பிரியாதிரு 5
பிரியாதிரு 5
“எனக்கு கிறுக்கு எல்லாம் பிடிக்கலங்க… உண்மையை தான் சொல்றேன்! உங்க தங்கச்சி குடும்பம்றதுனால நீங்க சோனியாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றார் லதா.
“நிறுத்து லதா.. எனக்கும் சோனியா மேல கோபம் இருக்கு. அந்த பொண்ணு இவனுக்காக சாகுற நிலைக்கு போயிருக்கு.. அந்த பொண்ணு இவனை பிரியா கூடாதுன்னு இருக்கற போது நம்ம எப்டி அதுக்கு வழுக்கட்டாயமா விவாகரத்து கொடுக்க முடியும்” என்றார் முருகன் ஆதங்கமாக.
“ஏன் ப்பா.. அவ சொன்ன பொய். பித்தலாட்டம் எல்லாம் கோர்ட் ல சொன்ன விவாகரத்து கிடைக்காதா.. கண்டிப்பா கிடைக்கும்” என்றான் விக்னேஷ்.
“உன் தங்கச்சியோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு விக்னேஷ்” என முருகன் சோர்வாக இழுக்க,
“நானும் அப்படி நினைச்சு பயந்தேன் தான்.. ஆனால் மாப்பிள்ளையே சோனியா பண்ண தப்புக்கு அவளை மன்னிக்காமல் தான் இருக்காரு, அப்போ எதுக்கு நம்ம அந்த பொண்ணுக்காக யோசிக்கணும்” என்று ஆதங்கமாக கேட்டார்.
“எனக்கு அவ வேண்டாம் ப்பா” என்றான் விக்னேஷ் அழுத்தமாக.
“உனக்காக சாக துணிஞ்சு..” என தந்தை ஆதங்கத்துடன் ஆரம்பிக்கும் போதே,
“அதெல்லாமே வெறும் நடிப்பு ப்பா.. இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க” என தந்தையிடம் குரலை உயர்த்தி சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் முருகன்.
தன்னிடமே எகிறும் மகனிடம் இனி என்ன பேசுவது என சோர்ந்தே விட்டார் முருகன்…
தன் கணவனிடம் ஏகுறிய மகனை பார்க்கையில் லதாவிற்கே சற்று அதிர்ச்சி கலந்த கோபம் தான்..
அதற்காக மகனின் உணர்வுகளையும் மதிக்காமல் இல்லை அவர்..
முருகன் மட்டும் மருத்துவமனையில் இருக்க லதாவும் மகனுடன் கிளம்பிவிட்டார்..
முருகனுக்கு மனது கேட்கவில்லை.. இத்தனைக்கும் அவருக்கும் சோனியா மீது கோபம் தான்..
ஆனாலும் தன் மகனுக்காக தற்கொலைக்கு முனைந்து இருக்கும் அவளை அப்படியே விட்டு விடுவது அவருக்கு நல்லதாக படவில்லை!
சோனியா மெல்ல கண் விழித்தாள்.. தான் உயிரோடு இருப்பது புரியவே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது!
ஏன் பிழைத்தோம் எதற்கு பிழைத்தோம் என அவளின் மனது அலறிக் கொண்டு இருக்க, அவள் கண் விழித்த செய்தியை நர்ஸ் மூலமாக அறிந்த பெற்றோர்கள் வேகமாக உள்ளே வந்து அழுது கேள்வி கேட்க, சோனியாவிடம் பதிலே இல்லை..
குனிந்து அமர்ந்து இருந்தாள்… மனம் மரத்து விட்டது..
“என்னை ஏன் காப்பாத்துனீங்க!” என நிமிராமலே வெறுமையாக கேட்டாள் சோனியா.
சோனியாவின் பெற்றவர்கள் பின்னாடியே முருகனும் உள்ளே வந்தார்..
