அத்தியாயம் 31

அத்தியாயம் 31

 

அனைவரும் இராஜேஸ்வரி பாட்டியை அடக்கம் செய்த பின் கிளம்ப ஆரம்பித்தனர். சில சொந்தங்கள், வம்சியின் குடும்பம் மற்றும் பிரகாஷின் குடும்பம் மட்டுமே அங்கு எஞ்சி இருந்தது. 

 

“விஜயகுமார், ஏன் இப்படி அசையாமல் இருக்கீங்க? என்னை மன்னிச்சிருங்க… பிரகாஷ் என்னை மீறிட்டான். அவன் எங்களோட கைக்குள்ள அடங்கல. ராதை அவனுக்கு கிடைக்கலைனு பைத்தியம் மாதிரி நடந்துக்குட்டான். அவனால தான் இராஜேஸ்வரி அம்மா இறந்துட்டாங்க” என்று அழுதார் பிரகாஷின் தந்தை ஆறுமுகம். 

 

இதைக் கேட்ட வம்சிக்கு ஆத்திரம் வந்தது. பிரகாஷின் மேல் இல்லை கோதையின் மேல். ‘இவ செஞ்ச முட்டாள் தனத்துல ஒரு உயிரே போயிடுச்சு’ என்று மனதில் கடுகடுத்தவன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, அமைதியாய் மற்றவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

 

ஆனால் எதற்குமே விஜயகுமார் அசையவில்லை. பிரகாஷின் அன்னை விஜயாவிற்கு ராதையைப் பிடிக்கவில்லை தான். ஆனால் தன் மகன் இப்படி பைத்தியம் போல் நடந்துக் கொள்வதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இந்த சாவுக்கு கிளம்பும் முன்னர் பிரகாஷ் தன் அன்னையிடம் பேசியதை இப்போது விஜயா இங்கு பேச ஆரம்பித்தார். 

 

“அது வந்து விஜயகுமார் அண்ணா… பிரகாஷ், இராஜேஸ்வரி அம்மா இறந்ததுக்கு ரொம்ப வருத்தப்பட்டான். அவன் என்ன சொல்றான்னா… இப்போ கூட ராதை அந்த தாலியை தூக்கி எறிஞ்சிட்டு பிரகாஷைக் கல்யாணம் செஞ்சால்… இந்த கம்பெனி மறுபடியும் உங்ககிட்டயே வந்துடும்” என்று தயங்கி எப்படியோ சொல்லி முடித்தார்.

 

அதைக் கேட்ட வம்சிக்கு ரத்தம் சூடு ஏறியது. இது இரங்கல் வீடு என்பதால் இவ்வளவு நேரம் தன்னை அடக்கி அமைதியாய் இருக்கின்றான்.

 

“போதும் நிறுத்துங்க… என் பொண்ணு ராதை உங்களுக்கெல்லாம் என்ன விளையாட்டு பொம்மையா?” என்று கோபத்தில் கத்திய மைதிலி தன் அழுத்தமான பார்வையை வம்சியிடம் வைத்தார். 

 

“ராதையோட வாழ்க்கை அவளோட விருப்பம். இதுல தலையிட யாருக்கும் உரிமை இல்லை… இதோ நிக்குறானே இந்தப் பெரிய மனுஷன், நான் தானப்பா உனக்கு பேரு வைச்சேன். நீ கிருஷ்ணரைப் போல் குழந்தைத்தனமா நல்ல மனசா வருவன்னு நினைச்சேன். ஆனால், நீ ஒரு அரக்கன்…”

 

“என்னோட பொண்ணு ராதை பூ மாதிரி மென்மையானவ. அவளைப் பொசுக்கி இப்போ அவ எங்க எப்படி இருக்கான்னு கூட எங்களுக்கு தெரியல… அவளோட உயிருக்கும் மேலான பாட்டி இந்த உலகத்தை விட்டே போய்ட்டாங்கனு அவளுக்குத் தெரிஞ்சா, அந்தக் கள்ளம் கபடம் இல்லாத அப்பாவி பொண்ணு என்ன செய்வாளோ…?” என்று கதறிய மைதிலி, 

 

ஒரு முடிவு எடுத்தவராய், “யாரும் இனி ராதையை வைச்சு விளையாடக் கூடாது. ஏன் அவளோட விருப்பம் இல்லாம அவளுக்குத் தாலி கட்டி, அவ காணாம போகக் காரணமா இருக்குற நீ… வம்சி… உனக்குக் கூட ராதை மேல உரிமை இல்லை” என்று முடித்தார்.

 

இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த வம்சி, மைதிலி தன்னைப் பற்றி பேசியதில் பொறுமையை இழந்து, “நீங்க எல்லாரும் மறந்துட்டீங்கனு நினைக்குறேன், நான் ராதையைத் தொட்டு தாலி கட்டுனவன்.”

