அத்தியாயம் 1

அத்தியாயம் 1

அத்தியாயம் 1

 

வான் எங்கும் கரு மேகங்கள் சூழ, இடியுடன் மின்னல் கூடும் அந்த வேலையில் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில், யாரும் உதவிக்குக் கூட இல்லாமல் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி. 

 

“ஏன்மா, உன் புருஷன் பேரும் செல் நம்பரும் கொடுமா, அட்டென்டர் இல்லாம இங்க யாரும் இருக்கக்கூடாது” என்றாள் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு செவிலியர் பெண். 

 

அப்போது கோயம்புத்தூரின் சூலூரில் இருக்கும் அந்தப் பிரபலமான துணி கம்பெனியின் முதலாளி இருக்கையில் அமர்ந்திருக்கும் விஜயகுமாருக்கு கால் வந்தது. 

 

“ஹலோ விஜயகுமார் ஸ்பீக்கிங்!” என்று கம்பீரமாகக் கூறினான்  அவன்.

 

“ஹலோ சார், நான் AGK ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்றேன். சரஸ்வதினு இங்க ஒருத்தங்க பிரசவ வலில அட்மிட் ஆயிருக்காங்க. அவங்களுக்கு அட்டென்டர்னு யாருமே இல்ல. உங்க நம்பர் கொடுத்தாங்க, கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்” என்று மருத்துவமனையின் முகவரியைக் கொடுத்தாள் அந்த செவிலியர் பெண். 

 

“நான் உடனே வந்திடறேன் மேடம், சரஸ்வதியை பத்திரமா பாத்துக்கோங்க” என்றான் விஜயகுமார் பதற்றமாக. 

 

“அம்மா நீ கொஞ்ச நேரம் வலிய தாங்கிக்கோ, உனக்கு இன்னும் பிரசவ வலி வரலை. அந்த அய்யாகிட்ட பேசிட்டேன். அவர் வந்துட்டு இருக்காரு” என்று அவளுக்கு ஆறுதலாக இருந்தாள் அந்தச் செவிலிப் பெண். 

 

சிறிது நேரத்தில் சரஸ்வதிக்கு பிரசவ வலி வர ஆரம்பித்தது. அவளை பிரசவ அறைக்குக் கொண்டுச் சென்றார்கள். 

 

“அம்மா… வலி தாங்க முடியலையே… பிரபா ஏன் என்னை இப்படி தனியா தவிக்க விட்டுப் போயிட்டீங்க…” என்று பிரசவ வலியிலும் ஏதோ முனங்கினாள். 

 

கடும் மழை இருந்ததால் விஜயகுமார் சாலை நெரிசலில் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டான். பின் ஒருவாறு மருத்துவமனை  வந்தடைந்தான். ரிசப்ஷனில் சரஸ்வதி பெயரைக் குறிப்பிட்டு அவள் இருக்கும் டெலிவரி வார்ட்டுக்கு பதறி அடித்துக் கொண்டு விரைந்தான். அங்கே பரபரப்பாக இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்தார்கள். 

 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர், “நீங்க மிஸஸ் சரஸ்வதி பிரபாகரனோட அட்டென்டரா?” என்று சந்தேகமாக கேட்டார். 

 

விஜயகுமார், “ஆமா டாக்டர், அவளுக்கு எப்படி இருக்கு?” என்று பதற்றமாகக் கேட்டான். 

 

“அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு, குழந்தை நலமா இருக்கு. ஆனா, மிஸஸ் சரஸ்வதி ரொம்ப கிரிடிக்கலா இருக்காங்க! அவங்களுக்கு ஏற்கனவே வீசிங் இருக்கு. இப்போ பிரஷர் வேற ரொம்ப லோவா இருக்கு. ஐ அம் வெரி சாரி டு சே, அவங்க பல்ஸ் வேற இறங்கிட்டே இருக்கு. உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. சோ ப்ளிஸ்…” என கதவின் பக்கம் கையைக் காட்டினார் அந்த டாக்டர் பெண்மணி. 

