சென்னையில் இருக்கும் அந்தப் பிரபலமான பொறியியல் கல்லூரியில் பிரகாஷ் சிவமாறனின் கார் நின்றது. அவனை வரவேற்ற அந்த கல்லூரியின் மாணவர் சங்க தலைவர் வினித், அவனை அழைத்து விருந்தினர் அறையில் அமர வைத்து, அவனுக்கு பழச்சாறு வழங்கினான்.
அவன் வந்த விஷயம் தெரிந்ததும் அவனைப் பார்க்க வந்த அந்தக் கல்லூரியின் முதல்வர், “வாங்க மிஸ்டர் பிரகாஷ் சிவமாறன், நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களை மாதிரி யங் பிசினஸ் டைகூன் இங்க வந்து கலந்துக்கிட்டா, எங்க காலேஜ் மாணவர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கும். ப்ளிஸ் வாங்க… நாம இப்போ ஆடிட்டோரியம் போகலாம்” என்றவரோ பிரகாஷை அழைத்துச் சென்றார்.
அங்கு அரங்கமே பிரகாஷைக் கண்டபின் அதிர்ந்தது. “ஏய் ராதை, இவர் தான் என் அத்தை பையன். இவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் வனிதா சந்தோஷத்துடன்.
“வாவ் கங்கிராட்ஸ் டி” என்றவளோ அதன் பின்னர் அமைதியாக கல்லூரி முதல்வர் பேசுவதைக் கவனித்தாள்.
“என்னடி ஏதோ மாதிரி இருக்க?” என விசாரித்தாள் வனிதா.
“இல்லடி, வீட்டு நினைப்பா இருக்கு, நேத்து என் அக்காவோட பர்த்டே பார்ட்டி நடந்துச்சு. அதுக்கு அப்புறம் பேசுறேன்னு கோதை அக்கா சொன்னா. ஆனா, இன்னும் அவ பேசவே இல்ல! அதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள்.
பிரகாஷ் பேசும் பொழுது ராதை அவனைக் கவனிக்கவில்லை. அவளின் மனம் வீட்டை மட்டுமே நினைத்தபடி இருந்தது. வனிதா சொல்லும் போது கூட அவனை அவள் பார்க்கவில்லை.
அவள் இப்படியே உட்கார்ந்துக் கொண்டிருக்கும் போது தான் அவளுக்கு கால் செய்தாள் கோதை. ஃபோனை சைலண்ட் மோடில் வைத்ததால், அங்கு இருக்கும் வாலன்டியர்ஸிடம் மாட்டாமல் இருந்தாள்.
“ஏய் வனி, கோதை க்கா கால் பண்றா, இப்போ நான் அப்படியே ஹாஸ்டல் போய்டுறேன்” என்றவளோ பாத்ரூம் செல்ல வேண்டும் என்று அங்கு இருக்கும் வாலன்டியர்ஸிடம் கேட்டு வெளியேச் சென்றாள். அவள் வெளியே வருவதற்குள் கோதை மூன்று முறை அழைப்பு கொடுத்து விட்டாள்.
அவள் ஃபோனை எடுத்ததுமே, “ராதை, உனக்கு எத்தனை தடவை தான் டி நான் கால் பண்றது?” என்றாள் கோபத்தோடு.
“சாரிக்கா, நான் இப்போ தான் பார்த்தேன். சரி நீ உன் மேட்டர்க்கு வா.”
“அவர் வந்தார்டி… எனக்கு கிஃப்ட் எல்லாம் கொடுத்தாருடி, அவ்வளவு தான்” என்றாள் கோதை.
“ம்ம் நீ சொன்னியா இல்லையா?” என ஆர்வமாக கேட்டாள் ராதை.
“நான் இன்னும் சொல்லல ராதை!”
“அட போ க்கா, நீயும் மூணு மாசமா அவரைக் காதலிக்குறேனு சொல்ற, ஆனா அவர் கிட்ட சொல்ல தான் மாட்டேங்கிற” என சலித்துக் கொண்டாள் ராதை.
“அவருக்கு இப்போ தான்டி இருபத்தி அஞ்சு வயசு ஆகுது, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அதுக்குள்ள கண்டிப்பா சொல்லிடுவேன்” என்றவள், “சரி நீ எப்போ கோயம்புத்தூர் வர?” என்று கேட்டாள் கோதை.
“அடுத்த வாரம் செமஸ்டர் முடியுதுல க்கா, வனிதாவும் நானும் ஊருக்கு ஒரே டிரைன்ல வரோம்… சரி உன் மனசை கவர்ந்த மதனாவுடைய போட்டோவையாவது காட்டு” என்றாள் விடாமல்.
“உனக்கு நான் நேர்லயே காட்டுறேன் ராதை” என்றவளோ அழைப்பைத் துண்டித்தாள்.
