அத்தியாயம் 28

 

அத்தியாயம் 28

 

“லட்சுமி என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க… வீட்டுல எல்லாரும் தூங்குறாங்கனு தெரியும் தானே” என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சேதுராமன், ஷிவானி மற்றும் அவளின் தந்தை சிவக்குமார் அங்கு இருந்ததைப் பார்த்தார். 

 

‘என்ன இந்நேரம் இவங்க வந்திருக்காங்க?’ என்று யோசித்தவரோ, அவர்களின் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டவர் அவர்களை அமரச் சொன்னார்.

 

“ஏங்க வேதந்த் ஏதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்… அதை ஷிவானிக்கிட்ட சொல்லிருக்கான்” என்றபடி அழுதார் லட்சுமி. 

 

அப்போது சரியாக உள்ளே வந்த வம்சி, “ஆமா, நான் கல்யாணம் பண்ணிட்டேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது அந்த அனாதை பொண்ணு கோமகள் ராதை… என்னை சீண்டுன அந்த ராதையை படுகுழியில் தள்ளத் தான் அவளுக்கு இந்தக் கல்யாணம்ன்ற நரகம்…”

 

“இந்த கல்யாண விஷயத்தை முதல்ல நான் ஷிவானி கிட்ட தான் சொன்னேன். ஏன்னா ஷிவானி தான் நான் எப்படி இருந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்க தயார்னு துடிக்கிறாளே” என தன் இரு கைகளையும் கட்டியபடி ஷிவானியை ஆழமாகப் பார்த்தான். 

 

“ஆமா வம்சி, இப்போவும் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறேன்” என்றாள்.

 

ஷிவானி பேசுவதைக் கேட்ட சேதுராமன் மற்றும் சிவக்குமார், ‘இவ என்ன முட்டாள் பொண்ணா?’ என்று நினைத்தனர். 

 

சேதுராமன், “வம்சி, உன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாதுன்ற தைரியத்துல ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையில விளையாடாத” என்று கவலையாகக் கூறினார்.

 

“அப்பா, நானா யார் வாழ்க்கைக்குள்ளயும் நுழைஞ்சு விளையாடல” என்று அழுத்தமாகக் கூறியவன், “என்னைப் பொறுத்தவரை என்னை எதிர்த்தவங்க தண்டனையை அனுபவிக்கணும். இந்த வம்சியை எதிர்த்தால் அவங்க நிலைமை இதான் இப்படித் தான் இருக்கும்… அந்த ராதைக்கு நரகத்தைக் காட்டுவேன்…” என்றவன்,

 

ஷிவானியைப் பார்த்து, “இவளை நான் எதுவுமே பண்ணலயே, ஷிவானி என்னைத் தான் கல்யாணம் பண்ணனும்னு நான் சொல்லவே இல்லை” என்று தெளிவாகக் கூறினான்.

 

“வம்சி ப்ளிஸ், இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் உங்களை காதலிக்கிறேன். உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றாள் பிடிவாதமாக. 

 

இதைக் கேட்டு நக்கலாக சிரித்த வம்சி தன் தந்தையிடம், “இட்ஸ் ஹேர் ஓன் ரிஸ்க்” என்று மாடிப்படியில் ஏறிச் சென்றான். 

 

அனைவருக்கும் ஒரு விதமான கவலை என்றால், லட்சுமிக்கு ஆயிரம் கவலைகள், மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும் அதற்கு விடை தெரியாமல் விழித்தார்.

 

ஷிவானி தன் தந்தையுடன் திரும்பி காரில் வீட்டிற்குச் செல்லுகையில், “நாங்களே உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்து வைச்சிட்டோம் ஷிவானி… எந்த பேரன்ட்ஸும் அவங்க பொண்ணு ரெண்டாவது தாரமா போக சம்மதிக்க மாட்டாங்க” என்று கவலையாகக் கூறினார். 

