அத்தியாயம் 15
இப்படியே ஒரு வாரம் சென்றது. அன்று கோதையின் இருபத்தி மூன்றாவது பிறந்தநாளை ஒட்டி அனைவரும் ஊட்டிக்கு கிளம்ப தயாராகினார்கள்.
விஜயகுமாரின் காரிலேயே அனைவரும் ஏறினர். அவருடையது எட்டு பேர் அமரும் வசதி கொண்ட கார் என்பதால் அவர்கள் குடும்பத்திற்கு அது சரியாக இருந்தது.
இங்கே பிரகாஷ் வீட்டில் அனைவரும் தயாராக தொடங்கினார்கள். வனிதாவும் அவள் குடும்பமும் காலையிலேயே விஜயா வீட்டிற்கு வந்தனர். பிரகாஷ் சிவமாறனை அழைத்த ஆறுமுகம், தாங்களும் ஊட்டி வருவதாய் விஜயகுமார் கண்டிப்பாக வர சொன்னதையும் கூறினார்.
தன் தந்தையும் விஜயகுமாரும் தொழில்துறை நண்பர்கள் என்று பிரகாஷ் சிவமாறனுக்குத் தெரியும், ஆனாலும் ஏதோ ஒன்று அவனுக்கு இடித்தது.
‘எப்படி இருந்தாலும் நான் ராதையை கல்யாணம் செய்ய கேட்க இது தான் நல்ல வாய்ப்பு, அம்மா அப்பாவும் வராங்க. இதான் நல்ல சான்ஸ்’ என்று நினைத்தான் பிரகாஷ்.
பிரகாஷ் சிவமாறனின் வண்டியில் அவன் தந்தை மற்றும் தாய் வந்தார்கள். விஜயேந்திரபூபதியின் காரில் மணிகண்டனின் குடும்பம் வந்தார்கள். இப்படியே இவர்கள் பயணம் தொடங்கியது.
தன் மேல் தப்பே இல்லை என்றாலும் தன்னால் பிரச்சனை எழ உள்ளதை நினைத்து, ராதையின் மனம் வாடியது, பதறியது.
கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்ல ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு மொத்தம் ஐந்து காட்டேஜ் புக் செய்து வைத்திருந்தார் விஜயகுமார்.
ஊட்டியின் அழகைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. மனதை வருடும் குளிரும், அந்த குளிருக்குள் கிடைக்கும் இதமும், படர்ந்திருந்த மலையும், செடி, கொடிகளும் ஊட்டியை வந்து காண்போருக்கு அதை விட்டுச் செல்ல மனமே இருக்காது என்னும் அளவிற்கு அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.அனைவரும் சந்தோஷமாக ஊட்டி வந்தடைந்தார்கள்.
“அம்மா! மாமா எல்லாம் எப்போ வருவாங்க? எனக்கு ரொம்ப எக்ஸ்சைட்டடா இருக்கு மா. எவ்வளவு வருஷம் ஆச்சு அவங்க எல்லாரையும் பார்த்து” என்றாள் கோதை ஆர்வமாக.
“மாமா, அத்தை, பாட்டி, தாத்தா எல்லாரும் வராங்க கோதை, அவங்களுக்கு ரெண்டு காட்டேஜ் போட்டுருக்காரு அப்பா” என்றார் மைதிலி.
“ஒகே மா, அப்போ கிருஷ் வரலையா?” என்று கவலையாகக் கேட்டாள்.
“நீயும் கிருஷும் தான் சின்ன வயசிலிருந்து க்ளோஸ். உனக்கு தான் தெரியணும் அவன் வரானா இல்லையானு” என்றார் மைதிலி.
“ம்ம் நான் கால் பண்ணி சொன்னேன், மெசேஜ்லயும் சொல்லிருக்கேன் ம்மா” என்றாள் கோதை யோசனையாக.
முதலில் விஜயகுமார் குடும்பம் காட்டேஜை சென்றடைந்தனர். வந்தவர்களை வரவேற்பதற்காக முன்னமே சென்றடைந்தார்கள்.
மொத்தம் ஐந்து காட்டேஜை புக் செய்திருந்தார் விஜயகுமார். ஒவ்வொரு காட்டேஜிலும் மூன்று அறைகள், இரண்டு பாத்ரூம், ஒரு சமையலறை மற்றும் மாடர்ன் ஹவுஸ் எனப்படும் வசதிகள் அனைத்தும் உள்ளது.