யாரையும் நிமிர்ந்து பார்க்காதலால் அங்கு முருகன் வந்த விஷயம் அவளுக்கு தெரியாது…
“பைத்தியம் மாதிரி பேசாத ஸ்வீட்டி” என வரலட்சுமி கண்ணீர் வடிக்க,
“உனக்கு நாங்க விக்னேஷ்ஷை விட பெஸ்ட் மாப்பிள்ளை பார்க்க போறோம்” என ஆதங்கம் கலந்த கரகரத்த குரலுடன் சொன்னார் சுந்தரம்.
சோனியா ஒன்றும் பேசவில்லை.. அமைதியாக தான் இருந்தாள்!
அவளின் அமைதியே இப்போதைக்கு பெற்றவர்களுக்கு நிம்மதியாக இருக்க..
முருகனுக்கு தான் அவளின் அமைதி பயத்தைக் கொடுத்தது..
அவரும் ஆதற்கு மேல் அங்கு இல்லை கிளம்பி விட்டார்.
ஒரு வாரம் கடந்து இருக்கும்!
சோனியாவிற்கு ஒருவர் மாற்றி ஒருவர் அன்பும் ஆதரவும் கொடுக்க, உயிருள்ள பிணமாக தான் வெறுமையாக இருந்தாள் சோனியா..
தற்கொலை ஒரு நிமிடத்தில் அவள் மீண்டும் செய்து விடலாம்.. அதை செய்து விட்டால் அவளுக்கும் இந்த மன அழுத்தத்தில் இருந்து முழுதாக விடுதலை கிடைத்து விடும்.
ஆனால் அவளின் தற்கொலை எண்ணத்தை தவுடு பொடியாக்கியது அவளின் அண்ணன் இந்தரஜித்ஜின் கால்..
ஆம்.. முருகனால் இவ்விஷயம் சாருபாலாவிற்கு தெரிந்தது..
“அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசு பாலாம்மா.. உன் அண்ணனை நினைச்சு அந்த பொண்ணு தற்கொலை பண்ண போயிடுச்சு” என நடந்த அனைத்தையும் சொல்ல, சாருபாலாவிற்கு அத்தனை அதிர்ச்சி!
அவளிடம் யாரும் இதைப் பற்றி சொல்லவில்லை.. புரிந்து கொண்டாள் வேண்டும் என்றே தான் தன் கணவனின் வீட்டில் தங்களிடம் சொல்லவில்லை என்று!
அவளுக்கு சோனியாவிடம் பேச வேண்டி இருந்தது.
அதன் முன்னர் தன் அண்ணனிடம் பேச முடிவு செய்தவள், அடுத்து தன் அண்ணனுக்கு கால் செய்தாள்.
பொதுவாக தங்கையின் நலனை எப்போதும் போல பாசமாக விசாரித்தவன் இப்போது எல்லாம் இந்தரஜித்தையும் கூட விசாரிக்குறான்.
பின்னே தன் தங்கையை ராணி போல வைத்து இருக்கிறான் அல்லவா அவளின் கணவன். அவன் மீது இருந்த கோபம் எல்லாம் இவனுக்கு இப்போது எங்கோ பறந்து விட்டது.
தங்கையின் மகனுடன் சற்று நேரம் வீடியோ காலில் விளையாடிக் கொண்டு இருந்தான்..
அதை ஏக்கமாக பார்த்த சாருபாலா, “நம்ம கொஞ்சம பேசலாமா அண்ணா” என கரகரத்த குரலில் கேட்டாள்.
“சொல்லு பாப்பா” என்றவனோ தங்கையின் முகத்தை ஆராய்ந்தான்.
“சோனியா..” என்று அவள் ஆரம்பிக்க,
“அதை பத்தி தான் பேச போறன்னா போனை வெச்சிடுறேன் பாப்பா” என்றான் இறுக்கமான குரலில்.
“அண்ணா.. பிளீஸ் போனை வெச்சிடாதீங்க” என கெஞ்சினாள் தங்கை.
