காதலா 5
காதலா 5
யாழினி என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் மதுரயாழினியும் சரண்யாவும் சிறிய வயதில் இருந்தே பள்ளித் தோழிகள்…
நான்காம் வகுப்பில் இருந்து ஒரே வகுப்பில் தான் படித்தார்கள்… அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகள் தான்…
ஆனாலும் சரண்யாவின் வீட்டிற்கு வரும் பழக்கமெல்லாம் யாழினிக்கு இல்லை.
ஏனெனில் யாழினி வீடும், சரண்யா வீடும் திருமான்மியூரில் இருந்தாலும் யாழினி வசித்து வந்தது வசதி குறைந்தவர்கள் வாழும் இடம்… ஆனால் சரண்யாவோ மாளிகையில் வாழ்ந்து வந்தவள்.
அதனாலேயே யாழினியை சரண்யா வீட்டிற்கு அனுப்ப மாட்டார்கள்.
யாழினியின் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை யாரிடமும் ஏச்சு பேச்சுகள் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஏனெனில் வெற்றியின் பள்ளியில் படிக்கும் நண்பன் ஒருவன் வசதியுள்ள பையன் தான்.அவன் வீட்டிற்கு சென்று வெற்றியின் உடையை கேலி பேசி அவன் வீட்டிற்கு வந்த அனுபவம் எல்லாம் இருக்கிறது. அதனால் யாழினியை அங்கு அனுப்பவில்லை.
சிறிய வயதில் இருந்தே துறு துறுவென சுற்றிய யாழினியிடம் ஏதாவது விஷயத்தை சொன்னால் அதை பேச்சு வாக்கில் உளறியும் விடுவாள்.
யாழினியோ ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது, “அம்மா! ஏன் ம்மா சரண்யா வீட்டுக்கு மட்டும் விளையாட விட மாட்டிங்குறீங்க” என்று கேட்கும் நேரங்களில் எல்லாம்,
“அந்த பொண்ணு வீட்டு பக்கத்துல பூச்சாண்டி வருவாங்க யாழினி… அதனால வேணாம்” என்று சாந்தி மழுப்பியிருக்க,
“சரி ம்மா” என்று விட்டுவிட்ட யாழினி தன் ஜாக்கியுடன் விளையாட ஆரம்பித்தாள்.
ஜாக்கி, யாழினியின் வீட்டில் வளர்க்கப்படும் நாய்.
யாழினிக்கு நாய்கள் என்றாலே ரொம்ப பிடிக்கும்.
சேகரின் தாயின் பெயர் மதுராம்பிகை. அதில் இருந்து மதுரவை எடுத்து தான் யாழினிக்கு பெயர் சூட்டினார்கள்.
அன்னை பெயர் என்பதால் சேகர் அதை சொல்லாமல் இருக்க, மாமியாரின் பெயர் என்பதால் சாந்தி சொல்லாமல் இருக்க… தன் அன்னையை காதலித்து திருமணம் செய்ததால் ஒதுக்கிய பாட்டியின் பெயர் என்பதால் வெற்றியும் அழைக்காமல் இருக்க. அனைவருக்கும் வீட்டில் அவள் யாழினி தான்!
தெளிந்த நீரோட்டமாக சென்றிருந்த யாழினியின் வாழ்க்கையில், அவளுக்கும் சரண்யாவுக்கும் இடையேயான நட்பும் அழகாக வளர்ந்துக் கொண்டே தான் இருந்தது.
வருடங்கள் அவ்வாறு சென்றிருக்க, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளியில் பிரேக் பீரியடில், “யாழினி நீ நாளைக்கு கண்டிப்பா என் வீட்டுக்கு வரணும்… எங்க வீட்டுலயே பேட்மின்டன் கோர்ட் இருக்கு. நம்ம ஜாலியா விளையாடலாம்” என்று சொன்னாள் சரண்யா.
சரண்யா கூறுவதை கேட்ட யாழினிக்கு ஆசையாகத் தான் இருந்தது… ஆனாலும் சிறிய வயதில் இருந்தே மூனு கண்ண பூச்சாண்டி வரான் என்று சாப்பிடாதவளை சாந்தி பயமுறுத்தி சாப்பிடவைத்து பழக்கியதால் பெண்ணவளுக்கு பூச்சாண்டி மேல் ரொம்பவே பயம்.
“இல்ல சரண்… உங்க வீட்டுப் பக்கம் பூச்சாண்டி நிறைய இருப்பாங்களாம். அம்மா சொன்னாங்க அதனால நான் வரல… நீ வேணும்னா எங்க வீட்டுக்கு வாயேன்.”
