அடுத்த நாள் காலை வம்சி எழுந்திருக்கும் முன்னரே ராதை எழுந்து குளித்து விட்டு கீழேச் சென்றாள். வம்சியின் அம்மா என்ன பேசினாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விடவேண்டும் என முடிவெடுத்து சென்றாள்.
அங்கு காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தனர் பெரியவர்கள். “என்னம்மா நேத்து பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று புன்முறுவலோடு கேட்டார் விஸ்வநாதன்.
“ஆ… நல்லா இருந்துச்சு தாத்தா” என்று மெலிதாய் புன்னகைத்த ராதைக்கு, காஃபி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார் காந்திமதி பாட்டி.
வயதில் பெரியவர் தனக்கு எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பதா என்று மனதில் சங்கடம் எழுந்தாலும் தான் எப்படி இந்த வீட்டு கிச்சனில் நுழைவது என்ற அச்சத்துடன் இருந்தாள் ராதை.
“பாட்டி சாரி, எனக்கு கிச்சன்ல உள்ளே போக அனுமதி இருக்கானு கைட தெரியல. அதான் நான் காஃபி போடல. இல்லனா நானே போட்டிருப்பேன்” என்று வருந்தினாள்.
ராதையின் தலையில் மென்மையாகக் கைவைத்த பாட்டி, “ராதைம்மா, நான் ஒன்று சொன்னால் கேட்பியா?” என்று கேள்வியாகக் கேட்டார்.
“கண்டிப்பாக கேட்குறேன் பாட்டி” என்று மரியாதையுடன் சொன்னாள் ராதை.
“நான் சொல்றது உனக்கு எப்படி இருக்கப் போகுதுனு தெரியல. ஆனா நீ இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். உன்னை பழிவாங்கத் தான் வம்சி உனக்கு தாலி கட்டுனான். ஆனா அவன் உன்னை இப்போ ரொம்பவே நல்லாவே பார்த்துக்குறான்.”
“அதான் உன்னை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்காம இருக்கான். நீ இனி கிச்சன்ல உனக்கு பிடிச்சதைச் செய்யலாம். நம் குடும்பத்துல காலம் காலமா வீட்டுப் பொண்ணுங்க தான் சமைக்குறாங்க. அதனால நீ இனி கிச்சனுக்கு போகலாம். உன்னை யாரும் அனுமதிக்கலைன்னா என் கிட்ட சொல்லு, வம்சிக்கும் இனி நீ தான் சாப்பாடு பரிமாறணும்” என்று அவர் உரிமையாக கூறும்போதே அங்கு வந்து சேர்ந்தார் லட்சுமி. தன் மாமியார் ராதையின் பக்கம் இருப்பது தெரிந்து அவரின் மனது கொதித்தது.
ராதையும் பாட்டி சொன்னதைக் கேட்டு உள்ளேச் சென்று சமைக்க ஆரம்பித்தாள். காலையில் அனைவரும் என்ன சாப்பிடுவார்கள் என்பதை பாட்டியிடம் விசாரித்து, ராதை சமைக்கத் தொடங்கினாள்.
அவளுக்கு இந்த வீட்டில் சும்மா உட்கார்ந்து சாப்பிடுவது சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் நேற்று வம்சியின் அன்னை அவ்வாறு கூறிய வார்த்தைகள் அவளின் நெஞ்சைக் குத்தி காயப்படுத்தியது. லட்சுமியோ தன் கோபத்தை மாமியார், மாமனார் இருப்பதால் கட்டுப்படுத்திக் கொண்டார்.
அன்று காலை சாப்பிட வந்த சேதுராமன் மருமகள் சமைப்பதைப் பார்த்து ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி கொண்டார்.
தன் அறையில் எழுந்த வம்சிக்கு ராதை அங்கு இல்லை என்பதில் மனம் பதறியது.
“ஒருவேளை நான் அவளை அடிச்சதால நைட்டோடு நைட்டா எங்கேயாவது ஓடிட்டாளா?.. அப்படி என்னை மீறி அவளால எப்படி போக முடியும்… வெளிய தான் அவளுக்கு டைட் செக்யூரிட்டி வச்சிருக்கேனே” என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “அண்ணா, அண்ணி சமையல் சூப்பர்” என்று புன்னகையுடன் வந்து சொன்னாள் யசோதா.
தன் புருவத்தை ஆச்சரியமாகக் தூக்கியவன், “எனக்கு காஃபி வேணும் யசோ…” என்று நிறுத்தியவன், “ராதை தான் எடுத்துட்டு வரணும்” என்றான் அழுத்தமாக.
‘இவங்க ரொமான்ஸ்குள்ள நம்மளை அக்கப்போரா ஆக்கிடுவாங்க போல’ என்று மனதில் நினைத்தவள் பிரணவிற்கு கால் செய்ய வேண்டும் என்கிற யோசனையிலேயே கீழே சென்று ராதையிடம் வம்சி அவளை அழைத்ததாய் சொல்லிவிட்டுச் சென்றாள்.
பாட்டியின் அதட்டலால் லட்சுமி அடங்கி இருந்ததால் ராதை நிம்மதியாக சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் போது தான் யசோதா வம்சி காஃபி கேட்டு அழைத்ததாய்க் கூறினாள்.
“இன்னும் புருஷன் காஃபியே குடிக்கல, ஆனா இங்கே மகாராணி சாப்பிட்டு முடிச்சாச்சு. என்ன லட்சணமோ இதெல்லாம்” என்று சொல்லும் போது ராதைக்குக் குத்தியது.
