அத்தியாயம் 37
பெங்களூர் செல்லும் வழியெல்லாம் ஒரே மழை. அந்த ஹைவேயில் வம்சியின் கார் சற்று வேகமாகவே சென்றுக்கொண்டு இருந்தது. அவன் மனதில் இருந்த இறுக்கம் அவன் முகத்திலும் தென்பட்டது.
அவர்கள் வீடு வந்து சேர மணி இரவு பத்து ஆனது. அவன் வரும் போதே அவனுக்காக அவன் அன்னை லட்சுமி காத்துக்கொண்டு இருந்தார்.
அவர்கள் வந்தவுடன் வம்சியை அமரச் சொல்லி சாப்பிடுமாறு அழைத்தார். “நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்” என்றவன் பின்னோடு ராதையும் சென்றாள்.
‘இப்படியே எவ்வளவு நாள் இவ மகாராணி மாதிரி இருப்பா, நான் அவளுக்குச் சேவை செய்யணுமா?’ என்று குத்தலாக தன் மனதில் புலம்பிக் கொண்டார் அவர்.
வம்சி தன் அறைக்குச் சென்றதும் நேராக குளிக்கச் சென்றான். ராதைக்கும் சேலை கசகசப்பாக தான் இருந்தது. வம்சி குளித்து முடித்து வந்ததும் ராதை தன் சுடிதாரை எடுத்துக் கொண்டு உள்ளேச் செல்லும் போது, “குளிச்சிட்டு கீழே சாப்பிட வா” என்று சொல்லிவிட்டு தான் கீழே சென்றான்.
ராதை எல்லாம் முடித்து கீழே செல்லும் போது வம்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளை வெட்டும் பார்வையோடு பார்த்துக் கொண்டு இருந்தார் லட்சுமி.
ராதை வந்ததைக் கண்ட வம்சி, “அம்மா உங்க வீட்டுக்கு வந்த மருமகளுக்கு சாப்பாடு போடக் கூட இவ்வளவு யோசிப்பீங்களா?” என்று குத்தலாகக் கேட்டான்.
அவ்வளவு தான் லட்சுமி மடமடவென அழுது புலம்ப ஆரம்பித்தார். “இவ என்ன இந்த வீட்டு மகாராணியா? நானெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல கூட அவ்வளவு வேலை செஞ்சேன்” என்று தன் மாமனார், மாமியார் காதில் கேட்காதவாறு பேசினார்.
“அம்மா! ஜஸ்ட் ஸ்டாப் இட். இவளை என்ன உங்களை மாதிரி பத்தாம் கிளாஸ்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? அவ ஒரு இன்ஜினியர், காலேஜ் டாப்பர் மா அன்ட் ஒன் மோர் திங் ராதை என்னோட கம்பெனில டெவலப்பரா நாளைக்கு ஜாயின் பண்ண போறா… கொஞ்சமாவது நியாயமா இருங்க ம்மா. இதே இடத்துல ஷிவானி இருந்தா இப்படி தான் நடத்துவீங்களா?” என கோபத்துடன் முறைத்தவன் ராதையைப் பார்த்து, “நீயே எடுத்துப் போட்டு சாப்பிடுக்கோ” என்று அவளிடம் கட்டளையிடும் விதமாக கூறிவிட்டு எழுந்தான்.
“அம்மா, நீங்க பரிமாறி இவ பயந்து சாப்பிடுறதுக்கு, அவளே எடுத்துப் போட்டு நிம்மதியா சாப்பிடுவாள். அவ இன்ஜினியரிங் இல்லை, பத்தாம் கிளாஸாவே இருந்தா கூட இவ வம்சியோட பொண்டாட்டி… இவளுக்குத் தேவையான மரியாதை கிடைக்கலைன்னா , நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று தான் துடைத்த டவலை கீழே கோபத்தில் வீசி எறிந்துவிட்டுச் சென்றான். செல்லும் அவனையே வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதை.
