இதுல ஒரு ஹீரோ இல்லங்க மூனு ஹீரோ..
அதுல ஒருத்தன் மட்டும் தான் இந்த கதையின் முதன்மையான ஹீரோ…
அன்பானவன்… மகேஷ் சக்கரவர்த்தி
அடங்காதவன்… இஷாக் சக்கரவர்த்தி
அசராதவன்… விஷாக் சக்கரவர்த்தி
இதுல யார் ஹீரோன்னு தானே யோசிக்குறீங்க… கதைக்குள்ள போக போக உங்களுக்கே தெரியும்…
அத்தியாயம் 1
சிவகாமி இல்லம், காஞ்சிபுரம்
சூரியன் தோன்றும் முன்னர் இருக்கும் மிக குளிரான அதிகாலை சமயம் அது..
சுற்றி எங்கும் தோட்டங்களும், தென்னை மரங்களும் குளு குளுவென பூத்துக் குளுங்க அந்த சிறிய வீடு அழகாக காட்சியளிக்கப்பட்டது…
அந்த வீட்டின் பெரியவரான சிவகாமி விடியற்காலையிலேயே எழுந்து குளித்து ஹாலை ஒட்டியிருந்த பூஜை அறை முன்னர் அமர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்…
“முருகா.. நான் எப்போயும் உன் கிட்ட வேண்டுறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான் ப்பா எம் பேத்திகளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்” என மனதார வேண்டினார்.
“பிரியா எழுந்திரு, முத்து எழுந்திரு” என போர்வையை போர்த்தி விட்டு உறங்கும் மகளை உலுக்கினார் மீனாட்சி.
“கொஞ்ச நேரம் ம்மா” என கண்ணைத் திறவாமலேயே குப்புற படுத்தாள் முத்து என்று அழைக்கப்பட்ட முத்துமாரி.
“மணி அஞ்சு ஆகுது” என மீனாட்சி உறக்க சொல்ல, பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் பிரியா.
“அய்யோ! முத்து சீக்கிரம் எழுந்திடு டி.. இன்னும் அரை மணி நேரத்துல சென்னை பஸ் கிளம்பிடும்” என தங்கையை போட்டு உலுக்கினாள்.
“கிளம்புனா கிளம்பட்டும்…” என்றபடியே குப்புற படுத்தாள் முத்துமாரி.
“அடியேய் எழுந்திரு டி” என தங்கையை போட்டு உலுக்கிய பிரியா அவசரமாக எழ, தலைவிதியே என்று எழுந்தாள் முத்துமாரி.
காஞ்சி டீக்கடை, காஞ்சிபுரம் கோவில் வீதி
“மணி அண்ணே சூடா ஒரு டீ” என்றபடியே அந்த டீ கடைக்குள் அமர்ந்த சுரேஷ் அங்கு சுடச் சுட டீயை போட்டுக் கொண்டு இருந்த டீக்கடை ஓனர் மணியிடம் டீ வாங்கி கடைக்கு வந்தவர்களுக்கு டீயை கொடுத்துவிட்டு கடமையில் சீராக துறு துறுவென சுற்றிக்கொண்டு இருந்த பவித்ராவின் மீது தான் இருந்தது..
நீண்ட கூந்தலில் எண்ணெய் இட்டு ஒற்றை ஜடையை பச்சை ரிப்பனால் கட்டிருந்தாள் இருபத்தி இரண்டு வயது பாவை..
மாநிறம் தான்.. ஆனால் லட்சணமான முகம்… வயதிற்கு ஏற்ற இளமையும், வனப்பும் அதிகமாகவே கொண்டவள்… ஆனால் மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவள்…
மணிக்கு பத்து வருடங்கள் முன்னர் ஒரு விபத்து நேர்ந்து ஒரு காலில் அதீத காயம் ஏற்பட்டு அவரால் உதவி இல்லாமல் நடக்க முடியாது…
வாக்கிங் ஸ்டிக் உபயத்தில் தான் அவரின் காலம் செல்கிறது..
