அத்தியாயம் 23

அத்தியாயம் 23

 

வம்சி பிரகாஷைக் கீழே தள்ளி விட்டதில் அவன் நெற்றி கீழே பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அதில் அனைவரும் பதற, உடனே அவன் தந்தை ஆறுமுகம் முதலுதவி தருவதற்காக அவனை வேகமாக அழைத்துச் சென்றார். 

 

“ஏய் ராதை, உனக்கு இப்போ சந்தோஷமா? உன்னால என் பையன் இப்போ அடி வாங்கிட்டு நிக்குறான்” என்று அழுது கத்திய விஜயா மேலும், “என்னால இந்த அனாதை பெண்ணை எல்லாம் எனக்கு மருமகளாக ஏத்துக்க முடியாது. அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று தீர்மானமாகக் கூறினார்.

 

வம்சியின் குடும்பத்தில் அனைவரும் எதுவும் பேசாமல் தங்களுடைய காட்டேஜிற்கு நகர்ந்தார்கள். 

 

“டேய் விஜயகுமார், உன் பொண்ணு கோதையை ரொம்ப அருமையா வளர்த்துருக்க! எவ்வளவு கெட்ட புத்தி அவளுக்கு, இருபத்தி மூனு வயசுலயே எவ்வளவு நஞ்சோடு இருக்கா” என்று கத்திய இராஜேஸ்வரி பாட்டி, அங்கு வம்சியிடம் அடி வாங்கி சோர்ந்து நின்றுக் கொண்டிருந்த ராதையைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். 

 

நெருப்புக் குழம்பில் கொதித்துக் கொண்டிருந்த கோதை ராதையின் மேல் பயங்கரமான கடுப்பில் இருந்தாள். கோபத்தில் தன்னுடைய காட்டேஜிற்குச் சென்று கதவை பட்டென்று சாற்றிக் கொண்டாள். 

 

விஜயாவிடம் திரும்பிய விஜயகுமார், “ராதைக்கும் கோதை அளவுக்கு சொத்து, சீர் எல்லாம் அதே அளவுக்கு தான் நாங்க கொடுப்போம். அதனால நீங்க ராதையை உங்க வீட்டு மருமகளாக ஏத்துக்கலாம்” என்றார். 

 

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விஜயாவும், அவர்கள் பின்னே வனிதாவின் குடும்பமும் சென்றது.

 

ஏற்கனவே வம்சி கிளம்பி விட்டான் என்று உணர்ந்த அவனின் குடும்பம், இனி எதற்கு இங்கு இருக்கவேண்டும் என்று தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு மைதிலியிடம் கூடச் சொல்லாமல் கிளம்பிவிட்டார்கள். 

 

வனிதாவால் ராதையை சமாதானம் படுத்த முடியவில்லையே என்ற வருத்தமும், தன் அத்தையின் கோபமும் ஒருவித பயத்தை உண்டாக்கியது. 

 

மணிகண்டன் மற்றும் ரமா வனிதாவை தேற்றினர். “இப்போ ராதைக்கிட்ட பேச முடியாதும்மா, அத்தை பயங்கரமான கோபத்துல இருக்காங்க. அதனால அமைதியா இரு” என்று கூறி அவளை காட்டேஜிற்குள் அழைத்துச் சென்றனர். 

 

ஆறுமுகம் மற்றும் விஜயேந்திரபூபதி, பிரகாஷை பக்கத்தில் இருக்கும் இருபத்தி நாலு மணி நேரம் மருத்துவமனையில் சேர்த்து அவனுடைய இரத்த காயத்திற்கு ஒரு பேண்டேஜ் போட்டு விட்டு, அவனை காட்டேஜிற்குக் அழைத்துக் கொண்டு வந்தனர். 

 

“யார் பா அவன், என்னோட ராதையை அடிக்குறான்? அதை எல்லாரும் பார்த்துட்டு அமைதியாக நிக்குறாங்க எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு. நான் அவனை அடிக்கறதுக்குள்ள அவன் முந்திக்கிட்டான். இல்லைனா அவன் மூஞ்சை இன்னிக்கு பேத்துருப்பேன்” என்றான் பிரகாஷ் ஆவேசமாக.