வனிதாவும் ராதையும் பள்ளிப் பருவத்திலிருந்து நெருங்கிய தோழிகள். இருவருக்கும் சென்னையில் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது, ஒரே பிரிவில் தான் இருவரும் படிக்கிறார்கள். வனிதா நடுத்தர வர்க்கத்தினர் ரகம். ஆனால் அவளுடைய அத்தை விஜயா பிரபல கோடீஸ்வரரை மணந்ததால், அவருடைய வாழ்க்கை செழிப்பாக அமைந்தது. அவர் கணவர் ஆறுமுகம் கோயம்புத்தூரில் பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார். இவர்களுக்கு இரு புதல்வர்கள். மூத்த மகன் பிரகாஷ் சிவமாறன், இளையவன் விஜயேந்திரபூபதி.
பிரகாஷ் சிவமாறன், யூஎஸ்ஏயில் எம்எஸ் முடித்த பின் தன் தந்தை தொழிலைக் கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டான். இப்போது கோவையில் இவன் அசைக்க முடியாத பெரும் தொழிலதிபர். இவனுடைய தம்பி விஜயேந்திரபூபதி, மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கிறான்.
விஜயாவிற்கு தன் அண்ணன் மகளை பிரகாஷிற்கு மணமுடித்து வைக்க ஆசை. ஆனால் பிரகாஷ் பெண்களின் மீது பெரிதாக விருப்பம் இல்லாதவன். அவனுடைய முழு ஈடுபாடும் தற்போது தொழிலில் முதலிடத்தை தக்கவைப்பதில் மட்டுமே.
இந்த முறை வனிதா கோவை வந்தபோது தன் அத்தை வீட்டுக்கு வந்தவள், “அத்தை பிரகாஷ் அத்தான் எங்க காலேஜ்க்கு வந்த போது என்னைக் கண்டும் காணாமல் இருந்தார் அத்தை. இப்படியே போச்சுனா என்னை பிரகாஷ் அத்தான் கல்யாணம் பண்ணுவாருனு எனக்கு நம்பிக்கை இல்லை” என்று அழுதாள்.
“சரி அழாத வனிதா, அத்தை அதுக்கு ஒரு ஐடியா குடுக்குறேன். நான் உன் அப்பா, அம்மாகிட்ட பேசி அவங்களை இங்க நம்ம வீட்ல இருக்குற மாதிரி பண்ணிடுறேன். அப்போ இனி நீயும் இங்க தானே இருப்ப, அப்பயாவது பிரகாஷ் உன்கிட்ட ஏதாவது பேசுவானானு பார்க்கலாம்” என்றவரோ தன்னுடைய அண்ணா மற்றும் அண்ணியை ஒருவாறு சம்மதிக்க வைத்து அவரின் வீட்டிலியே தங்க வைத்தார்.
இதைக் கவனித்த ஆறுமுகம், “அவங்க இங்க தங்குறது எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா ஒரு சின்னப் பொண்ணு மனசுல ஆசைய விதைக்காத, அது நாளைக்கு தப்பா போச்சுனா பெரிய பாவம் விஜயா” என்றார்.
“ஏங்க நீங்க நம்ம ஜோசியர் சொன்னதை மறந்துட்டீங்களா? நம்ம பிரகாஷோட ஜாதகத்துக்கு அவனுக்கு வெளிய பொண்ணு எடுத்தா, அவன் அவ பின்னாடியே போய்டுவானாம்… அதான் சொந்தத்துல எடுக்க முடிவு பண்ணிட்டேன்” என்றார்.
“என்னமோ பண்ணு, நீ திருந்த மாட்ட” என்றவரோ பிரகாஷ் தனக்கு புதிதாக தொழில் செய்ய அமைத்துத் தந்த சூப்பர் மார்க்கெட்டை கவனிக்கச் சென்றார்.
பிரகாஷ் சிவமாறன் தன் தந்தையின் தொழிலை கையில் எடுத்து, தமிழ்நாட்டு அளவில் இருந்ததை இப்போது இந்திய அளவுக்கு பெரிதாக்கினான். தன் தந்தையை வீட்டில் சும்மா உட்கார வைக்கப் பிடிக்காமல், அவருக்காக பிரகாஷ் அமைத்துத் தந்த சூப்பர் மார்க்கெட் தான் விஜயா சூப்பர் மார்க்கெட்.
அங்கே கிடைக்காத பொருள்களே இல்லை என்ற அளவிற்கு எல்லா விதமான, வகையான பொருட்களும் கிடைக்கும். தன் மகன் தனக்கு வைத்துக் கொடுத்த தொழிலைப் பெருமையாக நினைத்த ஆறுமுகம் தினமும் தவறாமல் அங்குச் சென்று விடுவார்.
***