“எனக்கு உங்க வீட்டுக்கு வரணும்… ஜாக்கி கூட விளையாடணும்… உன் அம்மாவோட சூப்பர் டேஸ்ட்டான சமையலை சாப்பிடணும்னு அவ்வளவு ஆசையா தான் இருக்கு. ஆனா அம்மாவும் அப்பாவும் விட மாட்டாங்க அதான்” என்று சோர்வாக சொன்னவள்,
“ஐடியா… உன்னை தனியா விட தானே பயப்படுறாங்க… உன் அண்ணாவோடு வாயேன்” என்று சொன்னாள் சரண்யா.
சரண்யா சொன்னதை கேட்டவுடனே முகம் மலர்ந்த யாழினி, “சூப்பர் ஐடியா… நான் அண்ணாவை கூட்டிட்டு வரேன்” என்று நம்பிக்கை கொடுத்தாள் யாழினி.
சரண்யா, இயல்பில் அமைதியான குணம் தான். யாழினியுடன் சேர்ந்து தான் கொஞ்சம் இலகுவாக பேசுகிறாள்.
வெற்றியும் யாழினி மற்றும் சரண்யா படிக்கும் பள்ளியில் தான் படித்தவன் தான்.
கல்லூரி செல்ல தயாரிக் கொண்டிருந்த வெற்றியிடம், “அண்ணா இன்னிக்கு சாயந்தரம் என்னை சரண்யா வீட்டுக்கு கூட்டிட்டு போயேன்” என்று அவனிடம் அவள் தனியாக கெஞ்ச,
தன்னுடைய பெற்றோர்கள் எதனால் சரண்யா வீட்டிற்கு இத்தனை வருடங்கள் யாழினியை அனுப்பவில்லை என்கிற விஷயம் தெரிந்த வெற்றி, “அம்மா, அப்பா ஓகே சொல்லிட்டாங்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“இல்ல அண்ணா… அவங்க கிட்ட உன்னை துணைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாலும் விட மாட்டிங்குறாங்க…”
“ஏன் வெற்றி அண்ணா… நீ ஆம்பிளை தானே அசிங்கமா இப்படி பூச்சாண்டிக்கு பயப்படுறீங்க!” என்று கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்த அண்ணனை பார்த்து ஆதங்கத்தில் கேட்டாள்.
தங்கை தன்னை அசிங்கப்படுத்தியதில் ஜெர்க் கான வெற்றி,
“உனக்கென்ன இன்னிக்கு சரண்யா வீட்டுக்கு தானே கூட்டிட்டு போகணும். அண்ணா கூட்டிட்டு போறேன். ஆனா அம்மா, அப்பா கிட்ட சொல்லாத” என்று சொல்ல,
“ஒகே அண்ணா… பொய் சொல்றது தப்பு தானே!” என்று தன் முட்டை கண்களை அகல விரித்தபடி கேட்ட தங்கையை பாசத்துடன் பார்த்தவன்,
“இன்னிக்கு சொல்றது தான் முதல் பொய், கடைசி பொய்… ஓகே வா” என்று வெற்றி சொல்ல,
“டபுள் ஓகே”
“அப்புறம் யாழினி என் பிரண்ட்ஸ் இந்த மாதிரி எல்லாம் ஆம்பிளை தானே நீ அப்படின்னு கேட்டு அசிங்கப்டுத்தாத ஆத்தா” என்று தங்கையிடம் கையெடுத்து கும்பிட,
“நான் அப்படி கேட்டதுனால தானே வெட்டி வர ஒத்துக்கிட்ட” என்று யாழினி கலாய்க்க,
“எதே வெட்டியா!” என்று அதிர்ச்சியில் வாயில் கைவைக்க
“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!” என்று மழுப்பலாக சிரித்தபடி இடத்தை விட்டு நகர்ந்தாள் யாழினி.
வெற்றியிடம் இவ்வாறு வம்பிழுக்க, கிண்டல் செய்ய யாழினிக்கு மட்டும் தான் இந்நாள் வரை உரிமை இருக்கிறது.தங்கையின் மேல் தான் மொத்த உயிரும் வைத்திருக்கிறான்.
சொன்னபடியே தங்கையை அன்று மாலை சரண்யாவின் வீட்டிற்கு அழைத்தும் சென்றான்.
வீட்டில், தன் நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று பொய் உரைத்துவிட்டு தன் தங்கையை தன் சைக்கிளில் அழைத்துச் சென்றான்.
