“நான் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன், நீ அப்படியே பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று அவள் கண் முன்னே சொடக்கிட்டான் பிரகாஷ். அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து சுயநினைவிற்கே வந்தாள் ராதை.
“நீங்க நினைக்குற மாதிரியான பொண்ணு நான் கிடையாது. உங்களை என்னோட அக்கா கோதை உயிருக்கு உயிராக விரும்புறா… அதுவும் இல்லாம வனிதா உங்களை தான் கணவரா நினைச்சுட்டு இருக்கா” என்று சொல்லும் போதே அவளின் கன்னத்தில் அறைய கையை ஓங்கிய பிரகாஷ் சட்டென்று கையை இறக்கி,
“என்னை என்ன ஏலத்துல விக்குற பொருள்னு நினைச்சுட்டு இருக்கியா..? உன் இஷ்டத்துக்கு ஒருத்தி என்னை விரும்புறா, இன்னொருத்தி என்னை கல்யாணம் பண்ண நினைக்குறானு சொல்லிட்டு இருக்க, என் மனசுல நீ தான் இருக்க… நீ மட்டும் தான் இருக்க! உன் மனசுலயும் இனி நான் தான் இருக்கணும்! நான் மட்டும் தான் இருக்கணும்” என்றவனோ தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
செல்லும் அவனையே ஆற்றாமை கலந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டுருந்த ராதைக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘திடீர்ன்னு எங்கிருந்தோ வந்தான், பிரகாஷ்னு சொன்னான். காதலிக்கிறேன்னு சொன்னான். அடிக்க கை ஓங்குறான். யார் இவன் என்கிட்ட இப்படி பேசுற உரிமையை அவன் எப்படி எடுத்துக்கலாம்’ என மனதில் குமுறியவளுக்குக் கண்களில் அழுகை தான் வந்தது.
வீட்டிற்கு அழுதுக் கொண்டே சென்ற ராதை வீட்டில் அனைவரிடமும் இதைப் பற்றி சொல்லி விடலாம் என்று நினைத்து தான் உள்ளேச் சென்றாள்.
ஆனால் அங்கு கோதை சோஃபாவில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த ராதை தன் அழுகையை மறைத்துக் கொண்டாள்.
“அக்கா, என்ன ஆச்சு, ஏன் அழுதுட்டு இருக்க?” எனப் பதற்றமாகக் கேட்டாள்.
“இவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து இப்போ நம்மளையே நடுத் தெருவில் விட்டுடுவா போல, படிப்பே வராதவ கையில கம்பெனியைக் கொடுத்து, இவ சொன்னானு அந்த பையன்கிட்ட பொறுப்பைக் கொடுத்து, இப்போ நம்ம கழுத்தில் வந்து கத்தி நிக்குது” என ஆதங்கத்துடன் கத்தினார் விஜயகுமார்.
ராதைக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே விஜயகுமார் கோதையைத் திட்டியதே கிடையாது.. ஏன் கண்டித்துக் கூட அவர் பேசியது கிடையாது.
ஆனால் இன்று அவரே திட்டுகிறார் என்றால் ஏதோ பெரிய பிரச்சனை என்று நினைத்த ராதை, விஜயகுமாரின் பக்கத்தில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து, “என்ன ஆச்சு பெரியப்பா, உங்க முகம் ரொம்ப வாடிப் போயிருக்கு?” என்று கவலையாகக் கேட்டாள்.
“எல்லாம் போச்சு ராதை, அந்த பிரகாஷ் சிவமாறன் நம்ம எல்லாரையும் நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டான்” என்றார் ஏமாற்றம் கலந்த கடுப்புடன்.
“அப்பா அவர் ஒன்னும் கழுத்தை அறுக்கல, நம்ம கம்பெனியை குளோபல் லெவல்ல கொண்டு போக தான் அப்படி கேட்குறாரு. அதுவும் எல்லாத்துக்கும் முன்னாடியே என்கிட்ட சம்மதம் கேட்டு மூயுச்சுவலா அக்ரீமென்ட் போட்டு என்கிட்ட கையெழுத்து வாங்கி தான் இந்த ப்ராஜெக்ட்டே ஆரம்பிச்சுது… அவர் நியாயமா தான் இருக்காரு. உங்களுக்கு தான் அவர் நம்ம கம்பெனியை உயரத்துக்கு கொண்டு போறத புரிஞ்சிக்க முடியல” என்றாள் கோதை படபடப்பாக.
