அத்தியாயம் 27
வம்சி அனைவரின் முன் மிரட்டியதின் விளைவு, அவன் மேல் உள்ள பயத்தில் தன் தாலியின் மேலிருக்கும் கையைத் தானாக எடுத்தாள் ராதை.
“ராதை நீ அவனுக்குப் பயப்படாத… இந்தக் கல்யாணம் செல்லவே செல்லாது, நீ எனக்கு தான் மனைவியாக போற” என்றான் பிரகாஷ் விடாமல்.
‘இவன் என்ன லூசா?’ என்று எண்ணிய வம்சி, “நீ ஒரு சுயநலவாதினு தான் நினைச்சேன். ஆனா இப்போ தான் தெரியுது நீ சரியான பைத்தியம்… என் பொண்டாட்டியை நீ எப்படி கல்யாணம் பண்ண முடியும்? அப்படி பண்ண நினைச்சாலே நீ உயிரோட இருக்க மாட்ட பிரகாஷ்” என கர்ஜித்த வம்சி,
“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க… ராதை என்னோட பொண்டாட்டி! அவளுக்கு நாங்க இருக்கோம், இந்த கல்யாணம் செல்லாதுனு யாராவது சொன்னீங்கனா அவங்க கதையை முடிச்சுடுவேன். நான் செய்யமாட்டேன்னு மட்டும் யாரும் தப்புக் கணக்கு போடாதீங்க, நான் ஒன்னு சொன்னா அதை கண்டிப்பா செய்வேன்” என்றான்.
மேலும் பிரகாஷை குறிப்பிட்டுக் காட்டி, “இவன் இப்போ வெளியே போகணும், இவன் இனி ராதையைப் பாக்க இனி இந்த வீட்டுக்கு வரவே கூடாது. என்னை மீறி அவனால இங்க உள்ள நுழையவே முடியாது. நான் இங்க ஆளை ஏற்பாடு பண்ணி வைச்சிட்டு தான் பேங்களூர் போறேன். அவனை முதல்ல வெளியே அனுப்புங்க…” என்று கட்டளை இட்டு சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் வம்சி.
அனைவரும் என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்தனர். “பிரகாஷ், நீ கிளம்புப்பா… வம்சி பத்தி எனக்கு தெரியும், நீ அவன்கிட்ட மோத முடியாது” என்றார் விஜயகுமார் பதற்றமாக.
“என்ன அங்கிள் மறந்துட்டீங்களா? ராதை எனக்கு இல்லன்னா நீங்க நடுரோட்டுல நிக்கணும்… அதை மறந்துடாதீங்க” என்றான் பிரகாஷ் கோபமாக.
“மாமா, உங்களுக்கு பணம் முக்கியமா? இல்ல உயிர் முக்கியமா? அதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்ற வம்சி யாருக்கோ கால் செய்ய, அடுத்த சில நிமிடங்களில் பாடிகார்ட் உடை அணிந்த அடியாட்களை வரவைத்தான். அவர்கள் கையில் வேறு பெரிய துப்பாக்கி இருந்தது.
வம்சி இந்த அளவிற்குப் போவானா? என்று திகைத்தனர் அனைவரும் கோதை உட்பட.
இதை எல்லாம் பார்த்து பயந்த ராதையோ, “பிரகாஷ் தயவு செஞ்சு கிளம்புங்க… எப்படி இருந்தாலும் இனி என்னால உங்களை கல்யாணம் செய்ய முடியாது. அதனால பிரச்சனை பண்ணாம கிளம்புங்க, நீங்க இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எங்க குடும்பத்துக்கு தான் பிரச்சனை” என்று கெஞ்சினாள்.
இனி அந்த இடத்தில் இருந்தால் மரியாதை இல்லை என்று உணர்ந்த பிரகாஷ், “உன்னை விட மாட்டேன் ராதை, நீ எனக்குத் தான்…” என்றபடியே அந்த வீட்டை விட்டு கிளம்பினான்.
பிரகாஷ் சென்றவுடன் அந்த வீடே நிசப்தம் ஆனது. வம்சியின் பக்கத்தில் வந்த கோதையோ, “க்ருஷ், நீ எதுக்கு இவளை பழிவாங்க இப்படி பண்ணிருக்க? பேசாம நீயே அந்த தாலியை கழட்டி எறிஞ்சிடு, இவளை எங்கயாவது ஊரை விட்டே அனுப்பிடலாம். அதுக்கு அப்புறம் நான் பிரகாஷை என்னோட வசம் இழுத்துருவேன். நீ ஷிவானியை கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று ஆவலோடு கூறினாள்.
இதை எல்லாம் கோதை கூறி முடித்த பின் அவளை பட்டென்று அறைந்து இருந்தான் வம்சி. “இந்த தண்டனை ராதைக்கு மட்டும் இல்ல உனக்கும் சேர்த்து தான். இன்ஃபாக்ட் நீ தான் முக்கியமா இந்த தண்டனையை அனுபவிக்கணும்… அதுக்கு தான் இவளோட கழுத்துல தாலி கட்டினேன்” என்று ராதையைக் குறிப்பிட்டான்.
“நீ என் கிட்ட அன்னிக்கு ஹெல்ப் கேட்ட போதே என்னோட ரேன்ஜ் இறங்காத அளவுக்கு பிளான் பட்டிருக்கும் கோதை. சரி ஒரு பிளான் தான் போட்டு தொலைஞ்ச, ஆனா அது இவளால சொதப்புன போது என்னை எல்லார் முன்னாடியும் இவ அசிங்கப்படுத்தினா. அதுக்கு தான் இப்போ என் பிடியில சிக்கிட்டு முழிக்குறா.”
