பிரியாதிரு 16
சிந்துஜாவுடன் தொழில் ரீதியாக சந்திக்க இருவரும் ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு வந்திருந்தார்கள்…
அவர்கள் எப்போதும் தொழில் ரீதியாக மூவியுடைய பட்ஜெட், எங்கே ஷூட்டிங், யார் நாயகன் நாயகி என்பதை எல்லாம் அங்கு சாப்பிட்டுக் கொண்டே அமர்ந்து பேசுவது வழக்கம் தான்…
அப்படி தான் இன்றும் அவன் வந்திருந்தான்.
“என்னை விட ஒன்னும் அந்த அமிர்தா அழகு இல்லையே ஆத்மன்” என ஆதங்கமாக கேட்டாள் சிந்துஜா.
அவள் சொன்னதைக் கேட்டு அவளை முறைத்தவனோ, “உனக்கு பொறாமை” என்று முறைத்தவனோ,
“உலக அழகியே வந்தாலும் என் மனசுக்கு பிடிச்ச ஒருத்தின்னா அது அமிர்தா மட்டும் தான்… இதை உன் கிட்ட முன்னாடியே சொல்லித் தான் நான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்” என அவர்களுக்கு முடிவான கல்யாணத்தைப் பற்றி சொன்னான் ஆத்மன் ரெட்டி.
ராஜேஷ் ரெட்டி ஆத்மனின் திருமணப் பேச்சை சிந்துஜாவுடன் ஆரம்பிக்க காரணம் சிந்துஜாவின் காதல்.
தன் தந்தை மூலம் தன் விருப்பத்தை ராஜேஷ் ரெட்டியிடம் கொண்டு வந்து சேர்த்தாள் சிந்துஜா.
சிந்துஜா அவ்வளவு பேரழகி… கணகண்டிப்பா மகனுக்கு அவளை பிடிக்கும் என நினைத்தவர் மகனிடம் விஷயத்தை சொல்ல,
“இல்லை ப்பா இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்” என்று சொன்ன ஆத்மனுக்கோ, அமிர்தாவிடம் சவால் விட்டதால் அவனின் திருமண விடயத்தை சொல்ல முடியாமல் போனது.
ராஜேஷ் ரெட்டியோ மகனுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று விடாது அடம்பிடிக்க, “நான் சிந்துஜா கிட்ட பேசணும் நானா” என்றவனோ,
தனக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் ஆன விடயத்தை மட்டும் சொல்லவில்லை…
“நான் அமிர்தாவை மட்டும் தான் என் பொண்டாட்டியா பார்ப்பேன் சிந்துஜா.. அன்ட் என்னைப் பத்தி ஒரு ரகசியம் இருக்கு அது உனக்கு சீக்கிரமே தெரியவரும்.. அப்போ நீயே இந்த கல்யாணத்தை நிறுத்துவ” என உறுதியாக சொல்லி வந்தவனின் ரகசியம் இப்போது சிந்துஜா என்ன உலகத்துக்கே தெரிந்துவிட்டதே..
சிந்துஜாவின் தந்தைக்கு கோபம் தான்.. ஆனாலும் ஆத்மன் சிந்துஜாவிடம் சொன்ன போல் அவளின் தந்தையிடமும் சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்லியிருந்தான் தான்..
“நீங்க இந்த கல்யாண அரேன்ஜ்மென்ட்ஸ் பண்ணாதீங்க.. இது கண்டிப்பா நிக்க தான் போது” என முன்னரே அனைவரிடமும் எச்சரிக்கை கொடுத்து இருந்தானே…
மகளின் காதலுக்காக சிந்துஜாவின் தந்தை எதுவும் பேச முடியாது இருக்க, ஆத்மனின் நேர்மை கண்டு அவருக்கு மனதில் வியப்பு தான்.
அதனால் என்னவோ இப்போது அவருக்கு பெரிய இடியாக இல்லை.
“உண்மையா அவ ஒன்னும் என்னை விட அழகு இல்லை ஆத்மன்… அவ இப்போ கூட உன் கூட வாழ முரண்டு பிடிச்சான்னா அவளை விவாகரத்து பண்ணிடு! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள் ஏக்கமாக.