 

டாக்டர் சொன்ன விஷயத்தில் அதிர்ந்த விஜயகுமார் பயத்தோடு உள்ளேச் சென்றான். அவனைப் பார்த்துச் சிறு புன்னகை செய்த சரஸ்வதி, “அத்தான், எனக்கு என்னமோ பண்ணுது… நான் உயிரோட இருக்க போறதில்லனு நினைக்குறேன்… நானும் பிரபாகிட்ட போகப் போறேன்” என்று அந்த நிலையிலும் கஷ்டப்பட்டு முயன்று கை எடுத்துக் கும்பிட்டாள் சரஸ்வதி. 

 

“எங்களுடைய குழந்தை இனிமே… உங்க பொறுப்பு!” என்று அவள் கூறி முடிக்கும் போது அவளுடைய இதயத்துடிப்பு நின்றுவிட்டது.

 

“அய்யோ சரஸ்வதி… போயிட்டியே மா, எப்படி துறுதுறுனு சுத்திட்டு இருந்த பொண்ணு நீ, பிரபா மாதிரி நீயும் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டியே” என்று அழுது கதறியவன், அங்கு அழுதுக் கொண்டிருந்த பச்சைக் குழந்தையை அழுதுக் கொண்டே தன் கைகளால் ஏந்தினான். 

 

“இனிமேல் நீயும் என்னுடைய பொண்ணு, இது பிரபா மேல சத்தியம்!” என்று உறுதியாக சொன்னவர், செவிலியர் உதவியோடு குழந்தையைத் தன் வீட்டிற்கு என்பதை விட, அந்த பங்களாவிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். 

 

வீடுவரை வருவதற்கு உதவிய அந்தச் செவிலியர் பெண்மணிக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து நன்றி தெரிவித்துவிட்டு, குழந்தையை உள்ளே கொண்டுச் சென்றான் விஜயகுமார். 

 

அவரை முதலில் கண்ட அவருடைய அம்மா இராஜேஸ்வரி, “விஜய், யார் குழந்தை இது? நீ ஏன் தூக்கிட்டு வர?” என அதிகாரமாகக் கேட்டார். 

 

“இவ நம்மளோட குடும்பத்து வாரிசு ம்மா. பிரபாகருக்கும் சரஸ்வதிக்கும் பிறந்த பெண் குழந்தை” என்று கூறும் போதே அந்தக் குழந்தை பசியில் அழத் தொடங்கியது. 

 

“மைதிலி.. வா சீக்கிரம்” என்று தன் மனைவியைச் சத்தமாக அழைத்தவன், “குழந்தைக்கு பசிக்குது முதல்ல பாலைக் கொடு” என்று அவளிடம் ஒப்படைத்தான். 

 

“அம்மா, நம்ம பிரபாகர் நம்ம வீட்டை எதிர்த்து அந்த பொண்ணை காதல் திருமணம் செஞ்ஜான்னு அவனை நம்ம குடும்பத்துல இருந்து ஒதுக்கி வெச்சிட்டீங்க. ஒரு விபத்துல ஆறு மாசத்துக்கு  முன்னாடி அவன் இறந்த போது கூட உங்க மனசு இறங்கலை ம்மா. அந்தப் பொண்ணு அவன் இறந்த அப்புறம் உதவிக்காகக் கூட நம்ம  வீட்டு வாசலை மிதிக்கல. அவ அனாதை பெண்ணா இருந்தாலும் படிச்ச பொண்ணு. துணிச்சலான பொண்ணு. குழந்தை பிறக்குற  முந்தின நாள் வரைக்கும் கூட அவளே வேலைக்குப் போய் அவளைப் பாதுகாத்துருக்கா, இப்போ இந்தக் குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு அவளும் பிரபாகரனோடவே போய்ட்டா ம்மா…” என்று கதறி கதறி அழுதான். 

 

சிறிய இடைவெளி விட்டு, “அந்தப் பொண்ணு இறந்துட்டா ம்மா.. இனி இந்த குழந்தை நம்ம வீட்டு வாரிசு… இந்த முடிவை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் ம்மா. இதுல மாற்றம் இல்ல” என்றவன்  தன் அறைக்குச்குளிக்கச் சென்றான். 