தங்கையின் கெஞ்சல் விக்னேஷை வறுத்தினாலும், “அவளுக்காக கெஞ்சுற அளவுக்கு அவ தகுதியானவ இல்ல பாப்பா” என்றான் வெறுமையான குரலில்.
“அவங்க இப்போ திருந்திட்டாங்க அண்ணா” என்று சாருபாலா விளக்க,
“நீயும் அவ நாடகத்தை நம்புரியா பாப்பா” என்று ஆதங்கமாக கேட்டான் விக்னேஷ்.
“நாடகமா.. எதை நாடகம்னு சொல்றீங்க அண்ணா” என்று புரியாமல் கேட்டாள் சாருபாலா.
“இந்நேரம் உனக்கு அவ வீட்ல இருந்தும் அவளும் ஒப்பாரி வெச்சு ஸீன் கிரியேட் பண்ணி சொல்லி இருப்பாங்களே அவ தற்கொலை நாடகம் பத்தி” என்று நக்கலாக சொன்னான்.
அப்போது தான் தன் அண்ணன் இதைப் பற்றி தான் இவ்வாறு சொல்கிறான் என்றே சாருபாலா உணர்ந்தாள்.
“அண்ணா… நீங்க சோனியா அண்ணி மேல வெச்சு இருந்த கோபம் ரொம்ப நியாயமானது தான்.. ஆனா அவங்க திருந்தித்தாங்க அண்ணா! நீங்க சொல்ற போல அண்ணி நடிக்கல.. தற்கொலை தான் முயற்சி பண்ணி இருக்காங்க! இன்ஃபாக்ட் உங்களால தான் அவங்க தற்கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க” என்றாள் குற்றம் சாட்டும் விதமாக.
தந்தை மூலம் ப்ரீத்தாவின் கதையை தெரிந்து கொண்டாள்.
உண்மையில் ப்ரீத்தா மீது இப்போதும் விக்னேஷுக்கு ஈடுபாடு இல்லை தான்!
ஆனால் சோனியாவை பற்றி பேசும் போது அவன் வேண்டும் என்றே தன் இஷ்டத்துக்குப் பேசுகிறான்..
இப்போதும் தங்கை தன்னை குற்றம் சாட்ட,விக்னேஷ் கோபத்தில, “ஆமா பாப்பா நான் ப்ரீத்தாவை தான் கல்யாணம் பண்ண போறேன்.. அண்ட் ஒன் திங் சோனியா சாகணும்னு தற்கொலை பண்ணல.. நடிக்குறா!”
“அவளுக்கு ஒண்ணும் இந்த மாதிரி மிரட்டி காரியத்தை சாதிக்குறது புதுசு இல்லயே” என்று அவன் எள்ளலுடன் சொல்லிவிட்டு கால்லை அணைத்துவிட சாருபாலா தான் அசைவற்று நின்றாள்.
பல மாதங்கள் முன்னர் சோனியாவின் கரு என்றோ கலைந்து விட்ட விஷயம் தெரிந்து விக்னேஷ் தங்கைக்கு கால் செய்த நொடி,
“என் மேல சத்தியம் பாலா.. இதுவரை சோனியா என்ன என்ன பொய் சொல்லி இருக்காணு எனக்கு இப்போ தெரியணும்” என்று அவன் கர்ஜிக்க,
“அ..அண்ணா” என்று தடுமாறினாள் பாலா.
“என் மேல சத்தியம் சொல்லி இருக்கேன் பாலா.. இப்பவும் நீ சொல்லலனா இனி நான் உன்கிட்ட பேச மாட்டேன்” என்று அழுத்தமாக சொன்னவனை அதிர்ந்து பார்த்தவள், இந்தரஜித் தன்னை கடத்தியதில் இருந்து கடைசியாக வீட்டை விட்டு சோனியா மற்றும் வரலக்ஷ்மி அனுப்பிய வரை அணைத்தையும் பயந்து தயங்கி தயங்கி சொன்னாள்.
