அத்தியாயம் 59

அடுத்த நாள் ராதை எழும் போதே அவளுக்கு மனது படபடப்பாக இருந்தது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் அழுது கொண்டு அமர்ந்திருந்தவள் சோஃபாவில் அப்படியே உட்கார்ந்த வண்ணம் உறங்கியிருக்கிறாள். 

 

அடுத்த நாள் ராதை விழிக்கும் போதே மணி பத்தை நெருங்கி இருந்தது. “அய்யோ கடவுளே எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன்” என்று தன்னையே படபடப்போடு திட்டியவள் கீழே வேகமாகச் சென்று கிச்சனில் இருக்கும் லட்சுமியிடம், “அத்தை, அவருக்கு எத்தனை மணிக்கு பிளைட்” என்று படபடப்பாக கேட்டாள். 

 

“சாயந்தரம் மூனு மணிக்கு மா, ஆனால் இந்த பெங்களூர் டிராபிக் இருக்கே, அதனால இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவான்…” என்றவரிடம், “அத்தை நீங்க யாரும் ஏர்போர்ட்டிற்கு போகலையா?” என்று ஏக்கமாகக் கேட்ட மருமகளிடம், “வம்சி நிறைய தடவை வெளிநாடுகளுக்குப் பயணம் செஞ்சிருக்கான் மா, அதனால் அவன் ஏர்போர்ட்டிற்குக் கூட எங்களை வர விடமாட்டான்” என்றார். 

 

“அத்தை, அது வந்து… நான் அவர் கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று இழுத்தவளின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்ட லட்சுமி, “நீ குளிச்சிட்டு முதல்ல சாப்பிடும்மா, அவன் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் மேல ஆகும்” என்றார்.

 

மாமியார் கூறிய பின்னர் மடமடவென குளித்த ராதை ஒரு அழகிய பச்சை வண்ண பிளைன் சேலை உடுத்தி, அதற்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் அணிந்து தன் இரு புருவங்களுக்கு மத்தியில் பச்சை வண்ண சாந்து பொட்டை வைத்தவள், பூஜை அறைக்குச் சென்று குங்குமத்தைத் தன் நெற்றியில் வைத்தாள். வம்சி கோவிலில் முதல் முறை தன் நெற்றியில் குங்குமம் இட்டதை நினைத்துப் பார்த்தாள். 

 

கீழே சென்ற ராதை அங்கு வம்சி இல்லை என்றவுடன் அங்கு அமர்ந்திருந்த பாட்டியிடம், “அவர் எங்கே பாட்டி?” என்று பரிதவிப்புடன் கேட்டாள். 

 

“வம்சி குளிச்சிட்டு இருக்கான்மா, நீ போய் சாப்பிடு” என்ற பாட்டியிடம், “சரி” என்று சொல்லிவிட்டு, டைனிங் டேபிளில் வம்சியை எதிர்பார்த்துக் கொண்டே இரண்டு இட்லிகளைக் கடமைக்கு என்றே உண்டவள், வம்சியின் அறை எப்போது திறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதே அவனின் அறைக் கதவு திறக்கப்பட்டது. 

 

ஆனால் அதிலிருந்து வெளியே வந்தது சேதுராமன் மற்றும் லட்சுமி. அவர்களைக் கண்ட பின் தாமாக எழுந்த ராதையை, “நீ உள்ளே போ மா, வம்சி கிளம்பிட்டு இருக்கான்” என்று சொன்னவுடன் வேகமாக கையைக் கழுவிவிட்டு அரைகுறையாக மூடப்பட்டிருந்த கதவின் பக்கத்தில் நின்றவள், கதவைத் தட்டிவிட்டு உள்ளே போலாமா இல்லை அப்படியே போலாமா என்று தனக்குள் மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாள். 

 

அங்கே குழந்தையுடன் வந்த யசோதா மற்றும் பிரணவ், “என்ன சிஸ்டர், அத்தான் கிளம்புறாருனு ஒரே ஃபீலிங்கா?” என்று கேட்டான். 

 

மெலிதாக புன்னகைக்க முயற்சித்த ராதைக்கு மனது வெகுவாக வலித்தது. இன்னும் சிறிது நேரத்தில் வம்சி தன்னை விட்டு எங்கோ செல்ல போகிறான். வம்சி இல்லாமல் இருக்கும் தன் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாதவள், அதன் பெயர் காதல் என்று அறியவில்லை. 

