காதலா 2
தன்னுடைய BMW காரை பார்க் செய்து விட்டு வந்தவன் தனக்கு முதுகு காட்டி பீச்சை வெறித்துக் கொண்டிருந்த யாழினியை தொடாமல் ஆனால் நெருங்கியபடி, “ஹே யாழினி! ரொம்ப நேரமா எனக்காக காத்திருக்கியா” என்று அவளின் செவிமடலில் கிறக்கும் குரலில் அவன் தீண்ட,
அவனின் இந்த தீடீர் வருகையில் திடுக்கிட்டவளோ ஆணவனின் உஷ்ணமூச்சு தன் ஸ்பரிசத்தை தீண்டியதில் அவளின் உடலில் லேசான அதிர்வு…
அவளின் மனதில் பெரிய குற்ற உணர்வு…
அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை… தோழியின்றி அவனை எதிர்க்கொள்ள யாழினிக்கு தைரியமும் இல்லை.
அவனுடனான தனிமை அவளுக்கு பயத்தை தான் கொடுக்கிறது.
“சு…ந்தர் நான் கிளம்பணும். கொஞ்சம் தலைவலி” என்று அவள் அவனிடம் சங்கத்துடன் சொல்ல,
“என்னாச்சு யாழினி?” என்று அக்கறையுடன் அவன் கேட்க,
“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆயிடும்… நான் கிளம்பவா” என்று கேட்டாள்.
“உன் பிரண்ட் வரலன்னு தானே கிளம்புற…எத்தனை நாள் இதுன்னு நான் பார்க்குறேன் யாழினி” என்று தன் தலையை கோதியபடி சற்று கடுப்புடன் சொன்னான்.
“சாரி சு.. ந்தர்” என்ற பெண்ணவளோ கண்களில் கண்ணீருடன் தடுமாற, அவளின் கண்களில் சூழ்ந்த கண்ணீர் ஆணவனின் கோபத்தை மொத்தமாக வற்ற வைத்தது…
“ஹே எதுக்கு யாழினி உன் கண் கலங்குது… நீ கலங்குனா என் மனசு ரொம்ப பாரமா ஆகுது” என்று பெண்ணவளின் கண்ணீரை துடைத்தவன் அவளை கிளம்ப விட்டான்.
இதுநாள் வரை அவன் காரில் அவள் ஏறியதில்லை. அவன் அழைத்தும் அவள் மறுத்து தான் இருக்கிறாள்.
அவனிடம் ஒரு தலையசைப்புடன் விடைப்பெற்று விட்டு தன் ஸ்கூட்டியில் அவனது முதுகு காட்டிக் கொண்டபடி சென்றாலும், அவளுக்கு அழுகை தான் பீறிட்டது.
அடக்கிக் கொண்டாள்… வீட்டிற்குச் சென்றால் கேட்பார்களே என்று!
***
கண்ணீர் வடிந்த முகத்துடன் யாழினி ஷ்யாம் வீட்டிற்குள் நுழைய,
அவளை முதலில் கண்ட சேகர், “என்ன டா அதுக்குள்ள திரும்பி வந்துட்ட” என்று புரியாமல் கேட்டார்.
“கொஞ்சம் தலைவலி ப்பா” என்று சொன்னவளின் த்தொனி மற்றும் கண்ணீர் வடிந்த கண்கள் சேகருக்கு ஏதோ தவறாய் பட்டது.
ஆனால் இடம், பொருள், ஏவல் கருதி மகளிடம் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதி காத்தார்.
ஷ்யாம் ரெடி ஆகி வருவதற்கு உள்ளே சென்றிருக்க, சகுந்தலா ஃபோனிற்கு அவர்கள் குடும்பத்து ஜோசியர் திடீரென்று கால் செய்தார்.
“என்ன ஜோசியர் இந்நேரம் கால் பண்றாரு!” என்கிற யோசனையுடன் ஃபோனை எடுத்தார் பாட்டி.
