அன்று கோதையின் இருபதாவது பிறந்தநாள். கோவையில் இருக்கும் பிரபலமான கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் படித்து வருகிறாள். அவளுடைய பிறந்தநாளுக்காக வீடே கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது.
பார்க்க அழகாக இருக்கும் கோதை எப்போதும் தன்னுடைய அழகில் மெனக்கிடுவாள். இன்று அவளின் பிறந்தநாளுக்காகத் அவளின் தந்தை வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸை அணிந்து கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கோத! ஏய் கோதை… இந்தா ராதை வீடியோ கால் பண்ணிருக்கா” என்று வயது முதிர்ச்சி அடைந்த இராஜேஸ்வரி பாட்டி கொம்பை ஊன்றியபடி அவளிடம் வந்தார்.
“ஹாய் கோதை க்கா, ஹாப்பி பர்த்டே… எப்பயும் போல பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க க்கா… பெரியம்மா, பெரியப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? அப்புறம் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” என்று வரிசையாக கேட்டாள் ராதை.
“தாங்க் யூ ராதை, எல்லாரும் நல்லா இருக்கோம், நீ எப்படி இருக்க? ஒழுங்கா சாப்பிடுறியா? அப்புறம் இன்னும் காலேஜ்க்கு கிளம்பலையா?” என அக்கறையாக விசாரித்தாள்.
“இதோ க்கா கிளம்பிட்டே இருக்கேன்… சரி இன்னிக்கு என்ன ஸ்பெஷல் பர்த்டே பேபி?”
“இன்னிக்கு ஈவ்னிங் பார்ட்டி இருக்குடி. அப்பாவோட பிரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க.”
“ஒ ஓ அப்போ அதான் சங்கதியா, மேடம் முகத்துல அவ்வளவு வெட்கம் தெரியுது. உன் அவர் இன்னிக்கு வருவாரு போல” என ராதை கிண்டல் செய்தாள்.
“அடி போடி, அப்பா அவரையும் இன்வைட் பண்ணிருக்காருடி, ஆனா அவர் பெரிய பணக்காரர், ரொம்ப பிஸியான பிஸினஸ் மேன். இதுக்குலாம் எப்படி வருவாருனு தெரியல” என சலித்துக் கொண்டாள் கோதை.
“நீ இப்படியே சொல்லிட்டு இரு க்கா, ஒருநாள் நானே அவரை கரெக்ட் பண்ண போறேன் பாரு” என விளையாட்டாகக் கண்ணடித்தாள் ராதை.
கோதையோ உடனே, “ஏய் விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத ராதை, என்னால அதைத் தாங்கிக்க முடியாது” என கோபமாக சொன்னாள்.
“அப்போ சீக்கிரம் உன் காதலை அவர்கிட்ட சொல்லுக்கா… சரி சரி எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு. நீ எனக்கு நைட் கால் பண்ணி ஈவ்னிங் என்ன நடந்துச்சுனு சொல்லுக்கா… பாட்டிகிட்ட ஒரு நிமிஷம் கொடு” என்றாள் ராதை.
தன் பாட்டியிடம் ஃபோனை கொடுத்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் கோதை.
“பாட்டி, உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். மாத்திரை எல்லாம் மறக்காம சாப்பிடுறீங்களா?” என்று அக்கறையாக கேட்டாள் ராதை.
“சாப்பிடறேன் ராதைம்மா… நீ இல்லாதது தான் பாட்டிக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீதான் இந்த பாட்டியை தனியா விட்டுட்டு சென்னையில இன்ஜினியரிங் படிக்க போய்ட்ட. ஆனா என் பேத்தி மெரிட்ல சீட் கிடைச்சு சென்னையில இன்ஜினியரிங் படிக்கறத நினைச்சா, எனக்கு பெருமையா தான் இருக்கு…” என்றவரோ,
“நீ ஏன் இப்படி பக்கி கணக்கா கம்மல் போடாம, பொட்டு வெக்காம இருக்க? கோதையை பாரு எப்படி மேக்கப் எல்லாம் பண்றா” என ஆதங்கமாக கேட்டார் பாட்டி.