“அன்னிக்கு உன்னோட கிரிமினல் பிளான் சொதப்பினதுக்கு அப்புறம் நீ என்னைப் பத்தி யோசிக்கல கோதை, அப்போ தான் புரிஞ்சுது, நீ எவ்வளவு பெரிய சுயநலவாதினு… உன் மேல எனக்கு கொலைவெறியே வந்துடுச்சு. அதனால தான் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…”
“எதுக்கு உன்னை பழிவாங்க இவளை கல்யாணம் பண்ணனு யோசிக்குறியா? நீ ஒரு மக்கு தானே நாள் முழுக்க யோசி” என்றவனோ ராதையின் புறம் திரும்பி அவளின் கையைப் பற்றி வேகமாக இழுத்து ஒரு அறைக்குள் சென்று தாழிட்டான்.
“உன்னால எனக்கு ஒரு வாரம் தூக்கம் இல்லாம என் வீட்டுக்கு கூட நான் போகாம இருந்தேன். ஆனால் இன்னிக்கு தான் நான் நிம்மதியா வீட்டுக்கு போய் தூங்குவேன்” என்றபடி ஆக்ரோஷமாக சிரித்தவன்,
“நீயெல்லாம் எனக்கு வப்பாட்டியா இருக்கக்கூட தகுதி இல்லாதவ டி… ஆனா உன் கழுத்துல இப்போ நான் கட்டிய தாலி இருக்கு. நீ ஒரு அனாதை தானே உன்னை எப்படி யூஸ் பண்ணாலும் அதை கேட்க ஒருத்தனும் வர மாட்டான்… அப்படி பிரகாஷ் மாதிரி எவனாவது வந்தாலும் நான் விட மாட்டேன்… அதனால தான் உன்னைக் கல்யாணம் பண்ணேன்.”
“உனக்கு தெரியாதுல்ல, எனக்கும் என் மாமா பொண்ணு ஷிவானிக்கும் கல்யாணம் ஆகப் போகுது, அவ தான் என்னோட பொண்டாட்டி… நீ எல்லாம் சும்மா… நான் இப்போ கிளம்ப போறேன். என்னை மீறி நீ பிரகாஷ்கிட்ட ஏதாவது பேச நினைச்சா கூட உன்னை கொன்னுடுவேன்” என்று அவளின் இருபக்கத் தோளை அழுத்தியவன், அவள் வலியில் துடிப்பதை இரக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதன் பின்னர் வெளியே வந்தவன் அனைவரையும் மிரட்டிவிட்டு தன் ஆட்களை வீட்டைச் சுற்றி இருக்க வைத்துவிட்டுச் சென்றான். மைதிலி மற்றும் விஜயகுமார் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து இருந்தார்கள்.
“ஐய்யோ என் பேத்தி வாழ்க்கையே போச்சே… எல்லாத்துக்கும் காரணம் உன் பொண்ணும் உன் குடும்பமும் தான்…” என்று அழுதுக் கொண்டிருந்தார் இராஜேஸ்வரி பாட்டி.
தன் அறைக்குள் வந்து படுத்த கோதைக்கு, தான் வம்சியிடம் அடி வாங்கியதுக் கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் பிரகாஷிற்கே ராதை கிடைக்கக்கூடாது என்று திட்டம் இட்டவள், இப்போது பிரகாஷை விட எல்லாவற்றிலும் கொடி நாட்டிக் கொண்டிருந்த வம்சி வேதந்த் கிருஷ்ணாவிற்கு மனைவியா! என்பதை நினைத்து அவளின் வயிறெல்லாம் எரிந்தது.
வம்சி அழுத்தியதின் விளைவு, ராதையின் தோள் வலிக்கத் தொடங்கியது. அவன் அவளை அசிங்கமாக பேசி விட்டுச் சென்ற பின் அந்த அறையிலேயே ஒடுங்கி அமர்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.
“அம்மா… அப்பா… என்னை ஏன் இப்படி அனாதையா விட்டுட்டுப் போனீங்க…? என்னால முடியல, இந்த கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்குறதுக்கு நான் பிறக்கும் போதே நானும் மண்ணோடு மண்ணா போயிருக்கலாமே…” என்று அழுதாள் ராதை.
***
‘யார் இது இந்நேரம் கதவை தட்டுறாங்க?’ என்று யோசித்த லட்சுமி, ‘இந்த செக்யூரிட்டி செக் பண்ணாம இருந்திருக்க மாட்டானே, அப்போ நமக்கு வேண்டியவங்க தான் யாரோ வந்திருக்காங்க’ என நினைத்தபடி கதவைத் திறந்தார்.
அங்கே அழுது வீங்கிய முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள் ஷிவானி. அவளுடன் வந்திருந்தார் அவளின் தந்தை சிவக்குமார்.
“அண்ணா என்ன இந்நேரம் வந்திருக்கீங்க? ஷிவானி ஏன் பாக்க சோர்வா இருக்கா? ஏதாவது பிரச்சனையா? உள்ளே வாங்க” என்றபடி அவர்களை உள்ளே அழைத்தார்.
“ஏன்மா, என் பொண்ணு ஷிவானி என்ன பாவம் செஞ்சா? வம்சி இவளுக்கு கொஞ்சநேரம் முன்னாடி கால் பண்ணி, அவன் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கட்டேன்னு சொல்லிட்டு , காலை கட் பண்ணிட்டான்!” என்றார் சிவக்குமார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சமியோ அதிர்ச்சியுடன் தன் கணவரைக் கத்தி அழைத்தார்.
***