“பாட்டி ம்மா வணக்கம்…” என்று பாந்தமான குரலில் அறுபது வயது பெரியவர் பேச,
“வணக்கம்… சொல்லுங்க ஜோசியரே… என்ன விஷயம்?”
“அது நம்ம ஷ்யாம் தம்பியிடைய கல்யாணம்” என்று அவர் இழுக்க,
“அதான் ரெண்டு மாசம் கழிச்சு தேதி குறிச்சி கொடுத்து இருக்கீங்களே!” என்று யோசனையுடன் சகுந்தலா சொல்ல,
“அதுல தான் ஒரு சிக்கல்… அதாவது உங்க பேரர் ஜாதகப்படி அவருக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் ஆகலைன்னா, இன்னும் அஞ்சு வருஷம் கல்யாணமே ஆகாது” என்று அவர் அழுத்தமாக சொல்ல,
“ஐய்யோ! என்ன ஜோசியரே திடீர்ன்னு நீங்க இப்படி சொல்றீங்க? உங்க கிட்ட ஷ்யாம் ஜாதகத்தையும், பொண்ணு ஜாதகத்தையும் காட்டித் தானே நாள் குறிச்சோம்” என்று சகுந்தலா பாட்டி ஆதங்கத்துடன் ஒலித்தார்.
“ஆமா ம்மா… அது அவங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் சேர்த்து பார்த்த போது அப்படி, இப்போ ஷ்யாம் தம்பி ஜாதகத்தை மட்டும் தனியா பார்த்தா அவர் ஜாதகத்துல இதான் சொல்லுது” என்று தீர்மானமாக சொன்னார் சகுந்தலா.
“சரி ஜோசியரே… நல்ல வேளை இப்போவாவது பார்த்து சொன்னீங்களே. இந்த ஒரு வாரத்துல நல்ல நாள் நல்ல நேரம் எப்போ வருது” என்று அவசரமாக கேட்டார் சகுந்தலா பாட்டி.
“இப்போ நான் குறிச்ச நேரத்துல தானே உங்க பேத்திக்கும் மாப்பிள்ளைக்கும் சடங்கு பண்றீங்க… இது ரொம்ப நல்ல நேரம் தான்… நாளையில இருந்து தேய்பிறை ஆரம்பிக்குது அதனால இப்போவே சிம்பிளா மஞ்சள் கயிறுல தாலி மட்டும் கட்டி கல்யாணத்தை நடத்திடுங்க. நம்ம குறிச்ச நாள்ல மண்டபத்துல பண்ணிக்கலாம்” என்று அவர் சொல்ல,
“சரி ஜோசியரே அப்படியே ஆகட்டும்” என்று முடித்தவர், சேகர் மற்றும் சாந்தியை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்களுக்கு முதலில் அதிர்ச்சி தான்.
ஷ்யாமிற்கும் யாழினிக்கும் ஒரு வருடம் முன்னரே கல்யாணம் என்று பெரியவர்கள் தீர்மானித்தது தான்!
முதலில் சரண்யாவின் கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஷ்யாம் தீர்மானமாக சொன்னதால் தான் அவளின் கல்யாணம் முதலில் அரங்கேறியது.
ஷ்யாமோ குளித்து விட்டு வேஷ்ட்டி சட்டையுடன் அவனின் கிளாஸியான அறையில் தயாரிக் கொண்டு இருக்க,
இங்கே ஹாலில் அமர்ந்திருந்த சகுந்தலா பாட்டியோ, “சாந்தி ஜோசியர் இப்படி திடீர்ன்னு கால் பண்ணி சொன்ன அப்புறம் என்ன பண்ண முடியும் நம்ம?” என்று கேட்க,
“ஆமாங்க அம்மா… அவர் சொல்றதை தான் நம்ம கேட்கணும்” என்று சாந்தியும் சொல்லிவிட்டு சேகரை பார்க்க, அவருக்கு மனதில் லேசான நெருடல்.