“தப்பு எல்லாமே உன் மேல கோதை, உன்னால ஓவர்சீஸ் கிளைன்டை டீல் பண்ண முடியலைனா அப்போ எதுக்கு இதுக்கு ஒத்துக்கிட்ட?” என்று கொதித்தார் தந்தை.
“அப்பா பிரகாஷ் இஸ் இன்டலிஜென்ட் பா, அவர் கிட்ட என்னால இதை பண்ண முடியாதுனு சொன்னா, அவர் என்னை பத்தி என்ன நினைப்பாரு?” என்றாள் கோதை.
“இப்போ மட்டும் என்ன ஆச்சு? உன் மானம் தான் போச்சு, அதோட சேர்ந்து இப்போ குடும்ப மானமும் போச்சு” என்று கத்தினார்.
“பெரியப்பா, ப்ளிஸ் டென்ஷன் ஆகாதீங்க” என்ற ராதையிடம், “ராதை ப்ளிஸ் மா, இப்போ எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை நீ மட்டும் தான். இந்த பிரசெண்டேஷனை நீ நல்லபடியா முடிச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு” என்றார் விஜயகுமார்.
இதைக் கேட்ட ராதை மற்றும் கோதை இருவரும் அதிர்ந்தார்கள். “என்னப்பா சொல்றீங்க? ராதைக்கு ஒன்னும் தெரியாது. அவ சின்னப் பொண்ணு. ஒரு கம்பெனியோட பிரசென்டேஷன் எல்லாம் அவளுக்கு எப்படி தெரியும்?” என கேட்டாள் கோதை.
“உன்னை விட ராதை நல்லாவே கிளைன்ட்டை ஹாண்டில் பண்ணுவா, நீ வாய மூடு.. இதுல நீ தலையிடாத” என்றவரோ ராதையிடம் திரும்பி, “ப்ளிஸ் ராதை, இந்த பெரியப்பாக்காக இதை பண்ணுமா” என்றார் கெஞ்சுதலாக.
தன்னுடைய கல்லூரியில் நிறைய பிரசென்டேஷன் எடுத்திருந்த ராதைக்கு, பயம் அதைப் பற்றி எல்லாம் இல்லை. அவளின் பயமே பிரகாஷ் சிவமாறன் தான். அவனைப் பார்க்கவே கூடாது, அவனைப் பற்றி சொல்லி விடலாம் என்று தான் வீட்டிற்குள் நுழைந்தாள்.
‘இங்க பிரச்சனை வேற மாதிரி இருக்கு. அது மட்டும் இல்லாம பெரியப்பா இவ்வளவு கேட்டும் நான் இதை ஒத்துக்காம இருக்க முடியாது’ என்று யோசித்தவள் கோதையைப் பார்த்து, “இதுக்கு வேற ஏதும் வழி இல்லயா க்கா?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
“இருக்கு ராதை, ஆனா நம்ம கம்பெனி நம்ம கையை விட்டு போய்டும்” என்று அழுதாள் கோதை.
“என்னக்கா சொல்றீங்க, எனக்கு புரியல?” என்று விழித்தாள் ராதை.
“பிரகாஷ் இப்போ நமக்கு இரண்டு ஆப்ஷன் தான் கொடுத்திருக்காரு, ஒன்னு நம்ம குடும்பத்துல இருந்து ஒருத்தர் புது சிஇஓ ஆகணும், இல்லனா இந்த கம்பெனியை அவருக்கு வித்து தான் ஆகணும். நமக்கு வர வேண்டிய 20% ஷேர்ஸோட பணத்தைக் கொடுத்துட்டு, அவர் வேற சிஇஓ அப்பாயிண்ட் பண்ணி வைச்சிடுவாரு” என்று அழுதாள்.
“அவன் வாங்கும் போது 60% ஷேர்ஸ் தானே வாங்குனான், இப்போ எப்படி 80% ஆச்சு?” என்று புரியாமல் கேட்டார் விஜயகுமார்.
“அது வந்துப்பா… நான் தான் இந்த வருஷம் பிரகாஷ் பேர்த்ட்டேக்காக இப்படி பண்ணேன்” என தலை குனிந்தபடி சொன்னாள் கோதை. இம்முறை கோதையை அடித்தே விட்டார் விஜயகுமார்.
“அவனுக்கு பிறந்தநாள்னா இந்த மாதிரி பண்ணுவியா? ச்சே… நீயெல்லாம் என் பொண்ணா?” என்று கோபத்தில் கத்தினார் தந்தை.
