அத்தியாயம் 17

அத்தியாயம் 17

 

“சரிடி, எப்படி இருந்தாலும் இந்த வருஷம் கோதை பேர்ட்டேக்கு அந்த கனடா குடும்பம் வரும். இது தெரிஞ்சது தானே, அப்போ எப்படி இருந்தாலும் நீ பார்த்துத் தானே ஆகணும். அதனால கவலைப்படாம தைரியமா ஃபேஸ் பண்ணு” என்றாள் வனிதா ஆறுதலாக. 

 

“அது இல்லடி, இந்த நாலு வருஷம் அந்த குடும்பம் மொத்தமா வந்தது கிடையாது. நான் பர்த்டே போட்டோஸ் பார்த்துருக்கேன். அந்த தாத்தா, பாட்டி இல்லனா அந்த அங்கிள், ஆன்ட்டி தான் வருவாங்க. ஆனா இப்போ மொத்த குடும்பமே வரப்போகுதுனு பாட்டி சொன்னாங்க. அதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் ராதை. 

 

“சரி விடு ராதை, நான் ஒன்னு சொல்லவா, பேசாம பிரகாஷ் அத்தானை நீ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு என்னமோ அதான் பெட்டர்னு தோனுது” என்றாள் வனிதா யோசனையாக.

 

“நான் அவரை விரும்பலை டி, அதுவும் இல்லாம அவர் மேல கோதை அக்கா உயிரையே வெச்சிருக்காங்க” என்றாள் ராதை.

 

“நீ ஒரு அன்னை தெரசாவாவே இருடி, உன்னை மாத்தவே முடியாது. சரி வா நம்ம ஊட்டிக்கு வந்து இயற்கையை ரசிக்கலைனா நம்ம மனுஷங்களே இல்ல ஏலியன்ஸ். வா வெளியே போயிட்டு வரலாம்” என்று ராதையின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள் வனிதா. வனிதாவும் ராதையும் வெளியேச் சென்றதைக் கண்டான் பிரகாஷ். 

 

அப்போது மணி இரவு ஏழு இருக்கும், கோதை விலை உயர்ந்த சல்வாரை அணிந்து முகத்திற்கு நன்றாக ஒப்பனை செய்துவிட்டு பிரகாஷின் குடும்பம் தங்கி இருக்கும் காட்டேஜிற்குச் சென்றாள். 

 

அங்கு சென்ற கோதைக்கோ ஏமாற்றம் தான் கிடைத்தது ஏனெனில் அங்கு பிரகாஷ் இல்லை. அவனுடைய தாய், தந்தை மற்றும் மாமா, அத்தை தான் இருந்தார்கள். 

 

“ஆன்ட்டி பிரகாஷ் எங்க?” என்று கேட்ட கோதையிடம், “பிரகாஷும் விஜய்யும் பக்கத்துல இருக்கிற ஃப்ளவர் பார்க்கிற்குப் போயிருக்காங்க கோதை” என்றார் விஜயா. 

 

‘ச்ச பிரகாஷ் கிட்ட அழகா டிரஸ் பண்ணிட்டு வந்து காட்டலாம்னு பார்த்தா அவர் இல்லையே, சரி பக்கத்துல இருக்க பார்க் தானே நம்ம போய் பார்ப்போம்’ என்று மனதில் நினைத்தவள் அங்கு செல்ல கிளம்பினாள். 

 

“ஊட்டி செமயா இருக்குலடி… இந்த மாதிரி வாக் சான்ஸே இல்லை” என்றபடி வனிதா ராதையுடன் பேசிக்கொண்டு வந்தாள். அப்போது வனிதாவின் மொபைல் அடித்துக் கொண்டே இருந்தது.

 

“இந்த விஜய் என்னடி கால் பண்ணிட்டே இருக்கான்? சரி ஏதாவது எமர்ஜென்சியா இருக்கப் போகுது ஃபோனை எடுப்போம்” என ராதையிடம் கூறிவிட்டு விஜய்யிடம் பேசினாள் வனிதா. 

 

“ம்ம் சொல்லு விஜய்… என்ன? எதுக்கு? ஷப்பா முடியல, நாங்க நம்ம காட்டேஜ் இருக்கிற ரோட்டுல தான் சும்மா ஒரு குட்டி வாக் போயிட்டு இருக்கோம்” என்ற வனிதாவிடம் விஜய் என்ன சொன்னானோ வனிதாவும், “சரி வரேன்” என்று கட் செய்தாள். 

 

“என்னடி ஆச்சு, விஜய் என்ன சொன்னார்? ஏதாவது பிரச்சனையா…?” என்று பதற்றமாகக் கேட்டாள் ராதை.

 

“ஆமாடி, பிரகாஷ் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிரச்சனை பண்றானாம், நம்மளை உடனே வரச் சொல்றான்” என்ற வனிதா ராதையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

“எனக்கு ரொம்ப பயமா இருக்குடி” என்று அழத் தொடங்கினாள் ராதை.

 

“ஏய் ராதை கூல்… நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டி. நீ ஏன் இப்படி பயந்து சாகுற?” என்று கேட்டாள் வனிதா.

 

“உனக்கு என்னோட சூழ்நிலை விளையாட்டா போச்சுல, நீ கூட என்னை புரிஞ்சிக்கல டி” என்று இம்முறை கடுப்பானாள் ராதை. 

 

“சரி டி, என் தப்பு தான் சாரி கோச்சிக்காத. இனி இப்படி பண்ண மாட்டேன் பிராமிஸ்… விஜய் ஏதோ என்னை உடனே பாக்கணுமாம், இதோ அங்க தெரியுதுல ஒரு பார்க் அங்க தான் இருக்கானாம், வா போய் என்னனு கேட்போம்” என்றாள் வனிதா.

