அத்தியாயம் 5

“நீ கொஞ்சம் ஓவர் ரியாக்க்ஷன் தான் கொடுக்குற விஜி. அவங்க பெரிய பணக்காரங்க அதுவும் இல்லாமல் நம்ம ஆளுங்களாவது ஏதாவது புரளி பேசுவாங்க. ஆனால் ஜானின் தாத்தா விக்டரின் குடும்பம் ஜெம் மாதிரி. அவ்வளவு இங்கிதம் தெரிஞ்சவங்க. ஏன் நம்ம நிஷாவே வீட்டில் நம்ம சாமியை வெச்சு கும்பிடுறா. அப்போது அவங்க எவ்வளவு நல்லவங்கனு யோசிச்சுப்பாரு.”

 

“அக்கா மறந்துட்டீங்களா, விமலா அக்காவின் மரணத்திற்குக் காரணமே நிஷாவின் திடீர் காதல் திருமணம் தான்.”

 

“நான் ஒன்னும் மறக்கல. எனக்கு தெரிந்து விமலா அக்காக்கு அறிவு இல்லைனு தான் சொல்வேன். பெத்த மகள் முழுகாமல் இருக்கிறாள், அதைப் பார்க்கும் பாக்கியம் அவளுக்கு இல்லை… ஏன் இந்த காலத்தில் காதல் திருமணம் என்பது கொலை குற்றமா? இதுக்கு ஏன் இவ்வளவு ரியாக்ட் பண்ணனும்?” என்று வாதாடினார் சாலா.

 

இதற்கு மேல் பேசினால் அது மரியாதையாய் இருக்காது என்று தன் வாயை அடைத்துக் கொண்டார் விஜி. 

ஹாலில் இருக்கும் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த, ‘முன்பே வா என் அன்பே வா…’ பாடலை அறைக்குள் இருந்தே முணுமுணுத்துக் கொண்டிருந்த ஷர்மி, இவர்களின் உரையாடலை கண்டுக் கொள்ளவில்லை.

 

“நிஷாவுக்கு அடுத்த மாதம் வளைகாப்பு பண்ணலாம்னு நிஷாவின் மாமியார் கால் பண்ணாங்க. அவங்களுக்கு இதைப் பற்றித் தெரியாது என்பதால் நம்மிடம் பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. செலவு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை சிறப்பா இருக்கணும், அவங்க தான் செலவு செய்யப் போறாங்களாம். நியாயப்படி பொண்ணு வீட்டு முறை தானே இந்த வளைகாப்பு, அதுக்கே அவங்க செலவு செய்றாங்க. இதெல்லாம் தான் பெரிய மனுஷங்கனு அர்த்தம். எவ்வளவு நல்லவங்க, இப்போது அதைப் பற்றி பேசத் தான் உங்கள் இருவரை வரச் சொன்னேன்.”

 

“சாலா அக்கா, அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்க, அதனால் செலவு பண்றாங்க. இதுல ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என்றார் விஜி.

 

“போடி நீ வேற… பணம் இருந்தா போதுமா, அதைக் கொடுக்க மனசு வேணும். அதுவும் மருமகளுக்குச் செய்ய தனி மனசு வேணும்.”

 

“சரிக்கா விடுங்க… இப்போது என்ன பண்ணணும் நிஷா வளைகாப்புக்கு.”

 

“நீ, நான், பிரேமா நம்ம மூன்று பேரும் தான் நிஷாவிற்கு அன்னையாக முன் நின்று இந்த வளைகாப்பை நடத்தணும்.”

என்ன தான் விஜிக்கு நிஷாவின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை என்றாலும், வயிற்றில் குழந்தையைச் சுமந்துக் கொண்டு நிற்கிறாள். அதுவும் இல்லாமல் விஜி விலகினால் இவளின் அக்கா, தங்கை பேசியே கொன்று விடுவார்கள் என்பதால் விஜியும் ஒப்புக்கொண்டார்.

 

“ஏய் ஷர்மி, நீ வெளியே வா. ஏன் வயசானங்க கூட உட்கார்ந்துட்டு இருக்க?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றனர் ஆர்த்தி மற்றும் திவ்யா.

