“கண்ணா” என பாட்டி இழுக்க,
“இப்படி எல்லாத்துக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணீங்கன்னா நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன் பாட்டி” என்றான் அழுத்தமாக.
அதில் பயந்தவர் எங்கே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடும் பயத்தில்,”சரி ப்பா உன் விருப்பபடி தான் எல்லாமே… அந்த விருப்பத்துல விசித்திரா இருந்தா கட்டிக்கோ… அவ உனக்காக ரெடி தான்” என்று அடங்கி போனார் பாட்டி…
“எனக்கு பிளைட்க்கு டைம் ஆகுது… நான் வைக்குறேன் பாட்டி” என சொன்னவனிடம்,
“என் மகனோட உயிருக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி இஷாக்” என பேரன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து அகம் மகிழ்ந்தார் சகுந்தலா தேவி.
“சரி.. நான் வைக்குறேன்” என கால்லை கட் செய்தவனோ,”உங்க மகனுக்காக இல்ல என் அப்பாவுக்காக” என ஆழ்ந்து மூச்செடுத்து விட்டான் இஷாக்…
தன் அறையில் உள்ள பால்கனியில் நிலாவை வெறித்துக் கொண்டு இருந்தான் விஷாக்…
“பொண்ணு ஃபேஷன் டிசைனிங் படிச்சு இருக்கா… ஆனா பார்க்க” என சக்கரவர்த்தி மகனிடம் ஆரம்பிக்கும் பொழுது, அவருக்கு ஃபோன் கால் வந்திருக்க, அப்படியே வெளியே சென்றார்…
தனக்கு பொண்ணை பிடிக்கவேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான் விஷாக்…
ஆம், தன்னை கேட்காமல் திருமண பேச்சின் கட்டாயம் அவனுக்கு பிடிக்கவில்லை தான்…
இன்னும் சொல்லப் போனால் தாய் மீது சற்று கோபமாக தான் இருக்கிறான் விஷாக்.
அதனால் தான் சக்கரவர்த்தி பேச வந்தார்…
அவருக்கும் மகன்களின் எண்ணம், ஆசையை மீறி நடக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை தான்…
ஆனால் வீட்டில் மனைவி மற்றும் தாய் ஸ்திரமாக நிற்க, அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை…
அதனால் என்னவோ அவர் மகேஷிடம் சரியாகவே பேசாமல் இருக்கிறார்…
அவனால் தான் மற்ற பிள்ளைகளின் கழுத்தில் கத்தி வைப்பது போல் திருமணத்தை நடத்துகிறோம் என நொந்துப் போனார்…
இப்போது அவருக்கு ஃபோன் வந்திருக்க ஃபோன் பேசிவிட்டு தன் மகனிடம் பேச அவனின் அறை நோக்கி சென்ற போது,
“ஏங்க பேசிட்டீங்களா!” என கையில் ஒரு புகைப்படத்துடன் வந்தார் காயத்ரி.
“இல்ல.. அதுக்குள்ள ஃபோன் வந்துருச்சு” என்றார்.
“நீங்க ரெண்டு பேரும் பேச வேண்டாம்.. நான் பேசிக்குறேன்” என வந்து நின்றார் சகுந்தலா தேவி…
மருமகளின் கையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவர் அதை பிடுங்கி அவரிடம் இருந்த புகைப்படத்தை காட்டி, “இவ தான் விஷாக் குக்கு…” என்றார் கட்டளையாக.
அன்று காலை பிரியா குடும்பத்தினரிடம் மூன்று பெண்களின் புகைப்படங்களும் வாங்கப்பட்டது…
தன் அன்னையை தனியாக அழைத்து சென்று தன் திட்டத்தை சொல்லியிருந்த விசித்திராவிடம், “இதெல்லாம் சரிப்பட்டு வராது விசித்திரா.. ஒழுங்கா இஷாக்கை மறந்துட்டு அடுத்த வேலையை பாரு.. நான் உனக்கு இஷாக்கை விட” என அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே,
“எனக்கு இஷாக் தான் வேணும்” என்றாள் அழுத்தமாக.