காமராஜர் சாலையில் அமைந்திருந்த அந்த பெரிய பங்களாவின் கேட்டின் முன் வெற்றியின் சைக்கிள் நின்றது…
செக்யூரிட்டியிடம் விவரத்தை சொல்லி இருவரும் உள்ளே வர, தோழிக்காக கார்டனில் காத்துக் கொண்டிருந்த சரண்யாவிற்கு அத்தனை ஆனந்தம்.
சரண்யா வசதி உள்ளவள் என்று வெற்றிக்கு தெரியும். ஆனால் இவ்வளவு வசதியுள்ளவள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
‘யாழினி என்ன அசிங்கப்படுத்துனதுல அவளை இங்க அவசரப்பட்டு கூட்டிட்டு வந்துட்டேனோ’ என்று வெற்றி மனதில் நினைத்துக் கொண்டுருக்கும் போதே,
“ஹாய் யாழினி… ஹாய் வெற்றி” என்று சரண்யா அவர்கள் பக்கம் வர,
‘இந்தப் பொண்ணு நம்மளை முன்னாடி அண்ணான்னு மரியாதையா கூப்பிடும். இப்போ என்ன பெயர் சொல்லி கூப்பிடுது…பணம் வேலை செய்யுது போல’ என்று நினைத்துக் கொண்ட வெற்றி வெளியே சாதாரணமாக புன்னகைத்தான்.
ஒரு கையில் சைக்கிளின் கீசெயினும், மற்றொரு கையில் தங்கையின் கையைப் பிடித்திருந்தனை ஆர்வமாக பார்த்தாள் பதினைந்து வயது சரண்யா…
ஆம், ஆர்வம் தான்… இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வெற்றியை காதலுடன் பார்த்தாள் சரண்யா.
காதல் தான்… வெற்றியை யாழினியின் அண்ணனாக பள்ளியில் பார்த்திருக்கிறாள்.
வயதிற்கு வராத பருவத்திற்கு முன்னர் ஓரிரு முறை வெற்றியிடம் அண்ணா என்று அழைப்புடன் பேசியிருக்கிறாள் தான்.
ஆனால் வயதிற்கு வந்த பின்னர், அண்ணனாக தெரிந்த வெற்றி சரண்யாவிற்கு அவளின் மாயக் கண்ணனாக தெரிய ஆரம்பித்தான்.
வெற்றியின் ஆறடி உயரமும் அழகிய உருவம் மட்டுமே சரண்யாவிற்கு காதல் உணர்வுகளை உண்டாக்கவில்லை… இதுவும் ஒரு காரணம் மட்டுமே!
யாழினி தினமும் கொண்டு வரும் சாப்பாட்டின் சுவையில் சரண்யாவிற்கு அவளின் அம்மாவின் கைவண்ணத்தில் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.
அவர்களின் பள்ளி விளையாட்டு தினத்திற்கு, பேரன்ட்ஸ் மீட்டீங்கிற்கு மற்றும் ஆண்டு நாளிற்கு எல்லாம் யாழினியின் பெற்றோர்கள் தவறாமல் வந்து விடுவார்கள்.
யாழினியின் பெற்றோர்களின் இனிமையான, சகஜமான பேச்சு சரண்யாவை வெகுவாக ஈர்த்தது.
அவளுக்கு கிடைக்காதது எல்லாமே யாழினியின் வீட்டில் அளவிற்கு அதிகமாகவே கிடைத்தது…
சரண்யாவிற்கு எப்போதும் வீட்டிலிருந்து சகுந்தலா பாட்டி தான் பள்ளிக்கு சம்மந்தமான விஷயத்திற்கு வருவார்.
வீட்டில் எப்போதும் வேலையாள் செய்யும் சாப்பாடு தான்.விதவிதமாக, ருசியாக இருந்தாலும் அது சரண்யாவிற்கு அலுத்து தான் இருந்தது…
யாழினி அனுபவித்து கொண்டுருக்கும் எளிமையான, அழகான வாழ்க்கை தனக்கும் வேண்டுமென நினைத்தாள்.
ஆதலால் வெற்றியும் அவள் மனதில் அழையாத விருந்தாளியாய் நிரந்தரமாய் அமர்ந்து கொண்டான்.
அதனால் இப்போதெல்லாம் அண்ணாவென அழைப்பதை நிறுத்தியிருந்தாள்.
சரண்யாவின் காதல் பார்வைகளை உணராத வெற்றி யாழினியின் கையை விட்டு, “யாழினி… நான் இங்கயே காத்திருக்கேன்… நீ போய் விளையாடிட்டு வா” என்று தன் தோளில் மாட்டியிருந்த பையில் இருந்து புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
ஸ்கூலில் டாப்பர்… இப்போது கல்லூரி படிப்பிலும் சின்சியர் சிகாமணி தான் அவன்.
