பிரியாதிரு 7
பிரியாதிரு 7
அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா..
அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது..
அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்..
‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள்
அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு பங்காரம்” என்று சொல்ல, அவளும் அவனின் சொல்லுக்கு கட்டுப்படும் அடிமை போல மெல்ல கண்களை விழிக்க அவளின் கண்களோ கேமராக்கள் ஒளியில் சுருங்கியது..
ஆம்.. அவளின் எதிரே சுற்றி ஏராளமான கேமராக்கள்.
“சார்.. இந்த பொண்ணு யாரு!” என்று ஒருவனும்,
“உங்க கிட்ட படம் பண்ண வாய்ப்பு கேட்டு வந்தாங்களா!” என்று இன்னொருவனும்,
“வாய்ப்பு கேட்டு வந்த பொண்ணை ஆத்மன் ரெட்டி அவர் ஆசைக்கு யூஸ் பண்ணிக்கிட்டாரா” என்று மற்றொருவனும் கேட்க,
அமிர்தாவிற்கோ பயத்தில் வியர்க்க தொடங்கி விட்டது…
அந்த பயத்தில் அவளின் கண்களில் கண்ணீர் மூண்டு நிற்க, ஆத்மன் ரெட்டியோ கல்லைப் போல சிலையாய் உறைந்து நின்றான்…
அவனின் இறுக்கத்தை கண்டவளோ, “அவங்க என்னம்மோ பேசுறாங்க… இல்லன்னு சொல்லுங்க” என்று அவள் அலற,
ஆத்மனோ அமிர்தாவை கூர்மையாக பார்த்தபடியே, “அவங்க சொல்றது எல்லாம் உண்மை தானே.. நீ என் கூட பணத்துக்காக இல்லைன்னாலும் பணத்தை விட பெரிய விஷயமான உன் அக்கா பிரச்சனைக்காக தானே என் கூட இருந்த.. அப்போ என்ன” என்று கேட்ட த்தொனியில் தான் அத்தனை எகத்தாளம்..
“யு.. யூ சீட்” என அவனைப் பார்த்து கண்களில் கண்ணீர் மல்க கத்தியவள், பத்திரிக்கையாளர்கள் முன் சென்று,
“அண்ணா… நீங்க நினைக்குறது போல இல்ல” என்று கதறி புரிய வைக்க முற்பட,
அங்கு கம்பீரமாக நின்று ருந்த ஆத்மனை கண்ட ஒரு பத்திரிக்கையாளரோ, “நாளைக்கு காலையில இதான் சார் இந்தியா முழுக்க பிளாஷ் நியூஸ்” என்று சொல்ல,
“எஸ்.. கண்டிப்பா போட்டுக்கோங்க..” என்றான் இன்முகமாகவே…
அந்த பத்திரிக்கைகாரனே குழம்பி விட்டான்…
இவனின் பெயர் நாளை பேப்பரிலும், நியூஸிலும் சர்ச்சைக்குள்ளாகப் போகிறது இருந்தாலும் இப்படி தெனாவெட்டாக,கெத்தாக நிற்கிறானே என்று அவன் புரியாமல் பார்க்கையிலேயே,
அமிர்தாவின் மனதிற்குள் ஆயிரம் எண்ணவோட்டங்கள்…
இதெல்லாம் வெளியே தெரிந்தால் அவளின் மானம் மரியாதை என்ன ஆவது..
அவளின் பாட்டி, அக்கா மற்றும் குடும்பத்தினரின் மான மரியாதையும் இதில் அடங்கி இருக்கிறது அல்லவா..
இந்த வாழ்க்கையே சூனியமாகி விட்ட நிலையில் தற்கொலையாவது செய்து தப்பிக்கலாமா என்று பார்த்தால் அவளுக்கு அதற்கும் வழியில்லை..
ஒருமுறை இவர்களின் தோழி சாருபாலாவிடம் தற்கொலை செய்யக் கூடாது என்று சத்தியம் வாங்கும் போது இவளிடமும், அனன்யாவிடமும் கூட பின்னர் சத்தியம் வாங்கினாள் சாருபாலா..