“அக்கா அழகா இருக்கா பாட்டி, அதனால அவளுக்கு மேக்கப் போட்டா ரொம்ப அழகா இருக்கு. எனக்கு இதுல எல்லாம் ஈடுபாடு கிடையாது. நல்லா படிக்கணும். நல்ல கம்பனியில வேலைக்கு போகணும்” என ஆர்வமாக சொன்னாள் பேத்தி.
“கண்ணு… உண்மைய சொல்லணும்னா உன் அக்காவ விட நீ தான் பேரழகி. இப்போவே பாரு ராசாத்தி கணக்கா எவ்வளவு அழகா இருக்க, எந்த மகராசன் உன்னை கொத்திட்டு போகக் காத்திருக்கானோ?” என்றார் பெருமையாக.
“பாட்டீ! நான் முதல்ல படிக்கணும், இதெல்லாம் எனக்கு இப்போ வேண்டாம். சரி நான் கிளாஸ்க்கு கிளம்பணும்.. டைம் ஆச்சு, அப்புறம் பேசுறேன் பாட்டி” என்று கால்லை அணைத்து விட்டாள்.
தன்னுடைய பிறந்தநாளுக்காக தந்தை வாங்கிக்கொடுத்த புதிய காரில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள் கோதை. அவளுடைய தோழிகள் அவளுக்காக வண்டி பார்க்கிங் செய்யும் இடத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏய் கோதை ஹாப்பி பர்த்டே டி… அங்க பாரு உன் ஆளு ஹரிஷ் உன்கிட்ட ஏதோ பலமா பேசுறதுக்காக நிக்குறான்” என அனைவரும் அவளை கிண்டல் செய்தபடி சிரித்தார்கள்.
“கொஞ்ச நேரம் எல்லாரும் வாயை மூடுங்கடி, யாருக்கு யாரு ஆளு? அவன் ஆஃப்டர் ஆல் ஒரு மிடில் கிளாஸ், அது மட்டுமில்லாம அவன் பார்க்க எவ்வளவு சுமாரா இருக்கான். இவனை எல்லாம் என் வீட்டு வேலைக்காரனா கூட என்னால வெச்சிக்க முடியாது” என தன் தோழிகளிடம் கூறிவிட்டு, அவள் நேராக சென்றது அங்கு இவளையே காதலுடன் பார்த்துக் கொண்டு இருந்த ஹரிஷிடம் தான்.
“ஏய், உனக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புரியாதா? நான் உன்னை காதலிக்கல காதலிக்கவும் முடியாது… என் ரேஞ்ச்க்கு எல்லாம் உன்கூட பேசுறதே பெருசு.. முதல்ல எம்சிஏ ஸ்டுடண்ஸ் இந்த பிளாக் வரவே கூடாது. மரியாதையா கிளம்பு” என்று முடித்தாள்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோதை… உனக்கு விஷ் பண்ணிட்டு போலாம்னு தான் நான் உன்னை பாக்க வந்தேன். ஆனா நீ ரொம்ப பேசாத, உன் பிரெண்ட்ஸ் கிட்ட என்னைப் பத்தி சொன்ன எல்லாத்தையும் நான் கேட்டேன்! இங்கப் பாரு கோதை, நான் உன்னை விரும்புறேன். உன்னை அடைஞ்சே தீருவேன்” என்று அவள் கையில் ஒரு கிரீட்டிங் கார்டை திணித்து விட்டு சென்றான்.
“ச்ச இடியட்.. இவனை எல்லாம்..” என்று கடிந்தவள், “இனி ஒரு தடவ என்கிட்ட வரட்டும் அவனை வெச்சு செய்றேன்” என முணுமுணுத்தவளோ அந்த கார்டை அங்கேயே வேகமாக கிழித்துப் போட்டாள்.