அவருக்கு காலாக சிட்டாக பறந்துக் கொண்டு இருக்கும் பவித்ரா மணியின் தம்பி பாபுவின் மகள்…
பாபு வேறு ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் சிவகாமி மற்றும் அவரின் கணவர் அவரை அப்படியே ஒதுக்கி வைத்திருக்க, பவித்ரா பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் ஒரு கோர விபத்தில் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து அனாதையாக நின்றாள்…
சொந்தம் என்று சொல்லி அவளுக்கு இவர்களைத் தவிர யாரும் இல்லை…
மகனின் சிறப்பு கூட சிவகாமி மனதை கரைக்கவில்லை…
மணி தான் மனிதாபிமானப்பட்டு அன்னை மற்றும் மனைவியின் எதிர்ப்பை மீறி பவித்ராவை அவரின் சிறு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான்…
அத்தனை எதிர்ப்பை தாண்டி மணி ஸ்திரமாக நிற்க அன்றில் இருந்து இன்று வரை அந்த வீட்டுக்கு சம்பளமே இல்லாத வேலைக்காரியாக இருக்கிறாள் பவித்ரா..
பத்தாம் வகுப்புற்கு பின்னர் அவளின் படிப்பு கூட நின்று போனது…
சிவகாமி மற்றும் மீனாட்சி மிக ஒற்றுமையான மாமியார் மற்றும் மருமகள்…
மீனாட்சியின் மகள் இருவரும் கூட பவித்ராவை சுத்தமாக மதித்ததில்லை… அவர்களையும் குறை சொல்ல முடியாது.. அவர்களின் அன்னை புகட்டியதை அவர்கள் கடைப்பிடித்தார்கள்…
விடியற்காலை நான்கு மணிக்கே எழும் பவித்ரா வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதில் இருந்து சமையல் வேலை கடை வேலை அது இது என அனைத்தும் செய்கிறாள்…
அவளை ஒரு நாள் கூட சிவகாமி பேத்தியாக கருதியது இல்லை..
இன்னும் சொல்லப் போனால் அவளை ஒரு மனுஷியாக கூட அவர் மதிக்கவில்லை…
தனக்கு டீ கொடுக்க வந்த பவித்ராவிடம் டீயை வாங்கும் போது வேண்டும் என்றே அவளின் கையைத் தடவினான் சுரேஷ்..
அதில் திடுக்கிற்றவள் பட்டென்று அவள் கையை எடுக்க, டீ கிளாஸ் தவறி விழுந்து உடைந்தது… அதில் சுரேஷின் சட்டையும் முழுக்க டீ கறையாக,
“ஏய் உன் கண்ணை என்ன பின்னாடி வைச்சிருக்கியா” என்று எகிறினான் சுரேஷ்… அவன் கைப்பட்டு அவள் பட்டென்று எடுத்த கோபத்தில் கடுப்பாக சத்தம் கொடுத்தான் சுரேஷ்.