 

“அப்பா உங்களுக்குப் புரியல நான் வம்சியை எவ்வளவு விரும்புறேன்னு … கல்யாணம் பேசி இவ்வளவு நாள் வம்சி என்னோட ஃபோன்க்கு ஒரு முறை கூட கூப்பிட்டதே இல்லை. ஆனா இன்னிக்கு அழைச்சிட்டு எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயம் சொல்றாரு. என் மனசு சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.”

 

“ஆனாலும் அவர் பேசினதை கவனிச்சீங்களா? அந்த அனாதை பொண்ணு… அவளோட பேர் கூட மறந்துபோச்சு, அவளை பழிவாங்க தான் இதெல்லாமேனு சொன்னாரு. சீக்கிரமே வம்சிக்கிட்ட பேசி அவளுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்து அனுப்பிட்டு, நான் அவருக்கு முறையாய் மனைவி ஆவேன்பா” என்று சந்தோஷத்துடன் கூறினாள் மகள். 

 

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று மல்லுக்கட்டும் மகளிடம் இனி பேசி ஜெயிக்க முடியாது என்று அந்த விஷயத்தை அப்போதைக்கு ஆறப் போட்டார் தந்தை.

 

***

 

“அம்மா, யாரோ கதவைத் தட்டுற மாதிரி இருக்கே” என்ற கூறிய வனிதா, தங்கள் அறையின் மின் விளக்கை ஆன் செய்தாள். 

 

“யாருடி இந்த நேரத்துல? மணி பதினொன்னு ஆகுது, சரி க்ரில் தான் பூட்டுருக்கோம்ல கண்ணு! இங்க உன் அப்பா வேற கேம்ப் போயிருக்காரு, இல்லனா கூட அவ்வளவு பயம் இருக்காது” என்றபடி கதவைத் திறக்கச் சென்றார் வனிதாவின் தாய் ரமா.

 

“ஏய் வனிதா சீக்கிரம் வா” என்ற அன்னை கத்தும் சத்தத்தைக் கேட்ட வனிதா ஹாலுக்கு விரைந்தாள். அங்கே கிரில்லின் வெளியே ஒரு பேக்கோடு கலைந்த முடியுடன், அழுது அழுது துவண்ட முகத்தோடு ராதை நின்றுக் கொண்டிருந்தாள். 

 

“என்ன ராதை இந்த நேரத்துல வந்துருக்க!” என பதறிய மகளை புரியாமல் பார்த்த ரமா வேகமாக கதவைத் திறக்க, உள்ளே வந்தவளோ நடந்த அனைத்தையும் அழுகையுடன் சொல்ல, 

 

அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்த தாயும் மகளும் என்ன சொல்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் பேசுவது அறியாமல் நின்றுருந்தார்கள். 

 

“ஆன்ட்டி ப்ளீஸ், நாளைக்கு வனிதா பெங்களூர் போறா தானே, நானும் அவளோட அங்கே போறேன். அங்கே ஏதாவது வேலை தேடி பிழைச்சிப்பேன். என் மார்க் சீட்ஸ் எல்லாம் கொண்டு வந்துட்டேன்” என்றாள் கெஞ்சுதலாக.

 

“நீ முதல்ல அங்க இருந்து எப்படி தப்பிச்ச ராதை…? நான் நினைச்சேன் அந்த கோதையோட சொந்தக்கார பையன் அன்னிக்கு உன்னை அடிச்ச போதே அவன் கண்ல ஒரு வெறி தெரிஞ்சுது. ஆனா இப்படி வில்லன் ஆவான்னு நினைக்கல. ஆனா விஜயாவுக்கும், பிரகாஷுக்கும் கடவுள் கொடுத்த தண்டனை இது, என் மகளை ஏத்திவிட்டு ஒதுக்கினாங்க இல்லயா” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

 

“அம்மா, அவளே நொந்து நூடுல்ஸ் ஆகி வந்துருக்கா. நீ ஏன் மா இப்படி பேசுற…? சரி ராதை.. அந்த அரக்கனோட வலையில இருந்து எப்படித் தப்பிச்ச?” என்று பயத்தோடு கேட்டாள் வனிதா.

