பிரியாதிரு 1

அனந்தகிரி ஹில்ஸ், ஹைதராபாத்

அன்று காலை எப்போதும் போல் நேரத்திற்கே விழித்து இருந்தாள் அமிர்தா.. 

இரண்டாம் வருடம் எம்பிஏ வில் இருக்கிறாள்… இன்னும் மூன்று மாதத்தில் முடிந்துவிடும்… 

ஏனோ மனம் சற்று வெறுமையாக இருந்தது… 

அவளின் தோழி சாருபாலாவும் அமேரிக்காவில் இருக்க, அவளுடன் தன் பாட்டி லட்சுமியும் இருக்க, அனன்யா வேறு இப்போது சென்னையில் இருக்கிறாள்… 

அனைவரிடமும் ஃபோனில் பேசலாம் தான்… ஆனால் நேரில் இருப்பது போன்ற உணர்வு வராது இல்லையா… 

அதுவும் இப்போது வீட்டின் பொறுப்பை ஏற்று இருப்பது விஜய், அமிர்தாவின் பெரியப்பா மகன்… 

இந்திரஜித்தின் மினி வெர்ஷன் தான் விஜய்… (இந்திரஜித் மற்றும் சாருபாலாவின் கதை இந்திரனின் ஊர்வசியே அதை படித்தால் அவர்களின் கதை புரியும்).

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விஜய் மீது இந்திரஜித்தின் அளவிற்கு அமிர்தாவிற்கும், அனன்யா விற்கும் பயம் இல்லை தான்… அதே சமயம் பிடிப்பும் இல்லை… 

என்ன இருந்தாலும் இந்திரஜித் முதலில் இருந்தே தங்கைகள் மீது அக்கறை காட்டி வந்தான்… 

ஆனால் விஜய் அப்படி கிடையாது… பக்கா சுயநலவாதி… அவனிடம் பேசினால் கூட கடமைக்கே என்று தான் பதில் வரும்… 

இப்போது நினைத்தால் அவனை பற்றி இந்திரஜித்திடம் சொல்லலாம்… 

ஆனாலும் சொல்ல மனம் வரவில்லை… காரணம் விஜய்யின் அன்னை விசாலாட்சி… அன்னை போல பார்த்துக் கொள்ளும் மனம் படைத்தவர்… 

அவரை தனக்கும், அனன்யாவிற்கும் முழுதாக பாசத்தை காட்ட விடாமல் தடுப்பதும் விஜய் தான்… 

விஜய்க்கு குருவான இந்திரஜித்தே இப்போது தங்களிடம் அத்தனை இலகுவாக இருக்கையில் விஜய்யும் அப்படி மாறுவான் என்று நினைத்த தங்கைகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது… 

விஜய்யை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்ட்ரோவெர்ட்… பழக்கம் இல்லாத விஷயத்தை பழகிக் கொள்ள வெகுவாக யோசிப்பான்… பெரிதாக பேச மாட்டான்… 

மொத்தத்தில் அவனின் உலகம்… அவன் மற்றும் அவனின் அம்மா! ஏன் அவனின் இரட்டையர்களில் ஒருவரான அஜய்யிடமே அளந்து தான் பேசுவான்… 

இதையெல்லாம் தாண்டி இந்திரஜித்திடம் விஜய் அண்ணா எங்களை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை கடமைக்கே என்று தான் பேசுகிறார் என்று சொன்னால் அண்ணன் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவான் என்கிற பயம் வேறு… 

ஏற்கனவே வெகு நாட்கள் கழித்து மனைவியுடன் சேர்ந்து இருக்கிறார்… 

இப்போது ஏன் தங்கள் பிரச்சனையை சொல்லி அவரை டென்ஷன் ஆக்க வேண்டும் என அக்கா தங்கை இருவரும் அண்ணனிடம் மறைக்கிறார்கள் என்பது தான் உண்மை… 