 

விஜயகுமாரின் மனைவி மைதிலி இவர்களைப் போல பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண். ஆனால் அவளின் அமைதியும் அடக்கமும் தான் விஜயகுமாரை ஈர்த்தது. தன் தம்பியின் மேல் உயிரையே வைத்திருந்தான் விஜயகுமார். பிரபாகர், அவர்கள் கம்பெனியில் பணிபுரிந்த சரஸ்வதியை வீட்டை எதிர்த்து திருமணம் செய்தபின், அந்த வீட்டின் மூத்த தலைவி இராஜேஸ்வரி தன் மகனையே மொத்தமாக தலை முழுகிவிட்டார். 

 

தன் படிப்பை வைத்து வெளியே வேலை தேடி வேலை செய்தான் பிரபாகர். மகனை மணம் புரிந்ததால், விபி குரூப்ஸில் இராஜேஸ்வரியின் கட்டளையின் படி சரஸ்வதிக்கும் வேலை போனது. அதிலும் மனம் தளராத சரஸ்வதி தன் படிப்பை வைத்து வேறு வேலை வாங்கினாள். அவர்கள் பணத்திற்கு கஷ்டப்பட்டாலும் கூட, அவர்களின் காதல் அவர்களின் வாழ்க்கையை அழகாகவே  கொண்டு சென்றது. 

 

கோயம்புத்தூரிலேயே சரவணம்பட்டியில் ஒரு சின்ன வீட்டில் சந்தோஷமாய் வாழ்ந்தவர்களின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாய் சரஸ்வதி கருவுற்றாள். அவள் கருவுற்றதால் அவளை வேலைக்கு அனுப்ப பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவர்களின் எதிர்காலத்தின் நலனுக்காக சரஸ்வதி தான் வேலைக்குப் போயே தீருவேன் என்று அடம் பிடித்துப் போனாள். 

 

அவளுக்கு ஐந்து மாதம் இருக்கும் தருவாயில், ஒரு லாரி பிரபாகரின் பைக்கில் மோதி சம்பவ இடத்திலேயே அவனின் உயிர் பிரிந்தது. 

அதன் பின்னர் சரஸ்வதியின் நிலை மிகவும் பரிதாபம் ஆனது.. அவளின் காதல் கணவனின் பிரிவு அவளுக்கு மீளா துயரம் ஆனது. மீண்டு வர ரொம்ப சிரமப்பட்ட சரஸ்வதி, தன் குழந்தைக்காக உயிரைக் கையில் பிடித்திருந்தாள். 

 

இவ்விஷயம் விஜயகுமார் வீட்டிற்கும் எட்டியது. ஆனாலும் இராஜேஸ்வரியின் மனது கல்லாய் தான் இருந்தது. பத்து வருடம் முன்னர் அவர் கணவர் சுந்தரம் மாரடைப்பால் இறந்தார், அவரின் இறப்பு அவரை வாட்டினாலும், அவரின் கம்பெனி பொறுப்பு இராஜேஸ்வரியின் தலையில் விழுந்தது. 

 

தனி பெண்மணியாக ஐந்து வருடங்கள் அந்த கம்பெனியின் தனித்துவத்தை பேணிக்காத்தார். பின் தன் மகன்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வில் இருந்தார். அதனாலேயே தங்களின் அன்னையின் மேல் இரு புதல்வர்களும் பயம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள். 

 

தன் அன்னையைப் போல் விஜயகுமாரால் இருக்க முடியவில்லை. மைதிலி மற்றும் தன் ஒரு வயது பெண் குழந்தையோடு, ஐந்து மாத கர்ப்பிணியான சரஸ்வதியை காணச் சென்றார். 

 

அவர்களை நல்ல முறையில் உள்ளே வரவேற்ற சரஸ்வதிக்கு, அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை. 

 

“கவலைப்படாத மா, உனக்கு நாங்க இருக்கோம். எங்களால அத்தைய மீறி வெளிப்படையா உனக்கு உதவி பண்ண முடியாது. அதனால இந்தப் பணத்தை வெச்சிக்கோ” என்று ஐந்து லட்சம் பணத்தை அவளிடம் கொடுத்தாள் மைதிலி. 

