அத்தியாயம் 36
“என்ன வீரப்பா, வீட்டை வாங்க ஆள் வராங்கனு சொன்ன இன்னும் ஒருத்தரையும் காணுமே?” என கவலையாகக் கேட்டார் விஜயகுமார்.
“சார் அவர் சொன்னா சொன்ன டைம்க்கு வந்திருவாரு. இதோ பாருங்க தம்பியோட கார் வந்திடுச்சு” என்று மரியாதை கொடுக்கும் விதமாய் எழுந்தார் வீரப்பா.
காரிலிருந்து கம்பீரமாக இறங்கியவனைக் கண்டதும் அதிர்ச்சியில் தானாக எழுந்தார் விஜயகுமார். ஏனெனில் அதிலிருந்து அப்படி கம்பீரமாக இறங்கியது வம்சி வேதந்த் கிருஷ்ணா.
“என்ன வீரப்பா இவனா வீடு வாங்கப் போறான்?” என்று கடுப்பாகக் கேட்டவரிடம், “சார் வம்சி தம்பியை முதல்ல இவன் அவன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க, அவரோட தகுதிக்கு இந்த வீடெல்லாம் ஒன்னுமே கிடையாது. ஏதோ உங்க நல்ல நேரம் அவர் இந்த வீட்டை வாங்குறார்” என்று வீரப்பா பெருமை அடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கிய வம்சி, “எல்லாம் ரெடியா வீரப்பா?” என்று அதிகாரத் த்தொனியில் கேட்டான்.
“நீ இந்த வீட்டை வாங்கக் கூடாது, அதுக்கு ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கத்தினார் விஜயகுமார்.
“நான் இந்த வீட்டை வாங்கலைனா, வேற யாரையும் வாங்க விட மாட்டேன்” என்று திமிராகத் தனக்கு என்று வீரப்பா காட்டிய இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டான் வம்சி.
“விஜயகுமார் சார், இங்க பாருங்க இதுவரை இந்த வீடுடை வாங்க வந்த எல்லாரையும் தடுத்துட்டுட்டாரு வம்சி சார். இனி உங்க இஷ்டம் உங்களுக்கு இப்போ இருக்குற கஷ்டத்துக்கு இது மட்டும் தான் வழி” என்ற வீரப்பாவிடம், “வீரப்பா எனக்கு டைம் ஆகுது. லேட் ஆக ஆக வீட்டோட மதிப்பு இறங்கும்… எட்டு கோடி ஏழு கோடி ஆகும்” என்று நக்கல் கலந்த திமிருடன் பேசினான் வம்சி.
அதில், “சரி வீரப்பா, நடக்க வேண்டியதைப் பாக்கலாம்” என்று அடங்கிய விஜயகுமார், மனதில் மிக பாரத்தோடு அந்த வீட்டை வம்சியின் பேரில் எழுதிக் கொடுத்து, எட்டு கோடிக்கான காசோலையைப் பெற்றுக் கொண்டார்.
விஜயகுமாரிடம் காசோலையைக் கொடுத்த வம்சி, “பிரகாஷே ஒரு முட்டாள், அவன்கிட்ட ஏமாந்து நிக்குற உங்களைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு மாமா. உங்களுக்கு இந்தத் தண்டனை கண்டிப்பாக வேணும். அப்போ தான் இந்த மாதிரி முட்டாள் தனத்தை மறுபடியும் செய்ய மாட்டீங்க” என்றுவிட்டு தன் காரை நெருங்கினான்.
“எல்லாத்துக்கும் தண்டனை கொடுக்குறியே உனக்கு யார் தண்டனை கொடுப்பா?” என்று பின்னால் நின்றிருந்த விஜயகுமார் ஆவேசமாகக் கேட்டார்.
“எனக்கு தண்டனை கொடுத்துத் தான் பழக்கம் மாமா, இந்த வம்சிக்கு யாரும் தண்டனை கொடுக்க முடியாது. அப்படி நினைச்சாலே எரிச்சிடுவேன்” என்று ஸ்டைலாக தன் கூலர்ஸை போட்டுக் கொண்டு கார் கதவைத் திறந்து அமர்ந்து காரை எடுத்து கிளம்பினான் வம்சி. காரில் செல்லும் அவனை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகுமார்.