பெரியப்பா சுந்தரம் முன்னை போல கடுமை இல்லை தான்… ஆனாலும் அக்கறை என்று பெரிய ஒட்டுதல் காட்டவில்லை… 

பெரியம்மா வரலட்சுமியோ இப்போது வீட்டில் யாருடனும் பெரிதாக பேசுவது இல்லை.. அவர் செய்த பிழை அவரையே திருப்பி அடிக்க, இப்போது தனிமையில் தன்னையே வருத்துகிறார்… 

“அம்மு! நம்ம ரெண்டு பேருமே சொந்தக் காலுல நிக்கணும் டி… யாரையும் எதற்கும் எதிர்ப்பார்க்கக் கூடாது” என அவளின் அக்கா அனன்யா சொன்னது அப்படியே அவளின் மூளைக்குள் ஏற, 

இதோ இப்போது தன் குரலை ஃபோட்போலியோ செய்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சினிமை துரைக்கு அனுப்புகிறாள்…

அப்படி போன வாரம் வந்த வாய்ப்பு தான் ஒரு விளம்பரத்திற்கு பிண்ணனி குரல் கொடுப்பது…

அதை வெற்றி கரமாக முடித்தும் விட்டாள்… 

இன்று அது வெளிவர இருக்கிறது என்று அந்த விளம்பரத்தை எடுத்த இயக்குனர் சொன்னார்… அவளின் வறண்ட வாழ்க்கையில் கார் மேகத்தை போல தன் குரல் வளம் மூலம் மழை பொழியாதா என காத்து இருக்கிறாள் அமிர்தா… 

அவளின் சிந்தனை இவ்வாறு இருக்க அவளின் ஃபோன் அடித்தது… அனன்யா தான் அடித்து இருந்தாள்… 

“சொல்லு அன்னு” என்றவளிடம், 

“ஆபிஸ்ல ஒரு பெரிய பிரச்சனை அம்மு” என தடுமாறினாள் அனன்யா… அழுது இருப்பாள் போல! 

“என்னாச்சு அன்னு! ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு” என பதறினாள் அமிர்தா… 

“ஒரு பிராஜெக்ட்க்கு டேட்டா லோட்டிங் வொர்க் இருந்துது… அதுக்கு நான் தான் பொறுப்பு.. அதெல்லாமே ஹைலி கான்ஃபிடென்ஷியல் டேட்டா அம்மு… அது என் ஷிஸ்டம்ல டெலீட் ஆயிடுச்சு” என பதறினாள் அனன்யா… 

“என்ன டி சொல்ற!” என பதற்றத்தில் நெஞ்சில் கைவைத்தாள் அமிர்தா. 

“ஆமா டி… ரொம்ப பயமா இருக்கு… இனி என்ன நடக்கப் போகுதோ!” என கரகரத்த குரலில் சொன்னாள். 

“பேசாம இந்திரஜித் அண்ணா கிட்ட” என அமிர்தா வேகமாக எடுக்க, 

“அண்ணாவை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ண கூடாது அம்மு” என அப்போதும் கறார் காட்டி திட்டினாள். 

“அப்போ என்ன தான் பண்ண போற!” என எரிச்சலுடன் கேட்டாள் அமிர்தா. 

“மெமோ கொடுத்து இருக்காங்க… எச்ஹார் பேச போறாராம்.. நான் முடிஞ்ச அளவு சாரி கேட்குறேன்” என சுரம் இறங்கினாள். 

“நீ எப்படி அன்னு இவ்வளவு அலட்சியமா இருந்த” என கவலையாக தலையில் கைவைத்தாள் அமிர்தா.. 

“உண்மையா நான் அதை டெலீட் பண்ணல அம்மு… சத்தியமா எப்படி நடந்துச்சுன்னு இன்னும் எனக்கு புரியல” என விழித்தாள் அனன்யா… 

“சரி விடு பாத்துக்கலாம்” என அமிர்தா தேற்ற, 

“கொஞ்சம் பயமா இருக்கு டி” என உடைந்த குரலில் சொன்னாள். 

