அத்தியாயம் 35 (இறுதி )
நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது சுபாவின் இந்நிலையைக் கண்ட சபேசன் துளசியிடம் அவளுக்காக வருத்தப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அஸ்வினும் சுபாவுடன் சித்துவிற்காக கூட பேசவில்லை. இத்தகைய சமயத்தில் தான் ஒரு நாள் தீபிகா சுபாவிற்கு கால் செய்தாள். “சொல்லு தீபி” என்று சொல்லும் போதே சுபாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.
“நாளைக்கு அஸ்வின்க்கும் சோனியாவிற்கும் கல்யாணம் கா” என்றாள். இதைக் கேட்ட சுபாவிற்கு இதயமே நிற்பது போல் உணர்ந்தாள்.
“முடியாது அவர் அப்படி பண்ண கூடாது” என்று அழுதாள்.
“நீ தானக்கா சொன்ன சோனியாவோ சுனிதாவோ யார் கூடனாலும் போங்கனு அதான் அவர் சோனியாவ தேர்ந்து எடுத்து இருக்காரு. என்னமோ உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு அதான் சொன்னேன் உனக்கு மண்டபம் முகவரி வாட்ஸ்அப் பண்ணிருக்கேன் நாளைக்கு காலைல ஆறு மணிக்கு முகூர்த்தம்” என்று கால்லை கட் செய்தாள்.
அனைத்தும் பிரம்மை போல் தோன்றிய சுபா அடுத்து கால் செய்தது ரேவதிக்கு தான்.
“சொல்லு சுபா நாளைக்கு நீயும் அஸ்வின் சோனியா கல்யாணத்திற்கு வரியா?” என்று கேட்டாள்.
“எப்படி டி அஸ்வினால இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண முடியும் அவர் அப்படி பண்ண கூடாது” என்று தன் முகத்தில் இருந்த கண்ணீரைத் துடைத்தாள்.
“கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணி எந்த பிரோயஜனமும் இல்லை சுபா மனசை திடமாக்கிக்கோ இனிமேலாவது அஸ்வின் வாழ்க்கை நிம்மதியா இருக்கட்டும். உனக்கு ஒண்ணும் இது புதுசு இல்லையே முன்னாடியே அஸ்வின் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கட்டும்னு தான வெயிட் பண்ண இப்போ பண்ண போறாரு. நீயும் இனிமேல் அஸ்வின் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம். சரி டி நாளைக்கு கல்யாணத்திற்கு தேவையான பட்டு சாரி அயன் பண்ணனும் நான் வெக்கறேன்” என்று ஃபோனை கட் செய்தாள்.
“எல்லாருக்கும் அஸ்வின் சோனியா கல்யாணம் தப்பா தெரியலையா? நான் பண்ண தப்பால என் வாழ்க்கையே போய்டுச்சே” என்று தன் கண்களை துடைத்துக்கொண்டு அஸ்வின் எண்ணுக்கு கால் செய்யலாம் என்று முடிவு செய்து அவனின் நம்பரை அழுத்தும் போதே அவள் கை நடுங்கியது. ரிங் முழுதாகப் போனது. ஆனால் அஸ்வின் போனை எடுக்கவில்லை மறுபடியும் ஃபோன் செய்தாள். ஆனால் இம்முறை ஃபோன் எடுக்கப்பட்டது.
“அஸ்வின் ப்ளிஸ் நான் பேசுறதை கொஞ்சம் கேளுங்க சோனியாவ நீங்க கல்யாணம் பண்றதா சொல்றாங்க என்னால அதை ஏத்துக்க முடியாது” என்று அவள் அழுதுக்கொண்டு இருக்கும்போதே, “ஏய் சுபா வெயிட் நான் அரவிந்த் பேசறேன் அஸ்வினோட ஃபோன் என் கையில தான் இருக்கு. அவன் கல்யாண மாப்பிள்ளைல அதனால ஃபோன் என் கையில இருக்கு. நான் இந்த ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் பண்ண போறேன் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அஸ்வின் பேசுவான்” என்று கால்லை கட் செய்தான்.
“ஹலோ அரவிந்த் ப்ளிஸ் நான் அஸ்வின் கிட்ட இப்போவே பேசணும்” என்று அவள் சொல்லும் போது மறுமுனையில் கால் கட் செய்யப்பட்டிருந்தது.மறுபடியும் அஸ்வின் நம்பர்க்கு கால் செய்து பார்த்தாள். ஆனால் ஸ்விட்ச்டு ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
“கடவுளே முருகா என் வாழ்க்கைய நானே தொலைச்சிட்டேனே” என்று தன் தலையில் அடித்தாள். இதனைப் பார்த்த துளசி சுபாவிடம் ஆறுதல் கூறினார்.
