அத்தியாயம் 16

அத்தியாயம் 16

 

ராதை நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா அவளை உலுக்கினாள்.

 

“என்னனு சொல்லுடி, அப்போ தான் என்னால உன் பயத்துக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியும்” என்றாள் வனிதா. 

 

“சொல்றேன் டி…” என நீண்ட பெருமூச்சுவிட்டவள், “என்னுடைய சின்ன வயசுல நான் நிறைய பேசுவேன். என் பேச்சை எல்லாரும் ரசிப்பாங்க. சந்தோஷப்பட்டான் சிரிப்பாங்கனு கூட பாட்டி சொல்லுவாங்க…”

 

“எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என் பெரியப்பா, பெரியம்மாவை நான் அப்பா, அம்மானு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன்…”

 

“அவங்க தான் என்னோட உண்மையான அப்பா, அம்மானு நினைச்சிட்டு தான் நான் பத்து வருஷம் வளர்ந்தேன்… என் பெரியப்பா, பெரியம்மா, பாட்டி எல்லாருமே என்கிட்ட நான் யாருன்ற உண்மையை மறைச்சி தான் வளர்த்தாங்க.”

 

“கோதை அக்காவும் என்னை சொந்த தங்கச்சினு தான் நினைச்சிட்டு இருந்தாங்க… எங்க பேர் கூட ரத்த சகோதரிகள் போல தான் இருக்கும். ஆண்டாள் கோதை, கோமகள் ராதைனு. எங்களோட வாழ்க்கை இப்படி சந்தோஷமா போயிட்டு இருக்கும் போது தான் மைதிலி பெரியம்மா வீட்ல இருந்து அவங்களை பார்க்க வந்தாங்க…”

 

“மைதிலி பெரியம்மா வளர்ந்த ஊர் பெங்களூர். அவங்க அப்பா அந்த காலத்துலயே இன்ஜினியர். பெங்களூர்ல செட்டில் ஆயிட்டாங்க. மைதிலி பெரியம்மாவுடைய குடும்பம் ரொம்ப பெரிய பணக்காரங்க… நான் பிறந்ததுல இருந்து மைதிலி பெரியம்மா வீட்டுல நான் யாரையும் பார்த்தது இல்லை. ஏன்னா அவங்க மொத்த குடும்பமே பத்து வருஷமா கனடாவுல இருந்தாங்களாம்.”

 

“மைதிலி பெரியம்மாக்கு கூட பிறந்தது ஒரு அண்ணா, அவர் கனடாவுல ஒரு ஐடி கம்பெனி வைச்சிருக்கார். அவங்க எல்லாருமே ஏப்ரல் மாசம் இந்தியா வந்தாங்க. அது வரைக்கும் சந்தோஷமா இருந்த என் வாழ்க்கையில அவங்க வந்த அப்புறம் தான் புயல் அடிச்சுது…”

 

“ஏப்ரல் மாசம் பரிட்சை எல்லாம் முடிஞ்சு நானும் கோதை அக்காவும் வீட்டிலேயே நல்லா ஆட்டம் போட்டோம். அந்த சமயத்துல தான் ஒரு தாத்தா, பாட்டி, ஒரு அங்கிள், ஆன்ட்டி, ஒரு பையனும், ஒரு பொண்ணும் வந்தாங்க. அவங்க எல்லாருமே வந்த அன்னிக்கே கோதை அக்கா அவங்களை தாத்தா… பாட்டி… மாமா… அப்படினு சந்தோஷத்தில் குதிச்சாங்க. ஆனா எனக்கு அவங்க யாருனு கூட தெரியல.”

 

“அப்போலாம் பெரியப்பா காலையில ஆபிஸ் போனா நைட் தான் வீட்டுக்கு வருவாங்க. இராஜேஸ்வரி பாட்டி எங்க சொந்தகாரங்க வீட்டு கல்யாணத்துக்காக பாம்பேக்கு போயிருந்தாங்க.”

 

“கனடாவுல இருந்து வந்தவங்களை மைதிலி பெரியம்மா எனக்கு தாத்தா, பாட்டி, மாமா, அத்தைனு அறிமுகம் படுத்தினாங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.”