“அ.. அது மன்னிச்சு சார்” என திணறிய பவித்ரா அவளின் கண்களில் கண்ணீருடன் அவளின் பெரியப்பாவை பார்க்க,
அவளை பார்த்து பரிதாபப்பட்ட அவளின் பெரியப்பாவோ, “மன்னிச்சிடு தம்பி பாப்பா தெரியாம பண்ணிடுச்சு…” என சொல்ல,
“யோவ் இவளால என் சட்டை எல்லாம் கறையாடுச்சு” என மரியாதை இன்றி சுரேஷ் கத்த,
“அடப்போயா.. நீ தர வேண்டிய டீ பாக்கியை கழிச்சிட்டு கிளம்பு… ஓவரா பேசாத சொல்லிட்டேன்…” என கறாராக சொன்னவரை முறைத்த சுரேஷோ, ‘நீ தனியா மாட்டும் போது உன்னை பாத்துக்குறேன் டி’ என கோபமாக கிளம்பினான் சுரேஷ்…
செல்லும் அவனையே மருட்சியுடன் பயத்துடனேயே பார்த்த பவித்ரா மற்றவர்களுக்கு கடைமையை ஆற்ற சென்றுவிட்டாள்…
பிரியா மற்றும் முத்துமாரி எப்படியோ நேர்த்திற்கே சென்னை செல்லும் பேருந்தில் ஏறினார்கள்…
ஆம் இன்று திங்கள் கிழமை… இரண்டு நாட்கள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார்கள்…
இருவரும் சம்பாதித்து தான் குடும்பத்தை நடுத்தர வர்க்கத்திற்காவது எடுத்து சென்று ஓட்டுகிறார்கள்…
பிரியாவிற்கு இருபத்தி ஐந்து வயது.. காலேஜ்ஜில் உதவி பேராசிரியராக இருக்கிறாள்…
முத்துமாரி க்கு இருபத்தி மூன்று வயது..
அவள் டிசைனிங் படித்து இருக்கிறாள்… திரைத்துறை பிரபலங்களுக்கு எல்லாம் ஆடை வடிவமைப்பு செய்யும் பிரபல காஸ்ட்யூம் டிசைனரிடம் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிகிறாள்…
பிரியா நல்ல பேர் அழகி.. ஆனால் முத்துமாரி மாநிறத்தை விட சற்று கம்மி தான்.. அது போக முத்துமாரி சற்று பூசினாற் போல தான் இருப்பாள்..
Chakravarthy Institutions, Chennai
அன்று காலை தன்னுடைய கரெஸ்பான்டன்ட் கேபினில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தான் மகேஷ் சக்கரவர்த்தி… அப்பா மற்றும் அம்மாவிற்கு அன்பான பிள்ளை… அவர்களுக்கு மட்டும் தான்..
மாநிறம் தான் ஆனால் அழகன்… ஆறடி உயரம்… படிக்கேட்டு தேகம் என அவனின் அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம்…
காலேஜ்ஜில் அவனைக் கண்டாலே அனைவரும் நடுங்குவார்கள்.. அப்படி ஒன்றும் மகேஷ் டெரர் கிடையாது..
ஆனால் அவனுக்கு எல்லா வேலைகளும் கன கச்சிதமாக இருக்க வேண்டும்… இல்லையேல் கத்தி விடுவான்… நியாயமான காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்களை இலகுவாக விடுவான்..
அதைத் தாண்டி சற்று அமைதியான குணம் கொண்டவன் தான்…
முப்பத்தி ஒன்று வயது ஆகிறது… அவனைப் பார்த்தால் பின் இருபதுகளில் இருப்பது போல தான் இருப்பான்..
வீட்டில் அவனுக்கு தான் வலைப்போட்டு பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்…
அன்று கல்லூரிக்கு வந்து சேர பிரியாவிற்கு சற்று தாமதம் ஆகிப் போனது… சாலை நெரிசலில் மாட்டிக் கொண்டாள்…
அவள் வந்ததுமே, “பிரியா மேடம் உங்களை கரெஸ்பான்டன்ட் சார் வர சொன்னாங்க” என்று விட்டு நகர்ந்தான் பியூன்.
“அச்சோ! இன்னிக்கு லேட் ஆயிடுச்சே.. வைச்சு செய்ய போறாரு கரெஸ்பான்டன்ட்” என்கிற பயம் மற்றும் பரிதவிப்புடன் சென்றவள், “மே ஐ கம் இன் சார்” என பெர்மிஷன் கேட்டு மகேஷின் கேபினிற்குள் செல்ல,
அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்தவனோ, “ஏன் மேடம் இன்னிக்கு லேட்” என்று தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி கேட்டான்.
