அத்தியாயம் 34
“பாட்டி, வம்சி அண்ணா ஏன் இப்படி பண்றாங்க? அந்தப் பெண்ணோட பாட்டி இன்னிக்கு இறந்து போய் இருக்காங்க… இதுல இன்னொரு விஷயம் இருக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கோதை கால் பண்ணினா, அவங்க வீட்டை அவங்க அப்பா விக்க போறாங்களாம்! வம்சி அண்ணாக்கு கால் பண்ணிட்டே இருந்தாளாம். ஆனா அண்ணா கால்லை எடுக்கவே இல்லயாம்” என்று யசோதா புலம்பி முடிக்க மறுபடியும் உள்ளே வந்தான் வம்சி.
“யசோ, இந்த கோதைக்கு என்ன பிரச்சனை சும்மா சும்மா எனக்கு கால் பண்ணிட்டே இருக்கா?” என்று கடுப்பானான் வம்சி.
“அண்ணா, அது வந்து… அவங்க வீட்டை விக்க போறாங்களாம். அதான் உன்கிட்ட ஏதாவது உதவி கேட்க கால் பண்ணாளாம்…” என்று யசோதா தயங்கி கொண்டிருக்கும் போதே,
“ஓ நினைச்சேன்… இந்த விஷயம் எதுவுமே ராதையோட காதுக்குப் போகக் கூடாது… அப்பா, அம்மாகிட்டயும் நீ இதைப்பத்தி இப்போவே சொல்லிடு. கோதை வீட்டைப் பத்தி ராதையோட காதுக்கு எதுவுமே போகக் கூடாது!” என்று தீர்மானமாகக் கூறியவன், தன் பாட்டி, தாத்தாவை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேச் சென்றான்.
“பாத்தீங்களா பாட்டி அண்ணா சொல்றதை” என்று புலம்பிய பேத்தியிடம், “வம்சி ராதையை பழிவாங்க கல்யாணம் செஞ்ச மாதிரி எனக்கு தோணலை யசோதா… சரி வம்சி சொல்லை மீறி நம்மால எதுவும் செய்ய முடியாதே. நம்மால மைதிலிக்கு உறுதுணையாய் மட்டுமே இருக்க முடியும்” என்று பெருமூச்சு விட்ட காந்திமதி பாட்டி தன் கணவன் விஸ்வநாதனைப் பார்த்தார். அதற்கு அவரும் ஒப்புதலாய் தலையசைத்தார்.
“சரிம்மா, நீ போய் ராதையை ரெடி பண்ணு, இல்லனா உன் அண்ணன் ருத்ர தாண்டவம் ஆடிடுவான்” என்று பேத்தியை அனுப்பி வைத்தார்.
சாப்பாட்டை சாப்பிட்டு முடித்த ராதை அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய வாழ்க்கை எதை நோக்கி போகிறது என்றே தெரியாமல் அர்த்தம் இல்லாத ஒரு வாழ்க்கையில் இருக்கிறோம் என்றே நினைத்தாள்.
“ரா… அண்ணி, அது வந்து இந்த சேலையைக் கட்டிக்கோங்க. நான் உங்களுக்கு மேக் அப் பண்ணி விடுறேன்” என்று அறைக்கு வெளியேச் சென்றவள், “கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகுங்க அண்ணி, இல்லனா அண்ணா கத்திடுவார்” என்று கூறிவிட்டு வெளியேச் சென்றாள்.
‘என்னது ரெடி ஆகணுமா? எதுக்கு இதெல்லாம் பண்ண சொல்றாங்க?’ என்று மனதில் நொந்தவள், ஒரு முடிவு எடுத்தவளாக சேலை அணிந்து தயாராகினாள். அப்போது தான் அங்கு சாப்பாட்டு மேசையில் பழங்களோடு வைக்கப்பட்டிருந்த கத்தியை கண்டாள். அதை எடுத்து தன்னுடைய சேலைக்குள் மறைத்து வைத்தாள். .
சற்று நேரத்தில் வந்த யசோதா, அந்த நீல வண்ண மைசூர் சில்க்கை உடுத்திய ராதையை வியந்துப் பார்த்தாள். ‘ப்பா மேக்கப் போடாமலேயே இவங்க எவ்வளவு அழகா இருக்காங்க! அண்ணா கொடுத்து வெச்சவர் தான்’ என்று மனதில் நினைத்தவள் ராதையை தேவதை போல் அலங்காரம் செய்தாள்.