சாருபாலாவிற்கு உண்மையை சொல்ல வேண்டும் என்று இல்லை.. ஆனால் இந்நொடி அண்ணன் இவ்வாறு அவனின் மீதே சத்தியம் என்று சொல்லி கேட்கையில், அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை…
ஆதலால் சொல்லிவிட்டிருக்க, அந்நொடி வெகு தீர்மானமாக தீர்மானித்து இருந்தான். இனி சோனியாயை ஜென்மத்துக்கும் ஒரு போதும் நம்ப மாட்டான் என்று…
அடுத்து தான் விவாகரத்து நோட்டீஸையும் அனுப்பினான்…
இதோ இன்று அவளின் அண்ணன் விக்னேஷ் கார்த்திக் பேசி முடித்த பின்னர் சாருபாலா வுக்கு இப்போது குற்ற உணர்ச்சியாக இருந்தது…
கண்களில் கண்ணீருடன் தன் கணவனை தேடி சென்றவள் அவனை இறுக அணைத்து அழுதாள்…
தன் கையில் லேப்டாப்புடன் மும்முரமாக வேலை செய்துக் கொண்டு இருந்த இந்திரஜித், திடீரென்று அழுக் குரலுடன் மனைவி தன்னை ஓடி வந்து கட்டிக்கொள்ளவும் அவளின் அவன் பதறி விட்டான்…
“சாரு.. என்னாச்சு டா! ஏன் அழுற” என மனைவியின் முகத்தை தன் நீண்ட கைகளுக்குள் ஏந்தி அவளை அவன் பரிதவுப்புடன் பார்க்க,
“நான் அன்னிக்கு அண்ணா கிட்ட உண்மைய சொல்லிருக்க கூடாது இந்தர்” என தேம்பி அழுதவள் தன் கண்களை அழுத்தித் துடைத்து சோனியா தற்கொலை செய்ய துணிந்ததை தன் கணவனிடம் சொன்னாள்.
அன்று விக்னேஷிடம் உண்மையை சொன்ன சாருபாலா அடுத்த நொடியே தன் கணவனிடம் சொன்ன கையோடு, சோனியாவிடமும் தெரிவித்து விட்டாள்.
அன்று சாருபாலா சொன்னதினம் சோனியா திருந்தவில்லை..
ஆனாலும் அண்ணன் மீதுள்ள பயத்தில் வேறு வழியின்றி அமைதி காத்தாள்…
அதன் பின்னர் தான் காலம் மற்றும் வலி அவளைப் படிப்படியாக தன் தப்பை உணர வைத்து திருத்தியது…
இவளால் தான் வரலட்சுமியும் கூட திருந்தினார்…
அதிலும் இவர்கள் திருந்த முக்கியமான காரணம் இந்திரஜித் தான்…
பெற்ற அன்னை மற்றும் அவனின் கூடப் பிறந்த செல்ல தங்கையை தப்பு செய்ததால் இந்தாள் வரை பேசாது இருக்கிறானே..
அவன் தங்களிடம் பேசாத வலி, வேதனை, ரணம் எல்லாமே அவனின் அன்னையையும், தங்கையையும் அவர்களின் தப்பை உணர வைத்தது..
இன்று சோனியாவின் தற்கொலை முயற்சி விஷயத்தை அறிந்த இந்திரஜித்துக்கு எடுத்தவுடன் தங்கையை நினைத்து கவலை தான் மேலோங்கியது..
எப்படி வளர்ந்தவள் அவள்!
சிறிய வயதில் இருந்தே அவள் நினைத்து கிடைக்காத விஷயம் என்று எதுவுமே இல்லையே…
ஆனால் இன்று அவளின் வாழ்க்கையை துலைத்து நிற்கதியாய் நின்றதும் இல்லாமல் அவளின் உயிரையும் மாய்த்துக் கொள்ள துணிந்து விட்டாளே…
ஆனாலும் அவளின் வாழ்க்கை இப்படி புதைக்குழியில் விழுந்திருக்க காரணம் அவள் தானே…
அதுவும் விக்னேஷ் ப்ரீத்தாவை முத்தம் இட்ட புகைப்படம் வைரலானது இந்திரஜித்தின் கண்களிலும் விழுந்தது தான்…
அப்போதே அவனுக்குள் ஒரு அதிர்வு..