***
“பிரகாஷ் என்ன பண்ற நீ?” என்று மதுபோதையில் இருந்த பிரகாஷை உலுக்கினார் ஆறுமுகம்.
“என்னை விடுங்க ப்பா, ஆசையா இருந்தேனே… ராதை எனக்கு கிடைக்க நான் எவ்வளவு முயற்சி பண்ணேன். கடைசியா எங்கயோ இருந்து வந்தான் அந்த கேடுகெட்ட வம்சி… அவளை இப்படி ஆக்கி இப்போ அவள் எங்கேனு கூட தெரியல. எனக்கு அவ வேணும்பா… ராதைக்கே என்னை பிடிச்சுது” என்று தலையில் அடித்துக் கொண்டான் பிரகாஷ்.
“பிரகாஷ், நீ உன் வாழ்க்கை பத்தி இனி யோசி. ராதை இனி உன் வாழ்க்கையில இல்லை. அவ இப்போது இன்னொருத்தனோட மனைவி” என்றார் தந்தை அழுத்தமாக.
“என்ன மனைவி மண்ணாங்கட்டினு பேசிட்டு இருக்கீங்க பா… ஒருத்தன் இஷ்டம் இல்லாம ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினா அவன் புருஷன் ஆயிடுவானா?” என்று கத்தினான்.
தன் அண்ணனின் நிலையைப் பார்த்து, “அப்பா, இவனை கொஞ்ச நாள் நம்ம விட்டு தான் பிடிக்கணும்” என்று தன் தந்தையின் தோளில் ஆறுதலாய் கை வைத்தான் விஜயேந்திரபூபதி.
***
காலையில் இருந்து நான்கு ஐந்து அழகு நிலையங்களுக்குச் சென்று வேலை தேடி கிடைக்காமல் ஓய்ந்து விட்டாள் கோதை. அப்போது தான் இந்தியாவிலேயே இருக்கும் பல கிளைகளைக் கொண்ட அந்த அழகு நிலையத்தை வேலாண்டி பாளையத்தில் கண்டாள்.
“இதுல மட்டும் நமக்கு என்ன வேலை கிடைக்கவா போகுது!” என்ற நம்பிக்கையின்மையில் தான் கோதை உள்ளேச் சென்றாள். அங்கு ரிசெப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தனக்கு அழகுப்படுத்தும் முறை, விதம் தெரியும், தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டாள். ஆனால் அப்பெண் அனைத்து நிலையங்களில் கூறியது போல் கோர்ஸ் படித்திருந்தால் மட்டுமே வேலை என்று கூறிவிட்டாள்.
ஏமாற்றம் அடைந்த கோதை வெளியேச் செல்ல நினைக்கும் போது அந்த ரிசெப்ஷன் பெண்ணிற்கு ஒரு கால் வந்தது. “மேடம் உங்களை மேனேஜர் பார்க்கணும்னு கூப்பிடறாங்க” என்று ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு மேனேஜர் இடத்தில் அமர்ந்திருந்த ஹரிஷைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோதை, “ஹரிஷ் நீயா?” என்று கூறி வாயடைத்துப் போனாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ, கால் மீ ஹரிஷ் சார்… நான் தான் இங்க மேனேஜர்” என்றான் கர்வமாக.
“அது வந்து… சாரி சார்” என்று தடுமாறினாள்.
“நீ கோதை தானே அந்த பென்ஸ் கார்ல வருவியே, உனக்கு இங்க என்ன வேலை?” என்று தன் இடத்திலிருந்து எழுந்தவன் தன்னுடைய டேபிளில் சாய்ந்து திமிராகக் கேட்டான்.
“சார் எனக்கு வேலை வேணும், எனக்கு அழகு முறைப்படுதுற விஷயம் எல்லாமே தெரியும், ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் என்னை நிரூபிக்க” என்று அவள் தான் வந்த வேலையிலேயே குறியாய் இருந்தாள்.