 

பிரணவ் மற்றும் யசோதா குழந்தையுடன் உள்ளே செல்லும் போதே அவர்களின் பின்னால் சென்றாள் ராதை. “அண்ணா இந்தாங்க, அம்மா தர சொன்னாங்க” என்று ஏதோ ஒரு பொருளை வம்சியின் கையில் யசோதா கொடுத்த போது தான் அங்கு ராதை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான் வம்சி. 

 

‘இவ எதுக்கு உள்ள வந்து நின்னுட்டு இருக்கா?’ என்று மனதில் கடுப்புடன் தன் பொருட்களை அவன் அடுக்கிக் கொண்டு இருக்கும் போதே, “நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என தயக்கம் கலந்த தடுமாற்றத்துடன் கஷ்டப்பட்து தைரியத்தை வரவழைத்துக் கேட்டாள் ராதை. 

 

“சரி அண்ணா, நாங்க வெளியே இருக்கோம்” என்று பிரணவை அழைத்துக் கொண்டு  வெளியே சென்று விட்டாள் யசோதா.

 

“கண்டிப்பா நீங்க லண்டன் போகணுமா?” என்று கேட்ட ராதையின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கக் காத்துக் கொண்டு இருந்தது.

 

“நான் லண்டன் போறதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்று இம்முறை தன் உடைமைகளை அடுக்கிக் கொண்டு இருந்தவன் அதை விட்டு ராதையிடம் நேரடியாகத் திரும்பி கேட்டான்.

 

“என்னைப் பத்தி நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?” என்று கலங்கிய கண்களுடன் அவனை எதிர்கொண்ட போது, 

 

“உன்னைப் பத்தி யோசிச்சு பார்த்ததால் தானே நான் கிளம்புறேன்… நான் கிளம்புன அப்புறம் நீ தாராளமாக கோயம்புத்தூர் போயிடலாம்” என்று முடித்தவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், “அப்போ அவ்வளவு தானா?” என்று கேட்ட ராதை கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வந்துவிட்டது. 

 

“வேற என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்குற? உனக்கு டைவர்ஸ் வேண்டும் னா அதை நீ புரோசீட் பண்ணு, நான் சைன் பண்ணித் தரேன்” என்று கடுப்பாக சொன்னவன் தன் தலையில் தன் ஒரு கையை வைத்து தடவியபடியே, 

 

“இன்னும் எதுக்கு இங்க நிக்குற? அதான் நீ நினைச்சது கிடைக்கும்னு சொல்லிட்டேன்ல இப்போ கிளம்பு” என்று முகத்தில் அறைந்தாற்போல் அவன் கூறிய பின்னர் ராதைக்கு அழுகை புரண்டு கொண்டு வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வெளியே வந்தவள் தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்தி கத்தி அழ ஆரம்பித்தாள்.

 

“ஏன் வம்சி என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா? விவாகரத்து வரைக்கும் பேசிட்டீங்க… ஆமா உங்களுக்கு நம்பிக்கை வர அளவுக்கு நான் எதுவுமே பண்ணலையே” என்றபடி அழுது கொண்டிருந்தாள். 

 

கதவில் சாய்ந்து கொண்டு அப்படியே கீழே அமர்ந்து அழுதவள் நேரம் சென்றதைக் கவனிக்கவில்லை. கீழே வம்சியின் கார் கிளம்பும் சத்தம் கேட்டு மடமடவென கீழே ஓடிவந்தாள். 

 

ஹாலில் யாரும் இல்லை என்பதை உணர்ந்து வெளியே ஓடிய ராதை, குடும்பத்தினர் அனைவரும் வெளியே இருப்பதைக் கண்டு, “அத்தை அவர் எங்கே?” என்று பதற்றத்தோடு அழுது கொண்டே கேட்டாள்.