“சாரி சார் வர வழியில ரொம்ப டிராஃபிக்” என தன் கண்ணைப் பார்த்து தைரியமாக சொன்னவளிடம், “முடியாது டி பொண்டாட்டி… நீ லேட்டா வந்ததுக்கு பனிஷ்மென்ட் வாங்கணும்… ஒரு கிஸ் கொடு” என அவளை மேலில் இருந்து கீழ் வரை விழுங்குவது போல பார்த்தான்.
“சார் இது காலேஜ்” என தனக்குள் வந்த சிரிப்பை அடக்கியபடி கேட்டாள் பிரியா.
“என் பொண்டாட்டியை நான் எங்க வேணும்னாலும் கிஸ் பண்ணுவேன்” என்றான் உரிமையாக.
ஆம், மகேஷூம் பிரியாவும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்தவர்கள்..
அது ஒரு பெரிய கதை…
“இஷாக்…இஷாக்” என அரங்கே கரகோஷம் எழுப்ப,
ஆறடிக்கு சற்று அதிகமான உயரத்தில் சிவந்த நிறத்தில் கோட் சூட்டுடன் கட்டுமஸ்தான உடலமைப்புடன் மேடை ஏறியவனை கண்டு அங்கிருந்த இளம் பெண்கள் ஆ வென வாயைப் பிளந்து ஜொள்ளு விட்டனர் என்றால்… இளம் ஆண்களோ சிலர் வியப்பாக பலர் பொறுமையாக பார்த்தார்கள்…
அது அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருது…
அவன் இஷாக் சக்கரவர்த்தி… சக்கரவர்த்தி அவனின் தந்தையின் பெயர்… தாய் காயத்ரி… இவனின் அண்ணன் தான் நம்ம அன்பானவன் மகேஷ்…
இவன் அடங்காதவன் இஷாக்… ஆம் அப்பா மற்றும் அம்மாவிற்கு சற்றும் அடங்காதவன் தான் இவன்…
அம்மா அப்பாவிற்கே இப்படி என்றால் வெளி உலகத்திற்கு சொல்லவும் வேண்டுமா…
தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து பிடிவாதமாக நடத்தியும் காட்டும் வல்லமை கொண்டவன்…
சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் யாராவது காக்கா கருப்பாக இருக்கிறது என்றால் வெள்ளை காக்காவை நீ பார்த்தது இல்லைன்னு சொல்லு என்று விடுவான்..
ஏனோ இந்த உலகில் தான் நினைப்பது மட்டுமே சரி என்று நிற்பவன்…
ஏனெனில் அவன் அப்படித் தான் நடந்துக் கொள்வான்… வீட்டில் யாருடனும் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் இல்லை…
அதற்கு ஒரு கதையும் இருக்கிறது…
இதோ இப்போது இறுக்கமான முகத்துடன் அழுத்தமான காலடிகளுடன் மேடையேற வந்துவிட்டான் இஷாக் சக்கரவர்த்தி…
அவனின் நெருங்கிய வட்டங்களை தாண்டி யாரிடமும் மருந்துக்கு கூட சிரிக்க மாட்டான்…
அவனின் நெருங்கிய வட்டம் என்றால் அவனின் பாட்டி சகுந்தலா தேவியும், அவனின் நண்பர்கள் வெகு சிலர் எனலாம்…
Chakravarthy Group of Companies என மார்பிலால் ஜொலித்துக் கொண்டுருந்த படாதகைத் தாண்டி சிம்மாசமனாய் நின்றது அந்த ஆறு அடுக்கு கட்டிடம்…