“இப்போ உனக்கு சந்தோஷமா? என் பையன் வேதந்த் உன்னால தான் என்கிட்ட முகத்தைக் கொடுத்துக் கூட பேச மாட்டிங்குறான். அப்படி எதைக் காட்டி மயக்குனியோ ச்சச்ச” என ஆதங்கத்துடன் சொல்லிவிட்டு உள்ளேச் சென்றார்.
வம்சியின் அன்னை பேசிய பேச்சில் ராதைக்கு உடம்பே கூசிவிட்டது. ‘என்ன மாதிரி வார்த்தைகளை இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டு போறாங்க? இவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு தானே, என்னைக் கேட்க நாதி இல்லைனு தானே இப்படி பேசிட்டு போறாங்க’ என்று கண்களில் கண்ணீரோடு இருந்த ராதைக்கு சாப்பாடு இறங்கவில்லை. தட்டில் இருந்த ஒரு சப்பாத்தியை மட்டும் கடமையே என்று விழுங்கிவிட்டு மேலே செல்லும் போது வம்சி தன் லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அமைதியாக சோஃபாவில் படுத்தவளுக்குத் தூக்கத்திற்கு பதிலாக அழுகை தான் வந்தது. திடீரென்று எழுந்தவள் அவர்கள் அறையில் இருந்த பால்கனியை நோக்கி சென்று வெளியே வேடிக்கை பார்த்தாள். அப்போதாவது அவள் மனது நிம்மதி அடைகின்றதா என்று தான் சென்றாள். ராதை அங்குச் செல்வதைக் கண்ட வம்சியும் அவளின் பின்னே சென்றான்.
வம்சி தன் பின்னால் வருவதை அறியாத ராதை திடீரென்று தன் பக்கத்தில் யாரோ இருப்பது போன்ற உணர்வு தோன்ற அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள். வம்சி தன் இரு கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இனி நாம் இங்கு நின்றால் தேவையில்லாத பிரச்சனை என்று நகர முயன்றவளை, “இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி பயந்தாகோலியாகவே இருக்கப் போற ராதை?” என்று தெளிவாக குத்தும் விதமாகக் கேட்டான். அவன் பேச்சில் உள்ள அர்த்தத்தைப் புரியாத ராதை அப்படியே பதில் அளிக்காமல் நின்றாள்.
“உன்னுடைய அழுகைக்கு வாய்ன்னு ஒன்று இருந்தா அது கண்டிப்பா இந்நேரம் அழுதுருக்கும். எதையும் அழாம போல்டா ஃபேஸ் பண்ண கத்துக்கோ, இந்த உலகத்துல தப்பு செஞ்சவங்க எல்லாம் வாய் பேசுறாங்க, ஆனா நீ? உன்னோட அழுகை, பயம் மத்தவங்களுக்கு சாதகம் ஆகிடுது… நீ மாறணும்” என்றான் அழுத்தமாக.
தன் பாக்கெட்டில் கைவைத்து அவளின் பதிலை எதிர்ப்பார்த்து இருந்தவனிடம், “என்னோட அழுகையும் பயத்தையும் சாதகம் ஆக்குறது நீங்க தான்… இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை. இங்க நடக்குறதைப் பார்த்துத் தான் உங்களுக்கும் ஷிவானிக்கும் கல்யாணம் ஆக வேண்டியதுனு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ ஏன் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணீங்க…?”
“என்னை பழிவாங்க வேணும்னு நினைச்ச நீங்க என்னை ஏன் இன்னும் பழிவாங்காம வைச்சு இருக்கீங்க? உங்களோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு பயமா இருக்கு . நீங்க எப்போ என்ன செய்வீங்கனு கூட என்னால யூகிக்க முடியல… உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன் நான் என் வீட்டுக்கு போகணும்…”
“என் மனசு முழுக்க என் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா தான் இருக்காங்க… ப்ளிஸ் நீங்க அந்த ஷிவானியையே கல்யாணம் பண்ணிக்கோங்க. அவங்க உங்களுக்காக வெயிட் பண்றாங்க” என்று ஆதங்கத்துடன் ஆரம்பித்தவள் கெஞ்சலுடன் முடிக்கும் போதே அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது வம்சியின் கரம். அவன் கண்களோ கோபத்தில் சிவந்திருந்தது.