 

“வம்சி இப்போ தான் கிளம்புனான்மா, உன்னை அழைக்க வேண்டாம்னு சொல்லிட்டான். நீ வேற அழுதுட்டே உன் ரூம்க்கு போனனு யசோதா சொன்னாள். கவலைப்படாத மா, வம்சி சீக்கிரம் வந்திடுவான். அவனை நீ ரொம்ப மிஸ் பண்ணுவனு தான் அவனே உன்னை கிளம்பும் போது அழைக்க வேண்டாம்னு சொல்லிட்டான் போல” என்ற லட்சுமிடம், “அத்தை நான் அவரை மிஸ் பண்ணிட்டேன்…!” என்று கதறிக் கதறி அழ ஆரம்பித்தாள்.

 

வீட்டினர் அனைவருக்கும் ராதை ஏன் இப்படி அழுகிறாள் என்று புரியவில்லை. 

 

“அத்தை நான் அவரை இப்போ உடனே பார்க்கணும்… இப்போவே அவர்கிட்ட பேசணும்” என்று அழுது அடம்பிடித்த மருமகளை அதிரச்சியாகப் பார்த்த லட்சுமி, 

 

“என்னம்மா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா? நீங்கள் ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்கன்னு தானே நாங்க நினைச்சோம்” என்று அவர் பதறினார்.

 

“ஆமா அத்தை, நான் தான் பாவி உங்கள் மகனோட காதலைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முயற்சி பண்ணவே இல்லை… நான் அவரை உடனே பார்த்து பேசணும்” என்று அழுது புலம்பியவளிடம், “சரி ராதை, நீ உடனே நம்ம டிரைவர் சங்கர் கூட கார்ல கிளம்பு, மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்ற காந்திமதி பாட்டியை கேவலுடன் கட்டிக்கொண்ட ராதை உடனே காரில் கிளம்பினாள். 

 

காரில் ஏறிய ராதை அழுதுகொண்டே இருந்தாள். வம்சியிடம் கால் செய்தாவது முதலில் பேசலாம் என்று நினைத்த போது தான் அவசரத்தில் ஃபோனை வீட்டில் வைத்துவிட்டோம் என்று உணர்ந்தவள், “அண்ணா… உங்க ஃபோன் கொஞ்சம் தரீங்களா?” என்று கெஞ்சுதலாகக் கேட்ட ராதையை டிரைவரே பாவமாகத் தான் பார்த்தார். 

 

அவரிடம் ஃபோனை பெற்றுக் கொண்டு, “அண்ணா அவரோட நம்பர் என்னனு பதிவு பண்ணிருக்கீங்க?” என்று கேட்டாள். 

 

“அம்மா, அது வந்து… வம்சி ஐய்யா நம்பர் என்கிட்ட இல்லைம்மா, உங்களுக்கு ஐயா நம்பர் தெரியும்ல, நீங்க அதுல டையல் பண்ணிக்கோங்க மா” என்றவரிடம் என்ன சொல்வது தன் கணவனின் நம்பர் தனக்குத் தெரியாது என்றா? 

 

அமைதியாக அமர்ந்த ராதை தன் தலையில் கைவைத்து, “அண்ணா கொஞ்சம் வேகமா போங்க ப்ளிஸ்” என்று அழுகையைத் தனக்கு மட்டும் கேட்குமாறு அழுதுகொண்டிருந்தாள். 

 

“யசோதா, ராதையும் வம்சியும் சந்தோஷமா இருக்காங்கனு தானமா நான் நினைச்சேன்” என்று கவலையாகக் கேட்ட லட்சுமியிடம், “நான் வேணும்னா வம்சிக்கு கால் பண்ணி ராதை பின்னாடி வரான்னு சொல்லவா?” என்று கேட்டார். 

 

“இல்லம்மா, நம்ம நடுவுல போய் எதுவும் குழப்ப வேண்டாம். நீங்க டிரைவர் அண்ணாக்கு மட்டும் கால் பண்ணி சொல்லுங்க, அங்கே நிலைமை பார்த்து ஏதாவது பிரச்சனைனா நமக்கு கால் பண்ண சொல்லுங்க” என்றாள் யசோதா.

 

“ஆமா லட்சமி, யசோ சொன்ன மாதிரி பண்ணு” என்று சேதுராமன் கூறிய பின்னர் லட்சுமி டிரைவர் சங்கருக்கு கால் செய்து நிலைமையைப் பார்த்து கால் செய்யுமாறு கூறினார். 