“ஏய் கோதை, அவன் நம்ம காலேஜ்லயே கோல்ட் மெடல் வாங்குறவன். இந்த வருஷம் அவன் எம்சிஏ முடிச்சிட்டு போகும் போது அவனுக்கு கண்டிப்பா நல்ல வேலை கையில இருக்கும். நீ சொல்ற அளவுக்குலாம் அவன் சுமாரா இல்லை, ஆளு ஆறு அடி இல்லன்னாலும் ஒரு அஞ்சே முக்கால் அடி இருப்பான். பார்க்கவும் நல்லா ஆம்பள மாதிரி இருக்கான்! வேற என்னடி வேணும் உனக்கு?” என்றாள் அவளுடைய தோழி மீனா.
“அவனை இவ்வளவு ரசிக்கற, பேசாம நீயே கல்யாணம் பண்ணிக்கோ” என கடுப்பில் சொன்னவுடன் வகுப்பிற்குச் சென்றாள்.
அன்று மாலை ஒரு அழகிய பிங்க் வண்ண லெஹன்காவை அணிந்து பார்ட்டிக்கு தயார் ஆகிக் கொண்டு இருந்தாள் கோதை. “அம்மா, இன்னிக்கு நைட் என்ன ஸ்பெஷல்? பெரிய பெரிய ஆளுங்கலாம் வராங்க. அப்புறம் அந்த பிஎஸ்ம் குரூப்ஸ் எம்டி வராருல ம்மா?” என்று கேள்வி கேட்பது போல் விஷயத்தை அறிய முயன்றாள்.
“அப்பா கிருஷ்ணா… வாயி வாயி… சின்ன வயசுல வாயே பேசாம அமைதியா அடக்கமா இருந்த, ஆனா இப்போ உன்னோட கேள்விக்குலாம் பதில் சொல்லக் கூட முடியாத அளவுக்கு நீ பேசுற டி” என்றவரோ மேலும், “என்ன கோதை இதுல உன் இடுப்பு தெரியுது, என்னடி நீ இப்படி மாறிட்ட?” என்று சோர்வடைந்தார் மைதிலி.
“சின்ன வயசுல இருந்த மாதிரியே இப்பயும் இருக்கணும்னு அவசியம் இல்லம்மா, இப்போ என்கிட்ட பேசி யாராலயும் ஜெயிக்க முடியாது” என்றாள் கர்வமாக.
“உனக்கு இதுலலாம் நல்லா வாய் இருக்கு. ஆனா படிப்புல மட்டும் ஒன்னும் இல்ல. பாஸ் ஆகாம ரெண்டு அரியர்ஸ் வெச்சிருக்க, பேசாம அடுத்த வருஷமே உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்திடணும்” என்றார் மைதிலி.
“அப்பா… பாருங்க பா, அம்மா என் மூடை ஸ்பாயில் பண்றாங்க” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் கோதை.
“அம்மா சொல்றதுலயும் நியாயம் இருக்குல்ல டா, சரி அதை விடு, வா கீழே போலாம். எல்லா கெஸ்ட்டும் வர ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம இப்போ இங்க இருந்தா நல்லா இருக்காது.”
கோதைக்காக வாங்கி வைத்திருந்த கேக்கை அவள் வெட்டினாள். இவை அனைத்தையும் ராதை பார்க்க வேண்டும் என்பதற்காக வீடியோ எடுக்க ஆள் வைத்தனர். அவர்களின் வீட்டின் ஹால் பகுதியே பெரிது என்பதால் அங்கேயே விருந்தினர்கள் வருவதற்கு என்று நாற்காலி, சோஃபா என்று போடப்பட்டிருந்தது. இராஜேஸ்வரிக்கு இதில் எல்லாம் பெரிதாக நாட்டம் இல்லாததால் தன் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
கோதையின் தோழிகளோ அவளிடம், “என்னடி நீ யாரையோ லவ் பண்றேன்னு சொன்ன, அவரைக் கண்ணுல காட்டவே மாட்டேங்கிற?” என நொடித்துக் கொண்டார்கள்.
“இருங்க டி, நானே அவருக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன். மத்தவங்கலாம் வராங்க, அவரை மட்டும் காணும்!” என்று அவனை தான் அவளின் விழிகள் தேடின.