 

“ஆனா அவங்க எல்லாருமே கோதை அக்காவை தான் கொஞ்சுவாங்க. அவங்ககிட்ட தான் சாக்லேட் பாக்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. எல்லா பொம்மைகளையும் அக்காகிட்ட தான் கொடுப்பாங்க. ஏன் அந்த பசங்க கூட கோதை அக்கா கூட மட்டும் தான் விளையாடிட்டே இருப்பாங்க. என்னை விளையாட்டுக்குச் சேர்த்துக்க மாட்டாங்க.”

 

“அதனால எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு. அப்போ இதை மைதிலி பெரியம்மாகிட்ட சொல்லலாம்னு பேசப் போன அப்போ, பெரியம்மா போட ரூம்ல அந்த தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அப்புறம் அந்த பையனும் இருந்தாங்க… கோதை அக்காவும் அந்த பொண்ணும் அவ பேரு யசோதானு நினைக்குறேன், வெளியில விளையாடிட்டு இருந்தாங்க.”

 

“மைதிலி பெரியம்மா அங்க ரூம்ல அழுதுட்டு இருந்திருக்காங்க. அப்போ நான் சின்ன பொண்ணு தானே, நல்லா பேசுவேன் வேற! விவரம் தெரியாம அவங்க முன்னாடியே மைதிலி பெரியம்மா கிட்ட போய் அவங்க மடியில் உட்கார்ந்து அழுக ஆரம்பிச்சிட்டேன்.”

 

“அம்மா… பாட்டி, தாத்தா, மாமா, அத்தை எல்லாரும் கோதை அக்காகிட்ட தான் சாக்லேட்ஸ் கொடுத்தாங்க.. என்கிட்ட சிரிச்சு கூட பேச மாட்டேங்கிறாங்க. இந்த அண்ணா கூட என்னை விளையாட்டுக்குச் சேர்த்துக்க மாட்டேங்குறான்னு பெரியம்மா கிட்ட சொல்லி அழுதேன்.”

 

“அந்த அண்ணா பேர் கூட எனக்கு சரியா ஞாபகம் இல்ல வனிதா, ஏதோ கிருஷ்னு நினைக்குறேன். அந்த அண்ணாக்கு அப்போ வயசு கிட்டத்தட்ட பதினாறு இல்ல பதினேழு வயசு இருக்கும். நான் அவனை கை காட்டி பேசி அழுத உடனே எல்லார் முன்னாடியும் அந்த கிருஷ் என் கையை முறுக்கி கண்ட அனாதை எல்லாம் என்னைய கைய நீட்டி பேசக் கூடாது… நான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் தெரியுமா? உன் அப்பா, அம்மா செத்து போய்ட்டாங்க. நீ இந்த வீட்டு பொண்ணே இல்லைனு என் கையை நல்லா முறுக்கி என் கையில நல்லா கிள்ளிவிட்டுட்டான்.”

 

எனக்கு பயங்கர வலி… அழுது துடிச்சிட்டேன். நான் அவங்க ரூம்க்கு போற முன்னாடியே அங்க ஏதோ பிரச்சனை வந்து தான் மைதிலி பெரியம்மா அழுதுட்டு இருந்திருக்காங்க. அந்த க்ருஷ் என்கிட்ட இப்படி சொல்லி முரட்டுதனமா நடந்துப்பான்னு யாரும் எதிர்பார்க்கலை. நான் வலியில துடிச்சிட்டு இருக்கும் போது தான் மைதிலி பெரியம்மா சுயநினைவுக்கே வந்தாங்க போல… என்னை அவன் கிட்ட இருந்து பிரிச்சு என் கையில தடவி வலிக்குதா அம்மு, அழாதீங்கனு என்னை ஆறுதல் படுத்தினாங்க.”

 

“உடனே அவங்க அண்ணா கிட்ட பையனை இப்படித் தான் முரட்டுத்தனமா வளர்ப்பீங்களான்னு கேட்டாங்க.”

 

“அதுக்கு பெரியம்மாவோட அண்ணிக்கு கோபம் வந்திருச்சு. இதோ நிக்குதே, இந்த அனாதைக்காக ரெண்டாவது குழந்தை பெத்துக்காம நீ குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிட்டு நிக்குற, என் பையன் சொன்னதுல என்ன தப்பு? இவளை எல்லாம் நல்லா போட்டு அடிச்சிருக்கணும், இவளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துருக்கணும்னு அந்த ஆன்ட்டி மனசாட்சியே இல்லாம பேசுனாங்க வனிதா…” என்று சொல்லிக் கொண்டுருக்கும் போதே ராதையின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. வனிதாவின் கண்களிலும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

 

“சாரிடி, என் கதையைச் சொல்லி உன் டிரிப்பை வேஸ்ட் பண்றேன். நான் இத்தோட இந்தக் கதையை நிறுத்துறேன் போதும்” என்று கண்களைத் துடைத்தாள் ராதை. 