“நிறுத்துங்க… அவ இந்த மாதிரி பண்ணிருக்கானா அதற்கு முழுக் காரணம் நீங்க மட்டும் தான்… நீங்க தான் அவளுக்கு செல்லம் கொடுத்து அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்க. உங்க மேலயும் தப்பு இருக்கு, இனியாவது அவளை கண்டிச்சு வளர்க்கணும் நீங்க” என்றார் மைதிலி ஆதங்கமாக.
கோதைக்கோ, ராதை பிரகாஷின் கண்களில் படுவது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இப்போது அவளுக்கு வேறு வழியும் இல்லை என்பதால் ராதையிடம், “ப்ளீஸ் ராதை, ஒரு மாசம் எங்களுக்காக சிஇஓவா இரு. நானும் உன் கூட தான் கம்பெனில இருப்பேன்.”
“அப்புறம் இந்த பிராஜக்ட் சக்சஸ் ஆன அப்புறம் நீ மறுபடியும் எல்லாத்தையும் என்கிட்ட ஒப்படைச்சிடு. அப்புறம் நீ கேம்பஸ்ல செலக்ட் ஆன கம்பெனில சேர்ந்துக்கலாம்” என்றாள் கோதை.
ராதைக்கு தான் குழப்பமாக இருந்தது. ‘ஒரு கம்பெனியை ரண் பண்றது எல்லாம் சின்ன விஷயமா என்ன? எத்தனை எம்ப்லாயீஸ் நம்மளை நம்பி இருப்பாங்க. ஒரு கம்பெனியை லீட் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு சுத்தமா கிடையாதே.’
‘சரி கோதை அக்கா சொன்னது போல ஒரு மாசம் பல்லைக் கடிச்சு இருந்துட்டு அந்த பிரசென்டேஷனை முடிச்சு கொடுத்துட்டு பிராஜெக்ட்டை வாங்கி கொடுத்துட்டு நம்ம கிளம்பிடலாம்’ என மனதில் யோசித்து முடிவுக்கு வந்தவள், சரி என்று ஆமோதித்தாள்.
இப்போதைக்கு பிரகாஷைப் பற்றி சொன்னால் நல்லதல்ல என்று நினைத்த ராதை அந்த விஷயத்தை மறைத்தாள்.
“அக்கா ஆனா ஒரு விஷயம், நான் பிரசென்டேஷன் போகும் போது நீயும் கண்டிப்பா என் கூட வரணும். என்னால தனியா எங்கயும் போக முடியாது” என்றாள் தீர்மானமாக.
“நானே உன்னை தனியா விட மாட்டேன் கவலைப்படாத” எனத் தைரியம் கொடுத்தாள் கோதை. ராதைக்கு தன் நன்றிகளைத் கூறிவிட்டு, கோதையிடம் பேசாமலே சென்றுவிட்டார் விஜயகுமார்.
அன்று இரவு பிரகாஷிற்கு அழைத்த கோதை, “பிரகாஷ், கோமகள் ராதை வில் பீ நியூ சிஇஓ ஃபார் விபி குரூப்ஸ். ஐ வில் பி சிஎஃப்ஒ” என்றாள்.
மனதில் வெற்றிச் சிரிப்பு கொண்ட பிரகாஷ், “ஓகே, நான் புது சிஇஓ கிட்ட பேசணும்” என்றான்.
“பிரகாஷ் அது வந்து அவ கொஞ்சம் ஷை டைப்…” என அவள் சொல்லி முடிக்கும் முன்னமே, “ஷைன்னா! என்கிட்ட உன் தங்கச்சி பேசாமலேயே கிளைன்டை டீல் பண்ணிட முடியாது. அவ என்கிட்ட தான் ரிப்போர்ட் பண்ணணும். டாக்குமென்ட்ஸ் எல்லாம் நான் ரெடி பண்ணிடுறேன். நாளைக்கு அவ கையெழுத்து போட என் ஆபிஸ்க்கு தான் வரணும்” என்றவனோ, “நான் அவகிட்ட அபிஷியலா பேசணும்… ஆஸ்க் ஹேர் டு கால் மீ நௌ” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
‘உன்னை எப்படி என்னோட வலைக்குள்ள சிக்க வைச்சிட்டேன் பாத்தியா? இனிமே உன்னால என்கிட்ட இருந்து தப்பவே முடியாது ராதை’ என மனதில் சந்தோஷப்பட்டான் பிரகாஷ்.
***