 

ராதையை அழைத்து வந்த இராஜேஸ்வரி பாட்டி அவளுக்கு ஆறுதல் கூறினார். “பாட்டி என் மேல எந்த தப்பும் இல்ல. நீங்கள் என்னை நம்புறீங்க தானே?” என்றபடி அழுதாள்.

 

“யாரும் உன்னை தப்பா நினைக்கல ராதை, உன் நல்ல மனசுக்கு தான் அந்த பிரகாஷ் தம்பிக்கும் உனக்கும் திருமணம் நிச்சயம் ஆகப் போகுது” என்றார்.

 

“இல்லை பாட்டி, கோதை அக்கா பிரகாஷை உயிருக்கு உயிராக காதலிக்குறாங்க. அதனால அவங்களுக்கு இடையில் எப்போவுமே நான் இருக்க மாட்டேன். எனக்கு பிரகாஷ் மேல எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்… நான் பெரியப்பாக்கிட்ட பேசுறேன்” என்றாள் ராதை.

 

“உன் இஷ்டம் ராதை, கல்யாணம்றது ரெண்டு பேரோட விருப்பத்தோட தான் நடக்கணும். உனக்கு விருப்பம் இல்லைனு சொல்ற, நானே உன் பெரியப்பா கிட்ட பேசுறேன்” என்றார் பாட்டி. 

 

பிரகாஷை அழைத்துக் கொண்டு காட்டேஜிற்கு வரும்போதே தங்களுடைய பொருட்களை பேக் செய்து தயார் நிலையில் வைத்து இருந்தனர் விஜயா மற்றும் மணிகண்டன் குடும்பத்தினர்.

 

“அம்மா எனக்கு ஒன்னும் இல்லை. சின்ன அடி தான், ராதையை சமாதானப்படுத்துனீங்களா? அவ ரொம்ப பாவம்” என்ற பிரகாஷிடம், 

 

“இல்லை நான் எதுக்கு அவளை சமாதானம் படுத்தணும் பிரகாஷ்? நான் கோதைக்காகத் தான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். எனக்கு மருமகள்ன்னா அது கோதை தான் இல்லன்னா உனக்கு நாங்க வேற ஒரு பொண்ணை பார்க்குறோம், நீ கல்யாணம் பண்ணிக்கோ” என்று தீர்மானமாகக் கூறினார் பிரகாஷின் அன்னை. 

 

“அம்மா, ஏன் ராதையை உங்களால் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியல? ஏன்னா உங்களுக்கு பயம், எங்க நான் ராதை பின்னாடி போய் உங்க மேல பாசம் இல்லாம போய்டுமோனு தானே இப்படி பண்றீங்க?”

 

“ஆனா ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க, ராதையை நான் கல்யாணம் பண்ணலைனா நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்றவனோ ராதையைத் தேடி அவள் இருக்கும் காட்டேஜிற்குச் சென்றான் பிரகாஷ். 

 

அவன் உள்ளே செல்லும் போதே அவனைத் தடுத்த இராஜேஸ்வரி பாட்டி, “ராதைக்கு உன் மேல விருப்பம் இல்லை. அதனால அவளைத் தனியா பார்க்குற உரிமை உனக்கு கிடையாது ப்பா” என்று பிரகாஷை திருப்பி அனுப்பி விட்டார். 

 

அவ்வளவு நேரம் கதவு தட்டும் ஓசை கேட்டும் கதவைத் திறக்கவில்லை கோதை. ராதையின் மேல் பயங்கரமான கடுப்பில் இருந்த கோதைக்கு இப்போது வம்சியிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

‘ஐய்யோ! க்ருஷ் வேற கால் பண்றானே. இப்போ நம்ம எடுக்கலன்னா பிரச்சனை எடுத்தாலும் பிரச்சனை’ என்று யோசித்தவள் பயந்துக் கொண்டே செல்லை எடுத்தாள்.

