அத்தியாயம் 13
ராதையின் அறைக்குச் சென்ற கோதை, “ராதை வந்து… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் சற்று தடுமாற்றமாக.
“என்னக்கா சொல்லுங்க” என்றவளிடம், “நீ நாளைக்கு நம்ம கம்பெனியோட புது சிஇஓ ஆக போறல, அதனால பிரகாஷ் உன்கிட்ட அபிஷியலா பேசணும்னு சொன்னாரு” என்றாள்.
“என்னக்கா சொல்றீங்க? அவர் கிட்ட நான் எதுக்கு பேசணும்? அதுவும் மணி இப்போ நைட் பத்து ஆகப்போகுது” என்றாள் கடுப்பாக.
“ஏய் என்ன நீ ஓவரா பேசுற, பிரகாஷ் என்னுடைய புருஷன் ஆகப் போறவரு, உனக்கு அப்போ அத்தான் முறை… ஏதோ முக்கியமான வேலை இருக்கும் அதான் பேசணும்னு சொல்றாரு” என்று திமிராக ஆரம்பித்தவள், “ப்ளீஸ் ராதை பேசு” என்று கெஞ்சுதலோடு முடித்தாள்.
“ஓகே கா, உன் மொபைலில் போட்டு கொடு நான் பேசறேன்” என்றாள் ராதை.
“ராதை, என் மொபைல்ல நான் கால் போட்டு நீ பேசுனா அதெல்லாம் பொரஃபஷனலா நல்லா இருக்காது. நீ உன் மொபைல்ல பேசு. நான் பிரகாஷ் நம்பரை உனக்கு வாட்ஸ்அப் பண்றேன்” என்றவளோ ராதை பதிலுக்கு காத்திருக்காமல் வெளியே சென்று விட்டாள்.
“ஐய்யோ கடவுளே..! ஏன் எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை?” என நொந்தவளின் இன்பாக்ஸிற்கு பிரகாஷின் நம்பரை அனுப்பி இருந்தாள் கோதை. அவனின் நம்பரை ஓபன் பண்ணவே ராதைக்கு பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியும் இன்றி பெருமூச்சு விட்டு பிரகாஷுக்கு கால் செய்தாள். அவனுக்கு ரிங் போகும் ஒவ்வொரு நிமிடமும் ராதைக்கு இதயத்துடிப்பு வேகமாக இருந்தது. தன் மொபைலை எடுத்துப் பார்த்த பிரகாஷின் உதட்டில் புன்னகை நிலவியது.
“ஹலோ…” என புன்னகையை மறைத்து கூறிய பிரகாஷிடம் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஹலோ, நான் கோமகள் ராதை பேசுறேன் சார், நீங்க ஆபீஸ் விஷயமா ஏதோ பேசணும்னு சொன்னீங்கனு அக்கா சொன்னாங்க” என்று பேசி முடித்தாள்.
“ம்ம்ம்… ரெண்டு வருஷம் முன்னாடி கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல என் முன்னாடியே எனக்கு நம்பர் தர முடியாதுனு சொன்ன, இப்போ நீயே என் நம்பர் வாங்கி கால் பண்ற. ம்ம்… இதை நீ எதிர்பார்த்திருக்க மாட்ட ராதை. ஆனா நான் இந்த நிமிஷத்துக்காக தான் ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன்.”
“நான் பொதுவா லேடிஸ் கிட்ட ஹார்ஷா இருக்க மாட்டேன் ராதை. ஆனா உன்னை இன்னிக்கு அடிக்க கை ஓங்கிட்டேன். அது என்னவோ தெரியல உன் மேல நிறைய உரிமை இப்போவே எடுக்க தோணுது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ப்ளீஸ் சார், நீங்க ஆபிஸ் விஷயம் மட்டும் பேசுறதா இருந்தா லைன்ல இருக்கேன். இல்லனா நான் கால்லை கட் பண்றேன்” என்றாள் சற்று கடுப்புடன்.
இவளை பொறுமையாகத் தான் தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்த பிரகாஷும், “நாளைக்கு பிஎஸ்எம் எக்ஸ்போட்ஸ்க்கு காலையில பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு… குட் நைட்” என்று கட் செய்து விட்டான்.