“துளசிம்மா அஸ்வின் நாளைல இருந்து இன்னொரு பொண்ணுக்கு சொந்தம் ஆகப் போறாரு இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான்” என்று தன் தலையில் மறுபடியும் அடித்துக் கொண்டாள்.
“நான் வேணும்னா அஸ்வின் தம்பி காலுல விழுந்து இந்த கல்யாணத்தை நிறுத்தவா மா?” என்று கேட்டார் சபேசன். இன்றோடு இருவரும் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆனது.
“அப்பா! என்ன மன்னிருங்கப்பா தப்பு பண்ணது நான் தான் நான் அஸ்வின்காக நிற்கவே இல்லை அவரை நம்பவே இல்லை ஆனா அவர் எனக்காக நின்றிருக்காரு என்ன நம்பிருக்காரு நான் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்று தன் கண்களை துடைத்துக்கொண்டு, “நானே சென்னை கிளம்புறேன்” என்று தன் ஹேன்ட் பேக்கை எடுத்தாள்.
“சுபா இப்போ மணி இரவு எட்டும்மா நீ தனியா போகாத நானும் வரேன்” என்றார் சபேசன்.
“இல்லப்பா நானே பஸ் ஏறி போய்டுவேன் சித்து தூங்குறான் அவனை பார்த்துக்கோங்க” என்று ஒரு ஆட்டோ பிடித்து பஸ்
ஸ்டாண்ட்டிற்கு வந்தாள். ரொம்ப நேரமாக சென்னை பஸ் வரவில்லை மணி வேற ஒன்பது ஆனது.
மனதில் பதற்றம் ஏற்பட்டது இப்போது ஏறினால் தான் ஆறு மணிக்குள் கோயம்பேடு சென்று அண்ணாநகரில் இருக்கும் மண்டபத்திற்கு செல்ல முடியும் என்று அவள் தவித்துக் கொண்டிருந்த போதே சென்னை செல்லும் பஸ் வந்தது. அதில் ஏறியவள் ஒரு இடத்தில் உட்கார்ந்தாள்.
கிளம்பும் அவசரத்தில் சாப்பிடாமல் வேறு வந்ததால் உடல் சோர்வாகவே இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை மற்றவர்கள் பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து தனக்குள்ளேயே அழுது குமுறினாள் சுபா.
அடுத்த நாள் காலை பஸ் கோயம்பேடு வந்தடைய ஐந்தரை ஆனது. அவசரமாக இறங்கியவள் ஆட்டோ ஸ்டாண்ட் செல்வதற்கே பத்து நிமிடம் ஆகும் என்ற நிலையில் நேரத்திற்குள் செல்வதற்காக ஓடினாள். முச்சு விட கூட நேரம் இல்லாமல் ஓடிச்சென்று ஒரு ஆட்டோவைப் பிடித்து அண்ணாநகரில் இருக்கும் அந்த மண்டபத்திற்குச் சென்றாள்.
அண்ணாநகரின் மையத்தில் இருக்கும் அந்த அழகிய மண்டபத்தில் ஆங்காங்கே வண்ண விளக்குகள் என்று பார்க்கவே அழகாய் இருந்தது. ஆனால் இதைப் பார்த்த சுபாவிற்கு அனைத்தும் கசந்தது.
ஆட்டோவில் இருந்து இறங்கியவள் மண்டபத்திற்குள் செல்ல போகும் போது மாப்பிள்ளை தோரணையுடன் பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து கம்பீரமாக மண்டபத்திற்கு வெளியே அவந்திகாவுடன் விளையாடிக்கொண்டிருந்தான் அஸ்வின். சுபாவை அங்குக் கண்டதும் அவந்திகாவை உள்ளே சென்று விளையாடுமாறு அனுப்பிய அஸ்வினிடம், “அஸ்வின் ப்ளிஸ் இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க” என்றாள்.
அவள் பேசியதில் கடுப்பான அஸ்வின், “என்ன சுபா உனக்கு பிரச்சனை நீ எப்படி இங்க இந்நேரம்… தனியா வந்தியா?” என்று கேள்வியாய் கேட்டான். அவனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையில் சுபா இல்லை.
