அத்தியாயம் 33
வம்சி கூறியதைக் கேட்ட ராதை அழுதுக் கொண்டே பேசாமல் நின்றிருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் தன் இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், பின் பொறுமை இழந்து தன் சுழற்நாற்காலியை விட்டு எழுந்து தன் வேக நடையுடன் ராதையின் பக்கத்தில் சென்று, ஒரு நிமிடம் அவளின் கண்களைப் பார்த்தான்.
அதே சோகம், அதே அழுகையில் இருந்தவளை, தன் இரு கைகளில் ஏந்தி வேகமாக வெளியே நடந்தான். வம்சி இவ்வாறு செய்வான் என்று நினைக்காத ராதை, அவனின் இந்தச் திடீர் செய்கையில் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றாள்.
பின் சுயம் பெற்றவளாய், “சார் ப்ளீஸ் சார்… என்னை விட்டுடுங்க… நான் எங்கேயாவது போய்டுறேன்” என்று விடாதுஅழுதவளிடம்,
“இப்போ மட்டும் நீ உன் அழுகையை நிறுத்தாம அமைதியா வராம இருந்தா, என்னோட கோப முகத்தைத் தான் நீ பார்ப்ப” என்றபடி அவளை முறைத்தவன், அவளை தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பிடித்தபடி நடந்துவந்தவன் அனைவரும் இருக்கும் வெயிட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான்.
‘ராதை போய் ரொம்ப நேரமாகுது, என்ன இன்னும் அவளைக் காணுமே’ என்று பரிதவிப்பாய் காத்துக்கொண்டிருந்த வனிதா கண்டது என்னவோ வம்சியின் இரு கைகளில் ஏந்தியபடி வந்த ராதையை தான்… அவளைத் தான் காண்கிறோம் என்பதை நம்ப முடியாமல் இருந்த வனிதாவின் வாய் அதிர்ச்சியில் திறந்தே இருந்தது.
‘ஐய்யயோ! இவன் என்ன படத்துல ஹீரோ, ஹீரோயினைத் தூக்கிட்டு வர மாதிரி வரானே… இவன் எப்படி இங்க?’ என்று பயத்துடன் யோசிக்கும் போதே அவளை நோக்கி வந்தான் வம்சி. ராதை அவனிடம் இருந்து விடுபட முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள். அங்கே இதைப் பார்த்த தாரிகா மற்றும் பிரணவ் கூட அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றார்கள்.
“பாஸ் என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு? ஏதாவது அடி பட்டிருச்சா? நீங்க ஏன் பாஸ் இதெல்லாம் செய்றீங்க? அந்தப் பொண்ணை என்கிட்ட கொடுங்க நான் தூக்கிட்டு வரேன்” என்றான் பிரணவ்.
அவன் சொன்னதைக் கேட்டவனோ ராதையை இறக்கிவிட்டு அவளை ஒரு கையில் பிடித்தபடி பிரணவை நோக்கி அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.
“யூ யூஸ்லெஸ் யாரு யாரை தூக்குறது? ஷீ இஸ் மை வைஃப்… உனக்கு இதெல்லாம் தெரியாதுன்றதால மட்டும் தான் உன்னை இப்போ சும்மா விடுறேன்” என்றான்.
இதையெல்லாம் வாயைக் கூட மூடாமல் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த வனிதாவிடம், “நீதான இவளுக்கு பாடிகார்ட் மிஸ் வனிதா… இவளை எப்படி என்கிட்ட கொண்டு வந்தேன் பார்த்தியா…?” என்றான் கர்வமாக.
“என்னை என்ன உன்னோட முட்டாள், சுயநலவாதி பிரகாஷ் அத்தான்னு நினைச்சிட்டியா! நான் வம்சி… அழிச்சிடுவேன்! இனி அந்த கடவுளே நினைச்சாலும் இவ என்கூட தான் இருப்பா. இதை உன் அத்தை பையன்கிட்ட போய்ச் சொல்லு” என்றான்.
அடி வாங்கி பாவமாய் நின்றுக் கொண்டிருந்த பிரணவ்விடம், “பிரணவ்! இவளோட பேர் வனிதா, இவளை அவளோட ஹாஸ்டல்ல டிராப் பண்ணிட்டு ராதையோட திங்க்ஸை வாங்கி என் வீட்டுல வந்து கொடுத்திடு” என்றான் கட்டளையாக.
“அப்படியே தாரிகாவையும் உன் கூட அழைச்சிட்டு போய் ஒரு நல்ல டெக்ஸ்டைல்ஸ்ல பத்து சேரி, சல்வார் செட் வாங்கிட்டு என்னோட வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் கொடுத்திட்டு தாரிகாவை அவள் வீட்டுல விட்டுடு… அப்புறம் தான் நீ வீட்டுக்கு போகணும்” என்று கட்டளை இட்டவன், ராதையின் கையை இறுக்கிப் பிடித்து தன் காரை நோக்கி சென்றான்.
காரில் ஏறாமல் கெஞ்சியபடி முரண்டு பிடித்தவளை தூக்கி தனக்கு பக்கத்து சீட்டில் அமரவைத்து அவனும் ஏறி காரை ஸ்டார்ட் செய்து ஓட்டத் தொடங்கினான்.
வம்சியின் கார் நேராக HSR Layout இல் இருக்கும் அவனுடைய வீட்டிற்குச் சென்றது.