அதனால் அதற்கும் வழியில்லை.. நாளை தன் மான மரியாதை சந்தி சிரிக்கப் போவது உறுதி என்று அறிந்த அமிர்தாவிற்கு இதற்கு மேலும் அந்த உண்மையை மறைக்க வழியில்லாமல் போனது…
தன் கண்களை அழுத்த தேய்த்துக் கொண்டவள், “புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து இருந்தா அதை நீங்க பிளாஷ் நியூஸ்ல போடுவீங்களா” என்று அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்தினாள் அமிர்தா…
அவள் சொன்னதை கேட்டு பத்திரிக்கையாளர்கள் அதிர ஆத்மன் ரெட்டியோ “இதை இதை.. இதைத் தானே எதிர்ப்பார்த்தேன்” என்பது போல் கால் மேல் கால் போட்டு கர்வமாக அமர்ந்து இருந்தான்.
அவனின் தோரனையைக் கண்ட அமிர்தாவிற்கோ பத்திக்கொண்டு வந்தது..
“என்னம்மா பெரிய கோடீஸ்வரன்..பேன் இந்தியா டேரக்டரை அப்படியே உனக்கு சொந்தமாக்கிக்கலாம்னு பாக்குறியா..” என்று ஒருத்தனும்,
“ஜகஜால கில்லாடி நீ.. இந்த மாதிரி கோடீஸ்வரன் கூட படுக்குற பொம்பளைங்க எல்லாம் அவரை கட்டிக்க ஆசைப்படலாமா..” என்று இன்னொரு பத்திரிக்கைக்காரனும் சொல்ல, அங்கு அமர்ந்து இருந்த ஆத்மன் ரெட்டியின் கை முஷ்டி இறுகியது…
ஆனாலும் அன்று அமிர்தா அவனிடம் ஆவேசமாக பேசி வாக்கு வாக்கியது அவனை தற்போது எதுவும் செய்யவிடாமல் கட்டிப்போட்டது…
தற்போது அவனின் கை கட்டப்பட்டு இருந்தாலும் அங்கு அமிர்தாவைப் பார்த்து கேவலமாக கேட்கும் பத்திரிக்கையாளனை தன் கூர் கண்களால் ஸ்கேன் செய்தான் ஆத்மன் ரெட்டி.. அவன் ஆத்மனிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாவது உறுதி…
அந்த பத்திரிக்கையாளன் அப்படி சொன்ன நொடி அமிர்தாவின் கண்கள் அவளையும் மீறி ஆத்மனை தான் பார்த்தது..
தாயிடம் கிடைக்கும் அரவணைப்பு அவனிடம் போல…
தனக்காக அவன் பேசுவானா என்று அவள் ஏக்கமாக பார்த்திருக்க, அவனோ எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டாது அமர்ந்து இருந்தான்.. அது அவளைப் பொறுத்தவரை அவ்வளவே..
ஆனால் அவன் உள்ளே கடுப்பில் எரிமலையாய் கொந்தளிப்பது அவளுக்கு தெரியாது அல்லவா.. இதோ அவனை தப்பாகவே புரிந்துக்கொண்டாள்..
‘இவனோடது பெரிய காதல்ன்னு சொல்லுவானே அதெல்லாம் இவ்வளவு தானா! நான் அவனுக்கு கிடைக்குற வரைக்கும் தான் அவனுக்கு என் மேல போதை.. இப்போ கிடைச்சிட்டேன் அதான் போர் அடைச்சிட்டேன்.. வெறும் உடல் தேவைக்காக காதல்ன்ற வார்த்தை சொல்லி என்னை நாசம் பண்ணிட்டான்’ என்று அவள் மனதில் குமுறினாள்…
ஊர் வாய்க்கு அவல் போட்டது போல.. பத்திரிக்கையாளர்கள் கண்ணா பின்னாவென பேச ஒரு கட்டத்தின் மேல் பொறுக்க முடியாத அமிர்தா, தன் கழுத்தில் மறைத்து வைத்திருந்த பொன் தாலியை வேகமாக வெளியே எடுத்து காட்டி,
“இந்த தாலி இதோ இங்க இருக்காரே மிஸ்ட்ர் ஆத்மன் ரெட்டி… அவர் கட்டுன தாலி தான்.. இதுக்கு மேலயும் உங்களுக்கு ஆதாரம் வேணும்னா” என்று அவசரமாக தன் கைப்பையை எடுத்து அதில் மொபைலை எடுத்தவர் ஒரு வீடியோவை எடுத்து ஆன் செய்து காட்ட,
ஒரு கோவிலில் அமிர்தா கண் மூடி கடவுளை வணங்கிக் கொண்டு இருக்கும் போது ஆத்மன் ரெட்டி அவள் கழுத்தில் தாலி கட்டிய வீடியோவை அவள் காட்ட, அங்கு வந்த பத்திரிக்கை நிபுணர்கள் எல்லாம் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர்..