“நீங்களும் வாங்க வெற்றி” என்று சரண்யா ஆர்வமாக அழைக்க,
“இல்லம்மா பரவாயில்ல” என்று மென்மையாக ஆனால் உறுதியாக மறுத்துவிட்டான்.
வீட்டிலிருந்து தங்கையை அழைத்துக் கொண்டு வரும் போதே வெற்றி உள்ளே வர மாட்டேன் என்று ஸ்திரமாக சொன்னதால் யாழினியும் தன் அண்ணனிடம் புன்னகை முகத்துடன் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மாளிகை வீட்டில் முதன் முறையாக காலை எடுத்துவைத்த யாழினி வாயைத் தான் பிளந்தாள்.
மார்பிலால் கட்டப்பட்ட பளிங்கு வீட்டில் ஏகப்பட்ட வேலையாட்கள்… சகுந்தலா பாட்டி ஹாலிலேயே அமர்ந்திருந்தார்.
யாழினிக்கு சகுந்தலா பாட்டி நல்ல பழக்கம் என்பதால் நன்றாக பேச, அவரும் உற்காசமாக பேசினாள்.
“சரண்… உன் அம்மா, அப்பா, அண்ணா எல்லாம் எங்க டி? ஒரு தடவை கூட நான் நேர்ல பார்த்ததேயில்ல…” என்று அப்பாவியாக கேட்டாள் யாழினி.
இத்தனை நேரம் பிரகாசமாக இருந்த சரண்யாவின் முகம் சற்று சுணங்க, “சரண்யாவோட அம்மாவும், அப்பாவும் ஆபிஸ்ல இருந்து இன்னும் வரல ம்மா, சரண்யா அண்ணன் ஷ்யாம் சென்னையிலேயே பெரிய காலேஜ்ல ஹாஸ்டல்ல தங்கி இன்ஜினியரிங் படிக்கிறான்” என்று பேத்தியின் சோர்ந்த முகத்தை பார்த்து வருத்தப்பட்டபடி பாட்டி பதில் தந்தார்.
“ஓ அப்படியா பாட்டி…” என்று முடித்த யாழினி அதன் பின் சரண்யாவுடன் பேட்மின்டன் விளையாடிவிட்டு, பாட்டியிடம் சற்று நேரம் பேசிவிட்டு தான் சென்றாள்.
சகுந்தலா பாட்டிக்கு யாழினியை ரொம்பவே பிடித்துவிட்டது.
அவளை உட்கார வைத்து சாப்பிட வைத்து தான் அனுப்பினார் பாட்டி.
ஒருவேளை அவள் முன்னமே விவரித்திருந்தால் யாழினி அவளின் வாழ்க்கை என்று வரும் பொழுது உஷாராக இருந்திருப்பாளோ என்னவோ!
அதற்கு பின்னர் யாழினி சரண்யா வீட்டிற்கு செல்லவில்லை…
பள்ளிப்படிப்பு முடிந்த பின்னர் யாழினி தன் அண்ணனை போல் பொறியியல் படிப்பில் சேர, சரண்யா ஆர்ட்ஸ் தான் எடுத்தாள். அவளுக்கு என்ஜினியரிங்கில் பெரிதாக நாட்டமில்லை. ஆனாலும் யாழினிக்காக என்ஜினியரிங் எடுக்க தயாராகயிருந்தாள் சரண்யா.
“உனக்கு பிடிச்சத பண்ணு சரண். அப்போ தான் உனக்கு வாழ்க்கை சந்தோஷமா, ஜாலியா இருக்கும்” என்று யாழினி எப்போதும் கூறும் விஷயத்தை இப்போதும் கூற, தனக்கு பிடித்த BA., English எடுத்து படித்தாள் சரண்யா.
இருவருமே வெவ்வேறு கல்லூரியில் பிரிந்தார்கள் என்றாலும் அவர்களின் நட்பு செல்ஃபோன் மூலமாக அழகாக தொடர்ந்தது.
இப்படி தெளிந்த நீரோடையாக சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான் சரண்யாவின் அப்பாவும், அம்மாவும் ஓசூரில் சேர்ந்து ஒரு பிசினஸ் மீட் அட்டென்ட் பண்ணிவிட்டு வரும் பொழுது கார் விபத்தில் இறந்தார்கள்…
அதற்கு பின்னர் சரண்யா யாழினியை வார இறுதியில் வீட்டிற்கு அழைக்க, பெற்றோர்களை இழந்து கவலையில் ஆழ்ந்த சரண்யாவிற்காக யாழினியை சரண்யா வீட்டிற்கு அனுமதித்தார்கள் பெற்றோர்.
