தன் அறையில் அமர்ந்துருந்த வம்சிக்கு ராதையின் மேல் அத்தனை கோபம். ‘நான் அவ மேல வைத்திருக்குற காதல் ஏன் அவளுக்கு புரியல? அவளோட பாட்டி இறப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்ற விஷயம் சீக்கிரமே ராதைக்கு தெரியவரும். இனி நான் அவளைத் தேடி போக மாட்டேன்’ என்பதில் மனதில் உறுதியாக இருந்தான் வம்சி.
வனிதா சொன்ன முகவரிக்குச் சென்றான் பிரகாஷ். ராதை வருவாள் என்று வெளியேவே அமர்ந்திருந்தனர் விஜயகுமார், மைதிலி மற்றும் கோதை. முதலில் இறங்கிய ராதை ஓடி வந்து தன் பெரியம்மாவை கட்டி அணைத்து அழுதாள்.
“ஏன் பெரியம்மா, பாட்டி என்னை இப்படி அனாதை ஆக்கிட்டு போய்ட்டாங்க… இனி நான் உயிரோடு இருக்குறதுல என்ன பிரோயஜனம்?” என்று தேம்பி அழுதவளைத் தேற்றிய மைதிலி, “இல்லடா அப்படி சொல்லாத, பாட்டி இறைவனடி சேர்ந்துட்டாங்க. அவங்களுடைய ஆசையே நீ சந்தோஷமா இருக்கணும் வாழணும் அப்படின்றது தான். உனக்கு நாங்க இருக்கோம். இவ்வளவு நாள் எங்கே இருந்த?” என்று கேட்கும் போதே வனிதா மற்றும் பிரகாஷ் வருவதைக் கண்டனர் மூவரும்.
அவனைப் பார்த்து கடுப்பான கோதை, “நீ எதுக்குடா இங்க வந்த? உன்னால தான் நாங்க இந்த நிலைமையில இருக்கோம். நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவ…” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி கத்தி அழுதாள். இதைக் கண்ட வனிதா மற்றும் ராதை அதிர்ச்சி அடைந்தார்கள்.
“ஏய், ஒழுங்கு மரியாதையா கையை எடுத்திடு, இல்லனா உன்னை கொன்னுடுவேன்” என்று திமிராகப் பேசினான் பிரகாஷ்.
“கொன்னுடு… உன்னை காதலிச்ச பாவத்துக்குத் தான் நாங்க இந்த நிலைமையில இருக்கோம். என் அப்பா என்னோட பேசுறதையே நிறுத்திட்டார்.. எல்லாம் உன்னால” என்றவளோ ராதையை இழுத்துக் கொண்டு வந்து, “இதோ என்னால இவ வாழ்க்கையே போச்சு, பேசாம என்னை கொன்னுடு” என்று பிரகாஷின் கையைப் பிடித்து தன் கழுத்தை நெரித்தாள்.
அவளை உதறி விட்ட பிரகாஷ், “இப்போ கூட உன்னை நான் தொடணும்னு தானே கழுத்தை நெறிக்குற மாதிரி கையைப் பிடிக்குற?” என்று எகத்தாளம் கலந்த நக்கலுடன் கேட்டான்.
“போதும் நிறுத்துடா… இனி ஒரு வார்த்தை என் மகளை பத்தி ஏதாவது தப்பா பேசுன, நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று கத்தினார் விஜயகுமார்.
அங்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ராதை மற்றும் வனிதாவை அழைத்துக் கொண்டு உள்ளேச் சென்ற மைதிலி நடந்த அனைத்தையும் கூறினார். அனைத்தையும் கேட்டறிந்த ராதைக்கோ தன்னை நினைத்தே எரிச்சலாக வந்தது.
‘அவசரப்பட்டு வம்சியைத் தப்பாக நினைச்சு இப்படி பண்ணிட்டோமே கடவுளே! நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன். இதுல தாலியை வேற எறிஞ்சிட்டேன்’ என்று தன்னையே நொந்தவள், மைதிலியிடம் இதுவரை நடந்த அனைத்தையும் கூறினாள்.