 

இந்த உரையாடல் எதையுமே ராதை கவனிக்கும் மனநிலையில் இல்லை, எப்போது ஏர்ப்போர்ட் வரும் என்றே நினைத்துக் கொண்டிருந்தாள். 

 

“அண்ணா, அவங்க எப்போ கிளம்புனாங்க?” என்று பரிதவிப்பாய்க் கேட்டவளிடம், “ராதைம்மா, வம்சி ஐயா கிளம்பி அஞ்சு நிமிஷத்துல நம்ம கிளம்பிட்டோம். அதனால கவலைப்படாமல் வாங்க, சீக்கிரம் ஐயாவை பார்த்திடலாம்” என்றவருக்கோ கண்டிப்பாக ஏதோ பிரச்சனை அவசரம் என்று புரிந்தது அதனால் அவரும் முடிந்த அளவு வேகமாகச் சென்று கொண்டிருந்தார். 

 

காருக்குள் இருந்த வம்சி இறுகிய முகத்துடனே சென்றுகொண்டிருந்தான். டிரைவரோடு சென்ற வம்சி தன் லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மனதில் ராதை கடைசி வரை தன்னை நிராகரித்துவிட்டாள் என்ற கோபத்திலேயே அவனின் எண்ண ஓட்டம் இருந்தது. 

 

ஏர்போர்ட் அடைந்த வம்சி உள்ளே நுழையும் போதே ராதை வந்த காரும் ஏர்போர்ட்டிற்குள் நுழைந்தது. வம்சி நுழைவாயிலில் நுழையும் போதே காரில் இருந்து இறங்கி ஓடிச்சென்ற ராதை வம்சியின் முன்னே சென்று மூச்சு வாங்க, “உங்கக்கிட்ட நான் பேசண்ம்” என்றாள் அழுத கண்களோடு. 

 

“நீ எப்படி ராதை இங்கே?” என்று அதிர்ச்சியான வம்சி, முகத்தில் அதை காட்டாமல் சாதாரணமாக வைத்துக்கொண்டு கேட்டான். 

 

“ஏங்க ப்ளீஸ் நீங்க லண்டன் போகக்கூடாது… உங்களை நான் போக விடமாட்டேன்…” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. 

 

“ஏன் போகக்கூடாது?” என்று மார்புக்கு குறுக்கே தன் கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டவனிடம், “ஏன்னா… நான் உங்களை மிஸ் பண்ணுவேன், நீங்க என்னோட வாழ்க்கையில் இருக்கணும். நீங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க கூட முடியாது…” என் ஏர்போர்ட் என்று கூட பார்க்காமல் அழுதவளிடம், “எனக்கு புரியல?” என்றான். உண்மையாகவே அவனுக்கு ராதை என்ன தான் மனதில் நினைத்து பேசுகிறாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. 

 

“நீங்க என் மனசுல இருக்கீங்க வம்சி… நான் உங்களை உயிருக்கு உயிரா காதலிக்குறேன்! நீங்க இல்லாமல் என்னால் இனி ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது… இந்த உலகத்துல என் மேல உயிரையே வைச்சு இருந்தது பாட்டினு மட்டும் தான் நான் இத்தனை வருஷம் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் நீங்க எனக்காக உங்கள் உயிரை கூட கொடுக்குற அளவுக்கு என் மேல காதலை வெச்சிருக்கீங்க…” 

 

“உங்களை இவ்வளவு நாள் புரிஞ்சிக்காம இருந்த நான் ஒரு முட்டாள். எனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை ஏத்துக்காம, உங்களுடைய காதலைப் புரிஞ்சிக்காம, இவ்வளவு நாள் நான் லூசா இருந்துருக்கேன்… இனி நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது… இந்த ராதையுடைய மனசுல வம்சி தான்… எப்போவுமே வம்சி மட்டும் தான்” என்று கதறி அழுத ராதையைப் பார்த்த வம்சியின் கண்களில் அத்தனை காதல்.. அவனின் மனமோ நடப்பவை அனைத்தையும் ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டு ருக்க அடுத்த கனமே அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. இத்தனை நாட்களாக அவள் மீது வைத்திருந்த அந்த ஆழமான காதலை அவனின் இந்த ஒற்றை இறுக்கமான அணைப்பே பெண்ணவளுக்கு உணர்த்தியது.. 