பின் ராதை ஒருவித பயத்துடனே தான் உறங்கினாள். அடுத்த நாள் காலை விடிந்தவுடன் ராதை ஒரு அடர் பச்சை நிற சுடிதாரை உடுத்தி, தன் கத்தையான கூந்தலில் போனி டெயில் போட்டு, காதில் ஒரு பெரிய வளையம் போன்ற பச்சை வண்ணத்தில் ரிங்க் டைப்பில் ஒரு கம்மல் அணிந்து, தன் அழகிய புருவங்களுக்கு இடையில் ஒரு கல் பொட்டு வைத்து விட்டு தன் பெரியப்பாவைக் காணச் சென்றாள்.
அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின் இராஜேஸ்வரி பாட்டியிடமும் மைதிலியிடமும் ஆசீர்வாதம் வாங்கியவள் கோதையுடன் சென்றாள்.
கோதையின் கார் அந்த பிரம்மாண்ட ஆறு மாடி கட்டிடத்தில் நின்றது. அவ்வளவு பெரிய கட்டிடத்தின் முதலாளியா இவன்?! என்று ராதைக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் கோதையோடு சென்றாள்.
பேஸ்மெண்டில் பார்க்கிங் இருந்தது, அங்கேயிருந்து இருவரும் லிப்ட்டில் பயணிக்க தொடங்கினர். முதல் தளத்தில் லெதரின் உற்பத்திகள் நடந்துக் கொண்டிருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் மிஷினரி மற்றும் ஸ்பேர் பாட்ஸ் இருந்தது. நான்காவது, ஐந்தாவது கட்டிடத்தில் துணிகள் சார்ந்த அனைத்தும் இருந்தது. சரியாக ஆறாவது மாடியில் லிப்ட் நின்றது. அங்கிருந்து இருவரும் வெளியே வந்தனர்.
அந்த தளத்தில் ஒரு பக்கம் கேன்டினும், மறு பக்கத்தில் வேலை செய்பவர்கள் சாப்பிடும் இடமும் இருந்தது. அந்த ஆறாவது மாடியின் ஓரத்தில் ஒரு பெரிய அறை இருந்தது. அது தான் பிரகாஷ் சிவமாறனின் அறையாக இருக்க வேண்டும் என யூகித்தான் ராதை.
பிரகாஷ் எப்போதுமே தன்னுடைய தொழிலாளர்களை நன்கு பார்த்துக் கொள்வான். வேலை செய்பவர்களுக்குச் சாப்பாடு முக்கியம் அதனால் தான் அவன் இருக்கும் தளத்திலேயே கேன்டீன் இருக்குமாறு வைத்தான். வாரத்திற்கு ஒரு முறையாவது பிரகாஷ் வெளியே வந்து தன்னுடைய தொழிலாளர்களிடம் நிறை குறைகளைக் கேட்பான். அதன்படி மாற்றங்களைக் கொண்டு வருவான்.
கதவை தட்டாமலேயே கோதை உள்ளே சென்றாள். ராதைக்கு அப்படி செல்ல மனது சங்கடமாக இருந்தது. அதனால், “எக்ஸ்க்யூஸ் மீ, மே ஐ கம் இன்” என்று கேட்டு விட்டு உள்ளேச் சென்றாள்.
நேற்று கோவிலில் பார்த்ததற்கும் இன்று அவனுடைய அலுவலகத்தில் பார்ப்பதற்கும் அவனிடம் நிறைய மாற்றங்கள் இருந்தது. நேற்று கோட் சூட் எல்லாம் அணியாமல் இருந்தான். ஆனால் இன்று அதெல்லாம் அணிந்து பார்க்கவே, ராதைக்கு ஏதோ வித்தியாசமாக பயமாக இருந்தது.
“ஹாய் பிரகாஷ், இதான் என் தங்கச்சி ராதை” என்ற கோதையோ, பிரகாஷின் எதிரில் இருந்த சீட்டில் உட்கார்ந்து ராதையையும் அமரச் சொன்னாள். “குட் மார்னிங் சார்” என்றபடி ராதையும் அமர்ந்தாள்.