“எங்க எல்லாருக்கும் தைரியம் கொடுக்குற நீயே பயப்படலாமா அன்னு… எல்லா பிரச்சனைக்கும் தீர்வுன்னு ஒன்னு இருக்கும்” என தேற்றினாள். 

“இல்ல அம்மு… ரெண்டு வருஷம் பாண்ட் போட்டு தான் டி இங்கே வேலைக்கு சேர்ந்தேன்… ஏதாவது பிரச்சனைன்னா வேற வேலை கூட தேட முடியாது” என்றாள் சோர்வாக. 

“நீ அவ்வளவு எல்லாம் யோசிக்காத அன்னு… நீயே வேணும்னா பாரு… சீக்கிரமே பிரச்சனை எல்லாம் சால்வ்ட்டுன்னு சொல்லப் போற” என சமாதானம் செய்தாள். 

“உன் படம் என்ன ஆச்சு அன்னு” என பேச்சை மாற்றினாள்…

“படத்துக்கு மியூசிக் போட்டு கொடுத்தாச்சு அம்மு… பேமென்ட் மட்டும் தான் பென்ட்டிங்… சர்வா க்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்” என் மனதார சொன்னாலும் அவளின் மனதில் பிரச்சனை சோர்வு இருந்தது.. 

“ஆமா அன்னு… ஹி ஹிஸ் ஆல்வேஸ் ஸ்வீட்” என சொல்லும் போதே அவளின் உதடுகள் புன்னகை புரிந்தது…

“அப்புறம் எப்போ கல்யாணம் மேடம்” என அனன்யா கிண்டலடிக்க, 

“அதுக்கு நீ வழி விடணும் அன்னு” என்றாள். 

“க்கும்.. இந்த அஷ்வினை கரெக்ட் பண்றதுக்குள்ள நான் பாட்டி ஆயிடுவேன் போல… எனக்காக நீ காத்திருக்காத…” என்றாள் உண்மையாக. 

“அதான் இப்போ நீயும் அவரும் நெருக்கம் ஆயிட்டீங்களே” என அமிர்தா கலாய்க்க, 

“இந்த நெருக்கம் எல்லாம் பத்தாது அம்மு… இன்னும் வேணும்” என்றாள் ஆசையாக. 

“பாத்தியா! அஷ்வின் அத்தானை பத்தி பேசினா உன் பிரச்சனையை கூட மறந்துடுற… இதான் டி லவ்” என அமிர்தா மென்மையாக கூற, 

“என் லவ்வை புகழ்றது எல்லாம் இருக்கட்டும்… உன் ஷர்வா தான் ரெடியா இருக்கான் தானே! நீ ஷர்வாவை கட்டிக்கோ” என்றாள். 

“ம்ம்… ஷர்வா வீட்டுலயும் ஓகே தான்… பாலா இப்போ பிரெக்நென்ட்டா இருக்கா அவ டிராவல் பண்ணி வரணும்ல அதுக்கு தகுந்த நேரமா பாக்கணும்…” என்றவளிடம், 

“பாட்டி நம்ம ரெண்டு பேர் கல்யாணம் பத்தி தான் விசாலாட்சி பெரியம்மா கிட்டயும், அண்ணியும் கிட்டயும் பேசினாங்களாம்” என்றாள் அனன்யா. 

“உனக்கு யாரு… உன் அண்ணி சொன்னாங்களா” என வேண்டும் அன்றே அண்ணி என்கிற வார்த்தையை அழுத்தி சொன்னாள் அமிர்தா… விஜய்க்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகிறது… அவனின் மனைவியைத் தான் அமிர்தா குறிப்பிடுகிறாள்…

“அண்ணி ஸ்வீட் தான் டி… பாவம் என்ன ஜென்மத்துல பாவம் செஞ்சாங்களோ இந்த சிடுமூஞ்சி விஜய் அண்ணா கிட்ட வந்து மாட்டிக்கிட்டாங்க” என்றாள் கிண்டலாக. 