அதன் பின்பு தான் நிறைய முறை யாழினி சரண்யா வீட்டிற்கு செல்லத் தொடங்கினாள். யாழினி வீட்டில் முதலில் தயங்கினார்கள் தான்..
அவ்வப்போது யாழினியின் அம்மாவிற்கு கால் செய்து அழுவாள் சரண்யா!
அதில் சாந்திக்கு இரக்கம் மேலோங்கியது..
சரண்யாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவளின் அப்பா மற்றும் அம்மா எந்நேரமும் பிசினஸ் பிசினஸ் என்று அதன் பின்னே ஓடுபவர்கள்..
முழுக்க முழுக்க பாட்டியின் அன்பில், பண்பில் வளர்ந்தவள் தான் சரண்யா..
அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து அவளின் அப்பா மற்றும் அம்மா எந்நேரமும் பிசினஸ் பிசினஸ் என்று செல்வதால் என்னவோ அவளுக்கு பெற்றவர்களின் அரவணைப்பு கிடைத்ததே இல்லை..
அவளின் அண்ணா ஷ்யாம் கூட பெற்றோர்களின் வளர்ப்பால் பெரிதும் உணர்வுகளுக்குள் சிக்காமல் தான் வளர்ந்தான்..
சரண்யாவின் பெற்றோரை பொறுத்த வரை அவர்களின் பணம், அந்தஸ்துக்கு எல்லாமே தங்களின் வாரிசுகளுக்கு தான் சொந்தம்..
இன்று பிள்ளைகளை கவனிக்கிறேன் என்று அவர்களோடு இருந்து விட்டால் வருங்காலத்தில் அவர்களுக்கு சொத்து மதிப்பு குறைந்து விடும்..
பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வீட்டில் மாமியார் இருக்கிறார்.. அது போக அவர்களுக்காக பிரத்யேகமாக கேர் டேக்கரும் இருக்கிறார்!
ஷ்யாமும் சிறிய வயதில் இருந்தே அம்மா மற்றும் அப்பாவின் அன்பை விட வருங்கால பிசினஸ் டைகூன் என்ற வார்த்தைகளால் அவனை தயார் செய்தபடி வளர்த்தார்கள்.
அதனால் என்னவோ அவனுக்கு பாசம் என்றால் பெரிதான ஈர்ப்பு கிடையாது!
பாட்டி சகுந்தலா சரண்யாவிற்கு பாசம் அள்ளி கொடுப்பது போல ஷ்யாமுக்கும் அள்ளி தான் கொடுத்தார்.
ஆனால் அவன் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை!
அதனால் மனம் துவண்ட பாட்டி சகுந்தலா சரண்யாவை பொத்தி பொத்தி வளர்த்தார்.
ஷ்யாம் அவனின் அப்பா மற்றும் அம்மா இறக்கும் வரை சுத்தமாக ஓட்டுதல் இல்லாமல் தான் இருந்தான் குடும்பத்தோடு!
அனால் அவர்கள் இறந்த பின்பு கூட, சில நாட்கள் அவன் அதே ஒட்டுதல் இல்லாமல் இருக்க, அவனிடம் நடிப்புடன் அழுதபடி வந்து நின்றார் சகுந்தலா..
“என்னையும் என் பேத்தியையும் ஏதாவது ஆதரவு இல்லாத இல்லத்துல விட்டுடு ப்பா” என்று அவர் ஓவென அழ, அவருடன் நின்ற சரண்யாவும் சத்தம் இல்லாமல் அழுதுக் கொண்டு இருந்தாள்.
“ஏன் என்ன ஆச்சு?” என்று அப்போதும் புருவத்தை உயர்த்தி கேள்வியாக தான் கேட்டான் ஷ்யாம் சுந்தர்.
அவன் தான் பாசம் என்றால் என்ன என்று கேட்கும் ரோபோவாச்சே!
“நீ தான் என்னையும் உன் தங்கச்சியையும் சுத்தமா கண்டுக்கவே மாட்டிங்குறியே..” என அழுது புலம்பினார்.
“நீங்க ரெண்டு பெரும் நல்ல தானே இருக்கீங்க! உங்களை கண்டுக்க நீங்க ரெண்டு பெரும் என்னை நம்பி தான் பொறந்தீங்களா! வாட் நான்சென்ஸ்” என்று வல்லென்று விழுந்தான்.
