அத்தியாயம் 21
அன்று மாலை ஆறு மணிக்கு கோதையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கேக், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் இசைக் குழுவை ஏற்பாடு செய்திருந்தனர் அவளுடைய பெற்றோர்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் அவர்கள் பிஸியாக இருந்தார்கள்.
தனக்கு அலங்காரம் செய்வதற்காகவே ஊட்டியில் இருக்கும் ஒரு பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை ஏற்பாடு செய்திருந்தார் கோதை. ஒரு நீல வண்ண சேலையை உடுத்தியவள், அலங்காரத்தில் பார்க்க கொழு கொழுவென பொம்மை போல அழகாக இருந்தாள். ஆனால் அவள் மனதில் பதற்றம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அவளுடைய இந்த பிளான் நடந்தால் மட்டும் தான் பிரகாஷை நெருங்க முடியும் என யோசித்தவள் ராதைக்கு போன் செய்தாள்.
தன் பெரியம்மா, பெரியப்பா கொடுத்த அழகிய பூ வேலைப்பாடு கொண்ட பிங்க் கலர் சல்வாரை அணிந்து அமர்ந்துருந்த ராதை ஒருவித பயத்துடனே இருந்தாள்.
கோதையின் அழைப்பு வந்ததும் அவசரமாக ஃபோனை எடுத்து, “ஆங் அக்கா, நான் இதோ கிளம்பிடுறேன்” என்றுவிட்டு அழைப்பை கட் செய்தாள். அப்போது அவளைத் தேடி அங்கே வந்தாள் வனிதா.
“என்ன டி ராதை, இன்னும் கிளம்பாம இருக்க? ஏய் உன் சல்வார் ரொம்ப அழகா இருக்கு டி, இரு நான் உனக்கு ஃபிரென்ச் பிரைடு போட்டு விடுறேன்” என்று ராதையின் தலையைப் பின்ன ஆரம்பித்தாள்.
தன் மனம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால் வனிதா செய்வதைக் கண்டுக் கொள்ளும் நிலையில் இல்லாத ராதை, அவளிடமாவது இதைப்பற்றிக் கூறலாமா என்று நினைத்தவளின் மனது தடுத்தது.
“ஏய் ஒருத்தன் வந்திருக்கான் டி, ஆளு பார்க்க அவ்வளவு ஸ்மார்ட். மதியானம் பார்த்தேன் ஆனா இப்போ அவனை ஆளையே காணோம்” என வம்சியைக் கண்டதை ராதையிடம் கூறிக் கொண்டிருந்த வனிதா அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன் அவளின் முகத்தைப் பார்த்தாள்.
ஏதோ யோசனையில் இருந்த ராதையிடம், “என்ன ஆச்சு டி? ஏதோ யோசிச்சிட்டு இருக்க, பிரகாஷ் அத்தான் எனக்கு தெரிஞ்சு உன்னை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாரு டி. உன்னை கல்யாணம் பண்ணியே தீருவாரோனு தான் தோணுது.”
“நீ மனசை போட்டு குழப்பிக்காத, இந்த விஷயம் உன் கன்ட்ரோல்ல இல்ல. அதனால ஃப்ரீயா இரு” என்ற வனிதா, “சரி நான் போய் சமோசா, பஜ்ஜி எல்லாம் சாப்பிட போறேன்.. நீயும் வா” என்றவளிடம், “நீ போ வனிதா.. நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்றாள்.
காந்திமதி பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த ராஜேஷ்வரி பாட்டியோ அங்கு சென்றுக் கொண்டுருந்த வனிதாவைப் பார்த்து ராதை எங்கே என்று கேட்டார்.
“அவ இன்னும் பத்து நிமிஷத்துல வராளாம் பாட்டி” என்றவளோ ஆவலாக சமோசா சாப்பிட சென்றாள்.
ஒரு அழகிய மல்டிகலர் காது வளையத்தை அணிந்து கொண்ட ராதை, தன்னுடைய அழகிய புருவங்களுக்கு இடையில் கல் பொட்டை வைத்து, கண்ணாடியில் தன் பேரழகை பார்க்கப் பிடிக்காமல் வெளியே வந்தாள். வெளியே யார் கண்ணிலும் படாமல் இருக்க காட்டேஜின் இடையில் இருந்த மரம், செடி கொடிகளில் மறைந்த வண்ணம், காட்டேஜ் நம்பர் ஐந்திற்கு சென்றாள்.
“ஏய் யசோ, வம்சி எங்க?” என்று கேட்ட தந்தையிடம், “அண்ணா காட்டேஜ் நம்பர் அஞ்சுல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காரு ப்பா. அவர் வரதுக்கு டைம் ஆகுமாம்” என வம்சியின் கட்டளைபடி தன் குடும்பத்தினரிடம் சொன்னாள் யசோதா.