 

“மொத்தம் மூனு பேர் இருந்தாங்க, ஒருத்தர் வெளியே போனார், எனக்கு தெரிஞ்சு ரெஸ்ட்ரூம் போயிருப்பார். இன்னொருத்தர் என் பெரியப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தார். இன்னொருத்தர் ஃபோன்ல இருந்தார். இதான் சமயம்னு யார்கிட்டயும் சொல்லாம, மரம் செடி பின்னால மறைஞ்சு மறைஞ்சு பின்னாடி இருக்குற கேட் வழியா ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்” என்றவளோ, 

 

“பாட்டிக்கிட்ட கூட சொல்ல முடியலை. எங்க அவன் வீட்டுக்குள்ளயே மைக் இல்ல சிசிடிவி வைச்சிருப்பானோனு பயமா இருந்துச்சு, பாட்டியோட பகவத் கீதை புக்குக்கு நடுல நான் உயிரோட தான் இருப்பேன். பிரச்சனை எல்லாம் சரியானதும் உங்களை கூட்டிட்டு போயிடுவேன்னு மட்டும் குறிப்பை எழுதி வைச்சேன். பாட்டி தான் பாவம்” என்று வருந்தினாள் ராதை.

 

“நீ அதை விட பாவம்டி, நல்லா மாட்டிக்கிட்ட. என்னடி இப்படி நடந்திருச்சு…” என்று தன் தோழிக்காக வருத்தப்பட்ட வனிதாவிடம், “ஐய்யயோ…” என்று திடீரென்று பதற்றமானாள் ராதை.

 

“ஏய் என்ன ஆச்சுடி, ஏன் இப்படி பதற்றம் ஆகுற சொல்லு?” என்று உலுக்கினாள் வனிதா. 

 

“அது வந்து… அவனும் பெங்களூர் தானே, அப்போ நான் எப்படி பெங்களூர் வரது?” என்று தன் நம்பிக்கையை இழந்து சோர்வானாள் ராதை. 

 

“ஏய் ராதை, உனக்கு ஒரு விஷயம் சொல்லவா? அந்த ஆள் பேரு என்ன க்ருஷ்ஷா? சரி ஏதோ ஒன்னு, அவன் உன்னை கீப்பா கூட வெச்சிக்க மாட்டேன்னு சொல்லிருக்கான்.” 

 

“பாயிண்ட் நம்பர் ஒன், அவன் உன்னை பழிவாங்கவாவது தேடுறானே வைச்சிக்கோ, கண்டிப்பா அவனோட கேடி மூளை 360 டிகிரி யோசிக்கும். உன்னை இந்தியா ஃபுல்லா தேடுவான் பெங்களூர் தவிர. ஏன்னா நீ சிங்கத்தோட குகைக்குள்ளேயே போகமாட்டனு அவனுக்கு நல்லா தெரியும்” என்று தன் அறிவை மெச்சினாள் வனிதா.

 

“ஆனாலும், அவன் இருக்கும் ஊருக்குள்ள காலை எடுத்து வைக்கவே பயமா இருக்குடி. இது என்னவோ ஆப்பை நானே தேடிப் போற மாதிரி இருக்கு” என்று தயங்கினாள் ராதை.

 

“நீ என்னடி லூசா? பெங்களூர் எவ்வளவு பெரிய இடம் தெரியுமா, அதுல நீ அவன் கண்ணுல எல்லாம் பட மாட்ட, ஆபிஸ் தவிர எல்லா இடத்துலயும் ஸ்டோல் போட்டு முகத்தை மறைச்சிக்கோ, அதான் நான் இருக்கேன்ல அப்போ ஏன்டி கவலைப்படுற?” என்றாள் வனிதா.

 

“எனக்கு என்னமோ வனிதா சொல்றது தான் கரெக்ட்னு தோணுது ராதை. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலையில ஆறு மணி பஸ்ஸுக்கு கிளம்புங்க” என்றார் ரமா. அரைமனதாக இருந்த ராதை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள். 