விக்னேஷ்ஷா இப்படி என்று…
இன்னும் விவாகரத்து கூட தன் தங்கையிடம் பெறவில்லை அவன்..
அவளின் கணவனாக இருக்கும் பொழுதே வேறொரு பெண்ணுடன் இதழோடு இதழ் உறவாடி இருக்கிறான்…
அந்தப் புகைப்படத்தை கண்ட நொடி விக்னேஷின் மீது இந்திரஜித்திற்கு கொலைவெறியே வந்தது…
விக்னேஷ் மட்டும் இப்போது இந்திரஜித்தின் முன் நின்று இருந்தால் கண்டிப்பாக அவனை அடித்து இருப்பான்…
அப்போதே விக்னேஷிற்கு கால் செய்து அவனை வைத்து செய்ய வேண்டும் என வேகத்தில் ஃபோனை எடுத்தவனின் மனம் ‘நீ மட்டும் முன்னாடி ஒழுங்கா இருந்தியா இந்திரஜித்… சாருக்கு முன்னாடி எவ்வளவு பொண்ணுங்களோட இருந்துருக்க’ என்று அவனின் மனசாட்சியே அவனை சரமாரியாக கேள்வி கேட்டது.
உண்மையில் சாருபாலாவை திருமணம் செய்ததில் இருந்து அவன் எந்த பெண்ணையும் தீண்டவில்லை தான்…
ஆனால் விக்னேஷ் அவனின் தங்கை அவனுக்கு சட்டப்படி மனைவியாக இருக்கும் போதே அல்லவா இன்னொரு பெண்ணுடன் இதழோடு இதழ் சேர்த்து இருக்கிறான்…
இதையெல்லாம் தாண்டி விக்னேஷ் சாருபாலாவின் அண்ணன்..
எதுவாக இருந்தாலும் சாருபாலாவிடம் பேசிவிட்டு அவனுக்கு ஃபோன் செய்யலாம் என அவன் நினைத்து இருக்க,
அதற்குள் இதெல்லாம் நடந்துவிட்டது…
கூடுதலாக தன் தங்கை இந்த விஷயத்தால் உயிரை விட துணிந்து விட்டாள் என்பதை அறிந்து மனதிற்குள் சொல்வறியாத உணர்வுகளுடன் விக்கித்து நின்றான்…
அவனின் இந்த அசாத்திய மௌனம் சாருபாலாவை மேலும் அழுத்தியது…
“எனக்கே ரொம்ப கேவலமா இருக்கு இந்தர்…
என் அண்ணன் அவன் பொண்டாட்டியா சோனியா அண்ணி இருக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட.. ச்ச” என முழுதாக சொல்ல முடியாமல் அவமானத்தில் குன்றிப் போனாள்…
“ப்ளிஸ் இந்தர்.. இதுக்கு அப்புறமாவது நீங்க சோனியா கிட்ட பேசுங்க.. உங்க அம்மா கிட்ட பேசுங்க… அண்ணி கிட்ட நான் என்னனு பேச” என விசும்பி அழுதவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன்,
“இனி நான் சோனியா கிட்ட பேசுறேன்… உன் அண்ணன் அவ வாழ்க்கையில வர முன்னாடி இருந்த சோனியாவும் இனி வேண்டாம்… புது மனுஷியா அவ மாறணும்… நான் மாற வைப்பேன்” என உறுதியெடுத்தவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள்,
“அண்ணாவை கத்த போறீங்களா!” என கலவரமாக கேட்டாள்.