 

“எனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல பெங்களுருக்கு பிளைட், அதுக்குள்ள உன்கிட்ட பேசியே ஆகணும்னு தான் கால் பண்ணேன். என்னவோ சொன்ன உன் தங்கச்சி ராதை உனக்காக உயிரைக் கூட கொடுப்பாள்னு…”

 

“எனக்கு வர ஆத்திரத்துக்கு அவளை கொலை செய்யாம விட்டதே பெரிய விஷயம். எவ்வளவு தைரியம் இருந்திருந்தா எல்லார் முன்னாடியும் என்னை அவமானம் படுத்திருப்பா…”

 

“அவக்கிட்ட சொல்லி வை, இனி அவளோட வாழ்க்கையில நிம்மதி ன்ற விஷயமே இருக்காது. என்னோட தகுதி என்ன? என்னோட கேரக்டர் என்ன? இப்போ எல்லாரும் என்னை தப்பானவன்னு நினைச்சுருப்பாங்க. உனக்கு உதவி செய்யப் போய் எனக்கு இப்படி ஒரு நேம் தேவயா” என்று கத்தினான்.

 

“க்ருஷ், நானே உடைஞ்சு சுக்கு நூறா ஆகி இருக்கேன். நீ அவளை என்ன வேணாலும் பண்ணிக்கோ, ஏன் அவளை கொலை செஞ்சா கூட எனக்கு சந்தோஷம் தான்… ஆனா ப்ளிஸ் நான் உன்னை மாட்டிவிடணும்னு பண்ணலை டா, நான் நினைச்ச மாதிரி பிளான் நடக்கலை” என்று அழுதாள். 

 

“கேன் யூ ஸ்டாப் திஸ் நௌ… எனக்கு நீ ஒரு வேலை பண்ணனும். அது என்னன்றதை அப்புறம் சொல்றேன். உனக்கும் பிரகாஷுக்கும் கல்யாணம் நடக்குதோ இல்லையோ? ஆனா பிரகாஷுக்கும் ராதைக்கும் கல்யாணம் நடக்கவே நடக்காது. அதை நான் நடக்க விடமாட்டேன்” என கர்ஜித்தபடி காலை கட் செய்துவிட்டான் வம்சி.

 

‘இவன் என்ன இப்படி பேசுறான்? எது எப்படியோ பிரகாஷும் ராதையும் சேராம இருக்கணும், க்ருஷ் ஒன்னு நினைச்சா அதை முடிச்சு நடத்தி காட்டிடுவான்’ என்று யோசித்த கோதை ஒரு முடிவு எடுத்தவளாக கதவைத் திறந்தாள். 

 

கோதை கதவைத் திறந்தவுடன் விஜயகுமார் மற்றும் மைதிலி அவளைத் தேடி வந்தார்கள். 

 

“அம்மாடி கோதை, எங்களை மன்னிச்சிரு. பிரகாஷ் ராதையைத் தான் விரும்புறாரு. அதுவும் இல்லாம இப்போ நம்மளோட கம்பெனியோட முக்கால்வாசி ஷேர்ஸ் பிரகாஷ்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கு. இப்போ பிரகாஷோட விருப்பத்தை நம்ம நிறைவேத்தலன்னா அவன் நம்மளை அடுத்து நடுத்தெருவுல நிறுத்துவான்.” 

 

“இதுக்கும் நீ தான் காரணம், உன் முட்டாள்தனம் தான் காரணம். பிரகாஷை காதலிச்சு கண்மூடித்தனமா இவ்வளவு செஞ்சுட்ட, இப்போ இது உன் கையை மீறி போய்டுச்சு. அதுமட்டுமில்ல வம்சியோட சேர்ந்து இவ்வளவு கேவலமா ராதையை அசிங்கப்படுத்த முயற்சி பண்ணிருக்க.”

