அத்தியாயம் 30

அத்தியாயம் 30

 

“என்னடி, என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்னு சந்தோஷமா இருக்கியா? கண்டிப்பா ஒரு நாள் என் கண்ணுல நீ படுவ அப்போ உன்னை…” என்ற வம்சியின் கம்பீரமான குரல் தன் காதில் விழுந்ததும் அந்த ராத்திரியில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் ராதை. 

 

அவள் கண்டது கனவு என்பதை உணரவே அவளுக்கு சில நொடிகள் எடுத்தது… 

 

பக்கத்தில் இருக்கும் தண்ணீர் ஜாடியை எடுத்து பருகியவளின் உடல் வியர்த்தது. ‘என்ன இது, கனவுல அவனோட குரலைக் கேட்டாலே இப்படி வெடவெடக்குது. கடவுளே எனக்கு மன தைரியத்தைக் கொடு… அவனுக்கு தான் என்னை பிடிக்காதே, அப்போ என் கதை முடிஞ்சிடுச்சுனு நிம்மதியா தானே இருப்பான்’ என்று தன்னையே சமாளித்தவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

 

அடுத்த நாள் காலை ராதைக்கு இதமாக விடிந்தது. பெங்களூரின் குளிர் அவள் மனதிற்கு ஒரு விதமான இதத்தைக் கொடுத்தது. காலை ஐந்தரை மணிக்கு எழுந்த ராதை பல் தேய்த்து குளித்து முடித்து வருவதற்கு காலை ஆறு ஆனது. அவளின் அறையில் அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட செல்ஃபில் முருகனின் படமும் அவளின் பெற்றோர்கள் படத்தையும் வைத்து கும்பிட்டாள். 

 

“கடவுளே முருகா… இன்னிக்கு எனக்கு இருக்குற இன்டர்வியூல நான் செலக்ட் ஆகி, இந்த கம்பெனியில எனக்கு வேலை கிடைக்கணும். நீங்க தான் எனக்கு தைரியத்தை கொடுக்கணும்” என வேண்டியவள் தன் தாய் மற்றும் தந்தையின் புகைப்படங்களை கண்டு,

 

“அப்பா… அம்மா… கொஞ்ச நாளாவே நீங்க ரெண்டு பேரும் இல்லைன்ற ஏக்கம் என் மனசுல ரொம்ப இருந்துக்கிட்டே இருக்கு. உங்க பொண்ணுக்கு வந்த நிலைமையை பார்க்க நல்லவேளை நீங்கள் இப்போ இல்லை, இருந்தால் துடிச்சிருப்பீங்க” என்று மனதில் வருந்தியவளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வர காத்துக் கொண்டிருந்தது.

 

“டி ராதை, ஆல் தி பெஸ்ட். நானும் குளிச்சிட்டு ரெடி ஆயிட்டேன், வா சாப்பிட்டு கிளம்பலாம்” என்றாள் வனிதா.

 

“இல்லை வனிதா எனக்கு வேலை கிடைச்சால் தான் இந்த ஹாஸ்டல் நிரந்தரம், இல்லைன்னா நான் வெளியே தான் போகணும் . அதுவர இங்க சாப்பிட ஒரு மாதிரி இருக்கு, அதனால நீ சாப்பிட்டு வா, நான் என்னோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் சரியா அடுக்கி வைக்குறேன்” என்று வனிதாவை சாப்பிடச் சொல்லிவிட்டு ராதை தன் பெட்டியைத் திறந்தாள்.

 

“நீ என்னடி லூசா? இப்படி அநியாயத்துக்கு நல்லவளா இருக்குறதுனால தான் எல்லாரும் உன் வாழ்க்கையை வெச்சு விளையாடுறாங்க… இன்னிக்கு இன்டர்வியூ வைச்சிட்டு சாப்பிடாமல் போயி மயங்கி விழுந்துறாத… வா நம்ம வெளியே போய் சாப்பிடலாம். மணி இப்போ ஏழு ஆகுது, உனக்கு இன்டர்வியூ எத்தனை மணிக்கு டி?” என்று கேட்ட வனிதாவிடம், “பத்து மணிக்கு டி” என்று தன் கையில் உள்ள கைக்கடிகாரத்தில் ஒரு முறை மணி சரியாக ஓடுகிறதா என்பதை பார்த்தாள்.