விஷயத்தை நினைத்து அவருக்கு சந்தோஷம் தான். ஆனால் மகளின் மனநிலையை நினைத்து மட்டுமே வந்த நெருடல் அது.
வெற்றி மற்றும் சரண்யா மிகுந்த சந்தோஷமாய் இருந்தார்கள்.
“இந்தப் புடவையை யாழினியை கட்ட சொல்லு ம்மா” என்று தன் அலமாரியில் புதிதாய் வாங்கிய பட்டுகளில் விலை உயர்ந்த பட்டு ஒன்றை எடுத்து சாந்தியிடம் கொடுத்தார் சகுந்தலா.
அதை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்ட சாந்தியோ, யாழினியின் புறம் வந்து அவளின் கண்களை கவனித்தாலும் கவனியாயது போல் அவளின் கையைப் பிடித்து ஹாலின் பக்கவாட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டார்.
பாட்டி விஷயத்தை பொதுப்படையாக அனைவர் முனனே சொன்ன போது அதைக் கேட்ட யாழினியின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்தது…
எதில் அகப்பட்டு விடக்கூடாது என்று மனதிலும் தன் அம்மாவிடம் இத்தனை நாள் போராடிக் கொண்டு இருக்கிறாளோ, இன்று அதில் அல்லவா முழுமையாக அகப்பட போகிறாள் யாழினி.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற நிலைமை தான்.
“அம்மா… ப்ளிஸ் ம்மா பிக் பாஸ்ல கூட நூறு நாள் தான் மா அடைச்சி வச்சிருப்பாங்க. ஆனா இங்க வாழ்க்கை முழுக்கா அந்த பிராந்தன் கூட சிறைப்பட்டு இருக்க முடியாது ம்மா” என்று கெஞ்சும் போதே யாழினியின் குரல் தழுதழுத்தது.
“யார் டி பிராந்து… நீ தான் பிராந்து… கல்யாண சமயத்துல லூசு மாதிரி பிக் பாஸ் பத்தி பேசிட்டு இருக்க. உனக்கு கொஞ்சம் கூட சூழ்நிலை தெரியல யாழினி” என்று அவர் பாட்டுக்கு பட்டு சேலையை ப்ரீ பீளிட் செய்ய ஆரம்பித்தார்.
“அந்த ஆள் வீட்டுல இருக்கும் போது நீங்களே லூசு மாதிரி தான் அம்மா பேசுறீங்க” என்று தலையில் அடித்து ஆதங்கப்பட்டாள் யாழினி.
“நான் பிராந்து ன்னா என் பொண்ணு நீயும் பிராந்து தான்” என்றார் சாந்தி சிறுபிள்ளை போல.
“ஏன் ம்மா… இங்க என்ன பிராந்து போட்டியா நடந்துக்கிட்டு இருக்கு” என்று கொந்தளித்த யாழினி,
“அந்த ஆள் ஒரு ஸ்டீரியோடைப் உள்ள ஆளு ம்மா… மேல் சாவினிஸ்டிக்” என்று யாழினி தன் விவாதத்தை ஆரம்பிக்க,
“ஸ்டாப்பெர்ரியோ சான்ட்விச்சோ நீ அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என்று உறுதியாக கூறினார் சாந்தி.
“படிக்காத உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டார் பார்த்தியா என் அப்பா அவரைச் சொல்லணும்” என்று தலையில் அடித்து நொந்தவளைப் பார்த்து சிரித்தார் சாந்தா.