“பைத்தியம் மாதிரி பேசாத விசித்திரா” என தாய் கண்டிக்க,
“நான் இஷாக் மாமு மேல பைத்தியம் தான்… அவர் இல்லன்னை நான் செத்துடுவேன்” என கத்த, மகளின் இந்த பரிமாணத்தை பார்த்த சித்ராவே தளர்ந்து தான் போனார்..
அதன் பின்னர் தான் அன்னையும், மகளும் சகுந்தலா தேவியின் அறைக்குள் தஞ்சம் புகுந்தார்கள்…
சகுந்தலா தேவிக்கு ஏனோ பிரியாவின் மொத்த குடும்பமே சில்லறை போல் தோன்றியது…
ஆனாலும் மகனின் உயிருக்காக தலைவிதியே என ஒப்புக் கொண்டு இருக்கிறார்…
இப்போது விசித்திரா இஷாக் வேண்டும் என்று தர்ணா செய்ய அவருக்கு எரிச்சலாக இருந்தது..
பாட்டியிடமும் தன் தற்கொலை ஆயுதத்தை எடுத்தாள் விசித்திரா…
இப்போது சகுந்தலா தேவியும் குழம்பிப் போனார்…
எந்த பதிலும் சொல்லாமல் தன் காரில் ஜோசியரை பார்க்க வந்து இருந்தவர்,
தன் குழப்பத்தை சொல்ல, “ஒரு வருஷம் கழிச்சு தாராளமா அவர் வேற கல்யாணம் பண்ணிக்கலாம்… அதுக்குள்ள உங்க புள்ளை உயர் கண்டம் கடந்து போயிடும்” என்றார்.
அது அவருக்கு வசதியாகப் பட, வீட்டிற்கு வந்தவர் மகள் மற்றும் பேத்தியிடம் விஷயத்தை சொல்லி,
“இஷாக்குக்கும் உன்னை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்.. ஆனா அது காதலான்னு எனக்கு தெரியாது” என்றார்.
“அது காதலா தான் இருக்கும்.. இருக்கணும்” என பைத்தியம் போல் அவள் சொல்ல, மகளை தீயென முறைத்தார் சகுந்தலா தேவி.
சிறிய வயதில் இருந்து பேத்தியின் மனதில் விதைத்த விஷயம் இப்போது விஷமாக அல்லவா மாறி இருக்கிறது என்று…
“அவன் கல்யாணம் பண்ண அப்புறம் அந்தப் பொண்ணு பவித்ராவை பிடிச்சு போச்சுன்னா நீ விலகி போயிடணும் விசித்திரா” என அப்போதும் பேரனுக்காக பேசினார் சகுந்தலா தேவி.
“பாட்டி” என விசித்திரா அதிர,
“இஷாக்குக்கு அந்தப் பொண்ணை பிடிக்கலைன்னா அப்புறம் கண்டிப்பாக உனக்காக பேசுவேன்” என்றார்.
“இஷாக் மாமு எனக்கு மட்டும் தான்… நீங்க இதை செய்யலைன்னா நடு வீட்டுல தூக்கு போட்டு செத்துடுவேன் பாட்டி” என மிரட்டியவளை, “லூசு மாதிரி பேசாத விசித்திரா.. பவித்ரா பார்க்கவே நல்லா அழகா சிவப்பா இருக்கா… இப்போ இஷாக்குக்கு பிடிக்கலைன்னாலும் பின்னாடி பிடிக்கலாம்” என்றார் எரிச்சலாக…
தான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் பிணாத்தும் பேத்தியின் மீது வந்த எரிச்சல் அது…
“இஷாக் மாமுவுக்கு முதல் கல்யாணம் பண்ணி வைங்க.. ஆனா பொண்ணு பவித்ரா இல்ல முத்துமாரி” என்றாள் விசித்திரா தந்திரமாக.