பின் அவளை வம்சியின் அறைக்குள் விட்டுவிட்டு வெளியே வந்தாள். என்ன தான் சேலையில் மறைத்து வைத்திருந்த கத்தி இருந்தாலும், மனதில் ஒரு படபடப்பு ராதைக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது. பயத்தில் வியர்த்து கொட்ட வேற ஆரம்பித்தது.
யசோதா விட்ட இடத்தில் தலை குனிந்தபடியே நின்றுக் கொண்டிருந்த வளைக்க கண்டு, “இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி பொம்மை மாதிரி ஒரே இடத்துல நிக்கப் போற?” என்று அவள் பின்னாடி இருந்து வம்சியின் கம்பீரமான குரல் ஒலித்தது.
அவன் பேசியதில் படாரென்று திரும்பியவள், முதலில் கண்டது பட்டு வேஷ்டியில் கம்பீரமாக கதவின் பக்கத்தில் ஸ்டைலாக நின்றுக் கொண்டிருந்த வம்சியை தான். பின் கதவு தாழிடப்பட்டதைக் கவனித்தாள்.
‘ஐய்யய்யோ கதவை வேற சாத்திட்டானே’ என்று மனதில் பதறியவள், ‘ராதை உன் உயிரை விட உன் மானம் தான் முக்கியம். அதனால இவன் உன்னை நெருங்கினால் உன்னையே கொன்னுடு!’ என்று அவள் மனம் அடித்துக் கூறியது.
அவள் மனது எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்த வம்சி அங்கு இருந்த சோஃபாவை காட்டி, “நீ அங்கே படுத்துக்கோ அன்ட் இந்த பெட்ரூம்ல நடக்குற எந்த விஷயமும் வெளியே போகக் கூடாது. அதை மீறி போச்சுனா உன்னை கொன்னுடுவேன்” என்றான்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலையை ஆட்டிய ராதை உடனே சோஃபாவிற்கு விரைந்தாள். அவள் சென்ற வேகத்தில் சேலை முந்தானையில் மறைத்து வைத்திருந்த கத்தி கீழே விழ, அந்த அமைதியான அறையில் அது விழுந்த சத்தம் நன்றாகவே எழுப்பியது. அதை ராதை காணும் முன்னே கண்டுவிட்டால் வம்சி.
கத்தியைக் கண்ட ராதையோ, வம்சி அதைக் காணும் முன்னே எடுக்க வேண்டும் என்று நினைத்து வம்சியின் முகத்தைப் பார்த்தாள். அவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
“நான் உன்னைத் தொட்டுடுவேனு என்னைக் குத்த கத்தி வெச்சிட்டு இருக்கியா டி… நானும் சரி பாவம் சின்ன பொண்ணுனு பார்த்தா, நீ அப்பாவி மாதிரி முகத்தை வைச்சிட்டு என்ன வேலை பண்ற? நீ நினைக்குற மாதிரி எல்லாம் என்னை குத்த முடியாது” என கோபமாக அவள் பக்கத்தில் நெருங்கியவன்,
“உன் கழுத்துல தாலி கட்டுன போது கூட உன்னைத் தொடணும்னு ரொம்பவே தோணுச்சு, ஆனா எனக்குள்ள இருக்குற நல்லவன் அதை விடல. அப்புறம் இன்னிக்கு உன் பா…” என்று நிறுத்தியவன்,
“இன்னிக்கு உன்னைப் பார்க்க பாவமா இருந்தாலும், இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டாவே இருந்தாலும், உன்னை மனசளவுல பொண்டாட்டியா நினைக்கா இருந்தாலும், உன்னை கீப்பா நினைச்சாவது யூஸ் பண்ணிருப்பேன்.”
“ஆனா என்னோட மனசாட்சி அதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கல… நீ நீயா இதெல்லாம் பண்றீயா இல்ல அந்த பிரகாஷ் சொல்லி இப்படி எல்லாம் பண்றியா?” என்று அவளை உலுக்கிக் கேட்டான் காட்டமாக.
அதில் பயந்தவள், “அதுவந்து… நான்… கத்தியை என்னை நானே கொல்ல தான் எடுத்தேன்” என திணறியபடி அவள் சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
“ஏன்?” என்று அதட்டலாகக் கேட்டான் வம்சி.
“என்னோட உயிரை விட, என்னோட மானம் தான் எனக்கு முக்கியம்” என்று அழுத்தமாய் அழுதுக் கொண்டே கூறினாள்.