“உன் அப்பா பெரிய படிப்பு படிச்சவரு டி… நான் படிக்காதவ தான்… அது ஏதோ சொல்லுவாங்களே…. ஆப்பிஸர் போல அட்ராக்ட் இஸ் புஸ்ஸுன்னு” என்று அவர் சொல்லிவிட்டு பார்க்க,
“கிழிஞ்சுது… அது அப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர் ம்மா… ஏற்கனவே நான் நொந்து நூடுல்ஸ்ஸா போயிருக்கேன். நீங்களும் ஏன் ம்மா உங்க துபாகூர் இங்கிலிஷ் வைச்சு என்னை போட்டு படுத்துறீங்க” என்று நகத்தை கடித்தவளோ, தன் ஃபோனில் சுந்தரிற்கு கால் செய்து கொண்டே தான் இருந்தாள்.
ஆனால் அவன் எடுத்தால் தானே!
கால்லை அணைத்துக் கொண்டே இருந்தான்…
இவளின் மீது அவனுக்கு கோபம்…
சுந்தருக்கு சட்டென கோபம் வந்து விடும்.
அந்த கோபம் சமநிலை அடைவதுக்கும் நேரம் எடுக்கும் … அதில் யாருடனும் பேச மாட்டான். முக்கியமாக கோபம் உள்ள ஆளிடம்.
“அது என்ன கருமமோ… வார்த்தையா முக்கியம் நமக்கு அர்த்தம் தான் முக்கியம்… உன் அப்பாவும் நானும் மொத்தமா வேற துருவம். ஆனா என்னை அவர் தங்க தட்டுல வைச்சு தாங்குறாரு தானே. அதே மாதிரி தான் உனக்கும் வாழ்க்கை அமையும்” என்று கிளிப் போட்ட முந்தானையை மகள் மீது வைத்து பார்த்தார்.
“அது அப்பா அப்படி ம்மா… ஆனா இவன் வேற!” என்று சொல்லும் போதே யாழினியின் கண்களில் கண்ணீர் மல்கியது.
இத்தனை நேரம் மகளை இலகுவாக்க தானே சாந்தி சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்…
அவரின் கைவிரல்களில் யாழினியின் கண்ணீர் படர, “உனக்கு வேற வழி இல்ல யாழினி… அவங்க வீட்ல பொண்ணை கட்டி கொடுக்குற இடத்துல தானே பையனைக்கும் பொண்ணு எடுப்பாங்கன்னு நியதி. இதெல்லாம் நீ கா…” என்று அவர் ஆதங்கத்துடன் சொல்ல ஆரம்பிக்கும் போதே,
“ப்ளிஸ் மா… போதும்! இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க… அந்த சேலையை வைச்சிட்டு போங்க. நான் கட்டிட்டு வரேன்” என்று கரகரத்த குரலில் சொன்னாள்.
பட்டு வேஸ்ட்டியில் தன் டுப்லெக்ஸ் வீட்டு மாடிப்படிகளில் கம்பீரமாக இறங்கி வந்த ஷ்யாமின் முகத்தில் இறுக்கம், கோபம் மட்டுமே!
“ஷ்யாம்” என்று அழைத்தபடி பேரனின் பக்கத்தில் வந்த பாட்டியோ ஜோசியர் சொன்ன அனைத்தையும் சொல்ல, அவனின் முகத்தில் அதே உணர்வு தான்…
வெளியே இறுக்கத்தை மட்டுமே காட்டிக் கொண்டு இருந்தவனின் இதயத்திற்குள் அப்படி ஒரு ரௌத்திரம்.
மதுவின் மீது அவனுக்கு காதல் இப்போதும் இருக்கிறது தான்… அதையும் விட நெடுநாட்களாக அவளின் மீதுள்ள கடுங்கோபம் தான் ஷ்யாமிற்கு அதிகம்.
அதே வெறுப்புடன், கடுப்புடன், ரௌத்திரத்துடன் யாழினியை திருமணம் புரியவும், உறவில் இணையவும் தயாராகிவிட்டான் காளையவன்.