“லட்சுமி என்ன பேசுற நீ? வம்சி எழுந்திருக்க லேட் ஆகலாம், அதுவரை ராதை பட்டினியாகத் தான் இருக்கணும்னு நீ நினைக்குறது முட்டாள்தனம்” என்று அவளுக்காக வாதாடினார் சேதுராமன்.
‘என்ன இது மொத்த குடும்பமே இவ பக்கம் இருக்கு’ என்று கடுப்பான லட்சுமி, அதன் பின் எதுவும் பேசாமல் அமைதியாய் சாப்பிட்டார்.
ஆனால் ராதையின் மனதில் தான் செய்தது தவறோ என்றே தோன்றியது. நேற்று இரவு சரியாக சாப்பிடாததின் தாக்கம் அவளுக்கு காலையில் மிகவுமே பசிக்க ஆரம்பித்தது. அதனால் வம்சி எழுந்தானா என்று கூட அவள் யோசிக்கவில்லை. தன் தப்பை உணர்ந்தவள் மடமடவென கை கழுவிவிட்டு வம்சிக்கு சுடச்சுட பில்டர் காஃபி போட்டு எடுத்துக்கொண்டுச் சென்றாள்.
அவள் அவனின் அறைக்குச் செல்லும் போதே வம்சி குளித்துவிட்டு ரெடியாகிக் கொண்டிருந்தான். “சாரி நான் காஃபி அப்போவே எடுத்துக்கிட்டு வந்திருக்கணும்” என்று உண்மையாக மன்னிப்புக் கேட்டாள். “ம்ம்” என்று மட்டும் கூறிவிட்டு காஃபியை பருகியவன் கீழே சாப்பிடச் சென்றான்.
இன்று ராதையே அவனுக்கு பரிமாறினாள். வம்சிக்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ராதைக்கு எண்ணமில்லை. ஆனால் பாட்டி தாத்தாவின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு, அவர்களின் மேல் அவள் வைத்த மரியாதையால் மட்டுமே ராதை வம்சிக்குப் பரிமாறினாள்.
வம்சிக்கோ நேற்று ராதை கூறிய வார்த்தைகள் ஆறாத வடுவாய் இருந்தது. தன்னை ஷிவானியைத் திருமணம் செய்யச் சொல்கிறாள் என்றால் அவளுக்காக நான் இருந்தாலும், அவள் என்னை ஒரு வேண்டாதவனாய் தான் நினைக்கிறாள்’ என்று கடுப்பானவன் அதை அனைவரும் முன்னர் காட்டாமல் அமைதியாகச் சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்தவுடன், “ராதை ஆபிஸ் கிளம்பு” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு எழுந்தான்.
“என்னடா நீ, அவளுக்கு ரெஸ்ட் குடுக்காம கம்பெனிக்கு வா னு சொல்ற?” என்று கேட்டார் பாட்டி.
“பாட்டி, என்னோட அழகான பொண்டாட்டியை நான் நாள் முழுசா பாத்துட்டே இருக்கணும்ல அதான்…” என்று கிண்டலடித்தபடி தன் பாட்டியின் கன்னத்தைக் கிள்ளினான்.
“அடேய் படவா, எனக்குத் தெரியும் உன் பொண்டாட்டி மேல நீ உயிரையே வைச்சிருக்கேன்னு” தன் பேரனை ஆசீர்வாதம் செய்வது போல் தலையில் கைவைத்தார்.
நடப்பவை அனைத்தையும் கண்ட ராதைக்கு வம்சி புதிதாகத் தெரிந்தான். ‘ஒருவேளை பாட்டி சொன்னது போல இவன் என்னைப் பழிவாங்காம நேசிக்குறானா?’ என்று யோசித்தவள், பாட்டி மற்றும் பேரனின் உரையாடலை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தாள்.
அன்று ஒரு அழகிய ஆரஞ்ச் வண்ண ஷிஃபான் சில்க் அணிந்தவள் நெற்றியில் குங்குமம் வைத்து பழக்கம் இல்லை என்பதால், அவள் அப்படியே தன் ஹான்ட் பேக்கை மாட்டிக்கொண்டு பாட்டி தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கியவள், அடுத்து தன் மாமனார், மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க நின்றாள்.
ராதைக்கு இந்த உலகத்தில் ரொம்ப பிடித்ததே படிப்பு தான். அப்படி இருக்கும் தருணத்தில் வம்சி தன்னை வீட்டில் அடைத்து கொடுமை படுத்துவான் என்று நினைத்தாள். ஆனால் அதற்கு மாறாக தன்னை அவன் ஆபிஸில் டெவலப்பராக எடுப்பான் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை.
அவ்வளவு நேரம் பாட்டியிடம் சந்தோஷமாக உரையாடியவனோ அங்கு நின்றுக் கொண்டிருந்த ராதையைப் பார்த்ததும் அவனின் முகம் இறுகியது.
ராதையின் முகத்தில் வேலைக்கு போகப் போகும் சந்தோஷம் அவளிடத்தில் பிரதிபலித்தது. ஆனால் வம்சியின் கண்ணில் பட்டது என்னவோ ராதையின் குங்குமம் வைக்காத நெற்றி மற்றும் சேலைக்குள் மறைந்த தாலி தான்.
அவன் முகம் கடுமையாக மாறியதை ராதை உணரவில்லை. வம்சியின் மனதில் உஷ்ண தீ எரிந்துக் கொண்டிருந்தது. அது சிறிது நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று பாவம் ராதைக்குத் தெரியவில்லை.
***
