அத்தியாயம் 22
இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.
கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.
“இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட பொண்ணு கோதையோட இருபத்தி மூனாவது பிறந்தநாள்.”
“இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னா என் பொண்ணு ஆண்டாள் கோதைக்கும் என்னோட பிரண்ட் ஆறுமுகத்தோட மூத்த பையன் பிரகாஷ் சிவமாறனுக்கும் நாங்க கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றோம்” என்று சந்தோஷமாகக் கூறினார்.
ஏற்கனவே ராதை இல்லாததில் கடுப்பான பிரகாஷ் அவளைத் தேடி அவள் இருக்கும் காட்டேஜிற்குச் சென்று பார்த்தான். ஆனால் தான் அவள் அங்கு இல்லையே.
ராதை எங்கே போயிருப்பாள் என்று குழம்பிய பிரகாஷின் கண் எதிரில் பிரகாஷின் அம்மா கோதைக்கு அவர்கள் வாங்கிய வைர நெக்லஸை அணிவித்தார்.
இதற்குப் பிறகும் நாம் சும்மா இருப்பது தவறு என்று உணர்ந்த பிரகாஷோ அனைவரின் முன்னரும் வந்து நின்றான்.
“உங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்தை சொல்லணும். நான் கோதையை ஒரு நல்ல ஃபிரண்டா மட்டும் தான் பாக்குறேன். நான் ராதையைத் தான் காதலிக்குறேன்… அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்றான் பிரகாஷ் எல்லார் முன்னிலையிலும்.
இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்த கோதை அமைதியாகவே நின்றுக் கொண்டு இருந்தாள். “பிரகாஷ் என்ன சொல்ற? உனக்கு கோதை தான் பொருத்தமானவ. உன்னோட அம்மாவுக்குத் தெரியும் உனக்கு எது நல்லதுனு” என்று ஆதங்கப்பட்டார் விஜயா.
“அம்மா போதும், நான் ஒன்னும் குழந்தை இல்ல. நான் ராதையைத் தான் லவ் பண்றேன். அவ தான் எனக்கு வேணும்!” என்று தீர்மானமாகக் கூறினான்.
மைதிலி மற்றும் அவளுடைய குடும்பம் அதிர்ச்சியில் இருந்தனர். இப்போது விஜயகுமாரிடம் திரும்பிய பிரகாஷோ, “அங்கிள் நான் கோதையை ஒரு நல்ல பிரண்டா மட்டும் தான் பார்த்தேன். ராதையைத் தான் லவ் பண்றேன். நான் கோதைக்கிட்ட இதுவரைக்கும் காதல்ன்ற எண்ணத்தோடு பேசியது கிடையாது,பழகியதும் கிடையாது.”
“நீங்கள் நியாயமானவர்னா உங்கள் தம்பி பொண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்க. அவளை என் கையில வைச்சு தாங்குவேன்” என்றான் பிரகாஷ்.
அந்த இடத்தில் சிறிது நேரம் அமைதி நிலவியது. ‘இப்போ ஏன் யாரும் ராதையை தேட மாட்டிங்குறாங்க? நம்மளோட பிளான் நடக்கணும்னா எல்லாரும் ராதையைத் தேடணும்’ என்று கோதை யோசித்துக் கொண்டிருந்த போது தான்,
“ஆறுமுகம் எனக்கு கோதையும் ராதையும் ஒன்று தான், என்னோட தம்பி பொண்ணு ராதையை பிரகாஷுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க எனக்குச் சம்மதம்” என்றார் விஜயகுமார்.
இம்முறை கடுப்பான சேதுராமனோ, “எப்படி விஜயகுமார்! கோதை மனசுல இந்த பிரகாஷ் இருக்கும் போது அவ கண் முன்னேவே உங்க தம்பி பொண்ணை கல்யாணம் செஞ்சு செய்ய வாக்கு கொடுக்குறீங்க? இதுக்குத் தான் நாங்க அப்போவே சொன்னோம் மைதிலி, அந்த பொண்ணு ராதையால எப்போவுமே உங்க குடும்பத்துக்கு தான் பிரச்சனைனு” என்று கடுப்பில் கத்தினார் மைதிலியின் அண்ணன்.
“அண்ணா இது எங்களோட குடும்ப விஷயம், நீங்க இதுல தலையிட வேண்டாம்” என்ற மைதிலி, “நீங்க சொல்றது போல ராதை தான் பிரகாஷைத் கல்யாணம் பண்ணிக்கணும்” என்று தன் கணவனிடம் சொன்னார் மைதிலி.
“நீங்க பேசுவது எல்லாம் இருக்கட்டும் ராதை எங்கே?” என்று கேட்டார் இராஜேஸ்வரி.
இது தான் சமயம் என்று வாயைத் திறந்த கோதை, “அவ காட்டேஜ் நம்பர் ஐஞ்சுக்கு போறதை நான் பார்த்தேன்” என்று ஒன்றும் தெரியாத மாதிரி கூறினாள்.