ஷ்யாமிற்கு தன்மானம், அகங்காரம், கர்வம் தான் முக்கியம்…
அவனின் காதல் மொழி விசித்திரமானது, வித்தியாசமானது!
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அவன் உணர்வுகளை வெளிப்படுத்தாது, மதுவின் உணர்வுகளை மதிக்காது, ஏன் அவள் உணர்வுகள், ஆசைகளை என்ன என்பதை கூட அறிய முற்படாத, புரிந்துக்கொள்ளாத பிடிவாதக்காரன் தான் ஷ்யாம்.
அதிலும் ஷ்யாமிடம் முதலில் தன் காதலை சொல்லியது மது தான்!
ஏற்கனவே கர்வம் உள்ளவன் தன்னை தேடி வந்த காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை… அதை அலட்சியம் தான் செய்தான். ஆனால் காதலை ஒதுக்க நினைக்கவில்லை.
அவனைப் பொறுத்த வரை காதல் என்பது ஹார்மோன்களால் உண்டாகும் மாற்றம் அதனின் முதலும் முடிவும் செக்ஸ் மட்டும் என்பது தான்.
சேலை மாற்றிவிட்டாலும் யாழினியின் கண்களில் கண்ணீர் மட்டும் ஓயவில்லை…
எப்போதும் சிரிப்பின் கலகலப்பில் இருக்கும் பெண்ணவளுக்கு ஷ்யாமை திருமணம் செய்யும் முன்னரே அழுகை பரிசாக கிடைக்கிறதே!
ஷ்யாமின் குணத்தை யாழினி நன்கு அறிந்தவள் ஆயிற்றே…
சாந்தி கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, தன் கண்களை துடைத்துக் கொண்டவள் உணர்வின்றி கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
ஏற்கனவே அவள் விழாவிற்கு ஏற்ற மாதிரி ஜடை பின்னி பூ தான் வைத்திருந்தாள். அதனால் சேலை மாற்றிய பின்னர் தேவதையாகவே தெரிந்தாள் யாழினி.
அவளின் அழுது தோய்ந்த முகத்தை கண்ட சரண்யா, “என்ன ஆச்சு டி? உன் முகம் ரொம்ப அழுத மாதிரி இருக்கு” என்று மெதுவாக கேட்க,
சற்று தொலைவில் இருந்த சேகர் மற்றும் வெற்றியின் பார்வை தன் மீது தான் மொத்தமாக இருப்பதை கவனித்தவள்,
“ஒன்னும் இல்ல டி… கொஞ்சம் டையர்ட் அவ்வளவு தான்” என்று முடித்தாள்.
“கொஞ்சம் மேக்கப் பண்ணிக்கோ டி” என்று சரண்யா அவளின் கையைப் பற்ற,
யாழினிக்கும் தன் கண்ணீர் வடிந்த சோக முகத்தை மறைக்க முகமூடி தேவைப்பட்டது.
“சரி” என்று சொல்லியபடியே தோழியுடன் ஒரு அறைக்குள் சென்றவள் மேக்கப் முடிந்து திரும்பி வந்தவுடன் சிம்பிளாக கல்யாணம் நடந்தது… மஞ்சள் கயிற்றை உறவினர் மூலம் பக்கத்தில் வாங்கி வர சொல்லியிருந்தார் சகுந்தலா பாட்டி.
வெற்றி மற்றும் சரண்யா அமர்ந்திருந்த உயர் தர இருக்கையில் இப்போது ஷ்யாம் மற்றும் யாழினி அமர்ந்திருக்க, தன் கையில் கொடுக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை யாழினியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளாக கட்டி அவளை தன்னுடைய மனையாளிக்கி கொண்டான் ஷ்யாம்.
இருவரிடமும் இறுக்கமான முகம் தான்… ஆனால் யாழினியோ தன் குடும்பத்திற்காக அவ்வப்போது இலகுவாக்க முயற்சித்தாள்.