மூன்று தலைமுறையாக தொழிற்நுட்பத் துறையில் சாதித்த சக்கரவர்த்தி ஐடி கம்பெனி பிராடக்ட், செர்வீஸ், BPO என சிறந்து திறம்பட இருந்தாலும்,
இப்போது AI மற்றும் ML என தற்போது டிரென்டிங்கில் இருக்கும் தொழில் முன்னேற்றத்தை கொண்டு வந்து கொடி கட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அதுக்கு ஒரே காரணம் முழுக்க முழுக்க காரணம் அவன் ஒருவன் மட்டும் தான்… விஷாக் சக்கரவர்த்தி
சக்கரவர்த்தியின் இளைய வாரிசு… வயது இருபத்தி ஏழு… இவனுக்கும் இஷாக்கிற்கும் ஏறத்தாழ ஒன்றரை வருட வித்தியாசம் தான்…
விஷாக் சக்கரவர்த்தி பிறந்தில் இருந்து சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஐந்து வயது வரை அவனுக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள்…
அவன் பிறந்த உடனே அவனுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதில் இருந்து, அடுத்து சின்னம்மை, நிமோனியா என கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உடல் நிலை பிரச்சனைகள் அவனுக்கு…
அவன் அச்சிறுவதிலேயே பட்ட அத்தனை கஷ்டங்களால் என்னவோ அவன் எதற்குமே அசருவது இல்லை…
ஆம், விஷாக் சக்கரவர்த்தி அசதாரவன்…
பயமே அறியாதவன்… எதுவுமே அவனை அசைக்க முடியாது… அத்தனை திடம் உடலிலும் மனதிலும்…
ஆம் ஐந்து வயது வரை தனக்கு இத்தனை பிரச்சனைகள் வந்து சென்று சரியாகி விட்டாலும் தன் ஆறு வயதில் இருந்தே சற்று விவரம் தெரிந்தால், “நான் ஸ்ட்ராங் பாயா இருக்கணும் அப்பா.. அதுக்கு என்ன பண்ணனும்” என தந்தையை உற்று நோக்கி கேட்டவனிடம்,
“உன் உடம்புல அதுக்கு இம்மூனிட்டி இருக்கணும் விஷாக்.. இம்மூனிட்டி நிறைய வரணும்ன்னா சத்தான ஆகாரமா சாப்பிடணும்… ஸ்விம்மிங் பண்ணனும்… ஜாகிங் பண்ணனும்” என அவர் எதார்த்தமாக சொல்ல, ஆறு வயது பொடியனோ அடுத்த நாளில் இருந்தே அடம்பிடித்து ஸ்விம்மிங் கற்றுக் கொள்ள தொடங்கினான்…
தினமும் ஓடுவான்.. எண்ணெய் சேர்த்திருந்த உணவு பதார்த்தங்களை எடுக்க மாட்டான்…
ஆறு வயதில் ஒரு சிறுவனால் இப்படி இருக்க முடியுமா என மொத்த குடும்பமும் வியக்க, ஐந்து வருடங்களாக காய்ச்சல், சளி, இருமல் அது இது என தொடர்ந்து கஷ்டப்பட்டவனின் சிறு மனமோ ஸ்திரமாக தன் உடம்பை பார்த்துக் கொள்ளத் தொடங்கியது…
அதனின் விளைவு… பத்து வயதில் அவன் ஸ்டேட் லெவல் ஸ்விம்மிங் சாம்பியன்… பதினைந்தாவது வயதில் நேஷனல் லெவல் பாஸ்கெட் பால் பிளேயர்..