ராதையின் பதில் வம்சியை வெகுவாக அசைத்தது. அவன் கண்ட பெண்கள் எல்லாம் அவனை அடைய ஆசை பட்ட நிலையில், அவன் கட்டிய தாலியை அவள் சுமந்தும் அவன் அவளை நெருங்கக் கூடாது என்று நினைத்த அவளுடைய மனது…
அவளின் உயிரை விட அவளின் கற்பின் மீது அவள் வைத்திருக்கும் மரியாதை வம்சியை கவர்ந்தது.
அவளின் தோள்களின் மேல் இருந்த அழுத்தத்தைக் குறைத்தவன், அவளை மெதுவாக விடுவித்தான். அந்த கத்தியை எடுத்த ராதை அங்கு இருந்த செல்ஃபில் வைத்துவிட்டு உறங்கச் சென்றாள். அவளுக்குமே வம்சி அவளை விடுவித்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
சிறிது நேரம் கண்களை மூடி உறங்க நினைத்தவள் வம்சி என்ன செய்கிறான் என்று யோசித்த தருணம் அவள் கண்களைத் திறந்துப் பார்த்தாள்.
அவனின் அறையில் இருக்கும் பால்கனியில் இவளுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், ‘கடவுளே, நான் என் பாட்டிகிட்ட போகணும்… பெரியப்பா, பெரியம்மா எல்லாம் எப்படி இருக்காங்களோ?’ என்று தன்னை மீறி வம்சிக்கு தெரியாத விதமாய் அழுதவள் அப்படியே உறங்கிவிட்டாள்.
வம்சிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை. ‘என்ன மாதிரி பொண்ணு இவ… சின்ன வயசுலயிருந்தே இவளை எனக்கு பிடிக்காது. ஆனா அன்னிக்கு ஊட்டில அந்த அரைகுறை வெளிச்சத்துல உன்னை பாத்த அப்போவே நீ தான் ராதைனு தெரியாம உன் அழகுல விழுந்துட்டேன்… உன்னை விட கூட பேரழகிகளை நான் பாத்துருக்கேன் டி… ஆனா உன்னை பாத்ததும் காதல்ல விழுந்துட்டேன். நீ தான் எனக்கானவன்னு நான் அந்த நொடியே முடிவு பண்ணிட்டேன்.’
‘அன்னிக்கு உன் மானம் தான் பெருசுனு எல்லார் முன்னாடியும் என்னை அவமானப் படுத்துன… அதுக்கு உன்னை பழிவாங்கணும்னு உனக்கு தாலிக் கட்டி உன்னை வார்த்தையால அவமானப்படுத்துனேன்…’
‘உன்னோட அழுகை, பயம் எல்லாமே எனக்குள்ள ஒரு தாக்கத்தை உண்டாக்குது டி. ஏன்னு எனக்குத் தெரியல…’
‘என்னையே என் அழகுக்காக, பணத்துக்காக சுத்தி வர பொண்ணுங்களுக்கு நடுவுல என்கிட்ட இருந்து உன் உயிர் போனாலும் பரவாயில்ல, ஆனா உன் மானத்தை காப்பாத்தணும்னு நெருப்பா இருக்க.. எனக்கு பிடிக்காத கோமகள் ராதையை இப்போலாம் ரொம்ப ரொம்ப பிடிக்குதே…!’ என நிலவைப் பார்த்தபடி மனதில் நினைத்தவன், ஒரு வித புத்துணர்ச்சியாய் உணர்ந்தான்.
அடுத்த நாள் காலை ராதை எழுந்திருக்கும் பொழுது வம்சி ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். முதல் முறை தன் வாழ்வில் தனியாக ஒரு ஆணோடு இருக்கிறாள். நேற்று சேலை அணிந்திருந்ததால் இப்போது எழுந்தவுடன் பதற்றமாக சேலை ஏதாவது விலகி இருக்கிறதா என்று சரி பார்த்தவளை,தான் ரெடி ஆகிக் கொண்டிருக்கும் ஆளுயர கண்ணாடியின் வழியாக அவளின் செயலை பார்த்துக் கொண்டிருந்தான் வம்சி.
அவன் கண்ணாடி வழியாக தான் செய்வதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு தெரியவில்லை. அவளின் இத்தகைய செயலும் வம்சிக்கு பிடித்தது. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய அனைத்து நல்ல குணங்களும் ராதைக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தவன் ராதையின் மீது அழகான காதலில் விழுந்துவிட்டான்.
***