“சோ டாக்குமெண்ட்ஸ் ஆர் ரெடி, மார்க் பண்ணிருக்க இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுங்க மிஸ் ராதை” என அவளை ஆழமாய்ப் பார்த்தபடி அந்த டாக்குமெண்டுகளை கொடுத்தாள் பிரகாஷ்.
‘இதெல்லாம் என்ன டாக்குமெண்ட்ஸ்?’ என்கிற ரீதியில் ராதை முழித்துக்கொண்டிருக்கும் போது, “கோதை, நீ உன் தங்கச்சிகிட்ட எதுவும் சொல்லலயா? இப்படி திருதிருனு முழிக்கிறா” என்று கோதையிடம் கடுப்பானான்.
ராதையிடம் டாக்குமெண்டேஷன் பற்றி பேச கூட மறந்த கோதை சமாளித்தாள். “அதான் ராதை, உன்கிட்ட சொன்னேன்ல நீ வந்து சிஇஓனு…” என்று இழுத்தாள்.
“ஒகே கா” என்று அந்த டாக்குமெண்டில் கையெழுத்து போடாமல் அதில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆரம்பித்தாள் ராதை. இதைப் பார்த்த பிரகாஷிற்கு ராதையின் மேல் பயங்கரமாகக் கோபம் வந்தது.
“ஏய் ராதை, கையெழுத்து போடாம என்ன பண்ற?” என்று அவளிடம் கடுப்பாகக் கேட்டாள் கோதை. “எந்த ஒரு பத்திரம் இருந்தாலும் நம்ம அதைப் படிச்சு பார்த்து தான் கையெழுத்து போடணும் க்கா” என்ற ராதையோ பத்திரத்தில் உள்ளதை மனதில் வாசித்துக் கொண்டிருந்தாள்.
அந்த கோபத்திலும் பிரகாஷின் எண்ணவோட்டத்தில் ராதையை நினைத்து மெச்சினான். ‘பார்க்க மட்டும் தான் அழகுனு நினைச்சேன், ஆனால் அறிவும் இவளுக்கு நல்லா வேலை செய்யுது. கோதை மாதிரி ஒரு மக்கு உருண்டையா இல்லாம இருக்கா’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
அதை படித்து முடித்துவிட்டு கையெழுத்து போட்ட ராதை பிரகாஷைப் பார்த்து, “எனக்கு இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாமே ஒரு போட்டோ காப்பி வேணும் சார்” என்றாள்.
இந்த முறை அவளின் தெளிவை பிரகாஷால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. “குட்…” என்று தன்னிடம் பிஏவாக வேலை பார்க்கும் பாரதியிடம் அது அனைத்தையும் போட்டோ காப்பி எடுக்க சொல்லிவிட்டு, “ஆல் தி பெஸ்ட் மிஸ் கோமகள் ராதை” என்ற பிரகாஷிடம் நன்றி கூறிவிட்டு கோதையை பார்த்து, “கிளம்பலாமா?” என்று கேட்டாள்.
“என்னது கிளம்பலாமாவா? ரெண்டு நாள்ல கிளைன்ட்டோட டெமோ இருக்கு. உனக்கு தெரியும்தானே! இந்த பிராஜக்ட் முடியுற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும். கோதை உன் லாப்டாப்பை அவக்கிட்ட கொடுத்திட்டு நீ மட்டும் கிளம்பலாம்” என்றவனோ தன் லாப்டாப்பில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.
‘அக்கா என்ன இது?’ என்பது போல ராதை கோதையைப் பார்த்தாள். இந்த விஷயம் கோதையே எதிர்பார்க்கவில்லை என்பதால் பிரகாஷிடம், “பிரகாஷ்… ராதை சின்னப் பொண்ணு. இப்போ தான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கா, அவளுக்கு துணையா நானும் இருந்தா நல்லா இருக்கும்” என்றாள்.
“நீ இங்க இருந்தா விபி குரூப்ஸ யாரு கவனிக்கிறது கோதை? இவ என்ன பச்சை குழந்தையா, கல்யாணம் ஆகுற வயசு வந்திருச்சு தானே. ரொம்ப சீன் கிரியேட் பண்ணாம கிளம்பு” என்றபடி கோதையிடம் புன்னகைத்தான் பிரகாஷ்.