“நம்ம டெரர் இந்திரஜித் அண்ணாவே லவ்வர் பாய் ஆகிட்டாரு… அப்போ விஜய் அண்ணா லாம் ஜுஜூபி” என்றாள் அமிர்தா. 

“அதுவும் சரி தான்” என்றவளிடம், “எனக்கு செக்ண்ட் கால் வருது அன்னு… அப்புறம் பேசுறேன்” என கால்லை துண்டித்தவள், ஒரு தெரியாத நம்பரில் இருந்து தனக்கு கால் வந்து இருப்பதை கண்டு, யோசனையுடன் அந்த நம்பருக்கு அடித்தாள்… 

“ஹலோ நீங்க அமிர்தா தானே” என தன்னை ஒரு இசையமைப்பாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான் ஒரு ஆடவன்.. 

“சார்… நீங்களா!” என அதிர்ச்சியில் திணறினாள்… 

ஒர் இரண்டு படத்திற்கு தான் இசை அமைத்து இருக்கிறான் என்றாலும் அவனின் புகழ் நிறைய பேர் பாடி இருக்கிறார்கள்… 

“நானே தான்.. ஒரு படத்துக்கு பாட்டு ரெக்கார்ட் பண்ணனும்… நீங்க இப்போ என்னோட ஸ்டுடியோக்கு வர முடியுமா” என அவன் கேட்க, 

“சார்.. கண்டிப்பா வரேன்… நீங்க எனக்கு அட்ரெஸ் சொல்லுங்க” என சந்தோஷ பதற்றத்தில் சொன்னவள், 

“என்னை யார் சார் உங்களுக்கு ரெஃப்பர் பண்ணினா” என ஆர்வத்துடன் கேட்டாள். 

“நீங்க டப் பண்ணிட்டு வந்த விளம்பரத்தோட இயக்குனர் தான்ம்மா” என முடித்தவர் விலாசத்தை சொல்ல, 

அதை வேகமாக குறித்துக் கொண்டவள் ஒரு உற்சாகத்துடன் குளித்துவிட்டு கிளம்பினாள்… 

சனி, ஞாயிறு அவளுக்கு விடுமுறை என்பதால் இலகுவாக வெளியே செல்லலாம்… 

‘நல்ல வேளை சளி பிடிக்கல’ என மனதில் நிம்மதியாக நினைத்தபடியே பஸ் ஏறினாள் அமிர்தா… கடந்த ஒன்றரை வருடமாக இங்கு இருந்து தெலுங்கை நன்றாகவே பழகி வைத்திருந்தாள்.. 

ஆம், இந்திரஜித் நன்றாகவே பணம் கொடுக்கிறான்.. விஜய்யும் கடமை தவறாது கொடுக்குறான்… ஆனாலும் பணத்தை தேவை இருந்தால் மட்டுமே செலவு செய்யும் வைராக்கியம் இவளிடமும், அனன்யாவிடமும் இருந்தது…

எப்படியோ வந்து சேர்ந்தவளை இன்முகத்துடன் வரவேற்றான் அந்த படத்தின் இசையமைப்பாளர்… 

“இந்த படத்தோட பிரொடீயூசர் சிந்துஜா மேடம்” என அவன் சொல்ல, அசந்தே விட்டாள்… 

சிந்துஜா பின் இருபதுகளில் இருக்கும் பெரிய தொழில் அதிபரின் மகள்… 

கடந்த ஐந்து வருடங்களாக திரைத்துறையில் வெற்றி தயாரிப்பாளராக வலம் வருகிறாள்…. 

ரெக்கார்ட்டிங்கில் பாடலை பாடி முடித்து விட்டு அந்த படத்தின் இசையமைப்பாளரிடம், “ஓகே வா சார்” என அங்கிருந்தபடி சைகை செய்து கேட்டாள் அமிர்தா.. 