மைதிலிக்கு ராதையிடம் என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை. அப்போது தான் காந்திமதி அம்மா தன் மகளுக்கு கால் செய்து ராதை சென்ற விஷயத்தைச் சொன்னார். ராதை இங்கு பத்திரமாகத் தான் இருக்கிறாள் என்று கூறிய பின்பு தான் அவர் அமைதி அடைந்து கால்லை வைத்தார்.
“அப்பா நீங்க என்ன வேலை பண்ணிருக்கீங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கூறிக்கொண்டே தன் தந்தையின் கைப்பிடியில் குழந்தைப் போல் ஒன்றினாள் கோதை.
“என்ன ஆச்சு பெரியப்பா?” என்று வெளியே வந்த ராதை பதற்றத்துடன் கேட்க,
“அப்பா பிரகாஷை அடிக்க கை ஓங்கிட்டார் ராதை, பிரகாஷோட கண்கள்ல ஒரு வெறி தெரிஞ்சுது. அதுவும் அவன் சொன்ன வார்த்தை எல்லாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அழத் தொடங்கினாள் கோதை.
இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கும் போதே வனிதா வெளியேச் சென்று பிரகாஷைத் தேடினாள். அவன் வேகமாக தன் காரினுள் சென்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தவள் காரின் உள்ளேச் சென்று, “அத்தான் என்ன ஆச்சு?” என்றபடி பதறினாள்.
பிரகாஷின் வெறி கொண்ட முகத்தைப் பார்த்து பயந்தவள், “வனிதா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்குறியா? அதுவும் இன்னிக்கே… நம்ம கல்யாணம் உடனே நடக்கணும்” என்று நேராக வெறித்துக் கொண்டு பார்த்திருந்தவனிடம், என்ன சொல்வது என்று கூட தெரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருந்தாள் வனிதா.
“அப்படி என்ன க்கா ஆச்சு சொல்லுங்க?” என்று உலுக்கிய ராதையிடம், “பிரகாஷ் என்னை ரொம்ப கேவலமா பேசிட்டான். அப்பா அவனை கை ஓங்கி, உன்னை காதலிச்சு கல்யாணம் செய்ய துடிச்ச இவளை இவ்வளவு அசிங்கமா பேசுன உனக்கு கண்டிப்பா இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காதுனு அவன் மேல் மண்ணை அள்ளி கொட்டிட்டார்” என்று பயத்தோடு அழுதாள்.
“என்னங்க நீங்க, நல்ல குடும்பத்துல இருக்குறவங்க செய்யுற காரியமா இது? பிரகாஷ் எவ்வளவு பெரிய கோபக்காரன். அவன்கிட்ட ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வம்பு?” என்று தலையில் அடித்துக் கொண்டார் பதறினார் மைதிலி.
“அம்மா பிரகாஷ் நம் குடும்பத்த வேரோடு அழிச்சிடுவேன், என்னை பழிவாங்குவேன்னு சொல்லிட்டு போய்ட்டான்” என்று கதறி அழுதாள் கோதை. எப்போதுமே தைரியமாக இருக்கும் கோதையிடம் இந்த பயத்தைக் கண்டு மைதிலியும் பயந்தார்.
‘பேசாம பெங்களூர் போயிடலாமா?’ என்று யோசித்த ராதை, ‘இனி எந்த முகத்தை வைச்சு வம்சியை நான் சந்திக்குறது?’ என மனதளவில் சோர்ந்து அப்படியே அங்கு அமர்ந்தவள், தற்போது ஏழ்மையில் தள்ளப்பட்ட பெரியப்பா, பெரியம்மாவிற்கு தாம் தான் ஆறுதலாக இங்கேயே இருந்துவிட வேண்டும் என முடிவு செய்தாள்.
***
தனது அறையில் உள்ள பால்கனியில் நின்றுக் கொண்டிருந்த வம்சி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அண்ணா…” என்று சற்றே அமைதியான குரலில் வந்து பேசிய யசோதா பேசத் தயங்கினாள்.