 

“நீங்க எல்லாருமே ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, ராதையை விளையாட்டுப் பொருள் ஆக்குறதுக்கும், அவளை வேண்டாம்னு தூக்கி எறியிறதுக்கும் இந்த உலகத்துல இனி எப்போவுமே எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு… அதுல யாராவது தலையிட்டா அத்தை, மாமா, அப்பா, அம்மா, பிரகாஷ் இப்படி எவன் வந்தாலும் இந்த வம்சி சும்மா விட மாட்டான்” என்றவனோ, 

 

மைதிலி புறம் திரும்பி, “உங்களோட செல்ல வளர்ப்புப் பொண்ணு ராதைக்கு இன்னும் அவளோட உயிருக்கும் மேலான பாட்டி இறந்த விஷயம் தெரியாது போல…” என நக்கல் கலந்த இறுக்கத்துடன் ஒரு விதமாய் கூறியவன், 

 

இப்போது அனைவருக்கும் கேட்பது போல் சத்தமாக, “உங்கள்ல யாரோ ராதை கூட பேசிட்டு இருக்கீங்க… அவளுக்கு உதவி செய்றீங்கனு எனக்கு நல்லா தெரியும். அது யாருனு கூட நான் ஆல்மோஸ்ட் நெருங்கிட்டேன். அவகிட்ட போய் சொல்லுங்க, இந்த வம்சி ராதையை அடைஞ்சே தீருவான்! அவளால என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாதுனு சொல்லிவைங்க” என்று திமிராக முடித்தவன் வெளியேச் சென்றுவிட்டான்.

 

இதை எல்லாம் கேட்ட பிரகாஷிற்கு தான் கோபம் குபு குபுவென வந்தது… ஆனாலும் இப்போது அவனால் நேரடியாக வம்சியோடு மோத முடியாது.. ஏனெனில் வம்சியின் பண பலமும் அதிகார பலமும் அப்படி… 

 

இவனிடம் பார்த்து காய் நகர்த்தி தான் தன் ராதையை தனக்குள் கைப்பற்ற வேண்டும் என்று இப்போதும் உறுதியாக இருந்தான் பிரகாஷ். 

 

அங்கு கும்பலோடு இருந்த ரமாவிற்கு தான் இப்போது வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘இந்த வனிதா வேற ஃபோனை எடுக்க மாட்டேங்குறாளே… இப்போதைக்கு பேசுனா இந்த வில்லாதி வில்லன் கண்டு பிடிச்சிடுவான். நம்ம வீட்டுக்கு போனதும் பேசுவோம்’ என்று தனக்குள்ளே எச்சரித்த ரமா சிறிது நேரத்தில் கிளம்பினார்.

 

பெங்களூரில் இருந்து வம்சி குடும்பத்தினர் மூன்று கார்களில் தான் இங்கு கோயம்புத்தூருக்கு வந்திருந்தார்கள். வம்சி எப்போதுமே தன் காரில் யாரையுமே ஏற்ற மாட்டான் வம்சி. அதனால் இப்போது தன் காரை எடுத்துக் கொண்டு அவன் சென்ற இடம் ஒரு ஆன்லைன் ஏஜென்சி. 

 

வம்சிக்கு ராதை பெங்களூரில் தான் இருப்பாள் என்று அவனின் உள்மனது ஆணித்தரமாக சொன்னதால், அந்த ஆன்லைன் பஸ் ஏஜென்சியில் நேற்று முந்தைய நாள் இரவு கோயம்புத்தூரிலிருந்து பெங்களூர் கிளம்பிய ரயில்களில், பேருந்துகளில் ராதையின் பெயர் இருக்கிறதா என்பதை அறியச் சென்றான். அவன் நினைத்தது போலவே ராதையும் வனிதாவும் கோயம்புத்தூரிலிருந்து பெங்களூர் வரை பயணித்த விவரம் இருந்தது.

 

“என்கிட்ட பாதி சிக்கிட்ட டி” என்று கர்வத்தில் அவன் சொல்லிக் கொண்டுருக்கும் போதே பிரணவ்விடம் இருந்து அவனுக்கு கால் வந்தது. 

 

“சொல்லு பிரணவ், நான் தான் ஒரு இரங்கல் வீட்டுக்கு வந்திருக்கேன்னு சொல்லிட்டு தானே வந்தேன். அப்போ எதுக்கு கால் பண்ற இடியட்?” என்று கடுப்பாகக் கேட்டான். 

 

“பாஸ் பாஸ் ப்ளிஸ் கோபப்படாதீங்க, அது வந்து இன்னிக்கு ஒரு அம்பது பேருக்கு நம்ம கம்பெனியில இன்டர்வியூ இருக்கு. எவ்வளவு பேரை செலக்ட் பண்ணனும்னு நீங்க தானே சொல்லுவீங்க, அதைக் கேட்கத்தான் கால் பண்ணேன்” என்று பம்மினான்.

