்டியா”

 

“அட ஆமால்ல இவனை மீட் பண்றதை மறந்தே போயிட்டோமே… நல்ல வேளை மகராசன் மெசேஜ்ஜை தட்டினான்” என்று மெல்ல புன்னகைத்து முணுமுணுத்தவள் தன் அம்மாவை அழைத்து, 

 

“நம்ம சைடு சடங்கு தான் முடிஞ்சிருச்சுல… இப்போ எல்லாரும் சும்மா ஆளாளுக்கு வாய பார்த்துட்டு தானே உட்கார்ந்திருக்கோம். நான் சீனியரோட பீச்க்கு போய் ஏதாவது சாப்பிட்டு வரேன்” என்று சொன்னாள். 

 

“ஷ்யாம் தம்பி வந்திரட்டும் டி… நீ அப்போ இல்லைனா நல்லா இருக்காது” என்று சாந்தி சொல்ல, 

 

“அம்மா… ஷ்யாமு சோமூக்கெல்லாம் என்னால காத்திருக்க முடியாது” என்று கோபத்தில் அவள் சற்று சத்தமாக பேசினாள். 

 

வேகமாக சுற்றி முற்றி பார்த்த சாந்தியோ, “கொஞ்சம் அமைதியா இரு டி. எதுவும் பிரச்சனை பண்ணிடாத… என் உடம்பு அப்புறம் தாங்காது” என்று மகளிடம் சொன்னவரை, 

 

“நீங்க என்ன ம்மா பச்சை உடம்புக்காரி மாதிரி பேசிட்டு இருக்கீங்க…நாட்டி கேர்ள்” என்று அம்மாவின் தோளில் செல்லமாக தட்டினாள் யாழினி.

 

“வாயாடி… அண்ணா கிட்ட சொல்லிட்டு கிளம்பு… வேண்டாம் ன்னு சொன்னா கேட்கவா போற” என்று சலித்துக் கொண்டார் சாந்தி. 

 

“சின்ன விஷயத்துல விட்டுப் பிடிச்சு பெரிய  விஷயத்துல எல்லாம் என்னை நகர விடாம கெட்டியா பிடிச்சிட்டு தாய்க்கிழவிக்கு பேச்சை பார்த்தியா” என்று தன் அம்மாவின் கன்னத்தை செல்லமாக கிள்ளின யாழினி, 

 

“அப்பா… வாட் இஸ் த பிரோசீஜர் டூ சேன்ஜ் திஸ் மம்மி” என்று தன் அம்மாவின்

தோள்களில் கை போட்டபடியே சீண்டினாள். 

 

“அந்த வழி எனக்கு தெரிஞ்சிருந்தா.. நான் ஏன் மா இப்படி இருக்க போறேன்” என்று அவளின் தந்தை சேகர் பாவம் போல கையை விரிக்க, 

 

“உங்களை வீட்டுல வைச்சிக்குறேன்” என்றபடியே முறைத்தார் சாந்தி. 

 

“வீட்டுக்கு போற வரை எதுக்கு வெயிட் பண்ற… இங்கயே வைச்சிக்கோயேன்” என்று மனைவியின் காதில் அவர் ரசசியமாய் சொல்ல, 

 

அவரின் முகமோ லேசாண நாணத்தில் சிவந்தது. 

 

“என்ன விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்று இருவரையும் பிரித்து நடுவில் வந்து நின்றாள் யாழினி. 

 

சின்ன பிள்ளைகள் தங்களின் அப்பா மற்றும் அம்மாவை படுக்கையறையில் சேர்ந்து படுக்கவே விடாது நடுவில் வந்து படுத்துக் கொள்வார்களே,

 

இப்போது யாழினி செய்ததும் அப்படி தான். அவள் இப்போதும் கூட அவளின் தந்தை மற்றும் தாய் விழி வழியாக குழந்தையாகத் தான் தெரிந்தாள். 

 

சேகர் அரசு உத்தியோகம்… சாந்தி குடும்பத்தலைவி. சேகர் ரொம்ப ஜோவியல் டைப்… கூல் டேட் போல! சாந்தியும் ஜாலி டைப் தான். படிக்காதவர் ஆனால் பொறுப்பானவர். அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுகிறேன் பேர்வழி என்று தப்பு தப்பாக பேசுவார். ஆனால் சேகரோ அதையும் மட்டம் தட்ட மாட்டார். 

 

இருவரும் காதல் திருமணம் என்பதால், யாழினியும் காதல் திருமணம் தான் செய்வேன் என்று ஸ்திரமாய் இருக்க… வீட்டிலும் எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. 

 

வெற்றி யாழினியை விட ஐந்து வயது பெரியவன். சேகரை விட ஸ்ரிக்ட். ஆனாலும் அவனுக்கு யாழினி ரொம்பவே செல்லம். சாந்தி கண்டிப்பது எப்போதாவது தான். மகளின் மீது பாசத்தை தாண்டி குடும்பத்தில் அவள் மீது அலாதி நம்பிக்கை. 

 

தன் மனைவி சரண்யாவிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்த அண்ணன் புறம் வந்த யாழினி, “அண்ணா… உனக்கு சடங்கு செய்றேன்ற பேர்ல நல்லா பாலு, பழம் லாம் சாப்பிட்டு தெம்பா இருக்க!”

 

“ஆனா நான் தான் பாவம் உனக்காகவும், இந்த பன்னிக்காகவும் சாரி அண்ணிக்காகவும் வேக வேகமா ஆபிஸ்ல இருந்து ஓடி வந்து பச்சை தண்ணி கூட குடிக்காமல் குளிச்சிட்டு கிளம்பி வேகமா வந்துட்டேன்… சீனியர் கூப்பிடுறான் சாப்பிட போயிட்டு வந்திடுறேனே. அதான் உனக்கு சடங்கு எல்லாம் முடிஞ்சிருச்சுல” என்று பெர்மிஷன் கேட்பது போல் பாவனை செய்தாள். 

 

“அடிப்பாவி சைடு கேப்புல என்னை வேற வம்பு இழுக்குறியா நீ” என்று தோழியின் காதைப் பிடித்து திருகினாள் சரண்யா. 

 

“ஏய் பிசாசு வலிக்குது டி…” என்று யாழினி சிணுங்க, 

 

“ஆமா ஆமா… நீ என்னை அண்ணின்னு மரியாதையா கூப்பிடறது விட பன்னி, எருமை, லூசு இந்த மாதிரி உரிமையா கூப்பிடுறது தான் டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று நெகிழ்ந்தாள் சரண்யா. 

 

சரண்யாவும், யாழினியும் எல்கேஜியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த உயிர்த் தோழிகள்.

 

“சரி சரி போயிட்டு வா” என்று வெற்றி மென் புன்னகையுடன் சொல்ல, 

 

“ஓகே ஆப்பிஸர்” என்று புன்னகையுடன் அவள் விடைபெற்று சென்ற அடுத்த ஐந்தே நிமிடத்தில் ஷ்யாமின் கார் அவனின் பங்களாவிற்குள் நுழைந்தது… 

 

சந்தோஷமாக பீச்சிற்கு செல்லவிருந்த யாழினி கண்ணீர் வடிந்த முகத்துடன் திரும்பி இங்கேயே வரப் போகிறாள் என்று அவளுக்கு தெரியவில்லை. 

 

Share on
❤️ Loading reactions...
அடுத்த பதிவு
4 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!