 

பின் ராதையைச் சாப்பிட வைத்தனர் இருவரும். அன்று இரவு ராதைக்குத் தூக்கமே வரவில்லை. அவள் விழித்து இருப்பதைக் கண்ட வனிதா, “எதையும் யோசிக்காம தூங்குடி” என்று கூறியபின்னர் வெறும் கண்ணை மூடியவள், எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

 

காலை விடிந்த பின்னர் வேகமாக கிளம்பினர் இருவரும். வனிதாவின் அன்னையிடம் விடைபெறும் போது, “ஆன்ட்டி தயவுசெஞ்சு…” என்று இழுத்தாள். 

 

“கண்டிப்பா யாருக்கும், ஏன் வனிதாவோட அப்பாவுக்குமே நீ வந்து போனதை பத்தி சொல்லமாட்டேன். கவலைப்படாம போம்மா” என்று அனுப்பினார் ரமா. ஒரு ஸ்டோலை வைத்து தன் முகத்தை மூடியபடி வெளியேறினாள் ராதை. தன் அன்னையிடம் விடைப்பெற்று கிளம்பினாள் வனிதா. 

 

“ஏய் அவன் தான் பெங்களூர் போய்ட்டானே, நீ ஏன்டி கோயம்புத்தூர்லயே ஸ்டோல் போட்டுட்டு இப்படி பயந்து இருக்க?” என்று கேட்டாள் வனிதா.

 

“வனிதா, என் பயம் எனக்குத் தான் தெரியும்” என்றாள் ராதை சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே.

 

இருவரும் பஸ் ஏறிய பின்னரும் கூட ராதை தன் முகமூடியைக் கழற்றவில்லை. இதைக் கண்டு சிரிப்பதா இல்லை அழுவதா என்று யோசித்த வனிதாவிற்கு, ராதையின் மஞ்சள் கயிறு தாலி உறுத்தியது. 

 

“அவன் தான் உன் புருஷன் இல்லையே, அப்போ எதுக்குடி இந்தக் கயிறு? அதை தூக்கிப் போடு” என்றவளிடம், 

 

“அப்படி நேத்து தொடப் போய் தான், அவன் என்னை பயங்கரமா மிரட்டினான். அதனால இந்த கயிர் மேல கை வைக்கவே எனக்கு பயமாக இருக்கு டி” என்றாள். 

 

“நீ சொல்றதைப் பார்த்தா அந்த ஹாண்ட்சம் சரியான திமிரு புடிச்சவன் போல” என யோசனையாக சொன்னவள், “ஏய் அந்த குறி சொன்ன அம்மா சரியா தான் சொல்லிருக்கு, உன்னை தனியா போக கூடாதுனு சொன்னாங்க. இப்படி தனியா போய் தாலி வாங்கிட்டு வந்திருக்க… அப்புறம் மத்தவங்களுக்கு அவன் கிருஷ்ணன் உனக்கு அசுரன்… அவன் பேர் கூட ஏதோ க்ருஷ் தானே” என்ற வனிதாவிடம், 

 

“இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் பாரு” என்று வனிதாவிடம் பேச்சை மாற்றியவள் மனதிலும், குறி சொன்ன அம்மா கூறியதை நினைத்துப் பார்த்து பயமுற்றாள். 

 

அவர் கூறிய வார்த்தைகள், “தாராள மனசு… சுத்தமான எண்ணங்கள் இதெல்லாம் உன் பாதையை தெளிவா ஆக்கிருக்கு. உன்னை தேடி வருவான் உன் மணவாளன் …! அவன் மத்த பொண்ணுங்களுக்கு கிருஷ்ணனை போல நண்பனா இருப்பான், உதவுவான். ஆனால், உன்கிட்ட அவன் ஒரு அசுரன்… உன்னை அவனுள்ள எடுத்துட்டு போக காத்திருக்கும் வேட்டைக்காரன்… நீ இனிமே தான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் கண்ணு! தனியா வெளியே போகாத, பருந்து போல் உன்னை கொத்திச் செல்ல காத்திருக்கான் அவன்!”. இதையெல்லாம் நினைக்க நினைக்க ராதைக்கு மனதில் பயப்பந்து உருண்டு கொண்டே இருந்தது.. 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!