“பக்கா அமிர்தா” என சைகை காட்டியவனோ நோக்கி இன்முகத்துடன் நடந்து வந்தாள் அமிர்தா.. 

“உங்களுக்கான பேமென்ட் நாளைக்கு வந்துடும்… ஹோட்டல் க்ரீன் பார்க் வந்திடுங்க” என்றான். 

“இதுக்கு எதுக்கு சார் ஹோட்டலுக்கு எல்லாம்” என பதற்றமாக கேட்டாள். 

“அங்க நாளைக்கு மூவி டீம் மீட் பண்றாங்க ம்மா… சிங்கர்ஸ்ஸயும் டேரக்டர் வர சொல்லியிருக்காரு” என அவன் சொல்ல, அமிர்தாவுக்கு சரி என்பதை சொல்வதை தவிர வேறு வழியில்லை… 

ஏனெனில் அவளுக்கு இது முதல் பாட்டு… வெற்றிகரமாக வெளியே வர வேண்டும் என கடவுளை மனதார வேண்டினாள்..

அன்று இரவு அமிர்தா செய்து கொடுத்த விளம்பரம் வெளிவந்தது… ஆனால் வேறொரு குரலில்! இதனை அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை… 

ஆதங்கத்தில் அந்த விளம்பரத்தை எடுத்த இயக்குனருக்கு கால் அடித்தவள், “எனக்கு பேமென்ட் எல்லாம் கொடுத்தீங்களே சார்… இப்போ வேற வாய்ஸ் வந்துருக்கு” என சோர்வாக கேட்டாள்.. 

“அது உன் வாய்ஸ் விட பெட்டர் வாய்ஸ் கிடைச்சுது ம்மா.. மீடியான்னா இப்படி தான்.. வெளிவர வரைக்கும் எதுவுமே நிரந்தரம் கிடையாது… அதான் இப்போ உனக்கு படத்துல பாடுற வாய்ப்பே கிடைச்சு இருக்கே… அப்போ என்ன!” என அவர் சலிப்பாக கேட்க, அமிர்தாவால் அதன் பின்னர் எதுவும் பேச முடியவில்லை… 

சோர்வாக கால்லை அணைத்தவள் அன்றிரவு சாப்பிட பிடிக்காமல் அமைதியாய் அமர்ந்திருக்க, சர்வா கால் அடித்தான்… 

“அம்மு… அந்த விளம்பரத்துல உன் வாய்ஸ் வரவே இல்ல” என அவன் ஏமாற்றமாக சொல்ல, 

“என்னை விட பெட்டர் வாய்ஸ் கிடைச்சுதா.. அதான் என்னை தூக்கிட்டாங்க” என வெறுமையாக சிரித்தபடி சொன்னாள். 

“வாட் நான்சென்ஸ்.. உன் வாய்ஸ் அளவுக்கு எல்லாம் அந்த பொண்ணு வாய்ஸ் இல்லவே இல்ல… சி உன்னோட

வாய்ஸ் ஹஸ்கியா இருக்கும் டா… அப்படியே கேட்குறவங்களுக்கு அடிக்ட் ஆகும்” என்றான் ரசனையாக. 

“உன்னோட ரசனை மட்டும் தான் சர்வா என் குரலை உயிர்ப்போட வைச்சிருக்கு… இல்லன்னா எனக்கே என் குரல் மேல நம்பிக்கை போயிருக்கும்.. அப்படி என்ன டா நான் உனக்கு ஸ்பெஷல் என்னை விட பெட்டரா உனக்கு பொண்ணு கிடைப்பா” என்றாள் கரகரத்த குரலில்… 

“ஓய்… நான் அன்னிக்கு கோவில்ல உன் கண்ணைப் பார்த்து சோன்னேன்… நீ எப்போவுமே எனக்கு தான் எதுக்காகவும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்… இதுக்குத் தான் அம்மு சொல்றேன்.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு” என அவன் சொல்ல, 

எப்போதும் போல் மௌனமாக இருந்தவள் என்ன நினைத்தாலோ, “பண்ணிக்கலாம் சர்வா…அதுக்கு முன்னாடி என் அண்ணா கிட்டயும், அன்னு, பாலா கிட்டயும் பேசணும்” என்றாள் யோசனையாக. 