அதுப்போக படிப்பில் நம்பர் ஒன்…
இந்த விளையாட்டு எல்லாம் அவனின் உடலை மெருகேற்றியது என்றால் அவனின் மூளையை மெருகேற்ற அவன் எடுத்த ஆயுதம் படிப்பு…
படிப்பு என்றால் அவ்வளவு பிடிக்கும்… கல்லூரி படிப்பு எல்லாம் அமெரிக்காவில் தான்… ரோபோட்டிக்ஸ் கூட படித்து விட்டான்…
இதோ அவனின் புத்தி கூர்மையின் உபயத்தால் இன்று இந்தியாவில் நம்பர் ஒன் ஐடி கம்பெனியை அவன் திறம்பட உருவாக்கி இருக்கிறான்…
அம்மா என்றால் இவனுக்கு உயிர்.. ஆம், ஐந்து வயது வரை இவன் உடல் அளவில் அத்தனை கஷ்டப்பட்டான் என்றால் இவனின் அன்னை காயத்ரி இவனை கண்ணுக்குள் வைத்து தாங்கினாள்…
பிள்ளை கஷ்டப்படுகிறான் என்பதால் அவனை தன் மார்புசூட்டிலேயே வைத்திருத்திருந்தாள் காயத்ரி…
அந்த ஐந்து வருடங்கள் உயிரற்று தான் சுற்றிக் கொண்டு இருந்தாள் காயத்ரி…
விஷாக்கிற்காக ஏறாத கோவில் இல்லை… பார்க்காத ஜோசியர் இல்லை…
அதனால் என்னவோ மற்ற இரு பிள்ளைகளை அந்த ஐந்து வருடம் கவனிக்க தவறிவிட்டாள்…
மகேஷ் சிறிய வயதில் இருந்தே அப்பாவிடம் தான் ரொம்ப நெருக்கம்… அதையும் தாண்டி இஷாக் பிறந்த போதே அவன் புரிந்துக் கொண்டான்…
“தம்பி பாப்பா குட்டியா இருக்கான்ல அதனால நம்ம எல்லாரும் சேர்ந்து அவனை பார்த்துக்கணும்… நீ பிக் பாய்” என காயத்ரி சொல்லியிருக்க, அப்போது இருந்து தனக்குள் ஒரு முதிர்வு மற்றும் பொறுப்புணர்ச்சியை கொண்டுவந்தான் மகேஷ்…
ஆனால் அவனிடம் இருந்த முதிர்ச்சி பாவம் இஷாக்கிற்கு இல்லை…
ஏனெனில் விஷாக் பிறந்து இருந்த பொழுது இஷாக்கிற்கு ஒன்றரை வயது தான்…
தாய்ப்பால் நன்றாக சுரந்திருந்தது காயத்ரிக்கு… விஷாக் பிறந்த பின்னரும் இஷாக்கிற்கு கொடுத்தாள் தான்…
“உங்க பையன் விஷாக் குக்கு இம்முனிட்டி ரொம்பவே கம்மியா இருக்கு… நிறைய தாய்ப்பால் ஃபீட் பண்ணுங்க” என டாக்டர் சொல்லி இருக்க,
அதன் பின்னர் இஷாக்கிற்கு தாய்ப்பால் கொடுப்பதை விட்டுவிட்டு மொத்தமாக விஷாக்கிற்கு மட்டுமே கொடுக்கத் தொடங்கினார் காயத்ரி…
அவரின் சூழ்நிலை அவ்வாறு இருக்க… அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் சகுந்தலா தேவியும், சித்ராவும்…
சித்ரா.. சக்கரவரத்தியின் செல்ல தங்கை… ஆனால் தன் மனைவியின் காயத்ரியின் வருகையின் பின்னர் அவருக்கு அவரின் மனைவியே முதன்மையாகி போக, அது சகுந்தலா தேவிக்கும் பொறுக்கவில்லை… சித்ராவோ கடுப்பின் உச்சிக்கே சென்றாள்…
காயத்ரிக்கு விஷாக் பிறந்திருந்த சமயம் தான் சித்ராவிற்கு திருமணம் நடந்தது… அவர் பாலு… வீட்டோட மாப்பிள்ளை… ஆனால் பெரிய வசதி படைத்தவர் தான் இருந்தாலும் சக்கரவரத்தி அளவுக்கு இல்லை…
அவர்களுக்கு ஒரே மகள் விசித்திரா.. அனைவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்கள்…
காயத்ரியின் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக எடுத்த சகுந்தலா தேவி இஷாக்கின் முழுப் பொறுப்பையும் தன் கையில் எடுத்தார்… அப்படியே பாட்டியின் பேரனாக வளர்ந்தான் இஷாக்…
ஆறு வயதில் விஷாக் தேற ஆரம்பிக்க, இஷாக்கிடம் இனி விட்ட இடத்தை நிரப்ப வேண்டும் என காயத்ரி மகனுக்கு அக்கறை காட்ட, அப்படியே ஒதுங்க தொடங்கினான் இஷாக்..