தன் அறையில் தயார் ஆகிக் கொண்டிருந்த பிரகாஷ், தான் ராதையைக் காதலிப்பதை எந்த சமயத்தில் சொல்வது இந்த பார்ட்டியில் சொல்வது என்கிற யோசனையுடன் இருந்தான். பிரகாஷின் தந்தை மற்றும் தாய், கோதைக்காக வாங்கிய வைர நெக்லசை எடுத்துக்கொண்டு தன் வருங்கால மருமகளுக்கு அணிவிக்க ஆர்வமாக தயாராக இருந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ராதை அந்த காட்டேஜ் நம்பர் ஐந்தை திறந்து உள்ளே வந்தவுடன் யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு கதவைச் சாற்றி தாழ் போட்டாள்.
காட்டேஜ் நம்பர் ஐந்து மற்ற காட்டேஜை விடப் பெரியது. அங்கு மொத்தம் நான்கு அறைகள் இருந்தது. அதில் நான்காவது அறையில் இருந்த வம்சி யாரோ கதவைச் சாற்றும் சத்தம் கேட்டவுடன், அந்த ராதை வந்துவிட்டாள் என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.
ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த ராதை, ஜன்னல் வழியாக தன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மறைவான இடத்தில் அமர்ந்தாள்.
அந்த மாலைப் பொழுதில் காட்டேஜின் உள்ளே இருந்த நைட் லேம்ப்பின் வெளிச்சத்தில், குளிரில் தன் உடம்பை இடுக்கி உட்கார்ந்து இருந்தாள். விளக்கு சுவிட்ச் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் அந்த அரைகுறை வெளிச்சத்திலேயே அமர்ந்திருந்தாள் பெண்.
தன் அறையை விட்டு வெளியே வந்த வம்சி, அங்கே ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ராதையின் முதுகை மட்டுமே கண்டவன், முதலில் ராதையை பயமுறுத்த அனைத்து விளக்குகளையும் அணைத்து அந்த காட்டேஜை இருட்டாக்க நினைத்தவன் அதை செயல்படுத்திவிட்ட,
திடீரென்று இருந்த அரைகுறை வெளிச்சமும் காணாமல் போய் முழு இருட்டாக மாறிய உடனே ராதை பயந்து விட்டாள். அந்த சோபாவை விட்டு உடனே எழுந்து பதற்றத்தில் நடந்தவள், கண் முன் தெரியாமல் வம்சியின் மார்பில் வந்து மோதிவிட்டாள்.
தான் ஒரு தூணில் மோதிவிட்டோம் என்று முடிவுசெய்த ராதையோ கண்களை திறவாமலேயே இறுக்க கண்களை மூடிக்கொண்டு இருட்டில் வேறு எங்கும் செல்ல முடியாமல் பயந்து அந்த இடத்தை விட்டு நகர மறுத்தாள்.
பூ போன்ற ஒன்று தன்னை மோதிக்கொண்டு நிற்க அது என்ன என்று அறிய தன் மொபைல் லைட்டை ஆன் செய்த வம்சியோ கண்டது பேரழகியான ஒரு மங்கை.
ஏதோ வெளிச்சம் தன் மீது திடீரென்று படுவதையும் கவனிக்காமல் தன் கண்களை இறுக்க மூடியிருந்த ராதையின் அழகை, அவளின் முகபாவனைகளை தான் ரசித்துக் கொண்டுருந்தான் வம்சி.
அழகான வட்ட நிலா போன்று களங்கம் அற்ற முகம், பால் வண்ண தேகம், பார்ப்பவரை ஈர்க்கும் ஸ்ர்ராபெரி போன்ற உதடுகள், அழகிய உடல் அமைப்பு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் வம்சி. நீண்ட நேரம் பெண்ணவள் மொபைல் லைட்டின் தாக்கத்தால் கண்ணை மூடி இருந்ததால், உடனே டியூப் லைட்டை ஆன் செய்துவிட்டு பிறகு மொபைல் லைட்டை ஆஃப் செய்தான்.
டியூப் லைட் ஆன் ஆனதை உணர்ந்துக் கொண்ட ராதை அவளின் கண்களைத் திறக்க, அவளின் எதிரே ஆறடிக்கும் மேல் உயரத்தில், டெனிம் சட்டையில் பார்க்க ஸ்மார்ட்டாக இருந்தவனை ரசிக்காமல், யார் இவர் என்று யோசித்துக் கொண்டுருந்த ராதையின் முன் சொடக்குப் போட்டான் வம்சி.
காலையில் பார்த்த வனிதாவை ராதை என்று தப்பாக புரிந்துக் கொண்ட வம்சி, தன் முன்னே நிற்கும் அழகிய மெழுகு பொம்மையின் விவரத்தை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில், “யார் நீ, உன் பெயர் என்ன?” என்று அவளின் பெயரைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கம்பீரமாகக் கேட்டான் வம்சி வேதந்த் கிருஷ்ணா.
“நான்… அது வந்து… என் பெயர் ராதை” என்று பயத்தில் தயங்கி கூறினாள்.
அவள் ராதை என்று கூறிய பின் வந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளாத வம்சி, அவளை ரசிப்பதை விட்டுவிட்டு, “வெல்கம் கோமகள் ராதை…” என்றபடி தன் சட்டை பாக்கெட்டில் தன்னுடைய இரு கைகளையும் வைத்துக்கொண்டு நக்கலாக சிரித்தான்.