 

“ராதை ப்ளிஸ் நீ எனக்கு எல்லாத்தையும் சொல்லணும், இது என் மேல் சத்தியம்” என்று தன் தலையில் கை வைத்தாள் வனிதா.

 

“அந்த ஆன்ட்டி அப்படி பேசுன போது யாருமே அவங்க வாயை அடக்கல. இன்ஃபேக்ட் எல்லார் முகத்துலயும் ஒரு சின்ன சந்தோஷம் தெரிஞ்சிது. என்னை அவங்க அப்படி பேசுனதுக்கு மைதிலி பெரியம்மா மட்டும் தான் அழுதுட்டே இருந்தாங்க… ஒரு சின்ன பொண்ணோட மனசு கசங்கி சுக்கு நூறா போச்சுனு யாருமே என் மேல் ஒரு குறைந்தபட்சம் மனிதாபிமானம் கூட காட்டல.”

 

“இவங்க இப்படி பேசுன அப்புறம் என்னால அந்த ரூம்ல இருக்க முடியல. நான் என்னோட ரூமுக்கு போய் ஃபர்ஸ்ட் டைம் அந்த பதினோரு வயசுல கதவைச் சாத்தி தாழ் போட்டேன்… அப்போ இருந்து என் பேச்சுக்கும் மனசுக்கும் சேர்த்தே தாழ்பாள் போட்டுட்டேன்.”

 

“மைதிலி பெரியம்மா நிறைய தடவை கதவைத் தட்டினாங்க. ஆனா நான் வரமாட்டேன்னு மட்டும் சொன்னேன். கதவைத் திறக்கல. அப்புறம் கோதை அக்கா கதவைத் தட்டினாங்க. அப்போவும் என் கிட்ட அசைவில்லை. கோதை அக்கா நான் கதவைத் திறக்கலைனதுமே அழுதாங்க.”

 

“அப்போ அக்கா பக்கத்துல அந்த பையன் க்ருஷ் இருந்திருக்கான் போல. அவன் அக்காகிட்ட சொல்றான்.. கோதை நீ ஏன் அழுற? அவ ஒரு அனாதை, அவளால தான் உனக்கு குட்டி தங்கச்சியோ, தம்பியோ இல்லாம போச்சு. அவ ஒன்னும் செத்து தொலையமாட்டா, நீ வா நம்ம விளையாடலாம்னு அவளைக் கூட்டிட்டு போய்ட்டான். அன்னிக்கு நைட் பெரியப்பா வந்து என் ரூம் கதவை தட்டுற வரைக்கும் நான் கதவைத் திறக்கவே இல்ல.”

 

“பெரியப்பா கதவை தட்டின உடனே கதவைத் திறந்து பெரியப்பாவைக் கட்டிப்பிடிச்சுட்டு அழுதுட்டேன் .அப்பா நான் அனாதைனு சொல்றாங்க, அனாதைனா அப்பா, அம்மா இல்லாதவங்க தானே… அப்போ நீங்க என் அப்பா இல்லையானு அழுதுக்கிட்டே இருந்தேன். அதுக்கு பெரியப்பா மைதிலி பெரியம்மாவை கத்தி கூப்பிட்டு, பெரியம்மா வந்த உடனே அவங்க கன்னத்தில் அடிச்சுட்டாங்க.”

 

“இதைப் பார்த்த பெரியம்மா குடும்பம் பெரியப்பா கிட்ட என்னை அனாதை ஆசிரமத்துல சேர்க்கணும்னு சண்டை போட்டாங்க. அவங்களை எதிர்த்து பெரியப்பாவால ஒரு வார்த்தை பேச முடியல. ஏன்னா பெரியப்பா அவரோட தொழிலுக்காக பெரியம்மாவோட அண்ணன் கிட்ட தான் முப்பது கோடி கடன் வாங்கி இருந்தாங்க. இந்த விஷயம் எனக்கு பின்னாடி தான் தெரிய வந்துச்சு.”

 

“பெரியப்பாவால என்னை விடவும் முடியலை, அவங்களை எதிர்த்தும் பேச முடியலை. அவர் அவங்க எல்லார் கிட்டயும் கை எடுத்து கும்பிட்டார்.” 