ஆனால் ஷ்யாமோ திருமணத்திற்கு முன் இருந்த இறுக்கத்தை விட இப்போது அதிக இறுக்கமாய் தான் காட்சியளித்தான்.
அதை கவனித்த வெற்றியோ, சரண்யாவிடம் ஷ்யாமை குறிப்பிட்டு என்ன என்பது போல் கேட்டான்.
வெற்றி தங்கைக்காக கோபத்தையும் அடக்குவான். தங்கைக்கு ஒன்று நேர்ந்தால் கோபத்தில் கொளுந்துவிட்டும் எரிவான்.
தன் அண்ணன் புறம் பயத்துடன் வந்த சரண்யா அவனிடம் மெதுவாக, “ஏதாவது ஆபிஸ்.. ல பிரச்சனையா அண்ணா… உங்க முகம் கோபமா இருக்கே” என்று தயங்கி கேட்டாள்.
அண்ணனிடம் இந்த மாதிரி கேட்பது சரண்யாவிற்கு எப்போதும் ஒரு வித தயக்கம் தான்… ஆனால் இன்று கணவன் இவ்வாறு கவனித்து சொன்னதால், கூடுதல் பயம் அவளுக்கு.
கணவனிடம் சரண்யாவிற்கு எப்போதும் பயம் தான்… வெற்றி கடுமையானவன் எல்லாம் இல்லை. ஆனால் தங்கைக்கு ஒன்று என்றால் கடுமையாகி விடுவானே!
தாலி கட்டிய பின் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால் ஒரு அண்ணனாக அவன் பதறத்தானே செய்வான்.
தங்கையின் கண்களில் பயத்தை உணர்ந்த ஷ்யாம் வெற்றியை பார்க்க, வெற்றியும் ஆராய்ச்சியாக ஷ்யாமை தான் அப்போது பார்த்துக் கொண்டு இருந்தான்.
“உன் புருஷன் கிட்ட சொல்லு ஆபிஸ் டென்ஷன்னு” என்று தங்கையை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன், தங்கைக்காக அவனின் முகத்தை இலகுவாக மாற்றிக் கொண்டான்.
தன்னால் தங்கையின் இல்லற வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று எப்போதும் தீர்மானமாக இருந்தான் ஷ்யாம்.
அடுத்து வீட்டிலேயே பாலும் பழமும் கொடுக்கும் சடங்கு நடந்தது. மாப்பிள்ளை மற்றும் பெண் எல்லாவற்றையும் செய்து முடிக்க, நேரமும் சரியாக இரவாகியிருந்தது.
அதுவரை அமைதி காத்த யாழினி, ஷ்யாம் சற்று தொலைவில் ஃபோன் பேச சென்றிருக்க…
தன் அம்மாவை தேடி சென்றவளோ, “பெரிய விஷயத்தை நீங்க நினைச்சத போல சாதீச்சிட்டீங்க… இப்போ நான் சொல்ற சின்ன விஷயத்தை என்ன பண்ண விடுங்க” என்று உறுதியுடன் சொன்னாள்.
“என்ன டி சின்ன விஷயம் சொல்ல போற… இதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணினாலும் அது பெரிய விஷயம் தான் யாழினி… உன் அப்பா வேற என்னை அப்போ இருந்து குறு குறுன்னு பார்த்துட்டே இருக்காரு! உன் சம்மத்துடன் நடக்குற மாதிரி காட்ட ரொம்ப சிரமப்பட வேண்டியதா இருக்கு… முடியல சாமி” என்று பெருமூச்சுவிட்டார் சாந்தி.
“ரொம்ப பதறாதீங்க ம்மா… நியாயத்துக்கு நான் தான் பதறணும். இது சின்ன விஷயம் தான். ஒன்னும் இல்ல… ரெண்டு மாசம் கழிச்சு தானே ஊரை கூட்டி மண்டபத்துல கல்யாணம்… அது வரைக்கும் நான் நம்ம வீட்லயே இருக்கேன்” என்று அவள் சொல்லி முடிக்க,
“எனக்கு இப்போவே லைட்டா நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கு டி” என்று மார்பில் கைவைத்து நொந்துக் கொண்டார் சாந்தி.