ஆம், ஆத்மன் ரெட்டிக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது..
***
சோனியா விவாகரத்து பத்திரத்தில் சைன் போட்ட பின்னர் தான் இந்திரஜித் தன் தங்கையை ரொம்பவே கண்காணித்தான்..
அவள் கேட்டது போல அவளுக்காக அவனின் தோழனின் கம்பெனியில் ஒரு வேலை கேட்டு இருந்தான்…
இந்திரஜித் கேட்டு அவன் தோழன் மறுப்பானா என்ன!
இங்கே விக்னேஷின் வீட்டில் அபினவ் சர்மா எதற்காக குடும்பத்துடன் வந்து இருக்கிறார் என்று விக்னேஷிற்கு தெரிய வர, ஹாலில் இறுக அமர்ந்து இருந்த தந்தையின் முகம், குழப்பமாக கையைப் பிசைந்து நின்றிருந்த தாயின் முகம் எல்லாம் அவனின் மனக்கணக்கில் சிக்கவே இல்லை..
இதோ அவன் கையில் சோனியா கையெழுத்திட்டு கொடுத்திருந்த விவாகரத்து பத்திரம்… அதைப் பற்றித் தான் அவனின் மனது சிந்தித்துக் கொண்டே இருந்தது..
விக்னேஷ் தான் சோனியாவிடம் விடாப்பிடியாக விவாகரத்து வாங்க நினைத்தான்… கேட்டான்.. இதோ இன்று வெற்றிகரமாக நினைத்ததையும் சாதித்து விட்டான்..
ஆனால் அவனால் சந்தோஷப்பட முடியவே இல்லை..
“விக்னேஷ்” என்று அவனின் தந்தை அழைக்க தன்னிலை மீண்டு அவரைப் பார்த்தான்.
“விவாகரத்துல சோனியா சைன் மட்டும் தான் பண்ணிருக்கா.. இன்னும் கோர்ட்ல கேஸ் எல்லாம் நடந்து முடிய நேரம் எடுக்கும்.. அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் எல்லாம் தப்பு.. அப்புறம் சோனியா ஏதாவது பிரச்சனை பண்ணிப் போறா” என முருகன் சொன்னார். அவருக்குத் தெரியவில்லை இந்திரஜித்திடம் வாக்கு கொடுத்த பின்னர் சோனியா தன் மகன் என்ன செய்தாலும் கண்டுக்கொள்ளவே மாட்டாள் என்று..
முருகனுக்கோ மகன் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லவே கூடாது என்று நினைத்து இவ்வாறு பேச அது விக்னேஷிற்கு மேலும் தான் ஏற்றி விட்டது..
ஏற்கனவே சோனியா விவாகரத்தில் கையெழுத்து இட்டு கொடுத்தது ஒருப்பக்கம் இனம் புரியாத கோபத்தை கொடுத்துருக்க, இன்னொரு பக்கம் அவனின் மனமோ,
‘இங்க சைன் போடுற மாதிரி போட்டுட்டு நீ பிரச்சனை பண்ணிடுவியா.. தப்பு எல்லாம் உன்கிட்ட வைச்சிட்டு என்னை வம்புக்கு இழுத்தா நான் சும்மா இருக்க மாட்டேன் டி.. ஒரு மாசத்துல நான் கல்யாணம் பண்றேன்.. உன்னால முடிஞ்சதை பண்ணு’ என மனதில் சோனியாவின் மீதுள்ள ஆத்திரத்தில் ப்ரீத்தாவை பிடிக்காமலேயே,
“எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்” என்றான் தன் கணீர் குரலில்..
