அனல் 5

அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்…

 

பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை…

 

அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்…

 

தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது…

 

பவித்ரா தான் வாக்கப்பட்டு போகும் பணக்கார வீட்டிற்கு வருவதை எண்ணிப் பார்த்தாலே பிரியாவிற்கு பத்திக்கொண்டு வந்தது…

 

ஆனாலும் இப்போது அவளுக்கு வேறு வழியும் இல்லை…

 

அன்று இரவே பவித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்கள்…

 

வீட்டிற்கு செல்லும் வரை பிரியா வாயேத் திறக்கவில்லை…

 

முத்துமாரிக்கு கால் அடித்தால் அவளும் எடுப்பது போல் இல்லை..

 

அடுத்த நாள் ரிலீஸ் ஆக வேண்டிய படத்திற்கு அப்படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் பிரெஸ் மீட்டிற்கு அணியப்படும் உடையைக் கூட முத்து மாரி தான் வடிபமைப்பாள்..

 

ஆம், அந்த ஹீரோவிற்கு முத்து மாரியின் வடிவமைப்பு ரொம்பவே பிடிக்கும்…

 

அவள் அந்த வேலையில் பிஸியாக இருந்தாள்… இன்னும் சில நிமிடங்களில் அந்த உடையை அவள் ஒப்படைக்க வேண்டும்…

 

அப்படி இருக்கும் தருணத்தில் பிரியா விடாமல் கால் செய்ய ஃபோனை சைலண்ட்டில் போட்டு விட்டாள்…

 

இங்கு பிரியாவின் வீட்டிலோ பெரிய போர்க்களமே நடந்துக் கொண்டு இருந்தது…

 

ஆம், பிரியா அனைத்தையும் சொல்லியிருக்க பேத்திகளின் வாழ்க்கையை நினைத்து சந்தோஷப்பட முடியாமல் பவித்ராவிற்கு அமையப் போகும் வாழ்க்கை பற்றி நினைத்து அவருக்கு வயித்தெரிச்சல் உண்டாக, மீனாட்சிக்கோ சொல்லவே வேண்டாம்…

 

மணிக்கு மட்டும் தான் சந்தோஷமாக இருந்தது… ஆனாலும் மகள் காதல் செய்து திருமணம் வரை சென்றது எல்லாம் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…

 

அதைப் பற்றிக் கேட்டு மனைவி மற்றும் தாயிடம் வாங்கி கட்டியும் கொண்டார்…

 

பிரியா மற்றும் முத்து மாரி சம்பாதித்து போடுவதால் அவளுக்கு வீட்டினரிடமும் செல்வாக்கு அதிகம்…

 

பவித்ராவிற்கு தான் நடப்பதை எல்லாம் கேட்டு தலையே சுற்றியது… அவள் இருக்கும் மனநிலையில் இப்போது திருமணத்தை பற்றி எல்லாம் அவள் எண்ணிக் கூட பார்த்தது இல்லை… 

 

போர்க்களம் நடந்து ஓய்ந்தாலும் அதன் முடிவு தான் யாருக்கும் உவப்பாக இல்லை… 

 

அவர்களுக்கு இப்போது பவித்ராவை தவிர வேறு வழியும் இல்லையே… 

 

இதில் பவித்ராவின் விருப்பமும் கேட்கப்படவில்லை…

 

“இவளுக்கு வாய்ச்ச யோகத்தை பாருங்க அத்தை” என மீனாட்சி ஒருப்பக்கம் கத்த, 

 

“ஆமா ஆமா எல்லாம் நம்ம தலை விதி” என பாட்டியும் நொந்துக் கொண்டார்… 

 

சற்று நேரத்தில் திருப்பி கால் அடித்தாள் முத்துமாரி.. 

 

“நாளைக்கு காலையில நான் சொல்ற இடத்துக்கு வந்திடு” என கட்டளை போல் பிறப்பித்துவிட்டு கட் செய்துவிட்டாள் பிரியா… 

 

முத்துமாரிக்கோ இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை… 

 

குடும்பத்தோடு ஒரு கால் டாக்சியில் கிளம்பினாள் பிரியா… தன்னிடம் உள்ள ஒரு சுமாரான உடையை பவித்ராவிடம் வேண்டா வெறுப்பாக கொடுத்த பிரியா, 

 

“உன்னை நாங்க ராணி போல நடத்துறோம்ன்னு சொல்லணும்… ஏதாவது போட்டு கொடுத்தன்னு வை… இந்த பணக்கார மாப்பிள்ளை உனக்கு கிடைக்கவே மாட்டாது போல பண்ணிடுவேன்”  என பவித்ராவை மிரட்டினாள் பிரியா… 

 

‘நானா கேட்டேன் கல்யாணம்.. நானா கேட்டேன் பணக்கார மாப்பிள்ளை’ என தொண்டை வரை வந்த வார்த்தைகளை மனதிற்குள்ளேயே விழுங்கிக் கொண்ட பவித்ரா எப்போதும் போல தலையசைத்து மௌனியாகி இருந்தாள்… 

 

“முத்து கிட்ட நல்ல உடை போட சொன்னியா பிரியா” என மீனாட்சி அவசரமாக கேட்க, 

 

“ஐய்யயோ இருக்குற டென்ஷன்ல அதை சொல்லல ம்மா” என தங்கைக்கு கால் அடித்தாள் பிரியா.. 