இதோ இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது…
சிறிய வயதில் இஷாக்கிற்கு உண்டான வடுவால் அவனுக்கு விஷாக்கை கண்டால் ஆகாது…
விஷாக்கிற்கும் தன் தாய் மற்றும் தந்தையிடம் பாசமாக இல்லாத அண்ணன் மேல் மலையளவு கோபம் இருக்கிறது…
தன் பாட்டி மற்றும் நண்பர்களை தாண்டி இஷாக் பேசுவது அவனின் அத்தை குடும்பம் மற்றும் மகேஷ் தான்…
மகேஷிடம் இஷாக் ரொம்ப நெருக்கம் இல்லை என்றாலும் அவனின் அண்ணனை அவனுக்கு பிடிக்கும்… ஏனெனில் சிறிய வயதில் அன்னையின் நெருக்கம் கிடைக்காத போது மகேஷ் தம்பியிடம் வந்து வந்து பேசுவான்…
சக்கரவர்த்திக்கு முழு நேரமும் பிசினஸ் மீது நாட்டம் இருந்ததால் அவர் வீட்டு விஷயத்தில் தலையிடுவதே இல்லை…
அது மகேஷிற்கு புரிந்தது… ஆனால் பாவம் இஷாக்கிற்கு புரியவில்லை…
இதோ இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்… இந்நாள் வரை தன் தந்தை மற்றும் தாயிடம் மகன் பேசுவது கிடையாது…
அவர்கள் எவ்வளவோ கெஞ்சி விட்டார்கள்.. ஏன் காயத்ரி அழுதும் விட்டார்… ஆனால் கரைய மாட்டாமல் இருக்கிறான் அந்த அடங்காதவன்…
இதெல்லாம் அறிந்த விஷாக் இஷாக்கிடம் நேருக்கு நேர் சென்று சண்டை போட இருவரும் மாற்றி மாற்றி சரமாரியாக அடித்துக் கொண்டார்கள்… அவர்களை தடுப்பதற்குள் மகேஷிற்கு போதும் போதும் என்றாகி விட்டது…
அதன் பின்னர் விஷாக்கை அதட்டிய காயத்ரி இனி இஷாக்கை அடிக்க கூடாது என சொல்லி இருக்க, அன்னையிடம் கோபித்துக் கொண்டு சில நாட்கள் அவன் பேசவில்லை…
சில நாட்கள் தான்… அவனால் அப்படி நீண்ட நாளாக அவன் அன்னையிடம் கோபத்தை தொடர முடியாது…
மகேஷிற்கு இருபத்தி எட்டிலேயே பெண் பார்க்கலாம் என ஆரம்பிக்க அவர்களின் குடும்ப ஜோசியர் அவனுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆக வேண்டும் என சொல்லியிருந்தார்கள்…
இதற்கிடையில் தான் மகேஷ் காதலில் விழுந்தான்…
மகேஷ் காதலில் விழுந்தான் என்பதை விட பிரியா அவனை தன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தாள்…
கடந்த இரண்டு வருடங்களாக பிரியா மகேஷை காண்கிறாள்..
அவனின் நிமிர்வு, தோற்றம், வசதி என அனைத்தும் பெண்ணவளுக்கு ஈர்த்திருக்க, அவள் கல்லூரியின் கரெஸ்பான்டன்ட்டை காதலில் விழ வைக்க நிறைய பிளான் போட்டாள்…
அவனின் பார்வையில் அடிக்கடி விழுவது… அவனின் முன்னர் தன்னை மேலும் அழகாக காட்டிக் கொண்டாள்.. உடைகள் அணிவதிலும் நேர்த்தியாக இருந்தாள்…
இது எதுக்குமே மகேஷ் முதலில் விழவில்லை…
அதன் பின்னர் அவள் உதவிக்கு நாடியது தான் அவளின் தங்கை முத்து மாரி..