 

“என் தம்பி பிரபாகரோட பொண்ணை என்னால அனாதை ஆசிரமத்துல சேர்க்க முடியாதுனு சொல்லிட்டார்.”

 

“இந்த விபி குருப்ஸை நீங்க ஒத்த ஆளா பார்த்து சம்பாதிக்குறீங்க, ஆனா காதலிச்சு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி இறந்த உங்களோட தம்பியோட பொண்ணு, எங்க வீட்டு இளவரசி கோதையைப் போல வசதியை அனுபவிக்கக் கூடாது. நாங்க இதுக்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம் அப்படினு பெரியம்மாவோட அண்ணன் சொன்னாங்க.”

 

“இந்த விஷயத்தை அப்படியே விட்டுட்டு அடுத்த நாள் காலையில இராஜேஸ்வரி பாட்டி வந்த அப்புறம் பேசிக்கலாம்னு நினைச்சார் பெரியப்பா. எப்போவுமே என் பெரியம்மா கூட படுக்குற நான் அன்னிக்கு நைட் தனியாவே படுத்தேன்.”.

 

“நான் ரொம்ப ஹர்ட் ஆகிட்டேன்னு பெரியம்மாவும் என்னை வந்து டிஸ்டர்ப் பண்ணல. ஆனா அப்போ அப்போ என்னை வந்து பார்த்துக்கிட்டாங்க.”

 

“அடுத்த நாள் எப்போயும் போல பெரியப்பா அவரோட கம்பெனிக்குக் கிளம்பிட்டார். பெரியம்மாகிட்ட ராதையை நல்லா கவனினு சொல்லிட்டு கிளம்பிட்டார்.”

 

“அன்னிக்கு நான் யார்கிட்டயும் பேசல. நான் கோதை அக்கா கூட விளையாடாம என்னோட ரூம்லயே ஒரு பொம்மையை வைச்சிட்டு விளையாடிட்டு இருந்தேன்.”

 

“பெரியம்மா தான் என்னை சமாதானம் படுத்திட்டு டைனிங் டேபிளுக்கு கூட்டிட்டு வந்தாங்க. நானும் அமைதியா உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சேன்… என் முன்னாடி தான் கோதை அக்காவும், அந்த க்ருஷும் அவன் தங்கச்சியும் உட்கார்ந்து இருக்காங்க.”

 

“அப்போ அந்த க்ருஷ் என்ன சொன்னான் தெரியுமா.. யசோ யூ நோ சம்திங்… இந்த வீட்டுல ராதைனு ஒரு அனாதை இருக்கு, அந்த பொண்ணு ஒரு அனாதைனு மட்டும் தான் நினைச்சேன். ஆனா அவளோட நடிப்பு சான்ஸே இல்ல.”

 

“நேத்து கதவை சாத்தி அப்படி இப்படினு ஆக்டிங் போட்டு அத்தையை மாமாகிட்ட அடி வாங்க வெச்சிட்டா சரியான விஷம்ன்னுஎன்னை முறைச்சிக்கிட்டே அவன் தங்கச்சிகிட்ட சொன்னான். அந்த மனசாட்சி இல்லாத மிருகம்…” என்று இப்போது தன்னிலைக்கு வந்து கதறி அழுதவள் இப்போது வனிதாவிடம் திரும்பினாள். 

 

“ஏன் வனிதா, அவன்கிட்ட நான் முன்ன பின்ன பேசினது கிடையாது. ஒரு சின்ன பொண்ணு கிட்ட அவன் எப்படி அப்படி பேசலாம்? அவனுக்கு என்னை பத்தி என்ன தெரியும்? அவன் அப்படி பேசுனதும் நான் அழுதுட்டேன். அப்புறம் என்னால் சாப்பிட முடியலை. நான் அந்த இடத்தை விட்டு போய்ட்டேன். நல்லவேளை அப்போ தான் பாட்டி பாம்பேல இருந்து வந்தாங்க.”

 

“அவங்க வந்த உடனே அவங்ககிட்ட ஓடிப்போய் அழுது நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன். பாட்டி உடனே என் பெரியப்பாவுக்கு கால் பண்ணி, அவரை வீட்டுக்கு வர சொல்லி கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.” 

 

“விபி குரூப்ஸ் விஜயகுமார் உருவாக்கினது இல்ல, அது என் புருஷனோடது. அப்படி இருக்கும் போது விஜயகுமாருக்கு என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை தான் பிரபாகரனுக்கும் இருக்கு.”