“அஸ்வின் ப்ளிஸ் உங்களைக் கெஞ்சி கேட்கிறேன் நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு ஆனா எல்லாத்தையும் இப்போ உணர்ந்துட்டேன். ப்ளிஸ் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க” என்று அழுதுக்கொண்டே கூறினாள் சுபா.
அப்போது தீபிகா, ரேவதி மற்றும் அரவிந்த் அங்கு வந்தனர். இவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டனர்.
“சுபா நீ உளறாத நம்ம விஷயம் அப்புறம் பேசிக்கலாம் இப்போ முகூர்த்தத்திற்கு டைம் ஆகிடுச்சு வா போகலாம்” என்றான் சாதாரணமாக.
“அஸ்வின் நீங்க சோனியாவ கல்யாணம் பண்ணக் கூடாது. உங்க மனைவி நான் இருக்கும் போது எப்படி உங்களால சோனியாவ கல்யாணம் பண்ண முடியும்” என்று கத்தி அழுதாள்.
“ஏய் சுபா என்ன பேசுற நீ எனக்கும் சோனியாவுக்கும் கல்யாணமா? கொஞ்சம் திரும்பி அந்த போர்டைப் பாரு” என்று கையை அவள் பின்னால் பார்க்குமாறு நீட்டினான்.
அந்த திருமணப் பலகையில்,
“நிதின் வெட்ஸ் சோனியா” என்று இருந்தது. வந்த அவசரத்தில் சுபா அந்தப் பலகையில் பொறுத்தப்பட்டிருந்த பெயரைப் பார்க்கவில்லை.
“நீங்க ஒரு மாசத்துக்கு மேல சித்து கிட்ட பேச கூட கால் பண்ணல” என்று சுபா கேட்க,
“உன் மனநிலை எனக்கு தெரியல சுபா அதான் நீயே கொஞ்சம் டைம் எடுத்து ஃபிரீ ஆகி எனக்கு கால் பண்ணுவனு நான் பண்ணல” என்றான் அஸ்வின்.
“அப்போ இவங்க எல்லாம் உங்களுக்கும் சோனியாவுக்கும் கல்யாணம்னு சொன்னாங்க” என்று புரியாமல் தீபிகா, அரவிந்த் மற்றும் ரேவதியைப் பார்த்தாள்.
“இதெல்லாமே எங்க பிளான் கா நாங்க தான் பொய் சொன்னோம். அஸ்வின் அத்தானுக்கும் இதைப் பற்றி எதுவும் தெரியாது” என்றாள்.
“நேத்து ஃபுல்லா அஸ்வின் மொபைல் எனக்கு வேணும்னு நான் வாங்கிட்டேன். இப்போ கூட அவன் ஃபோன் என்கிட்ட தான் இருக்கு” என்றான் அரவிந்த்.
“சோ எல்லாமே உங்க மூணு பேர் பிளானா?” என்று கேட்டாள் சுபா.
“இல்லை உனக்கும் அஸ்வின் அப்பறம் சபேசன், துளசி உங்க நாலு பேருக்கு மட்டும் தான் தெரியாது எங்க எல்லாருக்கும் தெரியும்” என்று மலர்ந்த முகத்தோடு வந்தனர் வாசுதேவன் மற்றும் சசிகலா.
இதை அனைத்தையும் வேடிக்கையாக பார்த்த அஸ்வின் சுபாவிடம் திரும்பி, “அவங்க சொல்றாங்கனு நீ நம்பிட்டியே சுபா உன்னை நான் என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். என் சுவாசமே நீயா தான் இருந்திருக்க அப்போ எப்படி என்னால உன்னை விட்டு இன்னொருத்திய நினைக்க முடியும்” என்று அவன் கூறி முடிப்பதற்குள் சுபா ஓடிவந்து அஸ்வினைக் அணைத்துக் கொண்டாள்.
“அஸ்வின் நான் உங்களை விரும்புறேன் நீங்க இல்லாம எனக்கு இனிமேல் வாழ்க்கை இல்லை என் தப்பை நான் உணர்ந்துட்டேன் உங்கள முழு மனதாக நம்புகிறேன்” என்று மறுபடியும் அணைத்துக் கொண்டாள்.
“உங்க ரொமான்ஸ் லாம் அப்பறம் வெச்சிக்கோங்க. அக்கா இந்தா குளிச்சிட்டு இந்த பட்டுப் புடவைய கட்டி ரெடி ஆகு” என்று அவளை கல்யாணத்திற்கு கிளப்பினாள் தீபிகா.