அவனுடைய பிஎம்டபிள்யூ கார் விஜயகுமார் வீட்டில் வந்து நிற்கும் போதே, அனைவரும் வாயைப் பிளந்து அவனைத் தான் பார்த்தார்கள்.
“வாவ்… பிரகாஷ் சிவமாறன்! என்னால நம்பவே முடியலை, அவர் இந்த ஃபங்சன்க்கு வந்துருக்காருனு” என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ஆச்சரியமாக சொன்னாள்.
“அவரைப் பாரு என்ன ஹைட், எவ்வளவு மேன்லி, பயங்கர ஹேண்ட்சமா இருக்காரு” என ரசித்தபடி இன்னொரு பெண் சொன்னாள். அவர்கள் பேசுவது தெளிவாக பிரகாஷின் காதில் விழுந்தது. ஆனால் கேட்டும் கேட்காதது போல் உள்ளே சென்றான்.
“வாங்க மிஸ்டர் பிரகாஷ் சிவமாறன், தாங்க் யூ ஃபார் கமிங். ப்ளிஸ் சிட்” என்று அவனை அமர வைத்தார் விஜயகுமார். அவனைக் கண்ட சந்தோஷத்தில் தன் தோழிகளிடம் பிரகாஷை பெருமையாகக் காட்டினாள் கோதை.
“செமயா இருக்காருடி, இவருக்காகத் தான் ஹரிஷ வேண்டாம்னு சொல்றியா? வாஸ்தவம் தான்” என பெருமூச்சு விட்டாள் அவளுடைய தோழி மீனா.
பிரகாஷிடம் தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார் விஜயகுமார்.
கோதை புறம் திரும்பியவனோ, “ஹேப்பி பர்த்டே கேர்ள்… யுவர் நேம்?” என்றான் கேள்வியாக.
“கோ.. கோதை” என்று தடுமாறினாள்.
“உங்க அப்பா வேற ஒரு நேம் சேர்த்து சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம்?” என்றான் சந்தேகமாக.
“அது ஆ… ஆண்டாள் கோதை” என்றாள்.
“ம்ம் நைஸ் நேம்… திஸ் இஸ் ஃபார் யூ” என்று ஒரு கிப்ட் பாக்ஸை அவளிடம் நீட்டினான்.
பின் விஜயகுமாரிடம் திரும்பி, “அங்கிள் நான் கிளம்பணும், சென்னையில ஒரு வேலை இருக்கு” என்றான்.
“நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் பிரகாஷ், ஒரு நாள் வீட்டுக்கு டின்னருக்கு வாங்க” என்றார் இன்முகத்துடன்.
“யா வில் ட்ரை” என்றவனோ அவரிடம் விடைபெற்று விட்டு கிளம்பினான்.
அடுத்த நாள் காலை சென்னையில் அந்தப் பிரபல ஹோட்டலில் விழித்த பிரகாஷுக்கு தன் அன்னையிடமிருந்து கால் வந்தது.
“சொல்லுங்க ம்மா, நான் இப்போ சென்னையில தான் இருக்கேன்” என்றான்.
“சரிப்பா கண்ணா, வந்து… நீ போறது வனிதாவோட காலேஜ். அங்க அவளைப் பார்த்துட்டு நீ அவகிட்ட பேசலைனா ரொம்ப வருத்தப்படுவாப்பா…” என்று இழுத்தார்.
“கொஞ்சம் நிறுத்துங்க ம்மா, நான் இப்போ உங்க பையன் பிரகாஷாவோ இல்ல வனிதாவோட அத்தை மகனாவோ அங்க போகல. நான் இப்போ தி கிரேட் பிசினஸ் டைகூன் பிரகாஷ் சிவமாறனா அங்க போறேன். அவளுக்கு வேணும்னா அவ என் கிட்ட வந்து பேசட்டும். ஐ டோன்ட் மைன்ட். நானா அவகிட்ட பேச மாட்டேன்” என்றவனோ, கட் செய்து விட்டு குளிக்கச் சென்றான்.
***