‘நல்ல வளர்த்து வெச்சு இருக்காங்க இவன் அப்பா அம்மா!’ என மனதில் சலித்த சகுந்தலா பாட்டி,
“நீ வா சரண்யா.. நம்ம இப்போவே போயி முதியோர் இல்லத்துக்குல போயி சேருவோம்.. நாளைக்கு டிவி, நியூஸ்பேப்பர்ன்னு வரும் பிரபல தொழிலதிபரின் மகன்.. வளர்ந்து வரும் புது தொழில் அதிபரான ஷ்யாம் சுந்தர் அவனின் சொந்த பாட்டியையும் அவனின் சொந்த தங்கையையும் வீட்டை விட்டு துரத்தி விட்டான் என்று அப்படின்னு ஹெட்லைன்ஸ்ல வரப் போகுது” என அவர் போலியாக மூக்கை உறிந்து சொன்னார் பாட்டி.
“வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்” என ஷ்யாம் சுந்தர் கத்த,
“நான்சென்ஸோ நான்வெஜ் சென்ஸோ அதெல்லாம் மக்களுக்கு தெரியாது.. டீவியில வந்தா அப்படியே நம்பிடுவாங்க” என்றார் பாட்டி ரைமிங்காக.
“என்னை மீறி இதை எவன் அப்படி பண்ணுவான்!” என்று கர்வமாக சொன்னான் அவன்.
“எவனும் பண்ண மாட்டான்.. ஆனா நான் பண்ணுவேன்” என்றார் பாட்டி பட்டென்று.
‘அட்ரா சக்க’ என்று மனதில் பாட்டியை பாராத்தினாள் சரண்யா.
அண்னன் மீது அவளுக்கு மலையளவு பாசம்.. பெற்றோர் இருக்கும் போது எல்லாம் அவள் எதிர்பார்ப்பது பாசமும், நேசமும் தான்.. தன்னுடன் அவர்கள் நேரம் செலவழிக்க வேண்டும்!
அனால் இது எதுவும் நடக்காமல் கோடி கணக்காக பணம் இருந்து என்ன பயன்!
அவளுக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து அவளின் அம்மா அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது கிடையாது.
ஷ்யாம் மற்றும் சரண்யா வின் அப்பா சுந்தர் மற்றும் மாலதி அப்படி மாறியதுக்கு பெரிய கதை உண்டு!
சுந்தர் முதலில் எல்லாம் ரொம்பவே இன்முகம். மாலதியும் அப்படி தான். இருவருமே பெற்றவர்களின் பாசத்தில் ராஜா மற்றும் ராணி போல தான் வளர்ந்தார்கள்.
மாலதியின் தோழி ரேஷ்மா ரொம்பவே கஷ்டப்பட்ட பெண் என்பதால் தன்னுடைய கணவனிடம் சொல்லி வேலை போட்டு கொடுத்தாள் மாலதி.
ரேஷ்மாவும் திருமணம் ஆன பின்னர் தன் கணவன் பாபுவை உள்ளே நுழைத்தாள்…
பாபுவையும் நம்பி உள்ளே வேலைக்கு வைத்தார்கள்..டிகிரி படித்து இருந்தான் அதைத் தாண்டி தோழியின் கணவன் என்கிற நம்பிக்கையில் இருவரையும் உள்ளே விட்டுருக்க,
ஒரு நாள் சுந்தரின் பாணத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து கம்பெனியில் வைத்திருந்த ஐம்பது கோடி மதிப்புள்ள பான்ட்டை எடுத்து விட்டு ஊரை விட்டே ஓடி விட்டார்கள்…
அவ்வளவு தான்.. சுந்தர் தலையில் பெரிய ஐடி விழ, மாலினி தலையில் பேரிடி விழுந்தது..
அவர்களுக்கு அத்தனை நஷ்டம்… அதையும் தாண்டி தாங்கள் மலை போல் நம்பியர்கள் இப்படி செய்வார்கள் என்று மாலினி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை..
அப்போது ஷ்யாமிற்கு வயது மூன்று தான் இருக்கும்..
உடைந்து விட்டார் சுந்தர்.. போலிஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டார்கள்..
“இவ்வளவு பெரிய பணக்காரங்களா, தொழில் அதிபரா இருந்துட்டு இப்படி தெரிஞ்சவங்க, ஃப்ரெண்ட்னு நம்பி பணத்தை ஏமாந்து இருக்கீங்களே” என்றார் ஆதங்கமாக.
இதை எல்லாம் கேட்ட சுந்தருக்கு அவமானமாக இருந்தது.. பக்கத்தில் அமர்ந்து இருந்த மாலதிக்கோ குற்ற உணர்ச்சியை தாண்டிய வேதனை, அவமானம் எல்லாம் ஒருங்கே வந்து படுத்தியது.