 

“உங்க குடும்பம் எங்களை விட வசதி வாய்ப்புல அதிகமா இருக்கலாம். நீங்க விஜயகுமாருக்கு பணவுதவி செஞ்சிருக்கலாம், கடன் உதவி செஞ்சிருக்கலாம், அதுக்காக என்னோட பேத்தியை அனாதை ஆசிரமத்துல சேர்க்க என்னால முடியாது. அதே போல அவளைப் பத்தி பேசுற உரிமை உங்களுக்கும் கிடையாதுனு சொல்லிட்டாங்க பாட்டி.”

 

“அப்புறம் பெரியம்மாவோட அப்பா, அம்மா, அண்ணா, அண்ணியை ஒருமுறை கூப்பிட்டு உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கு. பொம்பளை பிள்ளைங்களை எவ்வளவு பாதுகாப்பா வளர்த்து கரைசேர்க்கணும்னு தெரிஞ்சும், நீங்க மனசாட்சி இல்லாம நடந்தது ரொம்பவே வருத்தமா இருக்குனு சொன்ன பாட்டி, பெரியப்பா கிட்ட நானும் ராதையும் ஊட்டி கெஸ்ட் ஹவுஸுக்கு போறோம். திரும்பி வரதுக்கு ஒரு வாரம் ஆகும்ன்னு சொல்லி என்னை அவங்களோட அழைச்சிக்கிட்டு டிரைவர் வைச்சு ஊட்டிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.”

 

“பெரியப்பாக்குமே என் புண்பட்ட மனசுக்கு சின்ன மாற்றம் இருந்தால் தெளிவாகிடுவேனு நினைச்சாங்க.”

 

“இதுக்கு அப்புறம் ராதையைப் பற்றி யாரும் பேச கூடாதுன்னு என் முன்னாடி பெரியம்மா குடும்பம் கிட்ட சொன்ன பெரியப்பா என்னையும் பாட்டியையும் வழி அனுப்பி வைச்சாரு.”

 

“நானும் பாட்டியும் ஊட்டி போன அப்புறம் தான் பாட்டி என்னைப் பத்தி எல்லாத்தையும் சொன்னாங்க, அப்போ இருந்தே நான் என்னை அமைதிப்படுத்திக்கிட்டேன். அதுக்கு அப்புறம் என்னுடைய முழு கவனமும் படிப்புல மட்டும் தான் இருந்துச்சு. அதனால தான் எனக்கு மேக்கப், அழகு பண்றது, பர்த்டே பார்ட்டி, ஸ்கூட்டி, கார் இப்படி எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்லை. என் இன்ஜினியரிங் படிப்பும் மெரிட்ல கிடைச்சதால ஃபீஸ்ன்னு பெருசா இல்ல” என்று சொல்லி முடித்தாள் ராதை. 

 

ஆனாலும் ராதைக்கு தெரியாத விஷயம் சில இருக்கிறது.. அன்று சிறிய வயது ராதை அவளின் பாட்டியுடன் ஊட்டி கிளம்பிய பின்னர், விஜயகுமார் அவரின் கம்பெனிக்கு கிளம்பிய பின்னர்… மைதிலியின் அண்ணன் சேதுராமன் மற்றும் அண்ணி லட்சுமி ராதையைப் பற்றி தப்பாக தான் பேசினார்கள். 

 

“இந்தப் பொண்ணால உனக்கும் உன் பொண்ணுக்கும் கண்டிப்பா பிரச்சனை வரும்” என்றார்கள். அப்போது அவர்களுடைய புதல்வன் கிருஷூம் இருந்தான். அவன் மனதில் ராதையைப் பற்றி ஏறிய தப்பான எண்ணவோட்டங்கள் இன்னும் பலமானது. இவர்கள் பேசின அனைத்தையும் மறுத்த மைதிலி, ராதையிடம் இதனை மறைத்து விட்டார். 

 

“ஐ அம் வெரி சாரி ராதை, உனக்கு அம்மா, அப்பா இல்லை, ஆனா நீ பணக்காரினு நினைச்சேன். ஆனா நீ பணம் இருந்தும் ஒரு ஏழை” என்று அழுதாள் வனிதா. 