“அண்ணா… அண்ணி ஒரு நாள் உங்களை புரிஞ்சிக்கிட்டு இங்க வருவாங்க, நீங்க கவலைப்படாதீங்க. அப்புறம் என்னை மன்னிச்சிருங்க ண்ணா, அது உங்கள் மனசுல இடம் பிடிக்கணும்னு தான் பிரணவை இப்படிப் பண்ண சொன்னேன். ஏன்னா நீங்க எனக்கு ரொம்ப முக்கியம்” என்று ஏக்கத்துடன் தன் அண்ணனைப் பார்த்தாள்.
தன் முகத்தில் எந்த ஒரு உணர்வுகளையும் வெளிப்படுத்தாத வம்சி தன் தங்கைக்காக மெலிதாய் புன்னகைத்து, “அடுத்த வாரம் பிரணவை அவன் பேரன்ஸ்ஸோட இங்க வரச் சொல்லிருக்கேன்” என்றபடி தங்கையின் தலையை வருடியவன், “உண்மையான காதல்னா அண்ணன் எப்போவும் துணை நிப்பேன்டா” என்று கூறிவிட்டுத் தன் பாட்டி, தாத்தாவைப் பார்க்கச் சென்றான்.
தன் பாட்டி தாத்தாவின் சோர்வான முகத்தைக் கண்டவன் பாட்டியின் மடியில் படுத்தான். “ஏன் பாட்டி, ஒருத்தன் கெட்டவனா இருந்தா மட்டும் தான் இந்த உலகத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும் போல. நான் அவளை பழிவாங்க நினைச்சேன் பாட்டி இல்லேனு சொல்லலை. அவளோட விருப்பம் இல்லாம அவளை என்னோட மனைவி ஆக்குனது என் தப்பு தான். ஆனா நான் அவள் மேல வைச்சிருக்குற காதல் ரொம்ப உண்மை… அந்தக் காதல் தான் என்னை அவளை கல்யாணம் செய்யத் தூண்டுச்சு.”
“அவள கொடுமைப்படுத்தணும்னு மட்டும் நான் நினைச்சுருந்தா, நான் எப்படி வேணும்னாலும் அவளை கொடுமை படுத்திருக்கலாமே. அவ என்னோட இருக்கணும்னு தானே அவளை என்னோட மனைவி ஆக்குனேன். அப்படியே கத்தலாம்னு தோணுது பாட்டி… வீட்ல இருக்குற எல்லாப் பொருளையும் தூக்கிப்போட்டு உடைக்கணும்னு தோணுது…” என்றான் தன் உஷ்ண மூச்சுகளை அடக்கியபடி.
அவன் தலையை ஆறுதலாக வருடியவரோ, “உனக்கு நான் இருக்கேன் வம்சி. குடும்பம் இருக்கு. ஆனா ராதைக்கு யார் இருக்காப்பா?” என்றவரிடம், “நான் அவ மேல என் உயிரையே வைச்சிருந்தேன் பாட்டி, யாரோ சொன்னாங்கனு உண்மையை ஆராயாம போனவ, இப்போ என்னையும் ஒரு அனாதை மாதிரி தான் உணர வைச்சிட்டு போயிருக்கா” என்று வெறுப்பாக பேசினான்.
“அப்படி இல்லை வம்சி…” என்று பாட்டி சொல்லிக் கொண்டுருக்கும் போதே, “பாட்டி ப்ளிஸ்… அவளைப் பத்தி இனி இந்த வீட்டுல பேச்சு இருக்கக் கூடாது” என்று அவன் கூறிய பின்னர் காந்திமதி பேசாது கவலையானார்.
எப்படியாவது தன் பெரியப்பா குடும்பத்தை இந்த நிலையில் இருந்து தாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த ராதை, வம்சியின் நினைப்பை முற்றிலும் ஓரங்கட்டினாள்.
அன்றே பிரகாஷ், வனிதாவை திருமணம் செய்துவிட்டு அவனின் வீட்டின் வாசலின் முன்னே நின்றான்.