அவர் உடைந்து போனதால் அவர்களின் பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக சருக்கத் தொடங்கியது..
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓடியிருந்தது..
பணமும் கிடைக்கவில்லை.. பணத்தை எடுத்தவர்களைப் பற்றிய தடையமும் கிடைக்கவில்லை..
சுந்தரின் மனக்கவலையால் தொழிலில் கவனம் சிதறி, தொழில் இறங்கு முகம் காண ஆரம்பித்தது..
“விடுப்பா சுந்தர்.. நம்ம கிட்ட இல்லாத சொத்தா” என மகனை தேற்றிய சகுந்தலா,
“இருந்தாலும் நீ கவனமா இருந்து இருக்கணும் மாலினி” என்றார் மருமகளை மனதில் நொந்தபடி.
அனைத்து தப்புகளும் இப்போது தன்னால் என்று வந்த தருணத்தில் மனம் உடைந்த மாலினிக்கு ஒரு வெறி வந்தது..
தன்னால் இழந்ததை தானே மீட்டு கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவர், யார் சொல்லியும் கேட்காமல் விடாப்பிடியாக கணவனுடன் தொழிலைக் கையில் எடுத்தார்.
அந்நாள் வரை துவண்டு இருந்த கணவனை தேற்றியவர், “இனி நானும் உங்களோட பிசினஸ் பாக்க வரேன்” என்றார்.
சோர்ந்து துவண்ட சுந்தருக்கு அது நம்பிக்கையை கொடுக்க, அடுத்த நாளில் இருந்தே கணவனும் மனைவியும் சேர்ந்தே தொழிலில் இறங்கினார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கணவனும் மனைவியும் இரவும் பகலுமாக உழைத்தார்கள்.
அதனின் விளைவு இரண்டு வருடங்களில் கணவன் விட்ட இடத்தை பிடித்து கொடுத்து விட்டாள் மாலினி.
இந்த இரண்டு வருடத்தில் சுந்தர் மற்றும் மாலினி இருவருமே தீர ஆலோசித்து எடுத்த முடிவு தான் யாரையும் இனி ஒருபோதும் மனது ரீதியாக நம்பக்கூடாது.
அதனின் விளைவு தங்கள் பிள்ளைகளிடம் அதீத பாசத்தை கொடுப்பதை நிறுத்தினார்கள்..
பாசம் மனதில் நிறையவே இருந்தது.. ஆனால் எங்கே அதைக் காட்டி அவர்களும் நாளபின்ன யாரிடமாவது மனம் இளகி ஏமாந்து விடுவார்களோ என்கிற பயத்தில் சுந்தர் மற்றும் மாலினி ஒருமனதாக முடிவு எடுத்து செய்ய, சகுந்தலா எவ்வளவோ எடுத்து சொன்னார்.. ஆனால் பயன் இல்லை..
இதோ இன்று அவர்களின் வளர்ப்புக்கு அத்தாட்சியாக உணர்வுகளின் பிடியில் சிக்காமல் முழு ஆறடி ஆண்மகனாக இரும்பாக வளர்ந்து நிற்கும் அவர்களின் மகன் ஷ்யாம் சுந்தரை வழிக்கு கொண்டு வர முடியாமல் நடிப்பில் இறங்கிவிட்டார் பாட்டி.
அவருடன் கூட்டு சேர்ந்து விட்டாள் சரண்யா..
பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தால் என்னவோ அவளுக்கு பாசம் மீதும் அன்பின் மீதும் ஏக்கம் அதிகமாக போனது..
இன்று பாட்டியின் பிளாக்மெயிலுக்கு பயப்படாமல் திடமாய் நின்ற ஷ்யாமின் பிசினஸ் மூளை அலெர்ட் ஆகியது..
பாட்டி சொன்னது போல் வெளியே கசிந்து விட்டால் தன்னுடைய அந்தஸ்து என்ன ஆவது என்று அவனின் மூளைக்குள் தோன்ற,
“இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என எரிச்சலை அடக்கிய குரலில் கேட்டான்.
“நீ என்னையும், உன் தங்கச்சியையும் பாசமா பாத்துக்கணும்.. பாசம்ன்னா சொகுசா வைச்சுக்கிறது இல்ல கண்ணா.. எங்களை அக்கறையா பாத்துக்கணும்” என்று அவர் போலி கண்ணீரை விடாமல் பேச,
ஷ்யாமுக்கு கடுப்பு.. இதுவரை பாசம் என்னும் உணர்வை உள்வாங்காமல் வளர்ந்தவனிடம் திடீரென பாசம் காட்டு, பாயாசம் காட்டு என்றால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்..