 

“ஐ லவ் யூ வம்சி… இதுக்கு மேல என் காதலை உங்ககிட்ட சொல்லாம இருந்தா என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே அவளின் வாயை மூடியவன், 

 

“உன் வம்சி உன் கூட இருக்குற போது இந்த மாதிரி பேசாதடி, உன்னுடைய இந்த வார்த்தைக்காகத் தானே இத்தனை நாள் நான் காத்துக்கிட்டு இருந்தேன். நீ எனக்கானவ ராதை, அதனால தான் கடவுள் நம்ம இரண்டு பேருக்கும் பெயர்லயே முடிச்சு போட்டுருக்காரு” என்றபடி அவளை அணைத்துக் கொண்டே கூறியவன், அவளுடைய நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 

“லண்டனுக்கு செல்லும் பயணிகள் போர்டிங் பாஸ் வாங்க கௌன்டர் இரண்டிற்கு வரலாம்” என்ற அறிக்கையைக் கேட்ட போது வம்சியிடமிருந்து தன்னை பிரித்த ராதை தவிப்போடு அவனைப் பார்த்தாள்.

 

“கவலைப்படாத டி, இனி லண்டன்ல நான் காலை பதிச்சா, அது உன்னோட சேர்ந்து மட்டும் தான்” என்றவனோ ராதையை மறுபடியும் தன்னுடைய நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

“ரெண்டு வருஷம் உன் மேல் வெச்சுருந்த காதல் மொத்தத்தையும் இனி உன்கிட்ட காட்டணும்… ஐ லவ் யூ மிஸஸ் கோமகள் ராதை வம்சி வேதந்த் கிருஷ்ணா” என்று ராதையின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். 

 

“இது பப்ளிக் பிளேஸ் ராதை, எல்லாருக்கும் நம்ம காதல் காட்சிப் பொருளா இருக்க வேண்டாம், நான் உன்கிட்ட வைச்சு இருக்குற காதலைப் பார்க்க வேண்டியது நீ மட்டும் தான்” என்று ராதையைத் தன் கைகளோடு கோர்த்துக்கொண்டு வண்டியில் ஏறும்போதே சங்கர் எண்ணிற்கு லட்சமி கால் செய்தார்.

 

“ஐயா, லட்சமி அம்மா கால் பண்றாங்க. உங்களைப் பத்தித் தான் கேட்பாங்க…” என்று அவர் தயங்கிக் கூறும் போதே அவரிடம் இருந்து ஃபோனை வாங்கியவன், 

 

“அம்மா, உங்களுக்கு சீக்கிரமே நல்ல செய்தி சொல்லிடுவோம். ஆரத்தி தட்டை ரெடியா வையுங்க. நானும் என்னோட லவ்வபிள் பொண்டாட்டியும் வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம்” என்று கால்லை கட் செய்தான். 

 

லட்சமியின் கண்களில் சந்தோஷ கண்ணீர் பெருகியது இதை வீட்டில் அனைவரிடமும் கூறியபின்னர் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். 

 

காரில் ஏறிய ராதை வம்சியைப் பார்த்து, “காதல் ஒரு அற்புதமான விஷயம்னு உங்களைக் காதலிச்ச அப்புறம் தான் நான் ஃபீல் பண்றேன்” என்றபடி அவனின் கண்களைப் பார்த்தவள், 

 

“இந்த உலகத்துல நம்மல உயிரா நினைச்சு காதலிக்குறவங்க கூட வாழ்ந்தா, வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்னு உங்களோட வாழ்ந்து உணர்ந்துக்கிட்டு இருக்கேன். இந்த ராதையோட மனசு என்னிக்குமே இந்த வம்சிக்குத் தான் சொந்தம்!” என்று வம்சியின் தோள்களில் சாய்ந்த மனைவியின் கையில் காதலுடன் முத்தமிட்டான் வம்சி. 

 

இவ்வாறு வம்சி ராதையின் காதல் வாழ்க்கை அழகாய் இனிதாகத் தொடங்கியது. 

 

ராதை மனதில் வம்சி…

 

சுபம். 

 ~அனு ஜெய்

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!