 

“நீ சொன்ன ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன் க்கா… யாருக்கு என்னாச்சு!” என புரியாமல் கேட்டாள்… 

 

“நீ என்ன டிரெஸ் போட்டு இருக்க” என அவசரமாக கேட்டாள் பிரியா.. 

 

“நான் என்ன கேட்குறேன்.. நீங்க என்ன சொல்றீங்க க்கா” என புரியாமல் கேட்ட முத்துமாரியிடம், “படுத்தாம.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி” என எரிச்சலுடன் கேட்டாள் பிரியா… 

 

“என்னோட பின்ச் சுடிதார் தெரியும்ல.. அதான் நான் முதல்ல டிசைன் பண்ணது” என அவள் சொல்ல, 

 

“அதை விட உனக்கு நல்ல டிரெஸ்ஸே கிடைக்கலயா டி” என சலிப்பாக கேட்ட பிரியாவிடம், 

 

“இந்த டிரெஸ் எனக்கு பிடிக்கும் க்கா.. நல்லா தான் இருக்கும்” என முடித்து விட்டாள் முத்து மாரி… 

 

அதன் பின்னர் பிரியாவிற்கும் முத்துமாரியிடம் அதைப் பற்றி கேட்க சலிப்பாக இருந்தது… 

 

தன் தாயிடம் ஃபோனைக் கொடுத்தவள்,” அவ கிட்ட விஷயத்தை சொல்லிடு ம்மா..” என்றாள்… 

 

“அதான் இரத்தம் எல்லாம் மூனு பேருக்கும் ஒரேதா இருக்கணுமே.. அதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்” என மெதுவாக சொன்னவர் கால்லை அணைத்துவிட்டார்… 

 

அவர்கள் நினைத்து விட்டார்கள் முத்துமாரி எல்லாம் எளிதாக ஒத்துக் கொள்வாள் என்று… ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை அவள் ஒத்துக்கொள்வது அவ்வளவு எளிது கிடையாது என்று… 

 

இவர்கள் கிசுகிசுத்து பேசியதால் அது முத்துமாரிக்கு ஃபோனில் கேட்கவில்லை… 

 

ஒருவழியாக அவர்கள் அந்த மருத்துவமனையில் வந்து இறங்க அடுத்த சில நிமிடங்களில் மகைஷூம் வந்து சேர்ந்தான்… 

 

எதற்கு குடும்பமாக வந்து இருக்கிறார்கள்… அதுவும் உடன் பவித்ரா வந்திருப்பது முத்துமாரிக்கு ரொம்பவே புதிதாக, வித்தியாசமாக இருந்தது… 

 

சிவகாமி பவித்ராவை பற்றி தவறாக சொல்லியதால் முத்து மாரியும் பவித்ராவை மதித்தது கிடையாது… 

 

பவித்ரா என்று ஒருத்தி இருக்கிறாள் என்று தான் இருந்தாள்.. ஆனால் இந்நாள் வரை அவளை மட்டம் தட்டுவது அதட்டுவது என பிரியா போல் இவள் எதுவும் செய்தது கிடையாது… இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது தான் முத்துமாரியின் குணமும், பழக்கமும்… 

 

மகேஷ் வந்ததும் அவன் நின்று கூட பிரியாவிடம் பெரிதாக பேசவில்லை.. அங்கிருந்த யாரையும் அவன் கண்டுக்கொள்ளவும் இல்லை… 

 

“வாங்க முதல்ல பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வந்திடலாம்” என அவசரமாக அவன் உள்ளே செல்ல, 

 

“பிளட் டெஸ்ட்டா எதுக்கு” என பிரியாவை பிடித்து நிறுத்தினாள் முத்துமாரி.. 

 

“அமைதியா நான் சொல்றதை செய் முத்து” என தங்கையை அடக்கிய பிரியா மகேஷின் பின்னே செல்ல, அவளின் பின்னே பாவமாக பவித்ராவும் குழப்பமாக முத்துமாரியும் சென்றார்கள்… 

 

“நம்மளை மனுஷங்களா கூட அந்தப் பையன் பாக்கல” என மணி குறைப்பட்டுக் கொள்ள, 

 

“என்ன பண்ண சொல்ற… அதான் கல்யாணம் கட்டிட்டாளே உன் மவ” என சலிப்பாக சொன்னார் சிவகாமி… அவருக்குமே மகேஷ் அப்படி தங்களை கண்டுக்கொள்ளாமல் சென்றது ஒரு மாதிரி இருந்தது… 

 

“அது மாப்பிள்ளை வந்த அவசரத்துல கவனிச்சு இருந்து இருக்க மாட்டாங்க” என சமாளித்தார் மீனாட்சி.. 