 

“அய்யோ வேண்டாம்ங்க. நீங்க என்னைப் பார்க்க வந்ததே சந்தோஷம், இதெல்லாம் வேண்டாம்” என்று பிடிவாதமாக மறுத்தாள். 

 

பின் தன் விசிட்டிங் கார்டை சரஸ்வதியிடம் கொடுத்த விஜயகுமார், “உனக்கு என்ன உதவி வேணுமானாலும் எனக்கு தயங்காமல் கால் பண்ணுமா” என்று விடைபெற்றனர். 

 

இதையெல்லாம் நினைத்துப் பார்த்த விஜயகுமார் மனதில் உறுதி எடுத்தார். “என்னுடைய பொண்ணு ஆண்டாள் கோதைக்கு கிடைகக்குற எல்லா பொருளும், எல்லா வசதிகளும் இந்த குழந்தைக்கும் கிடைக்கும்” என்று மைதிலியிடமும் தன் அன்னையிடமும் கூறினான். 

 

மைதிலிக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணரின் புராணங்கள் ரொம்ப பிடிக்கும். அதனாலேயே தன் மகளுக்கு தன் விருப்பப்படி ‘ஆண்டாள் கோதை’ என்று பெயர் வைத்தாள். 

 

சரஸ்வதியின் குழந்தையையும் தன் மகளைப் போல பார்த்துக் கொண்ட மைதிலி தன் கணவரிடம், “ஏங்க, அம்மு பிறந்து ஒரு மாசம் ஆக போது இன்னும் நம்ம பெயர் வைக்கலையே. சொந்தங்களை அழைச்சு கோதைக்கு பெயர் வைச்ச மாதிரி இவளுக்கும் பெயர் வைக்கலாம்” என்றாள். 

 

“சரி, கோதைக்கு பெயர் வெச்ச மாதிரி இவளுக்கும் நீயே பேரை தேர்ந்தெடு” என்றான் விஜயகுமார். 

 

இதைக் கேட்டு, “நிறுத்துங்க…” என்றார் இராஜேஸ்வரி. 

 

முதல் முறையாக அந்தக் குழந்தையின் பக்கம் வந்தவர், அதை மைதிலி இடமிருந்து வாங்கி, “இனி இவ கோமகள் ராதை!” என்றவரோ, அந்தக் குழந்தையின் சிரிப்பில் நெகிழ்ந்தார்.. அதில் அவருக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்தது. 

 

இப்படியே வளர்ந்தார்கள் கோதையும், ராதையும்.பள்ளி பருவத்தில் எல்லாம் கோதை படிப்பில் சுமாராக இருந்தாள். ராதை இருக்கும் இடம் ஒரே உற்சாகமாக இருக்கும். துறுதுறுவென சுற்றிக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சி போல இருப்பாள். படிப்பில், திறமையில் இவள் ஃபர்ஸ்ட் கிளாஸ். 

 

கோதையும் ராதையும் ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். கோதையை விட ராதை ஒன்றரை வருடம் சிறியவள் என்பதால் ராதை ஒரு வகுப்பில் சிறியவளாய் தான் படித்தாள். பள்ளியில் படிக்கும் பொழுதே ராதைக்கு தான் நல்ல பெயர் கிடைத்தது. வீட்டில் கூட ராதை பேச்சினால் அனைவரையும் சிரிக்க வைப்பாள். கோதைக்கு கணிதம் சொல்லிக் கொடுப்பதே ராதை தான். 

 

இருவர் மீதும் விஜயகுமார் மற்றும் மைதிலி உயிரையே வைத்திருந்தார்கள். இருவரிடமும் வேறுபாடு காட்டாமல் வளர்த்தனர். எல்லாவற்றையும் விட ராதை இராஜேஸ்வரியின் செல்லப் பேத்தி ஆனாள். அவள் உறங்கும் போதும் இராஜேஸ்வரியின் பக்கத்தில் தான் உறங்குவாள். இப்படியே வருடங்கள் கடந்தது. கோதை, ராதை இருவரும் இளம் பருவத்தை அடைந்தார்கள்.

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!