 

“வம்சியோட குடும்பம் எதுவும் பேசாமலே கிளம்பிட்டாங்க. இனி பிரகாஷும் ராதையும் சந்தோஷம இருக்கணும்னு நினைச்சிக்கோ” என கெஞ்சலுடன் ஆரம்பித்து அதட்டதலில் முடித்த விஜயகுமார் மைதிலியிடம் திரும்பி, “எல்லா திங்கஸையும் பேக் பண்ணு நம்ம கிளம்பணும்” என்று வெளியே சென்றுவிட்டார்.

 

அனைவரும் காட்டேஜை காலி செய்யும் போது ராதையோ அவளுடைய தலையை நிமிர்த்தாமலே வேகமாக காரில் ஏறினாள். எப்போதும் தன் கையைப் பிடித்து நடக்கும் ராதை, இன்று தனியாக காரில் ஏறி விட்டாளே என்று யோசித்த பாட்டி, ராதையின் அசௌகரியமான நிலைமையைப் புரிந்துக் கொண்டார். 

 

கோதையின் மனதில், ‘வம்சி என்ன செய்யப்போறான்? ஒருவேளை ராதையைப் போட்டு தள்ளிடப்போறானா? ஒன்னும் புரியலையே’ என்று யோசித்துக் கொண்டே வந்தவள், பிரகாஷின் வீட்டு கார் கிளம்ப தயாராக இருந்த நிலையில் விஜயாவிடம் போலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள். 

 

ஏற்கனவே பிரகாஷ் பேசியதில் நொந்து இருந்தவருக்கு, இப்போது கோதை இப்படி தன்னிடம் வந்து அழும் போது என்ன செய்வது என்று தெரியாமல், “எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்” என்று கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார் விஜயா. 

 

ஆறுமுகம் மற்றும் விஜயேந்திரபூபதிக்கு கோதையிடம் மரியாதை ஏற்படவில்லை. அதனால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர். 

 

இனி இங்கு நின்றால் நம் மரியாதை கெட்டு விடும் என்று கோதை யாரிடமும் பேசாமல் தங்களுடைய காரில் ஏறியவள், ராதையின் முகத்தை கூட பார்க்கப் பிடிக்காமல் முன் சீட்டில் போய் அமர்ந்துவிட்டாள். 

 

***

 

“வேதந்த் ஏன் இப்படி பண்றான்? இது நமக்கு தேவை இல்லாத விஷயம். என் அண்ணாக்கும் ஷிவானிக்கும் இப்படி ஒரு விஷயம் நடந்துருக்குனு தெரிஞ்சா, எவ்வளவு மனசு கஷ்டப்படுவாங்க” என வேதனைப்பட்டார் லட்சுமி. 

 

“மாப்பிள்ளையை கேட்டு வந்தவங்க அவங்க, எங்களுக்காக தான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்ட எங்க பேரன் வம்சி. அவங்களுக்கு இந்த மாதிரி அழகான, அறிவான கோடீஸ்வர மாப்பிள்ளை எங்க தேடுனாலும் கிடைக்காது” என்றார் காந்திமதி. 

 

லட்சுமிக்கு எப்போதுமே தன் பிறந்த வீட்டின் மீது தான் பற்று அதிகம். அவருக்கு தன் அண்ணன் மகள் ஷிவானியை இந்த வீட்டு மருமகளாக ஆக்க வேண்டும் என்ற ஆசை வெகுவாக இருந்தது. எங்கு கோதை, வம்சியின் மேல் ஆசை கொள்வாளோ என்ற பயத்திலேயே இருந்தார். 

 

பிரகாஷுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்ற செய்தி தெரிந்தவுடன் முதல் ஆளாய் துள்ளி குதித்தவர், இப்போது பிரகாஷ் அந்தர் பல்டி அடித்தவுடன் எங்கு அம்பு தன் மகனை நோக்கி வந்து விடுமோ என்று நினைத்து பயந்தார் வம்சியின் தாயார் லட்சுமி.

 

***

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!