 

“இன்னும் இரத்தம் பரிசோதனை நடக்கல அது மூனு பேத்துக்கும் ஒரே போல வந்தா மட்டும் தான் உன் பொண்ணோட தாலிக்கே அங்க மரியாதை… அதுக்குள்ள மாப்பிள்ளையா” என கடுப்புடன் கேட்டார் மணி…

 

“அதெல்லாம் நல்லது தான் நடக்கும்… அப்படி இரத்தம் ஒத்துப் போகலைன்னாலும் என் பொண்ணு கழுத்துல தாலி ஏறியிருக்கு… அதுக்கு நியாயம் கிடைக்காமல் நான் விட மாட்டேன்” என வேகமாக சொன்னார் மீனாட்சி… 

 

மூவரையும் அழைத்துக்கொண்டு தன் குடும்ப மருத்துவரிடம் சென்ற மகேஷ் அவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க சொல்ல, அப்படியே நடந்தது… 

 

பத்தே நிமிடத்தில் ரிசல்ட்டும் வந்தது… 

 

பாட்டியின் அறிவுரைப்படி அவருக்கே நேரடியாக கால் செய்த டாக்டர், “மூனு பேருக்கும் பி பாஸிடிவ் பிளட் க்ரூப் ம்மா” என சொல்ல பாட்டிக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு… பின்னே அவருக்கு அவனின் மகன் உயிர் பெரிதும் முக்கியம் அல்லவா… 

 

இங்கே மகேஷிற்கு ஆனந்தம் என்றால் பிரியாவிற்கும் அதே நிலை தான்… ஆனாலும் பவித்ராவை எண்ணி எண்ணி மனம் வெதும்பியது…

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் மகேஷிற்கு பாட்டியிடம் இருந்து கால் வந்தது… 

 

“பொண்ணு வீட்டை கூட்டிட்டு அப்படியே வீட்டுக்கு வந்திடு” என கட்டளை விடுக்க, மகேஷ் பிரியா புறம் திரும்பி, “எல்லாரும் என் கார்ல ஏறுங்க” என சொல்லிவிட்டு அவன் பார்க்கிங் லாட்டிற்கு சென்றான்…

 

“அக்கா என்ன நடக்குது இங்க?” என சற்று ஆதங்கத்துடன் கேட்டாள் முத்துமாரி… 

 

இரத்த பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் தான் குடும்பம் மொத்தத்திற்கும் பெரிய நிம்மதி… 

 

முத்துமாரி கேட்டதில் அவளுக்கு நடந்த அனைத்தையும் சொல்ல, “வாட்” என அதிர்ந்தவள், 

 

“என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் பட்டென்று… 

 

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத குடும்பத்தினர் அனைவரும் திகைக்க, 

 

“என் கல்யாணத்தை இப்போவே எதுக்கு முடிவு பண்ணீங்க… ஒன்னு வாங்குனா ஒன்னு ஃபிரின்னு கிடைக்குற வாழ்க்கைல எங்க சந்தோசம் இருக்கும்” என பாயிண்ட்டைப் பிடித்து கேட்டாள் முத்துமாரி… 

 

“அப்போ உனக்கு என் வாழ்க்கை முக்கியம் இல்லயா முத்து” என பிரியா ஆதங்கம் கலந்த கண்ணீருடன் கேட்க, 

 

“ஐய்யோ அக்கா நான் அப்படி சொல்லல… நீ ஏன் இப்படி அவசரப்பட்டு கல்யாணம் பண்ண” என கேட்டாள் முத்துமாரி… 

 

தங்கையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என புரியாமல் திணறியவள்,” அது மகேஷ் தான் என்னை கட்டாயப்படுத்துனாரு” என இங்கேயும் பொய் சொல்லி சமாளித்தாள் பிரியா…

 

“அவங்க கையில காலுல விழுந்து கெஞ்சியாவது உன் கல்யாணத்தை நடத்துறேன் க்கா.. ஆனா என்னை விட்டுடுங்க” என்றாள் கெஞ்சல் கலந்த முடிவுடன்… 

 

“அம்மா.. இவளை பாருங்க ம்மா” என தன் அன்னையிடம் தங்கையின் பேச்சை வைத்து முறையிட்டாள் பிரியா… 

 

பெரிய சம்மந்தத்தை விட மீனாட்சிக்கு மனசு வருமா என்ன… 

 

“உனக்கு இந்த அம்மா உயிரோட வேணும்ன்னா இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கணும் முத்து” என்றார் ஸ்திரமாக… 

 

அவ்வளவு தான்… இதை விட பெரிய மிரட்டல் இருக்கிறதா என்ன… வேண்டா வெறுப்பாக மசிந்து விட்டாள் முத்து மாரி… 

 

மகேஷின் காரில் பிரியாவின் குடும்பம் அந்த பெரிய பங்களாவை நோக்கிச் சென்றது… 

 

இன்னும் கூட மகேஷ் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை… அவனுக்கு மனதில் பெரிய குற்ற உணர்ச்சி… தன்னால் தம்பிகளுக்கு இந்த நிலை என தன் மீதே கோபம்.. 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!