ஆனாலும் எங்கே பாட்டி வெளியே ஏதாவது உளறிவிட்டால் தன்னுடைய அந்தஸ்துக்கும், தகுதிக்கும் வெளியே பேசும் பொருளாகி விடுமோ என மனதில் பிசினஸ் மூளையுடன் யோசித்தவன்,
“சரி பண்றேன் போதுமா” என சொல்லிவிட்டு சென்றவனை, சகுந்தலா பாட்டி அடுத்த நாளில் இருந்தே சின்ன பிள்ளை போல் அன்பு கொடு என்று டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்.
இப்படி சென்றுக் கொண்டு இருந்த தருணத்தில் தான் சரண்யாவிற்கு வெற்றியையும் அவனின் வீட்டையும் ரொம்பவே பிடித்தது..
மதுரயாழினியின் வீட்டிலும் சரண்யாவின் பெற்றொர்கள் இறந்த பின், அவளின் மீது ரொம்பவே இரக்கப்பட தொடங்கினார்கள்..
சரண்யாவின் வேண்டுகோளின் படி யாழனியையும் அவ்வப்போது சரண்யாவின் வீட்டுக்கு அனுப்பினார்கள்..
ஆறடியில் கண்ணையும் மனதையும் அசைத்துப் பார்க்கும் ஆண்மையுடன் இருப்பவனை யாழினி அவ்வப்போது பார்ப்பாள்.. ரசனையுடன் தான்!
அவனின் குணம் அவளுக்கு தெரியாது.. அவன் சரியான அலட்சியக்காரன், கர்வி, திமிர் பிடித்தவன் இதையெல்லாம் தாண்டி உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவன் என்றெல்லாம் அவளுக்கு தெரியவே தெரியாது..
ஏற்கனவே வெற்றியை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்த சரண்யாவோ யாழினியின் பார்வை தன் அண்ணன் மீது அவ்வப்போது படிவதை பார்த்து மேலும் சந்தோஷப்பட்டவள் அதை அவளின் பாட்டியிடம் சொல்லி விட்டாள்.
சகுந்தலாவுக்கு சரண்யாவின் காதல் விவகாரமும் தெரியும் தான்..
இப்போதும் ஷ்யாம் அவர்கள் மீது பாசத்தை பொழிபவன் அல்ல.. ஆனால் அவர்களின் வார்த்தையை ஓரளவுக்கு செவி சாய்க்கிறான்.
பாட்டி மற்றும் தங்கையிடம் தினமும் பத்து நிமிடம் கண்டிப்பாக பேசுவான்.
இதெல்லாமே பாட்டி ஆரம்பித்து அவன் கடுப்பில் செய்தது.. நாள் போக போக அவர்களின் மீது அன்பு படரத்தொடங்கியது என்னவோ உண்மை தான்..
ஆனாலும் அதை பாட்டி மற்றும் தங்கையிடம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளக்கூடாது என்று மிகவும் சிரத்தையுடன் தான் இருந்தான்.
ஏனெனில் அன்பு அவனை பலவீனப்படுத்துவதாய் அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது..
அது அவனுக்கு பிடிக்கவில்லை..
பின்னே இருக்காதா.. இத்தனை வருடங்கள் இறுக்கமாக வளர்ந்தவனுக்கு இந்த புது அன்பு மனம் எல்லாம் கெட்டதாய், ஒட்டாத தன்மையாக தோன்றியது..
பாட்டிக்கும் சரண்யாவுக்கும் ஷ்யாம் இவ்வளாவது இருப்பதே பெரிய விஷயம் என்று அவனின் மனநிலைக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டார்கள்..
வெற்றிக்கு அரசு வேலை கிடைத்த புதிது அது..
அவனை ஒருதலையாக காதலித்த சரண்யாவோ அவனிடம் தன் காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று ஆர்வமும், பயமும் ஒரங்கே சேர்ந்து வளம் வர,
அவன் தன்னை ஏறெட்டு பார்க்க மாட்டானா என்று வழி மேல் விழி வைத்து பார்த்தாள்..
ஆனால் வெற்றியோ அவளை பார்த்து மென் புன்னகை புரிவதொடு சரி, அதன் பின்னர் பேசவே மாட்டான்..
இவனிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று சரண்யா யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான்,
“உன் அண்ணன் கமிட்டடா டி” என அன்று வீட்டுக்கு வந்து இருந்த யாழினி கேட்டாள்.