சமையல் செய்வதற்கு எப்போதுமே மயில்சாமி என்பவர் இருப்பார். அவரும் அவரின் மனைவி முத்தாயி இருவருமே விஜயகுமாரின் குடும்பத்திற்கு எட்டு வருடங்கள் பழக்கம். எப்போதெல்லாம் அவரின் குடும்பம் ஊட்டி வருகிறார்களோ இவர்கள் தான் வித விதமாய் சமைத்துக் கொடுப்பார்கள்.
விஜயகுமார் குடும்பம் வரும்போதே மணி மாலை நான்கு ஆகி இருந்தது. அவர்களை வரவேற்ற மயில்சாமி, அவர்களுக்கு பருக ஊட்டி குளிருக்கு இதமான சூடான காப்பியும் பஜ்ஜியும் செய்து கொடுத்தார்.
மயில்சாமி இம்முறை தனது தம்பியையும் அவனுடைய மனைவியையும் அவர்களுடன் வேலைக்கு ஒத்தாசையாக இருக்கக் கூட்டிக்கொண்டு வந்தார்.
கோதைக்கு அடுத்த நாள் பிறந்தநாள் என்பதால் அவளுக்கு உற்சாகம் அதிகமாக இருந்தது. ராதை எப்போதும் போல் பாட்டியுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள். மாலை ஆறு மணியளவில் பிரகாஷின் குடும்பம் அந்த காட்டேஜிற்கு வந்தடைந்தார்கள்.
விஜயகுமாரின் அமோக வரவேற்பு பிரகாஷ் குடும்பத்தை மெய் சிலிர்க்க வைத்தது. ஆனால் பிரகாஷிற்கு என்னவோ இடித்துக் கொண்டே இருந்தது.
“பாட்டி நம்ம ஒரு காட்டேஜ்ல இருக்கோம். இன்னும் ரெண்டு காட்டேஜ் பிரகாஷ் வீட்டுக்கு, மத்த ரெண்டு காட்டேஜ் யாருக்கு? பெரியப்பா ஃப்ரண்ட்ஸ் யாராவது வராங்களா?” என்று கேட்டாள் ராதை.
“இல்லம்மா, மைதிலியோட அப்பா, அம்மா அப்புறம் அவளோட அண்ணன் குடும்பம் தான் வராங்க” என்றார் இராஜேஸ்வரி.
“என்ன பாட்டி? அவங்க குடும்பமா…!” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் ராதை.
“ஏன் ராதை ம்மா பயப்படுற, அவங்களுக்கும் உனக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அவங்க உன்னை ஏதாவது அவமானப் படுத்துற மாதிரி பேசுனா நீயும் திருப்பி கொடுக்கணும். நீ ஒன்னும் முன்ன மாதிரி சின்ன பொண்ணு இல்லை” என பேத்தியை ஆறுதல் படுத்திக்கொண்டே, தைரியத்தையும் கொடுத்தார் பாட்டி.
‘பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை அவங்க சொந்த பொண்ணு போலவே பாத்துக்குறாங்க, அதுக்காகவே நான் அமைதியா தான் இருப்பேன் பாட்டி’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ராதை.
பிரகாஷ் வந்ததில் இருந்தே ராதையைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவள் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். வனிதா, ராதையின் அறைக்கு வந்து அவளை உற்சாகப் படுத்தினாள். ஆனாலும் ராதை முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை சோகமாகவே தான் இருந்தாள்.
“ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க… கண்ணா வா கண்டுபிடிக்க!” என்று பாடியபடி வனிதா அவளின் முகத்தைப் பார்த்துக் கிண்டல் அடித்தாள்.
“ஏய் கொஞ்சம் சும்மா இரு வனிதா ப்ளிஸ்” என சலிப்பாக சொன்ன ராதையிடம்,
“ஆமா பின்ன! அங்க பிரகாஷ் அத்தானுக்கு பயந்து நீ இப்படி ரூமுக்குள்ளயே இருக்க, அதான் உன் மூடை மாத்தலாம்னு பாடுனேன். ஆனா அதுவும் உனக்கு பிடிக்கலை” என நொந்துக்கொண்டாள் வனிதா.
“ம்ச் இப்போ நான் பயப்படுறது பிரகாஷ் விஷயத்தை நினைச்சு இல்லடி, இது வேற…” என்ற ராதைக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயங்கள் எல்லாமே ஞாபகத்திற்கு வந்தது.
***