 

***

 

‘ஒழிஞ்சுது சனியன்’ என்று நிம்மதியாக கோதை உறங்கிக் கொண்டுருந்த சமயம், வீட்டில் புதியவர்களின் சத்தம் பலமாகக் கேட்டது. 

 

யார் வந்திருப்பார்கள் என்று எரிச்சலோடு வெளியே வந்தவளின் முன் பிரகாஷ் இறுகிய முகத்துடன் கையில் ஒரு பத்திரத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுடன் அவனின் தந்தையும் தாயும் கூட அமர்ந்திருந்தார்கள். 

 

“வா பிரகாஷ்…” என்று ஆவலோடு அழைத்த கோதையிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரகாஷ்.

 

“ஆன்ட்டி, அங்கிள் வாங்க” என்று அவர்களின் பக்கத்தில் சென்றாள். ஆனால் அவர்கள் எந்த ஒரு உணர்வையும் கொடுக்காமல் வேறு யாரிடமோ கோதை பேசுவது போல் கண்டுக் கொள்ளாமல் இருந்தனர். 

 

“பண்றதையும் பண்ணிட்டு எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் அவங்களை வரவேற்குறியா? இதோ இருக்கானே இந்த பிரகாஷ் விபி குரூப்ஸ் மொத்தத்தையும் அவன் கையில கொண்டு வந்துட்டான்… நம்ம இனி நடுரோட்டுல தான்… அதை சொல்லத் தான் குடும்பத்தோடு வந்திருக்கான்” என்று கோபத்தில் கத்தினார் விஜயகுமார். 

 

“விஜயகுமார் அது வந்து…” என்று ஆரம்பித்த ஆறுமுகத்திடம், “அப்பா நிறுத்துங்க, உங்களையும் அம்மாவையும் இங்கு அழைச்சிட்டு வந்ததுக்கு காரணமே நீங்க ரெண்டு பேரும் கெஞ்சிக் கேட்டதால தான். இங்க நான் மட்டும் தான் பேசணும். நீங்க ரெண்டு பேரும் வேடிக்கை மட்டும் பாருங்க” என்று தீர்மானமாகக் கூறினான் பிரகாஷ்.

 

ஆம், பிரகாஷ் இவர்களைக் காயப்படுத்தத் தான் இங்கு வந்துருக்குறான் அதிலும் அவர்களை மிகவும் காயப்படுத்தி விடக்கூடாது என்று தான் அவனின் பெற்றவர்கள் இருவரும் அவனிடம் கெஞ்சிக் கொண்டு கூடவே வந்தார்கள். ஏனெனில் இவர்கள் முன் அவனால் ஓரளவிற்கு மேல் காயப்படுத்த இயலாது என்பதால் தான். 

 

“இனி விபி குரூப்ஸ்க்கும் உங்களுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல.. இந்த வீட்டை மட்டும் மேய்ச்சிட்டு அழுங்க” என வன்மமாக சொன்னவன், 

 

“சோ நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு, கிளம்பலாம் அப்பா, அம்மா…” என்று அந்த இடத்தை விட்டு எழுந்தான் பிரகாஷ். 

 

அவர்கள் சென்ற பின், “போச்சு போச்சு எல்லாமே போச்சு… இப்போ இந்த வீட்டைத் தவிர நமக்கு வேற எதுவும் இல்லை. வெறும் வீட்டை வைச்சு எப்படி வாழ்க்கையை நடத்துறது? கடவுளே… பேசாமல் இவளை பெத்ததுக்கு என் உயிரை எடுத்துடு” என்று விஜயகுமார் கோபத்துடன் அழுதுக் கொண்டிருந்த போதே, “ஐய்யயோ அத்தை… ஏங்க இங்க வாங்க…” என்று பூஜையறையில் இருந்து கத்தினார் மைதிலி.

 

அதில் விஜயகுமார் மற்றும் கோதை அலறி அடித்துக்கொண்டு பூஜையறைக்குள் சென்றார்கள். அங்கு மைதிலியின் மடியில் அழுதுக் கொண்டே சாய்ந்த மாதிரி இறந்த நிலையில் இருந்தார் இராஜேஸ்வரி பாட்டி! 