நியாயப்படி கணவன் தன் அண்ணனை கத்துவது சரி என்றாலும் உள்ளுக்குள் பயமாக இருந்தது…
இருவரும் எலியும் பூனையாய் இருந்தவர்கள்… கடந்த சில மாதங்கள் மட்டும் தான் அவ்வாறு இல்லாமல் இருந்தார்கள்…
அதற்காக இருவரிடமும் பெரிய நெருக்கமும் இல்லை..
இப்போது எல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாக்கிய தன் அண்ணனின் செயல் தங்கை சாருபாலாவை வாட்டி வதைத்தது…
தன்னவள் கண்களையே ஆழ்ந்து ஆழமாக பார்த்தவன், “எப்போ தன் தங்கச்சி பொண்டாட்டியா இருக்கும் போதே அந்த விக்னேஷ் இன்னொரு பொண்ணை நெருங்குனானோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன்” என இந்திரஜித் சொல்ல, சாருபாலாவுக்கு பயப்பந்து உருண்டது..
இந்திரஜித்தின் கோபத்தை நன்கு அறிந்தவள் ஆயிற்றே..
அதுவும் தங்கைக்காக அவன் செய்தது எல்லாம் வரலாற்றில் பொறிக்கப்படக் கூடிய செயல்கள் அல்லவா..
இதோ இப்போதும் தங்கையின் அண்ணனாக அவளின் முன்னே தெரிகிறான் அவளின் கணவன் இந்திரஜித்.
அதனால் பழைய சாருபாலா வெளியில் எட்டிப் பார்க்க, மருண்டு விழித்தபடி அவனை பார்த்தாள்.
அவளின் விழிகள் பயம் கொள்வதை உணர்ந்த கணவன், “ரிலாக்ஸ் சாரு…முதல்ல தண்ணீ குடி” என மனைவிக்கு தண்ணீர் பருக கொடுத்தான்.
அவளை தேற்றியவன், “இனி விக்னேஷ்ன்றவன் என்ன பண்ணா எனக்கென்ன.. அவன் என் தங்கச்சிக்கு இனி கண்டிப்பா வேணாம் சாரு” என்றான் தீர்மானமாக.
அவனை விழி விரித்து பார்த்தவளிடம், “கண்டிப்பா அவனை எதுவும் பண்ண மாட்டேன்… சோனியா என்ன தான் தப்பு பண்ணி இருந்தாலும் விக்னேஷ் இப்படி இன்னொரு பொண்ணு கூட முத்தம் கொடுத்து இருந்ததை பார்த்து என் ரத்தமே கொதிச்சுது… அவனை கண்டிப்பா ஏதாவது செஞ்சு இருப்பேன் தான்” என்றவனின் கோப விழிகளை கண்டு பயந்த சாருபாலாவின் கையை தனக்குள் வைத்துக் கொண்டவன்,
“ஆனா சோனியா பண்ணின தப்பை எல்லாம் யோசிச்சு பார்த்தா இனி அவளும் விக்னேஷூம் சேராம இருக்குறது தான் ரெண்டு பேருக்குமே நல்லதுன்னு எனக்கு தோணுது..” என முடித்துவிட்டான்.
“என்ன சொல்றீங்க இந்தர்?” என அவள் புரியாமல் கேட்க,
“நான் சோனியா கிட்ட பேசுறேன்.. ஆனா அதுக்கு அவ வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்…விக்னேஷ்ன்ற கேரக்டர் கூட இனி அவ மனசுலயும் நினைப்புலயும் இருக்க கூடாது சாரு… அவ புது மனுஷியா வாழணும்” என்றான் தீர்மானமாக.
“இதுக்கு ஓகேவான்னு நீ சோனியா கிட்ட கேளு.. அப்புறம் நான் பேசுறேன்” என அவன் முடித்துருக்க, சாருபாலாவிற்கு தான் படபடப்பாக இருந்தது..
இதையெல்லாம் எப்படி அவள் சோனியாவிடம் சொல்ல முடியும்..
ரொம்ப நேரமாக யோசித்து தயங்கியவள் ஒரு பெருமூச்சுவிட்டு சோனியாவிற்கு கால் செய்து பேசினாள்.