“நான் தப்பான காட்டேஜ் நம்பருக்கு வந்துட்டேனு நினைக்கிறேன்” என்று ராதை நகர முயன்றாள்.
“நில்லு… இந்த இடத்தை விட்டு நீ நகரக் கூடாது” என்று கட்டளையிட்டவன் அவளின் கையைப் பிடித்து ஒரு அறைக்குள் இழுத்துக்கொண்டு வந்தவன், கதவைத் தாழ் போட்டு அவளைக் கட்டிலில் தள்ளிவிட்டான்.
‘யார் இவன் ஏன் இப்படிப் பண்றான்?’ என்று புரியாத ராதை தன் செல்லை எடுத்துக்கொண்டு வெளியேச் செல்ல கட்டிலில் இருந்து எழுந்தாள்.
அதைக் கண்டு வேகமாக அவளிடம் இருந்து செல்லை பிடிங்கிய வம்சியோ, “லுக் கோமகள் ராதை, ஒரு அரை மணி நேரம் இங்க நீ அமைதியா உட்கார்ந்தா உன்னை அப்படியே வெளியே விட்டுடுவேன். இல்லனா என்கிட்ட சிக்கி சின்னாபின்னமா ஆகிடுவ” என்று அமர்த்தலாகக் கத்தினான்.
அவன் பேசுவதைக் கேட்டு பயந்த ராதையும், “நீங்க யாரு? எதுக்கு என்னை இப்படி அடைச்சு வெச்சிருக்கீங்க? இந்த விஷயம் என் பெரியப்பா, பெரியம்மா, பாட்டிக்கு தெரிஞ்சா உங்களை சும்மா விட மாட்டாங்க” என்று அழத் தொடங்கினாள்.
“ஏய், அப்பா, அம்மா இல்லாத அனாதை நீ… உனக்கு என்ன நடந்தாலும் இங்கே கேட்க ஒருத்தரும் கிடையாது” என்று திமிராகச் சொன்னான் வம்சி.
அனாதை! இந்த வார்த்தையைக் கேட்ட ராதைக்கு பழைய விஷயங்கள் எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது.
‘என்னோட இருபத்தி ஒரு வயசு வாழ்க்கையில என்னை அனாதைனு அவமானப்படுத்துனது, அந்த திமிரு பிடிச்ச கிருஷ் மட்டும் தான்… அதே வார்த்தையை இவனும் சொல்றான்… அப்போ இவன் தான் அந்த க்ருஷா?’ என்று யோசித்தவள் இப்போது அதிகமாக அழ தொடங்கினாள்.
“இங்கப்பாரு, கோதைக்கும் அந்த பிரகாஷுக்கும் நீ தான் தடங்கலா இருக்க. உன்னை நான் ஒன்னும் செய்ய மாட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் இங்க வருவாங்க அந்த பிரகாஷும் வருவான்.”
“அப்போ நீ என்னைத் தேடி தான் இங்க வந்தனு அவங்க கிட்ட சொல்லணும். ஆக்சுவலி நான் விருப்பப்பட்டு தான் வம்சியோட ரூம்க்கு வந்தேன்னு நீ சொல்லணும்” என்றான் வம்சி ஏளனமாக.
இதைக் கேட்டு அதிர்ந்த ராதையோ, “அப்போ நீங்க தான் அந்த கிருஷ்ஷா…?” என பயத்துடன் உறுதிப்படுத்த கேட்டாள்.
“பரவாயில்லையே, கண்டுபிடிச்சிட்ட! இங்கப் பாரு.. கோதையோட வீடியோ இது” என கோதை இவனுக்கு அனுப்பிய வீடியோவை காட்டியவன், “இனி கோதையோட உயிர் உன் கையில தான் இருக்கு, நான் சொல்ற மாதிரி நீ பண்ணா பிரகாஷுக்கு உன் மேல வெறுப்பு வந்து கோதைக்கிட்ட போயிடுவான். நீ சொல்ல போறது ஒன்னு தான் நான் விருப்பப்பட்டு தான் வம்சியோட ரூம்க்கு வந்தேன்னு” என்றான் திமிராக.
“இங்க பாருங்க, என்னால என்னோட மானத்தை வித்து பிரகாஷ்கிட்ட வெறுப்ப வாங்க முடியாது. என் அக்காவோட உயிரைக் காப்பாத்துறது என் பொறுப்பு. அதனால என்னை இப்போ மரியாதையா வெளிய போக விடுங்க” என்றாள் ராதை.
“ஏய் எவ்வளவு திமிர் டி உனக்கு? உன்னை ஒன்னும் என் கூட உல்லாசமா இருக்கச் சொல்லல. என்னைத் தேடி நீ விரும்பி வந்ததா ஒரு சின்ன பொய் சொல்ல சொல்றேன். தட்ஸ் இட். எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட நிச்சயம் முடிவாகப் போகுது, இப்போ நீ இதை கோதைக்காக சொல்லணும். சொல்லித்தான் ஆகணும்” என்றான் வம்சி தீர்மானமாக.
***