 

இந்த வீட்டின் மூத்த தலைவி. ஏற்கனவே ராதை வீட்டை விட்டு போனதில் இருந்து சோர்வடைந்த பாட்டி, இப்போது அவரின் கணவர் கஷ்டப்பட்டு உருவாக்கிய விபி குரூப்ஸ் இப்போது எவனோ ஒருவனுடைய கைகளுக்கு போய், தாங்கள் இப்போது நடு தெருவில் நிற்பதைப் பாட்டியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

 

கோதையை செல்லம் கொடுத்து வளர்த்த விஜயகுமாரால் இப்போது தங்களின் வம்ச தொழிலே முடங்கி விட்டதன் காரணத்தால், அந்த துக்கத்தை தாங்காத பாட்டி, இப்போது இறைவனடி சேர்ந்தார்.

 

இராஜேஸ்வரி பாட்டி இறந்த விஷயம் வம்சியின் வீட்டிற்குச் சென்றது. அனைவரும் உடனே கிளம்பினர் வம்சி உட்பட. 

 

‘பாட்டி பாட்டினு இருந்தியேடி, இப்போ அவங்க இல்லாம போய்ட்டாங்க… இதை நீ எப்படி தாங்கிக்க போற ராதை?’ என்று ஒரு நிமிடம் உண்மையாக ராதைக்காக வருந்திய வம்சி, 

 

பின் தன் எண்ண ஓட்டத்தை மாற்றி, “எப்படியோ நீ இதுக்கு வருவ ராதை, அந்த வனிதா உன்கிட்ட இந்த விஷயத்தைக் சொல்லுவா. அப்போ இருக்கு டி உனக்கு” என்று அவளை இரையைத் தேடும் சிங்கம் போல் வழி மேல் விழி வைத்துக் கொண்டு காத்திருந்தான் வம்சி.

 

இந்த விஷயம் பிரகாஷின் குடும்பத்திற்கு எட்டிய பின் அது வனிதாவின் குடும்பத்திற்கும் எட்டியது. மணிகண்டன் அன்று தான் ஊரில் இருந்து வந்திருந்தார். இந்த விஷயத்தை அறிந்தவுடன் தன் மனைவி ரமாவிடம் தெரிவித்தார். ஏற்கனவே வம்சியின் கணிப்பை நினைத்து பயந்த ரமா இப்போது இந்தச் செய்தியைக் கேட்ட பின் ஆடிவிட்டார். 

 

இந்த விஷயம் ராதைக்குத் தெரிந்தே தீர வேண்டும் என்று வனிதாவிற்கு கால் செய்தார். ஆனால் அப்போது தான் வனிதா மற்றும் ராதை காலை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அந்த பிரம்மாண்ட கம்பெனியை நெருங்கிக் கொண்டிருந்தனர். தன்னுடைய மொபைலை சைலன்ட் மோடில் போட்டதால் தன்னுடைய தாய் கால் செய்ததை வனிதா பார்க்கவில்லை.

 

பிரகாஷிற்கு ஏதோ ஒரு குற்ற உணர்வு மனதில் மேலோங்கியது. தன்னால் தான் அந்த பாட்டி இறந்தார்களோ என்று நினைத்தவன், “ராதை இல்லாததால தான் அவங்க இறந்துட்டாங்க. அப்படிப் பார்த்தால் முழுக்க முழுக்க இதுக்கு அந்த வம்சி மட்டும் தான் காரணம்” என்று தன்னை தேற்றிக்கொண்டான்.

 

இராஜேஸ்வரி பாட்டியின் உடல் அவர்கள் வீட்டு ஹாலில் வைக்கப்பட்டது. பிரகாஷைத் தவிர அனைவரும் வந்திருந்தனர் ரமா உட்பட. 

 

இங்கு வம்சியின் மொத்த குடும்பமும் வந்திருந்தது. கம்பீரமாக இருந்த பாட்டி இப்படி இறந்து கிடப்பதைப் பார்க்க, அனைவரின் கண்களிலும் கண்ணீர் மூண்டது. வம்சி இறுகிய முகத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது ராதையைத் தான். 

 

விஜயகுமார் பைத்தியம் பிடித்தது போல் ஒரு ஓரத்தில் அசைவே இல்லாமல் அமர்ந்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த யாருமே கோதையைக் கண்டுக் கொள்ளவில்லை. வம்சியின் பாட்டி, தாத்தாவை தவிர.

 

***

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!