 

“எனக்கு பணம் தேவை இல்லை வனிதா. ஆனா பெரியம்மா குடும்பம் என்னை ஹர்ட் பண்ணினது எல்லாம் இப்போ நினைச்சாலும் எனக்கு நிம்மதியா தூக்கம் வராது” என்றவளோ தன் அழுத கண்களைத் துடைத்தாள். 

 

“சரி அந்த கனடா குடும்பம் எப்போ இந்தியாவுக்கு வந்தாங்க?” என்று கேள்வியாய் கேட்டாள் வனிதா. 

 

“அவங்க பெங்களூர்ல செட்டில் ஆகி ஒரு நாலு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்டி, மைதிலி பெரியம்மாவும் கோதை அக்காவும் பேசறதை வெச்சு தெரியும்… உண்மையை சொல்லணும்னா அவங்க இந்தியாவுல செட்டில் ஆனது தெரிஞ்சு தான் நான் வேணும்னே சென்னையில காலேஜ் செலக்ட் பண்ணி ஹாஸ்டல்ல சேர்ந்தேன். 

 

கண்டிப்பா அவங்க இந்தியாவுல செட்டில் ஆனதுக்கு அப்புறம் அடிக்கடி மைதிலி பெரியம்மாவைப் பார்க்க வருவாங்க. அவங்க முகத்துல முழிக்கக் கூடாதுனு தான் சென்னையில படிச்சு தங்கி ஹாஸ்டல்ல சேர்ந்தேன். அதுக்கு அப்புறம் இந்த நாலு வருஷம் வேணும்னே கோதை அக்காவோட பேர்ட்டே பார்ட்டி அப்போ எக்ஸாம், பிராக்டிகல்ஸ், அது இதுனு பொய் சொல்லி ஊருக்கு வரதை தவிர்த்தேன்.”

 

“ஏன்னா மைதிலி பெரியம்மா குடும்பத்துக்கு கோதை அக்கா ன்னா உயிர். அதனால கண்டிப்பாக அக்காவோட பேர்ட்டேக்கு வந்திருப்பாங்க.”

 

“அதுலயும் அந்த பையனும் என் அக்காவும் பெஸ்ட் பிரண்ட்ஸ் போல, அடிக்கடி அக்கா அவன் கூட ஃபோன்ல பேசுவாங்க. நேர்ல கூட மீட் பண்ணோம்னு என்கிட்ட சொல்லுவாங்க. நல்லவேளை நானும் அந்த குடும்பமும் அந்த சம்பவத்திற்கு அப்புறம் இன்னும் பார்க்கலனு நிம்மதியாக இருந்தேன். ஆனா இன்னிக்கு மொத்த குடும்பமே இங்க வராங்க போல. அதுல இருந்து ஒரே தலைவலியா இருக்குடி” என்றாள் ராதை சோர்வாக. 

 

“நீ நிம்மதியாக இருடி, அதெல்லாம் பத்து வருஷம் முன்னாடி நடந்த விஷயம், அவங்க எல்லாரும் உன்னை பார்த்தே பத்து வருஷம் மேல ஆகுது உன்னை மறந்துருப்பாங்க… சரி எனக்கொரு டவுட் டி…”

 

“நீ சொல்றதை வெச்சு பார்த்தா அந்த கனடா குடும்பம் பிரகாஷ் அத்தானை விட பணக்காரங்களா இருப்பாங்க, அந்த திமிரு புடிச்ச பையனுக்கும் ஏறத்தாழ பிரகாஷ் அத்தான் வயசு தான் இருக்கும்… உன் அருமை கோதை அக்காக்கு அவன் முறைப் பையன் தானே, அவனை ஏன் அவ கரெக்ட் பண்ணல? அட்லீஸ்ட் நீயாவது பிரகாஷ் அத்தானை நிம்மதியா பிரச்சனையே இல்லாம கல்யாணம் பண்ணிருக்கலாம்ல” என்ற வனிதாவை இம்முறை முறைத்தாள் ராதை.

 

“ஒருவேளை அந்த கிருஷ் பையன், பிரகாஷ் அத்தான் மாதிரி ஸ்மார்ட் இல்ல போல, சுமார் பீஸ் போல” என்று வனிதாவே ராதை முறைத்ததால் பதில் சொல்லி சமாளித்தாள். 

 

“நான் அவனை அந்த பிரச்சனையோடு பார்த்தது தான்டி, அதுக்கு அப்புறம் நான் அவனை பார்த்தது இல்ல. அவனோட ஃபோட்டோ கூட பார்த்தது இல்ல” என்றாள் ராதை.

 

***

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!