இங்கு வம்சியிடம் போராட முடியாமல் திணறிக் கொண்டிருந்த ராதை, அப்படியே அதே இடத்தில் அமர்ந்துருந்தாள். அந்த சமயத்தில் கதவின் தாழ்பாளை மட்டும் எடுத்து விட்டு வந்து மறுபடியும் ராதையின் எதிரே கையைக் கட்டிக் கொண்டு, சோர்ந்து அமர்ந்திருந்தளைப் பார்த்த வம்சி, ‘சோர்ந்து இருந்தாலுமே பார்க்க தேவதை போல் தான் இருக்கா’ என்று யோசித்தவன் தன்னை சுதாரித்துக் கொண்டான்.
‘இனி இவளை ரசிச்சு பார்க்கக் கூடாது வம்சி. நீ இப்படி எந்த ஒரு பெண்ணையும் பாத்தது இல்லையே, ஏன் இவளை மட்டும் இப்படிப் பார்க்குற? இனி இவளை இப்படி பாக்கவே கூடாது’ என்று தனக்குள்ளேயே சபதம் எடுத்தவன், ‘இந்த கோதை எல்லாரையும் கூட்டிட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா?’ என்று கோபத்தில் இருந்தான்.
அவன் யோசித்த சில நிமிடங்களில் அனைவரும் கதவைத் திறந்து உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே வந்து பார்த்த போது ராதையும் வம்சியும் ஒரே அறையில் இருந்தனர். இதைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது பிரகாஷ் உட்பட.
“ராதை நீ எப்படி இங்க?” என்று கேட்டான் பிரகாஷ்.
‘பிரகாஷ் எதுக்கு எல்லார் முன்னாடியும் இப்படி என்கிட்ட உரிமையாய் கேள்வி கேட்குறார்?’ என்று யோசித்த ராதையின் முன்னே விஜயகுமார் வந்து நின்றார்.
“ராதை இங்க எதுக்கு வந்த? உன்னை பிரகாஷ் காதலிக்குறதை ஏன் என் கிட்ட மறைச்ச? என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா?” என்று வம்சியை ஒரு பார்வை பார்த்து விட்டு கேள்வி கேட்டார். ஏனெனில் வம்சிக்கு ராதையை பிடிக்காது என்பதால் அவன் ஏதாவது அவளை காயப்படுத்தி இருப்பானோ என்ற எண்ணத்தில் கேட்டார் விஜயகுமார்.
வம்சிக்கு ராதை இன்னும் வாயைத் திறக்காமல் இருப்பது கடுப்பை தான் உண்டாக்கியது. வம்சியின் குடும்பம் வம்சியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். அதனால் அவர்கள் அமைதி காத்தனர்.
இதை இப்படியே விட்டால் நமக்கு ஆபத்து என்று கோதையே, “கிருஷ்ஷைத் தேடி வந்தியா ராதை…?” என்று இழுத்தாள். அனைவரும் இவள் பேச்சில் குழப்பம் அடைந்தனர்.
ராதை வம்சியோடு இருக்கத் தான் இங்கு வந்தேன் என்று கூறுவாள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோதை மற்றும் வம்சிக்கு மூக்கு உடைவது போல் ராதை பதிலை அளித்தாள்.
“பெரியப்பா… நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க. கோதை அக்காவும் பிரகாஷும் சேரணும். அப்படி இல்லைனா கோதை அக்கா தற்கொலை செஞ்சிடுவாங்கன்னு இவர் ஒரு வீடியோவைக் காட்டினார்…”
“கோதை அக்கா பிரகாஷோடு சேர வேணும்னா நான் இவரை விருப்பப்பட்டு தேடி இங்கு வந்தேன்னு பொய் சொல்லச் சொல்லி மிரட்டிக்கிட்டு இருந்தார்” என்று வம்சியைக் கை காட்டிய ராதை,
தன் பெரியப்பாவைக் அணைத்துக் கொண்டு, “என்னால என் மானத்தை வித்து பொய் சொல்ல முடியாது பெரியப்பா” என்று அழுதாள்.
இதைக் கேட்டு தன் இரு கைகளையும் முறுக்கிய வம்சி அனைவரின் முன்னிலையிலும் தன் பெரியப்பாவை அணைத்து அழுதுக் கொண்டிருந்த ராதையை அவரிடம் இருந்து முரட்டுத்தனமாக விலக்கியவன், அவளை பளார் என்று அறைந்துவிட்டான்.
“என் ரேன்ஜ் தெரியாம என்னை சீண்டிட்ட, உன்னை சும்மா விடமாட்டேன் டி” என்றவன் அவனை தாக்க வந்த பிரகாஷையும் ஓங்கி ஒரு அடி அடித்து, அவனை கீழே தள்ளிவிட்டு வெளியேச் சென்றவன், தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
***