அவள் என்ன சொல்ல வருகிறாள் என சர்வா விற்கு புரியாமல் இல்லை… 

“சப்போஸ் எல்லாமே கேட்டு அவங்க வேணாம்னு சொல்லிட்டா” என சர்வா சற்ற் பதற்றமாக கேட்க, 

“எனக்குமே என்ன செய்யன்னு தெரியல சர்வா… ஆனா மூனு பேரும் சரி சொல்லணும்னு தான் நான் வேண்டுறேன்” என அவள் சொல்ல, முதல் முறையாக கல்யாண விஷயத்தில் தனக்கு நம்பிக்கை கொடுத்து பேசுபவளை உடனே திருமணம் செய்ய சொல்லி அவனின் மனம் துடித்தது… 

அவனின் மௌனத்தை உணர்ந்தவள், “ஓய்.. அண்ணா, பாலா எல்லாம் சரி சொல்லலன்னா அவங்களை நீ கன்வின்ஸ் பண்ண மாட்டியா என்ன!” என அவள் பொய் கோபத்துடன் கேட்க, 

“அவங்க கால்ல விழ கூட நான் ரெடி அம்மு” என்றான் ஏக்கமாக. 

“அப்போ என்ன சர்வா… ஃபிரியா விடு… பாத்துக்கலாம்… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றாள் சந்தோஷமாக..

“என்ன சர்ப்ரைஸ் அம்மு!” என சர்வா ஆர்வமாக கேட்க, 

“நாளைக்கு நைட் சொல்றேன்… அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்றாள் புன்னகை முகத்துடன்… 

“ம்ம்… ப்ளிஸ் அம்மு சொல்லேன்” என கெஞ்சினான். 

“நோ நோ சர்வா… நாளைக்கு நைட் வரை வெயிட் பண்ணு மேன்” என்றாள் கட்டளையாக. 

“ஓகே ஐ அம் வெயிட்டிங்” என புன்னகை மாறாமல் சொன்னவன் சற்று நேரம் பேசிவிட்டு வைக்க, 

‘நாளைக்கு பேமென்ட் வாங்கிட்டு தான் உன்கிட்ட விஷயத்தை சொல்லுவேன் சர்வா… வீடியோ கால் பண்ணி பேசணும்.. அப்போ தான் அவன் ரியாக்ஷனை பாக்க முடியும்’ என நாளைய நாளை எண்ணி உற்சாகமாக இருந்தாள் அமிர்தா… 

அடுத்த நாள் இசையமைப்பாளர் சொன்னது போல் மாலை ஐந்து மணி அளவில் ஹோட்டல் க்ரின் பார்க்கிற்கு வந்த அமிர்தா, இசையமைப்பாளரிற்கு கால் செய்தாள். 

“சார் நான் வந்துட்டேன்… ரிசெப்ஷன் பக்கம் நிக்குறேன்” என்றாள்… 

“அது பார்ட்டி கேன்சல் ஆயிடுச்சு ம்மா..” என்றவனிடம், “அச்சோ! சரிங்க சார் அப்போ நான் திரும்பி போயிடவா” என கேட்டாள். 

அவளுக்கு இந்த பார்ட்டியில் எல்லாம் கொஞ்சமேனும் விருப்பம் இல்லை… பார்ட்டி இல்லை என்றதும் நிம்மதி என்பது போல் இருந்தாள்… 

“என்ன அமிர்தா உங்களுக்கு பேமென்ட் வேண்டாமா! நீங்க பேமென்ட் வாங்குற வரை உங்களுக்கு பாட்டு உறுதி கிடையாது” என்றான் அழுத்தமாக. 

“அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லையே சார்… எங்க வந்து பேமென்ட் வாங்கணும்னு சொல்லுங்க… நான் வாங்கிக்குறேன்” என பணிவாக தான் சொன்னாள்… 

“ரூம் நம்பர் 301 இல் பிரொடீயுசர் இருப்பாங்க… அங்க போய் வாங்கிட்டு நீங்க கிளம்புங்க..  உங்களுக்கு பாட்டு கன்ஃபார்ம் ஆயிடும்” என்றான். 

‘பிரொடீயுசர் ன்னா சிந்துஜா மேடம் தானே.. சரி வாங்கிட்டு கிளம்புவோம்’ என முடிவெடுத்தவள், 

“சரிங்க சார்” என ஆவலாக ரூம் நம்பர் 301 நோக்கி சென்றாள்… 

கதவு தட்டப்பட்டும் ஓசை கேட்க, “எஸ் கம் இன்” என சிந்துஜா வின் குரல் கேட்க, சற்று நிம்மதியாகவே உள்ளே சென்றாள் அமிர்தா… 

என்ன படத்திற்காக பாடினாள் என அவளுக்கு தெரியாது… 

ஆனால் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரை மட்டும் அவளுக்கு தெரியும்… 

அந்த தைரியத்தில் அவள் உள்ளே செல்ல, வெளியே கதவு சாற்றப்பட்டு இருந்தது…

அதில் திடுக்கிற்றவள், உள்ளே சிந்துஜாவைத் தேட அவள் இருந்தால் தானே! 

‘என்ன இது கதவு தானா லாக் ஆயிடுச்சு.. சிந்துஜா மேடம் வாய்ஸ் வந்துச்சு ஆனா ஆளைக் காணும்… ஒருவேளை ஏதாவது பேய் கீய் இருக்குமோ’ என பயத்தில் அவள் நினைக்க, 

“வெல்கம் அமிர்தா” என அவளின் காது மடலில் தன் கணீர் குரலில் அவளின் பக்கத்தில் உரசியும் உரசாமல் நின்றபடி சொன்னான் ஆத்மன் ரெட்டி… 

சிந்துஜாவின் குரல் கேட்டு உள்ளே வந்தவளுக்கோ இந்த ஆறடி ஆண்மகனை கண்டு தூக்கிவாரிப் போட்டது… 

“ஐ அம் ஆத்மன் ரெட்டி… நீ பாடுன படத்தோட மூவி டேரக்டர்” என மார்புக்கு குறுக்கே தன் கைகளை கட்டியபடி தமிழில் தான் பேசினான்… 

டெனிம் சட்டையும், ஜீன்னும் அணிந்திருந்தாலும் அதிலும் கம்பீரமாக தான் இருந்தான் ஆத்மன் ரெட்டி… 

“நா… நான் தப்பா வந்துட்டேன் போல” என பயத்தில் தடுமாறியவள் வேகமாக கதவை நோக்கி செல்ல எத்தனிக்க, அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை… 

அவனின் வலிய கரம் அவளின் மென் கரத்தை சிறைப் பிடித்து வைத்திருந்தது… 

“ச..சார் என்ன பண்றீங்க! கைய விடுங்க” என அமிர்தா பதற, அவளை விஷமமாக பார்த்து புன்னகைத்தவனோ, அவளை தன் பிடிக்குள் கொண்டு வந்து அவளின் காது மடலில், “நீ இந்த ரூம்மை விட்டு வெளியே போகணும்னா… என் கூட ஸ்பெண்ட் பண்ணிட்டு போ” என அவன் மிரட்ட வெல்லாம் இல்லை அசால்ட்டாக சொன்னபடி அவளின் செவி மடலில் முத்தமிட, அவனின் வார்த்தைகளிலும் செயலிலும் கொதித்தே விட்டாள் அமிர்தா… 

“யூ பிளடி இடியட்” என கத்தியவளோ அவனிடம் இருந்து விடுபட திமிற, அவளை தன் இரும்புப் பிடியில் சிறை வைத்திருந்த 

ஆத்மனோ, “இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்ல… அதுக்குள்ள இப்படி பண்ணா எப்படி பங்காரம்” என்றவன் சத்தமாக சிரிக்க, அமிர்தாவிற்கு உள்ளுக்குள் உதறியது… 

“நீ பாடுன பாட்டு வெளியே வரணும்னா ஜஸ்ட் ஸ்பெண்ட் வித் மி” என்றான் பாருங்க… ஆடிப்போய் விட்டாள் அமிர்தா. 