“பொதுவாக இந்த வேலைக்கு வரணும்னா அழகு சம்பந்தப்பட்ட கோர்ஸ் படிச்சிருக்கணும், அப்படி இல்லாம நாங்கள் எடுக்குறது இல்லை” என்று அவன் இழுத்த போதே, “ஓ நீங்க எம்பிஏ படிச்சதாக தான் எனக்கு ஞாபகம்” என்று அழுத்தமாகக் கூறினாள்.
இம்முறை கடுப்பான ஹரிஷ், “நான் ஒன்னும் உன்னை மாதிரி வேலைக்கு வரல. நான் இங்க மேனேஜர்” என்று அதட்டலாகக் கூறினான்.
“சார் ப்ளீஸ், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் திருப்தியா வேலையைச் செய்யலைனா எனக்கு வேலை தர வேண்டாம்” என்று கெஞ்சினாள் கோதை.
“ரீதா, நீ போய் உட்காரு” என்று கோதையிடம் திரும்பியவன், “இவளுக்கு கல்யாணப் பொண்ணோட மேக்கப் பண்ணு” என்று அங்கிருந்த அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்தச் சொல்லி உள்ளேச் சென்றான்.
***
அந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்த வம்சி வேகமாக அறைக்குள்ளே சென்றான். அங்கே ராதை உறங்கிக் கொண்டு இருந்தாள். தாரிகா சோஃபாவில் அமர்ந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இவ எப்போ தூங்கினா?” என்று தாரிகாவிடம் கேட்டான்.
“சார் நீங்க போன உடனே தூங்கிட்டாங்க மேடம்” என்று பதில் அளித்தாள்.
“ஓகே நீ கிளம்பு, இந்தா உன் பிளைட் டிக்கெட். இன்னும் ரெண்டு மணி நேரத்துல உனக்கு பிளைட் ஸ்டார்ட் நவ்” என அவளை வெளியே அனுப்பினான்.
குழந்தைப் போல் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியைக் கண்டு மெலிதாகச் சிரித்தான்.
வம்சி இங்கு வந்ததற்கு காரணமே இந்த வீட்டை வாங்குவதற்குத் தான். வேலை முடிந்தவுடன் பெங்களூர் கிளம்பலாம் என்று பார்த்தால் அவனுக்கு ராதையை எழுப்ப மனம் வரவில்லை. அதனால் தன் லாப்டாப்பை திறந்து சோஃபாவில் அமர்ந்தவன், ஒரு ஓவர்சீஸ் கிளைன்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தான்.
வம்சியின் குரல் கேட்டு பயத்தில் விழித்த ராதை, “பாட்டி…” என்று கத்தினாள். அதனைக் கண்ட வம்சி ஒரு நிமிடம் துடித்தே விட்டான்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைத்த மனதைக் கட்டுப்படுத்தி, “தண்ணீ குடி” என்று கூறிவிட்டு அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனிக்குச் சென்று யோசிக்கத் தொடங்கினான்.
‘என் குரலைக் கேட்டாலே பயப்படுற இவ மனசுல நான் எப்படி இடம் பிடிக்குறது. தூக்கத்தில் கூட இவ வாயில வரது பாட்டி தான்… அவங்க இறந்துட்டாங்கனு எப்படி இவ கிட்ட சொல்றது?’ என்று தன் மனதில் யோசித்தவனுக்கு அந்த குளிர் காற்று கூட இதமாக இல்லை.
வேக நடையுடன் உள்ளே வந்தவன், “கிளம்பணும் ரெடி ஆகு, நாளையில இருந்து நீயும் என்னோட ஆபிஸ்க்கு வரணும்” என்று கூறிவிட்டு கிளம்ப ஆயத்தம் ஆனான்.
‘இவன் ஏன் போற இடத்துக்கெல்லாம் என்னையும் கூட்டிட்டுப் போறான்?’ என்று புரியாமல் ராதை குழம்பினாள்.
***