வெறுமையான வாழ்க்கை…
மரத்த உணர்வுகள்..
இப்படி சோனியா இருக்க, “உங்க அண்ணன் உங்க கிட்ட பேச தயார் ஆனா அதுக்கு நீங்க அவர் சொன்னதை கேட்கணும்” என்றாள் தட்டுத் தடுமாறி.
சோனியாவை முழு மனதாக அண்ணியாஎ ஏற்ற பின்னர் அவளுக்கு அந்த உறவுக்கான மரியாதை கொடுத்து பன்மையில் தான் அழைக்கிறாள் சாருபாலா.
“என்ன.. அண்ணன் பேசணும் சொன்னாரா” என வேகமாக கேட்டாள் சோனியா.
இத்தனை நேரம் ஒரு இயந்திரம் போல வெறுமையாக பதில் கொடுத்தவள் அவளின் அண்ணன் அவளிடம் பேசப் போகிறான் என்று தெரிந்ததும் அவளுக்கு பாலைவனத்தில் நீர் தெளித்த போன்று உணர்வு ஏற்பட்டது.
“அண்ணா கிட்ட கொடு பாலா ப்ளிஸ்” என்று சோனியா அழ, தன் கணவன் சொல்ல சொன்னதை சாருபாலாவால் சொல்ல முடியவில்லை..
ஏனெனில் என்றாவது ஒரு நாள் சோனியா தன் அண்ணனுடன் சேருவாள் என்று நினைத்து இருந்தவளுக்கு இப்போது நடப்பது எல்லாம் அவளின் கை மீறிச் சென்ற விஷயங்கள்..
ஃபோனை தன் கணவனிடம் கொடுத்தவள், “நீங்களே அவங்க கிட்ட நிங்க முடிவு பண்ண விஷயத்தை சொல்லிடுங்க இந்தர்.. என்னால முடியல ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச,
அவளுக்கு ஒரு மென்மையான தலையசைப்பை கொடுத்தவன் ஃபோனை வாங்கி பேச ஆரம்பித்தான்.
தங்கையிடம் அவளின் அண்ணனாக பேசிய இந்திரஜித், “உனக்கு இனி விக்னேஷ் வேண்டாம் சோனியா.. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்” என்று அவன் கட்டளையை போல சொல்ல, ஸ்தம்பித்து விட்டாள் சோனியா.
விக்னேஷூக்காக உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தவள் எப்படி இன்னொருவனை மணக்க முற்படுவாள்..
சாத்தியம் இல்லாத ஒன்றை அல்லவா அவளின் அண்ணன் கண்டிப்பாக கட்டளையாக செய்யச் சொல்கிறான்..
என்ன செய்வாள் அவள்?
கண்டிப்பாக அவளின் அண்ணன் அவளுக்கு வேண்டும்..
ஒருவேளை இந்நாள் வரை தன் அண்ணன் தன்னோடு பேசியிருந்தால் இப்போது தற்கொலை வரை சென்று இருக்க மாட்டாளோ என்றே அவளுக்கு தோன்றத் தொடங்கியது.
“பொறுமையா யோசிச்சு எனக்கு உன் முடிவை சொல்லு சோனி.. இனி நீ தற்கொலை முயற்சி பண்ணக் கூடாது… இந்த முறையாவது என் கிட்ட சொன்ன நீ வார்த்தையை காப்பாத்து..” என்று முடித்தான் அழுத்தமாக.
நீண்ட நேரமாக யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது…
இனி தன்னை விக்னேஷ் ஏற்றுக் கொள்ள மாட்டான்…அதனால் தான் இன்னொரு பொண்ணை முத்தமிட்டு இருக்கிறான்..
தான் செய்த பாவங்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என அவளுக்கு தோன்ற,
அவளின் பெற்றோர் மற்றும் அண்ணன் தான் அவளின் கண் முன்னே வந்து நின்றார்கள்..