மணமேடையில் சிரிப்பால் ஜொலித்த சோனியா, நிதின் கையால் மங்கள நானை வாங்கினாள். இதையெல்லாம் பார்க்க கனவு போல் இருந்தது சுபாவிற்கு. மாளவிகாவும்
சுபாவிடம் வந்து நல்ல விதமாக வரவேற்றாள். ஏனென்றால் இது அவங்க வீட்டு கல்யாணம். மணமக்களை வாழ்த்திய பின் தனிமை கிடைத்ததில் அஸ்வின் சுபாவிடம்,
“சோனியா என்கிட்ட மூணு மாசம் முன்னாடி வேலைல சேரணும்னு கேட்டா நான் என் பிரண்ட் கம்பெனில சேர்த்து விட்டேன். அங்க அவங்க இரண்டு பேரும் லவ் பண்ணி இப்போ சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” என்றான் அஸ்வின்.
“நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்ங்க இனிமேல் அதெல்லாம் பண்ண மாட்டேன்” என்று சுபா சொல்லும் போதே அவள் வாயை மென்மையாக மூடியவன், “என்னுடைய அளவு நீ தப்பு பண்ணலை சுபா இன்பாக்ட் நீ என்ன நம்பல நம்பற அளவுக்கு நான் உனக்கு எதுவும் விளக்கமா சொல்லல… உனக்கு நான் பண்ண கொடுமைகள் லாம் நிறைய இருக்கு இனிமேல் நம்ம இரண்டு பேரும் சித்துக்கு நல்ல பெற்றோர்களா இருந்து எடுத்துக்காட்டா இருக்கணும்” என்று அவளை ஆதரவாக அணைத்தான் அஸ்வின்.
விஷயம் தெரிந்த பின் சபேசனும் துளசியும் சித்துவை அழைத்துக்கொண்டு சென்னை வந்தனர். அஸ்வினிடம் பேசத் தயங்கிய சபேசனிடம், “மாமா பழசை எல்லாம் மறந்திருங்க” என்று நார்மலாக பேசினான். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததை எண்ணி சுபா சந்தோஷம் அடைந்தாள்.
அடுத்த நாள் காலை சுபாவையும் சித்துவையும் குழந்தைகள் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றான் அஸ்வின்.
“தம்பி நீங்க சொன்ன மாதிரியே உங்கள் மனைவியோடு தான் முதல் தடவை வருவேன்னு சொன்னீங்க அதே மாதிரி வந்துட்டீங்க” என்று பெருமிதமாய் கூறினார். அஸ்வினை எண்ணி பெருமை அடைந்தாள் சுபா. பின் இரவு வீட்டிற்கு வந்த பின் தங்களது அறையில் இருக்கும் போது ஒரு கிரீடிங் கார்டை எடுத்த அஸ்வின், “உன்னோட பிறந்தநாளுக்கு நான் சுனிதா கூட அந்த கடையில இருந்த போது இதை உனக்காக வாங்கினேன். அதை கொடுக்க நினைக்கும் போது நீ என்னை நம்பலை பட் இப்போ உனக்கு இதை கொடுக்குறேன்” என்று அந்த கிரீடிங் கார்டை கொடுத்தான்.
மிக அழகாக காதலை மையப்படுத்திய சின்னங்களைக் கொண்ட அந்த கார்டை ஓபன் செய்துப் பார்த்தாள் சுபா. அதில் “என் சுவாசம் நீதானே சுபா” வித் லவ் அஸ்வின் என்று எழுதி இருந்தது. அதைக் கண்ட சுபா அஸ்வினின் நெற்றியில் முத்தமிட்டு அவனை அணைத்தாள்.
வருடங்கள் கடந்தது… அஸ்வினுக்கும் சுபாவுக்கும் அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்தது.அஸ்வின் அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு சுபாவிடம், “இவளை உன்னை மாதிரி அமைதியா அடக்கமா வளர்க்கப் போறேன்” என்றான்.
“அப்போ சித்துவை உங்கள மாதிரி நல்லா உண்மையானவனா நேர்மையானவனா வளர்க்கப் போகிறேன்” என்று பெருமிதம் கொண்டாள் சுபா. இருவரும் சிரித்துக் கொண்டே தங்கள் குழந்தைகளைக் கொஞ்சினார்கள்.
அவர்கள் இருவரின் வாழ்க்கை இவ்வாறே இனிதாய் இருக்க வாழ்த்தி விடை பெறுவோம்…
சுபம்…