“அம்மா… மா” என்று அழுத்தத்துடன் மெதுவாக கத்தினாள் யாழினி.
“பின்ன என்ன டி… இது உனக்கு சின்ன விஷயமா! உன் அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயத்துல ஏதாவது சந்தேகம் வந்தா அவன் பொண்டாட்டியை வாழா வெட்டியா அனுப்பிடுவான்.”
“இவ்வளவு பேசுற நீ, இதெல்லாம் நீ கா…. “ என்று அவர் ஆரம்பிக்க,
“போதும் நிறுத்துங்க” என்று கையை நீட்டி நிறுத்தியவள்,
“நான் இங்கேயே இருக்கேன்… போதுமா! எனக்கு மாமியார் இல்லாத குறைய நீங்களே தீத்து வைக்குறீங்க ம்மா” என்று வேகமாக சென்றுவிட்டாள்.
“சப்பா முருகா முடியல… இதே வசனத்தை அவ குழந்தை பெத்துக்குற வரை உபயோகப்படுத்தி அவ வாயை மூட வைக்கணும்” என்று அவர் புலம்பலுடன் முணுமுணுத்துக் கொண்டார்.
வந்த உறவினர்கள் விடைப்பெற்று இருக்க, இரு குடும்பம் மட்டுமே இருந்த நிலையில்…
ஷ்யாம் அவனின் அறையில் ஒரு ஆபிஸ் வேலை பார்த்து கொண்டு இருக்க, சேகர் ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தார்.
சரண்யா வெற்றியுடன் அவளின் அறைக்குள் இருந்தாள்.
“இனி நான் யாழினி குரலை கேட்க ரேடியோவுல காத்திருக்க வேணாம்… தினமும் வீட்டுலயே நேரடியா கேட்கலாம்” என்று சகுந்தலா பாட்டி சந்தோஷத்துடன் சிரிக்க,
“என்கிட்ட சொல்லிருந்தா நான் தினமும் வீட்ல வந்து ஒரு ஷோவே பண்ணிட்டு போயிருப்பேனே பாட்டி. இப்போ என்னை ரெண்டு மாசம் முன்னாடியே ஜெயில்ல அடைச்சு போட்டீங்களே…” என்று ஆதங்கத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே இலகுவாக இழுத்து பேசினாள் யாழினி.
என்ன தான் துன்பம் இருந்தாலும், யாழினியால் பேசாமல் இருக்கவே முடியாது!
சுருங்கச் சொன்னால், உறங்கும் போது மட்டும் தான் அவளின் வாய் மூடும்.
“அடியேய்” என்று சாந்தி பதற,
“யாழினி க்கு எப்போவும் விளையாட்டு தான்” என்று சிரித்தபடி தன் அலமாரியை திறக்க சென்றார் பாட்டி.
“ஏம்மா! நான் சீரியஷா சொன்னால் இந்த பாட்டி காமெடின்னு சொல்லிட்டு போகுது…” என்று தன் தாயின் காதில் யாழினி நொந்துக் கொள்ள,
“உன் வாயை ஃபெவிக்கால் தான் வைச்சு ஒட்டணும் போல… அமைதியா தான் இரேன் டி இப்படியே உன் புருஷன் கிட்ட போய் வாயை கொடுத்துடாத” என்று மகளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் மெல்ல சலித்துக் கொண்டார் சாந்தி.