இனி ஒரு புது மனுஷியாக வாழுவோம் என்று முடிவு செய்தவளுக்கு விக்னேஷை மறப்பதும் இன்னொருவனை மணப்பதும் முடியாத காரியம்…
ஆனால் இந்த வலி அவள் அனுபவித்து தான் ஆக வேண்டும்…
அவளுக்கு வாழ்க்கையில் ஒரு புத்துணரச்சி தேவைப்பட்டது..
ஆதலால் கணத்த இதயத்துடன் அண்ணன் சொன்ன முடிவை எடுத்தவள் அவனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்ல,
“குட் சோனி.. முதல்ல விக்னேஷூக்கு விவாரகத்துல சைன் பண்ணி கொடு” என்றான்.
மனதில் சுக்கு நூறாக உடைந்தவள், “அ.. அண்ணா! நான் சைன் பண்ணித் தரேன்.. எனக்கு ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் அண்ணா” என தயங்கினாள்.
“என்ன விஷயம் டா சொல்லு” என பரிவாக கேட்டான் அண்ணன்.
“எனக்கு கொஞ்ச நாள் இந்த ஊரை விட்டு வெளியே போய் ஏதாவது வேலை பார்க்கணும்னா.. எனக்கு மாற்றம் தேவைப்படுது” என்றாள் கெஞ்சுதலாக.
“சரி எந்த ஊரு.. என்ன வேலை?” என தங்கையின் பேச்சுக்கு செவி சாய்த்து கேட்டான்.
“உடல் உழைச்சு வியர்வை வரணும் அண்ணா.. அந்த அலுப்புல என்னை மீறி தினமும் நைட் தூங்கணும்… ஏன்னா நான் சரியா தூங்கி பல மாசம் ஆகுது அண்ணா.. இனியும் நிம்மதியா தூக்கம் வரணும்னா நான் எங்கேயாவது கண் காணாத இடத்துல போய் உழைக்கணும் அண்ணா” என்றாள் கரகரத்த குரலுடன்.
தங்கையின் உள் உணர்வுகள் இந்திரஜித்திற்கு நன்றாகவே புரிந்தது..
“சரி… நான் உனக்கு ஏற்பாடு பண்ணித் தரேன்.. பட் இது எல்லாத்துக்கும் ஒரு டைம் லிமிட் இருக்கு சோனி… அதுக்கு அப்புறம் நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றான் முடிவாக.
கண்களில் அவளுக்கு பொள பொளவென கண்ணீர் கொட்டியது…
இன்னொரு கல்யாணம் வேண்டாம் ண்ணா என கத்தி கதற வேண்டும் என தோன்றியது…
ஆனாலும் இப்போதைக்கு அவளுக்கு மாற்றம் வேண்டும் என்பது முதன்மையாக இருக்க, அப்போதைக்கு கண்களைத் துடைத்து தன் அண்ணனிடம் சரி என்று ஒப்புக் கொண்டாள் சோனியா.
அடுத்த நாளே விக்னேஷ் கொடுத்த விவாகரத்து நோட்டீஸீல் கையெழுத்து இட்டாள்… தன் தவறின் தண்டனையாக, தன் தவறுக்கான பாவ மன்னிப்பாக, விக்னேஷின் நலனுக்காக…
அன்று காலையில் இருந்தே விக்னேஷ் கடுப்புடன் இருந்தான்…
காரணம் அபினவ் சர்மா… மீடியா முழுக்க விக்னேஷ் மற்றும் ப்ரீத்தாவின் முத்தம் காட்சி பரவி இருக்க, ப்ரீத்தாவிற்கு குளு குளுவென இருந்தது..
“ப்ரீத்தா.. என்ன இது” என விஷயம் அறிந்த அபினவ் சர்மா கத்த,
“நான் விக்னேஷை லவ் பண்றேன் டேடி” என்றாள் துணிவாக.
விக்னேஷ் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என நொந்தவளுக்கு இந்த சோசியல் மீடியா விஷயம் லட்டு போல் அமைந்து இருக்க அதை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டாள்.