“வொர்க் பத்தி மட்டும் பேசலாம் சிந்துஜா” என்றான் அழுத்தமாக.
அதன் பின்னர் சிந்துஜா எதுவும் பேசவில்லை.
அமிர்தாவிற்கு தான் மனதில் முழு வெறுப்பு…
தன் அண்ணனுக்கு கால் செய்து விஷயத்தைச் சொல்லலாமா என்று யோசிக்கையிலேயே அவளுக்கு கால் வந்தது…
கால் செய்தது அவளின் அண்ணன் இந்திரஜித் தான்…
“அ… அண்ணா” என்று அவள் திணற,
“எனக்கு நடந்த விஷயம் தெரியும் அமிர்தா.. ஆத்மன் உன்னை எப்படி பாத்துக்குறான்! உன்கிட்ட எப்படி நடந்துக்குறான்” என விசாரணை போல கேட்டான் இந்திரஜித்..
அவன் கேட்ட தொனியே பெண்ணவளுக்கு அச்சுறுத்தியது…
பின்னே இந்திரஜித்தின் ஆளுமை, அதிரடி பற்றி நன்கு தெரிந்தவள் ஆயிற்றே…
“அ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா. நல்லா பாத்துக்குறாரு” என சமாளித்தவளிடம்,
“உன்னை ஆத்மன் ரெண்டு வருஷம் முன்னாடியே கல்யாணம் பண்ணினது எனக்கு தெரியும் அமிர்தா” என அவன் அழுத்தமாக சொல்ல, ஸ்தம்பித்து விட்டாள் அமிர்தா…
“அ… அண்ணா” என்று அவள் குரல் நடுங்க,
“உன்னை அவன் உண்மையா காதலிக்குற ஒரே காரணத்துக்காக தான் ஆத்மனுக்கு சேன்ஸ் கொடுத்தேன்.. உன் படிப்பு முடிஞ்ச நேரத்துல கண்டிப்பா உங்க கல்யாண விஷயத்தை உலகத்துக்கு சொல்லணும்னு சொன்னேன்… அதே போல சொல்லிட்டான்!”
“இந்த ரெண்டு வருஷமும் அவனை உன் பொறுப்புல தான் விட்டுருந்தேன்.. அப்படின்னு சொல்றது விட உன் பொறுப்பு வேணும்னு ரொம்பவே அவன் உறுதியா இருந்தான்… அதனால நானும் உன்னை கண்காணிக்கல!”
“இப்போ மனசுக்கு பிடிச்சு தானே ஆத்மன் வீட்டுக்கு போயிருக்க?” என்று கேள்வியாக கேட்டான் இந்திரஜித்.
பட்டென்று இல்லை என்று சொல்லியிருக்கலாம். அதே போல ஆத்மன் தனக்கு செய்த எல்லாவற்றையும் இந்நொடி அவளின் அண்ணன் இந்திரஜித்திடம் சொல்லியிருந்தால் ஆத்மனை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான்!
ஆனால் அமிர்தாவோ, “அதெல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா… மனசுக்கு பிடிச்சு நான் வந்திருக்கேன்” என அவசரமாக சொன்னாள்.
இந்திரஜித்தை ஆத்மனை எதுவும் செய்து விடக் கூடாது என்கிற அச்சம் அவளுக்குள் அப்பட்டமாக இருந்தது…
“குட் அமிர்தா… உனக்கு அண்ணா எப்பவுமே இருக்கேன். எதுனாலும் எனக்கு கால் பண்ணு” என்று அவன் சொல்ல, அமிர்தாவிற்கு தான் கண்கள் கலங்கிப் போனது… தன் அண்ணனின் பாசத்தைக் கண்டு, அக்கறையைக் கண்டு அவள் நெகிழ்ந்து தான் போனாள்.
“தாங்க்ஸ் அண்ணா” என கண்களில் நீர் திரள அவள் நன்றியுடன் சொல்ல,
“அண்ணாக்கு எதுக்கு டா தாங்க்ஸ்” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“இந்தர்… அம்மு கிட்ட நான் பேசணும்” என கணவனின் பின்னால் கூச்சலிட்டபடியே சின்ன பிள்ளை போல வந்தாள் சாருபாலா.