அவனுக்கு தான் காதலிக்கும் மனைவியே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள் என்று சொல்லும் போது சினம் ஏறியது.
“நான் செஞ்ச தப்பு உன்னை சாஃப்டா ஹேண்டில் பண்ணது தான்டி, உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நானும் நீ சின்னப் பொண்ணுனு பாவம்னு பார்த்தா, என்னை இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செய்ய சொல்ற… இந்த வார்த்தையோட வீரியம் உனக்கு தெரியுமா தெரியாதா? இனி உன்னை இந்த வம்சியின் வழியில தான் ஹேண்டில் பண்ணணும். என் கண் முன்னாடி நிக்காத போயிடு” என்று அவளிடம் கத்தியவன், தன் லாப்டாப்பில் பார்த்த வேலையைத் தொடர்ந்தான்.
எந்த ஒரு உணர்வுகளையும் வெளிப்படுத்தாத ராதை சத்தமில்லா கண்ணீருடன் ஒரு ஜடம் போல படுத்துக்கொண்டாள்.
***
அன்று இரவு கோதை வீட்டிற்கு வரும்போதே மணி பத்தைத் தாண்டியது. “மைதிலி, உன் பொண்ணு எங்க சுத்திட்டு வரானு கேளு, இவளால நம்ம பட்டது எல்லாம் போதாதா? இன்னும் எப்படி எல்லாம் மானத்தை வாங்கலாம்னு பிளான் பண்றா போல” என்று கோதையின் காதில் பட வேண்டும் என்றே கத்தினார் விஜயகுமார்.
“அம்மா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு. மாசம் இருபது ஆயிரம் ரூபாய் சம்பளம். வேலாண்டி பாளையத்துல இருக்குற பிரபல ஒரு பெரிய பார்லர்ல வேலை கிடைச்சிருச்சு” என்று அயர்வாகச் சொன்னாள் கோதை.
“சரி கோதை, நீ முதல்ல சாப்பிட வா” என்று அழைத்தார் மைதிலி.
கோதைக்குத் தான் சாப்பாடே இறங்கவில்லை. ‘என்ன மாதிரி வார்த்தைகளை அமிலமாய் கொட்டி விட்டான் அந்த ஹரிஷ். என்னை உயிருக்கு உயிராய் காதலித்தவனால் எப்படி இப்படி எல்லாம் பேச முடிந்தது? அப்போ அவன் காதலிச்சேன்னு சொன்னது எல்லாம் பொய் தான் போல’ என்று அன்று நடந்தவற்றை யோசித்துப் பார்த்தாள்.
“ம்ம் பரவாயில்லை கோதை, இந்த வேலையை நல்லா தான் பண்ணிருக்க. ரீதா இவளுக்கு நம்ம டைமிங்ஸ் புரோட்டகால்ஸ் அன்ட் யூனிபார்ம் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணிடு.”
“அன்ட் ஒன் திங் ரீதா, இவ மேல் உனக்கு ஒரு கண் இருக்கணும். பணக்கார கிளைண்ட்ஸ் எல்லாம் வந்தா நீயே டீல் பண்ணு. இந்தப் பொண்ணு கோதை பணத்தைப் பார்த்தால் வாயைப் பிளக்குற வகை” என்று மட்டமாகக் கூறிவிட்டு போனவனை முறைத்த கோதை, இந்த வேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று தான் நினைத்தாள்.
ஆனால் தான் செய்த தப்புக்கு, அவள் தான் ஈடு செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் அவள் மனதில் பிறந்தது. எனவே பல்லைக் கடித்து நாளை வேலையில் சேருவதாய் ஒப்புக்கொண்டு வீடு திரும்பினாள்.
***