 

சிறியவர்கள் சென்ற பின், “விஜி, நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. நீயும் உன் கணவனும் காதல் கல்யாணத்தை எதிர்க்குறீங்க. அது உங்களுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் நீ ஒன்னு புரிஞ்சிக்கோ, எப்போதும் ஊருடன் ஒத்து வாழணும். ஏற்கனவே ஷர்மி யாரிடமும் ஒட்டாமல் இருக்கிறாள், நீ அவளை இப்படியே எங்கேயும் விடாமல் வீட்டிலேயே பொத்தி பொத்தி வைத்திருந்தால், நாளபின்னே சொந்தமென்று சொல்லிக்க பின்னாளில் அவளுக்கு யாரும் இருக்க மாட்டாங்க… ஒரு பர்த்டே பார்ட்டி தானே அதுக்கு அனுப்பினால் தான் என்ன…?” என்று முடித்தார் விசாலாட்சி.

 

“…”

 

“இல்லை சாலா அக்கா, எனக்கென்னமோ இவளுக்கு ஷர்மி மேல தான் நம்பிக்கை இல்லைனு தோணுது. உன்னுடைய மகள் சொக்கத் தங்கம்னு உனக்குத் தெரியும் தானே, அப்போது தைரியமா அனுப்பு. இந்த வயசுல இதெல்லாம் என்ஜாய் பண்ணாமல் எப்போது என்ஜாய் பண்ணுவாள்? அதையும் மீறி நீ அவளை அனுப்பலைனா, உனக்கு ஷர்மி மீது தான் நம்பிக்கை இல்லை” என்று முடித்தார் பிரேமா.

 

இவ்வளவு கூறிய பின் தன் மகளை அனுப்பவில்லை என்றால் தன்னைத் தான் தப்பாகச் சொல்வார்கள் என்று, வேறு வழியின்றி ஷர்மியை பிறந்தநாள் விழாவிற்கு அனுப்ப தன் கணவனிடம் கேட்காமல் ஒப்புக்கொண்டார் விஜி.

 

***

 

இரண்டு நாட்கள் விடுமுறை கழிந்த பின், அன்று வேனில் சென்ற ஷர்மி கல்லூரிக்கு இறங்கிச் செல்லும்போது, “ஏய் ஷர்மி…” என்று அழைத்தது ஒரு பெண் குரல்.

 

“நீங்கள் மதி தானே?”

 

“யா… ஐ அம் மதி தாமஸ். நைஸ் டூ மீட் யூ” என்று கையைக் கொடுத்தாள் மதி.

 

ஷர்மியும் மரியாதைக்கு மென் புன்னகையுடன் கையைக் கொடுத்தாள்.

 

“ஷர்மி இஃப் ஐ அம் ரைட் உங்களுக்கு நிஷானு ஒரு அக்கா இருக்காங்கல, ஐ மீன் உங்கள் கசின் சிஸ்டர்..?”

 

மதி கூறியதில் வியப்பாக தன் கண்களை விரித்த ஷர்மி, “ஆமாம் உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று கேட்டாள். 

தான் அணிந்திருந்த மேல் சட்டையின் காலரை ஸ்டைலாக தூக்கிய மதி, “தட்ஸ் மதி தாமஸ்.”

 

“எப்படிங்க என்னுடைய டீடைல்ஸ் எல்லாம் உங்களுக்குத் தெரியுது?” என்று இம்முறை ஷர்மி பயந்து பேசினாள்.

 

“ஏய் பொண்ணே, கூல். நான் உன்னுடைய நிஷா சிஸ்டரின் கணவனுடைய பெரியப்பா மகள்” என்றாள்.

 

“வாட்?” என்று இம்முறை அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள்.

“என்னம்மா, நீ ஒன்னு ஷாக் ஆகுற, இல்லை வாயைப் பிளக்குற. உன்னை கிளாஸில் பார்த்தபோதே எனக்கு சந்தேகம் இருந்தது. அப்புறம் நிஷா அண்ணி கிட்ட கன்ஃப்ரம் பண்ணேன்.”

 

“ஆனால் எப்படி மதி, நான் உங்களை ஒரு முறை கூட பார்த்தது இல்லை. நம்ம இதுவரைக்கும் ஃபேமிலி ஃபங்ஷன்னு கூட பார்த்துக்கிட்டது இல்லை. அப்புறம் எப்படி?”

 

“ம்ம்ம் நிஷா அண்ணி அவங்க கசின்ஸ் ஃபோட்டோ காட்டியிருக்காங்க. அப்போ தான் உன் பிக்சர் பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டே ஷர்மியுடன் கிளாஸிற்கு கூட நடந்தாள் மதி.

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!