“இப்போ ஏன்ம்மா அந்த ஆளை நியாபப்படுத்துற” என்று யாழினி சற்று கடுப்புடன் குரலை உயர்த்த,
தன் குரலை செருமியபடி சகுந்தலா பாட்டியின் அறை வாயிலில் சாய்வாக மார்புக்கு குறுக்கே தன் கைகளை கட்டியபடி யாழினியை அழுத்தமாக பார்த்து நின்றுக் கொண்டு இருந்தான் ஷ்யாம்.
“ஷ்யாம்” என்று பாட்டி செருமிய குரல் வந்த திசை பார்த்து அவன் புறம் செல்ல,
சாந்தா மற்றும் யாழினியும் ஏற்கனவே அங்கே ஷ்யாம் இருப்பதை பார்த்து அதிர்ந்திருந்தார்கள்.
“எப்போப்பா வந்த?” என்று பாட்டி கேட்டபடியே பேரன் புறம் நடக்க,
“யாழினியை ஜெயில்ல வைச்சு அடைச்சிட்டீங்கன்னு உங்களை சொன்னாலே அப்போவே வந்துட்டேன்” என்று பாட்டியிடம் பதிலளித்தாலும் அவனின் அழுத்தமான பார்வை யாழினியின் மீது தான் இருந்தது…
“அது சும்மா விளையாட்டுக்கு ப்பா” என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி சகுந்தலா சிரிக்க,
“ஆமா தம்பி… அவ சும்மா விளையாட்டுக்கு பேசுனா… நீங்க எதுவும் மனசுல வைச்சிக்காதீங்க…” என்று மழுப்பி சிரித்தவரோ, அவரின் மகளையும் அவ்வாறு பேச வைக்க அவளின் கையை நைசாக சுரண்டினார்.
ஷ்யாமோ யாழினியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துட்டு தன் பாட்டியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
அவன் சென்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சுவிட்ட சாந்தி, “கல்யாணத்துக்கு முன்னாடி அழுதுக்கிட்டே இருந்த… இப்போ தான் நீ தெளிவாகிருக்க… நிம்மதி” என்று மகள் பேசும் விதத்தில் தாய் சற்று இலகுவானார்.
“என்ன பண்றது ம்மா அழுது அழுது கண்ணுல தண்ணியே வத்திப்போச்சு. எனக்கு யாரும் சும்மா சும்மா அழுதாலே பிடிக்காது. இதுல நானே அப்படி ஆயிட்டா என்னையே வெறுத்திடுவேன்” என்று உணர்வின்றி சொன்னாள்.
அதன் பின் அங்கு நிலவியது மௌனம் மட்டும் தான்!
இரவு பத்து மணி போல் யாழினியின் வீட்டில் அனைவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.
யாழினியை சாந்தி மூகூர்த்ததிற்கு கிளப்பிய சரண்யா, “என் பிரண்ட்டே எனக்கு அண்ணியாகுற மொமன்ட் இருக்கே மனசுக்குள்ள ஜிவ்வுன்னு இருக்கு” என்று யாழினியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
‘என் கடுப்பு புரியாம இவ வேற அண்ணி பன்னி ன்னு பேசி சாவடிக்குறாளே’ என்று மனதில் நொந்துக் கொண்டாள் யாழினி.
அவளின் அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரும் கிளம்பும் பொழுது யாழினிக்கு அழுகை வந்தது…
யாழினிக்கு இந்த வீடு புதிது அல்ல… ரொம்பவே பழக்கப்பட்ட வீடு தான்… தோழியுடன் இங்கு நிறைய முறை தங்கியும் இருந்திருக்கிறாள்.
ஆனால் இன்று ஷ்யாமின் மனைவியாக… தன் பிறந்த வீட்டை மொத்தமாக பிரிய இருக்கிறாள் அல்லவா…
ஷ்யாமோ இதில் எதிலும் கலந்துக்கொள்ளாமல் உணர்வுகள் துடைத்த முகத்துடன் அங்கு நின்றுக் கொண்டு இருந்தான்.
Join Whatsapp Channel (Group) to get quick updates –> Click Here