ராதையை காரிலேயே வைத்து பூட்டி விட்டு, தான் மட்டும் கீழே இறங்கி வீட்டிற்குள் சென்றான். அவன் சென்ற நேரம் அனைவரும் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“ரொம்ப நல்லதா போச்சு எல்லாரும் இருக்கீங்க…” என்றபடி சோஃபாவில் அமர்ந்தவன், “நான் என்னோட பொண்டாட்டி ராதையை கூட்டிட்டு வந்திருக்கேன். அவளுக்கு அவளோட பாட்டி இறந்த விஷயம் தெரியக் கூடாது. அவக்கிட்ட அதை எப்போ சொல்லணும்னு எனக்குத் தெரியும்” என்று இடத்தை விட்டு எழுந்தான்.
“நீ பண்ற எல்லாத்துக்கும் என்ன அர்த்தம் வம்சி?” என்று கேட்ட சேதுராமனிடம் திரும்பிய வம்சி, “அப்பா நான் என்ன பண்றேன், அதுக்கு என்ன அர்த்தம்னு ஆராயாம சொன்னதைப் புரிஞ்சிக்கோங்க” என்று வெளியேச் சென்றவன் சிறிது நேரத்தில் ராதையோடு உள்ளே வந்தான்.
“வம்சி நில்லு…” என்று கூறிய விஸ்வநாதன் தன் மனைவி காந்திமதியிடம் கண்ணால் செய்கை செய்தார்.
அதைப் புரிந்தவர், “லட்சுமி மருமகளுக்கு ஆரத்தி எடு” என்று கட்டளை இட்டவரை அதிர்ந்து பார்த்த லட்சுமி, “என்னால கண்டதுக்கெல்லாம் ஆரத்தி எடுக்க முடியாது. என் மருமக ஷிவானி தான்… அதான் வேதந்த்தே அன்னிக்கு சொன்னானே, ஷிவானி அவனுக்காக காத்திருக்கா” என்றுவிட்டு உள்ளேச் சென்றார்.
வம்சி, “பாட்டி, இவளுக்கு ஆரத்தி எல்லாம் தேவை இல்லை. இந்த மகாராணிக்கு மகுடம் வச்சு தான் உள்ளே அழைக்கணுமா..? உள்ளே வா” என ராதையிடம் அதட்டியவன், உள்ளேச் சென்ற தன் அம்மாவை முறைத்தான்.
விஸ்வநாதன் மற்றும் காந்திமதி ராதையின் அருகில் சென்றனர். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது ராதை அவர்களைப் பார்த்தாலே பயப்படுகிறாள் என்று.
இராஜேஸ்வரி பாட்டி இறந்த பின்னர் மைதிலி ராதைக்காக இன்று காலை போராடியது எல்லாமே இவர்கள் இருவரையும் பாதித்தது. ஏனோ பிடிக்காத ராதையின் மேல் இப்போது பரிதாபம் கூடியது.
யசோதாவிற்கும் ராதையின் மேல் பரிதாபம் இருந்தது. அதனால் அவளும் தன் பாட்டியுடன் சேர்ந்து ராதையை நோக்கி வந்தாள்.
“ராதை வாம்மா, முதல்ல குளிச்சிட்டு வந்து சாப்பிடு” என்ற காந்திமதி யசோதாவிடம், ராதையை அவளின் அறைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்.
இவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கும் போதே பிரணவ் ராதையின் உடைமைகளோடு மற்றும் புது ஆடைகளோடு வம்சியின் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனைக் கண்ட யசோதா, “வாங்க பிரணவ், இப்போ தான் எங்க வீட்டுக்கு வரதுக்கு உங்களுக்கு வழி தெரிஞ்சுதா?” என்று கேட்டாள்.
“அம்மா தாயே, உன்னை காதலிச்சதுக்கு இன்னும் உன் அண்ணன்கிட்ட எவ்வளவு அடி வாங்கக் போறேன்னு எனக்கு தெரியலை. இந்தா உன் திடீர் அண்ணியுடைய லக்கேஜ், புது டிரெஸ்… நான் வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பேசறேன். இப்போ கிளம்புறேன்” என்று யாரும் அங்கு இல்லாதபோதே கிளம்பிவிட்டான் பிரணவ்.
ராதை குளித்து முடித்துவிட்டு ஒரு சுடிதாரை அணிந்து வந்த போது அவளுக்கான உணவுடன் யசோதா உட்கார்ந்திருந்தாள்.
“குளிச்சிட்டீங்களா, வாங்க வந்து சாப்பிடுங்க” என்று இடத்தை விட்டு நகர்ந்த யசோதா ராதைக்கு தனிமை கொடுத்துவிட்டு தன்னுடைய பாட்டியின் அறைக்குச் சென்றாள்.
தங்கள் அறையில் ஓய்வாக அமர்ந்திருந்த பாட்டி, தாத்தாவிடம், “பாட்டி… தாத்தா… அந்தப் பெண்ணைப் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கு. அவளுக்குனு இருந்த பாட்டியும் இப்போ இல்லை” என்று அவள் சொல்லும் போதே உள்ளே வந்தான் வம்சி.
“யசோ ராதையை ரெடி பண்ணி என் ரூம்க்கு அனுப்பு” என்று சொல்லிவிட்டு வெளியேச் சென்றவனை அதிர்ச்சியாகப் பார்த்தனர் இவர்கள் மூவரும்.
வம்சியின் மனதில் என்ன ஓடிக் கொண்டு இருக்கிறது என்பதை ஒருவராலும் கணிக்க முடியவில்லை. வம்சியின் மனதில் என்னதான் இருக்கிறது?
***