 

“எனக்கு இப்போ மூட் சரி இல்லை. இன்னொரு நாளைக்கு இன்ட்ர்வீயூ ஸ்கெடியூல் பண்ணு” என்று அதிகாரமாகச் சொன்னான்.

 

“பாஸ் அது வந்து இன்னிக்கு கால் ஃபார் பண்ண எல்லாருமே கோயம்புத்தூர் என்ஜினியரிங் பாஸ்ட் அவுட் கேன்டிடேட்ஸ், அவங்க பாவம் வேற ஸ்டேட்ல இருந்து வந்திருக்காங்க, இன்னொரு நாள் தான் இன்டர்வியூனு இப்போ கிளம்புங்கனு அவங்களை திருப்பி அனுப்பினா அவங்க உடைஞ்சு போய்டுவாங்கல” என்று பயந்து இழுத்தவனிடம், 

 

“ரொம்ப ஃபீல் பண்ணா நீயும் அவங்களோடவே போய்டு இடியட்” என கடுகடுத்த வம்சி திடீரென்று, “கோயம்புத்தூரா? இன்னிக்கு அட்டென்ட் பண்ற கேண்டிடேட்ஸ் லிஸ்ட் இன்னும் அஞ்சு நிமிஷத்துல என் மெயில் ஐடிக்கு வந்திருக்கணும்” என்று கால்லை கட் செய்தான். 

 

வம்சியின் மனதிலோ கோயம்புத்தூர் என்கிற பெயரைக் கேட்டதும் அவனின் உள் மனதில் ராதை வந்திருப்பாளோ என்றே தோன்றியது. இத்தனைக்கும் ராதை தன்னுடைய பொறியியல் படிப்பைச் சென்னையில் முடித்தவள். ஆனாலும் அவனுக்கு ஒருவேளை அவளும் இன்டர்வியூக்கு வந்திருந்தால்… என்றே தோன்றியது. அதனால் பிரணவ்விடம் இருந்து மெயில் வரும் வரை குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.

 

***

 

“டி வனிதா, இன்டர்வியூ பத்து மணிக்குனு சொன்னாங்க, மணி சாயந்தரம் மூனு ஆகப் போகுது… இன்னும் கூப்பிடல. இந்த வேலை கிடைக்குமா இல்லையானு பயமா இருக்கு டி” என்று கவலையாகக் கூறினாள் ராதை. 

 

“ஏய் ராதை, உன்கூட வந்த யாரையுமே இன்னும் கூப்பிடல டி. அதனால பயப்படாத என் அம்மா வேற காலையில் இருந்து நாலு தடவைக்கு மேல கால் பண்ணிருக்காங்க” என்றவளிடம், 

 

“அப்போ நீ என்னனு கேளுடி, ஒருவேளை அந்த வம்சி ஏதாவது…” என்று வனிதாவின் கையை பயத்தில் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள் ராதை.

 

வனிதாவிற்குமே அந்த பயம் இருந்தது. ஆனால் ராதையிடம் அதைக் காட்ட கூடாது என்று முடிவெடுத்தவள், “ஏய், ஏன்டி இப்படி பயப்படுற? அதெல்லாம் ஒன்னும் இருக்காது, நம்ம நல்லா இருக்கோமானு கேட்க தான் இருக்கும். அதனால் பயப்படாத” என்று அவளைத் தேற்றினாள்.

 

பிரணவ் மெயில் அனுப்பியதை ஓபன் செய்த வம்சியின் கண்கள் கோமகள் ராதை என்கிற பெயரைத் தேடியது. அவனுடைய கண்களில் அவளின் பெயர் மாட்டிக் கொண்ட பின் வம்சியின் முகத்தில் ஒரு வெற்றிச் சிரிப்பு. 

 

உடனடியாக பிரணவிற்கு கால் செய்து, ராதையின் அப்ளிகேஷன் ஃபார்மை போட்டோ எடுத்து அனுப்பச் சொன்னான். ஏன் எதற்கு என்று கேட்க தைரியம் இல்லாத பிரணவ் உடனே ராதையின் போட்டோ கொண்ட அப்ளிகேஷன் ஃபார்ம்மை வம்சிக்கு அனுப்பி விட்டான்.

 

அதனைக் கண்ட வம்சி, “என்கிட்ட இருந்து தப்பிச்சு என்கிட்டயே மறுபடியும் மாட்ட தயாரா இருக்கியே மிஸஸ் ராதை வம்சி வேதந்த் கிருஷ்ணா… உன் விதி இனி என் கூடத் தான்” என கர்வத்தோடு சொல்லிக்கொண்ட வம்சி தன் காரில் பெங்களூரை நோக்கி பயணித்தான்.

 

***

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!