“இதுக்காக என் உடம்பை விக்குற அளவுக்கு நான் கேவலமான பிறவி இல்ல…” என சினத்துடன் சொன்னவள் அவனை தன் முழு பலம் கொண்டு உதறி விட, மேலும் சத்தமாக சிரித்தான் ஆத்மன். 

அதில் அமிர்தாவிற்கு உதறல் எடுத்தாலும், அவள் எதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை… 

சினிமா துறை என்றபோதே அரசல் புரசலாக அங்கு நடக்கும் லீலைகள் பற்றி அறிந்தவள் தான்… 

ஆனாலும் தான் பாட்டு தானே பாடுவோம் தனக்கு என்ன பிரச்சனை நேர்கிற போகிறது என தைரியமாக வந்தவளை இப்போது திடுக்கிட வைத்தான் இந்த ஆத்மன் ரெட்டி… 

அவனிடம் இருந்து கஷ்டப்பட்டு விலகி வந்தாள் என்பதை விட ஆத்மன் தான் அவனின் இரும்புப் பிடியை தளர்த்தி தன் கைகளை ஸ்டைலாக தன் பான்ட் பாக்கெட்டினுள் போட்டு, 

“தட்ஸ் ஃபைன் அமிர்தா… பட் நான் இன்னும் முடிக்கல…உன்னோட அக்கா அனன்யா இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஃபோன் பண்ணுவா… அதுக்குப் அப்புறமும் நீ வெளியே போகணும்னா தாராளமா போ” என்றவனின் த்தொனியில் கர்வம் தான் நிறைந்து இருந்தது… 

‘என்ன சொல்றான் இவன்!’ என மனதில் பதறிய அமிர்தாவை மேலும் பதறடிக்க அமிர்தாவின் கைப்பையில் இருந்த அவளின் மொபைல் அலறி அதனின் இருப்பைக் காட்டியது… 

கைகள் நடுங்க கைப்பையைத் திறந்தவள் தன் ஃபோனை எடுத்து பார்க்க ஆத்மன் சொன்னது போல் அனன்யா தான் கால் செய்துக் கொண்டு இருந்தாள்… 

அதில் அவளின் கண்கள் அதீத அதிர்ச்சியை காட்ட அவளிடம் இருந்து ஃபோனை லாவகமாக எடுத்தவன் அதை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட, 

“ஹலோ அம்மு…” என பதறியபடி ஆரம்பித்தாள் அனன்யா… 

“அம்மு.. என்னை ஜெயில்ல போட போறேன்னு எல்லாம் சொல்றாங்க டி… ஒன்னுமே புரியல” என்று அழுதவளிடம், “அ.. அன்னு என்னாச்சு! முதல்ல பதறாம சொல்லு” என தன் பதற்றத்தை ஓரம் தள்ளி, அக்காவிற்காக பதறினாள் அமிர்தா. 

“அந்த பிரச்சனை சொன்னேன்ல… டெலீட் ஆன டாக்குமென்ட் அது எங்க காம்ப்படீட்டர் கம்பெனிக்கு போயிடுச்சாம்… அதை நான் தான் வித்தேன்னு என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கப் போறேன்னு சொல்றாங்க… எனக்கு என்ன பண்றதுனே தெரியல” என மறுமுனையில் அழுதாள் அனன்யா… 

 

Share on
❤️ Loading reactions...
அடுத்த பதிவு
2 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!