 

“நீ போயிட்டு வாடி, நான் வெளியே நிக்குறேன்” என்று வனிதாவை மட்டும் பார்க்கின் உள்ளே அனுப்பினாள் ராதை. 

 

வனிதா வருவதைக் கண்ட பிரகாஷ் பக்கத்தில் ராதை இல்லை என்பதை உணர்ந்து, “உன் கூட தானே வனிதா ராதை வெளியே வந்தா. இப்போ நீ மட்டும் வர அவ எங்கே?” என்று கேட்டான்.

 

“அது வந்து அத்தான்… என்னை விஜய் கால் பண்ணி வர சொன்னான்” என இழுத்தாள். 

 

“நான் தான் விஜய் கிட்ட அப்படி பேச சொன்னேன். உன் பிரண்ட் ராதை என் நம்பரை பிளாக் பண்ணிருக்கா, அவகிட்ட நான் பேசணும். அவள் எங்க?” என்று வனிதாவிடம் அதட்டினான்.

 

“ராதை வெளிய நிக்கிறா” என பயத்தில் உளறினாள் வனிதா. அவளைப் பார்க்க வெளியேச் சென்றான் பிரகாஷ். 

 

“வனிதா, அண்ணாக்கு பிடிக்காத கல்யாணம் வீட்ல முடிவு பண்ணிருக்காங்க. அண்ணா ராதையைத் தான் லவ் பண்றான். எனக்கு இந்த விஷயத்தை போன வருஷமே சொல்லிட்டாரு. எனக்கு நேத்து தான் கோதை கூட அண்ணாக்கு திருமணம் நிச்சயம் வரை பேசிருக்காங்கன்னு தெரியும். அதான் அண்ணாகிட்ட சொன்னேன்” என்றான் விஜயேந்திரபூபதி. 

 

“நீ உன் அண்ணா பத்தியே பேசுறீயே, ராதை நிலைமைய கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா? அவ மனசுல உன் அண்ணா இல்ல” என்றாள் வனிதா மிடுக்காக.

 

வனிதாவிற்காக காத்திருந்த ராதை வெளியே இருந்த டீ கடையில் ஒரு பெண் டீ குடிப்பதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண் டீ கப்பில் ஒரு ஸ்பூனைப் போட்டு அதில் பிஸ்கட்டை போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தாள். ‘என்ன இந்தப் பொண்ணு விசித்திரம சாப்டுட்டு இருக்கா’ என ராதை நினைத்துக் கொண்டிருக்கும் போது, “ராதை…” என்று கடுப்பாக அழைத்தபடி அவள் பக்கத்தில் வந்தான் பிரகாஷ்.

 

பிரகாஷை இங்கே கண்டது ராதைக்கு அதிர்ச்சி ஆனது. “நானும் உனக்காக பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். ஆனா நீ எனக்கும் கோதைக்கும் கல்யாணம் பேசிருக்காங்கனு சந்தோஷமா இருக்க. உனக்கே தெரியும் நான் உன்னைத் தான் காதலிக்குறேன். உன்னைத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான் உறுதியாக. 

 

“இங்க பாருங்க பிரகாஷ்… நான் உங்களைக் காதலிக்கல. நீங்க என் அக்காவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என்று அந்த இடத்தை விட்டு நகர முயற்சித்தார் ராதை. அப்போது பொது இடம் என்று கூடப் பார்க்காமல் பிரகாஷ் ராதையின் கையை இறுக்கமாக பிடித்தான். 

 

“எனக்கொரு நல்ல பதில் சொல்லாமல் நீ இங்கிருந்து கிளம்ப முடியாது ராதை” என்றவனோ அவனின் பிடியை இறுக்கினான். 

 

“பிரகாஷ் கையை விடுங்க, யாராவது பார்த்திட போறாங்க ப்ளீஸ்” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் ராதை. 

 

“முடியாது ராதை, நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்றவன் அவள் கையை விடவில்லை.

 

“ஏய் யசோ! நீ இன்னும் டீ குடிச்சு முடிக்கலயா? உன் அண்ணனுக்கு கால் பண்ணா எடுக்கவே மாட்டேங்கிறான். எந்த பொண்ணு கூட கடலை போட்டுட்டு இருக்கான்?” என்று அந்த டீ குடித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் பேசியபடி அவளின் பக்கம் வந்தாள் கோதை.

 

“அங்க ஒரு சினிமாவே நடக்குது, அதைத் தான் பார்த்துட்டு இருந்தேன்” என்றாள் அந்தப் பெண் யசோ. 

 

“அப்படி என்னடி பார்க்குற?” என்று யசோ பார்த்துக் கொண்டு இருந்த புறம் அவளின் பார்வையை திருப்பிய கோதை அதிர்ந்தாள். ஏனெனில் அவள் கண்டது பிரகாஷின் பிடியில் மாட்டிக் கொண்டிருந்த ராதையைத் தான். 

 

“பிரகாஷ் என்ன பண்றீங்க? ராதை கைய விடுங்க” என அவர்களின் அருகே வந்த கோதை கத்தினாள். அப்போது தான் நீண்ட வாக்குவாதம் பிறகு ராதையைக் காண வந்தனர் வனிதா மற்றும் விஜய். 

 

“கோதை, நீ வந்தது ரொம்ப நல்லதா போச்சு. நான் ராதையை லவ் பண்றேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான் பிரகாஷ் ஆவேசமாக.

 

***

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!