மகேஷ் சென்னை வாசி என்பதால் அவனை பின் தொடர்ந்த பிரியா அவன் வார இறுதியில் எங்கெல்லாம் செல்கிறான் என அத்துப்பிடி ஆனாள்…
அப்படித் தான் அன்று தங்கையை அழைத்துக் கொண்டு சென்றாள்…
“இதெல்லாம் தப்பு க்கா” என முத்துமாரி எச்சரிக்க,
“நீ இப்படியே பேசு.. கடைசி வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் குடும்பத்துக்கு உழைச்சு ஓடா தேய வேண்டியது தான்” என கடுப்புடன் சொன்னாள் பிரியா.
“அதுக்காக இந்த மாதிரி ஒருத்தரை பிளான் பண்ணி லவ் பண்ண வைக்குறது எல்லாம் ரொம்ப தப்பு க்கா” என்றாள் சற்று பயத்துடன்.
“எனக்காக பண்ணு முத்தம்மா” என தங்கையை கொஞ்சி எப்படியோ சம்மதிக்க வைத்தாள் பிரியா…
அன்று சனிக்கிழமை சென்னையின் மையத்தில் உள்ள அந்த பெரிய மாலில் உள்ள ஒரு பாரில் தன் நண்பனுக்காக காத்துக் கொண்டு இருந்தான் மகேஷ்…
அவனை நான்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்த பிரியாவிற்கு இன்று இங்கு தான் இருப்பான் என அறிந்து வருவது அவ்வளவு கஷ்டமாக இல்லை..
மகேஷ் குடிக்க மாட்டான்… அவன் நண்பன் இங்கே குடிப்பது வழக்கம்… இவன் இங்கே கூல் டிரிங்ஸ் மட்டுமே பருகுவான்…
“ஹலோ சார்…” என மகேஷின் முன்னர் வந்து நின்றாள் முத்துமாரி…
“யார் நீங்க?” என மகேஷ் புரியாமல் கேட்க,
“என் அக்காவை ஏன் இப்படி தினமும் லவ் டார்ச்சர் பண்றீங்க.. கல்யாணம் பண்ணினா அவளைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு நிக்குறீங்களாம்” என அவள் கேட்க,
“வாட்… கம் அகைன்” என கடுப்பாக எழுந்தான் மகேஷ்…
அப்போது சரியாக பிளான் படி உள்ளே வந்த பிரியா, “ஏய் முத்தம்மா!” என மூச்சு வாங்கி வருவது போல் நடித்து,
“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என தங்கையை அதட்டுவது போல் கேட்டாள்.
” உனக்கு ஒருத்தன் லவ் டார்ச்சர் கொடுக்குறான்னு சொன்னியே அவனை வறுத்து எடுக்குறேன்” என்றாள்.
“ஏய்.. இவர் இல்ல டி அது அவன் அங்க நிக்கறான் பாரு..” என எதிரில் இருந்த இன்னொருவனை குறிப்பிட்டு காட்டினாள் பிரியா…
“அச்சோ சாரி சார்.. பிளாக் சர்ட் போட்டவன்னு சொன்னேன்… நீங்களும் பிளாக் சர்ட் அதான் அவ கன்ஃபீயுஸ் ஆயிட்டா” என அவனின் முன்னர் மன்னிப்பு கேட்டு தலை குனிந்தாள்.
(ஹாய் டியர்ஸ்..
என்னோட ஸ்டைல்ல ஒரு ஆன்டி ஹீரோ கதை இது.. லைக்ஸ் அண்ட் கமென்ட்ஸ் கொடுத்து தொடர் ஆதரவு கொடுத்தீங்கன்னா இந்தக் கதை ரொம்ப வேகமா வரும்..)