இதற்கு மேல் தான் என்ன சொன்னாலும் அது எடுபடபோவதில்லை என கோதைக்கு புரிந்தது. ராதையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள். ராதையின் மனதில் ஆயிரம் எண்ணவோட்டங்கள் இருந்தது.
‘இதெல்லாமே எதார்த்தமான நடக்குதா இல்ல, எல்லாமே இவனுடைய பிளானா?’ என்று யோசிக்கத் தொடங்கியவள், அமைதியாக தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“ராதை! உன்னை நான் தினமும் பார்க்கணும், பேசணும்னு நினைச்சேன் அது நடந்திருச்சு” என்றான்.
“சார் ப்ளிஸ், நீங்க நினைக்குற மாதிரி எனக்கு உங்க மேல காதல் எல்லாம் இல்லை. அதை நீங்க தான் புரிஞ்சிக்கணும். என் அக்கா கோதை உங்க மேல உயிரையே வைச்சு இருக்கா, நீங்கள் அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள் ராதை உறுதியாக.
இம்முறை கடுப்பான பிரகாஷ் தன் இடத்தில் இருந்து எழுந்திருந்தான். “இனி உன்கிட்ட பேசி பிரோயஜனம் இல்லை. உன்னை காதலிக்குறேன், உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன். அடுத்து என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்” என்றவனோ வெளியில் சென்று விட்டான்.
இப்படியே ஒரு மாதம் சென்றது. பிரகாஷோ ராதையிடம் தினமும் தான் அவளை கண்டதும் காதல் கொண்டதும், அவளும் அவனை மட்டுமே மணக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால் ராதையோ அவன் அந்த மாதிரி பேசினால் பேச்சை மாற்றி விட்டு தன் வேலையில் மட்டுமே கவனமாய் இருந்தாள்.
ராதை அந்த ஓவர்சீஸ் ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடித்துருந்தாள். தன் கடமை தான் முடிந்துவிட்டதே இனி எதற்கு இந்த பதவி என்று அதை ராஜினாமா செய்து, மறுபடியும் கோதையே விபி குரூப்ஸ் சிஇஓவாக இருக்க சம்மதம் தெரிவித்து, கையெழுத்திட்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.
கோதையும் சந்தோஷமாக பிரகாஷை பார்க்க வந்தாள். பிரகாஷிற்கு ஏதோ வேலை இருந்ததால், “ஹாய் கோதை” என்றுவிட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ராதை அவளோட ரெசிக்னேஷன் கொடுத்துட்டா, இனி நான் தான் சிஇஓ” என்றாள் சந்தோஷமாக.
இந்த ஒரு மாதமாய் பிரகாஷ் ராதையிடம் காதலைப் பற்றி ஏதாவது பேசினால் கூட அவள் தவிர்த்து விடுவாள். அதே போல் பிரகாஷைத் தன்னிடம் நெருங்க அவள் விடவில்லை. அவள் இங்கு தானே இருக்கப் போகிறாள், அவளை தினமும் பேசியே தன் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைத்த பிரகாஷிற்கு இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“பிரகாஷ்… உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். இந்த சேட்டர்டே எனக்கு பேர்ட்டே. எப்போவும் போல இந்த வருஷம் பார்ட்டி வைக்காமல், புதுசா நாங்க எல்லாரும் ஃபேமிலி டூர் போலாம் னு பிளான் பண்ணி இருக்கோம். நீங்களும் வாங்க பிரகாஷ், நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமானவர்னு உங்களுக்கே தெரியும்… அதனால கண்டிப்பா வரணும்” என்றாள் உரிமையாக.
பிரகாஷ் செய்த பெரிய தவறு என்னவென்றால், தன் காதலுக்காக அவன் கோதையை சுயநலமாக பயன்படுத்திக் கொண்டதுதான். அவன் முதலிலேயே கோதையிடம் ராதையை விரும்புவதாய் கூறி இருக்கலாம். ஏனெனில் கோதையும் உணர்வுகள் உள்ள பெண் தானே?
***
